பண்டரியைப்
பார்க்க வேண்டும் என்று அப்போதுதான் தோன்றியது.
பத்து நாள் இருபதுநாள் இங்கே
இருக்கும்போதுகூடப் பார்க்காமல் போயிருக்கிறேன். ஆனால் பாலா இன்றைக்குச்
சொன்னதும் போவோம் என்று முடிவாகிவிட்டது.
என்னைப்
பார்த்ததில் இருந்து பாலாவின் வாய்
ஓயவே இல்லை. சித்தி, சித்தி
என்று எதையாவது சொல்லிக்கொண்டிருந்தான். பழைய புத்தகக் கடையில்
ஒன்றரை ரூபாய்க்கு வாங்கிய கபில் படத்தை
மேஜைக்கு நேரே ஒட்டியிருந்தான். ‘மேலே
வா சித்தி ‘ ‘ என்று கையைப் பிடித்துக்கொண்டு
போய்ப் பிளாஸ்டிக் வாளியில் வளர்க்கிற மீன் குஞ்சுகளைக் காட்டினான்.
படிகளில் ஏறும்போதே அடித்தவேப்பம் பூ வாசனையில் மனம்
இன்னும் கிறங்கிக் கிடந்தது. ஆரஞ்சு வாளியில் நீந்துகிற
மீனை முற்றிலும் ரசிக்க முடியவில்லை.
‘நீ
மீன் வளர்த்திருக்கிறாயா சித்தி ? ‘
‘ம்ம்.
ஹார்லிக்ஸ் பாட்டிலில். ‘
‘கிளி
? ‘
‘இல்லை
‘
‘நாய்க்குட்டி
? ‘
‘டைகர்
என்னுடன்தான் படுத்திருக்கும் பாலா. ‘
‘முயல்கூட
உண்டல்லவா ? ‘
‘நான்
பாலாஜியின் தலையைக் கோதிவிட்டேன். அக்காமாதிரி
இருக்கிறதாக நினைத்தவன், சமீபத்தில் அத்தான் மாதிரியே மாறிக்கொண்டு
வருகிறான். கற்றையான முடிகூட அத்தானுடையது போலத்தான்.
குரல் உடைந்து கொண்டிருக்கிறது. தொளதொளவென்று
செங்கல் கலர் டா ஷர்ட்டில்
குனிந்து கொண்டு மீனுக்கு உணவுத்தூள்
தூவுகிறான்.
அலமாரித்
தட்டுக்களில் சாயிபாபா சிரிக்கிறார். அக்கா படித்த இரு
நகரக் கதை, எமிலி டிக்கின்ஸின்,
ஆங்கில இலக்கிய வரலாறு, ஷேக்ஸ்பியர்
தொகுப்பு வரிசையாக.
வீணையைப்
பார்த்துக்கொண்டே கேட்டேன்.
‘அம்மா
இப்போது வாசிக்கிறது உண்டா ? ‘ பாலாவுக்குப் பதிலாக, வீணை மீது
படிந்திருக்கிற புழுதியே பதில் சொல்கிறது.
அக்காவின்
பெருவிரல்களில் காய்கறி நறுக்கி நறுக்கி
அரிவாள்மனை செதில் செதிலாக வெட்டியிருக்கும்.
சோப்புக் காரம் பட்டுப் பட்டு
உள்ளங்கை எல்லாம் வெளிறியிருக்கும். கண்களை
மூடினால் இரண்டாவது சானல் ஓடிக்கொண்டிருக்கும்.
நானும்
மீன்களுக்கு ஒரு சிட்டிகை உணவை
விசிறியபோதுதான் பாலா சொன்னான், ‘பண்டரி
அங்கிள், சூப்பரா இரண்டு குதிரைப்
படம் போட்டிருக்கிறார் சித்தி, ‘ என்று.
நான் அக்கா வாசிக்காத வீணை
பற்றிய யோசனையில் இருக்க, சுழன்று சுழன்று
வரும் மீன்களின் பிளந்த வாய்களுக்கிடையே, இதைச்
சொல்லவேண்டும் என்று அவனுக்கு எப்படித்
தோன்றிற்று என்று தெரியவில்லை.
என்னை எப்போதுமே குதிரைகள் பாய்கிற படங்கள் ஈர்த்ததில்லை.
அவற்றை வரைந்தது யாராக இருந்தாலும். பண்டரி
வீட்டில் முன்பு எப்போதோ ஒரு
சித்திரம் பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட முழுச் சட்டமும் நீலத்துக்குள்
கரைந்திருக்கும். இரவு, நிலவு இல்லாமல்
நிலவு வெளிச்சம், பெரிய அரசமரம், பிள்ளையார்,
நாகர் சிலைகள் எல்லாவற்றிலும் நீலம்.
ஓர் அலை போல் அந்தச்
சித்திரத்திலிருந்து ஒரு நுட்பமான இசை
எழுந்து, எங்கும் வழிந்து கொண்டிருந்தது
போலத் தோன்றும். ஒரு சித்திரம் போல
அல்லாமல், சங்கீதம் போல இருக்கும்.
பண்டரிக்குப்
பூனைக் கண்கள்.
‘அது
நீலச் சித்திரமல்ல. நிரம்பி வழியும் இசை,
‘ என்று நான் சொன்னபோது, பண்டரியின்
அழகான கண்கள் இடுங்கிச் சிரித்தன.
ரெயில்வே காலனியில் இருக்கிற ரோட்ரிக்ஸின் ஆங்கிலோ இந்தியச் சிரிப்புபோல
ஒன்று பண்டரியின் முகத்தில் படர்ந்தது.
‘வேங்கடலக்ஷ்மி,
வேங்கடலக்ஷ்மி…. ‘ என்று
உள்ளே பார்த்துக் கூப்பிட்டதும், பண்டரியின் மனைவி ஈரக் கையைத்
துடைத்துக்கொண்டே வந்தாள். குழந்தை உண்டாகியிருக்கவேண்டும். ஏழெட்டு மாதமாவது
இருக்கும்.
‘நிரம்பி
வழியும் இசையாம் ‘ ‘ என்று மிகுந்த சந்தோஷத்துடன்
சொல்லி மனைவியின் கைகளைப் பிடித்துக்கொண்டார். ‘உட்கார், உட்கார்,
‘ என்று பக்கத்து இருக்கையைப் பண்டரி தட்டினார்.
வேங்கடலக்ஷ்மி
இல்லாவிட்டால் என்னுடை கைகளை ஒருவேளை
பிடித்திருக்கக் கூடும். அதற்குப் பதில்தான்
இது. ஆனால் பண்டரியின் இளகினமுகம்,
பக்கத்தில் அவர் மனைவி, மனைவியின்
மஞ்சள் நூல் சேலை, அவர்களுக்குப்
பின்னால் இருந்த ஒரு சுடுமண்
அய்யனார் குதிரைத் தலை, எல்லாம் நன்றாக
இருந்தன.
பண்டரி
கவிதைகளும் எழுதுவார். அவருடைய கவிதைகள் பற்றியும்
அல்லாமல், என்னுடைய கவிதைகள் பற்றியும் அல்லாமல், பொதுவாகக் கவிதைகள் பற்றி அப்போது பேசின
ஞாபகம் இருக்கிறது.
அதற்கப்புறம்
எவ்வளவோ நடந்துவிட்டிருக்கிறது. என்னுடைய கவிதைத் தொகுப்புகள் இரண்டு
வெளியானதும், எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை
என்பதும் தவிர பெரிய வித்தியாசங்கள்
ஒன்றுமில்லை. பண்டரிக்கும் இப்படி நிறைய நடந்திருக்கலாம்.
ஒரு தடவை அவருடைய பெண்
குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கிக்கொண்டு
போனேன். பண்டரியின் கவிதையும் என்னுடைய கவிதையும் அடுத்தடுத்து வந்திருந்த சமயத்தில் அதை பண்டரி பாராட்டி
எழுதின கடிதத்துக்குப் பதில் போடாமல் இருந்திருக்கிறேன்.
தற்செயலாக ஒரு ரயில் பிரயாணத்தில்
ரேகா ரோட்விட்யாயைச் சந்தித்தபொழுது, அவளைப் பற்றியும் அவள்
ஓவியங்களைப் பற்றியும் பண்டரியிடம் பேசிவிட்டு வந்திருக்கிறேன். பண்டரி வீட்டில் இல்லாத
ஒரு நாளில், அவர் வீட்டுப்
பப்பாளி மரத்தில் பழுத்திருந்த ஒரு பழத்தைப் பறித்துச்
சாப்பிட்டிருக்கிறேன். ‘மாம்பழம் வெட்டுவதுபோல அழகாக நறுக்குகிறீர்கள், ‘ என்று
பண்டரியின் மனைவி சொன்னதுடன் சரி.
அவ்வளவு ருசியான பப்பாளியை ஒரு
துண்டுகூடச் சாப்பிடவில்லை.
‘பப்பாளி
ஜ்ஊடு, ‘ என்று வேங்கடலக்ஷ்மி சொன்னதிலிருந்து,
‘ஜ்ஊடா ஏதாவது கொடுங்க வேங்கடலக்ஷ்மி,
‘ என்று கேட்க ஆரம்பித்திருக்கிறேன். வேங்கடலக்ஷ்மி அதற்குச்
சிரிக்கிறதுண்டு. எதற்கு என்று தெரியவில்லை.
ஆனாலும் சிரிப்பது நல்லதுதானே ‘ இன்றைக்குப் பண்டரியைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியதற்குக்கூட அந்தச்
சிரிப்புத்தான் காரணமோ என்னவோ ?
‘பாலா
வருகிறாயா ? ‘ என்றேன்.
‘எங்கே
சித்தி ? ‘
‘பண்டரி
அங்கிள் வீட்டுக்கு. ‘
பாலா வரவில்லை.
‘இந்த
இருட்டிலேயா ? ‘ என்றான்.
வெளியே
பார்த்தால் ரொம்பவும் இருட்டித்தான் இருந்தது. சப்போட்டா மரத்தில் வெளவால் இடம் மாறிக்கொண்டிருந்தது.
வேப்பமரம் தன் பூ வாசனை
முழுவதையும் இருட்டில் உதிர்த்திருந்தது. ஒரு நீர் நிலை
போல அசையாது கிடந்த இருட்டு,
என் புடவை விசிறலில் நலுங்கியது.
மச்சுப் படிகளில் இறங்கிய என் கால்களுக்குள்
இருட்டு மெத்திட்டு அமுங்கியது. படிக்கட்டுக்கு அருகில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரின்
பக்கத்தில் கறுப்புப் பூனைக்குட்டி பதி போட்டிருந்தது. மரக்கதவைத்
திறக்கையில் தபால் பெட்டி குளிர்ந்தது.
ஒரு பெரிய தவளையின் துள்ளல்.
மாநகராட்சித் தண்ணீர்த்தொட்டியில் பிளாஸ்டிக் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
வெளிறிய மஞ்சள், சிவப்பு, ஊதா
நிறங்களில் குடங்கள் அந்தரத்தில் நகர்வதுபோல இருந்தன. இருட்டு, சதைப்பற்று முழுவதையும் விழுங்கி விட்டுக் கொட்டையைத் துப்புவதுபோல, மிகச் சில அசைவுகளை
மட்டும்தெளிவற்றுக் காட்டிக் கொண்டிருந்தது.
பண்டரியின்
வீட்டு வெளிக்கதவைத் திறக்கும்போது ஆச்சரியமாகச் சத்தம் வரவில்லை. முன்தினத்துப்
பூவுடன் கிளைகள் ஆடிக்கொண்டிருந்தன. ஜன்னல்
கதவுகள் முதற்கொண்டு எல்லாம் அடைத்துக் கிடந்தன.
வாசல் கதவும் திறந்தபடி இல்லை.
பண்டாரி
இல்லை போல. யாருமே இல்லைபோல.
‘ஸார்…பண்டரி
ஸார் ‘ ‘ என்று கத்தினேன். கத்தலின்
அதிர்வில் இலைச் சருகுகள் போல
இருட்டு சுழன்று சுழன்று இறங்கியது.
‘போய்விடலாமா ? ‘ என்று கடைசியாகக் கூப்பிட்டபோது,
ஜன்னல் கதவு திறந்தது. எட்டிப்
பார்த்த முகத்தைப் பார்த்துக் கேட்டேன், ‘ரேணு, அப்பா இருக்கிறாரா
? ‘
நல்லவேளை
ரேணு சற்றுச் சிரித்தாள். கதவு
திறந்ததும் உள்ளே ஓடிவிடுவதற்கு நான்
சகல தயாருடன் இருந்தேன். பண்டரியின் பூனைக்கண் ஞாபகம். அவருடைய இடுங்கல்
சிரிப்பு, வேங்கடலக்ஷ்மியின் ‘ஜ்ஊடு ‘, ரேணுவின் பூச்சுப் பூசின குண்டுகுண்டான விரல்கள்…
கதவின்
மேல்கொக்கி, கீழ் கொக்கி அகற்றி,
இரண்டுகதவுகளையும் திறந்து, பச்சைப்பூக்கள் பதித்த திரைச்சீலை ஒதுங்கவும்,
நான் உள்ளே கால் வைக்கவும்
சரியாக இருக்கவேண்டும் என்று நான் செருப்புக்களைக்
கழற்றியபடி நடை ஏறியபோது, வெளியே
வந்த பண்டரி
‘இங்கேயே
இருப்போமே ‘ ‘ என்றார். நடைக்கு இருபக்கமும் விளிம்பு
மாதிரிக் கட்டின பகுதியைக் காட்டினார்.
ஆளுக்கு ஒரு பக்கம் உட்காரலாம்.
அதை அமுல்படுத்துவது போல் அவரே முதலில்
எதிர்ப்பக்கம் உட்கார்ந்துகொண்டார். எனக்குப் புரியவில்லை.
‘ரேணுவுக்குப்
பரீட்சை நடக்கிறதா ஸார் ? ‘
‘முடிந்துவிட்டது.
‘ பண்டரி வட்டக் கழுத்துப் பனியன்
அணிந்திருந்தார்.
‘லக்ஷ்மிக்கு
ஏதாவது…
? ‘ நான் புருவத்தை நெரித்தேன்.
‘லக்ஷ்மிக்கு
இல்லை. என்னுடைய அம்மாவுக்கு. ‘ பண்டரி ஒருமாதிரியாகச் சிரித்தார்.
‘அம்மா
பிரக்ஞையில்லாமல் கிடக்கிறார்கள். பத்துநாட்கள் ஆயிற்று, நினைவு தப்பி. ‘ இதைச்
சொல்லும்போது துக்கமடைவதை விட்டு இதுஎன்ன ?
‘எண்பது
வயதுக்கு மேல் ஆச்சு. ‘ நான்
கேட்காமலும், என்னை உள்ளே விடாமலும்
பண்டரி மேலுக்குமேல் தகவல்களைச் சொன்னார்.
‘எல்லாக்
காரியமும் படுக்கையிலேதான். ‘ இதைச் சொல்லும்போதுகூட, யாரை
விட்டோ நடையை அடைக்கச் சொன்னது
போல, எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது
போல, ஒரு உருவமற்ற தடை
என்முன் இருந்தது.
எண்பது
வயது ஜீவன். பேச்சில்லை, அசைவில்லை.
மூழ்கிக் கொண்டிருக்கிறது. விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உள் அறைகளின் ஏதோ
ஓர் கட்டிலில் பழந்துணி போலக் கிடக்கிறது. நான்
இப்போது அந்தக் கையை எடுத்து,
என் கைக்குள் வைத்துக் கொள்ளவேண்டும். வெதுவெதுப்பு அற்ற அந்த உள்ளங்கைகளில்
இருந்து பெற்றுக் கொள்வதற்கு எனக்கு நிறைய உண்டு.
பிளந்த நடுவகிட்டில் இருந்து இரண்டு பக்கமும்
நரைத்துப் பெருகும் அந்த மனுஷியின் சிகையை
நான் சற்றே நீவிவிடவேண்டும். தளர்ந்த
மிருதுவான காது நுனி மடல்கள்,
தொய்ந்த அடிவயிறு, வெளிறிய பாதங்கள், போர்வையின்
நூல் பிரிந்து வெட்டப்படாத கால் பெருவிரல் நகத்தின்
வெடிப்பில் சிக்கிக் கொண்டிருக்கிற சிவப்பு இழை, இவற்றை
ஒன்று விடாமல் வருடி தடவித்
தடவி விடவேண்டும்.
நிரம்பி
வழியும் இசை என்று நான்
சொன்னபோது, பண்டரி வேங்கடலக்ஷ்மியின் கைகளைப்
பற்றிக் கொண்டதுபோலப் பற்றிக் கொள்ளவேண்டும்.
வேங்கடலக்ஷ்மி
எங்கே ? உள்ளே தானே இருப்பாள்
? நான் கூப்பிட்டபோது ரேணுதானே ஜன்னல் வழியாக எட்டிப்
பார்த்தாள். நான் வந்திருப்பதை அம்மாவிடம்
சொல்லியிருப்பாள் அல்லவா ? அப்புறம் ஏன் வெளியே வரவில்லை.
ஏதாவது சாஸ்திரம் இருக்கிறதா ? இருட்டில் வருகிற பெண்பிள்ளைகளை வயதான
நோயாளிகளைப் பார்க்க அனுமதிக்க கூடாது
என்று எதுவும் எழுதப்பட்டிருக்கிறதா ? முணுமுணுக்கிற நட்சத்திரங்களின்
மேல் பார்வையை நிலைகுத்த விட்டுவிட்டுப் பண்டரி, வேங்கடலக்ஷ்மி, ரேணு
என்று எல்லாப் பெயரையும் அழித்துவிட்டு,
தன் அசைவற்ற பிரக்ஞையின் சிறகுகளுடன்
படுத்திருக்கிற அந்த முதிர்ந்த பறவையை
நானும் ஏந்திக் கொள்ளக் கூடாதா
? ஏன் உள்ளே விடாமல், இப்படிப்
படியில் உட்கார் என்று சொல்லிக்
கொண்டு….
பண்டரி
இந்தச் சமயம் என் கவிதைகளைப்
பற்றிக் கேட்டார்.
‘கடைசியாக
என்ன எழுதியிருக்கீங்க புதுசா ? ‘ என்று சிரித்தார். ‘வித்தை
தெரிஞ்சவங்க எல்லாம் சும்மா இருக்கறீங்க
? ‘ என்று என்னைப் பார்த்தார்.
நான் ஒன்றும் சொல்லவில்லை.
உட்காராமலே
நின்று கொண்டிருந்த அந்த நடைப் பக்கத்தில்
இருந்து வெளியேறினேன். வெளிக்கதவைத் திரும்பவும் மூடி, இருட்டுக்குள் நடக்க
ஆரம்பித்தபோது, ஒரு திரள் போல
வேப்பம்பூ வாசனை வந்து அப்பியது.
இழுத்துச்
சுவாசித்தபோது தொண்டை கசந்தது.
வாசனைகூடக்
கசக்குமா என்ன ?
கருத்துகள்