அவளுக்குப் பீதியில் உடல் உறைந்துபோயிற்று. கால்கள் கல்தூண்கள்போல்
அசைக்க முடியாததாய் நிலைகுத்தி நின்றன. எதிரே மாபெரும் ராட்சதர்கள் கையை
அகல விரித்து நின்றிருந்தார்கள். ராட்சதர்கள் புராணக் கதைகளில் வருபவர்கள்
என நினைத்திருந்தாள். இல்லை. நிஜமானவர்கள். இதோ, அவள் எதிரே
நிற்கிறார்கள். அவளைச் சுற்றியிருந்த கும்மிருட்டில் அதிகக் கருமையோடு
பூதகணங்களாய்த் தெரிந்தார்கள். அவளுக்கு வியர்த்துப்போயிற்று.
சற்று
நேரத்தில் அவள் அந்த விரித்த கரங்களால் நொறுக்கப்படலாம். கரை சேருவதற்கு
முன் உயிர் போகும். நெஞ்சு படபடத்து வெறும் கூடாகிப்போன மார்பைவிட்டு
விண்டு வெளியே தெறித்துவிடும்போல இருந்தது. உள்ளே பறை அடிக்கும் ஓசை
எதிரில் நிற்பவர்களுக்குக் கேட்டுவிடும் என்று பயமேற்பட்டது.
மண்டியிட்டுவிடலாம்போலக் கால்கள் வெலவெலத்தன.
என்னைக் கொன்னுபோடுங்கோ… ஒரே போடாப் போட்டுத் தொலையுங்கோ… தினம் தினம் சாக இயலாது…
சாக உனக்குப் பயம். எங்களுக்குத் தெரியும்.
பயம்தான். கன பயம். நெஞ்சு நடுங்குகிறது. கையும் காலும் நடுங்குகின்றன.
கண் எதிரே சாவைத் தினமும் பார்த்தவளுக்குப் பயம்! வேடிக்கைதான்.
வேடிக்கை இல்லே. விதி. தலைவிதி.
தலையை மடேர்மடேரென்று அடித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. இரண்டு கைகளிலும் இரண்டு பைகள் இருந்தன.
உனக்குப் பயத்திலிருந்து விடுதலை வேணுமா?
வேணும் வேணும் எனத் தலை தன்னிச்சையாக அசைந்தது.
அவளை நோக்கி அவர்கள் வந்தார்கள். மதர்த்த நடை, அவளை ஒரே எட்டில்
விழுங்கவருவதுபோல. வராதீங்க! வெடவெடத்த கால்களுக்கு நடுவே சூடாகச்
சிறுநீர் இறங்கிற்று. அவளுக்கு அவமானமாக இருந்தது. எத்தனை கேவலமாகிப்போனது
இந்த உடல் என்று துக்கமேற்பட்டது.
அவள் கண்களை மூடிக்கொண்டாள். தலையில் ஒரே போடாகச் சம்மட்டி அடி விழும்
என்று அவள் காத்திருந்தாள் அல்லது குண்டு வெடிக்கலாம். ஒரே குண்டு போதும்
சருகாய்ப்போன உடலுக்கு. அப்பளம் நொறுங்குவதுபோல வெறும் கைகளால்கூட
நொறுங்கிவிடும். ஒரு யுகம் கழிவதுபோல் இருந்தது. அவள் காத்திருந்தாள்.
இறப்பதற்கு முன், வாழ்ந்த வாழ்வு சித்திரம்போல் மனக்கண்ணில் ஓடும் என்று
யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறாள். அது இயல்பாகச் சாவு வரும்போது.
வாழ்வைப் பூரணமாக வாழ்ந்த திருப்தியுடன் இலை உதிரும் வேளைக்குக் காத்துப்
படுத்திருக்கும்போது. இப்போது கதையே வேறு. சாகக் கூடாத வயதில் மரணத்தை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் உறைந்த வேளையில், திடீரென்று சாவு
தாக்கிவிட்டுப் போகும்போது சித்திரத்துக்கும் ஓவியத்துக்கும் நேரமேது?
திகைப்பதற்குக்கூட நேரமில்லை. தவிர கந்தலாகிப் போன வாழ்வின் சித்திரத்தைப்
பார்த்துத்தான் என்ன ஆகப்போகிறது? கழுத்தில் சுருக்கு விழும் நேரத்தை
எதிர்நோக்கியே கழிந்த பயந்தாங்கொள்ளி வாழ்வு. பிறந்ததிலிருந்து பயம்
தன்னைத் துரத்துவதாக அவள் நினைத்துக்கொண்டாள். தாயின் மார்பில் பால்
உறிஞ்சிய வேளையிலிருந்து. திடீரென்று மார்புக்காம்பு அவள் வாயிலிருந்து
விலகிய தருணங்கள் அவளுக்கு ஆச்சரியமாக நினைவிலிருந்தன. அவளை மார்புடன்
அணைத்தபடி ஓடிய அம்மாவின் இதயம் அடித்துக் கொண்ட ஒலிகூடத் துல்லியமாக
ஞாபகம் இருந்தது. கண்ணை மூடினால் ஓட்டம்தான் நினைவுக்குவரும். தூக்கத்தில்
எழுப்பப்பட்டுக் கண்ணைத் திறக்காமலே ஓடியதும் உண்டு. இலக்கில்லாத ஓட்டம்.
ஓடுவதிலேயே வாழ்நாள் கழிந்துவிட்டதைப் போலிருந்தது. பயம் இப்போது
துரத்தவில்லை. அங்கமாகிப்போனது. பயமற்ற வாழ்வை இனி வாழ்வதுகூடச்
சாத்தியமில்லை.
எங்கே ஓடணும் என்று விளங்காதபோது எந்த எதிர்பார்ப்பில் என்னைப்
பெற்றாய் என்று அம்மாவைக் கேட்க வேண்டுமென மனது பதைக்கிறது. சில சமயங்களில்
கோபம் முட்டுகிறது. புணர்ச்சியின் கணநேர சுகத்தில் நீ வித்திட்ட
பாவியானேன் நான் என்று அம்மாவை உலுக்க வேண்டும்போல் இருந்தது. ஆனால்
காணாமல் போய்விட்ட அம்மாவிடம் எப்படிக் கேட்பது?
ஓட வேண்டியிருக்கிறது. எதற்கு எங்கே என்று விளங்காமலே. என்னவோ ஒரு
குரல் பிடறியைப் பிடித்துத் தள்ளுவதுபோலத் தள்ளுகிறது. ஓடு! ஓடு! அவளுக்கு
அழுகை வந்தது. ஆண்டவா, முடியவில்லை. உடம்பிலேயும் மனசிலேயும் திராணி
இல்லே. ரத்தத்தோடு சம்பந்தப்பட்டதாக நினைத்த மொழிகூட மறந்துபோச்சு.
என்னென்னவோ சொற்கள். இதுவரை உச்சரிக்காத வார்த்தைகள் கலந்துவிட்டன. அது
ஒரு கலப்படம். நான் ஆகிவிட்ட மாதிரி. நாடு இருந்தால்தான் மொழி இருக்கும்
என்று யாரோ சொன்னார்கள். உண்மைதான் . என் மொழி செத்துவிட்டது. நான்
சாவதற்கு முன். ஏனென்றால் நாட்டைத் துறந்த பிறகு, நானும் சாகக்
கிடக்கும்போது அது எங்கே நிற்கும்?
தன் பரிதவிப்பு எதிரில் நிற்கும் ராட்சதர்களுக்குப் புரிந்ததாக அவள்
நினைத்தாள். அவளுக்கு யோசிப்பதற்கு நேரம் கொடுப்பதுபோல அவர்கள்
குத்திட்டு அமர்ந்து பீடி புகைக்கிறார்கள். குணா பீடி புகைக்கும் போது
கண்களை மூடிக்கொள்வான். சொற்ப நேரத்துக்குத் தன்னையும் தனது சூழலையும்
மறக்க முனைந்தவன் போல. அது சாத்தியமென்றால் எனக்கும் ஒரு பீடி கொடு என்று
அவனைக் கேட்க வேண்டும்போல் இருக்கும்.
அவள் மெல்ல நடையைத் துரிதப்படுத்தினாள், ராட்சதர்களின் இமைகள் சில
விநாடிகளுக்கு மூடியிருக்கும் என்கிற யோசனையில். பாதையே இல்லாத காட்டுப்
பகுதியில் கும்மிருட்டில் செருப்பில்லாமல் பதுங்கி நடக்க அசாத்தியத்
துணிச்சல் வேண்டும். துணிச்சல் என்பது மனத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
பிடறியில் இருந்தது. நட, நட, வேகம் வேகம் என்று தள்ளிற்று. யாரோ அவளுடைய
புடவையைப் பிடித்து இழுத்தார்கள். அவளுக்கு நாக்கு உலர்ந்துபோயிற்று.
‘யாரு?’ எனக் கேட்கத் துணிந்த வார்த்தை தொண்டையின் உருளையில் சிக்கி
உருவமற்று ஒலியிழந்துபோயிற்று.
“புனிதா!”
“ஓ நீங்கதானா சீலையைப் பிடிச்சு இழுக்கறது?”
“சீ! ஏதாவது செடியிலே மாட்டிட்டிருக்கும்!”
“பயமாயிருக்கு குணா!”
“நிக்கப்படாது. பயப்பிடாதை!”
சரேலென்று புடவையை இழுத்ததில் சர்ரென்று கிழியும் ஓசை கேட்டது. குணா
லுங்கியை முழங்காலுக்கு மேல் மடித்துக்கட்டியதுபோல உள்பாவாடையுடன்
சேர்த்து மடித்துக்கட்டினாள். வழக்கம்போல மாக்ஸி அணிந்திருக்க வேண்டும்.
அதைவிடப் புடவை பாதுகாப்பானது என்று குணா சொன்னான். மாக்ஸி காட்டிக்
கொடுக்குமாம் ஏதோ அது அவளுடைய தேசிய உடுப்புப் போல.
விடிவதற்குள் யார் கண்ணிலும் படாமல் போய்விட வேண்டும். இயலுமா?
ராட்சதர்கள் பின்தொடர்கிறார்களா என்று அவள் திரும்பிப் பார்க்கப்
பயந்தாள். சரியான பாதைதானா இது? குணாவை டோர்ச்சை ஏற்றச் சொல்லலாம் என்று
நினைத்து அவன் மாட்டான் என்று பேசாமல் சிரமப்பட்டுக் கண்களைக்
கூர்மைப்படுத்திப் பார்த்தாள். மீண்டும் அவளைச் சுற்றிவளைத்தது போலக் கரிய
பூதங்கள் நின்றிருந்தன. அவளுக்கு அங்கமெல்லாம் நடுங்கிற்று. எங்கே
சென்றாலும் பூதங்கள் துரத்துவது எப்போது நிற்கும்? உயிருடன் இருக்கும்வரை
துரத்தும் என்று அவளுக்குத் தெரியும். பூதங்களோடு போரிட்டாக
வேண்டுமென்பது தலையெழுத்து. கடந்த பல ஆண்டுகளாகக் கண்ணை மூடினாலும்
திறந்தாலும் எதிரில் நின்று ஆட்டம்போடும் பிசாசுகள். இருப்பவர் இல்லாதவர்,
மறைந்தவர், காணாமல்போனவர், தியாகிகள், துரோகிகள் எல்லாருமே. அவளுக்கு
அவர்களுடன் சம்பந்தம் இல்லாவிட்டாலும் அவளைக் கலங்கடித்தார்கள். ‘ஓ’ என்று
ஓலமிட்டார்கள். அவளது இருத்தலே அவள் செய்த குற்றம் என்பதுபோல. இதிலிருந்து
மீட்சி எப்போது என்று அவள் மிரண்டாள். அவர்களது ஏசலில் நியாயம் இருந்தது.
நா வந்தது தப்பு. அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதையானது. இந்தப்
புலம்பல் எதுவும் எதிரில் நிற்கும் பைசாசங்களுக்குச் சமாதானம் அளிக்காது
என்று அவளுக்குத் தெரியும். சில விநாடிகளில் அவளைச் சூழ்ந்து வீழ்த்தி
அவளைப் புதைகுழியில் தள்ளிவிடுவார்கள்.
“பயமாயிருக்கு குணா. யாரோ நிக்கிற மாதிரி இருக்கு.”
சொற்கள் காற்றில் பிசிறலாக நார்நாராய்க் கிழிந்துபோயின.
“கம்பங்கள் நட்டிருக்கு. நாளைக்குப் பேசப்போற தலைவருடைய அட்டை முகத்தோட. நாங்கூட முதல்லே பயந்தேன்.”
குணாவுடைய தமிழே மாறிவிட்டது. அதுவும் நல்லதிற்குத்தான், போலீஸால் கண்டுபிடிக்க முடியாது என்று அவள் கணக்குப்போட்டாள்.
“யாரு? அங்க வந்து கதைச்சாரே? அந்த ஆளுதானே?”
“ஆமாம்” என்றான் குணா. “கண்ணீர்கூட விட்டார்”
மேற்கொண்டு பேச்சைத் தொடரக் கூடாது என்ற நினைப்புடன் அவர்கள் நடந்தார்கள்.
மூன்று நாட்களாகத் தூங்காதது அசத்திற்று. கொஞ்சநேரம் அமர்ந்து ஒரு
சின்னத் தூக்கம்போட்டு நடையைத் தொடரலாம் எனச் சொல்ல நினைத்துப் பிறகு
வாயை மூடிக்கொண்டாள். இதுவே மிகச் சிரமப்பட்டுக் கிளம்பிய பயணம். இலக்கை
அடையும்வரை மூச்சுவிட முடியாது.
இலக்கு. அது என்னவெனக் குணாவுக்கும் நிச்சயமில்லை என்று அவள்
நினைத்தாள். ஆனால் ஒரே ஒரு பிடிவாதம் இருவருக்கும் இருந்தது. போய்விட
வேண்டும். எப்படியாவது அந்த நரகத்தைவிட்டுப் போய்விட வேண்டும்.
எங்கே?
குணா ஒரு நாள் இரவு மிகத் தீவிரமாக, போயிறலாம் புனிதா, இனி இங்க இருக்க முடியாது என்று சொன்ன போது அவள் கண்கள் விரியக் கேட்டாள்.
எங்கே?
எங்கட நாட்டுக்கு.
அவளது உலர்ந்த நெஞ்சுக்குள் சாரல் வீசிற்று.
அச்சச்சோ, அது இன்னொரு நரகம்.
நரகமோ சொர்க்கமோ எங்கட நாடு. எங்கட சனம்.
அவன் பீடி ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு நீண்ட சுவாசம் எடுத்துக் கண்களை மூடிக்கொண்டான்.
அவள் அந்த இடைவெளியில் ஊரின் தெருவில் தலைநிமிர்ந்து நடந்தாள்.
நிமிர்ந்து நடந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்று யோசித்தாள்.
நினைவில்லை. எங்கும் அமைதி. ஊருக்குள் இன்னும் எத்தனை பேர் இருப்பார்கள்?
தெரியவில்லை. யாருமே இல்லைபோல் இருந்தது. மயான அமைதி. ஆனால் அவள் இருந்த
தெரு. அவள் பிறந்த இடம். அவள் விளையாடிச் சிரித்து மகிழ்ந்த தருணங்கள்
உண்டு. தோழிகள் இப்போது எங்கே எனத் தெரியாது. உலகத்தின் எந்தப்
பாகத்திலாவது கண்காணாத தேசத்தில் புரியாத பாஷையைக் கற்றுக்கொண்டு வாழப்
பழகியிருப்பார்கள். மண்ணைத் துறந்தாலும் மானத்தோடு வாழ்கிற புத்திசாலிகள்.
சுறுசுறுவென்று பிடறியில் வேகம் பற்றிக்கொண்டது.
உண்மைதான். எங்கட நாடு. போயிறலாம். எப்படி குணா?
திட்டம் போட்டிருக்கன். ஒரு ஆள் படகு பிடிச்சுத் தர்றதாச் சொல்லியிருக்கான். மீனவர் போட்டு.
போலீஸ் இருக்குமே. விடுவான்களா?
பார்ப்பம். துணிஞ்சாகணும்.
செலவாகுமே? சேமிப்பெல்லாம் போகுமே?
வேற வழியில்லே. இங்க இனி இருக்க இயலாது. பேடியா, பிச்சைக்காரனா… மானமற்றவனா…
“புனிதா, நிக்கப்படாது வேகம் வாங்கோ!”
“இன்னும் எத்தனை தூரம்?”
“அதிகம் இல்லையிண்டு நினைக்கிறன். ரோடு தெரியுது. விளக்கு வெளிச்சம் தெரியுது”
அவளுக்கு லேசாக நம்பிக்கை பிறந்தது. கரிய பூதங்கள் பின்னால்
நகர்ந்துபோக ஆரம்பித்தன. சீரான பாதைக்கு வந்தார்கள். நெடுஞ்சாலையாக இருக்க
வேண்டும். முள்ளும் கல்லும் பாதங்களைக் குத்தவில்லை. கடல் காற்று
சில்லென்று அடித்தது. அவளுக்கு உடம்பு முழுவதும் சிலிர்த்தது. கடலுடன்
அவளுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. கடற்கரையில் பிறந்தமேனிக்கு அவளை அம்மா
மல்லாக்கக் கிடத்திய நாட்களிலிருந்து. வானத்து மேகங்களையும் இரவின்
நட்சத்திரங்களையும் நண்பர்களாய் நினைத்துப் பொக்கை வாயால் சிரித்த
நாட்களிலிருந்து. அம்மா பாலூட்ட அணைக்கும்போது உவர்மண்ணும் பாலுடன் உள்ளே
செல்லும். அந்தக் கடல்கூட ஒரு நாள் இங்கு உனக்குப் பாதுகாப்பு இல்லை என
விரட்டிவிட்டது.
“எங்கே போகனுண்டு தெரியுமா?”
“இடம் தெரியும். விலாசம் இருக்கு”.
குணா ஒரு இருண்ட சந்திற்குள் நுழைந்து நடையை வேகப்படுத்தி அவளைச்
சைகையால் துரிதப்படுத்தினான். அவன் ஏற்கனவே இங்கு வந்திருப்பான் என்று அவள்
நினைத்துக்கொண்டாள். அதை அவளிடம் பகிர்ந்து கொள்ளாதது வியப்பைத்
தரவில்லை. அவர்களுக்குள் இயல்பான பேச்சுக்கே இடமில்லாமல் போனதாகத்
தோன்றிற்று. பேச்சு சீனி இருக்கா அரிசி கிடைச்சுதா, கழிப்பறையிலே ஆள்
இருக்கா என்கிற வாக்கியங்களோடு நின்றது.
இருவரும் சேர்ந்து மாமரத்துக்கடியில் அமர்ந்து குண்டுகளை மறந்து,
பதுங்கு குழிகளை மறந்து, இறந்து போனவர்களை மறந்து, காதல்வயப்பட்டுப்
பேசிச் சிரித்ததெல்லாம் கனவாக இருக்க வேண்டும். புகைமண்டலமாகக் காற்றோடு
கலந்துபோன கனவு. அத்தனை அவலத்துக்கு நடுவில் கனவு காண எப்படிச்
சாத்தியமாயிற்று என இன்றளவும் விளங்கவில்லை. அட பைத்தியங்களா என்று மாமரம்
கைகொட்டிச் சிரித்தது செவியில் விழவில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன் அவள்
ஒற்றை ஆளாய் இங்கு வந்து கரைசேர்ந்து அலங்கமலங்க விழித்துக்கொண்டு
நின்றபோது படிக்கட்டில் அவளுக்காகவே காத்திருந்ததுபோல நின்றிருந்த குணா
அவளைச் சாப்பாட்டுக் கூடத்துக்கு அழைத்துச் சென்றான். முகாமுக்கு வந்து
ரெண்டு நாளாச்சு என்றான். அழுதுகொண்டேயிருந்த அவளைச் சமாதானப்படுத்தினான்.
இங்கே மரண பயமில்லே. ஆர்மிக்குப் பயந்து பதுங்குகுழியைத் தேடி ஓட
வேண்டியதில்லே. இருக்கவும் படுக்கவும் இடமுண்டு. சாப்பாடு கிடைக்கும். வேற
என்ன வேணும்? இது இடைக்கால ஏற்பாடுதானே?
கனவுகள் பூக்கும் வயது அது. காதலே நம்பிக்கைக்கு உரமிட்டது. மீண்டும்
சொந்த ஊருக்குத் திரும்பியதும் எப்படிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொள்ள
வேண்டும் என்கிற தீர்மானமான எண்ணம் இருந்தது. அது சாத்தியமற்றது என்னும்
ஐயம் தோன்ற முடியாத அளவுக்கு.
குணா ஒரு வீட்டின்முன் நின்றான். இன்னும் இருள் கருமையாக இருந்தது. மணி
இரண்டு இருக்கும் என்று அவள் நினைத்துக்கொண்டாள். குணா கதவை லேசாகத்
தட்டினான். உடனடியாகக் கதவு திறந்தது. மீசை வைத்த ஒருத்தன் வெளியே வந்தான்.
‘ஒரு பிரச்சினை இருக்கு’ என்றான் ரகசியக் குரலில். ‘இன்னிக்கித் தோணி
கிடைக்காது. நாளை இரவுதான் போக முடியும். கட்சித் தலைவருங்க எல்லாம் இங்கே
ஊர்வலத்துக்கும் பேரணிக்கும் கூடியிருக்கறதாலே போலீஸ் கெடுபிடி பயங்கரமா
இருக்கு.’
‘அப்ப?’ குணாவின் குரல் தீனமாக ஒலித்தது.
‘நீங்க தங்கறதுக்கு ரூம் ஏற்பாடு பண்ணியிருக்கேன்.’
அவன் விறுவிறுவென்று முன்னால் நடக்க அவர்கள் பின்தொடர்ந்தார்கள்.
‘எங்களைத் தேட ஆரம்பிச்சா பிரச்சினையாயிடும்’ என்றான் குணா.
அந்த ஆள் சிரித்தான். ‘கவலையே படாதீங்க. இன்னிக்கும் நாளைக்கும்
அவங்களுக்குத் தலைக்குமேல வேல. சினிமாக்காரங்க வேற பேச வராங்க. கூட்டத்தைச்
சமாளிக்கிறதே பெரும்பாடாயிடும். உங்களை வேலை மெனெக்கெட்டு எவனும்
தேடமாட்டான்’
ஒரு கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்த ஒற்றை அறையில் அவர்களை விட்டு,
“படுத்துத் தூங்குங்க நிம்மதியா. இங்கே விளக்கு இல்லே. கதவைத் திறந்து
வெச்சீங்கன்னாக் காத்துப் பிச்சுக்கும். கக்கூஸ் இருக்கு மொட்டை
மாடியிலேயே. தண்ணி இருக்கு. காலையிலே வந்து பார்க்கறேன். மாடிக் கதவைப்
பூட்டிக்கிட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அறையில் ஒரு மண்பானையில் நீரும் க்ளாசும் இருந்தன. வேறு எதுவுமே இல்லை.
அவள் பையை மூலையில் வைத்து ‘இதுவும் நல்லதுக்குத்தான். நடந்து
களைச்சுப்போச்சு. தூங்கணும்போல இருக்கு’ என்றாள்.
குணா எதுவும் சொல்லவில்லை. டோர்ச்சை வைத்துக்கொண்டு கழிப்பறைக்குச் சென்றுவந்தான்.
‘முகாம் கக்கூஸைவிடத் தேவலை’ என்றான். ‘காலையிலே லைன்லே நிக்க வேண்டாம். அடிதடிச் சண்டை இருக்காது’ அவன் சிரித்ததுபோல இருந்தது.
அவளும் சென்றுவந்து குழாயடியில் முகத்தைக் கழுவிக்கொண்டாள்.
வெறும் தரையில் இருவரும் படுத்தார்கள். உடம்பு ஓய்ந்திருந்தது.
திறந்திருந்த கதவின் வழியாகச் சுகமாகக் காற்று வந்தது. குணாவிடமிருந்து
மெல்லிய குறட்டை ஒலி கேட்டது. அவள் கண்களை மூடிக்கொண்டாள். ஆற்று மணல்
சரிவதுபோல மனது அதலபாதாளத்துக்குச் சரிய ஆரம்பித்தது. இறக்கை
கட்டிக்கொண்டு ஆலாய்ப் பறந்தது. சுற்றிலும் இருந்த ஏக இரைச்சலில்
பறந்தவண்ணம் இருந்த அதைப் பார்ப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.
பாதாளத்தில் மனிதக் கும்பல்கள். நிர்வாணக் கும்பல். கண்ணாடிபோலத்
துல்லியமாகத் தெரியும் காயங்கள். அதிர்வுகள். ஏமாற்றங்கள். கோபங்கள்.
வெற்றுக் கைகள் ஆகாசத்தை நோக்கி இறைஞ்சுகின்றன. பொருள் விளங்காத சத்தம்
பாதாளத்திலிருந்து எழுந்தவண்ணம் இருக்கிறது. அவளுக்குக் காரணம் புரியாமல்
துக்கம் நெஞ்சை அடைக்கிறது. கண்களிலிருந்து நீர் வழிகிறது. கண்ணீர்
நிற்காதுபோல் வழிகிறது.
காலையில் சொன்னபடிக்கு அந்த ஆள் வந்தான் டிபன் காப்பியுடன். மதியம்
என்னாலெ சாப்பாடு கொண்டுவர முடியாமப் போகலாம். அதனால கொஞ்சம்கூடக்
கொண்டாந்திருக்கேன் என்றான். அவள் கூச்சத்துடன் ‘ஐயோ போதுங்க. இது
ரொம்ப அதிகம். ராவுக்கும் இருக்கும்’ என்றாள். அந்த ஆள் மறுபடி
பூட்டிக்கொண்டு போனான். இருவரும் குளித்துச் சாப்பிட்டு முடிக்கும்போது
ஒலிபெருக்கிச் சத்தம் கேட்க ஆரம்பித்தது.
ஊர்வலம் ஆரம்பிச்சாச்சு என்றான் குணா. காதைப் பிளக்கும் கோஷங்களின் சத்தம் கேட்கத் தொடங்கியது.
‘கொல்லாதே கொல்லாதே! தமிழினத்தை அழிக்காதே!’
அவர்கள் கதவைச் சாத்திக்கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்தார்கள்.
ரொம்பப் புழுக்கமாக இருந்தது. கதவைத் திறந்துவைக்கலாமா? என்றாள். வேண்டாம்
என்று அவன் போட்ட சத்தத்தில் மௌனமானாள்.
வெகுநேரத்துக்குச் சத்தம் கேட்டது. முழங்காலுக்குள் முகத்தைக் கவிழ்த்து
அமர்ந்திருந்த குணா கீழே படுத்தான். சற்று நேரத்தில் அவன் கண் அயர்வது
எப்படி என்று அவள் வியந்தாள். தூங்கட்டும், பிறகு எப்போது தூங்கக்
கிடைக்குமோ. அவள் எழுந்து மெல்லக் கதவைத் திறந்து மொட்டைமாடிச்
சுவருக்கருகில் சென்று பார்த்தாள். வெளியே கடற்கரையை அடைத்துத் திருவிழா
போல் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. அவளுக்கு நம்ப முடியாத திகைப்பு
ஏற்பட்டது. அவள் நின்ற இடத்திலிருந்து ஒரு பிரம்மாண்ட மேடை தெரிந்தது.
மேடையை அடைத்துப்போட்டிருந்த நாற்காலிகளில் பேச்சாளர்கள்
அமர்ந்திருந்தார்கள். அவர்களில் முன்வரிசையில் அமர்ந்திருந்த நான்கு பேரை
அவள் பார்த்திருக்கிறாள். முகாமுக்கு வந்தவர்கள். குணாவுக்குச் சொல்லலாமா
என்று நினைத்துப் பேசாமல் இருந்தாள்.
ஒலிபெருக்கி அருகில் நின்றதுமே விசையைத் தட்டினதுபோல ஆவேசமாகப்
பேசினார்கள். அவர்களது சொந்தக் குரலே கடல் தாண்டிக் கேட்கும் என்று அவள்
நினைத்தாள்.
இரு கைகளையும் மாறி மாறி வீசிப் பேசினார்கள். யார்யாரையோ மூர்க்கமாகத் திட்டினார்கள்.
‘இவர்கள் உப்புப் போட்ட உணவைச் சாப்பிடுபவர்களா? சுரணை என்று ஒன்று
இருந்தால் நமது இனம் அழிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்களா?
கொசுக்கள் வீழ்வதுபோல் ஒரு அரக்கனால் வீழ்வது யார்? நமது சகோதரர்கள்.
நமது தொப்புள்கொடி உறவு. அவர்களுக்காகப் பதைக்காத நெஞ்சம் தமிழ் நெஞ்சமா?
இவர்கள் தமிழ்த் துரோகிகள். பதவி வெறி பிடித்தவர்கள்.’
கூட்டம் ஆரவாரத்தோடு கரகோஷித்தது. துரோகிகள்! துரோகிகள்!
நாமே துவக்கைத் தூக்கிக்கொண்டு செல்வோம்! வீரமரக்குடிமகன் தமிழன்! வாளெடுத்துச் செல்வோம்!
அவளுக்கு மார்பு படபடத்தது. அலைமோதும் மக்கள் கூட்டம் உணர்வு
விளிம்பில் நின்றது. சுற்றிலும் போலீஸ் நின்று வேடிக்கை பார்த்தது.
மேடையில் அமர்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவராகப் பேசினார்கள். இரவு முழுவதும்
இது நீடிக்குமோ என்று அவளுக்கு அச்சம் ஏற்பட்டது. திடீரென்று யாரோ மேடையை
நோக்கிக் கல்வீசியதுபோல் இருந்தது. போலீஸ் விரைந்தது. ‘ஐயோ ஐயோ’ என்ற
கூச்சலும் குழப்பமுமாகக் கடற்கரை மாறியது. போலீஸ் தடிப் பிரயோகம் செய்ய,
கற்கள் சரமாரியாக வீசப்பட்டன. ஒரு கல் மொட்டைமாடியில் விழுந்தது. அவள்
சட்டென்று குனிந்து அறைக்கு விரைந்து கதவைச் சாத்திக்கொண்டாள். இனம்
புரியாத ஒரு அவமானம் அவளை ஆட்கொண்டது. குணா விழித்துக்கொண்டிருந்தான்.
கூரையைப் பார்த்தபடி படுத்திருந்தான். அவள் பேசாமல் அவன் அருகில்
படுத்தாள். வெகுநேரத்துக்கு வெளியே சத்தம் கேட்டது. அவள் அவனை இறுக
அணைத்துக்கொண்டாள். அவன் உணர்வற்றவனாகப் படுத்திருந்தது விசனமாக இருந்தது.
அவனுள் ஜீவன் செத்துச் சில நாட்கள் ஆகிவிட்டன என்று அவள்
கணக்குப்போட்டாள். அன்றுதான் இவன் இப்படிக் கட்டையாக மாறினான்.
அன்று முகாம் ஒரே பரபரப்பாக இருந்தது. வழக்கத்துக்கு விரோதமாகச்
சண்முகம் தாத்தா உற்சாகமாக இருந்தார். ஒவ்வொரு வாசலுக்கும் சென்று
சொன்னார். ரெண்டு மூணு தமிழ் கட்சித் தலைவர்கள் வருகிறார்கள். நம்ம
கஷ்டங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். வேட்டி சேலை விநியோகத்துக்குப் பிறகு
நம்ம பிரச்சினையை விளக்கணும்.
ஒரு மாபெரும் கூட்டம் அவர்களுடன் வந்தது. கூடவே வந்தன பைபையாகச்
சேலைகளும் வேட்டிகளும் வியாபாரம் பண்ண வந்ததுபோல. வீட்டுக்குள் இருந்த
அத்தனைபேரும் கூடிவிட்டார்கள் அவர்கள் எதிரில். அவர்கள் கையில் புடவையைத்
தலைவர் நீட்டும்போது புகைப்படம் எடுத்தார்கள். அங்கேயே தயங்கி நின்றவர்களை
நகருங்க என்று தலைவரின் ஆட்கள் விரட்டினார்கள். விநியோகம் முடிந்ததும்,
தலைவர்கள் பேச ஆரம்பித்தார்கள். உங்களுக்கு நாடு கிடைக்கும். பேரினவாதம்
ஒடுக்கப்படும். தமிழின மானம் காக்கப்படும். அதற்கு நாங்கள் உறுதி
அளிக்கிறோம்.
சண்முகம் தாத்தா முன்னால் நகர்ந்தார். ‘ஐயா, எங்களுக்குப் பிரச்சினை இருக்கு.’
‘தெரியும் பெரியவரே, அதைத் தீர்க்கத்தானே போராட்டம் நடத்துறோம்?’
‘அதில்லை ஐயா . . .’
‘அதுதான் மாபெரும் பிரச்சினை. அதுக்குத் தீர்வுகாண, உயிர்த் தியாகம் செய்யவும் இங்கு தமிழ் மக்கள் தயங்கமாட்டார்கள்.’
‘ஐயா, பிரச்சினை என்னண்டா . . .’
‘பெரியவரே, எல்லாப் பிரச்சினையும் தீரும் நாள் வெகுதூரத்தில் இல்லை. கவலை வேண்டாம்.’
சண்முகம் தாத்தாவின் தோளைச் சிநேகிதமாகத் தலைவர் அணைக்கிறார். யாரோ புகைப்படம் எடுக்கிறார்கள்.
‘நகருங்க. தலைவருக்கு வேற ஒரு கூட்டத்துக்குப் போகணும்.’
அவர்கள் நகர்ந்தார்கள். சண்முகம் தாத்தா தடாலென்று கீழே படுத்துத்
தலைவரின் காலைப் பிடித்தார். ‘ஐயா எங்கட பிரச்சினையைக் கேளுங்க. கூரை
ஒழுகுது. சாக்கடை நாத்தம் குடலைக் குமட்டுது. கொசுத்தொல்லை தாங்க
முடியல்லே. கழிப்பறை வசதி பத்தல்லே. ரேஷன் பண்டம் குறைவா இருக்கு.’
தலைவர்கள் முகத்தில் சங்கடம் தெரிந்தது. நாலுபேர் குண்டுக்கட்டாகத்
தாத்தாவைத் தூக்கினார்கள். ‘கவனிக்கிறோம் பெரியவரே’ என்று ஒரு தலைவர்
சொல்லி நகர்ந்தார். கூட்டம் நகர்ந்தது.
முகாம் ஊழியன் தாத்தாவைப் பார்த்து முறைத்தான். ‘போய்யா, அவங்கெல்லாம்
எவ்வளவு பெரிய ஆளுங்க, அவங்க எதிர பஞ்சப் பாட்டுப்பாடி மானத்தை
வாங்குறியா?’
‘ஊரிலே அடிபட்டுச் சாவுறாங்க. இந்த அகதிப் பண்டாரங்களுக்கு இருக்கிற சொகுசைப் பாத்தியா?’
தாத்தாவின் முகத்தைப் பார்க்கச் சகிக்காமல் அவள் விறுவிறுவென்று
அறைக்குச் சென்றாள். குணா குப்புறப்படுத்து அழுதுகொண்டிருந்தான். ஏன்
அழுகிறாய் என்று அவள் கேட்கவில்லை. அன்று இரவுதான் அவன் சொன்னான்.
‘புனிதா போயிறலாம்.’
இருள் சூழ்ந்துவிட்டது. மிச்சமிருந்த இட்டிலியை எடுத்து அவள் இலையில்
வைத்தாள். சாம்பார் கெட்டிருந்தது. வெறும் இட்டிலியை மென்று நீர்
குடித்துவிட்டுக் காத்திருந்தார்கள். நடுநிசிக்குமேல் அந்த ஆள் வந்தான்.
படகு இருக்கு, போயிறலாம் என்றான்.
‘உங்களுக்கு எவ்வளவு கொடுக்கணும்?’
‘அதெல்லாம் வேணாம். நீங்க பத்திரமாப் போகணும். பர்மிட் இருக்கா
போகன்னு போலீஸ் பிடிக்காம இருக்கணும். நேத்து ரெண்டு குடும்பம்
மாட்டிக்கிச்சு. முகாமுக்குத் திருப்பி அனுப்பிச்சுட்டாங்க.’
மூவரும் மௌனமாக நடந்தார்கள். கடற்கரையை அடைந்ததும் இருளில் நின்றிருந்த
படகோட்டிக்கு, குணா இடுப்பில் செருகியிருந்த பணத்தை எண்ணிக் கொடுத்தான்.
‘எங்கே இறக்கணும் தெரியுமில்லே?’
படகோட்டி தலையை மட்டும் ஆட்டி ரொம்ப ஆபத்தான விஷயம் என்றார் பணத்தைச் சரிபார்த்தபடி.
இனி உன் பொறுப்பு என்று அந்த ஆள் திரும்பிப் பார்க்காமல் கிளம்பிப் போனான்.
‘வாங்க’ என்று படகோட்டி அவசரப்படுத்தினார். ‘கடற்கரை ரோந்து போலீஸ் கண்ணுலே படறதுக்குள்ளே போகணும். வேகம், போயிறலாம்.’
அவர்கள் படகில் அமர்ந்ததும் படகு மெல்ல நகர்ந்து வேகமெடுத்தது.
படகோட்டிக்கு இதுவே தொழிலாக இருக்கும் என்று அவள் நினைத்தாள். காற்று
அவள் கன்னங்களில் உரசியபோது சுகமாக இருந்தது.
சிரிக்க வேண்டும் போலிருந்தது. சட்டென்று அவளுக்குத் தாக்கிற்று.
அவளைத் தொடரும் பிசாசுகளைக் காணோம். எதிரில் ராட்சதர்கள் கைவிரித்து
நிற்கவில்லை. விடிவதற்குள் கரையை அடைந்துவிடலாம். சொர்க்கமோ நரகமோ குணா
சொல்வதுபோல எங்கட நாடு. எங்கட சனம்.
காத தூரம் பயணித்தாயிற்று. ரோந்து போலீசிடம் சிக்காமல். குணாவின்
உடம்பு தளர்ந்து தெரிந்தது. இனி கூனிக்குறுகி அகதிப் பண்டாரமாகக் கையேந்த
வேண்டாம். சண்முகம் தாத்தா அந்தத் தலைவரின் காலைப் பிடித்துப் புலம்பிய
அவமானம் எங்களுக்கு நேராது. குணாவின் தோளில் அவள் சாய்ந்தாள். வெகுநாள்
கழித்து அவனுடைய கை அவளை அணைத்துக்கொண்டது. சொர்க்கவாசல் திறப்பதாகத்
தோன்றிற்று. படகு சுகமாக மிதந்தது. இப்படியே கடலில் மிதந்தவண்ணம்
இருந்தாலும் போதும் என்று தோன்றிற்று.
‘படுங்க, படுங்க’ என்றார் படகோட்டி அவசரமாக. அவர்கள் தலைகுப்புறப்
படுத்தார்கள். தொலைவிலிருந்து தொலைதூர டோர்ச்சை யாரோ படகின் மேல்
அடித்தார்கள். அவள் குணாவை அணைத்துக்கொண்டு கண்ணை மூடினாள். பட்டாசுச்
சத்தம் கேட்டது. நட்சத்திரம் விழுவதுபோல அவர்கள் மேல் விழுந்தன. நிற்காமல்
வெடித்தன. சக்கரம்போலச் சுழன்று சுழன்று படகு நீரில்
வலம்வந்துகொண்டிருந்தது.
மிக லேசாகிப் போனது உடல், பிணைத்த சங்கிலிகள் அறுபட்டதுபோல. கைகளை அகல
விரித்துத் தெருவில் ஓட முடிந்தது. அவளது தோழிகளுடன் பட்டாசு வெடித்தாள்
பயமில்லாமல். இடியாப்பமும் சொதியும் இருக்கு, சாப்பிட வாங்கோ என்றாள்
அம்மா திண்ணையில் அமர்ந்துகொண்டு.
ஊர் நிசப்தமாக இருந்தது. எங்கட ஊர், எங்கட மண். அவள் தலை நிமிர்ந்து நடந்தாள். அவள் அணைப்பில் குணா இருந்தான். தலைநிமிர்ந்து.
நன்றி – காலச்சுவடு 2009
கருத்துகள்