கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

ஆத்மா - நாஞ்சில் நாடன்

ஆவணங்களில் அவர் பெயர் பீதாம்பர் பாண்டுரங்க்நாத்ரே. இதில் பீதாம்பர் அவர் பெயர், பாண்டுரங்க் என்பது தகப்பனார். நாத்ரே என்பது குலப்பெயர். குலப்பெயரை வைத்து சாதியைத் தெரிந்துகொள்ளலாம் எனினும், குலப் பெயர் சாதிப்பெயர் அல்ல. Sur Name என்பர் வடவர் புலங்களில். நம்மில் நாடார், செட்டியார், தேவர், கவுண்டர்போல் அல்ல; மராத்தியத்தில் குல்கர்னி, ஷிண்டே, பாட்டில் பவார், காம்ப்ளி, சவான் போன்றவை.

பாபா சாகேப் அம்பேத்கர் இந்தக் குலப் பெயரை யாவரும் அணிந்து கொள்ள ஊக்குவித்தார். 50 ஆண்டுகளுக்கு மேலாக இதைச் சமூகம் பயிலும் காரணத்தால், குலப் பெயரைக்கொண்டு காயஸ்த், மராட்டா, இன்ன பிற இனம் என வரையறுத்துச் சொல்ல இயலாது.

பீதாம்பர் பாண்டுரங்க் நாத்ரே ஆதிக்க சாதியா, அடிமை சாதியாஎன்பது இங்கே அநாவசியம். வண்டியும் படகில் ஏறும், படகும் வண்டியில் ஏறும் இன்று. மேலும், நாத்ரே சவம் ஆகிப் போன பின்பே யாம் அவரை அறிமுகம் ஆகிறோம். 'பெயரினை நீக்கிப் பிணமென்று பெயரிட்டு’ எனும் திருமூலர் வாக்கு ஆதாரம். இன்னொரு சித்தன் சிவ வாக்கியன் 'என்பு தோல்இறைச்சி யில் இலக்கம் இட்டிருக்குதோ’ என்றான், யாரும் கூட்டாக்கவில்லை.

தத்துவ விசாரம் எமக்கு நோக்கம் இல்லை; அதற்கு ஆற்றலும் இல்லை. என்ன விசாரம், அதுவே நமது விசாரம். ஈண்டு பேச்சு பீதாம்பர் பாண்டு ரங்க் நாத்ரேயின் பிணத்தைப் பற்றியது. அவர் பிணமான சில நொடிகளே ஆன நிலையில், இந்தத் தகவல் வாசகருக்குத் தரப்படுகிறது. 'முக்தி நய்யா’ எனும் பெயர்கொண்ட, மொழி பெயர்த்துச் சொன்னால், 'முக்தி நாவாய்’ எனப் பொருள் தரும். அப்படியும் அர்த்தமாக வில்லை என்றால், 'மோட்சப் படகு’ என்று வழங்கப்படும் அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஒன்பதாவது நிலையில், சி ஃப்ளாட்டில் வசிக்கும் எலி, கண்டாங்கிப் பாச்சை, பல்லி தவிர, வேறொரு குருவிக்கும் இந்தத் தகவல் இன்னும் சென்று அடையவில்லை.

'பிறகெப்படி உமக்குத் தெரியும் வேய்?’ எனும் வினா நியாயமானதுதான். அதுதான் கதாசிரியனின் வசதி. ஒளியும், ஒலியும், வளியும் நுழைய இயலாத இடத்தையும் உற்று நோக்கும் வசதி.

நாத்ரே அப்போதுதான் உயிர் நீத்திருந்தார். உடம்புச் சூடு இன்னும் ஆறி இருக்கவில்லை. வழக்கம்போல 6 மணிக்கு எழுந்து சண்டாஸ் போய், பல் துலக்கி, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் ஃபிரிஜ்ஜில் இருந்து எடுத்துப் பருகியபோது தலை கிர்ரென்றது. அது அவருக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

வழக்கமாக, வலது கையில் கைத்தடி ஊன்றியவாறு, லிஃப்ட்டில் கீழிறங்கி, குடியிருப்பின் பக்கம் இருந்த உத்யான் போய், நடைபாதையில் 40 நிமிடங்கள் அவசரம் இல்லாமல் நடப்பார். ஜூன் முதல் அக்டோபர் வரை மும்பையில் பருவ மழைக் காலம். மழை வெறித்திருந்த காலையில் அல்லது மாலையில் மட்டுமே நடக்க இயலும்.

காலையில் நடந்து திரும்பும்போது 'வார்ணா’ பால் அரை லிட்டர் பாக்கெட், மராத்தி தினசரி லோக் சத்தா, ஆங்கிலதினசரி டைம்ஸ் ஆஃப் இண்டியா கடையில் வாங்கி வந்து மறுபடியும் லிஃப்ட்டில் ஏறி, கதவைத் திறப்பார்.

முதலில் கடக் சாய் போட்டுப் பருகிவிட்டு, செய்தித்தாள்கள். பின்பு சவரம், குளியல். 87 வயதானாலும் தினசரி சவரம் செய்ய அலுப்பது இல்லை.

அன்று எதற்கும் அவசியம் இல்லாமல் போயிற்று.

கிர்ரென்று தலை சுழன்றதோடு மட்டுமன்றி, சளசளவென வியர்த்தது. மேலும் மேலும் எடையேற்றியதுபோல் இறுகி மார் வலித்தது. மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. நாத்ரேக்குப் புரிந்துபோயிற்று, கிடக்கப் படுத்தால் கிடந்து ஒழிந்துவிடலாம் என. எதற்கும் வாயிற் கதவைத் திறந்துவைத்துவிடலாம் என்று எண்ணி, எழுந்து நின்று சிற்றடிவைக்கும் முன் சோபாவில் சரிந்து விழுந்தார். சொர்க்கம் அல்லது நரகத்தை நோக்கிய கடைசிக் காலடி.

சரி, சுபம்... கதை முடிந்தது, 'இந்தக் கதாசிரியன் எழுதிய மிகச் சிறிய கதை இது’ எனத் தாண்டிப் போக எண்ணாதீர். இனிதான் கதையே துவங்குகிறது.

நாத்ரேயின் பூர்வீகம் கொங்கண் என்று அழைக்கப்படும் மராத்திய மாநிலத்தின் தெற்குக் கடற்கரைப் பிரதேசம். மத்தியப் பகுதியும் வடக்குப் பகுதியும் மராத்வாடா, விதர்பா என அழைக்கப்பெற்றன. மேற்குத் தொடர்ச்சி மலை சரிந்து, அரபிக் கடலை ஆரத் தழுவும் ரத்னகிரி பிரதேசத்தில், சத்ரபதி சிவாஜியின் கடற்படைத் தளபதி... மாவீரன் கனோஜி ஆங்கரே கட்டிய கடற்கோட்டைக்குப் போகும் வழியில் அமைந்த சின்னஞ் சிறு கிராமம். மதியச் சமையலுக்கு என, காலை எட்டரை மணிக்கே போம்பில், மாந்தேலி எனச் சிறு மீன்கள் வரும். சற்று நேரம் சென்றால் பாங்கடா, பாம்லெட் என நடுத்தர மீன்கள் வரும். காத்திருந்தால், சிங்காடா, சுர்மாயி எனும் பெரு மீன்கள் வரும்.தேங்காய் அரைத்த குழம்பும் அரிசிச் சோறும்.

பண்ருட்டிப் பலாப் பழமே, சேலத்து மாங்கனியே என சினிமாவுக்குப் பாட்டு எழுதுபவர், ரத்னகிரிப் பிரதேசத்துப் பலாப் பழமும் ஆப்புஸ் மாங்கனியும் தின்று இருக்க வாய்ப்பு இல்லை.

நாத்ரே குடும்பம் மிகச் சாதாரணமானது. காட்டு விவசாயம். அவரது தாதா பிரிட்டிஷ் நிலப் படையில் குதிரைப் பராமரிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அன்று கையூட்டு, இன்றைய வங்கி வைப்பு நிதி வட்டி விகிதம் போல் இருந்தது. மந்திரிமாருக்குப் பாயும் வெள்ளத்தின் சிற்றோடை அதிகாரிகளுக்கும் கவர் பிரிந்தது. நாத்ரே குடும்பம் பச்சை பிடித்தது.

ரத்னகிரியில் அவர் பிறந்து வளர்ந்த ஊரை அடுத்து பண்ணை வீடு ஒன்று வாய்த்தது. 15.36 ஏக்கர். மேற்கும் கிழக்கும் நிலப் பகுதி. வடக்கில் மன்னும் மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவு. தெற்கில் அரபிக் கடலில் கால் நனைக்கலாம். நாத்ரேயின் தோட்ட வீட்டின் தட்டட்டியில் நின்று பார்த்தால், ரத்னகிரிக் கோட்டையைக் காணலாம். அரபிக் கடலினுள் பல கோட்டைகள் சமைத்த கப்பற் படைத் தலைவன் கனோஜி ஆங்கரேயை, கடற்கொள்ளைக்காரன் என்று வரலாற்று ஏடுகளில் ஆங்கிலேயர் பொறித்துவைத்தனர். விடுதலைக்குப் பிறகு, அவன் பெயரில் மும்பையில் கப்பற் படைப் பயிற்சித் தளம் உள்ளது.

அடர் நீலக் கடல் சூழ்ந்த கோட்டை அது. கயிறு கட்டிய பலூன்போலக் கடலில் கிடப்பது. கயிறு என்பது நிலத்தில் இருந்து கோட்டைக்குப் போகும் தார் சாலை. தோன்றும்போது காரை எடுத்துக்கொண்டு போய் கோட்டையுள் இருக்கும் துர்கா தேவி மந்திரில் தொழுது, நெற்றியில் செஞ்சாந்து தீட்டி வருவார் நாத்ரே. நாத்ரேவுக்கு சற்றே 'அம்ச்சி மும்பாய், அம்ச்சி மானுஸ்’ சாய்வு உண்டு. எனினும் சிவசேனைக்காரர் அல்ல.

தோட்டம் பூராவும் ஆப்புஸ் என்று அழைக்கப்படும் அல்போன்சா மாமரங்கள், வருக்கைப் பலா, கொல்லா மா, வாழை, தென்னை, பிற தோட்டப் பயிர்கள். கொல்லா மா எனும் முந்திரி அல்லது காஜு, பழுத்து உதிரும் காலங்களில் கோவா, மட்காவ்வில் இருந்து ஆள் கொணர்ந்து முந்திரி ஃபென்னி வாற்றி எடுத்து ஆண்டுக்கும் வைத்துக்கொள்வார் நாத்ரே. நண்பர்களுக்கும் பரிசாகச் சில போத்தல்கள் போகும். விடுமுறைக் காலங்களில் சென்று தங்கும் ஓய்விடமாகவும் இருந்தது அந்தப் பண்ணை வீடு.

பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனது காலம். பெண் மக்கள் இருவரும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிரந்தரக் குடிமக்கள். பச்சை அட்டை. தேர்தல் வருவதுபோல் வந்து போவார்கள். மகன் மும்பை மாநகரின் தென் கோடியில் கொலாபா தாண்டி... சசூன் டாக் தாண்டி... 5 கோடி பெறுமதி உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில். 1,500 சதுர அடிகொண்ட மூன்று படுக்கை அறை ஃபிளாட்டில், கடல் பார்த்த பால்கனிவீட்டில். தேசிய வங்கி ஒன்றில் பொது மேலாளர்.

நாத்ரே தனது சொந்தக் குடியிருப்பில் மனைவியுடன் வாழ்ந்தார். ஓய்வு பெற்று 12 ஆண்டுகள் வரை அல்கா பாயி, நாத்ரேயைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்கினாள். பூரண் போளி, ஆலு வடி, சாபுதானா கிச்சடி, ஆம்ரஸ் பூரி, பாக்ரி-லசூன் சட்னி, கோக்கம் ரஸ், பொட்டாட்டோ போஹா எனத் தினந்தோறும் தேரோட்டம்.

வல்வினைபோல் வந்து வாய்த்தது அல்கா பாயிக்கு பார்க்கின்சன் நோய். கை கால் நடுக்கம், நினைவு அடுக்குகளில் சரிவு, நினைவு பிறழ்தல்... கிடந்த கிடையாக ஆயிற்று. குழந்தையைப்போலப் பராமரித்தார் நாத்ரே. தன்னுடன் வைத்துக்கொள்ள இயலாமற் போனதற்கு மகன் சின்ன நாத்ரே, ஒரு பாடு காரணங்கள் சொன்னான். மகனையும் சொல்லித் தப்பில்லை. வேலை பார்க்கும் கணவன், மனைவியர், கல்லூரியில் படிக்கும் இரு பெண்கள். மேலும், முதுமையும் நோயும் தோள் மாற்றிச் சுமக்க வல்லதா?

பகலில் ஒரு நர்ஸ் வந்து போவாள். காலை 9 முதல் மாலை 5 வரை வேலை நேரம். 30 நிமிடங்கள் உணவு இடைவெளி. காலையில் வந்ததும் டயாபர் மாற்றி, பல் தேய்த்துவிட்டு, குளிப்பித்து, உடை மாற்றி, உணவு ஊட்டி, வாய் துடைத்து, மாத்திரைகள் கொடுத்து, தலை வாரி, செந்தூர் வைத்து...

அவளுக்கும் வார விடுமுறை உண்டு. சில நாட்கள் வராமலும் இருப்பாள். சில நாட்கள் தாமதமாக வருவாள். சில நாட்கள் சீக்கிரமாகப் போக வேண்டியது இருக்கும். நாத்ரே பத்திரமாகப் பார்த்துக்கொண்டார். நர்ஸ் சமைப்பாளா என்ன? காலையில் சாய், காரி பிஸ்கட் அல்லது பிரட் டோஸ்ட். பட்டர்... கொழுப்பு, ஜாம்... சர்க்கரை, ஆம்லெட்... கொலஸ்ட்ரால். ஆகாது. சில நாட்கள் மதியத்துக்கு ரொட்டியும் தாலும் செய்து பார்த்தார் நாத்ரே. 75 வயதில் சமையல் கற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம்.

நாத்ரேயின் குடியிருப்பு, மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் இருந்து தாணே போகும் சென்ட்ரல் ரயில்வே மெயின் லைன் இருப்புப் பாதையில், மூலண்ட் ஸ்டேஷனில் இருந்தது. ரயில் நிலையத்தில் இருந்து மேற்குப் பக்கம் வெளியே வந்ததும் இரு வசமும் உணவுக் கடைகள் உண்டு. உணவுக் கடை எனில், ஹோட்டல் அல்ல. வீட்டில் தயாரித்துக் கொணர்ந்து விற்பனைக்கு வைத்திருக்கும் உணவுப் பண்டங்கள் விற்கும் ஸ்டால்கள். ஹாட் பேக்குகளில் சேமிக்கப்பட்டவை.

சப்பாத்தி, பாக்ரி எனில் எண்ணத்துக்கு விலை. தால், கடி எனில் முகத்தல் அளவு. சோறு எனில் வாட்டி அளவு. தினமும் பொடி நடையாகப் போய், தலைக்கு மூன்று சப்பாத்தி, ஒரு கிண்ணம் சோறு, அரை லிட்டர் பருப்பு,

கால் கிலோ சப்ஜி வாங்கிக்கொள்வார். ஒரு நாள் கத்தரிக்காய் - உருளைக் கிழங்கு,மறுநாள் உருளைக் கிழங்கு - வெந்தயக் கீரை, மூன்றாவது நாள் வெண்டைக்காய் என மாற்றி மாற்றி. சில சமயம், ஒரு வாட்டி தயிர். இரவுக்கு பிரட் டோஸ்ட், சுடு பால்.

மிகவும் ஆசைப்படும் நாளில் காமத் ஹோட்டலில் இரவு இட்லி, வடா-சாம்பார் சாப்பிட்டுவிட்டு, பாத்திரத்தில் அல்கா பாயிக்கும் வாங்கி வந்து ஊட்டிவிடுவார்.

வாரந்தோறும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாழும் மகள்கள் பேசுவார்கள், சரியாக முன்னிரவில், ஞாயிறுதோறும் அல்லது ஞாயிறு விட்டு ஞாயிறில் மகன் நேரில் வந்து போவான். சந்த்ரி, மொசம்பி, சிக்கு, அனார், ஆம், சபர்ஜலி, கேலா எனும் ஏதோ ஒரு பருவ காலக் கனி வர்க்கத்துடன். இதெல்லாம் அமாவாசை அல்லது பௌர்ணமிபோல் அதன் பாட்டுக்கு நிகழும்.

''காய், தாதா? கஸ காய்?'' எனத் துவங்கும் அன்பு கசியும் உசாவல். மருமகளோ எனில், ''காய், ஆயி? கஸ காய் துமி?'' எனத் தன் பங்குக்கும் சொரிவாள். சரியாக ஒரு மணி நேரம் ஸ்லாட். மருமகளே சாய் போட்டு யாவரும் பருகுவார்கள். பிறகென்ன? ''சலோ, அமி நிக்லா... போன் கரோ... தபேத் சமாலோ!'' என்றொரு விடைபெறல்.

நாத்ரேக்குச் சொந்த வீடு. பராமரிப்பு, சௌகிதார் சம்பளப் பங்கு, பால், தினசரிகள், பிரட், காரி பிஸ்கட், தால் - ரொட்டி, பற்பசை முதலாய டாய்லெட் சாமான்கள், மருந்துகள், நர்ஸ் சம்பளம், செல்போன் பில், கரன்ட் செலவு யாவும் சேர்ந்து மொத்தமாக 20,000 பக்கம் ஆகிவிடும். பவிஷ்ய நிதி, ஓய்வுத் தொகை யாவுமாக 36 லட்சங்கள் மூத்த குடிமகனுக்கான அரை சதவிகித அதிக வட்டி தேக்கி வைப்பு நிதியாக வங்கியில் கிடந்தது. ஓய்வு ஊதியத்திலேயே ஒரு பங்கு மிச்சம் தான்.

ஆண்டுக்கு ஒரு முறை வரும் கண்பதி பாப்பா பண்டிகைக்குத் தாராளமாக நன்கொடை கொடுப்பார். மொத்த காலனிக் குழந்தைகள், சிறுவர் சிறுமியருக்கு அவர் தாதா. பிறருக்கு காக்கா. அபூர்வமாகச் சிலருக்கு மாமா அல்லது அண்ணா.

தீபாவளிக்கும் குடிபட்வாவுக்கும் மகன் குடும்பம் வந்து போகும் பலகாரத் தினுசுகளுடன். அந்த நாட்களில் சக்ளியும் கரஞ்சியும் பேசின் லாடுவும் அண்டை அயலிலும் மலிந்து கிடக்கும். சென்ற முறை நாத்ரே மக்களிடம் சொன்னார், ''இருக்கும் துணிமணிகள் இனி காலத்துக்கும் காணும். இனி, புதுசு எடுத்து அநாவசியத்துக்குச் செலவிட வேணாம்'' என்று.

அல்கா பாயிக்கு மரணம் பையப்பைய, ஆரவாரம் இல்லாமல், முக்கல் முனகல் வலி வேதனையுடன் வந்தது. நாத்ரே கடைசிச் சொட்டு கங்கை தீர்த்தம் ஒழுக்கினார். 78 வயது என்பது பெருவாழ்வுதான். நோய் ஒன்றே கரும்புள்ளி. எவருக்கும் வஞ்சனை செய்யாமல், வாரிச் சுருட்டாமல், வயிற்றில் அடிக்காமல் 60 வாழ்ந்தாலே பெருவாழ்வு.

அன்று நாத்ரேக்கு 81 கடந்த காலம்.

ஆயி மரணத்துக்குப் பெண்கள் வரவில்லை. மகன் இருந்தான், கொள்ளி போட்டு முழங்கை மயிர் மழித்துக்கொள்ள. அல்கா பாயின் உருப் படிகளை மூன்று பங்குகளாக்கி தனித் தனியே நகைப் பெட்டிகளில் போட்டு, மருமகளிடம் ஒப்படைத்தார்.

இனியாவது உடன் வந்து இருக்கும்படி ஒப்புக்குக்கூட மகனோ, மருமகளோ கூப்பிட வில்லை. மூன்று படுக்கையறைக் குடியிருப்பே ஆனாலும் ஒன்று தம்பதியினருக்கு, மற்ற இரண்டும் மகள்களுக்குப் போனாலும் நாத்ரே வரவேற்பறையில்தான் படுக்க வேண்டும். அல்லது பால்கனியை மூடி, அதில் ஒரு கட்டில் போட வேண்டும். என்றாலும் எவரது கக்கூஸ் - குளிமுறியை அவர் உபயோகிப்பார்? அல்லது இப்போதுதான் ஆயி இல்லையே, வடீல் தனியாக சமாளித்துக்கொள்வார் என சின்ன நாத்ரே எண்ணி இருக்கலாம். அல்லது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சகோதரிகள்வந்தால், தாதா தனியாக இருந்தால்தான் தங்கத் தோதாக இருக்கும் என்று எண்ணி இருக்கலாம்.அன்றியும் ஒரே நகரில்தானே வாழ்கிறார்கள். நினைத்தால் வந்து எய்திவிட இயலாதா?

திருமணம் அன்று எடுத்துக்கொண்ட, பெரிதுபடுத்தப்பட்ட, சட்டம் கட்டி சுவரில் மாட்டப்பட்ட, கறுப்பு - வெள்ளைப் புகைப்படத்தில் இருந்த அல்கா பாயியைச் சில நாட்கள் நெடு நேரம் பார்த்துக்கொண்டு இருப்பார் புட்டா நாத்ரே. மூக்கில் முத்துக்கள் கோத்த நத்து, பெரிய தோடுகள் செவியில், வட்டப் பொட்டு, மராத்திப் பெண்களுக்கேயான தார் பாய்ச்சிய புடவைக் கட்டு.

சில ஒழுங்குகள் செய்தார் நாத்ரே. தன் காலத்துக்குப் பிறகு, தோட்ட வீடு மகனுக்கு. தான் குடியிருக்கும் வீடும் அந்தேரியில் வாடகைக்கு விட்டிருக்கும் வீடும் இரண்டு மகள்களுக்கும். வங்கியில் கிடக்கும் வைப்பு நிதி முழுக்க இரு மகன் வழிப் பேத்திகளுக்கும் என்று உயில் எழுதிப் பதிவு செய்தார்.

ஆயிற்று, அல்கா பாயி இறந்துபோய் ஆறு ஆண்டுகள். தினமும் எத்தனை சினிமா, சீரியல் பார்ப்பது? எத்தனை மணி நேரம் தூங்கி எழுவது? ஓய்வூதியம் வாங்க ஆரம்பித்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. எத்தனை உழைத்து இருந்தாலும் அரசுக்குப் பொருள் இழப்புதான். சோற்றுக்குச் செலவு, பூமிக்கும் பாரம்.

நாத்ரே உடல் குளிர ஆரம்பித்தது... ஒன்பதாவது நிலை என்றால் என்ன, ஈக்கள் வராதா? ஒழுகி இருந்த கடைவாயில் ஈக்கள் அமர்ந்து எழுந்தன. அந்தத் தளத்தில் இருந்த மற்ற மூன்று வீட்டுக்காரர்களுக்கும் பொதுச் சொத்தாக இருக்கலாம் அவை. அவரவர் அலுவலகம், தொழிற்கூடம், பள்ளி, கல்லூரி என விரைய ஆரம்பிக்கும் காலைப் பொழுது. இன்றோ, நாளையோ தாதாவை, காக்காவை, மாமாவை, அண்ணாவைக் காணோமே என எவருக்கோ தோன்றலாம்.

மகன் வீட்டுக்கோ, ரத்னகிரிக்கோ போய் இருப்பார் என நினைக்கவும் ஆகலாம். ஒரு நாள் பொறுத்து காற்றில் துழாவும் மெல்லிய துர்நாற்றத்தின் மூலத்தைத் தமது இல்லங்களுக்கு உள்ளே இண்டு இடுக்குகளில் தேடலாம். கனத்த பிண நாற்றம் காற்றில் பரவ மூன்று நாட்கள் ஆகலாம். இறந்த கிழ நாத்ரேயின் பிணம் அழுக ஆரம்பிக்கும்.நாற்றம் வரும் திசை அறிய வரும். மூலம் உணர்ந்து, போலீஸுக்குச் சொல்லி, கதவை உடைக்கலாம்.

அவரது ஆத்மாவுக்கு அதன் பின் சாந்தியும் கிடைக்கலாம்!

நன்றி - விகடன்

கருத்துகள்

rathnavelnatarajan இவ்வாறு கூறியுள்ளார்…
நெகிழ வைக்கும் கதை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ