மொழிப் பயிற்சி – 75 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ
ஞானச்செல்வன்
இயல்பாகப் பேசுவதே இலக்கணம்
மகிழ்ச்சி - மகிழ்வு, தளர்ச்சி - தளர்வு, அயர்ச்சி - அயர்வு. இச்சொற்களைப் போலவே முயற்சி - முயல்வு எனக் கொண்டால், "எல்லா முயல்வுகளும்' என்னும் எழுத்தில் பிழையில்லை என அறியலாம். முயற்சிகள் என்று மட்டுமே எழுதியும் பேசியும் கேட்டும் பழக்கப்பட்ட நமக்கு முயல்வுகள் புதிதாகத் தோன்றுவது இயல்பே.
அடடா! என்னே தமிழ்!
விடம் (விஷம்) என்பதும், நச்சு என்பதும் ஒன்றே. குழந்தையாய் இருந்த கண்ணனைக் கொல்ல பூதகி எனும் அரக்கி முலைப்பால் கொடுத்தாள், கண்ணனோ அவள் உயிரையே உறிஞ்சி எடுத்துவிட்டான். இந்நிகழ்வை ஆழ்வார்ப் பாசுரம் "பேய்ச்சி விட நச்சு முலை' எனும் தொடரால் குறிக்கிறது. விடமுலை எனினும் நச்சு முலை எனினும் ஒன்றே! பின் ஏன் இரண்டு சொற்களும் வந்தன? விட என்பதற்கு விடம் எனக் கொள்ளாது பேய்ச்சி (உயிரை)விட - நச்சு முலை - என்று பொருள் காண வேண்டும்.
"குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்' என்று தொடங்கும் பாடலை நாமறிவோம்.
"வண்டார் இருங்குஞ்சி மாலை தன் வார் குழல் மேல்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பால்'
என்பது சிலப்பதிகாரம். குஞ்சி (குடுமி) ஆடவர்க்குரியது. குழல் (கூந்தல்) மகளிர்க்குரியது.
சிலம்பு விற்க மதுரைக்குப் புறப்பட்ட கோவலனைக் கண்ணகி தழுவினாள். கோவலன் தன் குடுமியில் (குஞ்சி) சூட்டியிருந்த மாலையினை எடுத்துக் கண்ணகியின் கூந்தலில் (குழல்) சூட்டிப் பிரியா விடைபெற்றான். மிக விளக்கமாக எழுத வேண்டிய இடம் இது. இலக்கியக் கட்டுரை ஆகிவிடும் ஆதலின், வேண்டிய செய்தியை மட்டும் காண்போம்.
குழந்தைக் கண்ணனைப் பாடும் ஆழ்வார், "மை வண்ண நறுங் குஞ்சி குழல் பின் தாழ' என்று பாடியுள்ளார். இங்கே குஞ்சி, குழல் இரண்டு சொற்களும் ஏன் வந்தன? எப்படி இது பொருத்தமாகும்? இரண்டு சொற்களும் ஒன்றையே குறிப்பதாயினும் சிறிய பொருள் வேறுபாடுண்டு.
குஞ்சி - முன் குடுமி, குழல் - பின் தொங்கும் கூந்தல்.
குழந்தைக் கண்ணனுக்கு முன் குடுமியும் உண்டு. பின்னால் தொங்கும் கூந்தலும் உண்டு என்று பொருள் தரும் வண்ணம் மேற்கண்ட பாடல் வரி சிறப்படைகிறது.
முன்னாளில் ஆண்களும் குடுமி வைத்திருந்தனர் என்பதைச் "சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்னும் பழமொழி கொண்டு அறியலாம்.
தமிழின் சீர்மை அறிந்து மகிழ்ந்தீர்களா? நம் பழந்தமிழ்ச் சொற்கள் பல வடமொழியில் இணைந்துள்ளன. (வடசொல் தமிழில் கலந்தது போலவே) மதங்கம் என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே மிருதங்கம். அவ்வாறே மெது, மென்மை மெத்து மெத்தென்று என்பன எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள். தமிழின் மெது என்பதே "மிருது' எனத் திரிந்தது. மனம் என்னும் தூய தமிழ்ச் சொல்லிலிருந்தே மனஸ், மனசு, மனது என்பன தோன்றின. துறக்கம் என்னும் தூய தமிழ்ச்சொல்லே சொர்க்கம் என்றாயிற்று என மொழி நூல் அறிஞர் உரைப்பர்.
புனைப் பெயரா? புனை பெயரா?
ஒருவர் தம் இயற்பெயரில் அல்லாமல் தாமாகப் புனைந்து கொண்ட பெயரால் எழுதி வருகிறார். அப்பெயரில் அவர் நேற்றும் (முன்பும்) எழுதினார். இன்றும் (இப்போதும்) எழுதுகிறார். நாளையும் (பின்னரும்) எழுதுவார். புனைபெயர் எனில் புனைந்த பெயர், புனைகின்ற பெயர், புனையும் பெயர் என முக்காலமும் கொள்ளத்தக்கதாகும். காலம் கரந்த (மறைந்துள்ள) பெயரெச்சம், அஃதாவது மூன்று காலங்களுக்கும் பொருந்தக்கூடிய பெயர் எஞ்சிய வினை. வினைத் தொகை எனப்படும். புனை பெயரை வினைத் தொகையாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல் பொருத்தமுடையது.
புனைப் பெயர் எனில், புனைந்தது ஆகிய பெயர் எனக் கொண்டு, புனைந்தது என்னும் வினையைப் புனைதல் என்னும் தொழில் பெயர் ஆக்கினால், புனைதல் ஆகிய பெயர் எனக் கொள்ளலாம். ஆகிய எனும் பண்பு உருபு பெற்று வருவதால், புனைதல் ஆகிய பெயர் எனக் கொள்ளலாம். புனைதல், பெயர் இரண்டும் ஒன்றையே குறிக்கின்றன என வலிந்து கொண்டு இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொள்ளலாம். ஆனால் இவ்விளக்கத்தைவிட முன்னர்ச் சொன்னதே மிகப் பொருந்தி வருவதால் புனை பெயர் என்பதே சரியானது; இப்படித்தான் அறிஞர் பலர் எழுதியுள்ளனர் என்பதும் நோக்கத்தக்கது.
என்ன? தமிழில் ஒற்றிலக்கணம் (வல்லினம் மிகுதல்) மிகவும் இடர் செய்கிறேதோ? அப்படியொன்றுமில்லை. இயல்பாகப் பேசுவதே இலக்கணம் ஆக்கப்பட்டுள்ளது. புனை பெயர் என்று சொல்லிப் பாருங்கள். புனைப் பெயர் என்றும் சொல்லிப் பாருங்கள். எது இயல்பாய் உள்ளது? புனை பெயரன்றோ? வரச் சொன்னார், அந்தப் பையன் இயல்பாகும். இதனை வர சொன்னார், அந்த பையன் எனில் விட்டிசைப்பதை உணரலாம்.
(தமிழ் வளரும்)
நன்றி – தினமணி கதிர்
கருத்துகள்