நிழல் ஆட்டம் - புவனராஜன்
மாபெரும் கோடைப் பகலொன்றின் தாங்கொண்ணா வெம்மையில் காற்றறுந்த காடுகளினிடையில் விடாமல் பறந்து திரியும் காட்டுப்பறவையின் இதயத் துடிப்பை எனக்குள் கொண்டிருந்த இனிமையைப் பிழிந்து கசங்கிய சக்கைகளின் உலர்ந்த தன்மையில் ஒடுங்கி புதைந்திருந்த சாம்பல் வெளிக்குள் எப்போது புதைந்தேனோ? நினைவில்லை. வார்த்தைகளில் அடக்கிவிட முடியாத எழுத்து ஒலிகள் வரி வடிவங்களாகி மேலும் கீழுமாய் அசைந்து கொண்டிருந்ததைத்தான் முதலில் கண்ணுற்றேன். ஓர் அடைமழைக் காலம். மெல்லிய தூறல், இரவெல்லாம் கடுமையான இடியொலி. அரிக்கேன் விளக்கொளியில் தூறலில் நனைந்தபடி பெரியவர்களோடு காளான் பறிக்கப் போனோம். அதே இடங்களில்தான் கரட்டை ஒட்டி எரிகல் மழை நள்ளிரவில் தோட்டக்காவலில் பார்த்துவிட்டு ஓடினோம். கற்களைப் போல சிதறிக் கிடக்கும் பலவிதமான வடிவங்களும் துருவேறின இரும்பு நிறத்தில் இருந்தன. அதன் மீதான கோட்டு உருக்கள்தான் இப்போது என் மனதில் நிழலாடுகிறது. என் பிரக்ஞை ஊன்ற முயற்சிக்க எங்கிருந்தோ ஒரு உத்வேகம் தொற்றிட உடுக்கை ஒலி அதிர்வுகள் வெறி என்னுள் கிளர்ந்து ஆவேசம் கொண்டு எதனுள்ளிருந்தோ என்னை மீட்டெடுக்கிறது.
என்னைச் சுற்றி இரைந்து கிடக்கும் செங்கங்குகள் இன்னும் பலமாக காற்று விசிறலில் முகம் காட்டி அடங்க, சாம்பல் படியத் துவங்கியது. மயில் அகவும் சீமைக் கருவேலங்காட்டின் வெயில் அனத்த காற்றே இல்லை. அதன் தகிப்பும் கண்ணுக்கெட்டிய தொலைவு வெறுமையும், வியர்வையில் உப்பரித்த நசநசப்பும் உடலின் சிராய்ப்புகளில் பாதி பக்கு கட்டி, மீதியின் மீது மிளகாய் தேய்த்தது மாதிரி எரிந்தது. காற்றில் அசைவுறும் மயில் கண்கள் உதிர்ந்த கணத்தில் சவக்களைக் கொண்டு விடுகிறது. இல்லை மரணித்துவிடுகிறது. மண் நசித்து பொடித்துக் கொண்டிருக்கும் அவல், பொரி துகள்களைக் கொணர்ந்து செல்லும் எறும்பு வரிசைகளைப் போல... என் மனதின் சலனங்கள் உருக்கொள்கின்றன.
எனக்கு சிறு வயதிலே நிறைய ஆசைகள், கற்பனைகள் அதன் மீதான எதிர்பார்ப்புகளோடு கூடின நம்பிக்கையும், கலையவியலாத நிரந்தர வானவில்களாய், படிந்து கொண்டிருந்தது. இளம் மனதில் லயம் கொள்ளும் அந்த மயக்க நீர்க்குமிழியில், முதலில் துளையிட்டது அப்பாவின் மரணம். என் எல்லா சந்தோஷங்களும், உற்சாகங்களும் கோடை மழையின் ஆலங்கட்டி குதூகலங்களைப் போல மீட்கவே முடியாமல் மடிந்து போனவை.
அந்தப் பிராயத்தில் நரிக்கரட்டின் மீது காற்றாடி விதைகளைச் சுமந்துகொண்டு கன்னிமார்புடவுக்கு மேலேறி நின்றபடி, பருவக்காற்று மணல் சுழற்றி வீசும் காலங்களில் மொத்தமாக போட்டி போட்டுக்கொண்டு ஏறி வாகாய் உயரமான பாறைகளில் தள்ளாடி முன்பின் அசைந்து கால்களை தரையில் அழுந்தி நிற்க காற்றில் முனைந்தபடி உடலில் மறைத்து வைத்திருந்த காற்றாடி விதைகளை வானம் பார்த்து அள்ளி வீசுவோம். ரெண்டு பனைமர உயரங்களில் பறக்கத் துவங்கும். அது ஊரை நோக்கி அடித்துச் செல்லும். மின்னல் வேகத்தில் கரடிரங்கி அதைப் பிடிக்க ஓவென்று வாயில் புழுதிமண் படிய கத்தியபடி ஓடி வருவோம். மலை ஏறியது எத்தனை பேரோ? காற்றாடி விதைகளை மடிநிறைய சேமித்துக் கட்டி குவித்தது எத்தனை பேரோ? தெரியாது. அதை விரட்டிக்கொண்டு ஒரே ஓட்டமாய் ஊரை நோக்கி ஓடி வருகையில் அருகில் உடனோடி வருபவனின் முகம் மட்டும் தெரியும் அந்தப் புழுதிக் காற்றில். பொட்டல் வெளி கடந்து, ஊருக்குள் நுழைந்ததும், ஒருவரையும் தெரியாது. காற்றாடி விதையைத் துரத்தும் ஆவலில் சிதறிப் போய்விடுவோம்.
அப்படி என் படிப்பு பறிபோனதும், முதன்முதலில் சூழ்ந்த வெறுமை, தனிமையின் ஏக்கங்கள் என்னைச் சூழ்ந்த தருணமது. என் குடும்ப சூழல் நிர்ப்பந்திக்க சொற்ப வருமானத்திற்கு வேலைக்குப் போக ஆரம்பித்தேன். என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிதர்சனம் மிக ஆழமாய் என்னைப் பாதித்தது. என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
நான் எத்திசையில் சுழல்வதென்றே தெரியாமல் கண்ணிமைக்க முடியாத குழப்பத்தில் இருப்பதை உணர்ந்தேன். அன்று துவங்கியது இன்னும் என்னை விடாமல் துரத்திக்கொண்டு வந்து, இந்த நித்ய மௌனத்தில் நிறுத்துவது எதுவென்றும் தெரியவில்லை. விதிகள் ஏதுமில்லாமல் எப்படி விளையாடுவது? இந்த விளையாட்டை. நான்... இல்லை... எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. இப்போதுவரை என் வாழ்வில் நிகழ்ந்தன யாவும் முன்பின் கலைவுகளாகக் கலைந்து கோர்வையாக இல்லாமல் அவ்வப்போது என்னுள் குமிழுகிறது. ஒன்றின் மீது ஒன்று உரசி. இரண்டும் சிதறியுதிர்கிறது. விவரிக்க முடியாததின் வெருட்சி வெம்மைகளில் தகிக்கும் அவை இன்னதென்று வரையறுத்துக் கொள்ள முடியாதவையாக இருக்கிறது. என் வாழ்வைப் போலவே.
இரவு கணங்களின் அற்புதம் கனவு. ஆனால் அவை எனக்கு சொல்லில் நில்லா பயங்கரங்களை அப்பின. வண்ண இருளிலிருந்து பயம் விரிக்கின்றன. என்னைத் துன்புறுத்தும் அந்தக் கனவுகளின் தொடர்ச்சி என் அகால தூக்கங்களைப் பறித்து நிம்மதியைக் குலைக்கும். அந்நிகழ்ச்சிகளில் பிரமை பிடித்ததுபோல் நான் செயலற்று உறைந்து போவேன். விடிந்ததும் கலவரமூட்டின அக்கொடுங்கனவுகளின் யுத்தகளம் இருந்ததின் சுவடில்லாமல் போகும். அதன் தடங்களை இருள் முழுங்கிவிடும். மோதிக்கொள்ளவோ, உட்புகவோ, சுவரிருக்காத விநோத உலகம் அது. அனுமதிக்கவும், பயணிக்கவும், நிராகரிக்கவும் அதற்கு மத்தியில் ஒரு விதமான மனஅழுத்தத்தைத் தொடர்ந்து பரிசளிக்கவல்லவையாக இருந்தன. எனக்கு அந்தக் கனவு உலகம்.
வாழ்வெல்லாம் வெறியோடு அவ்வளவு ஆர்வமாக எதைத் தேடிக்கொண்டிருக்கிறோம்? மரணத்தையா? இல்லை கனவில் வாழ்வது யார்? அங்கு மரணங்கள் எப்படி சம்பவிக்கும்? இல்லை எனக்குப் போல எல்லோருக்கும் கனவு வாழ்வு சாத்தியமா? தூக்கமே இல்லை என்பவர்களின் மன அழுத்தமாய் இப்படி கிளர்ந்து எழும் எண்ணங்களின் முடிவில், இக்கணத்தில்கூட எனக்கு சந்தேகம் தோன்றுகிறது. இதற்கிடையில் எனக்குக் கிடைக்கும் வேலைகளில் நிலைக்கமுடியாமல் அனைவராலும் பரிகாசத்திற்கு ஆளாகி அலைகையில், ஒருமுறை ஜனசந்தடியற்ற முன்ஜாமம் சில நாட்களாய் ஒரு பொட்டுகூட தூக்கம் இல்லை. மிகப் பழைமையான கோயில் அருகில் சென்று கொண்டிருந்தேன். என் குரூரங்கள் எல்லை மீறி கோயில் சுவரேறிக் குதிக்கும் ஆவல் தொற்றியது. ஏறும் வலிமை தோல்வியுறச் செய்தது. எனக்கு அளவில்லாத கோபம். காரணமில்லாமல் அந்த கணத்தில் கண்டவரை கொலை செய்யும் வெறி தாண்டவமாடியது... ஒன்றிரண்டு நாய்களைக் கூடக் காணவில்லை. என்னை நிராகரித்துக் கொண்டிருக்கிற கோட்டை மதிலேறின தருணம் ஒருவித உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. கரைபுரளும் அம்மகிழ்ச்சியில் திளைத்ததில் எங்கிருந்தோ வந்தது என்னுள் ஒரு நாலு ஆள் பலம். அந்த கருப்பசாமிதான் என் மீது இறங்கி இருக்கவேண்டும்.
அப்பெரிய கோயிலின் எல்லா கதவுகளையும் திறந்து உள்நுழைந்தேன். இறுமாப்பு நெஞ்சுக்குள் படர என் பலம் மீது கர்வம் வர, எதுவும் செய்ய முடியாமல் கண்மூடிக் கிடக்கும் அத்தனை கடவுள்களைக் கண்டதும், அடக்க மாட்டாமல் எழுந்தது என்னிடமிருந்து அந்த எக்காளச் சிரிப்பு.. கண்ணீர் வழிய ஆனந்தக் களிப்பில் என்ன செய்கிறேன் என்ற நினைவில்லை. அங்கிருந்த கோணிச் சாக்கில் உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்தேன்.
வீதிகளில் கழிவுத் துணிகள், நவதானியங்களின் சிதறல் ``கொர் கொர்'' என்று காரமாடத்துப் புறாக்கள் தவிர யாருமே எதிர்ப்படவில்லை. கடைவீதித் தெரு இருள்களைக் கடந்து வரும் போது என்னையே ஒரு கழிவிரக்கத்தோடு பார்த்துக் கொண்டேன். யாராவது என் சாகஸங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டார்களா? என்ற எதிர்ப்பார்ப்பு என்னுள் கனல, நான்காம் ஜாமத்தில் கூட யாரும் எதிர்ப்படவில்லை. இலவம்மரத்து பறவைக் கூட்டங்கள் கூக்குரலிடத் துவங்கின. ஒன்றிரண்டு பேருந்துகள் வந்து திரும்பின. டீக்கடை முன் ஒன்றிரண்டு ஆட்கள் நின்று கொண்டிருந்தனர். பேருந்து அமர்வு திட்டுகளினடியில் பாலிதீன் குப்பைகளைப் போல பராரிகளோடு, ஒன்றிரண்டு ஆண் பெண்ணும் தலையில் போர்த்தி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களினிடையில் என் போல ஒருவன், படிய வாராத தலை, அழுக்கேறி நைந்த ஆடை, தூக்கமில்லாமல் ஓரிடத்தில் இருப்பு கொள்ள மாட்டாமல், உற்சாகமற்று, பதட்டத்தில் நடந்தபடி வானை அடிக்கடி அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அவனுக்கு என்ன தோன்றியதோ, என் அருகில் வந்தான். கண்கள் பழுக்க சிவந்திருந்தது. அவன் குரல் கூட அவன் அடிவயிற்றில் ஒட்டிக்கொண்டு வெளிவரவில்லை. வெளியூர் போலும். `பணம் வேணும்...' என்க, நான் கோணி வாயைத் திறந்து அவனிடம் நீட்டினேன். `வேணுங்கற அளவுக்கு எடுத்துக்கோ!' என்று மகிழ்ச்சியாய் கூறினேன். அவன் முகம் இறுக்கமானது. ஒரு தடுமாற்றத்துடன் மீண்டும் என்னை ஏறிட்டு பார்த்தான். `எடுத்துக்கோ' என்று கூறிய நான் அவனுக்கு அக்கணத்தில் கடவுளானேன். அவன் முகத்தில் இப்போது திகைப்பு கலந்த மகிழ்ச்சி! ஆர்ப்பரிப்பு. `நீங்களே குடுங்க' என்று கைகளை நீட்டி, அதே அவசரத்தில் கீழே காற்றில் அல்லாடிக் கிடக்கும் பாலிதீன் பையை எடுத்து விரிக்க, அது பெரிய ஓட்டை, அப்படியே சட்டையை ஒரு குவளையாக்கி ஒரு கையால் தன் தலையைக் கோதியபடி அதே வேகத்தில் நீட்டினான். எனக்கு அவனை அழைத்துக் கொண்டு போய் டீ வாங்கி அதில் ஆளுக்கொரு பன் வாங்கி நனைத்து இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டோம். ஒரு சிகரெட் கேட்டான். வாங்கிக் கொடுத்தேன். அதே வேகத்தில் கோணிப்பையிலிருந்து ஒரே ஒரு இரண்டு ரூபாய் நாணயத்தை உரிமையாக எடுத்துக்கொண்டு கழிப்பறைக்குப் போய் திரும்பினான். இன்னும் அந்த சாகஸ பரவசம் எனக்குள் விரவிக்கிடந்தது. வயிறு எனக்குப் பொருமுவது போலிருந்தது. அவனை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சென்றேன். நன்றாக விடியத் துவங்கியிருந்தது. அவன் நின்றிருந்த இடத்திற்கு வந்து விட்டேன். எங்கு தேடியும் அவனையும் கோணிப் பையையும் காணோம். என் உடை உடலில் ஒட்டியிருந்த சுவற்று சாந்து தீற்றல்கள், விபூதி, குங்கும சுவடுகள் தகவலின் பேரில், தேடி வந்த ஊர்க்காவல் படை என்னைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தது. சிறுவர் ஜெயிலில் அடைக்கப்பட்டேன்.
விடுதலையாகி வெளிவருகையில் வெகுதூரம் தேடித்தான் தம்பி, அக்கா, அம்மாவையும் கண்டுபிடிக்க முடிந்தது. அம்மாவுக்கு வியாபாரம் கை கொடுக்க இந்த ஊரிலே நிரந்தரமாகத் தங்கிவிட நான் வீடு வந்து சேர்ந்தேன். அப்பவும் அவர்கள் மத்தியில் என்னைப் பற்றி பலவித அபிப்ராயம் ஓடியது. இன்றுவரை நான் நடித்துக் கொண்டிருப்பதாகவும், அந்தப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் நான் பார்த்த மில்லில் பணிபுரியும் பரமன் மனைவியோடு உறவு ஏற்பட்டு அன்றிரவு அவளிடம் கொடுத்து விட்டு வந்ததாகவும் ஒவ்வொரு மனதிலும் ஒரு யூகமிருந்தது.
நான் முன்பு போல வேலைக்குப் போகத் துவங்கியதும் அந்த விதமான பேச்சுக்கள் குறைந்தன. எனக்கு என் பெயர் கூட மறந்து போகத் துவங்கியது. அதை ஞாபகப்படுத்திக் கொள்ள முனைகையில், நான் தனியன் என்கிற எண்ணம் மேலோங்கியது. அடிக்கடி என்னை நானே காயப்படுத்தி அதில் திருப்தியுற்றேன். விடாமல் எனக்குள் யாரோடோ நான் பேசிக் கொண்டிருக்கிறேன். எதிர்ப்படும் நபர்களிடம் எளிதாக என்னால் நட்புகொள்ள முடியவில்லை. கட்டளைகளுக்கு மட்டுமே நான் பணிகின்றவனாக மாறியிருந்தேன். விடையில்லா கேள்விகள் என்னுள் அவ்வப்போது கொந்தளிக்கும். அதற்கு நான் என்ன செய்வது? அதான் தெரியவில்லை. அப்படி அந்த எண்ணங்கள் எழ, ஒரு அதிகாலை வேளை அந்நெடுஞ்சாலை புளிய மர வரிசையில் நடக்கையில் பறவைகளின் கூச்சல்களில் அண்ணாந்து பார்த்தபடி வந்தேன்.
அந்த வளாகத்தின் முகப்புப் பலகை என்னை ஒரு கணம் அப்படியே பொறி தட்டி, நிலை நிறுத்தியது. அத்தத்தளிப்பை உணர்ந்த சமயத்தில் நான் தாமதிக்காமல் உள்நுழைந்தேன். இன்று எப்படியாவது தீர்வு காண்பது என்று முடிவெடுத்தேன். தொடர்ந்த என் நடவடிக்கைகளின் பேரில் ஏற்பட்ட அச்சத்தில் எனக்கு ஏற்பட்டிருப்பது மனநோயா? என்று அந்த அரசு மருத்துவரைப் பார்க்க முதலில் வரிசையில் நின்று சீட்டை வாங்கிக்கொண்டு மருத்துவரின் அறையை எட்டிப் பார்த்தேன். அவர் இன்னும் வரவில்லை. ஆனால் வரிசையாக கூட்டம் காத்திருந்தது. மரங்களடர்ந்த அச்சாலை வழியே, கடந்து போகும்போதும் பேருந்துக்காக காத்திருக்கும் போதும் கூட்டம் கூட்டமாய் எழும் பறவைகளின் ஒலி இதற்கு முன் கேட்டதை விடவும், மிகக் கடுமையாக அதன் கீச்சொலிகள் எனக்கு கேட்டன. மிகப் பழைமையான கோட்டை சுவர்களின் நடுவில் இயல்பாய் உற்பத்திவித்த எண்ணற்ற மரங்களும், தேர்ந்த இடைவெளிகளில் சிறைச்சாலை போன்ற காரைக் கட்டிடங்களும் இருக்கும் அந்த அரசு மருத்துவமனைக்குள் நகர ஆரம்பித்து ஒவ்வொரு பகுதிகளாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
நோய்மை படர்ந்த முகங்கள் போலவே மாறி வரும் கட்டிடங்களும் மரங்களும், கிணறும் சொல்லொண்ணா துக்கம் என் மீது கவிந்தது. உலர்ந்த சருகுகளின் சிறு காற்று, எறும்பு நடைபாதைகளில் குறுக்கிட்டு விளையாடியபடி அழைத்துச் சென்றது. நானறியாமல் அப்படி நடந்து போய் ஒரு சன்னலை ஒட்டின சுவரில் மோதிக் கொண்டேன். பிரக்ஞையற்ற அந்த நொடியில் உலர்ந்த வாசனை மோத நான் அதில் திளைத்து உணர, பிணங்களின் கவிச்சியும், சதைத் துணுக்குகளின் தெறிப்பில் கறைபடிந்த, இரத்தப் பொட்டுக்கள் எத்தனையோ சாலை விபத்துக்கள் என் கண்முன் நிழலாடியது.
யாரோ அழைப்பதுபோல் தோன்ற, பொது பகுதியை நோக்கி நகர்ந்தேன். முன்னிலும் அதிகமான கூட்டம் இருந்தது. ரெட்டை ஜடை வரிசை ஆண்களும், பெண்களுமாய் மருத்துவரின் அறை வரை நீண்டு கிடந்தது. மந்த கதியில் ஊர்ந்தது வரிசை. மரங்களின் குளுமை நீங்கி முன்னேழு, பின்னேழாக வெயில் தகித்தது. அதை முதியவர்களும் குழந்தைகளும் தாங்கமாட்டாமல் தவித்தனர். இளம் தாயொருத்தி இரவெல்லாம் தூக்கம் தொலைத்த அசதியோடு, பயணக்களைப்புமாய் எரிச்சலுற்றபடி டாக்டரை வரிசை விலகி எட்டிப் பார்த்தாள். ஒருத்தி உடைந்த கை, மாவுக்கட்டை வெறித்தபடி வலியின் கவலைகளில் அழுது விடும் மனநிலையில் இருந்தாள்.
அங்கங்கு கிளை மாறி அமர்ந்த காகம் யார் வரவையோ, கரைந்து கொண்டிருந்தது. பயிற்சி முடிந்ததும், பணி மேற்கொண்டிருக்கும் அந்த இளம் டாக்டரம்மாவைப் பார்க்கும் போது என் மனம் காற்றில் மிதக்கும் இலவம் பஞ்சாய் மாறி இலேசானது. படிக்க முடியாததின் ஏக்கம் என்னுள் படர்ந்து விலகியது. என் தலையில் விழுந்தது ஒரு அத்திப்பழம். அதை கையில் எடுத்தேன். அத்தி பூத்தது, அன்றே தோன்றி அன்றே அழியுமாம் ஆயிரம் பூச்சி அத்திப்பழத்தில். யாரோ எப்பவோ சொன்னது சட்டென்று நினைவுக்கு வந்தது. அத்திப்பழ சிவப்பாய்... டாக்டரம்மா. என்னையறியாமல் முணுமுணுத்தேன்.
குழந்தையின் அழுகை தாளமாட்டாமல் வரிசை மீறி, முண்டும் தாயை தன் முகத்தைக் கடுமையாக்கி, பார்வையிலே எச்சரித்தபடி துரிதமாக வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார் டாக்டரம்மா. வரிசை நகர்ந்தது. என்ன மாயமோ? தெரியவில்லை. என்முறை வந்துவிட்டது. என் முன் நின்ற நபரும் ஊசி போட்டுக் கொண்டு நகர, சொல்லுங்க உங்க உடம்புக்கு என்ன? என் முகம் பார்த்துவிட்டு `உங்க பேர், வயசு சொல்லுங்க' என்றபடி பேனாவைச் சுழற்றியபடி எழுத முனைய, அக்கணத்தில் நான் தடுமாறியபடி அவரிடமே `எனக்கு என்ன?' என்று கேட்கவும் அவரின் முகம் கடுமையாக மாறத் துவங்கியது. `எனக்கு வந்து....' என்று அதற்கு மேல் பேச முடியாமல் ஸ்தம்பித்து வெளியேறினேன்.
பின் சில காலம் கரட்டில், ஆடு நுழையாத, பாறைகளுக்குள் தனித்து அலைந்தேன். காட்டுப் பூக்களை ஓடி ஓடி சேகரித்தேன். கூம்பு வடிவ கல்லை நிமிர்த்தி மானசீகமாய் காணிக்கை செலுத்தி ஒரு பிரார்த்தனையுமில்லாமல் வழிபட்டேன். தேன் கசியும் ஈக்களோடு ஒரு சில காய், பழங்களென சுழல, நாளோ நேரமோ பசியோ இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன்.
என்னோடு யார் பேசினாலும் பதில் பேசுகிறேன். ஆனால் எனக்குள் ஒரு தீராக் குழப்பம். அவர்கள் யார்? என்ன பேசினோம். எப்படி எனக்கு பழக்கம் என்பதையெல்லாம் மீறி உண்மையிலே நான் பேசினேனா என்றெழும். பிறகு நான் ஏன் இப்படியிருக்கிறேன் என்றும் தோன்றும். தப்பித் தவறிக் கூட நான் தண்ணீரையோ, கண்ணாடியையோ, என் முகம் பார்க்க விடாமல் தடுத்து வந்தேன்.எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறதோ? என்ற பயம் வேறு.
நான் கூலி வேலைக்கு மீண்டும் பழக்கப்படுத்தப்பட்டேன். கணவாய் கருப்பு கோயில் பூசாரிகிட்ட மந்திரிச்சு வாங்கின தாயத்து போட்ட பிறகு நான் தொடர்ச்சியாக எவ்வித குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் வேலைக்குப் போவதாகவும், ஜாதகம் பார்த்த இடத்தில் திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகும் எனச் சொல்லவும் ஏதோ ஒரு ரூபத்தில் எனக்கு திருமணமும் முடிந்தது. இவையெல்லாம் எனக்கு இப்போதுதான் கோர்வையாக நினைவுக்கு வருகிறது.
இப்போது என் மனைவி தன் தாய் வீட்டிற்கு பிரசவத்திற்குப் போயிருக்கிறாள் என்பதும் புரிந்தது.
திருமணத்திற்குப் பிறகு கரட்டிற்குப் போகவில்லை. இரவெல்லாம் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக, குறட்டை ஒலி கேட்க தூங்கப் பழகியிருந்தேன் என்றும், நள்ளிரவுகளில் அலறி எழுந்திருக்கவில்லை என்பதில் வீட்டில் நிம்மதியடைந்தனர். அவர்கள் எண்ணியது போலவே என் மனைவி நான் வேலையை விட்டு விலகும் முன்னமே வேறொரு வேலையைப் பார்த்து வைத்து இடைவெளியில்லாமல் கடிகாரத்தை முடுக்கி விடுவது போல தொடர்ந்து கண்காணித்ததில் கடந்த சில வருடங்களாகத் தான் நான் இந்த ஜவுளிக் கடையில் சிக்கல் ஏதும் எழாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த சுமங்கலி ஜவுளிக் கடை, கடை வீதியின் நடு மையத்தில் நெரிசலால் துவம்சப்படும் விதத்தில் அமைந்திருந்தது? அந்த ஏழெட்டு மாடியும் மூச்சுத் திணறும் ஜனநெரிசலும் என்னை ஓரளவு மீட்டெடுத்திருக்கிறது என்று எனக்கும் நம்பிக்கை ஏற்பட்ட போதுதான் ஞாபகமறதி கனவுகள் தொடர்ச்சியாய் நினைவில் படிந்து கொண்டிருந்தது. இடையில் என்ன ஆனதென்று தெரியாமல் இருந்த கனவுகள் என்னுள் மறக்க முடியாதபடி தோன்றியது. அப்படி முதலில் தோன்றியது இந்த கனவுதான் என்று நினைக்கிறேன்.
விதவிதமான, புராதன, கனத்த கதவுகளின் சாவிகள் நீளமாக கனத்த, தடித்த, அந்தத் துருவேறின, இரும்பு சாவிகள் என் மீது விழுந்து கொண்டிருந்தது. தூக்கம் கலைய, அதைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு நான் நடக்கும் தெருக்களில், இருக்கும் ஒவ்வொரு கதவையும் தேடி, அதற்கான கதவில், சாவியைப் பொருத்தி விட்டு, அடுத்த கதவு, அடுத்த பூட்டு என்று கடந்து போய்க் கொண்டிருந்தேன். ஊர் ஊராக... சில சமயம் அயர்ந்து திண்ணைகளில் மொடாப்பானை அடுக்குகளினடியில் படுத்துக் கிடப்பேன். அங்கும் என்னை எறிந்து எழுப்புவதும் சாவிக் கொத்துக்கள்தான். இதுவும் என் வேலை என்று நம்பி கனவுகளில் வேலைக்குப் போய் திரும்பிக் கொண்டிருந்தேன்.
பிறகு ஒரு நாள் கடையில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கையில் நான் புரியாத வார்த்தை அந்தாதிகளை எழுதித் தந்தேன். அதை வாங்கி கடை முழுவதும் வாசித்துக் காட்டி கேலி பேசி சிரிக்கையில் தான் அந்த சிரிப்புப் பேரலைகளில் நடுத்தர வயதில் உள்ள ஒருத்தி, மூன்று பெண்களோடு துணி எடுக்க அடிக்கடி வருபவள். அதை வாங்கிப் படித்து விட்டு தன்னை அடக்க மாட்டாமல் சிரித்தாள். அது எனக்கு என்னவோ போலிருந்தது.
அவள் நினைவில் நிற்கின்றவளாக மாறிப்போனாள். ஏதோ ஒரு கணம் ஒரு நொடி ஏற்பட்ட தடுமாற்றத்தில் அவ்விருப்ப கணங்களின் மீது ஊர்ந்து கலைந்தேன். கனவே இல்லாத சில நேரங்களில் என்னை ஏதோ ஒருவித பதட்டம் கலந்த உணர்வு மெலிதாய் கலவரப்படுத்தியது. அதிலிருந்து சில நேரங்களில் என்னை நான் விடுவிக்க முயலுவதை பம்பரத்தின் மீது சுழலும் அரூப வண்ணங்கள் இறுதியில் என்னை உடுத்திக் கொண்டு நன்றாகப் பருத்து மேலெழுந்து நீர்குமிழிகளாய் மிதக்கும். எப்போதும் வேடிக்கை பார்த்து மறந்து விடுகிற ஞாபகங்களாய் இவை இருப்பதனால் எப்படி எதிர்கொள்வது என்பதறியாது என் உணர்வுகளை வெளிக்காட்ட முடியாமல் மீள்மனவாதைக்கு ஆட்பட்டிருந்தேன்.
அவ்வேளைகளில் துவங்கியது இக்கனவு. அவரை இதற்கு முன் ஒரு போதும் கண்டதில்லை. நான் ஒரு கூரை சமாதியின் பின் நின்று கொண்டிருக்கிறேன். அந்தக் கூரை சமாதி விளிம்புகள் உயர்ந்திருந்தது. ஒரு நிலைமாலை பூவை சாத்தியது போலிருந்தது. மிகுந்த உடல் அயற்சியும் நிரந்தர சோர்வும், அதீத பசி, ஒரு கணம் பசியின்மை, அதே மறுகணத்தில், தோன்றும். நரம்புகள் தாமாக முறுக்கேறி சொடக்கு போடும். அதன்பின் உடல் தளர்ந்து, மிகக் கடினமாய் மழை படிந்த கண்ணாடி போல் அடர்ந்த அதனுள் ஆழ்த்தும் என் நம்பிக்கைகளுக்கு ஒரு பிடிப்பும் இல்லாமலிருந்தது. அப்படியான சூழலில் தோன்றியது இக்கனவு. முகம் தெரியாமல் தொலைத்த கனவுகளை விடவும் ஒருவித பதட்டத்தின் இருண்மைக்குள் என்னை நிலைநிறுத்தி மூச்சடைப்பவை சில.
அவர் ராஜகளை பொருந்திய ஓர் நரிக்குறவனை ஒத்த வடிவில், எனை கவனிக்காமல், தொலைவிலிருந்து வந்து கொண்டிருந்தார். தலைப்பக்கம் என் உயரம் கொண்ட, காரைச் சமாதியின் பின்னால் நின்று கொண்டிருக்கிறேன். அதன் விளிம்புகள் தாமரை மொக்குகளில் மாலை தொடுத்து வடித்தது போலிருந்தது? அதன் கால்மாட்டிலிருந்து மேல்நோக்கி சீரான வேகத்தில் நெருப்பு எழுந்தது. இதன் அருகில் வந்து விட்டார். கறுப்பு நிற உடையை உடல் இறுக்கமாகப் பற்றி அணிந்திருந்தார். முகத்தில் வயோதிக கோடுகள், தங்க ஜரிகை வெண்ணிற தலைப்பாகை கட்டியிருந்தார். அவரின் தொலைந்த புன்னகை ஒரு கால் பதியமிட்ட தலைப்பாகை போல் ஒளிர்ந்தது. சலனமற்ற துக்க முகம்.... கழுத்தில் எருக்கம்பூ மாலை வெண்ணிற பாசிகளாய் மாறி தொங்கிக் கொண்டிருந்தது. புகை அடர்ந்து எழும்பி, காற்று திசை மாறி வீசவும், என் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர். அவர் இன்னும் என்னை கவனிக்கவில்லை. குதிர் போலிருக்கும் நெருப்பினுள் நீரில் குதிப்பது போல் குதிக்கிறார். காரை சமாதியைப் பற்றினபடி அவரை எட்டிப் பார்க்கிறேன். கிணறு போன்ற அந்நெருப்பில் நீந்தி மிதக்கிறார். அந்த வேகத்தில் அவரின் வயதைக் கணிக்க முடியவில்லை. அவரின் தலைப்பாகை எங்கும் அந்நெருப்பு பற்றிச் சுழன்று எரிகிறது. ஊழ்.... ஊழ்.... என்று கத்திக் கொண்டே ஒரு வெட்டுக்கிளி தாவில், வெளியே வந்து விடுகிறார்.
பின், எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, மீண்டும் இவ்வழியே வர என்னை கவனிக்கிறார். அவர் முகம் நீர்க்குமிழ் போல் படியும் வர்ணஜாலமாய் ஏதேதோ மாற்றம் கொள்கிறது. அருகில் வருகிறார். கற்றாழை சோற்றின் நெடி ஈரம் மூக்கில் அறைகிறது. உற்றுக் கவனித்துக் கொண்டே `நீ என்னோடவே வந்துடுறியா?' என்க, அதற்கென நான் காத்திருந்தது போல அவருடன் தலையை ஆமோதித்து நடந்தேன்.
மறுநாள் காலை விழித்ததும் என்னை அழைத்துக் கொண்டு என் மனைவி அரசு மருத்துவமனைக்குள் போகிறாள். இப்போது என் முகத்தில் குழப்ப ரேகைகள் படர, கவனிக்கிறேன். அந்த வளாகமே முற்றிலும் மாறிப் போயிருக்கிறது. மிகப் பெரிய மரங்கள் நிழல் விரிந்து கிடந்த காய்ந்த புல்வெளிகளுக்குப் பதிலாக வாகனங்கள் நிறுத்துமிடம், சாக்கடை கால்வாய்கள் குறுக்கும் மறுக்குமாக கட்டிடங்கள் வெற்றிடங்களைத் தேடும்படியாகவும் நெடுங்கூடங்களும் புங்கம் வேப்பம் மரங்களை அடியோடு காணாமல் போகச் செய்ததன் வெப்பம் தகித்தது. அந்த மருத்துவமனையெங்கும் நான் எதிர்ப்படும் அனைவரையும் பார்த்து ஒரே மாதிரியாக புன்னகைக்கிறேன். ஏனோ அக்கணத்தில் அரசமர இலைகளின் மெழுகு ரோஸ் வண்ணத்தில் பெருமிதம் படர என் முகம் மிளிர்வதையும் ரசிக்கப்படுவதை உள்ளூர உணர்ந்தேன்.
என் மனைவி தன் சோதனை குறிப்புகளை நோட்டில் பதிவித்துக் கொண்டு, களைப்பு மேலிட என் கைகளை இறுகப் பற்றி லேசாக தோளில் சாய்ந்திட வெளியேறினோம். மீண்டும் வழக்கம் போல சுமங்கலி ஜவுளிக் கடையில் வேலைகளில் ஆழ்ந்திருந்தேன். அப்போது விழாக்காலம். வீடு போய் வர முடியாத இரவு, பகல்களை வேலைகளில் தீவிரமாய் ஆழ்ந்திருந்தேன். உணவு கொண்டு வந்து என்னை தினமும் வந்து பார்த்துக் கொண்டிருந்தாள் என் மனைவி. கிட்டங்கிகளுக்கும் மாடிப்படிகளுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தேன். தூக்கம் கூட ஆறின தேநீரைப் போல சுவையற்று இருந்தன. அன்று எதிர்பாராமல் பெய்த மெல்லிய சாரல் வலுத்து இடி, காற்றோடு பேயாட்டமாய் ஆடிக்கொண்டிருந்தது. நான் கிட்டங்கியில் அகப்பட்டிருந்தேன். ஜெனரேட்டர் ஒலி சத்தம் நீங்கி, குறுக்கிப் படுத்த கணத்தில் கண்ணயர்ந்தேன்.
அடர்ந்த காட்டுப் பகுதி நீங்கி, வெட்டவெளி தோன்றி, மறைய செங்கமங்கலாய் புழுதிப் படல், மணலை அள்ளி வீசி, சுழன்று அப்படியே மேலெழும்பி நகர்ந்து வருகிறது. எதிரெதிர் திசை மோதி விரைந்தோடுகிறது. அறுபது எழுது சிங்கங்கள் அதன் இலந்தைப்பழ கண்கள் விலகிட ஒரு பழம்பெரும் கல்கட்டிடம் அதனை துளைத்த மரவேர்களின் சிதிலத்தில் உடைந்து விழாமல் மேக்கல் விதான மண்டபம் அதனுள்ளிருந்து ஒரு உயரமான கறுப்பு ஆடு தாவி தவ்வி பட்டியகல்களின் மீது ஓடி வருகிறது. நான் அங்கு நிற்கிறேன். என்னருகினிலே ஒரு நடுத்தர வயது வாளிப்பான கவர்ச்சியான கண்டதும் காமம் தூண்டும் பெண் திட்டு முட்டு செய்யும் பலிபீடத்திற்கு பன்றியை அவள் பலியிட கால்களைப் பற்றி, அதன் நாராச ஒலியை காதில் வாங்காமல் பலம் கொண்ட மட்டும் இழுக்க, அது திமிறி தப்பி ஓடுகிறது. அப்படியே வெறியோடு ஆவேசமாய் என் பக்கம் திரும்பி.... கூச்சலிட்டபடி என்னை திடுக்கிடச் செய்து பாய்கிறாள்.
ஆயிரமாயிரம் முறை அலறி முழித்துவிட்டேன். எனக்கு அந்த அலறலில் குரல் வெளிவரவேயில்லை. இரவின் நிசப்தத்தில் அலையும் பல்லியைப் போல அந்தக் கனவுகள் திரும்பவும்... அப்படியே எனக்குள் ஒடுங்கிக் கொண்டுவிட்டேன். அதன் பின்னும் அக்காட்சி ஓசைகளின் அதிர்வுகள் துவங்க முகத்தில் படர்ந்து பரவிய உணர்ச்சிக் கோடுகளின் அச்சம் மிக, எந்த பிரக்ஞையும் இல்லாமல் வார்த்தைகள் உதிர்வதும் ஒலியசைவுகள் நிற்பதுமாயிருந்தது.
அன்றும் வழக்கம் போல கடை வேலைகளின் அவசரங்களில் மேலும் கீழுமாய் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். அவள் முன்னிலும் அதிகமாக, கிடைக்கும் தோழமைகளோடு, அடிக்கடி, எங்கள் கடையின் சகல பாகங்களிலும், துணிகள் தேடி, ஏறி இறங்கிக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் மிக நெருக்கமான பழக்கம் போல புன்னகைப்பாள். அந்த அமைதியான சிரிப்பில் நானறியாமலே ஒவ்வொரு முறையும் அவளுக்கு பொருள்கள் ஏதுமில்லாதபோது கைகளில் வணக்கம் செலுத்துவேன். ஒரு பக்கமாக தலையை சாய்த்து சொல்லும் வரை ஒருவித பயம் படபடப்பு ஏற்படும். அதன்பின் அவளை கடந்த நொடியில் ஏதாவதொரு கண்ணாடியில் அவள் சிரிப்பின் பிம்பம் படிந்து அதைக் கடக்கும் போதெல்லாம் இடறி உதிரும். சில சமயம் தடுமாறி அக்கணமும் வணக்கம் சொல்ல முயன்ற என் அசட்டுத்தனங்களைக் கவனித்து சிரித்தேன். இப்படி துவங்கின அவள் சிநேகிதம், மனதுக்கு மிக நெருக்கமானவளாக மாறிப் போனாள். தினமும் எதிர்பார்த்து வராதபோது கேள்விகள் எழுப்பி, வந்ததும் கேட்க நினைத்து பின் அதுவும் மறந்து என் நினைவில் நில்லாது போகும். பின் எப்போதாவது ஹோட்டலில், பேருந்து நிறுத்தங்களில் தட்டுப்படுவாள்.
அன்று ஏதோ கலவரம், ஊரே அமைதியில் ஆழ்ந்திருந்தது.. கடை வீதியில் ஏழெட்டுப் பேரை ஒரு கும்பல் கடை கடையாக விரட்டி வெட்டிக் கொன்றதில் எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டன. நான் வீடு திரும்பிக் கொண்டிருந்த தெருக்களில் அணில்கள் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தன. நான்காவது சந்து திரும்பவும் கம்பி கிராதி போட்ட முகப்பு வளாகத்தில் பொறுமையற்று கடைக்கு வந்து புன்னகைக்கும் அவள் நின்று கொண்டிருந்தாள். அந்த வீட்டுப் பெண்மணியோடு ஏதோ பேசியபடி என்னைக் கண்டதும் அகம் மகிழ்ந்தாள். நிற்கச் சொன்னாள். அருகில் போனேன்.
`தெரிஞ்ச பையன்தான், நான் வீட்டுக்குப் போய் போன் பண்றேன், வர்றேன்' என்று மடமடவென என்னோடு இறங்கி சாலையின் வெறுமையைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தாள். எங்கும் மின்சாரமில்லாத அமைதி பகலின் வெறுமை அங்கங்கு துப்பாக்கி ஏந்திய வாகன போலீஸ்காரர்கள். `எங்க போறீங்க?' என்றதும், `உங்களைப் பார்த்த அவசரத்துல சொல்ல மறந்துட்டேன், ப்ளீஸ் என்னோட வீடு வரைக்கும் வந்து என்னை விட்டுட்டு வர முடியுமா?' என்று அவள் சொல்ல சரியென்று அமைதியாய் நடந்தேன். இன்று ஏனோ அவளின் அழகு, கொஞ்சல் பேச்சு என்னிடம் காட்டும் அந்நியோன்யம் அவள் மீது ஒரு விதமான போதை ஏற்றி கிரங்கச் செய்தது.
அவள் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாள். நான் என் மனதுக்குள் லயித்துக் கிடந்தேன். என்னைப் பிடித்து உலுக்கினாள். `எவ்வளவு கேள்வி கேட்டுட்டேன். ஒன்றுக்குமே பதிலை காணோம்.... என்னாச்சு? பேசுங்க' என்றாள். என்ன பேசுவது என்பது மாதிரி பாவனையில் அவளைப் பார்த்தேன். `வீடெங்க இருக்கு' என்று மட்டும் கேட்டு வைத்தேன். சாலையில் இன்னும் கலவர பதட்டமிருந்தது. அத்தனை தெருக்கள் மரத்திலும் ஒரு பறவைகளைக் கூட காணோம். எல்லா கடை, வீடுகளும் சன்னல்கள் வரை மூடிக் கிடந்தது. ஒன்றிரண்டு ஆட்கள் மட்டும் பைக்கில் போய் வந்து கொண்டிருந்தனர். `என்னமோ கேட்டது மாதிரியிருந்தது' என்று என் முகத்தை உற்றுக் கவனித்தாள். அவள் உதட்டில் வரைந்திருந்த சாயப்பூச்சு இன்னும் வசீகரமாக என் நாவில் ஈரப்படுத்தியது. அவளுக்குப் பதில் சொல்ல நினைத்ததை சத்தமாக உதடு பிரியாமல் மனசுக்குள்ளாக நான் பேசியிருக்கிறேன் என்பது எனக்கு பிறகு புரிந்தது. `என்ன?' எனவும் `இல்லை உங்க வீடு எங்க இருக்குன்னேன்' என்பதற்குள் நெற்றியெல்லாம் வியர்த்துக் கொட்டியது. `கடலை மிட்டாய் கம்பெனி கிட்ட, மினிபஸ் ஸ்டாப் நிக்கும்ல... அங்க.' `புரியலை' என்றவுடன் `இது தெரியலியா... இந்த ஜிக்ஷிஷி ரோடு இருக்குல்ல... அங்கதான்...' அந்த கடைசி வார்த்தையைக் கேட்ட கணம் நான் இயல்பு குலைந்தேன். எனக்குள் எங்கோ சீர் குலையத் துவங்கியதன் அழுத்தம் ஒன்றின் மேல் ஒன்று விழுந்ததைப் போல அதிகரித்து மனதை அழுந்த துவங்கியிருந்தது.
நான் இப்போது இன்னொன்றையும் கவனித்தேன். இவ்வளவு நேரமும் அவளின் மார்பகங்களில் வைத்த கண்ணிமைக்காமல் நிலைகுத்திப் போய் நடந்து கொண்டிருக்கிறேன் என்பதும் மீண்டும் அந்த ஒரு கணத்தில் ஓடியது இடையில் நான் மறந்திருந்த கனவு அது.
இதே மாதிரி ஆளற்ற சாலை. நான் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறேன். வெண் அரளிப் பூக்கள் மட்டும் வீதியெல்லாம் சிதறிக் கிடக்கிறது. ஒரே ஒரு பெட்டிக்கடை, மட்டை புகையிலையும், கோலி சோடாவும், ஜிஞ்சர் கலரும், இருக்கும் அந்தக் கடை நிழலில் நின்று கடையில் ஏதாவது வாங்கலாம் என்று பாக்கெட்டை தடவுகிறேன். எதிரில் பார்த்தால் அந்த கடைக்காரப் பெண்மணி. என்னை விட வயது அதிகமிருந்தாலும் அது எதையும் கண்டுபிடிக்க முடியாமல் செய்தது அவளின் அழகு. வசீகரமான சுண்டி இழுக்கும் கண்கள், உப்பின கன்னம், நடு வகிடு முடியை சற்றுத் தளர்த்தி காற்றில் குதிரைகள் பறக்கவிட்ட வண்ணம் என் ஒட்டுமொத்த உணர்வுகளையும் ஒன்றிணைத்து உதட்டில் உறிஞ்சி இழுப்பது போல் அவளின் வசீகரங்களுள் கட்டுண்டு மயக்கத்தில் ஆழ்ந்தேன். `இப்ப இது என்ன தெரு' என்கிறேன் அவளிடம். எப்பவும் இது ஜிக்ஷிஷி தெரு என்கிறாள். `சரி என்ன வேணும் உனக்கு?' என்று மெலிதாக சிரித்தபடி கேட்கிறாள். அந்த கணம்தான் அவள் மார்பைக் கவனித்தேன். குறுக்காக சாய்ந்த கோபுரம் மாதிரி என்னை என்னென்னவோ செய்தது. அவ்வுணர்ச்சியில் ஆழ்த்தி பிரமை பிடித்து விட்டிருந்தது. என்ன வேணும் என்கிறாள் மறுபடியும் சிரித்தபடி. என் கைகள் அவள் மார்பை நோக்கி வெறித்தனமாக நீள அவள் தன் சுண்டு விரலில் வெகு லாகவமாக தட்டி விடுகிறாள். அந்த அசுர பலம் என்னை ஓரளவிற்கு தன்னுணர்விற்குத் திருப்ப நான் அமைதியாய் அவளைக் கவனிக்க இது வேணுமா? என்றபடி தன் மார்பைக் காட்டி ஒரு விதமாக தலையை அசைத்து சரி உள்ள போ என்று கடைக்கு பின்னாலிருந்த தகரக் கதவு போட்டிருந்த அந்த ஓட்டுத் தாழ்வார கூடத்துள் புகுந்தேன். நூலாம்படையாய் படர்ந்து கிடந்தது கரும்புகை. திரும்பிய பக்கமெல்லாம் அப்பியிருந்தது. தூசிகளாலும் நிரம்பியிருந்தது. என்னை பின் தொடர்ந்து வந்தவள் என்னைத் தொடவும் திரும்பினேன். திரும்பிய கணம் தன் கைகளால் என் கழுத்தைப் பிடித்து நெரித்து அச்சு தூக்கலாக நாலடி உயரத்தில் தூக்கினாள். நான் செய்வதறியாமல் திகைத்து அந்தரத்தில் கால்களை உதறிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு நா வறள எழுந்து தண்ணீர் குடித்து வீட்டிற்கும் பஸ் ஸ்டாண்டிற்குமாய் அலைந்து கொண்டிருந்தேன். அந்நொடியிலே கனவு மறந்து போய்விட்டது. ஆனால், அந்த அதிர்வின் படபடப்புகள் என்னுள் விடாமல் எதிரொலித்தபடியிருந்தது.
அதே நேரம் இப்போது நானும் அவளும் நடந்து அவள் வீட்டை சமீபித்திருந்தோம். நான் கனவில் பார்த்த அதே மாதிரி கடை, அதே மாதிரியான கடலை மிட்டாய் கூடம், அதன் சன்னல் வழியே குண்டு பல்ப் இருளை முழுங்கிக் கொண்டிருந்தது. `வா' என்று கையைப் பிடித்து அந்த கடைக்குள் இழுத்தாள். நான் அவளுடன் நகர்ந்தேன். அங்கு யாருமேயில்லை. எண்ணங்கள் உறையும் வெறுமையுள் செய்வதறியாமல் இப்போதும் நா வறள துவங்கி வியர்த்தும் விட்டது. தன் சேலைத் தலைப்பில் என்ன இப்படி வியர்த்திருக்கிறது என்று அவளாகவே துடைத்து விட்டாள்.
கனவில் பார்த்ததை விடவும் மிக மூர்க்கமான மோகனத்தில் என்னை வீழ்த்திய தனங்களின் வெப்பம் கவ்வ மேலும் அவை உரசியபடி இருக்க, என் புலன்களை அதன் மதமதப்பில், கட்டவிழ்த்தது போல் நான் என்னுள் எங்கிருந்தோ கிளம்பின வேகத்தில் அவள் மீது சரிய, அவள் என்னை அணைத்தபடி `இன்னைக்குதான் புரிஞ்சுதா?' என்றபடி அக்கம்பக்கம் யாருமில்லை என்பதைக் கவனித்தபடி என்னை அந்த மிட்டாய்க் கடைக்குள் உட்புகுத்த நான் நுழைந்த மறுகணம் என் உடல் குளிர அப்படியே பேச்சற்று வாயடைத்துப் போய் நிலைகுலைந்து கனவில் பார்த்ததுபோல் அப்படியே யாவும் இருந்தது. அக்கூடத்தின் ஒரு கதவை தாள் போட்டபடி மறு கதவை இழுத்து சாத்தினாள். அவ்வளவுதான் ஒரே திமிராகத் திமிறி கட்டறுந்து ஓடிக் கொண்டிருக்கும் நான் தூங்கும் பாவனைகளில் விலகி ஓடிக்கொண்டிருக்கிற, பயவெருட்சிகளில், சுழன்று சுழன்று ஆடும் பத்தி புகைபடல, நடனங்களின் நினைவு கிளத்தலில், தப்பிக்க முனைந்தபடி இருக்கிறேன். அமைதியின் பிடியில், படியும் அகோர தனிமையினின்று தப்பிக்கும், உபாயம் இன்றி, ஓடும் கால்களை விடுவிக்கும், வகையறியாமல் புதிய கனவுகள் பிறந்து வளர்கிறது. நான் எவற்றையும் கவனிக்கும் திறனற்ற லயத்தில் ஆழ, எவரும் கண்ணுறாத ஒரு விண்மீனைப் போல காலங்களுக்குள் சரிந்து கொண்டிருக்கிறேன்.
நன்றி – தீராநதி
கருத்துகள்