13/09/2011

நாட்டுப்புற இயலில் தொழிற் பாடல் - முனைவர் ச. வீரபாண்டியன்

முன்னுரை

நாட்டுப்புற இயலில் தாலாட்டு, குழந்தைப்பாடல்கள், காதற்பாடல்கள், மணவாழ்த்துப்பாடல்கள், பக்திப்பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என பல வகையாக பகுத்து தமிழர்கள் போற்றியிருக்கின்றனர்.

உலக இயக்கத்தின் உயிர் நாடியாக இருப்பது ''தொழில்''. பார் புகழும் பகவத்கீதையும் கர்மயோகம் என்று சொல்லி தொழிலுக்கு உயர்வைக் கொடுக்கிறது. மனிதன் கர்மயோகங்களைத் தொடங்காமல் இருப்பதனால் ஞான நிஷ்டையை அடையமாட்டான். கர்மங்களை விட்டுவிடுவதாலேயே சித்தியையும் அடையான். ஒரு பொழுதும் கர்மங்களைச் செய்யாமல் ஒரு மனிதன் இருக்கின்றதில்லை. கர்மேந்திரியங்களை அடக்கிக் கொண்டு மனோவியாபாரம் புரிகின்றவன் பொய்மையான ஆசார முடையவனாவான். மனத்தால் பொறி புலன்களை அடக்கி பயனில் ஆசையற்றவனாகி, கர்மேந்திரியங்களால் கர்மயோகத்தைச் செய்கின்றவன் சிறந்தவனாகின்றான். கர்மத்தைச் செய்யாமல் இருப்பதைவிட, கர்மத்தைச் செய்வது சிறந்தது. யக்ஞம் செய்து மிகுதியைப் புசிக்கின்றவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகின்றான். எவர்கள் தனது பிரயோசனத்துக்காக அன்னம் முதலியவைகளைச் சமைத்து உண்பார்களோ அந்தப் பாவிகள் பாவத்தையே உண்ணுகிறார்கள்.

அன்னத்தினின்றும் உயிர்கள் உண்டாகின்றன. மேகத்தினின்றும் அன்னம் உண்டாகிறது. யக்ஞத்தினால் மேகம் உண்டாகின்றது யக்ஞம் கர்மத்தினால் உண்டாகிறது. கர்மம் பிரம்மத்தினிடமிருந்து உண்டானது. ஆகவே பயனைக் கருதாமல் கர்மங்களைச் செய். பயனை விரும்பாது கர்மங்களைச் செய்கின்றவன் பரத்தை அடைகின்றான். ஜனகர் முதலியோர்கள் கர்மத்தினாலேயே ஸ’த்தியடைந்தார்கள். சான்றோர்களை உலகம் பின்பற்றுகின்றது. அதனால் ஞானிகளும் கர்மங்களைச் செய்ய வேண்டாம் என்ற பகவத் கீதை கர்மயோகத்தின் வாயிலாக செய்யும் செயலுக்கு (தொழிலுக்கு) மிகவும் உயர்வு கொடுக்கின்றது. செய்யும் தொழிலே தெய்வன் என்பது முதுமொழி. வினை நலம் வேண்டி எல்லாம் தரும் என்பார் திருவள்ளுவர். வேலை செய்வதற்கு விருப்பமில்லாதவன் உணவு உண்ணக் கூடாது என்று வேதாகமம் கூறுவதுபோன்று, வேலை செய்யாதவனுக்கு சாப்பாடு எதற்கு? எச்சில் சோற்றுக்காரனுக்கு டம்பம் எதற்கு? என்று ஒரு பழமொழியும் வழக்கத்தில் உள்ளது. இவையெல்லாம் செய்யும் தொழிலின் சிறப்பைத் தெரிவிக்கின்றன. நீரின்றி அமையாது உலகு என்பர். அதுபோல் தொழிலின்றி வாழ்வு சிறக்காது. எனவே இக்கட்டுரையின் கருப்பொருளாக தொழிலை எடுத்துக் கொண்டு, நாட்டுப்புற இயலில் தொழிற்பாடல்கள் எங்ஙனம் அமைந்திருக்கிறது என்பதை காண்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

தொழிற் பாடலில் அமைப்பு

தொழில் புரியும் போது தங்கள் வேலைகளுக்கு இடையே களைப்பும், சலிப்பும் தோன்றாதிருக்க நாட்டுப்புறத்து மக்கள் பாடல்களைப் பாடி தொழிலைச் செய்து முடிக்கின்றனர். ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்று திரையிசையிலும் இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்பாடல்கள் தனக்கென சில அமைப்புக்களைக் கொண்டு விளங்குகின்றன. ஏலேலேக் குயிலே, ஏலேலோசாமி, ஐலசா, ஏலேலோ அன்னக்கிளி என்று முடிவு கொண்டதாக அமைகின்றன. உதாரணமாக,

''குட்டைப்பிள்ளை நட்ட நாத்து ஏலேலோ சாமி

குலுங்குதடி சீனிச்சம்பா ஏலேலோ சாமி''

சொல்லியடிச்ச அரிவாள் ஏலேலோ அன்னக்கிளி

சுழட்டுதம்மா நெல்லம் பிள்ளை ஏலேலோ அன்னக்கிளி

''ஆம்பிளைங்க கட்டும் வேட்டி ஏலேலேக்குயிலே

அசடுபட்ட வெள்ளை வேட்டி ஏலேலேக்குயிலே''

தொழிற்பாடல்களில் தனித்துப் பாடுவதும் உண்டு. கூட்டமாகப் படுவதும் உண்டு. குழுவாகப் பாடும் பொழுது ஒருவர் பாடல்பாட மற்றவர்கள் பக்கப்பாட்டு பாடுவதும் உண்டு.

தொழிற்பாடலும் சூழலும்

உழவின்போது நாற்றடிக்கும்போது, நடவின்போது, ஏற்றத்தால் நீர் இறைக்கும்போது, அறுவடையின்போது, கதிர் சுமக்கும்போது, கதிர் அடிக்கும்போது, வண்டி ஓட்டும்போது, சுண்ணாம்பு இடிக்கும்போது, நெல்குத்தும்போது, ஆயலோட்டும்போது, ஓடம் ஓடும்போது, சாலை அமைக்கும்போது, துணி வெளுக்கும்போது, மீனவர்கள் படகோட்டும்போது, உப்பளத்தில் உப்பு எடுக்கும்போது, தேயிலை பறிக்கும்போது, கல் தூக்கும்போது தொழிற் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன.

விவசாய தொழில் நாட்டுப்புறப்பாடல்

''சுற்றி வளப்போட்டி சூரியனைத் தண்டவிட்டு

மடக்கி வளப்போட்டி மாயவனைத் தண்டனிட்டு''

என்று உழவின்போதும்

''மாரி மழைகள் சொரிஞ்சே - சிறு

வயலுகள் எக்க நிறைஞ்சே''

என்று நாற்றரிக்கும்போதும்

''ஆள் ஒண்ணுக்கு ஆயிரம் நாத்து ஏலங்கிடிலேலோ அழகாத்தானும் நடுவோமையா ஏலங்கிடிலேலோ'' என்று நடவின் போதும்

''சாயப்பிடியருவாள் ஏலேலோ அன்னக்கிளி

சன்னதம்மா நெல்லம்புல்லை ஏலேலே அன்னக்கிளி''

என்று அறுவடையின்போதும்

''பூலா விளாறுவெட்டி, வள்ளிக்குப் பூவாலே நானேற்றி எய்தாலும் எய்திடுவேன், வள்ளிக்கு எங்ஙனே பட்டிடுமோ'' என்று பெண்கள் கதிர் சுமக்கும்போதும்.

''பொலிவளர பொலிசளர

பொலியான பொலிபொலிறுவெட்டி''

என்று கதிர் அடிக்கும்போதும் விவசாய தொழிலில் தொழிற் பாடல்களைக் காணமுடிகின்றது.

பிறதொழில் நாட்டுப்புறப்பாடல்

''சுண்ணாம்பு இடிக்கும்போது பெண்கள்

சிம்பி சிம்பி ஐயா எடுத்துலக்கை

சிற்றெலும்பை நோவுதய்ய''

நெல்குத்தும்போது

வள்ளிக்கதையைச் சொல்லி, முறத்திலே நெல்ல அள்ளி பொன் குந்தாணியை நீ தள்ளி, குத்தண்டி உன்பாட்டை சொல்லி....

ஆயலோட்டும்போது

...ஆய்க்கிளி நீலக்கிளி ஆலோ ஆலோ

அச்சமுள்ள பச்சைக்கிளி ஆலோ ஆலோ...

ஆண்கள் ஓடம்விடும்போது

... மாஞ்சோலையும் ஏலேலோ பூஞ்சோலையும் ஐலசா

மலையிலேதான் ஏலேலோ பார்ப்போமடி ஐலசா..

சாலை அமைக்கும்போது

''ஒரு தட்டு ஏலேலோ மண்ணெடுத்து ஐலசா

நான் போட்ட ஏலேலோ ரயிலு ரோட்டு ஐலசா''

தொழில் பாடல்களில், தொழிலைப் பற்றியும், தொழிற் செய்வோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்புடைய தோழர்களைப் பற்றியும் அறிய முடிகின்றது.

தொழிற் பாடல்களில் காதல்

தொழில் பாடல்களில் தொழிலுக்கடுத்த நிலையில் காதல் இடம் பெறுவதுண்டு. காதல் உணர்வுகள் அவர்களது களைப்பை எளிதில் போக்கிவிடுகின்றன. அதோடு மனதில் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் எழுப்பிவிடுகின்றன. தொழில் களைப்பு நீங்க பெண்களைப் பரிகாசம் செய்வதுண்டு. இதனால் பெண்களுக்குக் கிளர்ச்சியும் கிளு கிளுப்பும் ஏற்படுவதுண்டு.

''களை எடுத்துக் கை கழுவி

கரை வழியா போறபுள்ள

பரிசம் கொடுத்த மாப்பிள்ளைக்குப்

பால்குடம் கொண்டுபோறியா''

என்று காதலன் காதலியைப் பரிகாசம் செய்கிறான். பரிகாசம் செய்வது ஆண்களுக்கு மட்டும் அன்று பெண்களுக்கும் உரியதாக நாட்டுப்புற பாடலில் காண முடிகின்றது. உப்பளத்து வேலைக்காரி ஆண்களைக் கிண்டல் செய்துபாடுகின்றாள்.

கங்காணி கங்காணி

கருத்தச் சட்டை கங்காணி

நாலு ஆளு வரலேன்ன

நக்கிப் போலான் கங்காணி

முடிவுரை

நாட்டுப்புறத் தொழிற் பாடல்கள் தனித்தும் தன்னோடு பணிபுரிவோரோடு சேர்ந்து பாடப்பட்டாலும் தொழில் தன்னுடைய களைப்பு நீங்கவும் பிறர் இன்புற வேண்டும் என்பதற்காகவும் பாடப்படுகின்றன. பிறர் மனதைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இவைகள் பாடப்படுவதில்லை. இவை நல்லதொரு பண்பாட்டை அடித்தளமாக கொண்டு விளங்குகின்றன. இவர்கள் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடமையைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு நாட்டுப்புறப் பாடல்கள் உதவி செய்கின்றன. தொழிற் பாடல்களால் மக்கள் என்னென்ன தொழில்களைப் புரிந்தனர். அதன் மூலம் அவர்கள் பெற்ற நன்மைகள், தீமைகள், உயர்வுகள், தாழ்வுகள் என்னென்ன என்பன போன்ற செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகின்றது. நாட்டுப்புற இயல்கள் (குறிப்பாக கலைகள்) கடந்த 20 ஆண்டுகளாக ஓர் அளவிற்கு வளர்ந்தபோதிலும் அவற்றில் வளர்ச்சி பெற வேண்டிய ஒன்று நாட்டுப்புற தொழிற்பாடல்கள் மேலும் ஆய்வு செய்யப்பட்டு அதன் பெருமைகள் நகர்ப்புற மக்களுக்கும் போய் சேர வேண்டும்.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: