பூச்சி - சந்திரா
அவன் பொரி வண்டியின் மணிச்சத்தமும் வண்டியில் இருந்த லாந்தர் விளக்கின் வெளிச்சமும் அந்தத் தெருவின் இருளை விலக்கிக்கொண்டு போயின. அவன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வந்தான். ஒரு கையில் மணியடித்துக்கொண்டே, இன்னொரு கையில் ஹேன்டில் பாரைப் பிடித்துக்கொண்டு பேலன்ஸ் செய்வது கடினமாகத்தான் இருந்தது. மிக இருட்டான கீழ்முக்குத் தெரு வந்ததும் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தொடர்ந்து மணியடித்துக்கொண்டிருந்தான். அந்த இருட்டு அவனுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. யார் முகத்தையும் அவன் பார்க்க விரும்பவில்லை. அதேபோல் யாரும் தன்னைப் பார்த்துப் பேசாமல் இருக்கவே விரும்பினான்.
ஆனால் நிலைமை அப்படியில்லை. புற்றீசலைப்போல் எங்கிருந்துதான் வந்தார்களோ தெரியவில்லை. அத்தனை குழந்தைகளும் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இவ்வளவு நேரம் கைவலிக்க மணியடித்துக்கொண்டிருந்தான். சீண்டுவார் யாருமில்லை. ஆனால், இப்போது பார்த்தால் "ஏய் பூச்சி எனக்குக் குடு எனக்குக் குடு"என்று எல்லோரும் ஒரே நேரத்தில் முண்டியடித்துக்கொண்டு காசை நீட்டுகிறார்கள். "இருப்பா தர்றேன் அவசரப்படாதீங்க" என்று பூச்சி சொல்வதை யாரும் கேட்ட மாதிரி தெரியவில்லை. விட்டால் போதும் என்று, கணக்குப் பார்க்காமல் பொரியை அவசரமாகக் காகிதத்தில் போட்டு விற்றுக்கொண்டிருந்தான். இல்லையென்றால் ஆளாளுக்கு நான் போட்டி நீ போட்டி என்று எப்படியும் சைக்கிளைக் கீழே தள்ளிவிட்டுவிடுவார்கள்.
இப்படித்தான் சித்திரை மாதம் வீரபாண்டித் திருவிழாச் சமயத்தில் சின்னப் பசங்களெல்லாம் மொத்தமாக ஓடிவந்து ஒருத்தன் மேல ஒருத்தன் விழுந்து வண்டியைக் கொடைச் சாய்த்தார்கள். பொரி, பட்டாணி, பொரிகடலை அவ்வளவும் கொட்டிப்போய், லாந்தர் விளக்கும் உடைந்துவிட்டது. கோபத்தில் கையில் கிடைத்த இரண்டு பேரைச் சும்மா இரண்டு அடி அடித்தால் வீட்டிலிருந்து அருவாளைத் தூக்கிவருகிறார்கள் டவுசர்போட்ட குட்டிப் பயல்கள். வேறு வழியில்லாமல் பூச்சி சைக்கிளையும் கீழே போட்டுவிட்டுத் துணைக்கு ஆளைக் கூப்பிட ஓட வேண்டியதாகிவிட்டது. பெரியவர்கள் வந்து குட்டிப் பசங்களையெல்லாம் சமாதானப்படுத்திவிட்டு ஒரு வழியாகப் பூச்சியை வீட்டுக்கு அனுப்பப் போதும் போதுமென்றாகிவிட்டது. வீட்டுக்குப் போனால் அம்மா குடிமுழுகிப்போச்சு என்று பெரிதாக ஒப்பாரி வைத்து..., இவனையும் விளக்குமாற்றால் அடிக்கிறாள். அவளும் பாவம் என்ன செய்வாள்? புருஷன் குடிச்சுக் குடிச்சுக் கொடலு வெந்து செத்துப்போனான். மலைக்குப் போய் விறகு வெட்டி அதை விற்றுப் பொழைக்கிறாள் அவள். உடல் பலமான வேலையைப் பூச்சி ஒரு நாளும் செய்யமாட்டான் என்று பொரி விற்கச் சொன்னாள். அதையும் ஒழுங்காச் செய்யாமல் பூச்சி கேனப்பயலாக இருக்கிறான் என்று வருத்தப்படுகிறாள்.
"ஏய்... கால்ரூவாய்க்கு இம்புட்டுதான! இன்னும் கொஞ்சம் போடுடா பூச்சி" என்று டவுசர் போடாத ராசுப்பயல் சொன்னபோதுச் சுருக்கென்று கோபம் வந்தது. கட்டுப்படுத்திக்கொண்டு அவனை அடிப்பதற்கு மேலே தூக்கிய கையைக் கீழே இறக்கினான். "என்னாடா மொறைக்கிற... போடு" என்று அவன் மேலும் பேசிக்கொண்டேபோக எரிச்சலோடு இன்னும் கொஞ்சம் பொரிகடலையை எடுத்துப் போட்டான். இன்றைக்கும் அவனுக்குப் பெரிதாக லாபம் வரப்போவதில்லை. பத்தோ இருபதோ லாபம் கிடைத்தால் அம்மாவைச் சந்தோசப்படுத்தலாம். "இந்தப் பொடிப் பயலுக பண்ற அழிச்சாட்டியத்தில ஒரு ரூவாகூடக் கிடைக்காது போலிருக்கே" என்று நினைத்தவன், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றிரண்டு பெண் பிள்ளைகள் பொரி கேட்க அவர்களுக்கு மட்டும் கொடுத்து விட்டு, அதற்கு மேல் மணியடிக்காமல் அப்படியே வண்டியை வீட்டுக்குத் திருப்பினான்.
கூரை வேய்ந்த தன் வீட்டுக்குள் நுழைந்த பூச்சி லாந்தர் விளக்கை ஆணியில் மாட்டிவிட்டுக் குட்டிச்சாக்கில் இருந்த பொரிகடலையை இறுக்கமாகக் கட்டிவைத்தான். வீட்டின் முன் இரண்டு பக்கமும் மண் திண்ணை இருந்தது. இன்றைக்கு அவன் அம்மா திண்ணையைச் சாணி போட்டு மெழுகியிருந்தாள். வலது பக்கம் இருக்கும் திண்ணையில் சைக்கிளைத் தூக்கி நிறுத்திவிட்டு அதன் ஓரத்தில் அவன் உட்கார்ந்துகொண்டான். இடது பக்கத் திண்ணையின் ஓரத்தில் இருந்த அடுப்படியில் அம்மா எதையோ சமைத்துக்கொண்டிருந்தாள். சுருக்கங்கள் நிறைந்து கறுமையேறியிருந்த அவள் முகத்தில் சந்தோசத்தைப் பார்த்ததாகப் பூச்சிக்கு ஞாபகம் இல்லை. "என்னடா பூச்சி இன்னைக்கு எம்புட்டு ஏவாரம் பண்ணுன?" இவன் பதிலேதும் பேசாமல் முகம் சிவக்கக் கோபத்தை அடக்கி உட்கார்ந்திருந்தான். "ஏண்டா நாம் பேசாம கேட்டுக்கிருக்கேன். நீயென்னமோ பேச்சு மூச்சில்லாம உட்கார்ந்திருக்க?" என்றாள்.
ஆங்காரம் வந்தவனைப் போல விருட்டென்று எழுந்த பூச்சி, "ஏம்மா எனக்குன்னு ஒரு பேரு வச்சிருக்கயில அதைச் சொல்லிக் கூப்பிட வேண்டியதுதான, அதை விட்டுட்டு நீயும் ஊர்க்காரங்ஙெ மாதிரியே பூச்சி பூச்சின்னு கூப்பிடுற" கோபத்தோடு கத்தினான். "இப்ப பூச்சின்னு கூப்பிட்டதில என்னா குடிமுழுகிப்போச்சு. ஆமாம் இவரு பெரிய சொல்லுப் பொறுக்காத சோழ ராசா மகன். கட்டிட்டு வாடான்னா வெட்டிட்டு வாரே. ஒரு கூறும் இல்லாம பொரி விக்கப் போறேன்னு பொரியைக் கீழே கொட்டிப்பிட்டு வாரே... இல்லன்னா கணக்குத் தெரியாம மீதி சில்லரத் துட்டகூடக் குடுத்துபிட்டு நஷ்டமாகி வந்து நிக்கிற" வாய் ஓயாமல் அவனைத் திட்டித் தீர்த்தாள். என்னைக்கோ ஒரு நாள் அவன் நஷ்டமாகி வந்து நிற்பது உண்மைதான். ஆனால் மற்ற நாள்களில் குறைந்தது பத்து ரூபாயாவது லாபம் பார்த்து வருகிறான். அவன் உழைப்பைக் கணக்கில் கொள்ளாமல் அவன் மனத்தைக் காயப்படுத்துகிறாள் அம்மா.
பூச்சிக்கு இருபது வயதை நெருங்கிக்கொண்டிருந்தது. அவன் வயதுடையவர்கள் அவனைச் சரிக்குச் சமமாக மதிப்பதில்லை. சிறுவர்கள் அவனைக் கோமாளியாக்கி வேடிக்கைப் பொருளாகப் பார்த்துக்கொண்டி ருந்தார்கள். அவனுக்கென்று நண்பர்கள் இல்லை. பகல் முழுவதும் தனிமையில் கிடந்து யோசித்தான். எல்லாவற்றுக்கும் காரணமான தன் உடல்மீது பெரும் வெறுப்பு மூண்டது அவனுக்கு. தன் உடலிலிருந்து எல்லா உறுப்புகளையும் தனித் தனியே பிய்த்து எறிந்துவிட்டால் நிம்மதியாக இருக்குமென்று தோன்றியது. உருண்ட தலையும் சுருட்ட முடியும் உள்ளொடுங்கிய கண்களும் பருத்த தப்பட்டையான உடம்பும் குச்சி மாதிரியான கை கால்களும் மந்திரவாதி கதையில் வரும் குள்ள அரக்கனைப் போல இருப்பதாக நினைத்தான். ஒட்டு மொத்தமாக அவலட்சணமாக இருக்கும் உடலைப் பார்க்கும் போது அவனுக்கே தன்மீது கழிவிரக்கமும் சோர்வும் தோன்றியது. ஒரு உறுப்பையும் உருப்படியாகப் படைக்காத கண்ணுக்குத் தெரியாத கடவுளை மிகக் கேவலமாக இரவெல்லாம் ஏசிக்கொண்டிருந்தான். கடவுளைத் தவிர வேறு யாரை அவன் நேரிடையாகத் திட்டிவிட முடியும்?
பொரி விற்றுவிட்டுத் தெற்கே பள்ளிவாசல் தெருவைக் கடந்து அவன் வீட்டுக்குப் போகையில் குண்டு ராவுத்தர் இவன் வண்டியை நிறுத்திச் சிறுபையனைப் போலத் தினமும் பட்டாணியை வாங்கித் தின்பார். பூச்சியும் குண்டு ராவுத்தரும் இணக்கமாகப் பேசிக்கொண்டார்கள். "ஏம்ப்பா இன்னைக்கு நல்லா ஏவாரம் ஆச்சா. மேற்குத் தெருவுல என்னா விசேசம், கீழ்முக்குத் தெருவுல என்னா விசேசம்" என்று இவனைப் பெரிய மனுசனாக நினைத்துத் தினமும் விசாரிப்பார். இவனும் எல்லாப் பிரச்சினைகளையும் சாமிகிட்ட சொல்வதைப் போன்று அவரிடம் சொல்வான். "என்னாண்ணே அவங்ஙெ குடுக்கிற அஞ்சு காசுக்கு ஒரு சாக்குப் பொரியை மொத்தமா பேப்பர்ல சுருட்டிக் குடுத்தாலும் கடைசியில இன்னும் கொஞ்சம் குடுன்னு, கையில கொஞ்ச பொரிகடலையை ஓசியாக் கேட்டு வாங்கிப் போனாதான் மனசு அடங்குது. அப்படிக் குடுக்கலன்னா என்னாடா... ரெண்டு பொரியைப் பேப்பர்ல சுருட்டிக் குடுத்து ஏமாத்துறேன்னு அவங்களே சாக்குல கையைவிட்டுப் பொரியை எடுத்துப்போறாங்கே" என்று பூச்சி அவரிடம் வேதனை பொங்கச் சொன்னான். அவனுக்குத் தெரிஞ்சு அவர்தான் அவனைப் பூச்சி என்று கூப்பிடாதவர். குண்டு ராவுத்தரை நேராப் பார்க்காமல் அவர் குரலை மட்டும் கேட்கிறவர்கள் நிச்சயம் ஒரு பெண் பேசுவதாகத்தான் நினைப்பார்கள். கடுமையான ஒரு சொல்கூட வெளியே வராது. அவர் பேச்சு மயிலிறகைப் போன்று தடவிக் குடுப்பதாய் அவனுக்கிருக்கும். "இங்க பாருப்பா நீ வருத்தப்பட்டுகிடாத உனக்கொரு விசயத்தைச் சொல்லித் தாரேன்... அதுப்படி செய்யி. பேப்பரை உள்சொருகு சொருகிச் சின்னதா மடிச்சு அதுல பொரியைப் போட்டேன்னா கொஞ்சமாத்தான் பிடிக்கும். அப்புறம் நீயே கொஞ்ச பொரியை ஓசியா கையிலெடுத்துக் குடுத்தேன்னா சந்தோசமா வாங்கிட்டுப் போவாங்க. ஓங் கணக்கும் சரியாப் போகும் அவங்க கணக்கும் சரியாப் போகும்" புது சூட்சுமத்தைக் குண்டுராவுத்தர் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவனும் அப்படியே செய்ய யாரும் ஒரு குறையும் சொல்லாமல் வாங்கிப் போனார்கள்.
சிறுவனாக இருந்தபோது எல்லாச் சிறுவர்களையும் போலப் பூச்சி இச்சிமரத்தில் ஏறி விளையாடப் போனான். நெடுந்தூரம்வரை கிளைகளே இல்லாமல் கட்டையான அடிப்பாகத்தைக் கொண்டிருந்தது இச்சி மரம். பதினைந்தடி உயரத்திற்கு பின்பே அதன் கிளைகள் அகன்று விரிந்திருக்கும். அந்த மரத்தில் ஏறுபவனைத்தான் வீரம் நிறைந்தவனாகக் கருதினார்கள். கணுக்கள் இல்லாத பிசின் பிடித்திருந்த மரத்தில் பூச்சி, கால்களைத் தேய்த்துத் தேய்த்து மேலேறினான். அகன்ற பாதம் மேலெழும்பாமல் வழுக்கி வழுக்கிச்சென்றது. அவனுக்குப் பின்னால் மரத்தில் ஏற நின்ற சிறுவர்கள் அவனை வேகமாக ஏறச்சொல்லி அவசரப்படுத்தினார்கள். சிலர் பொறுமையிழந்து விடுவிடுவென்று ஏறி அவன் காலுக்குக் கீழிருந்து "வேகமா ஏறு... இல்ல கீழே எறங்குடா" என்று அவனை ஏறச் சொல்லி வேகம் கூட்டிக்கொண்டிருந்தார்கள். கிட்டத் தட்ட அவன் கிளைகளை எட்டும் தூரத்தில் இருந்தான்.
தம் பிடித்துக் கால்களை உந்தித் தள்ளியவன் ஒரு வேகத்தில் பிடி நழுவவிட்டு மட்ட மல்லாக்காகக் கீழே விழுந்தான். அவன் விழுந்த சத்தம் கேட்டதும் மற்ற சிறுவர்கள் சரசரவென்று மரத்திலிருந்து கீழிறங்கி ஓடிவிட்டார்கள். பூசானம்பட்டிக்குத் தூக்கிப்போய் பூச்சியின் ஒடிந்த கால்களைத் தப்பையை வச்சுக் கட்டிச் சரிபடுத்த இரண்டு மாதமானது. அப்போதிலிருந்து பூச்சியை அவன் அம்மா ஆண்பிள்ளைகளைப் போல விளையாட அனுமதிக்கவில்லை.
கோடையில் எல்லோரும் வட்டக் கிணத்துக்குள் தவ்வி நீச்சலடித்துப் பழகும்போது, அவர்களின் கைகள் காற்றைத் தள்ளி, கால்கள் நீரைப் பிளப்பதைக் கிணத்து மேட்டில் நின்று பூச்சி எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான். ஒட்டாங்குளத்துக்குக் கீழே வயல்வெளியில் நடுநாயமாக இருந்தது வட்டக்கிணறு. அந்தக் கிணத்துக்குச் சொந்தக்காரக் கவுண்டர் மிகவும் நல்லவராக இருந்தார். பயிர் வைக்காத கோடை காலத்தில் கிணத்துக்குள் குதித்து விளையாடுவதை அவர் தடுப்பதில்லை. கிணத்தைச் சுற்றியிருக்கும் இலவ மரத்திலிருந்து இலவங்காய் வெடித்து இலவம் பஞ்சும் இலவங்கொட்டைகளும் கிணத்துக்குள் விழுந்துகிடக்கும். பஞ்சு நீரூறி கிணத்துக்குள் போய்விட, இலவங்கொட்டை மட்டும் பருத்து ஊதித் தண்ணீரின் மேலே மிதக்கும். பூச்சிக்குக் கிணத்துக்குள் இறங்க ஆசையாக இருந்தாலும் அவன் வயிற்றில் கயிற்றைக் கட்டி நீச்சல் பழகிக்கொடுக்கயார்தான் இருக்கிறார்கள். கண்கள் சிவக்கும்வரை சிறுவர்களும் இளைஞர்களும் நீரூக்குள் குதியாட்டம் போட்டுக்கொண்டிருந்ததை ஏக்கத்துடன் கரையிலிருந்து பார்த்தான். அந்தப் பகுதியிலேயே நூறு ஆள் மட்டங்கொண்ட கிணறு அது மட்டுந்தான். கிணத்தைச் சுற்றிக் கட்டியிருக்கும் காம்பவுண்டு சுவரிலிருந்துக் கையை நீட்டினால் தண்ணீரைத் தொட்டுவிட முடியும். அதில் நீச்சலடிப்பது பெருமையான விசயமாக இருந்தது. அதன் ஆழத்தைக் கண்டறிந்து பிடிமண் எடுத்து வருவதற்கு வயதுவாரியாகப் போட்டி வைக்கப் பட்டது. ஆனால் இதுவரை யாருமே வட்டக்கிணத்தின் ஆழத்தை அறிந்து பிடிமண்ணை எடுத்துவர முடியவில்லை. நீச்சலடிக்கத் தெரியாத பூச்சி அதன் பிடி மண்ணை எடுத்துவர விரும்பினான். தான் ஒரு ஆண் என்பதை ஊர்க்காரர்கள் முன் நிரூப்பிப்பதே தான் வாழ்வதற்கான ஆதாரமாகக் கருதினான். முட்டி மோதி ஒரு ஆண் செய்யும் அத்தனை காரியங்களையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று தீவிரமாக இயங்கினான்.
முட்டி நனையும்வரை ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலில் தானாக நீச்சலடித்துக்கொண்டிருந்தவனைப் பார்த்துச் சிரித்துச் சென்றார்கள் சிறுவர்கள். தன் வயலுக்கு வேலைக்குப் போய்க்கொண்டிருந்த குண்டு ராவுத்தர் பூச்சியைப் பார்த்து என்னாப்பா "மீன் பிடிக்கிறியா". "இல்லண்ணே நீச்சலடிச்சுப் பழகுறேன்". "முட்டியளவுத் தண்ணியில நீச்சலெல்லாம் பழக முடியாது... நாளைக்கு வட்டக் கெணத்துக்கு வா அங்க சொல்லித் தாரேன்" என்று சொல்லிவிட்டுப் போனார். பூச்சியின் சந்தோசத்திற்கு அளவே இல்லை. அவங்கம்மா வெறகுக்கு எடுத்துப் போற கொச்சைக் கயிரை எடுத்துகிட்டு அடுத்தநாளு வெள்ளனவே வட்ட கெணத்துக்குப் போயிட்டான். அவன் கிணத்தை எட்டிப் பார்த்தபோது எந்த அசைவும் இல்லாம கிணறு முழுதும் இலவங்கொட்டை பரவிக்கிடந்தது. "இன்னைக்குக் கெணத்துக்கு நாமதான் முதல் அசைவைச்கொடுக்கணும். குண்டுராவுத்தர் வர்ராரா" என்று எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். வெயிலேறிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவராக வந்து நீரை அசைத்துக்கொண்டிருந்தார்கள். ஊறிப் பெருத்திருந்த இலவங்கொட்டைகள் அவர்களின் வாய்க்குள்ளும் காதுக்குள்ளும் டவுசர் பாக்கெட்டுக்குள்ளும் போய்க்கொண்டிருந்தன. குண்டு ராவுத்தரும் கையில் கயிரோடு வந்திருந்தார். இவனுடைய கொச்சக் கயிறு இத்துப் போயிருந்தது. தன் கயிறால் அவன் இடுப்பில் கட்டி அவனை இறக்கிவிட்டார். மிகப் பழகியதுபோலத் துடுப்பைப் போன்று அவன் கைகள் பரபரத்தன. கால்களால் அநாயசமாக நீரைத் தட்டிச் சிதறிப் பிளந்தான். "தம்பி மெதுவா பண்ணுடா ஒரே நாள்ல எல்லாத்தையும் கத்துக்க முடியுமா?" கயிறு பிடித்திருந்த குண்டு ராவுத்தரின் கைசிவக்கும்வரை வட்டமடித்துக்கொண்டிருந்தான் பூச்சி. உள்நீச்சலடித்த கரிமேட்டுப்பட்டிப் பையன்கள் தண்ணீருக்குள் இவன் கால்களைச் சுண்டி இழுத்துவிட்டுப் போயினர். இவன் தண்ணீருக்குள் நிலைதடுமாறும்போதெல்லாம் ராவுத்தர் கயிரைச் சுண்டி மேலிழுத்து அவன் ஓட்டத்தை நிதானப்படுத்தினார். தண்ணீரைக் குடித்தும் மூக்கில் தண்ணீர் ஏறியும் பூச்சி நீச்சலடித்துப் பழகிக்கொண்டான். நீருக்குள் தம்கட்டி மூச்சுவிடாமல் நீந்தி உள்நீச்சல் பழகுவதில் மும்முரமாக இருந்தான்.
வெயில் முற்றிய ஒரு நாளில் வட்டக் கிணத்துக்குள் பிடிமண் எடுக்கும் போட்டி ஆரவாரமாக நடந்தது. கண்சிவந்து கை சோர்ந்து தோற்றுப்போய் எல்லோரும் மேடேறிக்கொண்டிருந்தார்கள். முத்துக்காளை உள்நீச்சல் அடிப்பதில் மன்னன். பெரியாற்றில் தண்ணீர் கரையை முங்கி அடர்ந்து பாயும் நாள்களில்கூட ஆற்றைக் கடந்து வருபவன். இன்று வட்டக் கிணத்துக்கு குளிக்க வந்திருந்தான். அவனையும் போட்டிக்கு ஏத்திவிட்டார்கள் இளைஞர்கள். அவனோடு போட்டி போடத்தான் ஆளில்லை. பூச்சியும் கிணத்தின் ஓரத்தில் நீச்சலடித்துக்கொண்டிருந்தான். முத்துக்காளையோடு போட்டி போட அவன் முன்வந்ததும், சிலர் அவனை அடிக்கவே வந்துவிட்டார்கள். "இதென்ன சினிமாவாடா பயில்வான ஒல்லிகுச்சி ஹீரோ அடிச்சு நொறுக்கிறாப்பில காட்ட, போடா போயி ராத்திரி பொரி விக்கிறத பாரு" என்று விரட்டினார்கள். முத்துக்காளைதான் அவனைத் தன்னோடு போட்டி போட விளையாட்டாக அனுமதித்தான். ஒரு ஜோக்கர் படத்தைப் பார்க்கும் தோரணையில் பூச்சியைக் கூட்டத்தினர் கிண்டலடித்துக்கொண்டிருந்தனர். இருவரும் நெடுநேரம் தண்ணீருக்குள் அலைந்து கொண்டிருந்தார்கள். பூச்சி மூச்சடக்க முடியாமல் கிணற்றின் மேல் பகுதிக்கு வரும்போதெல்லாம் "டேய் உனக்கெல்லாம் தேவையாடா வெளியே வாடா" என்று கத்தினார்கள். முத்துக்காளை மேலே வரும்போது "உள்ள போ உள்ள போ" என்று கத்தினார்கள். பூச்சியை வெளியே வரச்சொல்லிக் கூட்டம் கத்தும்போதெல்லாம் "உசுரைவிட்டாவது இவங்கே முன்னாடி ஜெயிக்கணும்" என்று வெறியோடு மூச்சடக்கி உள்ளே போனான் பூச்சி. கிணற்றின் சுவர்களில் நீட்டிக்கொண்டிருந்த செங்கலில் பூச்சியின் உடல் உராய்ந்து சென்றது. இந்தமுறை கவனமாக உள்நோக்கிச் சென்றான் பூச்சி. தண்ணீரை அடித்துக்கொண்டே ஒரு கை தண்ணீரின் ஆழத்தை நோக்கி அலைந்தது. அவன் கை மண்ணைத் தொட்டதுபோல்தான் இருந்தது. பிசுபிசுப்பாக வழுக்கிக்கொண்டுபோனது மண். எல்லா விசையும் ஒன்று சேர்த்து ஒரு பிடி மண்ணை எடுத்து மேல்நோக்கிக் கிளம்பினான். மூச்சுவிட்டுக் கரையேறிவனை முடியாமல்தான் வெளியே வந்துவிட்டான் என்று கூட்டம் "ஹேய்" என்று கத்திச் சிரித்தது. கூட்டிப் பிடித்திருந்த வலதுகையை விரித்ததும் எல்லோர் முகமும் அமைதியானது. கறுப்பான ஈரமண் அவன் கைகளில் வெயில்பட்டு மின்னிக்கொண்டிருந்தது. கொஞ்ச பேர் "பரவாயில்லடா... பூச்சி பிடி மண்ணெடுத்துட்டு வந்துட்டாண்டா" என்று சொல்லச் சுதாரித்துக்கொண்ட சிலபேர் "என்னாடா எங்ககிட்டயே பொய் சொல்றீயா டவுசர் பாக்கெட்டுல மண்ணை ஒளிச்சுவச்சுக் கெணத்துக்குள்ள தவ்விட்டு இப்ப ஜெயிச்சிட்டேன்னு பொய் சொல்றீயா". "எங்கம்மா சத்தியமா உள்ள முங்கித்தான் எடுத்தேன்" என்று பூச்சி கெஞ்சியபடி சொன்னான்.
எப்போதும் பிடிமண் எடுக்கும் போட்டியில் டவுசர் பாக்கெட்டைச் செக் பண்ணித்தான் கிணத்துக்குள் அனுப்புவார்கள். பூச்சியை ஒரு போட்டியாளராக யாரும் மதிக்காததால் யாரும் அவன் பாக்கெட்டைச் செக் பண்ணவில்லை. முத்துக்காளை பிடிமண் எடுக்காமல் மேலேறி வந்துவிட்டான். பூச்சி கிணத்துக்குள் மூழ்கித்தான் பிடிமண் எடுத்தானென்று அவனுக்குத் தெரியும். அவன் கால்களைக் கடந்துதானே பூச்சி கிணற்றின் ஆழத்திற்குள் போனான். தான் ஒரு கேவலமான பிறவியிடம் தோத்துவிட்டோ ம் என்றால் எவ்வளவு அவமானம் என்று அவன் யாரிடமும் எதுவும் பேசாமல் வெயிலில் உட்கார்ந்தான்.
இப்போது பூச்சிக்குத் தைரியம் வந்தது. "என் டவுசர் பாக்கெட்டைச் செக் பண்ணிக்கோங்க இன்னொரு தடவை கெணத்துக்குள்ள போயி மண்ணெடுத்துட்டு வர்றேன்" என்றான். இவன் ஜெயிக்கப்போவதில்லை என்று நினைத்த கூட்டம் அதற்குச் சரியென்றது. அடி ஆழத்தைத் தேடி உள்ளே போனான் பூச்சி. கூட்டம் இவனை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. ஏற்கனவே நீருக்குள் அலைந்து திரிந்ததில் சோர்ந்து போயிருந்தான். இழிவாகப் பார்க்கும் அவர்களிடம் தன்னை நிரூபிக்க வேண்டுமென்பதில் அவனுக்கு வைராக்கியம் பிறந்தது. உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரே மனதாக மூச்சடக்கி அடியை நோக்கி அப்படியே குதித்தான். தரையை அடைந்து மண்ணை அள்ளிய வேகத்தில் எம்பி எம்பி மேல்நோக்கிப் பாய்ந்தான். தண்ணீரின் கனம் அவனை வேறொரு திசைக்கு இழுத்தது. கட்டித் தொங்கவிடப்பட்ட ஆடும் பந்து சுவரில் மோதி மோதி விலகுவது போன்று சுவரில் மோதி மோதிக் கீழ்நோக்கிப் போனான். படிக்கட்டு இருக்கும் திசையறிய முடியவில்லை. மண்ணை நழுவவிடாமல் கையை இறுக்கிப் பிடித்திருந்தான். படிக்கட்டைக் கண்டுபிடித்த உற்சாகத்தில் காலை வேகமாக ஒரு உந்து உந்தினான். படிக்கட்டில் மோதிய அவன் தலையிலிருந்து கிளம்பிய மிகப்பெரும் சத்தம் தண்ணீரில் அமுங்கியது. ஒரு நொடி எதிலோ இடித்துக் கொண்ட வலியை உணர்ந்தவன் பரபரவென்று படிக்கட்டு வழி மேலேறினான் கையில் பிடி மண்ணோடு. "டேய் இவன் உண்மையிலே ஜெயிச்சிட்டாண்டா" என்று குசுகுசுவென்று பேசியபடி ஆளாளுக்கு வீட்டுக்குக் கிளம்பினர். இவன் வெற்றியைப் பற்றிய பெருமிதம் யாருக்குமில்லை. ரத்தம் தலையில் வழிந்துகொண்டிருந்தது.
இரவில் பொரி விற்கப்போன பூச்சிக்குச் சிறிதளவும் மரியாதை இல்லை. அவர்களுக்கு அதே பூச்சியாகத்தான் இருந்தான். அவர்களுக்குப் பூச்சியை இன்னும் கொஞ்சம் சீண்டிப் பார்க்கும் எண்ணந்தான் அதிகரித்தது. "ஏய் பூச்சி தப்பட்டக் காலா, சப்பை மூக்கா, குண்டுச்சட்டி" என்று அவனை ஏகத்துக்குக் கூப்பிட்டு அவனை மனமுறியச் செய்தார்கள். எல்லாவற்றையும் மீறி அவர்களைத் தோற்கடித்துச் சாதிக்கும் வேகம் மட்டும் பூச்சிக்கு கூடிக்கொண்டுபோனது. உயிர்ப் பயமின்றி வீரதீரச் செயல்களைச் செய்ய ஆரம்பித்தான். தேங்காயைத் தலையால் உடைத்தான். ஆணி வைத்த செருப்பைப் போட்டு நடந்தான். "டேய் உன்னால இது முடியுமாடா" என்று யாராவது கேட்டாலே அதைச் செய்து முடிக்காமல் ஓயமாட்டான். சிறுவர்கள் எல்லாம் "பூச்சி இதைச் செய்யுடா அதைச் செய்யுடா" என்று அவனை ஒரு மந்திரவாதியைப் போல இயக்கினார்கள். அப்போதும் அவர்களுக்கு அவன் வீரனாக இல்லாமல் கோமாளியாகத்தான் தெரிந்தான். திருவிழா இல்லாத காலத்தில்கூட வாயில் வேல் சொருகி ஊருக்குள் வலம் வருவான். பொரி விற்பதை மறந்து போனான். குண்டுராவுத்தர் அவனிடம் பட்டாணி வாங்கித் தின்பதற்காகக் காத்திருந்து ஏமாந்துபோனார். "வேலை செய்யாம கிறுக்குத்தனம் பண்றியேடா" என்று அம்மா அடிப்பதும் திட்டுவதும் உறைக்கவில்லை. ஊருக்குள்ளிருக்கும் அத்தனை பேரையும் தன்னை நோக்கித் திருப்புவதிலே பூச்சி குறியாக இருந்தான்.
சுடுகாட்டு மரத்தில் ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஆணி அடித்து வந்ததாகப் பூச்சி சொன்னதை யாரும் நம்பாததால் அடுத்த நாள் விநோதமாக ஊருக்குள் வந்தான். வெற்றுடம்பில் சுடுகாட்டு எலும்பை மாலையாக்கி அணிந்து எலும்புக்கூடு நடந்து வருவதைப்போல நடந்து வந்தான். சிறுவர்கள் அதைப் பொய் எலும்புக்கூடாக நினைத்துப் பிடித்து இழுத்தார்கள். சிறுமிகள் விலகி ஓடினார்கள். பெண்கள் அவனை அருவெருப்பாகப் பார்த்தார்கள். அவன் எந்தக் காலத்திலும் அவர்களுக்குக் கதாநாயகனாகத் தெரியவில்லை. சோர்ந்துபோனான் பூச்சி. அதற்கு பின் அந்த ஊருக்குள் பொரிவண்டியின் மணிச்சத்தம் கேட்கவில்லை. ஊரே பயந்துறங்கும் ஒரு ராத்திரியில் வெளியூர் குடுகுடுப்பைக்காரனோடு பூச்சி ஊரைவிட்டு போனதாகச் சொன்னார்கள்.
இப்போது ஊருக்குள் இரவில் பம்பாய் மிட்டாய் விற்பவனின் மணிச்சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. சிறுவர்கள் "சோனக்காதா" என்று பட்டப்பெயர் வைத்து அவன் மணிச் சத்தத்துக்குப் பின்னால் போய் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
நன்றி - காலச்சுவடு
கருத்துகள்