23/07/2011

நாட்டுப்புறப் பாடல்களில் மொழி நடை - முனைவர் வேல். கார்த்திகேயன்

நாட்டுபுறப் பாடல்கள் தொன்று தொட்டு பாடிவந்த பாடல்கள் ஆகும். இப்பாடல்கள் படிப்பறிவில்லாத பாமரர்களால் பாடப்பட்ட சிறப்புடையது. இப்பாடல்கள் அன்று ஏடு எடுத்து எழுதாமல் வாய்மொழியாகப் பாடப்பட்டதால் இவை வாய்மொழிப் பாடல்கள் என்றும், ஏட்டில் எழுதா இலக்கியம் என்றும் அறிஞர் பெருமக்களால் சிறப்பிக்கப்பெறும். மக்களின் உண்மையான வாழ்க்கை இயல்புகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் நாட்டுப்புறப் பாடல்களால் அறிந்து கொள்ள முடியும். மேலும் போலித்தனமின்றி வாழ்க்கை நடப்புகளை உள்ளது உள்ளவாறு அறிந்து கொள்ளவும் துணை செய்கின்றது. அக்கால மக்களின் பழக்க வழக்கங்கள், சடங்குகள், கலைகள், அக்காலத்தில் வழங்கி வந்த கதைகள், நம்பிக்கைகள் போன்றவற்றையும் தெரிந்து கொள்ள இப்பாடல்கள் வழிவகை செய்கின்றன. சமயம் மற்றும் சமுதாய நிலைகளை வெளிப்படையாகப் பாடல்களில் வெளிப்படுத்திய தன்மையினை நாட்டுப்புறப் பாடல்களில் மட்டுமே காண இயலும். இத்தகு சிறப்பு வாய்ந்த நாட்டுப்புறப் பாடல்கள் அப்படியே நிலைத்து விடுவதில்லை. அவை ஏட்டில் எழுதி வைக்காத காரணத்தால், கேட்போரும் படைப்போரும் அவர்கள் கேட்டறிந்த வண்ணம் பாடி மகிழ்வர். அவ்வாறு காலத்திற்குக் காலம் பாடல் நிலை மாறுபடுதலும், பொருள் நிலையும், சொல் நிலையும் மாறுபடுதலும் இயல்பாக நிகழும், அவற்றை விளக்கி வரைவதே இக்கட்டுரையாம்.

 

மொழியின் சிறப்புகள் நாட்டுப்புறப் பாடல்களில் பயிலும் விதம், தனிச் சொற்கள், சொல்லாட்சி, சொல் விளக்கம், பிறமொழிச் சொற்கள், திரிபுச் சொற்கள் பற்றிய செய்திகள் ஈண்டு விளக்கப்பட்டுள்ளன.

 

நடை:-

 

நாட்டுப்புறப் பாடல்கள் இன்று செல்வாக்குப் பெற்றதற்கு முதற் காரணம் நடையாகும். இப்பாடல்களில் பயிலும் மொழி நடை மிகவும் எளிமையானது, இயற்கையானது; செயற்கைப்புனைவு ஏதுமின்றிப் பாடுவது; மண்ணின் மணத்தை அப்படியே வெளிக்காட்டி நிற்பது; கருத்திலும், நோக்கத்திலும், உணர்ச்சியிலும் எளிமையைத் தவழ விடுவது நாட்டுப்புறப் பாடல்களின் தனித்தன்மையாகும்.

 

நாட்டுப்புறப் பாடல்களில் தனிமனிதனின் எண்ணங்கள் சமுதாயத்தில் அவன் கண்ட அனுபவங்கள், அவனுடைய விருப்பு - வெறுப்பு அவனது அறிவு வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

 

இந்நாட்டுப்புறப் பாடல்களில் அந்தந்த வட்டாரத்தில் வாழுகின்ற மக்கள் பயன்படுத்துகின்ற சொற்களே பேச்சுக்களாக அமையும். அவையே அவர்கள் பாடுகின்ற பாட்டுக்களிலும் மிளிரும். தாலாட்டு ஒப்பாரி, தெய்வப் பாடல்கள் போன்றவற்றில் மிக உயர்ந்த நிலையில் சொற்கள் அமைந்திருக்கும். காதல் பாடல்களிலும், தொழில் பாடல்களிலும் கொச்சைச் சொற்கள் மற்றும் கேலியான சொற்கள் பயின்று வருவதனைக் கண்டுணரலாம்.

 

சுருங்கக்கூறின் நடையமைப்பில் எளிமையும், பயிலும் சொற்களில் மக்கள் பயன்படுத்தும் சொற் பாங்கும் வெளிப்படையாகத் தெரியலாம்.

 

சொல்லாட்சி:-

 

படிக்காத பாமர மக்களிடையேயும் நன்கு கற்றறிந்த அறிஞர்கள் பயன்படுத்தும் சிறந்த சொற்றொடர்கள் அவர்கள் பாடியுள்ள நாட்டுப்புறப் பாடல்களிலே இருந்து அறிந்து உணரலாம். குறிப்பாகக் கூறினால் நாட்டுப்புறப் பாடல்களில், ஏட்டிலக்கியமோ என் வியப்புறும் வண்ணம் பல பாடல்கள் அமைந்துள்ளன.

 

''அக்கா அடிச்சாளோ அல்லி மலர்க் கரத்தாலே?

அண்ணன் அடிச்சானோ அலரிப்பூ செண்டாலே?

அய்யா அடிச்சாரோ அம்பெய்யும் கையாலே?''

 

இப்பாடலில் பயின்று வந்துள்ள பேச்சுமொழிச் சொற்களை, சிறந்த சொற்களைப் பெய்து பேசினால் சிறப்பாக அமையும்.

 

அடிச்சாளோ என்பதனை அடித்தாலோ என்றும்

அடிச்சானோ என்பதனை அடித்தானோ என்றும்

அடிச்சாரோ என்பதனை அடித்தாரோ என்றும்

 

கூறினால் சிறந்த சொல்லாட்சியைப் பயன்படுத்திய நிலையினைப் பெற்றுணரலாம்.

 

மேலே பாடியுள்ள கரம் என்னும் சொல்லுக்குப் பதிலாக, கை என்று வந்தால் சிறப்பாக அமையும்.

 

ஒப்பாரிப் பாடல்களில் இடம் பெறுகின்ற வச்சி, வூட்ட, வாசப்படி, நீசத்தண்ணி போன்ற பேச்சு வழக்குச் சொற்களை நீக்கி அவற்றிற்கீடாக வளமான செஞ்சொற்களைக் கையாண்டால் வாய்மொழி இலக்கியம் ஏட்டிலக்கியமாகவே திகழும்.

 

குடுகுடுப்பைக்காரன் பாடல்களில் மிக உயர்ந்த சொற்கள் கையாளப் பெற்றுள்ளன என்பதற்குப் பின்வரும் பாடல் சான்றாக அமைந்துள்ளது.

 

''அம்மா நீ ஆர்க்காடு எல்லையிலே யம்மநீ

அம்மா நீ ஆணைபலி கொண்டவளே

..................................

அம்மா உனக்கு நெத்திமீது கண்களம்மா

அம்மா உலகமெல்லாம் உன் பார்வை

அம்மா நெல்பதரானாலும் பல்வேட்டெல்லையம்மா - உன்

சொல்பதராகாது''

 

இங்கு பதர் என்னும் சிறந்த சொல்லை ஆண்டுள்ளார்கள்.

 

தனிச்சொல்:-

 

இலக்கணத்தில் வழங்குகின்ற தனிச்சொற்கள் இசை நிறைத்தல் பொருட்டும், பொருள் காரணமாகவும், ஓசை காரணமாகவும் (EphoneY) ஒத்திசை காரணமாகவும் (Rhythm) பயன்படுத்தப்படும். இத்தனிச்சொற்கள், ஒலிகளாகவோ (அ) நீண்ட சொற்றொடர்களாகவோ பயின்றுவரும். இத்தனிச் சொற்கள் நாட்டுப்புறப் பாடல்களில் மிகுதியும் இடம் பெற்றுள்ளமை சிறப்புக்குரியதாகும்.

 

பெரும்பாலும் ஒப்பாரியிலும், காதற்பாடல்களிலும், சிறுபான்மை, தாலாட்டிலும் நீண்ட சொற்றொடர்கள் தனிச் சொல்லே போல் பயன்படுத்தப்படுகின்றன. தாலாட்டு, காதல், தொழில், தெய்வப் பாடல் போன்ற பகுதிகளில் தனிச்சொற்களாகப் பயின்று வருவதனைப் பின்வருவன உணர்த்தும். என், உன், கண்ணே, பெண்ணே, அம்மா, பெண்களே, மாமா, பையா, காளையீரே, ஒயிலன்னமே போன்றன.

 

நீண்டசொற்றொடர்களாக அமைந்த தனிச்சொற்கள்:-

 

ஒப்பாரிப் பாடல்களில்

 

''நீயில்லாத மாளிகையில்

என்னைப் பெத்த மாதாவே,

என்னைப் பெத்தவறே அம்மாடி

ஓ. என்னைப் பெத்த தாயே,

ஓ. என் ராஜாவே, என்னைப் பெத்த காண்டீபா.

 

எனவும் வரும்.

 

காதற்பாட்டில் நீண்ட தனிச்சொற்கள்:-

 

அடியேன் கண்ணே, அடியேன் கண்ணுப் பொண்ணு ரத்தினமே எனவும் வரும்.

 

தொழில் செய்வோர் பயன்படுத்தும் தனிச்சொற்கள்:-

 

தொழில் புரிவோர் தொழிலின் அருமையும், களைப்பும் தெரியாமல் இருக்க சில வகையான தனிச்சொற்களை பயன்படுத்துவர் அவை ஒலிக் கூட்டாகவும் அமையலாம்.

 

ஏலேலோ - ஐலசா

லேலங்கடி - லேலோ

னன்னானே - னானே

தில்லாலே - திமிலதில்லால

ஏலமடி - லேலம்

 

மேற்காணும் சொற்களுக்குப் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் தொழில் செய்வோர் இதனைப் பயன்படுத்தும் போது களைப்பு நீங்கி, புதுத்தெம்புடன் வேலை புரிவதற்கு இந்தக் கூட்டொலிகள் பயன்படுகின்றன.

 

பிறமொழிச் சொற்கள்:-

 

பல்வேறு மொழியினர் கூடி வாழ நேரும் போதும் வேற்றுமொழியினர் வென்ற நாட்டினை ஆளும் போதும் மொழிக் கலப்பு ஏற்படுவது இயல்பே. தம் மொழியில் இல்லாத சொற்களை நெருங்கிப் பழகும் மொழியாரிடத்து எடுத்துக் கையாள்வது சில நேரங்களில் தவிர்க்க முடியாததாகிவிடும். மொழிக்கு, மொழிகடன் வாங்குதல் என்பது மக்கள் பணத்தையோ, பொருளையோ கடன் வாங்குதல் போன்றதன்று. மொழியைப் பொறுத்தவரையில் கடன் கொடுப்பவர் தம்மிடமிருந்து இழப்பது ஒன்றுமில்லை. கடன் பெறுபவர் திருப்பித் தருவதுமில்லை. ஒரு மொழி இன்னொரு மொழியிலிருந்து கடன் வாங்கினாலும் ஒரு வரையறைக்குட்பட்டே கடன் வாங்குகிறது. பேச்சு மொழியில் இவ்வகை மொழிக்கலப்பு மிக எளிமையாக நடைபெறுகிறது.

 

பேச்சு மொழியில் ஒரு சொல் (பிறமொழிச் சொல்) மிகுதியும் வழக்கத்தில் வந்தபின் நாட்டுப் புறப்பாடல்களில் எளிதில் இடம் பிடித்து விடுகிறது. இம்மொழிக் கலப்பு நிலை தமிழ்மொழியில் சமயத்துறையிலும், ஆங்கிலமொழியில் புதிய கண்டுபிடிப்புகள் பெருகிய நிலையிலும் ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட காரணத்தினாலும், முகம்மதியர்கள் நம் நாட்டை ஆண்ட காரணத்தினாலும் அரேபியச் சொற்களும் இந்துஸ்தான் சொற்களும் போன்ற பல சொற்கள் தமிழ் மொழியில் கலந்து விட்டன. இவற்றையே மொழிக் கலப்பு என்றும் பிறமொழிக்கலப்புச் சொற்கள் என்றும் கூறுவர்.

 

Apple - ஆப்பிலு

Car - கார்

Gard - கார்டு

Coat - கோட்டு

Court - கோர்ட்டு

Hospital - ஆஸ்பத்திரி

Number - நம்பர்

Mile - மைல்

Minor - மைனர்

Motor - மோட்டாரு

Police - போலிசு

Radio - ரேடியோ

Station - ஸ்டேசன்

Time - டைம்

Train - ரெயில்

Road tax - ரோட்டு வரி

Current - கரண்ட்

 

முதலியன கூறலாம்.

 

சொல்லாக்கம்:-

 

ஆங்கிலச் சொல்லோடு தமிழ்ச் சொல் கலந்து வரல் நிலை இன்று பெருகிவிட்டது எனலாம். தர்ஹக் என்ற ஆங்கிலச் சொல்லோடு ஓரம், வழி, வரி, மேல் ஆகிய சொற்கள் கலந்து வந்து சொல்லாக்கமாகக் காணப்படுகிறது.

 

ரோடு + ஓரம் - ரோட்டோரம்

ரோடு + வழி - ரோட்டு வழி

ரோடு + வரி - ரோட்டு வரி

ரோடு+மேல் - ரோட்டு மேல்

 

மேற்காணும் சொற்றொடரை ஆராயுங்கால் தமிழ் மொழியும் ஆங்கிலமும் கலந்து வரும் நிலை காண முடிகிறது.

 

திரிபுற்ற சொற்கள்:-

 

நாட்டுப்புறப் பாடல்களில் தமிழ் சொற்கள் பலவாறான திரிபுகளை அடைந்துள்ளன. நாட்டுப்புறப் பாடல்கள் பேச்சு மொழியை அப்படியே ஏற்றுக் கொள்கின்றன. இம்மக்கள் பயன்படுத்தும் சொற்கள் வேண்டுமென்றே மாற்றி ஒலிப்பதில்லை. தானாகவே சொற்கள் மாற்றம் பெற்று விடுகின்றன. அடிக்கடிப் பயன்படுத்தப்படும் சொற்கள் சொற்றொடர்கள் மிகவும் குறுகி ஒலிக்கப்படுகின்றன. பேச்சு வழக்கே நாட்டுப்புறப் பாடலின் வழக்காகும். இப்பாடல்களில் தமிழ்ச் சொற்கள் திரிபு கொண்ட நிலையே மிகுதி எனலாம்.

 

எழுத்து மொழி - நாட்டுப்புற மொழி:-

 

கட்டின - கட்ன

வீட்டிலே - வூட்ல

ஒன்றரைக்கண் - ஒன்றக்கண்

காண்பி - காமி

முகம் - மூஞ்சி

மண்வெட்டி - மம்டி

இருக்கிறதாம் - கீதாம்

 

மேற்கூறிய வழி நாட்டுப்புறப் பாடல்களில் மக்கள் பயன்படுத்தும் சொற்கள் அமைந்த பாடல்கள் வாழ்வை வெளிப்படுத்துவனவாகவும், பேச்சுப்பாங்கிலும், இனிய எளிய நடையுடையனவாகவும் காணமுடிகின்றது. இதனால் மொழியின் நடையும், சொல்லாட்சியும் புதிய சொல்லாக்கமும், தனிச்சொல் நிலையிலும் பயின்று வருவதனை மேற்காணும் கட்டுரை விளக்குகின்றது. பிறமொழிகளில் தமிழின் சிறப்பும், கலந்துவரலும் மிகுதியால் விரவி வருவன என்பதும் மக்கள் பயன்படுத்துவதால் தமிழ்ச்சொற்கள் எழுத்து மற்றும் சொல் நிலையாலும் மாறி வரும் என்பதனை இக்கட்டுரையினின்றும் அறிந்துணரலாம். சுருங்கக் கூறின் காற்றில் மிதந்து வந்த கவிதைகளிலும், மொழிச் சிறப்பும், திறன்களும் வெளிப்பட்டு நிற்கின்றன என்பதனை அறிய முடிகிறது.

 

நன்றி: வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை: