30/01/2013

'கம்பீரமிக்க கவிதை' பாலா! - முனைவர் சொ.சேதுபதி



தமிழையும் ஆங்கிலத்தையும் தமது தாய்மொழிகள் எனும்படி சரளமாய்க் கவிதை மணக்கத் திறனாய்வு நோக்கில் கம்பீரமாகப் பேசும் சிவகங்கைச் சீமைக்காரர் கவிஞர் பாலா. தேர்ந்த திறனாய்வாளர்; நல்ல மொழிபெயர்ப்பாளர்; பீடுடைய பேராசிரியர்; நுட்பமிகு சொற்பொழிவாளர் - இவை அனைத்தும் ஒருங்கு திரண்ட இனிய மனிதர்.

13.1.1946 அன்று இராமதாஸ்-ஞானாம்பிகை தம்பதியருக்கு மகவாய்த் தோன்றிய இரா.பாலச்சந்திரன், சிவகங்கை மன்னர் பள்ளியில் பள்ளிக் கல்வியும், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் கல்லூரிக் கல்வியும் பெற்றவர். திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்டமும் பெற்ற பாலா, கவிஞர் மீராவின் தாயன்பில் தழைத்தவர்.

வானம்பாடி, தீபம், கண்ணதாசன் மற்றும் தாமரை இதழ்களில் தடம்பதித்து வளர்ந்த கவிஞர் பாலாவின் உன்னதத் தமிழ்ப்படைப்பு, புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை. நெடிய மரபில் ஆயிரக்கணக்கான ஆண்டுக்கால பரிமாணங்களோடு செம்மாந்து நிற்கும் தமிழ்க்கவிதை விருட்சத்தின் வேர்களையும் விழுதுகளையும் சரிவர அடையாளம் காட்டி, புதிதாய் எழுத வருகிறவர்களுக்கு உரிய திசைகளைக் காட்டிக் கூடவரும் ஒரு கவிதைப் பயணியாக, பாலா நின்று நிலைக்கும் உயிருள்ள புத்தகம்.

 புதுக்கவிதையாளர்க்குரிய புதுத் தொல்காப்பியம் மரபு உதறிப் பொதுக்கவிதைகள், புதுக்கவிதைகள் என உலா வந்த காலத்தில், புதுக்கவிதைகள் என இவர் தந்த கவிதைகளின் தொகுப்பு நூல், "இன்னொரு மனிதர்கள்', "திண்ணைகளும் வரவேற்பறைகளும்', இவற்றோடு "நினைவில் தப்பிய முகம்' ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் தமிழுக்குத் தந்தவர். மேலும், "வித்யாபதியின் காதல் கவிதைகள்' இவர்தம் மொழியாக்கமாகத் தமிழுக்கு வாய்த்தது. "தமிழ் இலக்கிய விமர்சகர்கள்', "கவிதைப்பக்கம்' ஆகியன இவரது கட்டுரைத் தொகுப்புகள்.

வானொலி மற்றும் மேடைக்கவிதை அரங்குகளில் இவரது தலைமை பீடுடையது. கம்பீரக்குரலில் எவரையும் ஈர்த்து, அவரவர் இதயங்களுக்குள் உறைந்துகிடக்கும் கவிதை உணர்வைத் தூண்டி எழுப்பிக் கண்களில் மின்னல் தோன்ற வைத்துக் கைதட்டல்களை அறுவடை செய்வார்.

மகாகவி பாரதியிடம் மாறாத அன்புகொண்ட பாலா தந்த ஒப்பிலக்கிய நூல், "பாரதியும் கீட்சும்', "சர்ரியலிசம்' இவரது ஆங்கிலப் புலமையின் செறிவுக்குப் பிறந்த இனிய தமிழ்த் திறனாய்வுக் குழவி. நினைவில் உறையும் கவிஞர் மீரா குறித்து இவர் ஆங்கிலத்தில் தந்த ஙங்ங்ழ்ஹ: ஏண்ள் ப்ண்ச்ங் ஹய்க் அழ்ற் - ஓர் அன்பின் காணிக்கை. தேர்ந்தெடுத்துப் பழகும் இவரது நட்பு வட்டத்தில் முக்கிய இடம் வகிக்கும் கவிஞர் மு.மேத்தாவின் கவிதைகளைத் தெரிவுசெய்து தொகுத்தளித்த பாலா, கவிஞர் சிற்பியின் மணிவிழாக் காலத்தில், அவரது கவிதைகளைத் தொகுத்து, "சிற்பியின் கவிதை வானம்' எனும் நூல் தந்தார்.

சிற்பியின் 70-ஆவது வயதில், "சிற்பி-கவிதைப் பயணங்கள்' எனத் தெரிவுசெய்த கவிதைகளைத் தொகுத்துத் தந்தார். சக படைப்பாளிகளுக்கும், இளங் கவிகளுக்கும் இவர் அளித்த முன்னுரைகளின் தொகுப்பு, "முன்னுரையும் பின்னுரையும்'. ஆங்கிலம் தமிழ்மொழிகளில், சுமார் 20 நூல்களை எழுதியவர்; ஏராளமானவர்களை எழுதவைத்தவர். இராசிபுரம், தஞ்சாவூர், மன்னார்குடி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள அரசுக் கல்லூரிகளில் ஆங்கில இணைப் பேராசிரியராகப் பணியாற்றி, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் ஒப்பாய்வுத்துறையில், வருகைதரு பேராசிரியராகத் திகழ்ந்து, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த கவிஞர் பாலா, ஏராளமான தேசிய, சர்வதேசியக் கருத்தரங்குகளை, பயிலரங்குகளைத் தலைமையேற்று நடத்தியவர்.

இலங்கை கலாசார அமைச்சகம் நடத்திய மாநாட்டிலும், நியூயார்க்கில் நடைபெற்ற மாநாட்டிலும், 2005-இல் கனடாவில் நடைபெற்ற சார்க் மாநாட்டிலும் பங்கேற்று, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர். சாகித்ய அகாதெமியின் தேசியக் குழு உறுப்பினராகவும், தமிழ்மொழியின் ஒருங்கிணைப்பாளராகவும் திறம்படப் பணியாற்றியவர். "என் கவிதை' என்று தலைப்பிட்டு,


கவிதையைப் புதிதாக்குவது பற்றி

என்னிடம் பேசாதீர்கள்!

நான் உண்மையைக்

கவிதையாக்கிக்

கொண்டிருக்கிறேன்...


என்று எழுதிய பாலா,


வணக்கம் என்பார்

வணங்க மாட்டார்

நலம் பார்த்தறியார்-

நலமென் றெழுதுவார்

பொதுவான பொய்களில்

பொலிகிறது வாழ்க்கை!


என்று போலி வாழ்க்கையைப் பகடி செய்கிறார்.

பாரதியின்பால் அளவற்ற ஈடுபாடு கொண்ட பாலா, அவர்தம் நினைவு நாளன்றே 11.9.2009-இல் அமரரானார். என்றாலும், பிரிவின் துயர்பொறாது கலங்கும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் வந்து காணவேண்டும் என்பதற்காகக் கண்ணாடிப் பேழையில் இரு வாரங்களுக்குமேல், அவருடைய உடலை வைத்துக் காத்தனர் அவர்தம் இல்லத்தார். காலங்கடந்து கவிதையாய் வாழும் பாலாவின் கவியுளம் காலத்தை அசைபோடுகிறது இப்படி-


கடந்த காலம்

ஒரு உடைந்த

மண் கலம்

எதிர் காலம்

ஒரு அமுதப்

பொற்கலசம்

நிகழ்காலம்

ஒரு வெற்றுப்

பாத்திரம்

- எனினும்

உள்ளே தெரியும்

வர்ணமயமாய்

கனவுகள்

பழைய நிராசையின்

பூரண நிழலாய்!


தமிழின் கவிதை வரலாற்றில் பூரண நிழலாய்த் தங்கிச் சிரிக்கிற பாலாவின் இருக்கை இன்னும் காலியாகவே இருக்கிறது.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: