28/03/2011

பழமொழியின் பொருட்பேறு - அமுத.இளவழகன்

தோற்றுவாய்:-

நாட்டுப்புற மக்களின் மரபுவழிப்பட்ட படைப்புகள் நாட்டுப்புற இயல் எனப்படும். நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலை, இலக்கியம் முதலான அனைத்தும் நாட்டுப்புற இயலுக்கு உரியன. இவற்றுள் ஒன்றான இலக்கியம் கதை, கதைப்பாடல், பாடல், விடுகதை, பழமொழி எனப் பல வகைப்பாடுகளை உடையது. இவ்வெழுத்துரை பழமொழிகள் பற்றிய சில செய்திகளை மொழிவதாக அமைகிறது.

பெயர் விளக்கம்:-

பழமொழிக்குப் பழஞ்சொல், முதுசொல், முதுமொழி, மூதுரை, உரை, உவகதை, மக்கள் குரல், சொலவம், சொலவடை, நெடுமொழி (சிலம்பு) தொன்றுபடுமொழி (அகநானூறு), மூத்தோர் சொல்வார்த்தை (கொன்றை வேந்தன்), உலகமொழி (குமரேச சதகம்) எனப் பலபெயரீடுகள் உள்ளன. எனினும் பெருவழக்காகப் பயின்றுவரும் சொல் பழமொழி என்பதே.

பழமொழி என்பதை பழம் - மொழி எனவும், பழமை - மொழி எனவும், இருவகையாகப் பிரித்துக் கூறலாம். இருவகைப் பிரிப்புக்கும் உரிய பொருள்நிலைகளும் பழமொழிக்குப் பொருந்துவதே. பழம் போல் இனிமை தருவது என்றும், பழங்காலத்தில் இருந்தே வழங்கி வரும் செல்வாக்குடையது என்றும் அமையும் இருபொருள் நிலைகளும் ஏற்புடையதே.

தொன்மையைச் சுட்ட பழமையான மொழி என்றும், அனுபவ முதிர்ச்சியைச் சுட்ட பழம் போன்ற மொழி என்றும், இருவகைப்பொருள்களைக் காணலாம் என்று சு. சண்முகசுந்தரம் கூறுவது குறிப்பிடத்தக்கது.

தொல்காப்பியத்தில் பழமொழி:-

தொன்மைத் தமிழ் நூலாம் தொல்காப்பியம், பழமொழியை முதுமொழி என்று பெயரிட்டு மொழிகிறது. நுண்மை, சுருக்கம், ஒளி, உடைமை, மென்மை முதலியன முதுமொழியின் (பழமொழியின்) தன்மைகள் என்பதும் தொல்காப்பியர் தரும் விளக்கமாகும்.

புலநெறி இலக்கியங்களில் பொது நெறித் தாக்கம்:-

ஏட்டிலக்கியங்களாகிய புலநெறி இலக்கியங்களில் நாட்டுபுறப் பழமொழிகளாகிய பொதுநெறி இலக்கியத் தாக்கம் பெருமளவில் உள்ளது.

''கனியிருப்பக் காய்கவர்தல்'', ''அடுத்தது காட்டும் பளிங்கு'' முதலான பழமொழிகள் திருக்குறளிலும் ''நன்று செய் மருங்கில் தீதுஇல்'' எனும் பழமொழி அகநானூற்றிலும், ''முயல் விட்டுக் காக்கை பின் போனவாறே'' என்ற பழமொழி அப்பர் தேவாரத்திலும், ''மகத்தில் புக்கதோர் சனி'' என்ற பழமொழி சுந்தரர் தேவாரத்திலும், ''உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக் கழுதையைச் செவியறிந்து அற்றால்'' என்ற பழமொழி தொல்காப்பியப் பேராசிரியர் உரையிலும் இடம்பெற்றுள்ளமை எண்ணத்தக்கது.

பழமொழி நானூறு, தண்டலையார் சதகம், பழமொழிப் போதனை முதலான நூல்கள் ஒருமுகப்பட்ட பழமொழிகளின் தொகுப்பாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

பழமொழி பற்றிய பழமொழிகள்:-

உலக நடையை ஒட்டிய அனுபவப் பிழிவுகளே பழமொழிகள். அவை அரிய இலட்சியங்களை அறிவிப்பதாக இல்லையேனும் அன்றாட வாழ்வை வெற்றிகரமாக நடத்திட என்றும் துணைபுரியும் ஏற்றம் மிக்கவை. அனுபவத்தின் குழந்தையாய், இருள் நீக்கும் ஒளிவிளக்காய், அறிவுக் களஞ்சியமாய்த் திகழும் பழமொழியைப் பற்றியும், சில பழமொழிகள் வழங்கி வருகின்றன.

பால் புளிக்குமா? பழமொழி பொய்க்குமா?

பழமொழியில் உமி இல்லை.

என்னும் இவ்விரு பழமொழிகளும் பழமொழியின் பயன்பாட்டுத் தன்மையை, பொய்க்காத மெய்ம்மையைப் புகல்வன.

பழமொழிகளின் இருவேறு பொருள் நிலைகள்:-

பழமொழிகள்,

1. அவற்றுக்குரிய சரியான பொருளிலேயே வழங்கப்படுதல்.

2. வடிவமும் பொருளும் மாற்றம் பெற்று வழங்கப்பெறுதல் என இரு நிலைகளில் வழக்காறு பெற்றுள்ளன.

பொருள் மாற்றம் பெற்றுள்ள பழமொழிகளை மேலும் இரு கூறுகளில் அமைத்துக் காணலாம். அவையாவன,

1. உரிய உயர் பொருள் மறைந்து, புதிய பொருட்பேறு பெறுதல்.

2. உரிய பொருளினும் உயர் பொருள் காணும் நோக்கில், புதிய பொருட்பேறு பெறுதல்.

இவ்விரு கூறுகளும் சில சான்றுகளுடன் இங்கு விளக்கப்பெறுகின்றன.

முதற்கூறு: உயர் பொருள் மறைந்த புதுப்பொருள்

1) அறப்படித்த மூஞ்சூறு கழுநீர்ப் பானையில் விழுந்தது போல், என்பது ஒரு பழமொழி. இது அதிகம் படித்தும் அறிவற்றுச் செயல்படுவதைக் குறிப்பிடும் பொருள் அமைப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் உண்மை வடிவமும், தொன்மை வடிவமும் அறவடித்த முன்சோறு கழுநீர்ப்பானையில் விழுந்தது போல் என்பதே ஆகும். அரிசியைச் சமைக்கும்போது வடிதட்டின் கண்களில் (துளைகளில்) முன்னிற்கும் சோறு கஞ்சியில் விழுந்துவிடும். அப்படி வடித்த கஞ்சியைக் கழுநீர்ப் பானையில் ஊற்றிவிடுவார்கள். இச்செயலை விளக்கும் பழமொழி காலமாற்றத்தில் உருமாறிப் பொருள் மாற்றமும் பெற்று விடுகிறது.

ஒருவரை அளவுக்கு அதிகமாகக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாது என்பதும், குணம் நாடிக் குற்றமும் நாடி, மிகை நாடி முடிவு செய்யவேண்டும் என்பதும் மூலப்பழமொழியின் முதன்மைக் கருத்தாகும்.

2) சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது ஒரு பழமொழி.

இதன் உண்மை வடிவம் சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதே. சோழியர் என்ற பிரிவினர் முடி சேர்த்து முடியும் குடுமியை, வழக்கத்திற்கு மாறாக முன்பக்கத்தில் அமைத்துக் கொள்வார்கள். இது சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா என்ற காளமேகப் பாடல் வழியும் உறுதிப்படுகிறது. முன்தலைப் பகுதியில் முடிந்தாலும், அந்தக் குடுமி தலையில் பாரம் சுமப்பதற்கு உதவும் சும்மாடு போலப் பயன்தரப் போவதில்லை என்பதே மெய்ப்பொருள்.

3. ஆனைக்கும் பானைக்கும் சரி என்பது ஒரு பழமொழி.

இப்பழமொழியின் வடிவம் மாறவில்லை எனினும் பொருள்நோக்கம் மாறியுள்ளது.

ஒருவன் அடுத்தவன் யானையைக் கடன் வாங்கினான். அது இறந்துவிடுகிறது. அவனோ பழைய யானையே வேண்டும் என்றான். அந்தப் பிடிவாதக்காரன் மற்றவனின் பழைய பானைகளை உடைக்குமாறு செய்துவிட்டனர் ஊர்ச் சபையடினர். இவனும் பழைய பானைகளைக் கேட்கச் சபையார் யானைக்கும் பானைக்கும் சரி என்று தீர்ப்பு வழங்கினர் என்பர்.

இந்த வேடிக்கைச் செய்திக்காக ஒரு பழமொழியா! இது பழமொழியின் பான்மைக்கே மறுதலையாகிறதே. உற்றுநோக்கினால் ஒர் உயர் பொருள் புலப்படும். ''ஆனை ஊர்பவன் அதிட்டம் - பானை பிடிப்பவள் பாக்கியம்'' ''ஆனையைப் பிடிப்பான் ஆண் பிள்ளைச்சிங்கம் பானையைப் பிடிப்பாள் பத்தினித்தங்கம்'' என்றும் இருபழமொழிகளோடும் ஒப்பிட்டு நோக்கினால் முதற் பழமொழியின் உயர் பொருள் புலப்படும்.

புறவாழ்க்கைக்கு நிகரான பெருமை உடையது அகவாழ்க்கை என்பதும் ஆணும், பெண்ணும், சரிநிகர் சமானம் என்பதும், இப்பழமொழியின் உண்மைக் கருத்தாகிறது.

இரண்டாம் கூறு: உயர் பொருள் கருதிய புதுப்பொருள்:-

1) மார்கழி மாதம் பீடை மாதம் என்பது ஒரு பழமொழி. இந்நாளில் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுவது, விடிவதற்குள் பக்திப் பாடல்கள் ஒலிப்பது, வீடுகள் தோறும் கோலமிடுவது எனத் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. ''மாதங்களில் நான் மார்கழி'' என்று கண்ணன் கூறியுள்ளதனால் மார்கழி மாதம் பீடை மாதமன்று; பீடுடைய மாதமே என்று புதுமொழி புகல்வர். இது மார்கழி மாதத்தை உயர்த்திக் காட்டும் நோக்குடையது.

ஐப்பசி முழுவதும் அடைமழையாகி - கார்த்திகையில் கால்கோடையாகி - மார்கழியில் கையிருப்புக் குறைந்து மார்கழி மாதப் பஞ்சம் மக்களை விற்றுத்தின்னும் - தை பிறந்தால் வழி பிறக்கும் எனப் பழமொழிகளை இணைத்து நினைத்தால் மார்கழி பீடை என்பது சரியானதே என்பதும் பழமொழியின் பொருளும் அதுவே என்பதும் புலப்படும்.

2) திருமணச் சந்தடியில் தாலிகட்ட மறந்தது போல என்பது ஒரு பழமொழி.

இது, பரபரப்பில், செய்யவேண்டிய செயலைச் செய்யாது விட்டுவிடுதைக் குறிக்க எழுந்தது. ''அவசரத்தில் அண்டாகைக்கொள்ளாது'' என்றொரு பழமொழியும் உண்டு. அண்டா என்பது வாயகன்ற பெரிய பாத்திரம். அது கைகொள்ளாமல் போக வாய்ப்பே இல்லை. ஆயினும் பரபரப்பில் செய்யும் செயல் தடுமாறிப்போகும் என்பதை விளக்க விளைந்ததே இப்பழமொழி. பதறாத காரியம் சிதறாது என்ற பழமொழியும் இங்கே ஒப்புநோக்கத்தக்கது. கருத்து விளக்கத்திற்காகச் சற்றே மிகைப்படுத்தல் இருப்பதும் பழமொழிக்கு இயல்பே. இந்த அடிப்படையிலேயே திருமணச் சந்தடியில் தாலி கட்ட மறந்த கதை அமைகிறது. திருமணத்தில் தாலி கட்டுவது மறக்க முடியாத செயலாகும். எனவே பழமொழியை மாற்றித் திருமணத்தில் தாலி தாழ்த்த மறந்தது போல என்று வழங்கி வருகின்றனர். அவ்வாறு மாற்றும்போது பழமொழியின் நகைச்சுவைத் தன்மையும், உயர்வு நவிற்சியும் இல்லையாகிவிடும்.

3) சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது ஒரு பழமொழி.

பாத்திரத்தில் உணவு நிறைந்திருந்தால்தான், அதிலிருந்து அகப்பை மூலமாக எடுத்து பலருக்கும் வழங்கமுடியும் என்பது பழமொழியின் நேர்ப்பொருள்.

பொருள் இருந்தால்தான் பிறருக்கு வழங்க முடியும், சேமிப்பு இருந்தால்தான் சேவை செய்யமுடியும் என்னும் உட்பொருள் நோக்குடன் உருப்பெற்றது இப்பழமொழி.

இப்பழமொழியைச் சமய நோக்குடன் அணுகியபோது சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று புதுவடிவம் வழங்கப்பெறுகிறது. முருகனுக்குரிய திருநாளான சஷ்டியில் விரதம் இருந்தால் குழந்தைப்பேறு கிட்டும் என்று நம்பிக்கையூட்டும் பொருள் காட்டும் புதுமை நிகழ்ந்து விட்டது.

4) இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான் என்பது ஒரு பழமொழி.

இருக்க இடமற்ற நாடோடி ஒருவனுக்காக, இரக்கப்பட்டு அவனைக் காலவரையின்றி இருக்கச் செய்தால் காலப்போக்கில் தங்கியிருந்த மடத்தையே தன்னுடையது என்று சாதிப்பான் என்பது இதன் உண்மைக் கருத்து.

ஒருவர் தன்னைப் பார்க்க வருபவர்களை உட்காரச் சொல்லாமல் நிற்க வைத்தே பேசியனுப்பி விடுவார். ''உட்காரச் சொல்லாத சர்க்கரை போல்பேச்சு'' என்றும் ஒரு பழமொழி உண்டு. வந்தவரை உட்காரச் சொல்லக் கூடாதா என்றால், ''உட்காரச் சொன்னால் எழுந்திருக்கச் சொல்லவேண்டும்'' என்பார். இப்படித்தான், இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குதல் - மடத்தின் உரிமையைப் பிடுங்குதல் என்ற பொருளும் அமைந்தது.

இந்தப் பழமொழியையும் சமய நோக்கில் அணுகும்போது இறைவனுக்கு நம் உள்ளத்தில் இடம் கொடுத்தால் அவன் நம் அறியாமையைப் போக்குவான் என்ற புதுப்பொருள் பிறந்தது.

5) பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது என்பது ஒரு பழமொழி.

நல்லது செய்யப் போய்க் கெட்டதாக முடிந்ததை இந்தப் பழமொழி உணர்த்தும். இந்நாளில் சிலர் இறைவழிபாடு பிள்ளையாரில் தொடங்கி ஆஞ்சநேயரை வழிபட்டு முடிக்கப்பெறுவதாகப் புதுவிளக்கம் கூறுவர்.

பழமொழிகளான புதுமொழிகள்:-

பழமொழிகள் பொருள் மாற்றம் பெற்று வழங்கப்பட்டு வரும் நிலையின் தொடர்ச்சியாகப் பழமொழிகள் போலவே உருவான புதுமொழிகளும் கருதத்தக்கவை. சான்றாகச் சிலவற்றைக் காணலாம்.

1) இஸ்லாமியர் வருகையைத் தொடர்ந்து ''ஹைதர்காலம்'' என்ற பழமொழி எழுந்தது.

2) ஆங்கிலேயர் வருகையை ஒட்டி

''துரை உரைத்தது தோஷமில்லை

பட்லர் சிரித்தது பழியாய் வளர்ந்தது'' என்ற பழமொழி அனுபவமொழியாய் அமைந்தது.

3) போர் முறைகளில் மேல்நாட்டுத் தாக்கம் நிகழ்ந்தபோது புதிய புதிய போர்க் கருவிகள் உருப்பெற்றன. அந்த நிலையிலும் துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்தால் போல் என்ற புதுமொழி உருப்பெற்றது.

4) ''All that glitters are not gold''

என்ற ஆங்கிலப் பழமொழியின் தாக்கத்தால் ''மின்னுவதெல்லாம் பொன்னல்ல'' என்ற பழமொழி ஆக்கம் பெற்றது.

5) ''காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்'' என்னும் பழமொழியின் சாயலிலேயே காலத்திற்குத் தகுந்தபடி

''கரண்ட் உள்ளபோதே தூங்கிக் கொள்'' என்னும் புதுமொழி மலர்ந்து பழமொழியாகி வருகிறது.

நாட்டுப்புற இலக்கியக் கூறுகளில் ஒன்றாகிய பழமொழியின் பொருட்பேறு பற்றிய சில சிந்தனைகள் இங்கு எழுத்துருப்பெற்றன. இது, பழமொழிகளின் பொருள்நிலைகள் பற்றிய மேலாய்வுக்கான ஒரு முன்மொழிதலாக அமைவதாக.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை: