கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

அம்மை – தமிழ்மகன்

"நம்ம ஸ்கூல்லதான் படிச்சீங்களாமே? சொன்னாங்க'' என்றார் தலைமை ஆசிரியர்.

நான் சிரித்துக் கொண்டேன். "ஆமா... டென்த் பப்ளிக் எக்ஸாம் வர்றதுக்கு ஒரு வாரம் முன்னாடி நின்னுட்டேன்'' அதை உறுதிப்படுத்துவது மாதிரி சொல்லிச் சிரித்தேன்.

"என்ன அம்மை போட்டுடுச்சா?'' தலைமயாசிரியர்களுக்கு யார், யார் எதற்கு விடுமுறை எடுப்பார்கள் என்பதில் ஒரு தீர்மானம் இருக்கத்தான் செய்தது.

"நின்னுட்டேன். மறுபடியும் இங்க வருவேன்னு நினைச்சுகூட பார்க்கல''

"என்ன கருணாகரன் ஸார். எவ்ளோ பெரிய பிஸினஸ்மேன் நீங்க? இவ்வளவு சாதாரணமா நின்னுட்டேன்னு சொல்லிட்டீங்களே... படிச்சிருந்தா இன்னும் பெரிய ஆளா ஆகியிருப்பீங்களே...?''

“அப்படியெல்லாம் இல்ல ஸார்... என்னமோ எனக்கு அப்படி ஒரு வைராக்கியம். சொல்லப்போனா படிக்காம போனதாலதான் இந்த பிஸினஸ் எல்லாம்.”

தலைமையாசிரியருக்கு அதற்கு மேல் அதை விசாரிப்பது நாகரீகமில்லை என்று தோன்றியது. தண்ணீர் டாங்க் புதுப்பித்தல் சம்பந்தமான காண்ட்ராக்ட் எடுத்தவிதத்தில் செக் வந்திருந்தது. அதைக் கொடுப்பதற்குத்தான் நேரில் அழைத்திருந்தார் தலைமையாசிரியர்.

செக்கை வாங்கிக் கொண்டு, "ஹெட் மாஸ்டர்னா எனக்கு இப்பகூட பயம் ஸார்'' என்று சிரித்தேன்.

"பசங்களோட எதிர்காலம் நல்லா இருக்கணும்னுதான் கொஞ்சம் கெடுபிடியா இருக்கிறோம். என்ன எழுந்துட்டீங்க?''

"கிளம்பறேன். நிறைய வேலை இருக்கு..'' வெள்ளை அரைக் கை கதர் சட்டை கசங்காமல் எழுந்தேன். அது நான் சொன்ன பேச்சை கேட்பது போல் இழுத்துவிட்ட இடத்தில் நின்றது. வாசல் வரை வந்து வழி அனுப்பிவிட்டு தலைமையாசிரியர் உள்ளே போகவும், நான் தண்ணீர் தொட்டி வரை சென்று ஒரு பார்வை பார்த்தேன். உடற்பயிற்சி வகுப்பு மாணவர்கள் முன்பு போல கால்பந்தை இஷ்டம் போல உதைத்துக் கொண்டிருந்தனர். மாணவிகளில் சிலர் ஊதா தாவணியில் தண்ணீர் குழாய் அருகே மரத்தடியில் குழுமி இருந்தனர்.

பரீட்சைக்கு ஒரு வாரம் முன்பு நிற்பதற்கு அம்மை வருவது மட்டும்தான் காரணமாக இருக்க முடியுமா? உண்மையான வேறு காரணம் இருந்ததால் நீண்ட நாள்கள் கழித்து அதை நினைத்துப் பார்ப்பதற்கு சந்தர்ப்பமாகவும் அங்கேயே நின்று பள்ளி வளாகத்தைப் பார்வையால் அளந்தேன். வறண்ட ஞாபகங்கள் துளிர்ப்பதுபோல இருந்தது. ‘டென்த் பி' வந்ததும் கண்கள் அங்கேயே சற்று நின்றது. வகுப்பறை சுருங்கிவிட்டது மாதிரி இருந்தது. ஏன் மைதானமே சிறியதாகத்தான் தெரிந்தது இப்போது. மனக் கிணற்றில் மூடிபோட்டு மறைத்து வைத்திருந்த நினைவுகளை மெல்ல திறந்தேன். அதைத் திறக்கும்போது யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அனிச்சை காரணமாகச் சுற்றிலும் பார்த்துக் கொண்டேன்.

கவனிப்பாரற்ற அமைதியும் புங்க மர நிழலும் அவருடைய நினைவுகளை வரவேற்றன. இருபது ஆண்டுகளுக்கு முந்தைய மீனா அவர் மனதில் ஊதா தாவணியோடு வந்து நின்றாள்.

"கர்ணா நானும் உன்கூட வரட்டுமாடா?'' புது சைக்கிள், புது காக்கி பேண்ட் , புது பை... எனக்கே ஊரைக் கடப்பதற்கு வெட்கமாக இருந்தது. ஊருக்குள் புது ட்ரஸ் போட்டுக் கொண்டு போவது வெட்கம் பிடுங்கித் தின்னும் விஷயம். அதிலும் பேண்ட் வேறு. யாருமில்லாத நேரமாகப் பார்த்துக் கடந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் மீனா இப்படி கேட்டாள். உச்சந்தலையில் போய் இடித்தது வெட்கம். மீனாவைப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு போவதா? இத்தனைக்கும் அவள் ப்ளஸ் ஒன். பத்தாவதில் ஒரு சப்ஜெக்ட் பெயிலாகி மீண்டும் எழுதி பாஸ் ஆகி இப்போது ப்ளஸ் ஒன் சேர்ந்திருந்தாள். இரண்டு வயது மூத்தவள். அவளைப் பார்த்து வெட்கம் வரவேண்டியதில்லைதான்.

"பொட்டை பொண்ணு நடந்து கஷ்டப்படுது... சைக்கிள்லதான் கூட்டிக்கிட்டுப் போயேன்'' அம்மாவின் அதட்டலான சிபாரிசால் உடனடியாகச் சம்மதித்துவிட்டேனே தவிர, பள்ளிக்குப் போகும்போதும் வீட்டுக்குத் திரும்பும்போதும் அவளை எப்படிப் புறக்கணிப்பது என்பது சம்பந்தமாக தினமும் ஒரு மணிநேரம் நான் யோசிக்க வேண்டியிருந்தது. கடைசி பெல் அடித்ததுமே சைக்கிளை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் பின்னால் இருக்கிற வேலி வழியாக நுழைந்து பின்பக்க வழியாக தப்பிச் சென்றும் பார்த்தேன். அவள் அடுத்த நாளில் இருந்து அந்தப் பக்கமாக வந்து நின்று ""ஏன் இந்தப் பக்கமா போறே?'' என்றாள்.

நான் அவளைத் தவிர்ப்பது நிஜமாகவே அவளுக்குத் தெரிவில்லையா நடிக்கிறாளா என்று தெரியவில்லை. ஆனால் தவிர்ப்பது தெரிந்தால் மனம் வருந்துவாளோ என்றும் இருந்தது. இப்படியாக நான் மீனாவின் டிரைவராகிப் போனது, மாணவர்கள் மத்தியில் புயலைக் கிளப்பிவிட்டது.

கணேசன் "மீனாவ லவ்வடிக்கிறியா?'' என்று நேராகவே விசாரித்தான்.

வெட்கம், புறக்கணிப்பு எல்லாம் மெல்ல மறைந்து அவளைச் சுமந்து செல்வது எனக்குப் பெருமைக்குரிய விஷயமாக மாறியிருந்தது. சக மாணவர்களின் விபரீதமான கற்பனைகளுக்கு மேலும் வலு சேர்ப்பது போல என்னுடைய பையையும் அவளிடமே கொடுத்து பின்னால் உட்கார வைத்தேன். சில நேரங்களில் ரொம்ப சகஜம் போல அப்படி இப்படி தொட்டுப் பேசுவதும்கூட நடந்தது.

வீட்டுக்கும் பள்ளிக்கும் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் இருந்ததால் நடுவே கொய்யா பழம் வாங்கி உப்பு மிளகாய்த்தூள் தடவி சாப்பிட்டுவிட்டுப் போவதும்கூட சில நேரங்களில் தொடர்ந்தது.

ஒரு மழைநாளில் ஆளவரவமற்ற சாலையில் தெப்பலாக நனைந்து சைக்கிள் மிதித்துக் கொண்டிருந்தேன். பனஞ்சாலை. சாதாரணமாகவே அங்கு யாரும் தென்பட மாட்டார்கள். அவள் "ரொம்ப குளிருது கர்ணா'' என்றபடி சட்டென்று முதுகின் மேல் சாய்ந்து கொண்டாள். காதல் மனது கொண்டவர்களுக்குத்தான் அதில் உள்ள உரிமையான உணர்வு புரியும். பூமி உருண்டையை நெம்புகோலும் இல்லாமல் புரட்டிப்போடும் தெம்பு வரும். இனம் பிரிந்த ஒரு பரவசம் ஏற்பட்டு மெல்லிய மின்சாரம் பாய்ந்த மனிதன் போல இருந்தேன்.

மாணவர்கள் கிண்டலடிப்பதை நான் விரும்ப ஆரம்பித்திருந்தேன். எல்லாமே மிக இயல்பாக மனதில் அரங்கேறியது. இதே மாதிரி மீனாவையும் அவளுடைய தோழிகள் கிண்டல் செய்வார்கள் என்றும் அவளும் அதைக் கேட்டு மகிழ்வாள் என்றும் நினைத்தேன். ஆனால் அவள் மனதைப் புரிந்து கொள்வது சவாலான விஷயமாக இருந்தது. தினமும் சைக்கிளில் சுமந்து செல்கிறேன் என்பதற்கான பாசம் மட்டும்தானா அது என்ற கவலை எனக்கு இருந்தது. அவளை அத்தனைச் சுயநலமியாக யோசிக்கவும் மனசு வரவில்லை. காதல் வந்துவிட்டால் இப்படித்தானே?

அன்று பத்தாம் வகுப்பு பி பிரிவில் ஆசிரியர் யாரும் வரவில்லை. ஆசிரியர் இல்லாத வகுப்பு என்றால் அதனுடைய உற்சாகத்துக்கு எல்லையே இருக்காதுதானே? சப்தம் பொறுக்கமுடியாமல் தலைமையாசிரியர் வந்து "இன்னும் பரீட்சைக்கு ஒரு வாரம்தான் இருக்கு. படிக்காம என்னடா இது சத்தம்? இது யார் வகுப்பு” என்றார்.

முன் பெஞ்சில் நான்தானா அமர்ந்திருக்க வேண்டும்? தலைமையாசிரியரும் என்னைத்தானா கேட்க வேண்டும்.

"திருமூர்த்தி சார் வகுப்பு சார்''

"எங்கடா அவரு?''

"லேபுக்கு போய்ட்டு வரேன்னு சொன்னார் சார்''

"போய் கூட்டிக்கிட்டு வாடா''

நான்தான் ஓடினேன். "ப்ளஸ் டூ பசங்கள் மட்டும்தான் லேபுக்குள் வரலாம்' என்பது எழுதப்படாத விதி. சாரைக் கூப்பிடுகிற அவசரத்தில் கதவை வேகமாகத் தள்ளினேன். கதவுக்கு மறுபக்கம் சட்டென திறந்துவிடாதபடி செங்கல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் நான் தள்ளிய வேகத்துக்கு அந்தச் செங்கல்லால் ஈடு கொடுக்க முடியவில்லை. சரக்கென்று திறந்து கொண்டது. லேப் யாருமில்லாமல் இருந்தது.

குடுவைகள் வைக்கப்பட்டிருந்த மேஜைக்கு மறுபக்கத்தில் இருந்து திருமூர்த்தி சார் எழுந்தார். ஆயாசமாகப் படுத்திருந்தார் போலும். என்னைப் பார்த்ததும் "எறுமைமாடே மெதுவா வரத்தெரியாது' பேண்டை சரி செய்தபடியே, அங்கே போட்டு வைத்திருந்த சட்டையை எடுத்து அவசரமாக மாட்டிக் கொண்டு, மூச்சிறைக்க ஓடிவந்தார். கொத்தாக என் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தார். அங்கிருந்த புங்க மரத்தில் இருந்து நுனிக் கிளையை உடைத்து விளாசு விளாசு என்று விளாச ஆரம்பித்தார். எதற்காக அடிக்கிறார் என்று புரியவில்லை. "சார்...சார் ஹெட் மாஸ்டர் கூப்ட்டார் சார்'' என்று அழுகையினூடே சொல்ல எத்தனித்தேன். "வாயைத் திறந்தே தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு'' என மேலும் ஒரு டஜன் அடி விழுந்தது.

வகுப்பறை வரை இழுத்துக் கொண்டே வந்தார். ஓடியாந்த வேகத்தில "பியூரெட்டை உடைச்சிட்டு இருப்பான் சார்'' திருமூர்த்தி சார் ஹெட் மாஸ்டரிடம் இப்படி சொன்னார். "சரி.. சரி கிளாஸ பாருங்க'' என்றபடி தலைமையாசிரியர் போய்விட்டார்.

"டேய் நீ கிளாஸூக்குள்ள வரக்கூடாது. ஓடிப் போடா வீட்டுக்கு ராஸ்கல்'' என்றார் திருமூர்த்தி சார்.

வகுப்பு முடிவதற்கு சற்று நேரம் முன்னதாகவே ""சார் நான் உள்ள வரலாமா?'' என்றேன்.

"உன்னத்தான் வீட்டுக்குப் போடான்னு சொன்னனே..''

"வீட்டுக்குப் போறதுக்குத்தான் சார். ... என் பை உள்ள இருக்கு சார்''

பையை எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.

அன்று பெல் அடிப்பதற்கு முன் மீனா இல்லாமலேயே கிளம்பினேன். அதன்பிறகு பள்ளிப் பக்கம் போகவில்லை.

"என்ன ஸார் இன்னுமா இங்க இருக்கீங்க?'' தலைமையாசிரியர் பின்னால் வந்து நின்று கேட்டார்.

"திடீர்னு ஸ்கூல் ஞாபகம் வந்துடுச்சு''

"யாருக்கெல்லாம் படிக்க ஆசையோ அவங்களுக்குதான் மேற்கொண்டு படிக்க முடியாம போயிடும். அம்மை போடாம இருந்தா படிச்சீருப்பீங்க'' என்றார் ஆறுதல்போல.

"ஆமா. அம்மை போட்டதுதான் தப்பா போச்சு'' பதில் பேச்சுக்காக ஏதோ சொன்னேன்.

எத்தனை முறை ஞாபகப்படுத்தும்போதும் புங்க மரத்தடியில் திருமூர்த்தி ஆசிரியர் அடித்துக் கொண்டிருந்தபோது மீனா லேபிலிருந்து வெளியே ஓடிய காட்சியை மட்டும் நினைத்துப் பார்க்கவும் மறுத்துவிடுவேன் நான்.

நன்றி - கீற்று

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ