கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

ஜோதியும் ரமணியும் – சுஜாதா


புதிய பெண் லெக்சரர், ரமணியை எப்படி சமாளிக்கப்போகிறாள் என்று கதி கலங்கிப்போனோம். ரமணி என்று பெயர் இருந்தால் ஒருவன் எப்படி இருப்பான்? குழந்தை முகம், பெண்மை மிளிரும் தேக அமைப்புடன்தானே? தப்பு. இவன் மிலிட்டரி மீசையுடன் காட்டாகுஸ்தி பயில்வான் போல இருந்தான். போதாமல் பலத்த குரல். யாரையாவது விளித்தால் ஹாஸ்டலே அதிரும். சிரிக்கும்போது மட்டும் கண்களில் ரமணி தெரிவான். மற்றபடி காட்டான்.


ஒரு மாதம் லேட்டாகத்தான் சேர்ந்தான். முதலில் அவனை சர்வே கிளாசில் வெளியே ஹாஸ்டலைச் சுற்றி அளக்கும் பயிற்சியில் பார்த்தேன். ‘‘என் பேர் ரமணி. ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்ல புதுசா சேர்ந்திருக்கேன். கை குடுஎன்றான். குடுத்த கை வெல்லப்பாகு போல் பிசுபிசுவென்றிருந்தது. நான் துடைத்துக்கொள்ள, ‘‘கொஞ்சம் பிடிச்சுக்கோ’’ என்று செயின் சர்வேக்கான சங்கிலியை என்னிடம் கொடுத்துவிட்டு நியூ ஆஸ்டலின் மூலையில் திரும்பி அங்கே ரத்தன்லாலிடம் எனக்குத் தெரியாமல் மறுமுனையைக் கொடுத்துவிட்டு வேறுவழியாக காண்டீனுக்கு போய்விட்டான். இருவரும் பேந்தா மாதிரி ஒரு மணி நேரமாகசெயினைப் பிடித்துக் கொண்டு நிற்கிறோம். ‘என்னடாஎன்று பட்டூஸ் என்கிற பட்டாபிராமன் விசாரித்ததில் ரமணி அந்தப் பக்கம் இருக்கிறான். அளந்துகொண்டு இருக்கிறான் என்று இருவரும் சொல்ல, விசாரித்ததில் கேண்டீனில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். ‘‘நானா! நீ வேற யாரையோ சொல்ற! எனக்கு சர்வே கிளாஸே கிடையாதே!’’ என்று சாது முகத்துடன் புளுகினதிலிருந்து அவனைக் கண்டாலே நானும் ரத்தன்லாலும் ஒதுங்கினோம். அந்த சம்பவத்தின் அவமானம் கலைய மூன்று மாதமாயிற்று.

ரமணி எப்போது யாரை எப்படிக் கவிழ்ப்பான் என்பது யாருக்கும் தெரியாது. சிறு நாடகங்களாடுவது அவனது இயற்கை. சின்ன விஷயத்துக்குக்கூட பொய் சொல்வான். மணி என்ன என்றால், அரை மணி கூட்டிச் சொல்வான். திங்கள்கிழமையை வியாழக்கிழமை என்பான். புதிய ஆட்களைச் சந்திக்கும்போது முத்தரையன், ரமணி ஐயர், அல்டாப் உசேன் என்று இஷ்டத்துக்கு பேர் மாற்றிச் சொல்வான். சொந்த ஊர் கேட்டால் ஒரு நாள் ஹைதராபாத், ஒரு நாள் சின்னாளம்பட்டி, ஒரு நாள் மொரிஷியஸ். நிஜப் பெயர் ரமணிதானா என்று எங்களுக்கு ரொம்ப நாள் சந்தேகமாக இருந்தது.

திடீர் என்று மொட்டை போட்டுக்கொள்வான். இட்லி விழுங்கும் போட்டியில் மற்ற பேர் பதினைந்து இட்லியிலேயே தவித்துக்கொண்டு இருக்கையில் ரமணி லேட்டாக மெஸ்ஸக்கு வந்து சேர்ந்துகொள்வான். நாற்பது இட்லி போடச் சொல்லி சாம்பாரில் குளிப்பாட்டி கவளம் கவளமாக ஆக்கிக்கொண்டு கன்னங்களின் இடுக்கிலேயே வைத்துக்கொள்வான். போட்டிக்கான நேரம் தீர்ந்ததும் துப்பிவிட்டு இன்னும் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு எழுந்து செல்வான். ஹாஸ்டல் தினத்தின்போது மார்க்கருடன் ராயபுரத்திலிருந்து சாராயம் வாங்கி வந்து டென்னிஸ் கோர்ட்டில் நெற்றியில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு ‘‘மார்க்கர் வருத்தப்படாதே! சரோ வரேன்னு சொல்லிவிட்டு வரலை பாரு. அதான் ரொம்ப துக்கம். எனக்கு ஒரு தேவாங்கு மட்டும் வாங்கிக் கொடுத்துரு’’

மார்க்கர், ‘‘கவலைப்படாதே தம்பி! சரோசா இல்லைன்னா சரசாவை இட்டாரேன்’’

‘‘எங்க இருக்கா சொல்லு’’ இவ்வாறு திரும்பத் திரும்ப உரத்த குரலில் அலம்பிக்கொண்டு இருப்பார்கள். ஒரு பத்தி நாடகம் போல இருக்கும். பிறகு ‘‘மார்க்கர், இப்டியே போ, ரெண்டு லைட்டு தெரியுது பாரு. அதுக்கு மத்தியில் நடந்து போ’’ என்று அனுப்புவான். சற்று நேரத்தில்க்றீச்என்று ப்ரேக் சப்தம் கேட்கும்.

‘‘மார்க்கர் போய்ட்டான்டா’’

‘‘அவனாஅவன் ஏன் சாவறான். இன்னும் எவ்வளவு ஜிஞ்சர் அடிக்கணும் அவனுக்கு’’.

‘‘ரமணி தேவாங்கு வளக்கப் போறியா?’’

‘‘ஆமாடா’’

‘‘யார்ரா சரோ?’’

‘‘என் உயிர்க் காதலி. பேங்க்ல வேலைசெய்றா’’

‘‘எந்த பாங்க்?’’

‘‘ப்ளட் பாங்க்’’ என்று சிரித்தான்.

நியூ ஹாஸ்டலில் வடக்கத்தி மாணவர்களிடையே கைகலப்பு நேர்ந்தபோது ரமணி இடையே புகுந்து கையெடுத்துக் கும்பிட்டு சண்டையைச் சரளமாக இந்தி கவிதைகள் பேசி நிறுத்தினான். மற்றொரு சந்தர்ப்பத்தில் ப்ரேம் மல்ஹனை வெட்டக் கத்தியை எடுத்துக்கொண்டு துரத்தினான். வளாகத்தில் ஓடிப்பிடித்து அவன் கழுத்தில் கத்தி வைத்துவிட்டு சற்று யோசித்து, ‘‘கை குடு! வியாழக்கிழமை நான் கொல்றதில்லை’’ என்றான்.

முதல் செமஸ்டருக்குள்ளே அவனைக் கண்டாலே மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அலறத் தொடங்கி னார்கள். கிளாசுக்கு வரும்போது ஒரு ஜிம்மி நாய் கூட வந்து காத்திருக்கும். சிலவேளை உள்ளே எட்டிப் பார்க்கும். ‘‘வரேண்டா அவசரப்படாதே’’.

யாரைச் சந்தித்தாலும் கையை முதுகுப் பக்கம் முறுக்கி வலிக்கிறாற் போல் செய்துவிட்டுத்தான் விடுவான். ஏதாவது பதில் சொன்னால் நேராக அடிமடி மர்மஸ்தானத்தில் கை செலுத்தித் திருகுவான். நாம் துடிப்பதைக் கண்டு கண்ணீர் வரச் சிரிப்பான். அதீத பலாத்காரன். தொடாமல், அடிக்காமல், முதுகில் குத்தாமல், கன்னத்தில் தட்டாமல், அங்கே பிடிக்காமல் அவனால் பேசவே முடியாது!

பரீட்சை பேப்பர் திருத்துபவரை ஒருமுறை ரயிலிலிருந்து தள்ளுவதாகப் பயமுறுத்தியதில், ரமணி எல்லா சப்ஜெக்டிலும் பாஸ். கெமிஸ்டரி கிருஷ்ணசாமி ஒருமுறை வெற்றுப் பேப்பருக்கு நாற்பத்தைந்து போட்டார். ஓரத்தில் இரண்டு வரிதான் எழுதியிருந்தான் ‘‘பட்டா, மார்க் போடலைதூத்துக்குடி எக்ஸ்பிரஸ்ல தள்ளிடுவேன்.’ தண்டவாளத்துக்குப் பக்கத்தில் இருந்ததால் அத்தனை ரெயில்களும் ஹாஸ்டலுக்கு அருகில் அலறிக்கொண்டு செல்லும். ‘‘எதுக்கப்பா பொல்லாப்பு, ரெண்டு பொண்ணு, வயசான அம்மா இருக்கா. கிறுக்குப் பய ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்துட்டான்னா?’’ என்று மார்க் போட்டு விட்டார்.

திடீர் என்று ராத்திரி ஒன்பதரைக்கு ‘‘வா ஓடியன்ல புதுப் படம் போலாம்’’ என்று எல்லாரையும் திரட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்குப் போவோம். ரமணி, ‘‘டிக்கெட் வாங்கிட்டு வரேன்’’ என்று படியேறிவிடுவான். ட்ரெய்ன் வந்து எல்லோரும் ஏறிக்கொள்ள அது நகர்ந்ததும் ரமணி எங்கள் தேசிய கீதமான ‘‘முண்டபக்கற மாரபக்கற ஓய் ஓய் ஓய்! சைதாப்பேட்டை க்ரோம்பேட்டை ஓய் ஓய் ஓய்!’’ சொல்லியபடி இறங்கி, ‘‘டேய் டிக்கெட் வாங்கலைடா, போய்ட்டு வாங்க’’ என்று டாட்டா காட்டுவான்.

இவன் கொட்டம் தாங்க முடியாமல் அத்தனை பேரும் உள்ளம் கொதித்துக்கொண்டு இருந்தாலும் அவனை நேர்கொள்ளும்போது நேசிக்காமல் இருக்க முடியவில்லை. நம் எல்லோரிடமும் உள்ள கோகுல கிருஷ்ணனின் விஷம இச்சை காரணமாக இருக்கலாம். இந்நிலையில் முதன்முதலாக ஆண்கள் காலேஜில் ஒரு பெண் லெக்சரராக சேரப்போகிறாள் என்று தெரிந்தபோது கதிகலங்கிப் போனோம். எப்போது ராஜினாமா கொடுப்பாள், மூணு நாளாஒரு வாரமா? என்று ரமணி இல்லாதபோது பந்தயம் கட்டி னோம்.

‘‘எலக்ட்ரானிக்ஸ் லெக்சரர்றாரமணி ஆட்டோ. அதனால ப்ரச்னை வராது’’ என்றேன்.

‘‘ஹாஸ்டல்ல ரூம் கொடுக்கப் போறாங்களாம்.

‘‘போச்சுரா.’’

அவளை முதலில் ஸ்டேஷனில் வைத்துத்தான் பார்த்தோம். இந்த வருஷம்தான் பாஸ் பண்ணியிருக்க வேண்டும். படிப்பிலேயே கவனமாக, உடம்பை பார்த்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறாள் போல. மொத்தமே பத்து கேஜிதான் இருந்தாள். அஞ்சடிக்கு ஒரு அங்குலம்தான் மிஞ்சியிருந்தாள். பலமாக ஊதினால் விழுந்துவிடுவாள். ரமணி அவளை ஒற்றைக் கையால் தூக்கிவிடலாம். யாராவது காதலிக்க வேண்டும் என்றால் மிகுந்த கற்பனை வேண்டும் என்று தோன்றியது. ‘‘குழந்தைடா அது’’ என்றான் நித்யானந்தன். ‘இருஎன்றான் ரமணி. அவள் வந்து சேரும்போதே, ரமணியை சந்திக்கும் துரதிர்ஷ்டமாகிவிட்டது. சபர்பன் ரயில் நிலையத்தில் புது ஜமக்காளம் சுற்றின படுக்கையும் தகரப் பெட்டியும் நடுவயதுத் தந்தையுமாக வந்து இறங்கியபோது, ரமணி ரெயில்வே பெஞ்சில் சிகரெட் கடைக்காரனிடம் கடன் சொல்லிக்கொண்டு இருந்தான். ‘‘குடுக்கலைன்னா என்ன ரமணி? ஒண்ணாம் தேதி குடு. அதுக்கு எதுக்கு கையை முறுக்கறே!’’

‘‘எக்ஸ்க்யூஸ் மி! ஹாஸ்டலுக்கு எப்டி போகணும்?’’

ரமணி சட்டென்று அஜித்குமாரின் கறுப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு என் தோளைப் பிடித்துக்கொண்டு அருகே சென்று ‘‘ஐயா எனக்கு அனகாபுத்தூர் போகணும். மெயின் ரோட்டுக்கு போகணும்கண் தெரியலை. கூட்டிட்டுப் போறீங்களா?’’

‘‘ஸாரி ஸாரி’’ என்றாள்.

‘‘இவன் பேரு மோகன்தாஸ் காந்தி. எனக்காகப் பரீட்சை எழுதுவான். ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத் திருக்காங்க’’

‘‘மன்னிச்சுக்கங்க. நாங்களே குரோம்பேட்டைக்குப் புதுசு. உங்க பேர்?’’

‘‘அனகாபுத்தூர் அழகேசன்’’.

அனைவரும் சிரிப்பை அடக்கி கொள்வதைப் பார்த்தாள்.

‘‘அனகாபுத்தூரா?’’ என்று நான் வியக்க, ‘‘சும்மாரு’’ என்று அதட்டினான்.

‘‘எதிர்லயே ஹாஸ்டல் தெரியறதே’’ என்றாள்.

‘‘பர்ஸ்ட் இயரா நீங்க?’’ என்றான்.

‘‘இல்லை, லெக்சரரா சேர வந்திருக்கேன்’’.

‘‘லெக்சரரா?’’ என்று அட்டகாசமாகச் சிரித்தான். தந்தை ‘‘ஜோதி! வா, கண்டவாளோட பேசாதே!’’

ரமணி எழுந்து அப்பனின் சட்டையைப் பிடித்தான்.

‘‘என் பேரு கண்டவன் இல்லை. மரியாதையா பேரு கேளு. தி நேம் இஸ் எல்.ரமணி’’

‘‘ஏய் சட்டையை விடு’’.

ரமணி, ‘‘டேக் இட் ஈசி. நீங்க போங்க சார். பாப்பா பயந்துக்கப் போறது. இப்படியே மேம்பாலத்தைக் கடந்தா அந்தப் பக்கம் குறுக்கு வழி இருக்கு’’.

‘‘என் பேர் கண்டவனாடா?’’

‘‘கண்டுக்காதே ரமணி’’.

‘‘வாம்மா, ஸ்டேஷன் மாஸ்டரைக் கேக்கலாம்’’.

‘‘கணபதி ஐயர்! உம்ம பொண்ணு எப்படி சேர்றான்னு பாத்துர்றேன்!’’ என்றபோது ‘‘என்ன நீ மரியாதை இல்லாமப் பேசறே?’’ என்று அந்த பெண் ரமணியை அதட்டினாள். சற்று நேரம் பூமி சுழல்வது நின்றது.

இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். நாங்கள் பயந்துகொண்டு ரமணியை பார்க்க, அவள் யதார்த்தமாக, ‘‘அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இருக்கு. என்னைத் தடுக்க நீ என்ன டைரக்டரா?’’

ரமணிக்கு இது புதுசு. இது வரை அவனை எதிர்த்தோ, ஏன் சமமாகவோகூட யாரும் பேசியதில்லை.

‘‘வா ஜோதி’’.

‘‘ஜோதியா? கவனிச்சுக்கறேன்.’’

ஜோதி ரிஜிஸ்ட்ராரிடம் பொறுப்பேற்ற கையோடு நடந்ததை ஒரு புகார் கடிதமாக எழுதிக் கொடுத்தாள். அப்போது ஆரம்பித்தது யுத்தம். டைரக்டர், ரமணியைக் கூப்பிட்டு விசாரித்திருக்கிறார். ‘‘உன்னைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப ப்ராக்டிக்கல். ஜோக்ஸ் செய்றியாம். மனசுக்குள்ள என்னன்னு நினைச்சுட்டிருக்கே? ஒழுங்கா படிச்சு வெளிய வரணுமா? டிஸ்மிஸ் ஆகணுமா?’’

ரமணி தாசனுதாசனாக ‘‘சார் இனிமே அந்த மாதிரி கம்ப்ளெயிண்ட் வராது. இது உறுதி. எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது. விசாரிச்சுப் பாருங்க. ஸ்டேஷன்ல என் சாயல்ல ஒரு பிச்சைக்காரன் இருக்கான் சார். அவன் பேரும் ரமணி. அவனைப் பத்திதான் என் மேல குற்றம் சொல்லியிருக்காங்க. புதுசில்லையா? காலைலதான் ஊர்லருந்து வந்தேன்’’

‘‘அந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஸ்டேஷன்ல மிஸ் ஜோதிகிட்ட நீ நடந்ததுக்கு மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுது முதல்ல.’’

‘‘எழுதலைன்னா என்ன ஆகும் சார்தெரிஞ்சுக்கலாமா?’’

‘‘உன்னை சஸ்பெண்ட் பண்ண வேண்டியிருக்கும்.’’.

‘‘வேண்டாம் சார். எங்கம்மா அப்பா உயிரை விட்டுருவாங்க. ரெண்டு பேருக்கும் ஹார்ட் வீக். எந்த பேப்பரைப் வேணா காட்டுங்க. கையெழுத்துப் போட்டுத் தரேன்.’’

அந்தக் கடிதத்தில் ‘‘சாது ரமணதாஸ், கேம்ப் மெட்ராஸ் 44’’ என்று கையெழுத்துப் போட்டான்.

அந்தப் பெண் இரண்டாம் வருஷத்துக்கு எலக்ட்ரானிக்ஸ் பாடம் எடுத்தபோது வகுப்பில் வந்து ரமணி உட்கார்ந்தான். அவனைப் பயத்துடன் பார்த்தோம்.

‘‘ரமணி இது உன் க்ளாஸ் இல்லை’’

‘‘அட ஜோஜோஎப்படி சொல்லிக் கொடுக்கறதுன்னு டைரக்டர் ரிப்போர்ட் கேட்டிருக்கார்’’.

ஜோதி, ‘‘தி பீரியட் ஆஃப் தி மல்ட்டி வைப்ரேட்டர் இஸ் ஒன் பை ஸி ஆர்’’ என்றபோது, ‘‘உன் பீரியட் எப்ப?’’ என்றான். அவள் எழுதுவதை பாதியில் நிறுத்தி கரும்பலகையிலிருந்து திரும்பிப் பார்த்தாள். ‘‘ரமணி, இது உன் கிளாஸ் இல்லை. இப்ப வெளிய போ’’ என்றாள்.

‘‘நான் ஃபேகல்ட்டி மாத்திட்டேன். இப்ப எலக்ட்ரானிக்ஸ்’’.

‘‘கிளாஸ் ரிஜிஸ்டர்ல உன் பேர் இல்லை. போகெட் அவுட்.’’

‘‘நீயே எழுதிக்க என் பேரை. எல்.ரமணி. டி.நம்பர் 504. இல்ல கொடு, நான் எழுதறேன்’’.

ரிஜிஸ்தரில் தன் பெயரை எழுதினான். ‘‘லேடி லேடி, எங்கிட்ட வாடி. எல்லாம் சொல்லித் தாடி’’

ஒரு கணம் அவனையே கோபமாகப் பார்த்தாள். அந்த எளிய முகத்தில் அத்தனை கோபம்தான் சாத்தியம் என்பதுபோல் சட்டென்று கண்களில் நீர் நிரம்பியது. எத்தனை சபைகளில் எத்தனைப் பெண்கள் அவமானப்பட்டிருக்கிறார்கள். அவர்களது ஒட்டுமொத்தமான பிரதிநிதிபோல சரித்திரம் கடந்து சற்றுநேரம் நின்றாள். பிறகு சாக்பீஸ் கையைத் துடைத்துக்கொண்டாள்.

‘‘தங்கைகளைப் படிக்கவெக்க முதமுதலா வேலைக்கு வந்து சேர்ந்திருக்கேன். ஏன் இப்படிப் படுத்தறீங்க?’’ என்றாள்.

ரமணி ‘‘டேய் படுத்தாதீங்கப்பா. எத்தனை தங்கைங்க?’’ என்றான். சிகரெட் பற்றவைத்தான். பெஞ்சின் மேல் கால் போட்டுக்கொண்டு ஊதினான். எதிர்பாராதவிதமாக ஜோதி என்னைப் பார்த்து, ‘‘576, நீ போய் ரிஜிஸ்ட்ராரைக் கூட்டிட்டு வாப்பா’’ என்றாள்.

ரமணி என்னைப் பார்த்து, ‘‘ரங்குஸ், பலி விழும்என்றான்.

நான் மௌனமாக இருக்க, ‘‘கிளாஸ்ல நாப்பது பேர் இருக்கீங்க.. யாருக்கும் தைரியம் இல்லையா?’’ என்றாள். துரியோதனின் சபைபோல மௌனம்,.

‘‘நான் போறேன் மிஸ். எங்கிட்ட லெட்டர் குடுங்க’’ என்றான் ரமணி

அவளே போர்டை அழித்துவிட்டு டைரக்டரைச் சந்திக்கச் சென்றாள்.

மறுநாள் நோட்டீஸ் போர்டில் எல்.ரமணியின் மேல் மூன்று குற்றச்சாட்டுகள் பட்டியலிட்டிருந்தது. ‘தப்பான வகுப்பறையில், தவறான வார்த்தைகள் பேசினது, வகுப்பில் புகை பிடித்தது. விசாரணை முடியும் வரை ரமணிக்கு வகுப்புகளில் நுழைய அனுமதி இல்லைஎன்று அறிவித்தது.

அதன் பிரதியை ப்யூன் கொண்டு வந்து கொடுக்க ரமணி அவனைத் துரத்தி அடித்தான். ‘‘வக்காளி, எனக்கு நோட்டீஸ் குடுக்க வைஸ் சான்சிலர் தாண்டா வரணும். எல்லாத்தையும் எல்லாரையும் பத்தவைக்கிறேன் பாரு. சிட்டில உள்ள அத்தனை காலேஜ்லயும் ஸ்ட்ரைக்என்று ஆபீஸ் வளாகத்தில் சத்தம் போட்டான்.

அப்படி ஏதும் நிகழவில்லை. ஹாஸ்டலிலிருந்து புறப்பட்டுச் சென்றான். நடுராத்திரியில் திரும்பி வந்து ஜோதி தங்கியிருந்த ஹாஸ்டல் அறைக்கு முன் சத்தம் போட்டான். ‘‘வெளிய வாடி ஏய்!’’ என்று கல்லெறிந்தான். புது ஹாஸ்டல் கட்டுவதற்காகக் கட்டியிருந்த தற்காலிக நீர்த் தொட்டியில் குதித்து ஈரமாக வந்து அவள் கதவைத் தட்டினான். ‘‘ஜோதி ஏய் ஜோதி, ரியலி சாரி ஜோதி. எனக்குப் பேதி ஜோதி. நான் ஏன் அப்படின்னு வெளிய வந்தா சொல்றேன். லவ் யு ஜோதி!’’

அந்த அறை இருட்டாக மௌனமாக இருந்தது. முதல் மாடியிலிருந்து டிசௌஸா, மொரைரா, வெங்கடேசன், நான் எல்லோரும் அவனைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றோம். அந்த அறையில் சலனமே இல்லை. பாவம் அந்தப் பெண், கிலியில் நடுங்கிக்கொன்டு சுருண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.

ஹாஸ்டலிலிருந்து வகுப்பறைக்குச் செல்லும் பாதையில் சரக்கொன்றை மரங்களும் செம்பருத்தியும் நிழல் தரும் ஃபுட்பால் மைதானத்தில் ஒரு டக்கோட்டா ஏரோப்ளேன் இருக்கும். பேருந்துகளின் பணிமனை ஒன்று இருக்கும். ஜோதி அவ்வழியே தன் வகுப்புக்குப் பாடம் எடுக்கச் சென்ற போது, ஒரு புல்லட்டில் கடகடவென்று புழுதி பறக்க ஓட்டிவந்து அவளருகில் சுற்றி நிறுத்தி, ‘‘வா வா, க்ளாஸ்ல கொண்டுவிடறேன்’’. அவள், ‘‘என்கூட பேசாதே’’ என்று விரைவாக நடக்க, அடிக்கடி த்ராட்டிலை விர்விர் பண்ணிக்கொண்டு பாடிகார்டு போல கூடவே ஓட்டி வந்தான்.

அவள் மேலாடைத் தாவணியைப் பிடித்து இழுத்ததாக ஜோதி தன் புகார் கடிதத்தில், போலீஸ் எழுதச் சொன்னார்கள். பாதுகாப்பு கேட்டிருக்கிறாள். பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து இன்ஸ்பெக்டர் வந்தார். டைரக்டரின் அலுவலகத்திலும் அவர் க்வார்ட்டர்ஸிலும் போலீஸ்காரர்கள் நின்றார்கள். டைரக்டருக்கு மகா கோபம். மன்னிப்பே கிடையாது என்று வி.சி. ஆபிஸக்கு எழுதி பர்மிஷன் வாங்கி கேம்பஸைவிட்டு நீக்கி மூணு வருஷம் ரஸ்டிகேட் பண்ணும்படி சிபாரிசு செய்தார். லெக்சரர் டி.எம்.டி. ஜோதியைப் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவனை அரெஸ்ட் பண்ண போலீஸ் வாரண்ட்டுடன் வந்திருந்தார்கள்.

ஹாஸ்டலில் ரமணியைத் தேடினால் காணவில்லை. மாணவர்கள் அனைவரும் பரபரப்பாக முடிச்சு முடிச்சாகக் கூடி இருக்க, டைரக்டரிடம் இந்த தடவை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டோம்.

அவர், ‘‘படிக்கிற பையன், ரேங்க் வாங்குற பையனுக்கு மன்னிப்பு கேளுங்கப்பா. இந்தப் பொறுக்கி எல்லாரையும் கொடுமைப்படுத்திருக்கான். இவனை யாராலயும் காப்பாத்த முடியாது.’’.

‘‘இருந்தாலும் இத்தனை கடுமையாத் தண்டிக்கணுமா?’’

‘‘இது குறைந்தபட்சத் தண்டனை. யூனிவர்சிட்டி ரூல்ஸ் அப்படி’’ என்றார்.

‘‘யாராவது ரமணிகிட்ட போய்ச் சொல்லி ஊருக்குப் புறப்பட்டுப் போகச் சொல்லிரலாம்’’ என்று யோசனை சொன்னார்கள். ‘‘இல்லைடா, அவனை ஒருமுறை உள்ள தள்ளினால்தான் புத்தி வரும்’’

‘‘மூணு வருஷம் டீபார் பண்றது தப்புடா. அவன் வாழ்க்கையே பாழாகிடும்’’.

ரமணி லோக்கல் ட்ரெய்னிலிருந்து இறங்கி தூரத்தில் வந்துகொண்டு இருக்க, அவனை நோக்கி ஓடினேன். ‘‘ரமணி இப்படியே ஊருக்குப் போய்டு. உன்னை அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்திருக்காங்க.’’

‘‘அப்படியா? வெரிகுட் வெரிகுட்எங்க?’’

‘‘டைரக்டர் ஆபிஸ்லபோய்டுரா.’’

‘‘தேவையில்லை. யார் அந்த இன்ஸ்பெக்டர்? விசாரிக்கிறேன்.’’

‘‘ரமணி உன்னை மூணு வருஷம் டீபார் பண்ணிருக்காங்க. ஜெயில்ல போடுவாங்க. இது விளையாட்டில்லை புரியுதா?’’

‘‘என்னடா தப்புப் பண்ணிட்டேன்? எதுத்தாப்பல பஸ் வருது. ஒதுங்கிக்கன்னு அந்தப் பொண்ணைத் தொட்டேன், அவ்வளவுதான்’’.

‘‘நம்பச் சொல்றியா? ஏன் இப்படி மரமண்டையா இருக்கே ரமணி?’’

‘‘பாரு, நம்பாட்டிப் போங்க. டோண்ட் கேர்’’.

‘‘ரமணி சாரிடா’’.

‘‘நானே சாரி இல்லை. நீ ஏண்டா சாரி. ஜோதி அக்காஎப்படி இருக்காங்க?’’

‘‘பயத்துல இன்னிக்கு பூரா கிளாஸ் வரலை. டைரக்டர் ஆபீஸ்லயே இருக்காங்க.’’

‘‘போய்ப் பார்த்தாகணும்’’.

‘‘வேண்டாம் ரமணி’’.

‘‘போடா!’’

டைரக்டர் ஆபீசில் எதிர்ப்புக் குரல் கொடுத்தோம். ‘‘ரமணி ரமணிஎன்று கோஷமிட்டதும் ரமணி அரசியல் தலைவன்போல வணங்கிவிட்டுஉங்களுக்கெல்லாம் நண்பர்களே, ரோஷமுள்ளவர்களே! நாட்டுக் கட்டைகளே! என் மேல இருக்கிற அக்கறைக்காக ஆளுக்கொரு ஏக்கரா நிலம் ஜூலியஸ் சீஸர் உங்களுக்கு கொடுத்தாச்சு பழவந்தாங்கல்ல. தட்டுங்கடா கையை! வாழ்க ஜோதிபாய். மெஸ்ல நெய் ரோஸ்ட் போடச் சொல்லு. இப்ப வந்துர்றேன்’’ என்று உள்ளே சென்றான்.

உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரம் கழித்து முதலில் இன்ஸ்பெக்டர் வெளியே வந்து ஜீப்பில் ஏறிக்கொண்டார். கண்களைத் துடைத்துக் கொண்டு ரமணி மெல்லத்தான் வெளியே வந்தான். அவன் கையில் விலங்கு மாட்டினதுபோல் கர்ச்சீப் கட்டியிருந்தான். அதைச் சடுதியில் பிரித்து அவிழ்த்து, ‘‘த்ரீ சியர்ஸ் டு ஜுலியஸ் சீஸர், ஹிப் ஹிப் §ர்ரே, முண்ட பக்கற மார பக்கற ஓய் ஓய் ஓய்!’’ சொல்லிவிட்டு இரு கைகளையும் உயர்த்தி ‘‘கை தட்டுங்கடா. எல்லா ஆர்டரையும் வாபஸ் வாங்கிட்டாங்க. போலீஸ் கேஸ§ம் வாபஸ்’’.

நாங்கள் குதூகலத்துடன் ‘‘என்னம்மாஎப்படி?’’

‘‘ஒரே ஒரு பொய் சொன்னேன். சால்வ் ஆயிருச்சு. நமக்குக் கைவந்த கலையாச்சே’’

‘‘என்னடா சொன்னே?’’

‘‘எனக்கு லுக்கிமியாஆறு மாசத்தில சாவப்போறேன். அந்த துக்கத்தை மறக்கத்தான் இந்த தமாஷ் எல்லாம் செய்தேன்னேன். டைரக்டர் அப்படியே அழுதுட்டார். அந்தப் பெண்ணும் தேம்பித் தேம்பி அழுதுது. பாரு எம்மேல சாஞ்சுகிட்டு அழுததில சட்டையெல்லாம் ஈரம்! எல்லா புகாரையும் வாபஸ் வாங்கிடுத்து. இன்ஸ்பெக்டர்கூட புறப்படறப்ப ஓரக்கண்ணைத் துடைச்சுகிட்டுத்தான் போனார். பாத்தியா? இந்தா சாப்பிடு’’ என்று வேர்க்கடலை கொடுத்தான்.

அதை உடைத்தபோது உள்ளே எதிலும் பருப்பு இல்லை! ரமணியின் மற்றொரு ஏமாற்று வித்தை.

‘‘டேய் போறுண்டா. இனிமேலாவது பொய் சொல்றதை விட்டுருடா.’’

‘‘பொய்தாண்டா என் உலகத்தை சுவாரஸ்யமாக்கறது. பொய் இல்லைன்னா வாழ்க்கையேஉலகமே இல்லை!’’ என்றான்.

மூன்றாவது செமஸ்டருக்குள் ஜோதி ராஜினாமா கொடுத்து விட்டாள். கல்யாணம் பண்ணிக் கொண்டு அமெரிக்கா போய் விட்டதாகச் சொன்னார்கள்.

ஊருக்குப்போன ரமணி மூன்றாவது செமஸ்டருக்கு வந்து சேரவே இல்லை. அதன்பின் அவனை நாங்கள் பார்க்கவே இல்லை. ஏன் என்று விசாரிக்கப் பயமாக இருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ