23/07/2011

நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் சமூக அமைப்பு - த. சண்முகவடிவு

நாட்டுப்புறப் பாடல்கள் கிராமப்புற மக்களின் சமூக வாழ்வை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. விருதுநகர் மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் சமூக அமைப்பை ஆய்வதாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகின்றது.

சமூகம்:-

சூழல், உணர்வு, நோக்கம் ஆகியவற்றால் மனிதர்கள் சேர்ந்து ஒன்றுபடுவதே சமூகம் எனப்படும் இதனைச் ''சமூகம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நீண்ட காலமாக ஒன்று சேர்ந்து வாழ்தற்காக மக்கள் கூட்டம் ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அமைப்பாகும்.'' எனக் கலைக் களஞ்சியம் குறிப்பிடுகின்றது.

தனிமனிதர்கள் பலர் ஒருங்கிணைந்து தங்களுடைய சில குறிப்பிட்ட நடை, உடை, பாவனைகளையும் வளர்த்துக் கொண்டனர். இத்தகைய தனி மனிதர்களின் கூட்டங்களைச் சமூகம் எனக் குறிப்பிடலாம். ''சமூகவியல் என்பது சமூகத்தையும் அதனோடு தொடர்புடைய மக்கள் உறவையும் அதன் விளைவுகளையும் பற்றிய அறிவியலாகும் என்பர். சமூகம் என்பது பரந்து பட்ட இந்நிலப் பகுதியில் வாழும் மக்களில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு வாழ்வதைக் குறிப்பது எனக் கொள்ளலாம்.

இந்தியச் சமூக அமைப்பு முறை:-

சமூகப் பிரிவுகள் பொதுவாக இருவகைப்படுகின்றன. முதல் வகையில் உறவால் ஏற்பட்ட பிரிவுகள் அடங்கும். இரண்டாம் பிரிவு அனைவருக்கும் உண்டாகும் பொதுத்தன்மைகளின் அடிப்படையில் அமைந்தது. முதல் வகையில் ''குடும்பம் இனம் அல்லது நெருங்கிய உறவு வமிசாவலி போன்றவை. இந்தப்பிரிவுகள் தாகப் புணர்ச்சி விதிகள், அன்னியருடன் மணஉறவு விதிகள், தன்னித்திலேயே மணத்திற்கான விதிகள், குலமரபுச் சின்னம் போன்றவற்றின் நிறுவனங்கள் ஆகியவற்றின் விதிகள் இந்தப் பிரிவுகளின் சட்டங்களையும், முறைகளையும் ஆட்சி செய்கின்றன. இரண்டாம் பிரிவில் தொழிற் சங்கங்கள், மதசம்பிரதாயங்கள், கிராமங்கள் போன்ற பொதுவான உறைவிடங்கள் அடங்கும்'' 3 இச் சமூக அமைப்பு முறையை நாட்டுப்புற இயலுடன் இணைத்துப் பார்க்க இயலும் எனலாம்.

உறவு முறைத் திருமணம்:-

குடும்பம், இனம் அல்லது நெருங்கிய உறவு என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்குள் உறவு முறைத் திருமணம் நடைபெறுவதைக் காணமுடிகிறது. மாமன் மகனுக்கு மணம் பேசி முடிக்கப் பெற்ற முறைப் பெண் அவன் நகரத்தில் விலை மகளிரொடு கொண்டிருந்த தொடர்பை அறிந்திருந்தாள். மேலும் அவன் அவளிடம் பொருட்கள் வாங்க வேண்டுமென்று கூறி அவளுடைய நகைகளை வாங்கிச் சென்று விலைமகளிருக்குக் கொடுத்து விடுகின்றான். அவனை அவள் இடித்துத் திருத்தி வெற்றியும் பெற்றாள். என்பதனை,

''கணையாழிக்கு குச்சி போல

கடும் உறவா நாமிருந்தோம்

மூக்குத்தித் தட்டு போல

முறிந்ததடா நம் உறவு!

மானம் கெட்ட மச்சாவிக்கு

மாதம் ஒரு வைப்பாட்டியா''

என்ற நாட்டுப்புற பாடல் வெளிப்படுத்துவதை அறிய முடிகின்றது.

கிராமப் புறத் தெய்வம்:-

இந்தியச் சமூக அமைப்பு முறையில் கிராமங்களும், கிராமப்புறத் தெய்வங்களும், சமயச் சடங்குகளும் பிரிக்க இயலாதவையாக அமைகின்றன எனலாம். நூற்றுக்கணக்கான தெய்வங்களை வழிபடும் கிராமத்தினர் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி உண்டென்று நம்புகின்றனர். ''கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்'' என்பது பழமொழி. தமக்கு நல்லது நடந்தால் அதைத் தெய்வத்தின் அருள் என்றும் தீமை நடந்தால் அதற்குத் தெய்வத்தின் கோபமுமே காரணம் என்று அவர்கள் நம்புகின்றனர். மேலும் அவர்கள் அத்தெய்வங்களை நம்பிக்கையுடனும் அச்ச உணர்வுடனும் வழிபட்டு வருகின்றனர் எனலாம். அத்தெய்வங்களைத் தான் சிறு தெய்வங்கள் என்றழைக்கின்றனர். குடும்பத் தெய்வ வழிபாடும், குலதெய்வ வழிபாடும், ஊர்த்தெய்வ வழிபாடும் இவ்வகையில் அடங்கும் எனலாம். இத்தெய்வங்களின் தோற்றத்திற்குச் செவி வழிச் செய்திகளும், மரபு வழிக் கதைகளும் உண்டு எனலாம்.

சிறு தெய்வங்களில் காளியம்மன், மாரியம்மன், அய்யனார் போன்றவை பெரும் பாரம்பரிய மரபை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை அறிய முடிகின்றது. அய்யானார் கோவில் இல்லாத கிராமங்களே பெரிதும் இல்லை எனலாம். இத்தெய்வம் அவ்வக் கிராமத்தின் காவல் தெய்வமாகக் கருதப் படுகிறது.

''ஊருக்கு நேர் கிழக்கே உறுதியுள்ள அய்யனாரே

சத்தத்தை நீ கொடய்யா சரளி விட்டு நான்படிக்க''

என்று அய்யனாரை நாட்டுப்புறப் பாடலென்று புகழ்ந்து பாடுவதை அறிய முடிகின்றது.

பெண் சிறு தெய்வங்களே கிராமப்புறங்களில் அதிகம் காணப்படுவதை அறிய முடிகின்றது. மாரியம்மனைக் குறித்த பாடல்கள் கேட்பவருடைய உள்ளத்தில் அச்ச உணர்வை எழுப்புகின்றன எனலாம்.

சான்றாக,

''தோட்டம் துறந்தல்லோ - மாரிக்கு

தொண்ணூறு லட்சம் பூ வெடுத்து

வாடித் துறந்தல்லோ - ஆயிரம் கண்ணாளுக்கு

வாடா மலரெடுத்து''

சமூகக் கட்டுப்பாடு:-

மனித சமுதாயம் பல வகைப்பட்ட ஒன்றோடு ஒன்று தொடர்புடைய சமூக உறவுகள், நிறுவனங்கள், நெறிகள், இயக்கங்கள், அமைப்புகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு செம்மையாக இயங்கிக் கொண்டிருக்கின்றது எனலாம். இதற்கு அடிப்படையாக இயற்கை விதிகளும், சமூக உண்மைகளுமே அமைகின்றன எனலாம். இதனை, ''சமூகம் சரியான ஒழுங்குடனும் அதற்கென்று சமூகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நெறிமுறைகளுடனும், வழி முறைகளுடனும் சீராக இயங்குவது சமூகக் கட்டுப்பாடு எனப்படும். சமூகக் கட்டுப்பாட்டின் மூலம் சமூக நிலைப்பாடும், சமூக முன்னேற்றமும், வளர்ச்சியும் உறுதிப்படுத்தப் படுகின்றன என கலைக் களஞ்சியம் கூறுவதிலிருந்து அறிய முடிகின்றது. இக்கட்டுப்பாட்டிற்குள் அடங்கிய குடும்பம் உறவுமுறை, சாதிமுறை, சமயம், தண்டனை போன்றவற்றை நாட்டுப்புறப் பாடல்களிலும் காணமுடிகிறது.

குடும்பம்:-

குடும்பம் சமூகக் கட்டுப்பாட்டை முறையாகச் செயற்படுத்திச் செல்லும் ஒரு சமூக நிறுவனம் எனலாம். பண்டைக் காலத்திய கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் இன்றைய தனிக் குடும்பமாக இருந்தாலும் சமூகக் கட்டுப் பாட்டினை ஏற்படுத்துவதில் இச் சமூக நிறுவனத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை எனலாம். இதனை ''இதன் உறுப்பினர்களில் யாரொருவர் தவறு செய்தாலும் தண்டிப்பது, நன்மை செய்தால் அவரைப் பாராட்டுவது போன்ற காரியங்களைச் செய்வதன் மூலம் சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த உதவுகின்றது'' என்ற பகுதி உறுதிப் படுத்துவதை அறிய முடிகின்றது. குடும்ப வேலைகளையும் குறைவறச் செய்து கொண்டு தன்னையும் மகிழ்விக்கும் மனைவியை அவளுடைய கணவன்,

''அரிசி முளப் போட்டு

அரமனையும் சுத்தி வந்தியனா

அரிசி மணமணக்கும்

அரமனையும் பூ மணக்கும்

பருப்பு முளப் போட்டு

பட்டணமும் சுத்தி வந்தியனா

பருப்பு மணமணக்கும்

பட்டணமும் பூ மணக்கும்

வரிசை மணாளனோடு

வாய் சிரித்துப் பேசி வந்தால்

வாழ்க்கை நெய் மணக்கும்

வாசநறும் பூ மணக்கும்''

என்று புகழ்ந்து பாடுவதாக நாட்டுப்புறப் பாடலொன்று அமைந்திருப்பதை அறிய முடிகிறது.

உறவுமுறை:-

சமூக நிறுவனங்களில் குடும்பத்திற்கு அடுத்தபடியாக உறவுமுறைகள் சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் ஓர் இன்றியமையாக் காரணியாக விளங்குகின்றன எனலாம். உறவு முறைகள் சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தச் சமுதாயத்தில் ஒழுங்கையும், நிலைத்த தன்மையையும் நிலை பெறச் செய்கின்றன. உறவு முறைகள் அவரவர் சார்ந்திருக்கும் சாதிகளுக்குள்ளேயே பாராட்டப் பெறுகின்றது. இதனை ''ஒவ்வொரு சாதிக்குள்ளும் பலவகைப் பிரிவுகளாகக் குலங்கள் இருக்கும் ஒரே குலத்திற்குள் எக்காரணத்தைக் கொண்டும் திருமண உறவு ஏற்பட வாய்ப்பில்லை. இதைக் குலப்புற மணம் என்று சொல்லுகிறார்கள். வெவ்வேறு குலத்தைச் சார்ந்த ஒரே சாதி உறுப்பினர்களுக்குள் தான் திருமண உறவுகள் ஏற்படும் என்ற பகுதி உறுதிப்படுத்துவதன் வழி அறிய முடிகிறது. இதுவே குழு மணமுறை என்று நாட்டுப்புறவியலில் கூறப்படுகிறது. ஒரு குழுவில் உள்ள பெண்களுக்கும் அவரவர்க்கு முறையுள்ள ஆண்களுக்கும் இடையில் நிலவிய மணஉறவு நிலையின் எச்சமே உறவுமுறைக் கேளிக்கைகளாக இன்றும் நிலவுவதை அறிய முடிகின்றது. தனக்கு முறையுள்ள திருமணமாகாத ஒரு பெண்ணைப் பார்த்து

''கூட மேல கூட வச்சு

கூடலூரு போற பொண்ணே

கூட வேலையானா உனக்கு

கொப்பு பண்ணித் தாரேன்

சாட்டு மேலே சாடு வெச்சு

சமயவரம் போற பெண்ணே

சாட்டு வெலையானா உனக்கு

சரடு பண்ணித் தாரேன்''

என்று ஒருவன் பாடுவதாக இப்பாடல் அமைகின்றது. இப்பாடலில் அவன் தன்னை அவள் எப்பொழுது திருமணம் செய்யப் போகிறாள் என்று கேட்டபொழுது அப்பெண் அவளுக்கு அவனால் தாலியும் கொப்பும் செய்து போட முடியுமா? எனக் குத்தலாகக் கேட்பதாக மேற்குறித்த பாடல் வரிகள் அமைந்துள்ளமையை அறியமுடிகிறது.

சாதி முறை:-

கிராமங்களில் சாதிப் பிரிவுகளின் பாதுகாப்பாளர்களாக விளங்கும் பெரிய மனிதர்களில் சிலர் உழைப்பவர்களிடையே அச்சாதிப் பிரிவினைகளும், முரண்பாடுகளும் நீடிக்க வேண்டும் என்று விரும்புவர்களாக உள்ளனர். அனைத்துச் சாதிகளிலும் பெரும்பாலும் திருமண உறவு அவ்வச் சாதியைச் சேர்ந்தவர்களுக்கிடையே மட்டும்தான் நிகழ்வதுண்டு. கீழ்ச்சாதிக்குள் கலப்பு மணம் என்றாலும், சாதிப்பிரிவுக்குள் காதல் என்றாலும் சாதிக் கட்டுப்பாடுகள் அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. மேல் சாதிப் பெண்ணைக் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவன் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள முயன்றால் அவர்களைக் கொலை செய்யவும் அஞ்ச மாட்டார்கள். இதனை கலைக்களஞ்சியம் ''ஒரு சாதியைச் சேர்ந்த உறுப்பினர் அல்லது பலர் சமுகத்தால் ஒப்புதல் அளிக்கப்படாத செய்கைகளைச் செய்து விட்டால் அவர்களை நெறிமுறைப் படுத்திச் சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தச் சாதிமுறை உதவி புரிகிறது'' எனச் சுட்டுகிறது. மதுரை வீரன் நாட்டுக்கு நற்பணி செய்திருப்பினும், அரசனது ஆசை நாயகி வெள்ளையம்மாளிடம் அவன் காதல் கொண்ட குற்றத்தால் கை கால்கள் துண்டிக்கப்பட்டு உயிரிழந்தான் என்பதை நாட்டுப்புறக் கதைப் பாடலின் வழி அறிய முடிகிறது. நாயக்கர் காலத்தில் பெரிய பதவிகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட சம்பிரதி என்ற பதவியை வகித்த ஒருவருடைய மகன் காட்டுச் சாதிப் பெண்ணை வைப்பாட்டியாகக் கொண்டு வந்து விட்டதைக் கண்டு கிராம மக்கள் எள்ளி நகையாடியதை

''சைவன் கை வந்தான்

சம்பிரதி பிள்ளை மகன்

கோம்ப மலை உத்திரத்தி

கொண்டு வந்து சேத்தாரே''

என்ற நாட்டுப்புறப் பாடலின் வழி அறிய முடிகின்றது.

சமயம்:-

பண்டைக் காலத்திலிருந்து மக்களின் பழக்க வழக்கங்களைக் கட்டுப்படுத்தும் சமூக நிறுவனமாகச் சமயம் செயல்பட்டு வருகிறது எனலாம். மக்கள் எச்சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அச்சமயம் விதிக்கும் கட்டுப்பாட்டுக்கு ஏற்பத் தங்கள் வாழ்வினை அமைத்துக் கொள்ள வேண்டும். என்று கலைக் களஞ்சியம் கூறுகின்றது. அதன்படி எல்லாச் சாதியிலும் பெரும்பான்மையோர் சமயப் பற்றுடையவர்களாகவே காணப்படுகின்றனர் எனலாம். இது ஓர் இந்தியப் பண்பாட்டுக் கூறு எனலாம். செட்டியார் தாலாட்டில் சமய அடிப்படையில் அமைந்த பழக்கமாக வெள்ளி, பொன், வெண்கலம் ஆகியவற்றைக் குழந்தையின் எடைக்கு எடை கோயிலுக்கு அணிவித்தலை,

''ஆராரோ ஆரிராரோ

ஆறாம் பெரியேரி

அக்கரையும் பொன்னேரி

பொன்னேரி போய் திரும்ப

பொழுது இல்லா புண்ணியராம்

நல்ல மாங்கொல்லையிலே

புள்ளி மான் மேயுதடா

புள்ளி மான் புடிச்சிக் கட்ட

படி தவறு பொன்னாலே!

பச்சை இலுப்பை வெட்டி

பவளக்கால் தொட்டிலிட்டு

பவளக்கால் தொட்டிலிலே

பாலகனே நீ உறங்கு!

என்ற நாட்டுப் புறப்பாடல் வெளிப்படுத்துவதை அறிய முடிகிறது.

இந்து தரும வழக்கப்படி இறைச்சி குறிப்பாக மாட்டிறைச்சி சாப்பிடுவது குற்றமாகப் புராண, இதிகாச காலங்களில் இருந்து இன்றளவும் கருதப்பட்டு வருகிறது. நாயுடு, கோனார், இளுவர் போன்ற இனத்தாரின் ஒப்பாரிப் பாடல்களிலும் ஆடு, மான், புலி ஆகியவற்றின் கறியை விரும்பியுண்ணுகின்ற காட்சிகள் சித்தரிக்கப் பெற்றுள்ளன என்பர்.

''சூலாடு குத்திச் சுளுக்காகக் கறி சமைச்சு'' என நாயுடு பாடும் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

மேலும் கோயிலுக்குச் சென்று பூசை புரிந்து தனக்கு மிக நெருங்கிய உறவினர் நெடுநாள் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பழக்கத்தைக் கோனார், அகமுடையார் போன்றோரின் பாடல்களில் காண முடிகின்றது. இதனை,

''செலைக்குச் செலை பூசை பண்ணி

தெய்வத்தைக் கையெடுத்தேன்'' என்று கோனாரும்

''நாலு சருவங் கொண்டு நடுச் சருவம் தீர்த்தம் கொண்டு

நடந்தேன் திருப்பதிக்கு நாலு லட்சம் சன்னதிக்கு''

என்று அகமுடையாரும் பாடி வருகின்றனர்.

கிராமப் புறங்களில் நிலவுகின்ற உறவு முறைத் திருமணம் சமூகக் கட்டுப்பாடு. சாதிமுறை போன்றவை இந்திய சமூக அமைப்பில் இன்றியமையாத இடம் வகிப்பதனை இதன் மூலம் அறிய முடிகின்றது. குடும்பம் என்ற அமைப்பில் சமூகத்தில் வகிக்கும் பங்கினையும், தெய்வ நம்பிக்கை மக்கள் வாழ்வில் பெறும் இடத்தையும் இதன் வாயிலாக அறிய முடிகிறது.

நன்றி: வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை: