இன்னும்
கிழக்கு வெளுக்க ஆரம்பிக்கவில்லை. அவர்கள்
இருவரும் பெருமாயி கோயில் குன்றை அடைந்தபோது
அதிகாலைப் பூசைக்கான வேளையில் ஈடுபட்டிருந்தார் பூசாரி. இருவரும் தலைவழியக்
குளித்துக் கொண்டு வந்திருந்த நடுக்கத்தில்
அதிகாலைக் கூதக்காத்தின் விசும்பல் சுழட்டியது. அவள் உடல் நடுக்கத்தையும்
மீறிய பயங்கலந்த பதட்டத்தில் இருக்க, அவனையும் பதைபதைப்பு
தொற்றிக் கொண்டிருந்தது. சுற்றிலும் சில்லாம் பூச்சிகளின் சத்தம் கரைந்து வழிய
பூசாரி அவர்களை அழைத்தார்.
பூசாரி
நீட்டிய வெங்கலத் தாம்பாளத்தில் தாங்கள் கொண்டுவந்திருந்த கோவைப்
பழங்களை பணிவுடன் வைத்தார்கள். அதைப் பெற்றுக்கொண்டு போய்
சாமியின் பீடத்தில் வைத்து மணியடிக்க ஆரம்பித்தார்
பூசாரி. வெங்கல மணியின் நாவுகள்
அவர்களது காலங்காலமான வேண்டுதலாக அசைந்தது. அவர்களது வாழ்வின் உயிர்நாதமே அதுதானென அவனும் அவளும் அந்த
நாதத்தில் கரைந்துபோய் கைகுவித்து நின்றனர். பூசை முடிந்து துளசி
தீர்த்தமும் நெற்றியில் சிவப்பும் வாங்கிக்கொண்ட பிறகு, அந்தப் படப்பை
அவர்களிடம் நீட்டினார் பூசாரி. “ரெண்டு பேரும் மனமுவந்து
பெருமாயியை வேண்டி அந்தப் படப்புக்கல்லு
மேலே கொண்டு போயி வெய்யிங்க…” இருவரும்
பயபக்தியுடன் அதைப் பெற்று கோயில்
வாசலுக்கு வெளியே இருந்த படப்புக்
கல்லின் மேல் கொண்டுபோய் வைத்தார்கள்.
கசிந்துகொண்டிருந்த
பௌர்ணமியின் பால் வெளிச்சத்தில் செக்கச்
செவேலன துடித்துக் கொண்டிருந்தன கோவைப்பழங்கள். தங்களது வாழ்வின் மூலாதாரமே
அதுதானென அத்தனை கனவுகளையும் ஒன்றாக்கி
பதட்டத்துடன் வேண்டினர். அவர்களது ஆன்மாவில் இருந்து கசியும் சுதி
படப்பின் நாலாபக்கங்ளிலும் பாய்ந்து பாய்ந்தோடியது. சற்றைக்கெல்லாம் ஆசவாசமாய் கோயில் திண்டில் வந்து
உட்கார்ந்து அடிவானத்தைப் பார்த்தார்கள். இன்னும் கருக்கல் விலகிய
பாடில்லை. அவர்களுக்குள் இருக்கும் படபடப்பு அந்த வினோதமான அய்தீகத்தில்
அலையடித்தது.
அது கிராமிய சனங்களின் அற்புதமான
அய்தீகம். அந்த ஊரில் ஆணும்
பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பினால்
(ஒரே சாதியிலும் இருக்கலாம் சாதிமத பேதமற்றும் விரும்பலாம்)
அது நல்லதா கெட்டதா, அந்த
அன்பு நீடிக்குமா நீடிக்காதா, தாங்கள் காலங்காலமாய் இதேபோல
சந்தோசமாய் இருப்போமா என்றெல்லாம் விசனப்படாமல் பெருமாயி கோயிலுக்குப் போய் படப்பு வைத்து
அருள்வாக்குக் கேட்டால் பளிச்சென்று விடிந்துவிடும்.
ஒரு பௌர்ணமியன்று கோவைப்பழங்களைப் பறித்துக்கொண்டு விடிகாலையில் பெருமாயி கோயிலுக்குப்போய் படப்பு வைக்க வேண்டும்.
விடிகாலையில் கருடன் அங்குவந்து கோவைப்
பழங்களைக் கொத்திக் கொண்டு போகும். அப்படி
நடந்தால் காதலர்கள் எவ்விதமான விசனமுமின்றி தொடர்ந்து பழகலாம். எவ்வித இடையூறுமின்றி திருமணம்,
நல்வாழ்க்கையென சிறப்படைவர். கருடன் பழங்களைக் கொத்தாமல்
வெறுமனே வட்டமடித்துவிட்டுப் போய்விட்டால் இருவரும் தத்தமது வழியில் பிரிந்து
போய்விடவேண்டும். அதை மீறி ஒன்று
சேர்ந்து வாழ முயற்சித்தால் வாழ்க்கை
சிதைந்து சின்னபின்னமாகிப்போகும். இருவரில் ஒருவரை காவு வாங்கிப்போடும்.
இந்த அய்தீகத்தின் சுருக்குக்கயிறு அந்த ஊரை மட்டுமல்லாது
சுற்றிலுமுள்ள ஊர்களையும் கண்ணிக்குள் வைத்திருக்கிற அதிசயத்தில் ஊர் சனங்களும் இணங்கிப்போகும்
அபூர்வ நிகழ்வுதான் பெருமாயி. பூசாரி வேலையை முடித்துவிட்டு
வெளியேவந்து வெளுத்துக்கொண்டிருக்கும் வானத்தை நோட்டம் பார்த்துவிட்டு
அவர்களுடன் வந்து உட்கார்ந்தார். அவர்
மேலிருந்து அடித்த துளசி வாசம்
குளிரில் விரைத்தது.
“ஏம்பூசாரி
எல்லா நாளும் கெருடன் வருமா..?”
என்று பேச்சுக் கொடுத்தான் அந்த இளைஞன்.
அவர் மெல்ல தலையை அசைத்தவாறு
பேச ஆரம்பித்தார்.
“பௌர்ணமியன்னிக்குத்தான்
வரும். அப்பத்தா பூசையும் நடக்கும். அந்தன்னிக்கு அருள்வாக்கு கேக்கறவங்க படப்பு வெப்பாங்க…”
“இந்த
அருள்வாக்கு காதலர்களுக்கு மட்டுந்தானா?”
“கல்யாணம்
செஞ்சி வாழ்க்கை நடத்தலாம்னு இருக்கற எல்லாருக்கும் பொதுவானதுதான்
இந்த முறையீடு… அப்படியிருக்கறவங்க இதுலவந்து கலந்துக்குவாங்க…பெருமாயோட
குறிப்பைத் தெரிஞ்சுட்டு அதன் பிரகாரம் நடப்பாங்க… தன்னோட
ஞானக்கண்ணுல பாத்து எல்லாத்துக்கும் தீர்வு
சொல்வா பெருமாயி…”
அந்த இளைஞன் ஒரு நீண்ட
பெருமூச்சுடன் இருப்புக் கொள்ளாமல் தவித்தான். அந்தப்பெண் அமைதியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கட்டாயம்
வருமா?”
பூசாரி
அவனை உறுத்துப் பார்த்தார். “ஒவ்வொரு பௌர்ணமியன்னிக்கும் எனக்குத்
தெரிஞ்சு வந்திட்டுத்தா இருக்கு… ஒரு மொறையும் தவறுனதில்லே…”
அவன் எழுந்து வெளியே போய்
நின்று கீழ் வானத்தைப் பார்த்தான்.
கருக்கல் கலைந்து கொண்டிருந்தது.
******************
கட்டாரி
பூட்டிக்கிட்டு – வலக்
கங்கணமும்
மாட்டிக்கிட்டு
வாராங்க
பட்டக்காரர்
வணங்குங்க… வணங்குங்கய்யா…
சோபனம்
பாடும் பெண்களின் பாட்டுச்சத்தம் அந்த ஊர்கோலத்தின் முன்வரிசையில்
பெருங்குரலெடுத்து ஒலிக்க, உறுமியின் கைவரிச்சல்
அதை மேலும் சுதியேற்ற, தாரை
தப்பட்டைகள் கட்டியங்கூறும் அடவில் கொட்டு முழக்கம்
போட்டன. பூந்துறை நாட்டு சனங்கள் கொண்டாட்டமாய்
நடந்தார்கள். சங்கு சேகண்டியின் கெம்பீரமான
முழக்கத்தில் கூட்டத்தின் நடுவாந்திரமாக பூந்துறை நாட்டுப் பட்டக்காரர் சுரட்டையன் கட்டாரியைக் கையில் ஏந்தியபடி வந்து
கொணடிருந்தார். சுங்கு விட்டுக் கட்டியிருந்த
அவரது தலை உருமாலில் சூரியப்பிரவை
மின்னுகிறது. நரைத்த மீசையின் விரைப்பில்
பூந்துறை நாட்டின் வீரமும் அதிகாரமும் பொங்கிக்கொண்டிருக்க,
வலங்காரக் கங்கணம் வாட்டமாய் சொலித்தது.
அவருக்குப் பின்னால் கொற்றக்குடை பிடித்துவரும் முப்பாடுக்காரன். பட்டக்காரரைச் சுற்றிலும் பூந்துறை நாட்டின் காணியாளகாரர்கள் சேவகம் செய்துகொண்டுவர அந்த
‘கட்டாரிவலம்’ ஆரம்பமாயிற்று.
‘கட்டாரிப்
பொங்கல்’
பூந்துறை நாட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்
திருவிழா. மேல்கரைப் பூந்துறை, கீழ்கரைப்பூந்துறை, அதன் இணைநாடுகளான பருத்திப்பள்ளி,
ஏழூர் நாடுகளின் பரந்தபூமி பூந்துறை நாடு. இதன் ஒவ்வொரு
இணைநாட்டிலும் முப்பத்திரண்டு ஊர்கள் அடங்கிய வளமான
வெள்ளாமை நிலத்தையும் அதன் சீர்சிறப்புகளையும் ஞாய
நடவடிக்கைகளையும் பூந்துறை பட்டக்காரரின் கட்டாரி அரசாண்டு கொண்டிருக்கிறது.
அஞ்சி வருசத்துக்கொருமுறை நடக்கும் இந்தக் கொண்டாட்டத்தில் வீரத்தின்
வெஞ்சினம் வீறு கொண்டெழும்பும். பூந்துறையான்
கோயிலிலிருந்து கட்டாரியை ஏந்திக்கொண்டு புறப்படும் பட்டக்காரரிடம் ஊர்சனங்கள் பணிந்து கட்டாரியை வாங்கிக்
கொண்டுபோய் மனையில் வைத்து சாமிகும்பிட்டு
விட்டு பட்டக்காரரிடம் கட்டாரியை திருப்பித் தந்துவிடவேண்டும். கட்டாரி வீட்டுக்குள் வந்து
சென்றால் சீரும் சிறப்பும் செல்வவளமும்
பெருகும் என்பது சாங்கியம். கட்டாரியை
வாங்கிப் போனவர் திருப்பித் தரவில்லையெனில்
பட்டக்காரரிடம் குத்துவாள் சண்டையில் இறங்கவேண்டும். இறுதியில் யார் ஜெயிக்கிறாரோ அவரே
பூந்துறை நாட்டின் பட்டக்காரர்.
இதில் கலந்து கொள்ளும் உரிமை
வலங்காரச் சாதியினருக்குத்தான் உண்டு. இடங்காரச் சாதியினருக்கு
இல்லை. அதிலும் பறையடிப்பவர்களும் பஞ்சமர்களும்
தூரவிலகிப் போய்விட வேண்டும். பூந்துறை
நாட்டுக்குக் கட்டுப்பட்ட நூற்றி இருபத்தியெட்டு ஊர்களையும்
சுற்றிவந்து பூந்துறையான் கோயிலில் கட்டாரியை இறக்கி வைக்க வேண்டும்.
ஊர்க் காணியாளகாரர்கள் பட்டககாரருக்கு வண்ணச்சாந்து பூசிக் கொண்டாடுவார்கள். பெண்கள்
அலரி எழுப்பிக்கொண்டு பொங்கல் வைப்பார்கள். அப்பொழுது
குத்துவாள் சண்டையில் தோற்றுப் போனவரின் ஆடு பலி போடப்படும்.
அதன் குருதியை நெற்றியில் இடும் பட்டக்காரரின் வீரமும்
அதிகாரமும் கொங்குமண்டலம் முழுக்க எதிரொலிக்கும்.
அவ்வளவு
வல்லமைபெற்ற கட்டாரிப் பொங்கலின் ஊர்கோலம் நடந்து கொண்டிருந்தது. கட்டாரியின்
மகிமையையும், வீரதீரத்தையும், அறச்செயல்பாட்டின் நற்கூறுகளையும் பாடிச் செல்கின்றனர் பெண்கள்.
சோபனத்தின் சுதிக்கேற்ப கொட்டுகள் மாறி விழுகின்றன. நாட்டு
சனங்கள் பணிந்து மண்டியிடும் பாங்கில்
கட்டாரி மறைகிறது. சடங்குகள் மறைகின்றன. அறமும், நெறியும், இறையாண்மையும்
மறைந்தே போகின்றன. அதிகார போதை எழுகிறது,
ஆதிக்கத்தின் தாகம் எழுகிறது. அரசபீடமும்
அதுதரும் அளப்பரிய வாழ்வியற் கூறுகளும் ஆட்டம் போடுகின்றன.
கட்டாரிவலம்
மேல்கரைநாட்டைத் தாண்டி கீழ்க்கரையில் இறங்கியதும்,
கெச்சங்கள் குலுங்க வெரசலாக நடந்த
பட்டக்காரரின் கால்கள் பதட்டமேறின. கட்டாரி
வலத்தை வழிமறிப்பவர்கள் அநேகமாக கீழ்க்கரை நாட்டுக்காரர்கள்தான்.
அந்த மண்ணில் கால்பட்ட உடனே
சோபனப் பெண்களின் சுதி ஏறி ஒலிக்கிறது.
வீராதி
வீரனல்லா
வுளுந்தல்லோ
கும்புடுங்கோ
வீரமான
ஆம்பளைன்னா
வீரத்தைக்
காட்டனும்னா
கட்டாரியைப்
புடுங்குங்கய்யா…
கைவாளைச்
சொழட்டுங்கய்யா…
உறுமியின்
கைவரிச்சல் சிறுத்தைப் புலியென உறுமுகிறது. பறைக்
கொட்டுகளின் தாளகதி இளைஞர்களின் தோள்களைத்
திணவு கொள்கின்றன. சங்க நாதத்தின் முழக்கம்
உடலெங்கும் வீரியத்தை உசுப்புகிறது.
அவருக்கு
கீழ்க்கரை நாட்டை நினைத்தாலே அச்சம்
சாரக்காத்து போல விசும்பும். காரணம்
அந்த நாட்டு மண். சுற்றிலுமுள்ள
மலைச்சரிவுகளிலும், அடிவாரங்களிலும்தான் வெள்ளாமைக் காடுகள் இருக்கின்றன. கரிசலும்
செம்மண்ணும் கலந்த இந்தப் பூமியில்,
வருசத்துக்கு இருபத்தி அய்ந்திலிருந்து முப்பது அங்குலம் வரைதான்
மழை பேய்கிறது. மற்ற நாடுகளைப் போல
செழிப்பானதாயில்லாமல் முதுகெலும்பு ஒடிய பாடுபட்டால்தான் வயிறு
நிரம்பும் நிலைமை. அத்தகைய அமைப்பு
வாய்த்திருப்பதால் சனங்கள் இயற்கையாகவே நல்ல
பாட்டாளிகள். சேகுபாய்ந்த உடம்புடனும், வல்லமையான நெஞ்சுத் திடத்துடனும், காட்டு மிருகங்களை எதிர்க்கும்
தீரத்துடனும் கரணை கரணையாக உருண்டு
திரண்டிருந்தார்கள். இயல்பாகவே வீரத் தழும்புகளைப் பெறுவதில்
துடிப்பாக இருக்கும் அவர்களை, தன்னைப் பிடிக்காத கீழ்க்கரைக்
காணியாளகாரர்கள் கொம்பு சீவி விடுவார்கள்.
ஒருநீண்ட பெருமுச்சு அவரிடமிருந்து கிளம்பியது.
அதுபோன்ற
துடிப்பான இளைஞர்களை வேவுபார்த்து வைத்திருந்தான் ஏழூரான். கட்டாரி வலம் வரும்
சமயத்தில் அவர்களுக்கு பனங்கள்ளைப் பதமாக ஊற்றித் தந்து
குடைசாய்த்து விடும் காரியத்தை கச்சிதமாக
முடித்திருப்பான் அவன். பல்வேறு விதமான
எண்ண ஓட்டங்களில் சிக்கிக் கொண்டு காலெட்டிப் போட்டார்
பட்டக்காரர். ஆயிற்று. கீழ்க்கரை முடிந்து பருத்திப்பள்ளி நாட்டையும் தாண்டி ஏழூர் நாட்டை
வலம் வந்து கொண்டிருந்தார்கள். கடந்த
நாலுமுறையும் யாரும் வலம் மறிக்கவில்லை.
இந்த முறையும் மறிக்க வில்லையெனில் சுரட்டையன்
மும்முடிப் பட்டக்காரராக மாறிப் போவார். மும்முடிப்பட்டம்
என்பது பூந்துறை வரலாற்றில் இதுவரை யாரும் பெற்றிராத
பராக்கிரமம். அவரது வீரமும் கீர்த்தியும்
புகழும் கொங்குமண்டலம் முழுக்க அலையடிக்கும்.
அவரது கால்களின் கெச்சங்கள் குதியாளம் போட்டுக்கொண்டு நடக்க, ஊர்ச்சனங்கள் கொண்டாட்டமாய்
ஆடிக்கொண்டும், பெண்கள் சோபனத்தின் இறுதிப்
படலத்தை பாடிக்கொண்டும், கொட்டுமுழக்குகள் உற்சாக கதியில் முழங்கிக்
கொண்டும், செம்மண் புழுதி எழுப்பி
நடந்தபோதுதான் அது நிகழ்ந்தது.
கட்டாரியை
வீட்டுக்குள் வாங்கிப்போன சேனையன் வெறுங்கையுடன் திரும்பிவந்து
சுரட்டையனைப் பார்த்து புன்னகைத்தான். சனங்கள் நிலைகுலைந்து போயினர்.
சற்றைக்கெல்லாம் அலையலையாய்ப் பரவிய சேதியால் கூட்டம்
ஆரவாரத்துடன் நிரம்பியது. சுரட்டையனின் உடல் முழுக்க ஏறியிருந்த
உற்சாக போதை நொடியில் சுருங்க,
ஆவேசத்தின் உச்சகதி தலையில் வீங்கியது.
சற்றைக்கெல்லாம்
காணியாளகாரர்கள் யுத்தத்துக்கான இடத்தை ஒழுங்கு செய்துகொடுக்க,
சுரட்டையனின் நரையேறிய மீசை துடிக்க, கச்சை
வரிந்து கட்டி மைதானத்தில் இறங்கினார்.
கறுத்துத் திரண்ட புசங்கள் இறுகித்
தெறிக்க அலட்டலில்லாமல் மைதானத்தில் இறங்கிய சேனையன் மீது
குமிந்திருந்த கூட்டத்தினர் வசமாயினர். அவனது ரோமக்கால் புடைத்த
மார்புகளில் முயங்கினர் பெண்கள்.
ஏழூரான்
இரண்டு குறுவாள்களைக் கொண்டுவந்து இருவரிடமும் கொடுத்தான். சோபனப் பெண்கள் மறந்தே
போய்விட்ட, அத்தருணத்தில் பாடவேண்டிய பாட்டு வரிகளை யோசிக்க,
வயதான பெண்கள் எடுத்துக் கொடுக்க
பாட்டின் ஆவேசம் அலையடித்தது.
டன்டனக்கு
டன்டனக்கு டன்டனக்கு டன்டன்
வந்திருச்சி
வீர… பூந்தொறையின் சூர…
வீரந்தா
ஆளவேணும் – வெற்றி
மாலைதான்
சூடவேணும்
கோழைதான்
வீழ வேணும் -அவங்
குருதிதான்
ஓடவேணும்
ஓ….ஓ….ஓ…கிலுலுலுலூல்லூலூ…
குலவையடித்ததும்
சங்கம் முழங்கியது. தாரைதப்பட்டைகளுக்கு மருள் ஏறி அடிக்க
ஆரம்பித்தன. உறுமி பிடரி சிலிர்க்கும்
சண்டைக் கோழிகளின் கெண்டை மடிப்புகளில் வரிச்சியது.
குதிதாளமும், அடிதாளமும், புடிதாளமும் அவர்களது உடம்பில் மாறி மாறி விழுந்தன.
வேங்கைகளாக மாற்றி விடும் பெருவித்தையை
நிகழ்த்திக் கொண்டிருந்தது தாளகதி. குறுங்கத்தியின் வீச்சில்
கிழிபட்டுக் கொண்டிருந்தது வீரம்.
ஆரம்பத்திலிருந்தே
போரின் திசை மாறிக் கொண்டிருந்தது.
இளைஞனான சேனையனின் புசவலிமையை வெள்ளிடைமலையென உணர்ந்தார் நரையேறிய சுரட்டையன். பூந்துறைப்பட்டத்தின் அதிகார ஆளுகை கண்சிமிட்டிச்
சிரித்தது. போரின் உக்கிரத்தில் தனது
வல்லமையடர்ந்த கைகள் தாழ்ந்து வருவதை
உணர்ந்து மேலும் ஆவேசத்துடன் ஓடியாடினார்.
சேனையனின் அலட்டலில்லாத வீச்சில் சனங்களின் மனசு ஆரவாரிப்பதை அவரால்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சுதாரித்துக்
கொண்டவராய், சட்டென நிகழ்ந்த போரின்
சிறுமாற்றத்தில் அந்த இளைஞனின் குறுவாளைத்
தட்டினார். அது ஒரு யுத்த
தந்திரத் தட்டு.
கண்ணிமைக்கும்பொழுதில்
சேனையனின் கைவாள் மளுக்கென்று முறிந்து
வீழ, கொல்லன் கத்திக்குள் தந்திரமாய்
ஊதிச்செய்திருந்த காற்றுத்தேரை சிதறித்தெறித்தது. அவன் திகைத்துத் தடுமாற,
சடுதியில் சுரட்டையன் குறுவாளை அவனது தொண்டைக்குழிக்கு வீச,
அவன் சுதாரித்து விலக, கைக்கெண்டையில் பாய்ந்து
குருதி கிழித்தது குறுவாள். தடுமாறிக் கீழே விழுந்தவன் மீது
வெறியோடு பாய்ந்தார் சுரட்டையன்.
அந்தப்பொழுதே,
காணியாளகாரர்கள் பாய்ந்து அவரைப்பிடித்துக்கொள்ள அவர் ஆவேசத்தில் துள்ள,
கூட்டம் களேபரமடைந்து அங்குமிங்கும் ஓடித் திரிய, மெல்லமெல்ல
அந்த இடம் சாந்தமடைந்தது.
ஏழூர்க்காணியாளகாரர்
அவருக்குப் பனம் பூ மாலையை
சூட்ட, சனங்கள் பெருங்குரலெடுத்து ஆரவாரம்
செய்தனர். சோபனப் பெண்கள் சந்தோஷம்
பொங்க குலவை போட்டனர். அந்த
இடமே உற்சாகம் குமிழியிட்டோடியது. ஒற்றைப் பேரொளியாய் நீண்ட
குரலெடுத்து கம்பீரமாய் முழங்கியது சங்கம்.
*************
செம்போத்துப்
பறவையின் தாபம் காற்றில் மிதந்துவந்து
மரக்கிளையில் மோதியது. ஊரைச்சுற்றி சகடமாய்க் கப்பியிருந்த மலைச் சோங்கின் பசிய
மடிப்பில் பெருமாயிக்காகக் காத்திருந்தான் தவசி. சாயங்காலக் காற்றில்
அசைந்து கொடுத்த கொலுமிச்ச மரத்தின்
இலையைப் பறித்து வாயில் நிரடுகையில்,
கசியும் மெல்லிய துவர்ப்பு, அவனது
உடலெங்கும் கிளர்ந்து நரம்புகளை முறுக்கேற்றுகிறது. மஞ்சள் குழைந்த அதன்
இலைகள் இணைந்து இணைந்து கீழே
விழுகையில் ஏற்படும் ஆனந்தத்திற்கும், பட்டாம்பூச்சிகளாய் ஒன்றையொன்று துரத்திக் களிக்கும் அடவுகளுக்கும் இடையில் ஏற்படும் கிளர்த்தலில்
நிரம்பி வழிந்தான். துவானமாய் வீழும் மழைத் துளிகளாகவும்,
ரெக்கை விரித்து வெளியேகும் சிறகுகளாகவும் மாற்றுகிறபொழுது கிறங்கிக் கொண்டிருந்தது. சற்றைக்கெல்லாம் பாதையெங்கும் படிந்திருந்த இலைகளில் காலடிகள் சப்திக்கும் சலசலப்பு, உடலெங்கும் கூடி வேட்கையாய்ப் பொழிந்தது.
“ரொம்பப்
பொழுது காக்க வெச்சுட்டனா?” என்றபடி
அவனது கைகளைப்பற்றினாள் பெருமாயி. உள்ளங்கையின் வெதுவெதுப்பு தேகமெங்கும் வெப்பமூட்ட இருவரும் உட்கார்ந்தார்கள். அவளது மடியில் தலைவைத்துப்
புதைந்தான் தவசி. மருக்கொழுந்து வாசத்தில்
சுழட்டியடித்தது காத்து. இருவரும் வெகு
நேரம் வரை மௌனமாயிருந்ததைக் கலைத்தன
தத்தித்தத்தி அவர்களைச் சுற்றி வந்த இரு
சிட்டுக் குருவிகள்.
“இன்னும்
எத்தனை பொழுதுக்குத்தா இப்படியே மறைவாவே பாத்துக்கறது?” என்று
அவனது நீண்ட சிகையைக் கோதிவிட்டாள்
அவள். எதுவும் பேசாது அவள்
கண்களையே உறுத்துப் பார்த்தவன், புன்னகையுடன்
“எல்லாத்துக்கும்
ஒருவிடிவு பொறக்கும்…” என்றான். அவள் கண்கள் விரக்தியுடன்
நெளிந்தன.
“நாமலும்
கலியாணம் கட்டிட்டு எல்லாரையும் போல வாழமுடியுமா?” என்ற
அவள் குரலின் ஆதங்கத்தில், ஒரு
நீண்ட பெருமூச்சை பதிலாகத் தந்தான் அவன். சட்டென
ஞாபகம் வந்தவனாய் எழுந்து பக்கத்திலிருந்த தன்
உருமாலைத் துண்டின் முடிச்சை அவிழ்த்தான். செவ்வரியோடிய கோவைப்பழங்கள் கண்சிமிட்டின.
பெருமாயிக்கு
மிகவும் பிடித்த பழங்கள். அவளதுமுகமெங்கும்
ஆனந்தம் கொப்புளிக்க ஆசைப்பாடுடன் அள்ளிக் கொண்டாள். நெறந்திருக்கும்
கோவைப்பழத்தின் ருசி அவளது செவ்வாயில்
இறங்குவதையும், ஒரு கிளியின் லாவகத்துடன்
அதைப்பற்றித் தின்னும் அழகிலும் சொக்கிப்போய் நின்றான்.
அந்த நிலப்பகுதி முழுமைக்கும் அந்தந்தப் பருவத்தில் மழைமாரிபெய்து தங்களது வாழ்நிலை சீரும்
சிறப்புமாக இருக்க வேண்டி அறுவடைக்
காலங்களில் ‘தவசிப்பண்டிகை’
கொண்டாடுவார்கள் சனங்கள். இதில் முக்கியத்துவம் பெறுவது
பதிமூனு நாள் நடக்கும் தவசிக்
கூத்துதான். காங்காலமாய் அர்ச்சுனன் தவசியாக அவன் கூத்தாடுவதால்
தனது பெற்றோரிட்ட பெயர் மறைந்து ‘தவசி’ என்ற பெயரே நிலைத்துப்போய் விட்ட
அழகில் சொக்கி நிற்கிறது கூத்துக்கலை.
அர்ச்சுனன் தவசி வேசங்கட்டுவது லேசுப்பட்ட
காரியமல்ல.
அர்ச்சுனன்
தன் எதிரிகளை வெற்றி கொள்ளவும், வாழ்க்கையை
சிறப்பாக அமைக்கவும் வேண்டி ‘தபசு’ இருக்க வனத்திற்குப் போகிறான்.
அங்குள்ள ஒரு பனைமரத்தின் மீதேறி
மூன்று பௌர்ணமிகள் கடுந்தபசு இருக்கிறான். அவனது தவவலிமையைக் கண்டு
மெச்சிய சிவபெருமாள் அவனுக்கு வரம் கொடுக்கிறார்.
இந்த நிகழ்வை கூத்தில் பதிமூனு
நாள்களாக நடத்துகிறார்கள். ஒவ்வொரு நாள் இரவும்
நடைபெறும் இக்கூத்தாட்டத்தில், தவசி வேசங்கட்டுபவன் பத்துநாள்
பூமியில் கூத்தாடுவான். பதினோறாவது நாள் இரவு தவசிமரமேறி
விட்டால், தொடர்ந்து மூனு நாள் மரத்தை
விட்டு இறங்காது, அன்னஆகாரமின்றி ஆடவேண்டும். கூத்து நடக்காத பகல்
பொழுதில், ஓலைக்கருக்குகளிலேயே சாய்ந்து படுத்துக் கொள்வான். பதிமூனாவது பொழுதின் நிறைந்த பௌர்ணமி மங்கும்
அடுத்த நாள் விடிகாலையில், சிவபெருமாளாகப்பட்டவர்
ஒரு கருடப் பறவையாக மாறி
பறந்துவந்து பனைமரத்தின் மீது நின்று ஆடும்
தவசியை மூன்று முறை வலம்
வந்து வரங்கொடுத்துப் போகும் அற்புதம் நடந்தேகும்.
இந்த வரம் கொடுக்கும் சடங்குதான்
பிரசித்தி பெற்றது. இறைமையும், கலைமையும், வாழ்வியலும் இணைந்து கூடும் அபூர்வத்தில்
தவசிக்கு வரங்கொடுக்கும்போது, அந்த நாட்டு மக்களுக்கே
வரங்கொடுக்கிறாற் போல சனங்கள் எல்லோரும்
எழுந்து நின்று கைகுவித்து குலவையடிப்பார்கள்.
அதன்பின்
தவசி பனைமரத்தை விட்டுக் கீழிறங்கலாம். சனங்களின் குதியாட்டம் அலையடிக்கும். கூத்தும் சிறப்பாக முடிவடையும். ஆனால் கருடப்பட்சி வராதபட்சத்தில்,
தவசி மரத்தை விட்டுக் கீழிறங்கக்
கூடாது. பொழுதானாலும் பெருமாளை வேண்டிக் கொண்டு மரத்திலேயே தபசிருக்க
வேண்டும். கூத்தைப் பார்க்க வந்த சனங்களும்
எழுந்து போகக் கூடாது. அந்தப்பொழுது
இறங்குவதற்குள் பறவை வரவேயில்லை என்றால்,
தெய்வக்குத்தம் செய்தவனென தவசியை கறையேத்துவார்கள். தெய்வ
நியமங்கள் தவறியவனாகிப் போன தவசி, அந்த
மரத்திலிருந்து கீழே குதித்து இறந்துபோய்விடவேண்டும்.
ஆனால் ஒருபொழுதும் கருடன் வரத்தவறியதேயில்லை.
இவ்வளவு
சவால்களையும் ஏற்றுக்கொள்ள வலங்காரங்களோ, இடங்காரங்களோ முன்வரவில்லை. இந்தத் தவசியின் பஞ்சம
உடல்தான் நெஞ்சுக் கூட்டை நிமிர்த்தியது. ஒதுக்கப்பட்ட
அவனது உடலின் பஞ்சமவாசம், சத்திரிய
அடவுகளாய் உருமாற்றம் பெறும்போது, வர்ணங்களற்ற வலிய உடலின் ஆதி
அழகாய் வீறு கொண்டெழுந்தது. மிருதங்கக்காரனின்
கைவன்மைக்கேற்ப, குதிகாலைப் பூமியில் தட்டி கெச்சத்தைப் பேச
வைக்கிற அடவுகளில் பெண்டுகள் அவன்மீது பித்தமேறினார்கள். தனது உடலையே காண்டீபமாய்
வளைத்து திரிபன்றியாய்ச் சுழலும் சனங்களின் உள்ளங்களை
வீழ்த்திய மகாகலைஞனாக மாறிப் போனான் தவசி.
அவன் ஆட்டத்திற்கு முன் அந்த அர்ச்சுனனே
வந்து ஆடினாலும் தோற்றுப்போவான் என்று சனங்களின் வாக்கை
வாங்கியவன்தான் அந்தத் தவசி.
பெருமாயி,
சர்வ வல்லமை பொருந்திய பூந்துறைப்
பட்டக்காரர் சுரட்டையனின் ஒரே குலமகள். தன்முகத்தை
சீலை முந்தியில் துடைத்து விட்டுக் கொண்டே அவனை ஏறிட்டுப்பார்த்தாள்.
கோவைப்பழத்தின் இனிமையை அனுபவிக்கும் தருணத்தை
அவள் ஏற்கனவே மறந்து போயிருந்தது
அவளது கண்களின் கலக்கத்தில் தெரிந்தது. “நாம ஒண்ணு சேந்து
வாழ்றதுக்கு இந்தநாடு உடுமா?” என்றாள். இருவருடைய
முகங்களும் சாரமிழந்து போயின.
வெகுபொழுது
பேசாமல் மரங்களின் அசையோட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். எங்கிருந்தோ ஒரு குயில் கானக்குரலெடுத்துக்
கூவிய வேளை. இதமான நெகிழ்ச்சியில்
அவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய்
அவளது கைகளை எட்டிப் பிடித்தான்.
எதிர்வரும் தவசிப்பண்டிகை அவனது கண்களில் அலையாடியது.
“இந்தக் கூத்து முடிஞ்ச மக்கா
நாளே நாம வேற ஒரு
நாட்டுக்குப் போயி கலியாணங் கட்டிட்டுப்
பொழைக்கலாம்…” அவனது
இறுகப் பற்றிய கைகளில் படிந்திருந்த
உறுதி மெல்ல மெல்ல அவளது
உடலெங்கும் எகிற ஆரம்பித்தது.
********
“வேண்டாம்
மகளே… இது எந்தக் காலத்துக்கும்
நடக்காது…
அவனை மறந்திடு…” சுரட்டைப் பட்டக்காரர் கோபத்தில் குமுறிக் கொண்டிருந்தார். பூந்துறைப் பட்டக் குலக் கொடியின்
வமிசாவளியில் இப்படியொரு களங்கம் படர்வதை நினைத்துக்
கூடப் பார்க்க முடியவில்லை அவரால்.
பெருமாயி பதிலேதும் பேசாமல் தன் கால்
நகங்களில் தவசி பூசிவிட்ட செம்பஞ்சுக்
குழம்பின் வர்ணத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சுரட்டையனின் கண் ரெப்பைகளினடியில் உறைந்திருந்த
கவண்வில் சுழல்கையில் அந்த நிலப்பகுதியின் நூற்றி
இருபத்தியெட்டு ஊர்களுக்குமான குலத் தலைவராகப் போற்றப்படும்
அவரது வல்லமையடர்ந்த கைகள் இறுகின. தனது
தலைக்கட்டான சல்லியனிலிருந்து தொடரும் இந்தப் பட்டத்தின்
குல கண்ணியம் கண்சிமிட்டிச் சிரித்தது.
அந்தக்
குலக் கொடியின் கீழ் வந்த வமிசாவளியில்
இப்படியொரு களங்கம் படர்வதைப் பொறுக்கமுடியாது.
வீட்டுச் சுவற்றில் மாட்டி வைத்திருந்த விலங்குத்
தலைகளின் கீர்த்தி அவரது மீசை நுனியில்
ரத்தம் சூடேறித்துடிக்க வைத்தது. திரிபன்றியடிப்பதில் பிரசித்தி பெற்ற கைகளால் தனது
குலக் கொழுந்தின் கன்னத்தை நிமிண்டினார்.
“வேண்டாம்
தங்கமே… அவனை மறந்துவிடு…”
காதலின்
வீரியத்தை வீறு கொண்டெழுப்பும் மிருதங்கத்தின்
அடியில் எல்லாமே நொறுங்குபடுகின்றன.
*******************
தவசிக்
கூத்துக்கு பொழுது குறித்து விட்டார்கள்.
இன்றிலிருந்து ஒரு மண்டலகாலம் விரதமிருந்து
தவசிமரமேற வேண்டும், வரம் வாங்கவேண்டும், நாடு
சிறப்படைய வேண்டும். இன்றைக்கு அமாவாசை. நாட்டு சனங்கள் எல்லாரும்
சிவன் கோயிலில் ஒன்று கூடி பூசை
செய்து, வழிபட்டு, தவசிக்கு உரு ஏற்றுவார்கள். அவன்
தவசியாக மாறமாற சனங்களின் குலவையொலி
நூற்றி இருபத்தியெட்டு ஊர்களிலிருந்தும் வானேகும். அந்த நிலையில் பூந்துறைப்
பட்டக்காரர் தவசிக்குக் காப்பு கட்டுவார். கோயிலுக்கு
எதிரில் உள்ள பரந்த வெளியில்
முளைத்திருக்கும் ஒற்றைப் பனைமரத்திற்கும் காப்புக்கட்ட
வேண்டும். கோயிலின் வாசலிலிருந்து பனைமரம் வரை விரிக்கும்
நிலப் பாவாடைகளின் மீது நடந்து சென்று
பூலாப்பூ வைத்து பூசை செய்து
காப்புக் கட்டி வருவார் பட்டக்காரர்.
அந்த வெட்டவெளியில் கூத்துப் பார்க்கும் சனங்கள் உட்காரும் இடத்தில்,
மாட்டுச் சாணத்தால் மெழுகி சுற்றிலும் சச்சதுரமாக
வைக்கோற்புரியால் வளையம் கட்டுவார்கள். தீட்டான
பெண்கள் தனியாய் உட்கார்ந்து பார்க்க
அதில் ஒருசிறு இடம் பிரித்து
அடுப்புச் சாம்பலால் கோடு கிழித்திருப்பார்கள். கூத்து நடக்கும்
திட்டின் ஓரத்தில் பச்சைக் கம்மந்தட்டுகளால் பெரியகுச்சு
ஒன்று வேயப்பட்டிருக்கும். காப்புக் கட்டியபின், தவசி நிலப்பாவாடையில் நடந்து
குச்சுக்குச் சென்று விரதம் பிடிக்க
வேண்டும். தெய்வீக நியமங்கள் ஏந்தி
நேமநிட்டைகள் தவறாது காத்து வர
வேண்டும்.
எதிர்வரும்
அடுத்த அமாவாசையன்று மறுபடியும் சிவன் கோயிலில் பூசை
நடக்கும். கூத்தாடிகளும், கதைபாடும் சூதர்களும் வாத்தியக்காரர்களும் இப்பொழுது சாதி வழக்காரங்களற்ற ஒரே
வர்ணத்தில் சொலிப்பார்கள். அவர்களுக்கு சாமி வரவழைக்கப் பட்டு
காப்புக் கட்டுவார்கள். அதன்பிறகு நிலப்பாவாடை விரிக்கப்பட்டுவிடும். கூத்தர்கள் அதில் நடந்துபோய் கூத்துத்
திட்டை அடைந்து கம்பங்குச்சில் இறங்கிக்
கொள்வார்கள். அடுத்தபொழுது வெறுமானம். அதற்கடுத்த பொழுதிலிருந்து துவங்கும் பதிமூனுநாள் கூத்து முடிந்தபிறகுதான், அவர்கள்
தெரு மண்ணில் கால்வைக்க வேண்டும்.
கூத்து
சிறப்பாக முடிந்தபிறகு, கம்பத்துக்குக் கட்டப்பட்ட காப்பும், கூத்தர்களின் காப்பும் அவிழ்த்து, பூலாப்பூ, மஞ்சள், ஒன்பது தானியங்களுடன்
சேர்த்து ஆற்றில் விடப்படும்போது ‘தவசிப்பண்டிகை’ நீரின்
அலை மேடுகளில் குதியாட்டம் போட்டுக் கொண்டு விடைபெறும்.
மணியின்
வெண்கல நாவுகள் அசைந்து முழங்கின.
தவசியின் கால்களில் விறுவிறென்று ஏறியடித்தது மருள். அவன் மனசெங்கும்
அப்பியிருந்த பெருமாயியின் முகம் மங்கிக் கொண்டே
போக, அவனுக்குள் தவசி உருவேறியது. சனங்கள்
குலவையடிக்க அவனது காலடியில் நிலம்
அதிர்ந்து கொடுத்தது. கோயில் பூசகர் ஓயாமல்
மணியை முழக்கிக் கொண்டேயிருந்தார். தவசி நிலை கொள்ளாமல்
அந்தரவெளியில் அதிர்ந்தான்.
எதிரில்
நின்றிருந்தார் பூந்துறைப் பட்டக்காரர் சுரட்டையன். அவரது ஒவ்வொரு மயிர்க்காலிலும்
பெருஞ்சீற்றம் வெடித்து அந்தப்பொழுதே தவசியைக் கொல்ல வேண்டுமென நெருப்புக்
கங்குகள் சிதறின. ஆக்ரோசத்தின் ஊற்றுக்
கண்களில் கிர்ரென்று மண்டை சுழட்டியடித்தது.
அவருக்கு
முன் காப்புத்தட்டை பூசகர் நீட்டியதும், ஒருநிலைக்குவந்தார்.
கொந்தளித்த கோபத்தை கட்டுப்படுத்தி அடக்கிக்கொண்டார்.
எலும்புக் குருத்தின் ஊண்வரை அவருக்குள் சுருண்டு
கொண்டிருந்தது ஒரு மகத்தான திட்டம்.
‘ஆஹா… ஒழிந்தாயடா ஒழிந்தாய்…’ நெருப்புக் குண்டமாய் அவருக்குள் வெடித்தன சொற்கள். காப்புக்கயிறை எடுத்து தவசியின் கையில்
கட்டி இறுக்கினார். அதற்குள் தவசிமரம் இருந்த திக்கில் நடைமாத்துகளை
விரிக்கத் தொடங்கியிருந்தான் வண்ணான்.
******************
அது ஒரு காலத்தின் அழைப்பாகக்
கருக்கொண்டிருந்தது. மிருதங்கத்தின் லாவகமான வீச்சு சப்த
சுரங்களைத் திக்குகளெங்கும் உருட்டிவிட இசைலயத்தோடு பிளறியெழுந்தது பறை. தோற்கருவிகளின் அதிர்வுகளில்
காற்று நடுங்க உடம்பெங்கும் துளையிட்டு
வழிந்த நாகசுரத்தின் நாதம் சுழல்கிறது, மகரயாழின்
நரம்புகளில் வருடும் கானத்தில் கெச்சங்களின்
சிறகு விரிகிறது. முதல்நாள் கூத்து காப்புப் பாடலுடன்
ஆரம்பமாயிற்று.
பின்னணியில்
சூதர்கள் பெருங்குரலெடுத்துப் பாடிய விளக்கப் பொழிவுகளில்
திரைச்சீலை ஒதுங்கி மறைய கூத்தர்கள்
ஆடினர். அரங்கத்தின் முன் பிரம்மாண்டமாய் அசையும்
கல்த்தீபத்தின் ஒளி நாவுகளில் ஆடையாபரணங்களின்
காக்காய்ப் பொன்னுகள் மின்னலாய் வெட்டிவெட்டி ஒளிர்கின்றன. கால்களில் கொஞ்சிய கெச்சங்கள் அவர்கள்
தரித்திருந்த தலைப்பாகைக்கேற்பப் பேசிச்சிரித்தன. ஒரே நேர்கோட்டில் இணையும்
வாத்தியங்களின் தாளலயம் காலத்தைப் பின்னோக்கிச்
சுழட்டிக் கொண்டிருந்தது.
திரைமறைப்பைச்
சற்றே ஒதுக்கி பெருமாயியைத் தேடினான்
தவசி. ‘வராமல் இருக்க மாட்டாளே…’ கூத்தின்
கலாபோதத்தில் நெக்குருகி நிற்கும் சனக் கூட்டத்தினூடே அவளது
சூரியபிரவையைச் காணவில்லை. ‘வீட்டில் ஏதேனும் விபரீதம் ஆகியிருக்குமோ?’
அவன் வேர்வைக் கோடுகளில் முகப்பூச்சுக் கசிய அதிர்ந்து கொண்டிருந்தது
பெருங்கலம்.
ஆடிமுடித்துவிட்டு
உள்ளே வந்த வீமசேனன், “தவசி,
போ உன்னோட வேசந்தான்…” என்று தோளில் தட்டிவிட்டு
தலைப்பாகையைக் கழட்டிக் கொண்டு ஆசுவாசமாய் உட்கார்ந்தான்.
தவசி தனது தலைப்பாகையை எடுத்து
அணிந்தவாறே, முன் நெற்றியில் சுருண்டிருந்த
கேசத்துடன் திரையை ஒதுக்கிக்கொண்டு நடக்க
நடக்க, மிருதங்கத்தின் இசைச்சுருதி. கெச்சங்களின் ஜதி. கெலிப்பின் திண்தோள்
அசைவு. ஆண்மையின் பூரண தரிசனம். அர்ச்சுனன்.
சூத்திரனும்
சத்திரியனும் இணைந்த அபூர்வக் கலவையில்
மிளிர்கிறது அர்ச்சுனனின் ஆளுமை. வர்ணங்களற்ற வலிய
உடல் ஒன்றையே பிரதானமாய்க்கொண்ட ஆதி
அழகின் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளாய்
மிருதங்கத்தை உடைத்தெழுகின்றன கால் அடவுகள். இதுவே
அவனாடும் கடைசிக்கூத்து என்பதால் கால்களின் தசைகள் தோறும் விம்முகிறது
கலை வன்மை. நரம்புகளைப் பிசைகிறது
வீணையின் சுர வரிசை.
வனவாசம்
புகுந்திருந்த பாண்டவர்களுக்கு வியாசர் உபதேசம் செய்யும்
பகுதியின் தர்ம அதர்மங்கள் கூத்தர்களின்
அடவுகளில் சடசடத்தெழுந்தன. சாமவெள்ளி முளைக்கும்வரை நீண்டு, அப்பகுதி நிறைவுற,
கின்னாரம் அசைந்து அசைந்து சோபனம்
கூட்ட, ரெண்டாம் சாமக்குளிரில் நனைந்து கொண்டே வீடு
போனார்கள் சனங்கள்.
ரெண்டாம்
நாள், பங்காளிகளைப் போரில் வெல்ல சிவபெருமானிடம்
ஆயுதம் வாங்கிவரப் போவதாகவும், அதற்கு தபசு செய்ய
வனத்திற்குப் போகவேண்டுமென்றும் அர்ச்சுனன் உரைத்தல். தருமரும் மற்ற பாண்டவர்களும் வாழ்த்தி
வழியனுப்பும்போது, ஆகாசத்திலிருந்து தேவர்களும் ஆசி வழங்குகிறார்களென்று பாடுகிறார்கள்
சூதர்கள்.
மூனாம்நாள்
மாற்றத்தில் புரண்ட காட்சியில், அர்ச்சுனன்
அங்கவத்திரங்கள் கலைந்து இடுப்பு வேட்டியுடன்
மரவுரி தரித்த தவசியாக உருமாறுவதைப்
காண பெருமாயி வரவில்லையே என்ற ஏக்கத்தில் பல்வேறு
எண்ணங்கள் அவன் மண்டையில் சுழட்டியடிக்கின்றன.
‘தெய்வமே அப்படி எதுவும் நேர்ந்திருக்கலாகாது…’ செம்பஞ்சுக்
குழம்பு பூசிய அவன் கால்களில்
முழங்கிக் கொண்டிருந்தது செண்டை.
நாலாம்
நாளிலிருந்து பத்தாம் நாள் வரை,
தவசி ஒவ்வொரு வனமாக ஏழுவனங்கள்
தாண்டிப் போகிறான். அரக்கர்களும், கொடிய மிருகங்களும் வழிமறித்து
இம்சை செய்வதை, தொம்சமாக்கி முன்னேறுகிறான் தவசி. பதினோராம் நாள்
கூத்தில், நாட்டு சனங்களும் பங்கெடுத்துக்
கொள்ளும் சடங்குகள் அதிகாலையிலிருந்தே நடைபெற்றன. எல்லாரும் குளித்து, வீடுகளை மாட்டுச் சாணமிட்டு
மொழுகி, மாடத்தில் தீபமேற்றி, சாமிகும்பிட்டு விட்டுத்தான் அவரவர் வேலைகளைக் பார்த்தார்கள்.
இரவு அனைவரும் கூத்துத் திடலுக்கு வந்து சேர்ந்தவுடன், பூசகர்
தபசுக்கம்பத்துக்குப் பூசைசெய்தார், நாட்டுமக்கள் எல்லாரும் கம்பத்துக்குப் பொட்டு வைத்துச் சாமி
கும்பிட்டார்கள்.
தேவதுந்துபி
முழங்க, மிருதங்க அடிமாறி வீழ, மத்தளம்
படீர்படீரென அறைந்த இசைமாற்றத்தில் கூத்தின்
போக்கு சுதியேறுகிறது. தவசிமரத்தைச் சுற்றிச்சுற்றி ஆடினான் தவசி. அவனுக்குள்
அலையடிக்கும் பெருமாயியை ஒதுக்க ஒதுக்க, மண்டைக்குள்
வளையமிடுகிறது அரவம். வேள்வியின் சுருதிநாதம்
விசை கூட்டக்கூட்ட, அவனது கால் அடவுகள்
அந்தரத்தில் எழும்பி பனைமரத்தின் கருத்த
சொரசொரப்பில் கால் பாய்ச்சின. சனங்கள்
குலவை போட்டார்கள்.
உருண்டு
திரண்டிருந்த மரத்தைத் தாவி மேல் எழுகிற
ஒவ்வொரு எட்டுக்கும் சூதர்கள் விருத்தம் பாட ஆரம்பித்தார்கள். மக்களில்
ஒருசிலர் முந்தியில் முடிந்து வைத்திருந்த தானியங்களை வீச ஆரம்பித்தார்கள். தனக்கு
மேலே உயர்ந்திருக்கும் மரத்தின் தூரம் நீண்டு கொண்டே
போவது போலத் தோன்றியது அவனுக்கு.
ஒவ்வொரு முறை தாவும் போதும்
பெருமாயித்தவசியிலிருந்து அர்ச்சுனத் தவசியாக மாறும் உருவேற்றம்
அது. வாழ்வுக்கும் கலைக்குமான உணர்ச்சிப் போராட்டமாக அத்தாவல் இருந்தது. பெருமாயியின் ஆக்கிரமிப்பிலிருந்து தபசின் மனோ நிலைக்கு
வருகிற தாவல் அது. காலத்தினூடே
தாவிய முடிவற்ற பாய்ச்சலாகப் பயணம் போகின்றன கால்
அடவுகள். காலவெளியில் சுழல்கிறது தபசு.
*************
சூதர்களின்
அடித்தொண்டையில் எழும்பும் வெண்கலக்குரல் உயர்ந்து உயர்ந்து இருள் குழைந்த புறங்காடுகளில்
பாய்ந்தோடியது. ஊரைவிட்டுக் கிழகோட்டில் தள்ளியிருந்த குன்றின்மீது அடர்ந்த வனத்தின் சூனியத்தை
உலுக்கியது தவசியின் சுதி. ஆகாயத்தை ஓங்கியிருந்த
வலுவான மரக் கிளைகளில் பரண்
கட்டிப் படுத்திருந்தார் சுரட்டைப் பட்டக்காரர்.
பெருமாயியிடம்
தனது அத்தனை திறன்களையும் கையாண்டு
பார்த்துவிட்டார். அவள் எதையும் கேட்பதாக
இல்லை. அப்பொழுதே அவளை இரு கூறாகப்
பிளந்து போட வேண்டுமென்ற வெறி
எழுந்தாலும், தனது குலம் தழைக்க
நிற்கும் ஒரே குலக் கொழுந்தின்
வாசம் காப்பாற்றிவிட்டது. ணைபிரிந்து கூவும் சக்கரவாகப் பறவையின்
கூவல் காற்றில் மிதந்து வந்து மரக்கிளையில்
மோதியது. இரண்டாம் சாமம் ஆரம்பித்து ஒரு
நாழிகை ஆகியிருக்குமென எண்ணங்கள் அசை போட்டன. டர்ந்து
கூவும் சோகத்தின் சுருதியில் கசியும் அவலச் சுவை
அவரது உடலெங்கும் சீறி எடுத்தது. சுரீரென
காதுகள் விரைக்கின்றன. ‘தவசியைக் கொல்ல வேண்டும்…’ ஆவேசத்ததுடன் எழுந்ததில் கிளைகள் அசைந்து பறவைகள்
சடசடத்தன. கால் மாட்டிலிருந்த ஞெலிகோலைக்
கடைந்து சுளுந்து கொளுத்திக் கொண்டு சுற்றிலும் நோட்டம்
விட்டார். தலையைச் சிலும்பிக் கொண்டோடிய
ஒளிக் கீற்றுகள் பட்டு மங்கியது. நிறைந்த
பௌர்ணமியின் பால்வண்ணம்.
கவண் வீசியடிப்பதில் அந்த நாட்டிலேயே அவருக்கு
இணை எவருமேயில்லையென்று சொல்லும் வண்ணம் ஆகாயத்தில் பறந்து
போகும் பறவைகளையும், பாய்ந்தோடும் சிறு விலங்குகளையும் வீழ்த்துவதில்
சாமர்த்தியசாலியாய் விளங்குபவர். அவரது கைவன்மையில் கவண்கல்
சுழன்று சுழன்று சக்ராயுதமாக உருமாறும்.
தீர்க்கமான இலக்குநோக்கிய கண்களின் தீட்சணத்திலும், உள்ளங்கையின் இறுக்கு விசையில் லாவகமாய்ச்
சுழலும் முஷ்டி வன்மையிலும் அந்த
நுட்பத்தின் ரகசியம் பதுங்கியிருப்பதை சின்ன
வயசிலேயே உணர்ந்து கொண்டார். அந்த சூட்சுமத்தை ஓயாது
மேலும் மேலும் செயல்படுத்தி சிறந்த
வில்லாளியாக மாறிப் பெருமை காத்தார்.
கவணை எடுத்து ஆசையாக நீவிப்பார்த்தார்.
அவருக்குள் சொலித்துக் கொண்டிருக்கும் ஆக்ரோசம் அதற்குள் பாய்ந்தது போல ஒரு விறுவிறுப்பு
எகிறிக் கொண்டிருந்தது. தனக்கு நேரப் போகின்ற
சிறுமையை இந்தப் பெருமையில்தான் போக்கவேண்டும்.
சுழன்றடிக்கும் ஊதல் காற்றினூடே அசைந்தாடிக்
கொண்டிருந்த சுளுந்து வெளிச்சம் அவரது முகத்தில் சீறுகிறது.
பழியெடுக்க
வேணும் பங்காளிமாரையே
பாசுபதாஸ்திரம்
வேணுமய்யா…
வரங்கொடுக்க
வேணும் தருமங்கொலிக்கவே
வச்சிராயுதம்
வேணுமய்யா…
பாட்டின்
ரத்தநாளங்களில் சுழன்றாடிக் கொண்டிருந்த தவசியின் கால் ஜதியில் துளிர்த்தது
சிவ விருத்தம். மரத்தின் தலையில் விரிந்திருந்த பனையோலைகளின்
நடுவே காலூன்றிய கடைசிப் பொழுது ஆசுவாசம்
களைப்பேற்றுகிறது.
கருடபகவான்
பிரசன்னமானதும் பாசுபதாஸ்திரத்துக்குப் பதிலாக தாங்கள் இருவரும்
ஒன்று சேர்ந்து வாழ வரம் அருளுமாறு
கேட்க வேண்டுமென அவனது கண்கள் பனித்தன.
‘இவ்வாறெல்லாம் எண்ணுதல் சரியோ? விரத நிலையழிந்து
போகுமோ…?
கருடன் வராமல் போய்விடுமோ…? வராவிட்டால்…?
நிலத்தின்
கிடுகிடு பாதாளம் ஏழாவது வனத்தில்
தவசியை விழுங்கவந்த அரக்கனைப்போல வாயைப் பிளந்து கொண்டிருந்தது.
அவன் கால்களில் கொறக்குளி ஏறிச் சிலீரிட்டது. இப்படியெல்லாம்
ஒருநாளும் எண்ணியதில்லை அவன். கால்களை உதறிக்
கொண்டவனாய் கீழ்நோக்கி பார்வையைத் துழாவினான். சிறுத்துப் போயிருந்த சனக் கூட்டத்தின் உருவங்களில்
கோவைப்பழமில்லை. ‘கடைசி நாளான இன்னைக்கும்
ஏன்வரவில்லை? ஏதோ நடந்துபோச்சு…’
அந்தர வெளியில் அசைந்த விசனத்தில் பெருமாயியின்
சிரிப்பு மிதந்து வந்தது. அவனது
வாழ்வுக்கும் சாவுக்குமென இடைவெளியை ஒரே சீராக மீட்டிக்
கொண்டிருந்தது தம்புரா.
திடீரென
வாயுதேவனின் இடிமுழக்கமாக அவன் தேகமெங்கும் படார்
படாரென அறைந்து நொறுக்குகிறது மத்தளம்.
மின்னலாய்க் கண்களைக் குருடாக்குகிறது கின்னாரம். வருணதேவனின் ஆவேசமான வீச்சாக யாழும்,
தம்புராவும், வீணையும் பேய்மழையாய்ப் பொழிகிறது. ஒருகணம் தடுமாறிப் போனான்
தவசி.
சுதாரித்ததுக்
கொண்டவனாய் ஓலைக் கருக்குகளில் சாய்ந்து
சாய்ந்து, ஒரு கலைக் கூத்தனின்
லாவகமான அடவுகளில் அந்த இசைமொழியின் அரூபங்களை
சாமர்த்தியமாகப் பிடித்து விலா இடுக்கில் வைத்து
ஞெமுக்க ஆரம்பித்தான். மத்தளமும், மிருதங்கமும் சொங்கிப் போக ஆரம்பித்தன. யாழும்,
வீணையும் கெஞ்சிக் கெஞ்சித் தவ்வின. சனக் கூட்டத்திலிருந்து
“அர்ச்சுனா… அர்ச்சுனா” என்று
கைகூப்பும் குரல்கள் வான்நோக்கி உயர்ந்தன. தபசைக் கலைக்க வரும்
வாயு தேவனையும் வருணதேவனையும் விலா இடுக்கில் வைத்து
ஞெமுக்கும் சத்யாவேசம், இடிமின்னல் வரும்போது ‘அர்ச்சுனா… அர்ச்சுனா…’ என்று சனங்கள் வேண்டி
வழிபடும் அய்தீகத்தின் அழகியாக மலர்ந்து கொண்டிருந்தது.
இசை மெல்ல மெல்லத் தேய
சூதர்கள் ஆடிப் பாடினர். தவசி
களைப்புடன் ஓலைகளைப் பற்றினான்.
*********************
கரிய இரவு கவிந்திருந்த தாவரங்களின்
மீது விடிகாலை வெளிச்சம் மெல்லப் புரண்டு கொண்டிருந்தது.
விடிகாலைப் பறவைகளின் கீச்சொலியும், ரெக்கைகளின் படபடப்பும் காட்டின் இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டிருந்தன. சிறுதும் கண்துஞ்சாமல் விடிய விடிய பரணில்
இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்ததில் கால்கெண்டை
மடிப்புகள் வலித்தன சுரட்டையனுக்கு. சோர்ந்து
போன கண்கள் வானத்தில் நாலாபுறமும்
சுழன்றேக, உள்ளங்கையில்வெறியுடன் பதுங்கியிருந்தது கவண்.
பாட்டின்
கண்ணிகள் மங்கிய காற்றில் மிதந்து
கொண்டிருந்தன. அவர் நின்று கொண்டிருந்த
பரண் தீக்கணப்பாய் கொதிக்க, அவரது திரேகம் முழுவதும்
காலத்துளிகள் எரிந்து விழுந்தன.
‘எங்கே
அந்த கருடப்பறவை…?
தவசியின் உயிர் எங்கே…?’
ஆகாயமார்க்கமாய்
தவசியுடைய அவலக்குரலின் இறைஞ்சுதலுக்கு செவிமடுத்துப் பறந்துவரும் அந்தப் பறவையை இன்னும்
காணவில்லை. வானத்தில் சுழன்றோடிய அவரது பார்வை முழுக்க
வெறுமையடித்தது. கவணை மேலும் கீழும்
சுற்றி வாகு பார்த்தார். கயிற்றின்
விசை அரவமாய்ச் சீறியது. பௌர்ணமி வெளிச்சம் மெல்ல
மங்கிக்கொண்டிருக்க வானம் வெளுக்க ஆரம்பித்தது.
அந்தப்
பொழுதில் அவரது பாம்புச் செவி
விறைத்தது. மிக மெல்லிசாக ஒரு
கிரீச்சொலி மற்ற பறவை ஒலிகளிலிருந்து
தனித்துக் கேட்கிறது. அவரது கண்கள் கூர்தீட்டிச்
சுழன்றன. திரேகம் முச்சூடும் பரபரக்க,
திக்குகளெங்கும் சுழட்டியடித்தன. இறைஞ்சி நிற்கும் சூதர்களினுடைய
வெண்கலக்குரலின் ஓங்காரத்திற்கு எதிர்ச்சுருதி கூட்டும் கூவல்.
அவருக்குள்
அரவம் பாய்ந்து பாய்ந்து பிடுங்க முஷ்டிகள் புடைத்திறுக,
ஆகாசத்தின் கிழதிசையில் எழுந்த அந்தப்பறவையைப் பார்த்தார்
அவர். ரெக்கைகளை மலர்த்திக் கொண்டு அலகை நீட்டியபடி
அந்தரவெளியில் விரைந்து வரும் அற்புதம். வன்மமோடிய
முஷ்டியின் சுழற்சியில் உள்ளங்கை இறுகுகிறது. நிறைந்த பௌர்ணமியைக் கடந்து
ரெக்கை விரித்த அதன் ஆலாபனக்
குரலில், கால்ப் பெருவிரலையூன்றி ஒரே
இறுக்கு. ரெக்கைகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு வீழ்ந்தது பட்சி.
தலைகீழாய் நின்றுகொண்டிருந்த தாவரங்களின் பசிய மடிப்புகளில் பிய்ந்தோடிய
இறகுத்தூவிகள் சுழித்துக் கொண்டிருந்த காட்சி அவரது கண்களில்
நிறைந்தது.
ஹ்ஹா…
வலங்கையாரமாய்
அசைந்த அவரது கங்கணக் காப்பு
குதியாட்டம்போட ‘சுரட்டையன் குறி என்னைக்கும் பெரட்டியதில்லை’ என்ற செலவாந்தரம் மீசையை முறுக்கி விட்டுக்
கொண்டது.
******************
சாளரத்தின்
வழியே கசியும் இசைக்கிரணங்களை அருந்திக்கொண்டே
சாதகப்புள்ளாய்க் கிடந்தாள் பெருமாயி. இந்தப் பதிமூனு பொழுதுகளும்
அவளுக்குள் யுகயுகங்களாய்க் கழிந்து கொண்டிருந்தன. சூரிய
வெப்பம் வீசும் பகல் முழுவதும்,
காலத்துக்குத் தன்னைத் தின்னக் கொடுத்துவிட்டு
விரக்தியின் வெம்மையில் மூலையில் முடங்கியிருப்பாள். வசவசப்பான குளிர்ச்சியேற்றும் இரவில் கூத்தின் இசைபோதத்தில்
பாய்ந்தெழுவாள். தவசியின் கால் அடவுகள் வீசும்
ஜதியில் ஆடி முகிழ்ப்பாள். அவளது
உடல்மொழியும் தவசியின் உடல் மொழியும் ஒரு
லய அசைவில் ஒருங்கிணைந்து அவளே
தவசியாக மாறிப்போவாள். சனங்களும், வாத்தியங்களும், சூதர்களும், தபசுக்கம்பமும் அவள் கண்முன்னே விரிந்து
கொண்டேயிருக்கும். பட்டக்காரர் கனிவான வார்த்தைகளால் தங்களது
குலகௌரவத்துக்கு ஏற்படப் போகும் பாதிப்பை
எடுத்துச்சொன்னார். அவரது கெஞ்சலையும் மிஞ்சலையும்
பொருட்படுத்தாத அவளது உடம்பை சாட்டவார்
வீறி எடுத்தது. வீட்டின் கதவுகள் அடைபட பெருமாயி
சிறைப்பட்டுப் போனாள்.
விடிந்து
கொண்டிருந்த வெளிச்சத்தில் மிதந்துவந்த பாட்டுக் கண்ணிகளில் அபிநயமாய் சுருண்டு சுருண்டு தவசியாக மாறிக் கொண்டிருந்தாள்.
‘தன் வாழ்விலும் இனி வெளிச்சம் கூடுவதை
யார்தான் தடுக்க முடியும்?’ இன்னும்
கொஞ்ச நேரத்தில் தன் வாழ்நிலை மாறப்
போகிறது என்ற குதியாட்டத்தில் அவளது
மயிர்க் கால்களெங்கும் புத்துயிர்ப்பூட்டியது. ஆனந்தக்களியில் திளைத்தாடிக் கொண்டிருந்தது கலையின் அற்புதம். திடீரென்று
சாவின் வாசனை குறுகலான சுவர்களை
இறுக்குகிறது. பல்கிப் பெருகிய காற்றைத்
துளைத்து சாளரத்தின் வழி சருகுகளை அள்ளி
வீசுகிறது. அந்தரவெளியெங்கும் அழுங்குகிற சடசடப்பின் எல்லையற்ற நிழலாக ரெக்கைகளைப் பரப்பிக்
கொண்டு முன்றிலில் வந்து வீழ்கிறது கருடன்.
அந்தக்கணத்தில் அவளுக்கு எல்லாமே புரிந்து போயிற்று.
துள்ளியெழுந்த
விசையில் அடிப்புறமற்ற அதிகாலைப்பொழுது அவளது காலுக்குக் கீழே
பிளக்க, பூட்டப்பட்ட கதவின் கணையத்தில் மோதிச்
சுழன்றது அவளது தலை. கண்களைக்கப்பியது
அவளைச் சுற்றி வளைத்திருந்த சுவர்களின்
அரண். பூமியைக்குடைந்து கொண்டு போகிறவளாய் வெறி
கொண்ட கைகளில் நகக்கண்கள் பிய்ந்துபோக,
செம்மண்ணைச் சாடிப் பறித்தாள். கண்கள்
இருண்டுகொண்டேவர, சாளரவெளியில் கிடக்கிறது அவள் வாழ்வு.
சட்டென
உடுக்கையின் ஒற்றைப்பேரொளி அவளுக்குள் ருத்திரமேற்றியது. ஒரு தீர்க்கமான முடிவுக்கு
வந்த அவளது கண்களில் ஒளி
பளீரிட்டது. அந்தமுடிவு அவளுக்குள் உருண்டோடிய பொழுதில் பறவையினத்துக்கேயுரிய நடுக்கம் அவளது அசைவுகளில் விம்மியெழுந்தது.
பறவையின் குணாம்சமாக பக்கவாட்டில் அசையும் பார்வையில் அவள்
பெண்ணாக இல்லை, கைகளைப் பரப்பிக்
கொண்டு மண்டியிட்டெழுந்து சாளரத்தின் முகமாய் உட்கார்ந்த பறவையாயிருந்தாள்.
“கடவுளே,
என் உயிரை எடுத்து அந்தப்பறவைக்கு
உயிர்கொடு…” அவளது
பிரார்த்தனையின் ஓயாத உச்சரிப்பில் கரைந்து
கரைந்து அவள் உடல் சரிந்து
பூமியில் விழவும், முன்றிலில் வீழ்ந்திருந்த பறவையின் ரெக்கைகள் படபடத்து ஆகாயத்தில் எம்பவுமான அற்புத ஜாலம் நடந்தேகியது.
தபசுக்கம்பத்திலிருந்து
உருகிவழிந்த இசைத்துதியின் ஆலாபனம் நாலாத் திக்குகளிலும்
எதிரொலிக்க, உடுக்கையின் தாண்டவம் ஏறியடிக்கிறது. அந்தப் பொழுதில் பறவையின்
கூவல் அரங்கம் முழுவதும் ஊடுருவ,
சனங்கள் பரபரப்படைந்தனர். தூரத்தே சிறகு விரித்த
பறவையின் கண்கள் கடுகி வந்தன
மரத்தை நோக்கி. வாத்தியங்கள் உச்சகதியில்
முழங்கின. தவசியின் கால்களில் புத்துணர்ச்சியேற, அடவுகள் மாறிவீழ, அந்த
ஜதிக்கேற்ப அசைந்து அசைந்து கம்பத்தைச்
சுற்றுகிறது பறவை. சனங்கள் பரவசத்துடன்
எழுந்து கை கூப்பித் தொழுது,
குலவையடிக்க கருடதரிசனத்தின் ஆனந்தக் களியில் புல்லாங்குழல்
சனங்களின் உடலெங்கும் துளையிட்டு ஊதுகிறது. அந்தக்கூத்து வெளியெங்கும் குதியாட்டம் போடுகிறது. தவசி ஓலைக்கருக்குகளில் சாய்ந்து
கொண்டு மெய்மறந்து நிற்கிறான். ரெக்கைகளைக் கடைந்து கடைந்து கிழ
திசையில் போய் மறைகிறது பறவை.
***************
மெல்ல விடிந்து கொண்டிருந்த அதிகாலை வெளிச்சத்தில் பறவையின்
கூவல் ஒலி கேட்டது. அவனும்
அவளும் பரபரப்புடன் வானத்தை நோக்கினார்கள். பூசாரி
பயபக்தியுடன் எழுந்து கண்களை மூடி
வேண்டினார். சற்றைக்கெல்லாம் கருடப் பறவையின் ரெக்கையடிப்பில்
அந்த இடமே துலக்கம் பெற்றது.
டப்புக்கல்லின் மீது உட்கார்ந்து கோவைப்
பழங்களை தன் கூரிய அலகால்
கொத்திச் சுவைத்தது. அவர்கள் மெய்மறந்து கைகுவித்தார்கள்.
ஓரிரு கணங்களில் பழங்களைக் கவ்விக்கொண்டு எழுந்து ரெக்கைகளை அசைத்தபடி
பறந்து போய்விட்டது.
பூசாரி
அந்தப்படப்பை எடுத்துவந்து பூசைசெய்து அவர்களிடம் நீட்டினார். நிறைந்த சந்தோசத்தில் திருநீறு
வாங்கி இட்டுக்கொண்டு, குன்றை விட்டு, ஊரை
நோக்கி இறங்கினார்கள். ‘இனி கவலையில்லாமல் அவரவர்
வேலையைப் பார்க்கலாமென்றும், எல்லாவற்றையும் பெருமாயி பார்த்துக் கொள்வாள், தங்களது காதல் தன்னால்
நிறைவேறுமென்றும்’ ஆனந்தக்
கூத்தாடின அவர்களது எண்ணங்கள். மானம் துலாம்பரமாய் விடிந்திருந்தது.
உன்னதம்
2005
கருத்துகள்