30/01/2013

'இசைத் தமிழ் வித்தகர்' வீ.ப.கா.சுந்தரம்! - புலவர் தங்க.சங்கரபாண்டியன்



"இசைத்தமிழ்ப் பேரறிஞர்' என்று மறைமலைநகர் தமிழ் ஆய்வரங்கம் பட்டமளித்துப் பாராட்டிய பெருமைக்குரியவர் முனைவர் வீ.ப.கா.சுந்தரம். இசைத் துறையிலும், தமிழ் இலக்கியத் துறையிலும், சொல்லாராய்ச்சியிலும், இசைக்கருவிகள் இசைப்பதிலும் கைதேர்ந்தவர்.

மதுரை மாவட்டம் உத்தமபாளையத்துக்கு அருகில் உள்ள கோம்பை எனும் ஊரில், வீ.பரமசிவம்பிள்ளை-காமாட்சி இணையருக்கு 1915-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி  பிறந்தவர். இளமையில் நாடகம் பார்ப்பதில் ஆர்வம் காட்டிய இவர், பாடல்கள் பாடுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். பட்டப்படிப்பு முடித்த பின்பு மதுரையிலுள்ள பசுமலை ஆசிரியர் பயிற்சிப்பள்ளியின் தலைமை ஆசிரியராக 17 ஆண்டுகள் பணிபுரிந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி 1975-இல் பணி ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு, மதுரையிலுள்ள "அரசரடி இறையியல்' கல்லூரியில் மேல்நாட்டு மாணவர்களுக்கு இசையும் (வாய்ப்பாட்டு), இசைக்கருவியும் பயிற்றுவித்தார். மதுரையிலும் திருச்சியிலும் தங்கி தமிழாய்வு செய்துவந்தார். ÷இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வித்துவான் மற்றும் தமிழ் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் "பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

மதுரையில் வாழ்ந்தபோது சோமசுந்தர பாரதியாரிடம் தொடர்பு கொண்டு தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும் ஐந்தாண்டுகள் பாடம் கேட்டார். மதுரையில் வாழ்ந்த சி.சங்கரசிவனார் என்னும் இசை அறிஞரிடம் இசையியல், காலக்கணக்கியல், கஞ்சிரா முழக்கம்
பற்றி பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பாடம் பயின்றார்.
மத்தளவியல், அருட்குறள், பைந்தமிழ்ப் பயிற்று முறை, ஆளுடையப் பிள்ளையாரும் அருணகிரிநாதரும், தொல்காப்பியத்தில் இசைக் குறிப்புகள், (ஆராய்ச்சி), இன்றுள்ள இசைத்துறை வடசொற்களுக்குத் தமிழ்ச்சொல், சிறுவர் இன்பம், பஞ்சமரபு, பஞ்சமரபுக் கழகம் போன்ற பல (இசை) நூல்களை எழுதியுள்ளார். "பஞ்சமரபு' என்னும் இசைத்தமிழ் நூலுக்கு விரிவான விளக்க உரையும் எழுதியுள்ளார்.

""தொல்காப்பிய இயற்றமிழ் இலக்கணத்துள் இழையோடிக் கிடக்கின்றது இசைத்தமிழ் இலக்கணம். கீர்த்தனைகளுக்குரிய யாப்பிலக்கணம் தொல்காப்பியத்தில் காணக்கிடைக்கின்றது'' என்று "இசைக் குறிப்புகள்' நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பாவேந்தர் பாரதிதாசனார் இவரை "அறிஞர்' என்றும், "தம் நண்பர்' என்றும் போற்றியுள்ளார். பண்ணாய்வுக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பல்கலைக்கழகக் கருத்தரங்குகளிலும் நூற்றுக்கணக்கான முறை பங்கேற்றுப் உரை நிகழ்ச்சியுள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நாட்டிய, தாள அளவீடு பற்றிய ஆய்வுரையின்போது பேச்சாளர் கூறியதில், தாளத்துக்கும் ஆட்டத்துக்கும் பொருத்தம் இல்லாது உள்ளதைக் கண்ட வீ.ப.கா.சுந்தரம் பேச்சின் இடையே குறுக்கிட்டு, குறித்த தாளத்தின் கணக்கைத் தாளமிட்டுக் காட்டி அவையோரின் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியது முதல், அவர் பல்லாண்டுகளாகத் தொகுத்து ஆய்வு செய்து கண்ட முடிவுகள் "தமிழிசைக் கலைகளஞ்சியம்' (நான்கு தொகுதிகள்) என்னும் பெயரில் அரிய நூலாக 12 ஆண்டுகள் அவருடைய கடின உழைப்பில் - முயற்சியில் வெளிவந்தது.

இக்கலைக் களஞ்சியத்தில் மொத்தம் 2232 தலைமைச் சொற்கள் விளக்கப்பட்டுள்ளன. இவைதவிர, பல்லாயிரம் கிளைச் சொற்களும் விளக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் தமிழகத்திலும் வெளிந்துள்ள இசைக் கலைக்களஞ்சியங்களுள் இந்நூல்தான் மிகப்பெரிய நூல் எனப் புகழப்படுகிறது. இசை வல்லார் பயன்படுத்தும் பிறமொழிச் சொற்களுக்கு இவர் பலநூறு தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார்.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் "கருணாமிர்த சாகரம்', விபுலானந்தரின் "யாழ் நூல்' ஆகியவற்றுக்குப் பின் வீ.ப.கா.சுந்தரத்தின் "தமிழிசைக் கலைக்களஞ்சியம்' தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய புதையலாகும். தாம் பலகாலமாக எழுதிவந்த கட்டுரைகளைத் தொகுத்து "தமிழ் இசை வளம்' என்னும் பெயரில் நூலாக்கினார். இந்நூல் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றும் தமிழ் இசையைப் பரப்பினார். ஆய்வுக் கட்டுரைகள் எழுதியும் தம் இசை ஈடுபாட்டை நிலைநிறுத்தி வந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் இசை ஆய்வறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கலைக் களஞ்சியப்பணி நிறைவுற்றதும், மதுரை பசுமலையில் தங்கி இசை ஆய்வுகள் செய்துவந்தார். இறுதியாக, முறம்பு என்னும் ஊரில் அமைந்திருந்த பாவாணர் தோட்டத்தில் தொடர்ந்து உரை நிகழ்த்தி வந்த அந்த இசைக்குயில், 2003-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி இசையுலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்டது.

புல்லாங்குழல் இசைப்பதில் வல்லவரான இவர், தமிழரின் முதல் இசைக்கருவி புல்லாங்குழல்தான் என்றும், முல்லைப் பண்ணே முதல் பண் என்றும் நிறுவியவர். தாளக் கருவிகளை இசைப்பதில் அளவில்லா ஈடுபாடு கொண்ட வீ.ப.கா., இசை குறித்து மேலும் பல நூல்களை எழுதத்  திட்டமிட்டிருந்தார். அதற்குள் காலன் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டான்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: