04/06/2015

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 30

உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களின் குழந்தைகளுக்கோ "டிஸ்லெக்சியா' என்று மருத்துவர் சொன்னால், கவலைப்படுவதை விட்டுவிட்டுப் பெருமைப்படுங்கள். உலகின் மிகப் புகழ்பெற்ற ஓவியர், வடிவமைப்பாளர், விஞ்ஞானி மற்றும் சிந்தனையாளராகிய லியனார்டோ டாவின்சி இந்தக் குறைபாடு (அல்லது வேறுபாடு) கொண்டவர் என்று கூறப்படுகிறது. உலகிலேயே மிக அதிகமான பொருள்களுக்கு காப்புரிமைப் பட்டயம் (Patent Right) பெற்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பாளராகிய தாமஸ் ஆல்வா எடிசன், தொலைபேசியை உருவாக்கிய அலெக்சாண்டர் கிரஹாம் பெல், மின்சார யுகத்திற்கு நம்மை இட்டுச்சென்ற மைக்கேல் ஃபாரடே, புகழ்பெற்ற அரசியல் தலைவர்களான உட்ரோ வில்சன், ஜார்ஜ் வாஷிங்டன், மிகப் பிரபலமான தொழிலதிபர்களாகிய ஹென்றி ஃபோர்டு, ராபர்ட் உட்ரஃப், மிகப் பிரபலமான எழுத்தாளராகிய அகதா கிறிஸ்டி, ஹாலிவுட்டைக் கலக்கும் நடிகர்களாகிய கீனு ரீவ்ஸ், டாம் குரூஸ், ஆலிவர் ரீட் முதலியோர் "டிஸ்லெக்சியா' என்பது ஒரு குறைபாடு என்ற ஒரு கருத்தையே "குறைபாடுடைய கருத்து' என்று மெய்ப்பித்தவர்கள்.

முறையான கல்வி, போதுமான அளவு அறிவுக்கூர்மை மற்றும் தேவையான அளவுக்கு சமூக, கலாசாரப் பின்னணி ஆகியவற்றைப் பெற்றிருந்தும்கூட, ஒரு மொழியின் ஒலி வடிவத்தையும், வரி வடிவத்தையும் சாதாரண மனிதர்களைப்போல் ஒரே வேகத்திலும், ஒரே சீராகவும் பிடிக்க முடியாத அல்லது படிக்க முடியாத ஒரு குறைபாடு "டிஸ்லெக்சியா' என்று சொல்லப்படுகிறது. ஸ்டுட்கார்டு நகர கண் மருத்துவர் ருடால்ஃப் பெர்லின் என்பவரால் 1887-இல் டிஸ்லெக்சியா என்ற சொல் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, பிரிட்டிஷ் மருத்துவ இதழில் 1896-இல் பிரிங்கிள் மோர்கன் என்னும் ஆங்கிலேய மருத்துவரால் டிஸ்லெக்சியா என்பது மரபுவழி சொற்குருடு (Congenital word blindness) என்று விளக்கப்பட்டது. அமெரிக்க தேசிய மூளை நரம்பியல் குறைபாடு இயக்ககம் இச்சொல்லுக்கு கீழ்க்கண்ட விளக்கத்தைத் தருகிறது.

"ஒரு மனிதனின் படிக்கும் திறனைப் பாதிக்கும் மூளை தொடர்புடைய கற்றல் குறைபாடு டிஸ்லெக்சியா. இக்குறைபாடு உடையவர்கள் சாதாரண அறிவுக்கூர்மை கொண்டவர்கள் பெற்றிருக்கும் படிக்கும் திறனைவிடக் குறைவான திறனைப் பெற்றிருப்பர். இத்தகவல்களைக் கருத்தில் கொண்டு, இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

ஷா.கமால் அப்துல் நாசர், "டிஸ்லெக்சியா' என்ற சொல் எழுத்தறிதிறன் குறைபாடு, புரிதிறன் குறைபாடு, கற்றல் குறைபாடு, வாசித்தல் குறைபாடு என்னும் பொருள்களைக் குறிக்கும் என்கிறார்.
முனைவர் ஜி.ரமேஷ், இச்சொல்லுக்கு படிக்க முடியாதிருத்தல், எழுத்துக் குழப்பம், கற்றுக்கொள்ளும் சிரமம், புரிந்தும் படிக்க இயலாமை என்னும் சொற்களைக் பரிந்துரைத்துள்ளார்.

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, "கற்றல் குறைபாடு' என்ற ஏழாம் வேற்றுமைத் தொகையாகவோ அல்லது கல்திறக்குறை அல்லது கற்றிறக்குறை என்றோ குறிப்பிடலாம் என்கிறார்.

வழக்குரைஞர், கோ.மன்றவாணன், கற்றல் குறைபாடு, கற்றல் இடர்பாடு, கற்றலிடர், அறிபுலன் குறைபாடு, அறிதல் இடர்பாடு, அறிதிறன் குறைபாடு, கற்றல் தடுமாற்றம், கற்றல் மாறாட்டம், பயிலல் இடர்பாடு, பயிலல் குறைபாடு, எழுத்து மாறாட்டம் ஆகிய சொற்கள் பொருந்தும் என்றும், நடைமுறை Word Blindness என்று குறிப்பிடுவதால், தமிழில் சொற்குருடு அல்லது சொற்பார்வைக் குறைபாடு என்னும் சொற்களாலும் குறிப்பிடலாம் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், படிக்க, பேச, உச்சரிக்க முடியாநிலை, வாசிப்பில் சிக்கல், படிப்பு இடர்பாடு, படிப்பதிலும், எழுத்துக்கூட்டலிலும் சிக்கல், வாசிக்க முடியா நிலை, புரிந்து படிக்க முடியாநிலை, படிப்பறிவில் குழப்பம் ஆகிய சொற்களைக் குறிப்பிட்டுள்ளார்.

வழக்குரைஞர் அ.அருள்மொழி, டிஸ்லெக்சியா குறையுடைய குழந்தைகளுக்கு உடல், செயல் மற்றும் சிந்திக்கும் திறனில் எந்தக் குறைபாடும் இருக்காது என்றும், ஆனால், எழுத்துகளைப் படித்து, அதன் ஒலி மற்றும் வரி வடிவத்தை இணைத்து, உள்வாங்கி, மனத்தில் பதிய வைத்துக்கொள்ளும் ஆற்றல் குறைவாக இருக்கும் என்றும், அக்குழந்தைகளுக்கு முறையான பயிற்சி தருவதன் மூலம் அவர்களை மற்றவர்களைப் போல் செயல்பட வைக்க முடியும் என்றும், "கற்றல் குறைபாடு' என்ற சொல் ஏற்கெனவே புழக்கத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புலவர் செ.சத்தியசீலன், "நினைவுத்திறன் குறைபாடு' என்றும், சோம. நடராசன், எழுத்து மாறாட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வாசகர்களின் கருத்துகளையும், நரம்பியல் அறிஞர்கள் டிஸ்லெக்சியாவைப் பற்றிக் கூறியிருக்கும் கருத்துகளையும் கூர்ந்து ஆய்ந்தால், ஒரு செய்தி நமக்குப் புலப்படும். ஒரு வாக்கியத்தைப் படிப்பதிலோ, எழுதுவதிலோ, ஒரு சொல்லில் அமைந்துள்ள எழுத்துகளைச் சரியாக உணர்ந்து கொள்வதிலோ ஏற்படும் சிரமம் டிஸ்லெக்சியா அல்லது டி.ஆர்.டி. (D.R.D) எனப்படும் Developmental Reading Disorder ஆகும். ஆனால், இக்குறைபாட்டை ரீடிங் டிùஸபிலிட்டி (reading disability), லேர்னிங் டிùஸபிலிட்டி (learning disability) என்று பொதுவாகக் குறிப்பிடுவதால், இது படித்தல் குறைபாடா, புரிதல் குறைபாடா, அறிதல் குறைபாடா என்கிற ஐயம் தோன்றுகிறது. அதனால்தான், "கற்றல் குறைபாடு' என்ற சொல்லைப் பலரும் பயன்படுத்தி உள்ளனர். படித்தல் என்ற சொல்லுக்கும், கற்றல் என்ற சொல்லுக்கும் வேறு வேறு பொருள்களும், பரிமாணங்களும் உண்டு. இருப்பினும், "லேர்னிங்' என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பெருமளவில் "கற்றல்' என்றே பொருள் கொண்டுவிட்ட காரணத்தினால், "கற்றல் குறைபாடு' என்ற சொல் பொருத்தமாக இருக்கும். ஆனால், இது ஒரு குறைபாடா? என்கிற கேள்வி அடிப்படையாக எழுவதாலும், டிஸ்லெக்சியாவோடு சாதனை புரிந்தவர்கள் பட்டியல் பிரம்மாண்டமாக இருக்கும் காரணத்தினாலும், இதை ஒரு குறைபாடு என்பதைவிட, "இடர்பாடு' என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

எனவே, "டிஸ்லெக்சியா' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "கற்றல் இடர்பாடு’.


நன்றி - தமிழ்மணி 02 06 2013

கருத்துகள் இல்லை: