பூபதியின்
திட்டத்தில் சிறுபிசகு ஏற்பட்டுவிட்டது. கிடாயின் பற்களுக்குச் சிக்காமல் நாக்கின் அசைவைத் துண்டிக்க அவன்
விரல்கள் கவ்விய பிடிப்பு சற்று
நழுவியது. சரியாக்கிக்கொண்டு அதன் குரலை அறுக்க
முயன்றான். அதற்குள் நாக்கு நடுங்கக் கிடா
வாய் திறந்து ஒற்றைச் சத்தம்
எழுப்பி ஓய்ந்தது. அடர் இருளைத் துளைத்துக்கொண்டோடிப்
பனியால் விறைத்திருந்த கதவைத் தட்டி யாரையும்
இந்தக் குரலால் எழுப்பிவிட முடியாது
என்னும் திடத்துடன் கிடாயைத் தன் நெஞ்சோடு சேர்த்துத்
தூக்கினான். கிடா கொஞ்சம் கனம்.
துள்ளலும் கால்களை விடுவிக்க உதைத்தலுமான
கிடாயின் அடுத்த அசைவுகள் அவனுக்குப்
பழக்கமானவை. அவற்றுக்கு இடம் கொடுக்காமல் அவன்
பிடிகள் இருந்தன. ஒரு கை வாய்க்குள்.
இன்னொரு கை உடலோடு கிடாயை
இறுக்கி. இனி எல்லாம் வழக்கம்போல
நடக்கும் எனத் தடத்தை நோக்கி
அவன் வேகமாக அடிகளை வைத்தான்.
செருப்பற்ற பாதங்கள் மண்ணில் பூப்போல் பதிந்தன.
இருபதடி
தூரம் கடந்திருக்கும். ‘ஆர்ரா அது’ என அதட்டும் குரலும்
ஓலைச் சரசரப்பும் பின்னால் கேட்டன. குரலுக்கு உரியவனைப்
பூபதி உணர்ந்துகொண்டான். கிடாயை அதே இடத்தில்
வீசிவிட்டு ஓடிவிடலாமா அல்லது சுமந்துகொண்டே ஓடலாமா
என அவனுக்குள் தடுமாற்றம். நின்றுவிட்டான். இருள் அசைவுக்குக் கண்கள்
பழகி ஆள் துரத்தி வருவதற்குள்
புழுதியைக் கடந்து சாலைக்குப் போய்விட
முடியும். அங்கே வண்டியோடு காத்திருக்கும்
முருகேசன், ஆள் உட்கார உட்கார
ஒரு கல் தொலைவு ஓட்டிப்போகும்
அளவு வேகம் கொண்டவன். கிடாயைச்
சுமந்து ஓடும்போது எப்படியும் சத்தம் வரும். துரத்தும்
ஆளுக்கு லகுவாகும். இப்படி ஒரு இக்கட்டில்
அவன் சிக்கியதில்லை.
‘அப்போய்
… எங்க கெடாயக் காணாம்’ என்று பதறும் குரலில்
பூபதியின் உடல் சிலிர்த்தது. கையில்
கிடைத்தால் அவ்வளவுதான். கிடாயை அப்படியே கீழே
போட்டான். அறுபட்ட நாக்கு திரும்பக்
கிடைத்ததும் கிடாயின் குரல் ஓலமிட்டது. மண்ணில்
பொத்தென விழுந்த அதிர்ச்சியும் அச்சமும்
கூடிய குரலின் உயிரோலம் பூபதியின்
காதுகளில் விழுந்தபோது, அவன் கொஞ்ச தூரம்
ஓடியிருந்தான். அங்கங்கே ஆள்களின் அரவமும் நாய்களின் குரைப்பும்
சேரத் தொடங்கின. புளியங்காயைக் குறிவைத்துத் தாட்ரிக்கமான சிறுவன் இட்ட கல்லின்
வேகத்தில் உடலை விசிறிக்கொண்டு ஓடினான்.
அவன் காலடிகளின் ஓசையே திடும்திடுமெனக் காதுகளைத்
தாக்கியது. பின்னால் யாரோ ஓடி வருவதுபோலவும்
உணர்ந்தான். திரும்பிப் பார்ப்பது வேகத்தைக் குறைத்துவிடும்.
உறங்கிக்
கிடந்த நாய்கள் ஒருசேரக் குரைத்தன.
பயம் ஏறிப் பூபதியின் காது
மடல்கள் சிலிர்த்தன. ‘திரடன் திரடன்’, ‘புடிங்கடா’ என்னும் கத்தல்கள் கிணற்றுக்குள்
இருந்து வருவதுபோல அவனுக்குக்கேட்டன. ஒலியை வெளிவிடாத வண்டியை
ஆயத்தத்தோடு கிளப்பி மோரிக்குப் பக்கத்தில்
நின்றிருக்கும் முருகேசனை அடைந்துவிட்டால் போதும். ஒரே குறியாக
மோரியை நோக்கி ஓடினான். கால்கள்
தார்ச்சாலைக் குழிகளில் பதிந்ததும் எழுந்து தாவின. இருளுக்குப்
பழகியிருந்த வெளிச்சத்தில் இன்னும் நான்கைந்து தாவல்களில்
முருகேசனைப் பிடித்துவிடலாம் எனத் தோன்றியது.
இதோ இதோ என்று கால்களுக்கு
ஆசைகாட்டி வேகத்தைக் கூட்ட முயன்றான். ஒரே
தாவலில் வண்டியின் பின்னிருக்கையில் குதித்துவிடலாம் என்று தைரியம் கொண்டபோது,
அவன் பிடரியில் விழுந்த கை பின்னிழுத்துத்
தள்ளியது. நடுங்கிய கால்கள் இடறிக் கீழே
விழப்போனான். மோரிச் சுவரில் கை
ஊன்றினான். முருகேசன் வண்டி யாரும் தொடர
முடியாத தூரத்திற்குப் போயிருக்கும். அவனை இழுத்துத் தள்ளிய
கைவண்டியின் பின்னால் சில அடிகள் ஓடி
இனிப் பயனில்லை என்று மீண்டு திரும்பி
வருவதற்குள் பூபதி சமாளித்துத் தன்னிலை
அறிந்தான். சாலையின் இருபுறமும் அடைபட்டுவிட்டன. மனிதர்களும் நாய்களும் சாலைக்கு உயிர் கொடுத்துவிட்டார்கள். மிஞ்சியிருப்பது மோரியின்
இருபக்கங்கள்தான்.
சாக்கடைக்
கழிவுநீர் புரண்டுவரும் பெருவெள்ளத்திற்குள் சட்டெனக் குதித்தான். வயல் சேற்றுக்குள் வைத்த
கால் புதைவதைப் போல முழங்கால்வரை புதையுண்ட
கால்களை வேகமாக வெளியெடுத்து அடுத்த
அடி வைத்து உள்ளேபோனான். விஸ்தாரமான
பெரிய வானி. எங்கும் சம்பங்கோரைகளும்
சீமைக்கருவேல முள் மரங்களும் அடர்ந்து
கிடந்தன. சாக்கடை நீர் வானி
முழுக்கத் தேங்கி நின்றது. மோரியடியில்
நீர் சுழித்தோடும் சத்தம். பூபதி சம்பங்கோரைக்குள்
புகுந்து போனான். இருட்டில் கோரை
அசைவுகள் வெகுதூரம் தெரிய வாய்ப்பில்லை.
பூபதி நீருக்குள் குதித்ததும் பின்னால் வந்தவன் அதிர்ந்து நின்றுவிட்டான்.
‘அதா போறான் அதா போறான்’ என்று
அவன் கத்தியபடியே மோரிமேல் ஏறினான். ‘ஒடியாங்கடா ஒடியாங்கடா’ என்று அவன் அழைப்பதும்
கேட்டது. பூபதி கோரைக்குள் வெகுதூரம்
வந்திருந்தான். ஆள்களும் நாய்களும் அரவமிட்டவாறு வானியைச் சூழ்ந்துகொண்டிருந்தார்கள். இதற்குமேல் அசைவு காட்டாமல் இருப்பதுதான்
நல்லது என்று தோன்றியது. ஆளுயரம்
வளர்ந்திருந்த சம்பங்கோரைகளுக்கு நடுவே ஒற்றைக்கல் கூச்சாம்பாய்
நீட்டிக் கொண்டிருந்தது. அதன்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டான். கால்கள் நடுங்கின.
சேறும் நீரும் கலந்து பாதி
உடம்பை ஈரமாக்கிவிட்டன. தலையிலிருந்து மேலெல்லாம் வேர்வை வழிந்து குளித்ததுபோலிருந்தது.
துரத்தி
வந்தவன் எல்லோருக்கும் விவரத்தைச் சொல்லிக்கொண்டிருந்தான். பேட்டரி விளக்குகள் வானிக்குள்
அடித்தன. மோரிப் பக்கம் பெருங்கூட்டம்
திரண்டது. முப்பது நாற்பது பேர்கள்
இருக்கலாம். சிலர் கைகளில் தடிகள்
இருந்தன. கோரை அசைவை இருள்
காட்டிக்கொடுக்காது. கோரைக்குள்ளேயே இன்னும் கொஞ்ச தூரம்
போனால் ஏரி மதகு வரும்.
பக்கங்களைக் குறிவைத்து நடந்தால் ஒருபுறம் சித்தாலச் சுவர் எழுப்பப்பட்ட தென்னந்தோப்பு.
இன்னொரு புறம் ஏரியை நோக்கிப்
போகும் மண்தடம். கோரைகள் அசைவது தெரிந்தால்
போதும். அந்த இடம் நோக்கி
யாராவது இறங்கக்கூடும். கூச்சாம்புக் கல்லில் ரொம்ப நேரம்
உட்கார்ந்திருக்க முடியாது. பாதங்கள் எரிந்தன. கோரைக் கூட்டத்தின் நடுவே
சிறு மண்மேடு இருப்பதுபோல் தெரிந்தது.
கல்லை விட்டிறங்கி அதை நோக்கிப் போனான்.
மண்மேடுதான். முள்செடி ஒன்று அதன் பெரும்பகுதியை
அடைத்திருந்தது. கால்களில் நறநறவென ஏதேதோ மிதிபட்டன.
இடுப்பில் செருகியிருந்த சிறு கத்தியை எடுத்துத்
தரைப்பக்கம் நீட்டியிருந்த முள்கொத்துகளை மெல்ல வெட்டினான். அவற்றை
ஓரமாய்ச் சேர்த்தான். தரையோடு ஒட்டிப் படுத்துக்கொள்ள
இடம் கிடைத்தது. ஒருக்களித்துப் படுத்தான். மல்லாந்தால் கண்களை உறுத்தும் முள்.
நீட்டினால் நீரைத் தொடும் கால்.
ஒரு மாதிரி குறுக்கிப் படுத்துக்கொண்டான்.
எங்கும் எந்த அசைவும் இல்லை.
வானிக்கு
வெளியே குரல்கள் இப்போது தெளிவாகக் கேட்டன.
ஓசைகளுக்கு இருள் துல்லியத்தைச் சேர்க்கும்
என்பதை அவன் அறிவான். சரக்கென்னும்
சிறு சத்தமும் அவன் காதுகளை விறைக்கச்
செய்யும்.
“எங்கயும்
போயிருக்க முடியாது. இதுக்குள்ளதான் எங்காச்சும் உக்காந்திருப்பான்.”
“அவன்
போன வேகத்தப் பாத்தா ஏரிப்பக்கம் போயி
இந்நேரம் மேல ஏறி ஓடியிருப்பான்.”
“இதுக்குள்ள
ஒரு மனுசன் எறங்கறான்னா அவன்
உசுருக்குத் துணிஞ்சவனாத்தான் இருக்கோனும்.”
வானியின்
மூன்று பக்கங்களிலும் மனித நடமாட்டம். விளக்குகள்
இடைவிடாமல் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. எதுவும் தன்னை வந்தடையாது
எனப் பூபதி நினைத்தான். மையத்தில்
இருந்தான் அவன். சுற்றிலும் கோரைகள்.
தூரத்தில் இருந்து பார்க்க எந்த
வெளிச்சத்திலும் இந்த இடம் தெரியாது.
இதற்குள் அடைத்திருக்கும் இருள் கோரைகளால் நிறைந்திருப்பதாய்த்
தோற்றம் காட்டிவிடும். தன்னைப் போல் தாட்ரிக்கமாக
இருக்கும் நான்கைந்து வாலிபப் பையன்கள் துணிந்து
உள்ளே இறங்கிவிட்டால் என்ன செய்வது என
மனத்தில் கற்பனை விரிந்தது.
அடங்கத்
தொடங்கியிருந்த வேர்வை மேலும் பூத்தது.
தன் குலதெய்வத்தின் நினைவு வந்தது. ‘அம்மா… கரியகாளி… என்னயக்
காப்பாத்தி உட்ராயா…’ என்று முணு முணுத்தான்.
மேற்கொண்டு என்ன வேண்டுவதெனத் தெரியவில்லை.
கண்களை மூடிக்கொண்டு ‘காளீம்மா… காளீம்மா…’ என மந்திரம் போலச்
சொல்லிக்கொண்டிருந்தான்.
பேச்சுக்
குரல்கள் அதிகரித்துக்கொண்டேயிருந்தன. இருளும் பனியும் கலந்த
நடுச்சாமம். எனினும் எல்லோருக்கும் வேடிக்கை
பார்க்கும் ஆசை. கிடா மட்டும்
திருட்டுப் போயிருந்தால் அது வெறும் சேதியாக
முடிந்திருக்கும். இப்போது இன்னும் சில
நாள்களுக்குச் சுவாரஸ்யமாகப் பேசுவதற்கான விசயமாயிற்று. பெண்கள் குழந்தைகள் என
எல்லாவிதக் குரல்களும் கேட்டன. பூபதியின் காதுகள்
நாயின் காதுகளென விடைத்து நின்றன. முதலில் கோரைகளுக்குள்
சரமாரியாகக் கற்கள் விழும் சத்தம்.
‘வெளிய வாடா… தாயோலி’ என்று தொடங்கிக் கெட்ட
வார்த்தைத் திட்டுகள் பொங்கி வந்தன. ஏதாவது
கல் தன்னருகே வருமோ என்ற எதிர்பார்ப்போடு
உடலைக் குறுக்கிக்கொண்டிருந்தான். ஆனால் ஒரு கல்லும்
அவன் பக்கம் வரவில்லை. பனம்பழம்
விழுவதுபோலச் சொத்தெனக் கற்கள் சேற்றுக்குள் விழுந்தன.
எதுவும் அணுக முடியாத தூரம்
தானிருப்பது என்று ஊகித்தான்.
விடிந்து
வெளிச்சம் பரவினாலும் இப்படியே படுத்துக் கிடந்தால் ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாது. பூபதிக்கு வெகுவாகத் தைரியம் வந்தது. கற்களின்
சத்தம் குறைந்தபடியிருந்தது. அடுத்து என்ன செய்வதென்று
கூட்டத்திற்குத் தெரியவில்லை. ஆளாளுக்கு ஏதேதோ சொன்னார்கள். கிடாக்காரன்
தன் சாகசத்தை விதவிதமாகப் பலரிடமும் விவரித்தபடியே இருந்தான். கடைசியாக இப்படி முடித்தான்:
“ஒரு
நூல் தவறிப் போச்சு. மயிரப்
புடுச்சு இழுத்தெறிஞ்சவன அப்பிடியே கொரவளயப் புடிச்சிருந்தனா தப்பிச்சிருக்க முடியாது. வண்டியில போறவனயும் புடிச்சிரலாமுன்னு பாஞ்சனா… அதுக்குள்ள இவன் சுதாரிச்சுக்கிட்டான். நாங் கண்டனா… இந்தப்
பொண நாத்த மடிக்கற சீன்றத்துக்குள்ள
குதிச்சுக் கெணத்துல நீந்தறாப்பல போவான்னு . . .”
கைவிளக்குகள்
சம்பங்கோரைகளை இடைவிடாமல் துளைத்துக்கொண்டேயிருந்தன. ‘டேய் உங்க எவனாலயும்
என்னோட ஒரு மயிரக்கூடப் புடுங்க
முடியாதுடா. எவனுக்காச்சும் தெகிரியம் இருந்தா வாங்கடா பாப்பம்’ என்று
அவன் வாய் முணுமுணுத்ததைக் கண்டு
அவனுக்கே சிரிப்பு வந்தது. யாரோ ஒரு
பெண் சலிப்போடு சொன்னாள்.
“அதான்
கெடா தப்பிச்சிருச்சில்ல. இந்தப் பனியில ஏன்
இப்பிடி அலயறீங்க. இந்தக் கொடுமைக்குள்ள போனவன்
இன்னமா இருக்கப்போறான். எந்தப் பக்கம் ஏறி
எப்பிடி ஓடுனானோ. . . இருட்டா இது. . . அப்பிடியே
பாளம்பாளமா அறுத்தெடுத்துக்கற மாதிரி குமிஞ்சு கெடக்குது.
போய் வேலயப் பாருங்கப்பா…”
“உனக்குக்
கஷ்டமா இருந்தாப் போவியா… என்ன ஒரு தெகிரியமிருந்தா
ஊட்டு வாசல்ல கட்டியிருக்கற கெடாய
வந்து புடிப்பான். அவன் மூஞ்சி என்னன்னு
பாக்காம போறதா. வெடியவெடிய இருந்துனாலும்
புடிக்காம உடறதில்ல…” என்றது ஒரு துடிப்பான
குரல். யாரோ ‘போய்த் தீப்பந்தம்
கொண்டாங்கப்பா’ என்றார்கள்.
போகிற அரவங்கள் கேட்டன. ‘காத்தாலக்கி வேலக்கிப் போவோனும்பா. தூக்கம் அசத்துது’ என்று சொல்லிவிட்டு ஒன்றிரண்டு
பெண்கள் கிளம்பினார்கள். தீப்பந்தம் எதற்கென்று அவனுக்குப் புரியவில்லை. அதை வைத்துத் தன்னை
நெருங்கி விடுவார்களோ என்று ஒரு கணம்
தோன்றியது. வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தபடி காலை
நீட்டினான். அந்த இடம் இப்போது
படுத்துக்கொள்ளத் தோதானதாக மாறியிருந்தது. முட்சந்துகளில் வானில் இருந்த நட்சத்திரங்கள்
சிலவும் தெரிந்தன.
“ஏ… மாரப்பா… அந்தப்
பக்கமே பாத்துக்கிட்டு இருங்க. ஏறிக்கீது ஓடப்போறான்.
பசவ தீப்பந்தம் கொண்டாரப் போயிருக்கறாங்க. வரட்டும்.”
மண்பாதைப்
பக்கமிருந்து தென்னந்தோப்புப் பக்கத்திற்குச் சேதி போனது. தோப்புப்
பக்கம் அதிக ஆள்களில்லை. அங்கே
பீக்காட்டுக்குப் போவோர் போட்ட ஒற்றையடித்
தடம் மட்டுந்தான் உண்டு. ரொம்ப நேரம்
அந்தப்புறம் யாரும் இருக்க முடியாது.
வெளியேறும்போது அந்தப் பக்கமாகப் போகலாம்
என்று தோன்றியது. அடுத்து நடக்கப் போவதையும்
அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதையும் கொஞ்சம் ஒத்திப்போட்டான். இப்போது
பேச்சுக் குரல்களில் ஆவேசத்தைக் காண முடியவில்லை. இதற்கு
முன் நடந்த ஆட்டுத் திருட்டுகள்
பற்றிய கதைகளாய் அவை இருந்தன. அதில்
சில தான் செய்தவை என்பது
பூபதிக்குப் புரிந்தது.
பூபதிக்கு
ஆடு திருடுவதைப் பழக்கிவிட்டவர் அவன் அப்பன்தான். அவரோடு
ஒப்பிட்டால் தன் திருட்டு ஒன்றுமே
இல்லை என்று படும். அவர்
ஒரு நாளும் இப்படி மாட்டிக்கொண்டதில்லை.
அவரை அழைத்துப்போக ஓராள் வண்டியில் காத்திருந்ததில்லை.
எவ்வளவு தூரமானாலும் தோள்மேல் போட்ட ஆடு சிறுசத்தமும்
இல்லாமல் வரும். ஆடு திருடத்
தோதான நேரத்தை அவர்தான் அவனுக்குச்
சொல்லித் தந்தார். உயிர்களை எல்லாம் தூக்கத்தில் அடித்துப்
போட்டு எமன் சந்தோசமாக விளையாடும்
நேரம் அது. ராத்திரி பன்னிரண்டு
மணியிலிருந்து மூன்று மணிவரை. கிழடுகட்டைகளும்
நோயாளிகளுங்கூடக் கண்ணயரும் நேரம். அந்த நேரத்தைத்தான்
கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பார்.
செயல்களில்
பதற்றம் இருக்கவே கூடாது என்பது அவர்
பாடம். ஆட்டின் நாக்கைப் பற்றும்
முறையையும் லாகவமாகத் தூக்கிக்கொள்ளும் திறத்தையும் அவரிடமிருந்தே பெற்றான். முதன்முதலாக அவன் தொழிலைத் தொடங்கியது,
ஒரு கிழவியின் வீட்டில். பூங்கிழவியான அவள், இரண்டு வெள்ளாடுகளை
வைத்துக்கொண்டு ஒண்டியாகக் காட்டுக்கொட்டாயில் கிடந்தாள். சரியான பருவத்தில் ஒடையடித்து
வளர்த்த கிடா ஒன்றும் மூட்டுக்குட்டி
ஒன்றும் இருந்தன. கிடா வெள்ளை. மூடு
கருப்பு. வெள்ளைத் தோலுக்கு விலை அதிகம். ஒரே
இடத்தில் இரண்டு வேட்டை கிடைக்கும்
என்றால் எதில் வருமானம் அதிகமோ
அதைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்
என்பதும் அப்பன் தந்த பாடம்.
கிடாயைக் குறிவைத்தான். ஆனாலும் மனத்தில் ஒரு
சங்கடம். ஒற்றை ஆளாகக் கிடக்கும்
கிழவியின் உழைப்பையா அபகரிப்பது?
“கஷ்டம்னு
பாத்தா எல்லாருக்கும் இருக்கும். அப்பறம் நாம தொழில்
செய்யமுடியாது. நம்ம கஷ்டத்த மனசுல
வெச்சுக்க” என்றார்
அப்பன். அந்தக் கிடாயைத் திருடியதில்
எந்தச் சாகசமும் இல்லை என்று தோன்றும்.
சரியான பிடி. கிழவிக்குச் சின்ன
சந்தேகமும் ஏற்படவில்லை. அவனுக்குத்தான் கால்கள் நடுங்கின. கிடாயைக்
கொண்டுவந்து சேர்த்த பின்னும் நடுக்கம்
நிற்கவில்லை. மனம் திடமாக இருப்பதாகவேபட்டது.
எல்லாப் பயமும் ஒருசேரக் கால்களில்
இறங்கிவிட்டதுபோலும். அதற்கப்புறம் எல்லாம் சகஜமாயிற்று.
ஆட்டின்
நாக்கைப் பிடிப்பதும் தூக்குவதும் சாதாரண விஷயம். அதற்கு
முன் நோட்டம் பார்க்கும் வேலைதான்
முக்கியம். ஆடுகளைக் கட்டியிருக்கும் இடம், அந்த இடத்தை
அடைவதற்கான சுலப வழி, அதற்கும்
வீட்டுக்கும் இருக்கும் தூரம், வீட்டில் இருக்கும்
ஆள்களின் எண்ணிக்கை, யார் யார் எங்கெங்கே
படுப்பார்கள், தூங்கித் தொலையாத பிறவி எது,
என்றென்றைக்கு ஆள் எண்ணிக்கை குறையும்,
வண்டி எங்கே நின்றால் வசதி,
நாய் இருக்கிறதா என்பதை எல்லாம் பார்த்துவைத்துக்கொள்வதற்குத்தான்
அதிகம் அலைய வேண்டியிருக்கும். கள்
குடிக்கப்போகும் ஆள்களாய், எருமைக் கன்று மாட்டுக்
கன்று வியாபாரிகளாய்ப் பலவிதமாகப் பாவிக்க வேண்டும். எல்லாவற்றையும்
சரியாகக் கணித்துவிட்டால், இரவுக் காரியம் வெகுசுலபம்.
ஆட்டுக்காரன் ஆட்டைக் காணோம் என்று
கண்டுபிடிப்பதற்குள் ஆட்டுக்கறி எங்காவது வீடுகளில் சலசலத்து வெந்து கொண்டிருக்கும்.
பூபதியும்
முருகேசனும் கூட்டுச் சேர்ந்த பின்னால் காரியம்
இன்னும் வெகுசுலபமாயிற்று. துளியும் சத்தமிடாத வண்டியை விளக்குப் போடாமல்
எப்பேர்ப்பட்ட இருளிலும் அவன் ஓட்டுவான். வண்டியில்
கிடாயோடு ஏறிவிட்டால் போதும். அதற்கப்புறம் யார்
பின்னால் வந்தாலும் பிடிக்க முடியாது. எப்போதும்
அளவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வான். ஒரு
ஆட்டைக் கொண்டுவந்துவிட்டால் அதற்கப்புறம் குறைந்தது ஒரு வாரம் இடைவெளி
விட்டுவிட வேண்டும். ஒரு திருட்டுக்கும் இன்னொன்றுக்கும்
பத்துக் கிலோமீட்டர் தூரமாவது தேவை.
முருகேசனுக்கும்
சில சமயம் உற்சாகம் வந்துவிடும்.
அப்போது விதவிதமான திட்டங்கள் அவன் மூளையில் சட்டென
உதிக்கும். ஒரு கிடாயைக் கொண்டுவந்து
கறிக்கடைத் தெருவில் வழக்கமான கசாப்புக்காரனிடம் கொடுத்துவிட்டுப் பணத்தை வாங்கியபோது அவன்
சொன்னான். ‘இன்னக்கிக் கெடாயே கெடைக்கல. அங்கங்க
ஊர் நோம்பி. இன்னொரு கெடா
இருந்தாப் பரவால்ல. அம்பது நூறு சேத்தி
வேண்ணாலும் குடுத்தர்றன்.’ விடிகாலை நான்கு மணிக்கு மேல்
ஆனபின் என்ன செய்ய? திருட்டு
ஆடு என்றாலும் பேரம் பேசாமல் ஒரு
நியாயமான தொகையைக் கொடுத்துவிடுவான் அவன். ரொம்ப நாள்
வாடிக்கை. ஏற்கனவே எத்தனை கிடா
இருந்தாலும் இவர்கள் கிடா கொண்டுவந்தால்
அதை முதலில் அறுத்துத் தோலை
உரித்துவிடுவான். அதனால் முருகேசன் உடனே
‘நம்மாளுக்கு எப்பிடியாச்சும் ஒத வோனும்பா’ என்றவன் கசாப்புக்காரனிடமே வண்டியை
வாங்கிக்கொண்டான். சத்தம் கேட்கக் கூடிய,
விளக்கெரியும் வண்டி. ‘பாக்கறன். அப்பறம்
உன்னோட அதிர்ஷ்டம்’ என்றான்.
ஊரை ஒட்டியிருந்த வீட்டுக்கு முன் வண்டியை நிறுத்தினான்.
கட்டுத்தரையில் யாரோ பால் கறந்துகொண்டிருக்கும்
சத்தம். இருட்டில் முகம் தெரியவில்லை. நேராகப்
போனவன், ‘அம்மோவ் கெடாயப் புடிச்சிக்கறன்’ என்றான்.
கட்டியிருந்த கிடாயை அவிழ்த்துக் கொண்டு
வந்தான். பால் கறந்தபடியே இருந்தவள்,
‘அந்தத் திருவாணியக் கழட்டி வெச்சிட்டுப் போப்பா’ என்றாள்.
திருகாணியைக் கழற்றித் திண்ணையில் வைத்துவிட்டு ‘வச்சிட்டனம்மோவ்’ என்றான்.
திருகாணியோடு ஆட்டைக்கொடுத்தால் அதன் வம்சம் தக்காது.
‘பத்து
மணிக்கு வருவன். காசக் கைல
வெச்சரோனும்னு நாட்ராயங்கிட்டச் சொல்லு’ என்று அவள் கத்தினாள்.
‘பத்து மணிக்கு டாண்ணு உனக்குப்
பணம் வந்திரும்மா’ என்றபடியே கிடாயைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு
வண்டியில் உட்கார்ந்தான். அந்தக் கிடா ஏற்கனவே
நாட்ராயனுக்குப் பேசி விற்ற கிடா.
அன்று காலையில் வந்து பிடித்துக்கொள்வதாகச் சொல்லியிருந்தான். இவர்கள்
போனதும் நாட்ராயனின் ஆள்கள் என்று நினைத்துவிட்டாள்.
விடிந்தபின் நாட்ராயனின் ஆள் கிடா பிடிக்கப்போகும்போதுதான்
திருட்டு விஷயம் தெரிந்திருக்கும்.
“காதுல
உழுவற எதுனாலும் கவனமாக் கேட்டுக்கோனும். வேப்பெண்ணக்
கலயமா இருந்தாலும் ஒரு வேலைக்கு ஒதவும்
தெரியுமா.” என்பான் முருகேசன். அவனுக்குங்கூட
இதுவரைக்கும் இப்படி ஒருநிலை ஏற்பட்டிருக்காது.
இந்தக் கூட்டத்தின் கையில் மாட்டிக்கொண்டால் உடலைப்
பிய்த்தெடுத்துவிடுவார்கள்.
அதற்குப்பின்னான உடலைக்கொண்டு பிச்சை எடுத்து வேண்டுமானால்
சாப்பிடலாம். அதனால் தான் சின்னக்
கத்தி ஒன்றை லுங்கி மடிப்பில்
வைத்திருப்பான் அவன். லேசாகக் கீறிவிட்டாவது
தப்பித்துக்கொள்ளலாம்.
இரண்டு
மூன்று தீப்பந்தங்கள் தெரிந்தன. அவற்றைப் பிடித்துக்கொண்டு வானிக் கோரைக்குள் ஆள்கள்
நுழையலாம். அப்படி நுழைந்தால் இடம்
மாற நேரிடும். தவளையைப் போல ஏதாவது இண்டு
இடுக்குப் பார்த்துப் புகுந்துகொள்ளலாம். மெல்லத் தவழ்ந்தபடியே போனால்
எதிர்ப்பக்கம் ஏதாவது ஓரிடத்தில் சட்டென
ஏறிப் பாய்ந் தோடிவிடலாம். ஆனால்
அவன் எதிர் பார்த்தபடி யாரும்
உள்ளே இறங்கவில்லை. தீப்பந்தம் கொண்டு காய்ந்திருந்த இடங்களைக்
கொளுத்தினார்கள். அதுவும் லேசில் பற்றவில்லை.
பனியில் நவுத்துக் கிடந்த தோகை கள்
சடசடத்து அணைந்து போயின. அதற்கு
மேல் ஆள்கள் ஆர்வமற்றுப் போனார்கள்.
“அட
வாங்கடா…
இதுக்குள்ள போனவனப் பாம்பு புடுங்கட்டும்.
திருடிப் பொழைக்கறவன் அப்பிடித்தான் சாவான்.”
“சீமக்
கருவேல முள்ளுக் கொத்தோட ஏறிக்கெடப்பான் பாரு.
காத்தாலக்கி வந்து பொணத்த எடுக்கலாம்
வாங்கடா.”
“எங்கிருந்தோ
வர்ற பீத்தண்ணியில கண்ணாடி கிண்ணாடி கெடந்து
கால வவுந்துடாதயாபோயிரும். எச்சக்கல நாயி… ஆடு திருட வர்றதுக்கு
அவுங்க அம்மாள உட்டுச் சம்பாரிக்கறது.”
பெரும்
சாபங்களோடு கூட்டம் மெல்லக் கலைந்தது.
வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு எத்தனையோ பேர் அவனை நோக்கி
எறிந்த சாபச் சொற்கள் எல்லாம்
காற்றோடு கரைந்துபோயின. செய்யாத திருட்டுக்கான இந்தச்
சாபங்களா பலிக்கப்போகின்றன? அவன் மெல்லச் சிரித்துக்கொண்டான்.
கண்களை மூடினான். கூட்டத்தின் பேச்சு படிப்படியாகக் குறைந்து
சாலைக்குப் போய் முணுமுணுப்பாய் ஒலித்தது.
தென்னந்தோப்புப் பக்கம் இருந்த ஒன்றிரண்டு
பேரும் நகர்வது பேச்சாய்க் கேட்டது.
அவனை ஏமாற்றிவிட்டு யாராவது சிலர் ஒளிந்துகொண்டிருக்கலாம்.
வெளியே தலை தெரிந்தால் சட்டென
அமுக்க வரலாம். கிடாக்காரன் கொஞ்சம்
துடி. கத்தி எதுவும் வைத்திருப்பான்
என்று பயப்படாமல் தொடர்ந்து வந்தவன். அவன் பிடியும் தள்ளலும்
இன்னும் அவன் உடம்பிலிருந்தன. அதனால்
இப்போதைக்கு எழக் கூடாது என்று
நினைத்தான். எல்லாம் அடங்கட்டும் என்று
காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
கண்களின்மேல் அமர்ந்தபடி தூக்கம் வாட்டியது. தூங்கிவிடக்
கூடாது என்று எவ்வளவோ சொல்லியும்
கேட்கவில்லை. ஆனால், அவனது இரவுத்
தூக்கம் கோழித்தூக்கம் போன்றதுதான். தலை சாய்ந்தால் விழித்துக்கொள்வான்.
அவன் விழித்தபோது முகமெல்லாம் பனி ஈரத்தை உணர்ந்தான்.
சட்டென எழ முடியவில்லை. முள்
கிளைகள் ஒரு வலையென அவன்மேல்
போர்த்தியிருந்தன. கால்களில் சேறு காய்ந்து விர்ரெனப்
பிடித்துக் கொண்டிருந்தது. அசைப்பதே சிரமமாக இருந்தது. வானத்தைப்
பார்த்தான். வெள்ளி மீனைப் போலவே
பிரகாசித்து ஏமாற்றும் ரெட்டி மீன் கீழ்வானில்
பளீரிட்டது. நேரம் மூன்றரையிலிருந்து நான்கிற்குள்
இருக்கும் எனக்கணக்கிட்டான். படுத்தபடியே ஊர்ந்து முள்வலையிலிருந்து வெளியே
வந்தான். இருளின் திரள் முன்புபோலவே
அப்பிக் கிடந்தது.
ஏதேதோ பூச்சிகளின் வினோதமான ஒலிகள். இதுவரை அடைத்திருந்த
காது திடுமெனத் திறந்து கொண்ட மாதிரி
இருந்தது. தவளைச் சத்தமா வேறா
என்றறிய முடியாதபடி குர்குர்ரென எங்கிருந்தோ அடித்தொண்டைக் கதறல். அது பாம்பு
பாஷையோ எனத் தோன்றியது. எட்டிய
தூரம்வரை சம்பங்கோரைகள் ஆளுயரத்தைத் தாண்டி நின்றிருந்தன. இதற்குள்
என்னவெல்லாம் இருக்குமோ. திட்டிலிருந்து தாவிக் கூச்சாம்புக் கல்லின்
மேல் ஏறினான். வந்த வழியில் திரும்பப்
போகக்கூடாது. வேறு வழியைத்தான் கண்டுபிடிக்க
வேண்டும். சுற்றிலும் பார்த்தான். கோரைகளின் மேலுயர்ந்து சீமைக் கருவேல மரக்
கிளைகள் எலும்புக் கூடுகளைப் போலிருந்தன. எல்லாப் புறமும் இதே
தோற்றம்தான்.
தென்னந்தோப்புப்
பக்கம் போகலாம் என்று தீர்மானித்துக்
காலெடுத்துவைத்தான். கோரை வேர்களுக்குள் கால்கள்
புதைந்துபோயின. முழங்காலுக்கும் மேலாகக் கால் உள்ளிறங்கியது.
பயந்து போனான். சுற்றிலும் பூச்சிகளின்
சத்தம் கூடுவது போலிருந்தது. கால்களை
உருவி எடுக்க முனைந்தான். மேலே
வருவதுபோலத் தோன்றி மீண்டும் அமிழ்ந்தன.
எட்டி அந்தக் கல்லைப் பிடித்துக்கொண்டான்.
கைகளை அழுந்த ஊன்றிக் கால்களை
மேலெடுத்தான். கல்லின்மேல் ஏறி உட்கார்ந்ததும் ஆசுவாசமாய்
உணர்ந்தான். பனிப் பதத்தை மீறி
உடல் வியர்க்கத் தொடங்கியது.
மீள இயலாத பெரும்புதைக்குள் சிக்கிக்கொண்டதை
உணர்ந்தான். யார்யாரோ விட்ட சாபங்கள் திரண்டு
கோரைகளாய் முள்களாய் புதை சேறாய் உருமாறித்
தன்முன் நிற்கக் கண்டான். இது
வந்த வழிதானே, அப்போது விலகிய கோரைகள்
இப்போது எப்படி மூடிக்கொண்டன? அவனை
அறியாமல் கால்கள் நடுங்கின. முதல்முதலாகக்
கிழவியின் வீட்டில் கிடாயைப் பிடித்தபோது ஏற்பட்ட நடுக்கம் இது.
நடுக்கத்தைக் காலில் படிந்த சேறாய்
உதறிவிட்டு மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள முனைந்தான்.
வானத்தைப்
பார்த்தான். பெரிய மஞ்சள் கல்லாய்
ஒளிவிடுவது வெள்ளி மீன்தான். நேரம்
கடந்துவிட்டது. இனி மனித சஞ்சாரம்
தொடங்கும். எங்கோ பேச்சுக் குரல்
கேட்பதாய்க் காதுகள் சொல்லின. சுற்றிலும்
இருக்கும் கோரைகள் மனித உருக்களாய்
மாறிக் கத்தின. கவ்விப் பிடிக்கக்
கைகளை விரித்துக்கொண்டு நிற்கும் மனிதர்களாயின முள்மரங்கள். எல்லா ஒலிகளும் திரண்டு
‘திரடன் திரடன்’ என்னும் கத்தல். அவனுக்குள்
பதற்றம் கூடிற்று. கால்கள் தாவத் தொடங்கின.
நன்றி
– காலச்சுவடு
கருத்துகள்