23/07/2011

நாட்டுப்புறப் பாலின மரபு - வே. சிவக்குமார்

பாலினம் பண்பாட்டுக் கட்டமைப்பாகச் சமுதாயத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண் பாலினம், பெண் பாலினம் என்று உருவாக்கப்பட்டாலும் உயர்வு, தாழ்வு என்ற முரண்களிலேயே இருக்கின்றது. ''நாட்டுப்புறவியலானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ, எதைப் பயிற்சியால் பெற்றதோ அவற்றைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்'' என்பர் ஓரளலியா எம். எஸ்பினோசா (சண்முகசுந்தரம், நாட்டுப்புறவியல் ப.3) அனுபவித்து கற்று பயிற்சியால் பெற்றாலும் ஆண் பாலினம் உடல் வலிமை உடையவன் எனவும் பெண் பாலினம் வலிமையால் குன்றியவள் எனவுமே வழங்கப்பட்டு வருகிறது.

 

தாய்வழிச் சமூகத்திலிருந்து தந்தை வழிச் சமூகத்திற்கு மாறியபின்பு பாலின மரபிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது எனலாம். பொது வாழ்வில் மட்டுமில்லாமல் கலை நிகழ்வுகளிலும் காலூன்றத் தொடங்கியது. அதற்கு கற்பு பற்றிய தமிழரின் கோட்பாடும் மாதவிலக்கு நிகழ்வுகளும் காரணமாயின.

 

உடல் உழைப்பைச் செலுத்தி நிகழ்த்தும் கலைகளிலும் நெடுநேரம் நிகழ்த்தும் கலைகளிலும் பெண்கள் தவிர்க்கப்படுகின்றனர், சில கலை கூட பெண்கள் தவிர்த்து ஆண்களே பெண் வேடமிட்டு நடிக்கின்றனர்.

 

சமுதாயத்தில் நிகழ்த்து கலைகளில் மட்டுமில்லாது வாழ்க்கை முறையிலும் பாலின வேறுபாடு அதிகமாகவே காணப்படுகிறது. பிறந்த பொழுது தாலாட்டும் இறந்தபொழுது ஒப்பாரியும் பெண்களால் மட்டுமே பாடப்படும் பாடல், இப்பாடல்கள் பெண்கள் தங்கள் பாலின வேறுபாட்டினை வெளிக்கொணர்வதாக அமைகிறது.

 

கழிந்தோர் தேஎத்து கழிபடர் உறீஇ

ஒழந்தோர் புலம்பிய கையறு நிலை

 

எனும் தொல்காப்பிய நூற்பா இறந்தோருக்காக அழுதுபுலம்பும் வழக்கத்தைச் சுட்டுகின்றது. ஆனால் இதன் வரையறை பாலினம், மரபு பற்றி ஏதும் கூறவில்லை.

 

கணவனை இழந்தபெண் (விதவை, கைம்பெண் என பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும்) மனதின் ஆசைகளையும், உணர்வுகளையும் தவிர்க்கவியலாது.

 

தச்சன் உலை நெருப்பு

தணியும் ஒரு சாமம் - என்

தங்கமடி நெருப்பு

தணிவது எக்காலம்?

 

என புலம்புகிறாள். பெண் கற்பு தீக்கு உவமையாக கூறப்படுகிறது. தீயின் தன்மையினை சமுதாயம் ஏற்றிக் கூறும் விதமும் பாலின ஏற்றத்தாழ்வே ஆகும்.

 

ஆணின் வழி துன்பங்கள் அனுபவிப்பது ஒருபுறமாக இருந்தாலும் மாறாக பெண்வழியும் துயரங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. தன் கணவன் இறந்த பின்பு பிறந்த வீட்டிற்கும் செல்ல இயலாமலும், புகுந்தவீட்டிலும் மாமியாரின் கொடுமைக்கு ஆளாகின்றனர்.

 

ஆத்தோட போற அத்த

அரிசிக் கணக்கச் சொல்லி போங்க

 

பாலினத்துக்குள்ளும் முரண்பட்டு நிற்கும் நிலைமையினை காணமுடிகிறது.

 

பெண் தன் இழிநிலைக்கு காரணமாய் அமையும் பெற்றோரையும் சுற்றாரையும் பழி தூற்றுவதாக அதிகமானப் பாடல்கள் காணப்பட்டாலும் தன்னைச் சார்ந்த ஆணினத்தையே பெரும்பாலும் பழி தூற்றுகின்றாள்,

 

தாலிக்கு அரும்பெடுத்த தட்டானும் கண் குருடோ............?

சேலைக்கு நூலெடுத்த சேனியனும் கண் குருடோ............?

பஞ்சாங்கம் பார்த்துக் சொன்ன பார்ப்பானும் கண் குருடோ........?

 

என தன்னுடைய நிலைக்கு ஆணாதிக்கமே காரணம் என்னும் நிலையும் பாடலின் மூலம் அறிய முடிகிறது. குறி கோடங்கி, சோதிடம், நல்ல நேரம், சகுணம் போன்றவைகள் ஆணின் மூலமாகப் பெண்ணுக்கு வலுவில் திணிக்கப்பட்டு அதைக் கட்டாயம் பெண் பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றாள் என்ற மரபினையும் நாட்டுபுறப்பாடல்கள் வெளிக் கொணர்கின்றன.

 

நாட்டுப்புற மக்களிடையே பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வில் பாலின வேறுபாடுகள் மிகுந்தே காணப்படுகின்றன. இந்தப் பாலின மரபுக்கெதிரான மாற்றுப் பாலின மரபு அல்லது எதிர்பாலின மரபு தோன்ற வேண்டும்.

 

இன்றைய பண்பாட்டுச் சூழலில் நாட்டுப்புற கலைகள் நலிந்து போய்விடவில்லை. தப்பாட்டம் என்பது சாதிய அடிப்படையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் பின்பற்றப்படுவதால் இழிவாகக் கருதப்படுகிறது. மாறாக நிகழ்த்தும் கலை என்னும் நிலையில் இதர சாதியினரும் இக்காலத்தில் பழகி வருகின்றனர். குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் கள்ளர் இனத்தவர் பறையர்களிடமிருந்து இக்கலையினைக் கற்றுக் கொள்கின்றனர். அதுபோலச் சில சாதியரிடம் மட்டுமே காணப்படும் ஆட்டம், பாடல்கள், ஒப்பனைகள், கலைகள் எனும் நிலைக்கு வரும்பொழுது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே காண முடிகிறது. ஆனால், இங்கும் ஆண், பெண் பாலின வேறுபாடே காணப்படுகின்றன.

 

கலைகள் எனும் நிலையில் நாட்டுபுற ஆடல்கள், பாடல்கள் பொதுமை எய்தினாலும் கலைஞர்கள் என்ற நிலைக்கு வரும்பொழுது மிகப் பெரிய வேறுபாடே காணப்படுகிறது. இன்றும் கூட நாடகம், கரகம் போன்ற கலைகளில் பறையர், சக்கிலியர் போன்ற இனத்தைச் சார்ந்த பெண்களே கலைஞர்களாக உள்ளனர். காரணம் சமுதாயத்தில் நிகழ்ந்து பெண் கலைஞர்களைப் பாலிய வேறுபாட்டுடன் பார்க்கும் நிலையே ஆகும். (ஊதியம் பெண் கலைஞர்களே அதிகமாக பெறுகின்றனர்).

 

இன்று கலை இரவுகளில் தப்பாட்டம் பெண்களும் ஆடும் நிலை தோன்றியுள்ளது. இதில் சாதி மறைந்து அனைவரும் நிகழ்த்தும் கலையாகவும் மாறியுள்ளது. பாலின மாற்று மரபு, நிகழ்த்து கலைகளில் சில அம்சங்களைத் தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றது.

 

பண்டைய கால நிகழ்வுகளில் பெண் பாலினம் தான் அனுபவித்தவற்றை, கற்றுக் கொண்டதை பாடமாக்கிப், பாலின மாற்று மரபு உருவாக்கிக் கொண்டுள்ளதை அவர்களின் வாயிலாக அறியமுடிகிறது. ஆண் பாலினம் தனது கருத்துக்களை வாழ்வில் கால கலைவடிவங்களில் திணிக்க நினைக்கும் வேளையில் மாற்று மரபாக இல்லாமல் பாலின எதிர்மரபாக மாறினாலும் கூட வரவேற்கத்தக்கது தான்.

 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் நிகழ்த்து கலைகளில் பாலின வேறுபாட்டை நீக்கும் வகையில் பாலின மாற்றுமரபு அல்லது பாலின எதிர் மரபு வளரவேண்டிய ஒன்றாகும்.

 

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: