05/06/2015

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 33

1906-ஆம் ஆண்டு, வியன்னா நாட்டுக் குழந்தை நல மருத்துவர் க்ளமென்ஸ் ஃபான் பிர்க்வி (Clemens Von Pirquet) என்பவர்தான் முதன்முதலில் அலர்ஜி என்ற சொல்லை உருவாக்கினார். பழைய கிரேக்கச் சொற்களாகிய அல்லாஸ் (Allos) மற்றும் எர்கான் (Ergon) ஆகிய இரு சொற்களின் கூட்டுச் சேர்க்கையாக அவர் இச்சொல்லை உருவாக்கி, தூசு, மகரந்தம் அல்லது ஒருசில உணவுப் பொருள்கள் சில நோயாளிகளின் உடலில் மிகத் தீவிரமான நுண்ணுணர்வை ஏற்படுத்துவதைக் குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்தினார். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எப்படி பல்வேறு வகையான அலர்ஜி ஏற்படுகிறது என்பது 1960க்குப்பின் மருத்துவ உலகில் இம்யுனோகுளோபுலின்-இ (Immunoglobulin-E) என்ற நோய் எதிர்ப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், தெள்ளத் தெளிவாக விளங்கியது. இனி இவ்வாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

வழக்குரைஞர் எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி, உடலுக்கு ஒத்துக்கொள்ளாத திட, திரவ மற்றும் வாயுப் பொருள்களை அலர்ஜி என்பதால், இதற்கிணையான சொல் "ஒவ்வாமை' என்கிறார். புலவர் சி.செந்தமிழ்ச்சேய், உடல் எதிர்ப்புணர்வு, ஏற்காமை, ஏலாமை மற்றும் பொருந்தாமை முதலிய பொருள்களைக் கொள்ளலாம் என்கிறார்.

வழக்குரைஞர், கோ.மன்றவாணன், ஒவ்வாமை, ஊறுணர்வு, எதிருணர்வு, எதிர்ச்சி, நுண் ஊறுணர்வு, நுண் எதிருணர்வு, ஊறுபொருள் விளைவு, ஊடுபொருள் எதிர்விளைவு, ஊடுபொருளின் ஏலாமை, ஊடுபொருள் பொருந்தாமை முதலிய பொருள்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

டாக்டர் ஜி.ரமேஷ், "ஒவ்வாமை' என்றும், முனைவர் பா.ஜம்புலிங்கம், ஒவ்வாமை, ஏற்காமை, பீதி, ஏற்கா சூழல் மற்றும் ஒத்துக்கொள்ளா நிலை முதலிய சொற்களையும் பரிந்துரைத்துள்ளனர்.

என்.ஆர்.சத்யமூர்த்தி, ஒவ்வாமை, கடும் ஒவ்வாமை, ஏலாமை என்று நேர்ப்பொருளிலும், வெறுப்பு, மிகு வெறுப்பு, கடும் வெறுப்பு என்று அணிசேர் பொருளிலும் பொருள் கொள்ளலாம் என்கிறார்.

சோம.நடராசன், பொதுவாக அலர்ஜி என்பதற்கு மருத்துவ ரீதியில் "ஒவ்வாமை' எனப்பொருள் கொண்டாலும், அது "வேறு' என்ற பொருள் கொண்ட அல்லாஸ் (Allos) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தும், வினை என்ற பொருள் கொண்ட எர்கான் (Ergon) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தும் வந்தது என்றும், அதனால், அலர்ஜி என்பதை வேற்றுவினை, வேற்று ஆற்றல், பிறவினை, மற்றவினை மற்றும் அல்வினை என்று மொழியாக்கம் செய்யலாம் என்கிறார்.

டி.வி.கிருஷ்ணசாமி, ஒவ்வாமை அல்லது ஒத்துவராமை என்று பொருள் கொள்ளலாம் என்கிறார். தெ.முருகசாமி, "ஒவ்வாமை' என்றும், இதை வள்ளுவரும் ""மாறுபாடில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடில்லை உயிர்க்கு'' என்ற குறளின் மூலம் மறைமுகமாகக் குறிப்பதாகவும் மேலும், அலர்ஜி என்பதற்கு உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு என்று சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி பொருள் தருகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

அலர்ஜி மருத்துவம் சார்ந்த ஆங்கிலச் சொல் என்றும், ஒருவர் தம் உடற்கூறுக்கு முரணான உணவினை உட்கொள்வதால் ஏற்படும் இயல்பல்லாத உணர்ச்சி மற்றும் உடலில் போடப்படும் ஊசி, பூசப்படும் களிம்பு வகைகள், மணப்பொருள்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத நிலையையும், இவற்றைத் தாண்டி, ஒலிகளால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் என்றும், எனவே ஊண் ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை, உணர்வு ஒவ்வாமை, எதிர்விளைவு ஆகிய சொற்களை இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்றும் புலவர் செ.சத்தியசீலன் எழுதியுள்ளார்.

சோலைக் கருப்பையா, "ஒவ்வாமை' என்றும், வெ.ஆனந்தகிருஷ்ணன் ஒவ்வாமை, அல்லது மிகுநுட்ப ஊறுணர்வு, உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர் விளைவு ஆகிய சொற்களையும், க.அன்பழகன் (ஹரணி) மிகு விளைவு, உடல் மிகுவினை, மேனி மாற்றம், மெய் எதிர் தோற்றம், அயல்பொருள் மிகுவினை முதலிய சொற்களையும், பெ.கார்த்திகேயன், ஒவ்வாமை, இயலாமை, பொருந்தாமை, ஏற்காமை, இசையாமை உடல் எதிர் விளைவு முதலிய சொற்களையும், ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், ஏற்றுக்கொள்ளாமை, பொருந்தாமை, விரும்பாமை ஆகிய சொற்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு வாசகர் விக்கிபீடியா தொகுப்பின் அடிப்படையில் இச்சொல்லுக்குப் பண்டைத் தமிழ் மருத்துவத்தில் "அழற்சி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், சித்த மருத்துவர் சிவராமன், அழற்சி என்ற சொல் இன்ஃப்ளமேஷனைக்  (inflammation)  குறிக்கும் என்கிறார்.

முனைவர் சிதம்பரநாதன் செட்டியாரால் பதிப்பிக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் இச்சொல்லுக்கு மிகு நுட்ப ஊறுணர்வு, உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு, ஊறுபொருள் அல்லது உயிர்க்காப்பு மூலம் பொருள்வகையில் ஏற்படும் கூருணர்வு நிலை ஆகிய பொருள்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், இச்சொற்களும், மன்றவாணன் பரிந்துரைத்துள்ள நுண் ஊறுணர்வு போன்ற சொற்களும் அலர்ஜியின் அடையாளம் அல்லது வெளிப்பாடான ஹைப்பர் சென்ஸிடிவிடியைக் குறிப்பதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

எனவே, இவையனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, ஒவ்வாமை, ஏற்காமை, ஏலாமை, பொருந்தாமை ஆகிய அனைத்துச் சொற்களும் அலர்ஜி என்ற சொல்லுக்குப் பொருந்தும் போல் தோன்றுகிறது. இவற்றுள் பெருமளவில் "ஒவ்வாமை' என்ற சொல் பயனாக்கத்திற்கு வந்து விட்டதாகத் தெரிகிறது. (சென்ற ஞாயிறன்று சொல்வேட்டையைப் படித்த உடனேயே, எனது கைபேசியில் குறுஞ்செய்தியின் மூலம் ஒவ்வாமை என்ற சொல்லை நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன் அனுப்பிவிட்டார்).

எனவே, அலர்ஜி என்ற சொல்லுக்குப் பெருவாரியான வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் இணைச்சொல் "ஒவ்வாமை' ஆகும்.

நன்றி - தமிழ்மணி 23 06 2013

கருத்துகள் இல்லை: