30/01/2013

'கல்விக்கடல்' கம்பராமன்! - மா.சின்னு




சைவ சமயக் குரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசர் மீது கொண்ட பற்றினை வெளிப்படுத்திய அப்பூதியடிகளைப் போன்றவர் "கல்விக்கடல்' இராமராஜன்.

நாமக்கல் மாவட்டம் வரகூரில் 1922-ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி ரெட்டியாருக்குத் தவப்புதல்வராகப் பிறந்தவர். இளமையிலேயே நம்பெருமாள் ரெட்டியாரிடம் தமிழ்க் கற்றதுடன், திருவையாறு அரசர் கல்லூரியில் படித்து 1945-ஆம் ஆண்டு புலவர் பட்டம் பெற்றார். 1947-இல் நாமக்கல் மாவட்டம் வேலூரில் உள்ள வள்ளல் சங்கர கந்தசாமிக் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதித் துறையில் பணியாற்றினார்.


இவருடைய தந்தை பட்டம் பெறாத தமிழறிஞர். சிறிய மாமனார் ஜகந்நாத ரெட்டியார் புலவர் பட்டம் பெற்ற தமிழறிஞர். இந்தச் சூழலும், தணியாத இலக்கிய-இலக்கண வேட்கையும் இளமையிலேயே முகிழ்ந்ததால், உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும்போதே நுண்மான் நுழைபுலம் மிக்க தமிழ்ப் பேரறிஞராகி, தமிழகச் சான்றோர்களின் உள்ளம்கவர் கள்வரானார். இவருள்ளமோ கம்பனையும் இராமனையும் காதலித்தது. அதனால் "கம்பராமன்' எனும் புனைபெயருடன் கம்பன் விழா உள்ளிட்ட அரங்குகள்தோறும் கவிமழை பொழிந்து தமிழ்ப் பயிரைச் செழிக்கச் செய்தார். தம் இல்லத்திற்கும் "கம்பன் நிலையம்' என்று பெயர் வைத்தார். தம் இரண்டாம் புதல்வனுக்கு "இளங்கம்பன்' எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

கம்பராமன் செய்ந்நன்றி மறவாச் செம்மல். திருவையாறு தமிழ்க் கல்லூரியில் தமக்குத் தமிழமுதம் ஊட்டிய "வைணவப் பெருங்கடல்' புருஷோத்தம நாயுடுவின் பெயரை தம் மூத்த மகனுக்கு வைத்ததுடன், ஆசிரியர் திருவுருவப் படத்தை இல்லத்தில் வைத்து நாளும் வழிபட்டார்.

"கம்பன் இல்லம்' சான்றோர் பலர் கூடும் சங்கப் பலகையாகத் திகழ்ந்தது. கம்பன் இல்லம் நோக்கி இலக்கண-இலக்கியத் தாகம் கொண்டோர் பலர் வருவர். "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி., "தமிழ்க் கடல்' இராய.சொக்கலிங்கம், "வாகீச கலாநிதி' கி.வா.ஜ., "கம்பன் அடிப்பொடி' சா.கணேசன், நீதிபதி மு.மு.இஸ்மாயில், ஜஸ்டிஸ் மகராஜன், எஸ்.இராமகிருஷ்ணன், "சிந்தாமணிச் செம்மல்' மு.இராமசாமி முதலிய தமிழறிஞர்கள் வருவர். நாள் கணக்கில் தங்குவர். இலக்கண-இலக்கிய விவாதங்கள் நிகழும். சூழ்ந்திருப்போர்க்கு தமிழ் விருந்தும் கிடைக்கும்.

கம்பராமன் ஆங்கிலம் படிக்காதவர்; ஆனாலும், ஆங்கில வல்லுநர் சீனிவாசராகவனுடன் பழகி ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி இவர்களின் கவிதை நயங்கள் அவர் கூறக்கேட்டு, தம் மனதில் பதியவைத்து, வேண்டுவோர்க்கு வழங்கி வியப்புறச் செய்வார்.

கண்ணனை வழிபட்ட கம்பராமன் கர்ணனாக விளங்கினார். இவருடைய தந்தை வரகூர் வரும் ஏழைத் தமிழ்ப் புலவர்களின் வறுமையைப் போக்கியது போலவே இவர் நல்லற மூர்த்தியாக வாழ்ந்து காட்டினார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, சென்னைக் கம்பன் கழகத்தின் விருது, ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவையின் "கல்விக்கடல்' விருது எனப் பல விருதுகள் பெற்று "பொற்கோட்டிமயம்' போல் புகழ் மணக்கும் உச்சியில் உயர்ந்து நின்ற இவர், "சிறியாரை மேம்படச் செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்' என்ற பாரதியின் கொள்கையைத் தம் வாழ்வில் கடைப்பிடித்து, ஏழை மாணவர் பலருக்குப் பொருளாதார உதவிகள் செய்தார். கல்லூரிப் படிப்புவரை உதவி, அவர்கள் பட்டம் பெற்று உயரச் செய்தார். பட்டம் பெற்ற மொழியாசிரியர்களைப் பேராசிரியர்களாக - முனைவர்களாக உயரச் செய்து மகிழ்ந்தார்.

"அடையா நெடுங்கதவும் அஞ்சல் என்ற சொல்லும் உடையாராய்' மனைத்தக்க மாண்புடைய மனையாள் விஜயகெüரி இருக்க, மூத்த, இளைய புதல்வர்கள் முறையே ஆங்கிலம், பொறியியல் துறை வல்லவராகி விளங்க, நாளும் அன்பர்கள் புடைசூழ வேலூரில் வாழ்ந்த கம்பராமன் இறுதிக் காலத்தில் திருவரங்கம் சென்று தங்கி, 6.6.2004-இல் இறைவனடி சேர்ந்தார்.

கம்பராமன் இயற்றிய இறவாப் புகழ் நூல்களுள் சில: வரோதயம், மேகநாதம், குமார சம்பவம், சந்திர விநாயகர், திருமுறை(1000), திருவேங்கடமுடையான் திருவாயிரம், சந்திர விநாயகர் கலித்தொகை, சுகோதயம், காஞ்சிப் பெரியவர் கலம்பகம், கம்பனும் ஆழ்வார்களும்.

இவற்றுள் தமிழறிஞர்களை மிகமிகக் கவர்ந்த காவியம் "மேகநாதம்'. இராவணன் மைந்தனாகிய மேகநாதன் (இந்திரஜித்) இறுதிக் காலத்தைக் காட்டும் காவியம் இது. கம்பனை நிகர்த்த விருத்தப்பாக்கள் அணி செய்யும் காப்பியம் இது.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: