இசைக் கலைக்குப் பெண்களின் பங்களிப்பு - முனைவர் இ. அங்கயற் கண்ணி
இன்றைய அறிவியல் உலகில் சமூகத்தின் முக்கிய அங்கமாக ஆறறிவு கொண்ட மனிதர்கள் உள்ளனர். இவர்கள் ஆண், பெண் என்ற பிரிவினராக விளங்குகின்றனர். இவர்களுள் பெண்கள் இசைக்கலைக்கு ஆற்றியுள்ள பெரும் பங்கினை இக்கட்டுரை ஆராய்கிறது.
பதிகவழி இசைப் பாடல்கள் நல்கிய பெண்மணி
காரைக்கால் என்னும் ஊரில் பிறந்து இனிய பாடல்களால் இறைவனைப் போற்றிப் பாடிய புனிதவதியார் என்னும் இயற்பெயர் கொண்ட ஒரு பெண்மணி இன்றைய வழக்கில் உள்ள கருநாடக இசை எனப்பெறும் தமிழிசை முறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்பதைப் பெண்ணினம் பெருமையோடு நினைவு கூருதல் வேண்டும். காரைக்காலம்மையார்(Karaikkal Ammaiyar) என்பது இவரது சிறப்புப் பெயராகும். சைவ நாயன்மார்(Saiva Nayanmar) அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர்.
அம்மையார் இயற்றிய ''திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்'' இரண்டும் இனிய பண்களில் பாடப் பெற்ற இசைப் பாடல்களாகும். ''கொங்கைத் திரங்கி'' என்ற முதற் குறிப்புடைய மூத்த திருப்பதிகம், நைவளப் பண்ணிலும், ''எட்டியிலவம்'' எனத் தொடங்கும் இரண்டாவது மூத்த திருப்பதிகம் இந்தளப் பண்ணிலும் அமைந்தவை.
ஒரு குறிப்பிட்ட பொருள் மேல் அடுக்கிய பத்துப் பாடல்கள் சேர்ந்த தொகுதி "பதிகம்" எனப்படும். தேவாரப் பதிகங்கள் பாடிய திருஞான சம்பந்தர்(Thirugnana Sambandar), திருநாவுக்கரசர்(Thirunavukkarasar), சுந்தரர்(Sundarar) ஆகிய மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர் காரைக்காலம்மையார். ஆகவே இவர் இயற்றிய மூத்த திருப்பதிகங்கள் இசையுலகில் முதன்மைப் பதிகங்களாகத் திகழ்கின்றன. இசை ரீதியாகவும் "நைவளம்" எனப்படுகிறது. நட்டபாடைப் பண்ணில் திருஞான சம்பந்தரின் "தோடுடைய செவியன்" எனப்பெறும் முதற் பதிகமும், இந்தளப் பண்ணில், சுந்தரர் அருளிய ''பித்தா பிறைசூடி'' எனப் பெறும் முதற் பதிகமும் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகங்களைப் பின்பற்றி அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
நட்டபாடைப் பண் தற்போது கம்பீர நாட்டை என்ற இராக உருவமாகவும், இந்தளப் பண் மாயாமாளவ கௌளை என்ற இராக உருவமாகவும் திகழ்ந்து வருகின்றன. கம்பீர நாட்டை இராகம், செவ்விசை அரங்கில் தொடக்கத்தில் பாடுவதற்கேற்ற இராகமாகவும், "மல்லாரி" என்ற நாகசுவர இசை மெட்டு அமைந்த இராகமாகவும் திகழ்கிறது. மாயா மாளவ கௌளை தொடக்கத்தில் இசைப்பயிற்சி மேற்கொள்ளக் கூடிய இனிய இராகமாகவும் திகழ்வது அறிந்து இன்புறத்தக்கது.
ஆகவே இசையுலகுக்கு முதன்மைப்பண்களை இராகங்களை இசைப்பாடு-முறையை இசைப்பயிற்சி முறையை, ''பதிகம்'' என்கிற இசைப்பாடல் அமைப்பை அறிமுகப்படுத்திய காரைக்காலம்மையாரின் இசைப் பங்களிப்பு அளவிடற்கரியது.
இறைவனை தலைவன் - தலைவி (நாயக-நாயகி) என்றும் உறவு நிலை மூலம் அடைகின்ற தத்துவ நிலையை "மதுரபக்தி" என்பர். இந்த முறையிலேயே திருப்பாவையையும், நாச்சியார் திருமொழிப் பாசுரங்களையும் தென்னக இசை வரலாற்றில் முதன் முதலில் ஆண்டாள் பாடியுள்ளார்.
''மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்''
எனத் தொடங்கும் திருப்பாவையின் முதற் பாடல் பதிக வழி இசைப்பாடல் அமைத்த காரைக்காலம்மையாரைப் பின்பற்றி நட்டபாடைப் பண்ணில் இசை அமைக்கப்பட்டு பிரபலமாகப் பாடப்பட்டு வரும் இசைப் பாடலாகும்.
திருப்பாவையை இசையோடு பாடுவதால் பெண்களுக்குத் தாம் நினைத்த வாழ்வு அமையும் என்பது பரவலான நம்பிக்கை. எனவே பெண்களுக்கு நற்பலன் அளிக்கும் பாவை நோன்பின் பெருமையை பரவச் செய்த ஆண்டாள், இசைப் பாடல் நெறியிலும் மதுரபக்தியை வேரூன்றச் செய்தவர் எனலாம். இந்நெறியில் பிற்காலத்தில் தெலுங்கில் ஷேத்ரக்ஞரும், தமிழில் மாணிக்கவாசகர்(Manikavasagar), முத்துத்தாண்டவர்(Muthuthandavar), இராமலிங்க அடிகளார்(Ramalinga Adigalar) உள்ளிட்ட இயலிசைப் புலவர்களும், ''பதம்'' என்ற இசை உருப்படியை உலகிற்களித்து தமிழிசையை வளப்படுத்தியுள்ளனர்.
பண்ணிசை காத்த பாண்மகள்
நீண்ட வரலாற்றுப் பெருமை மிக்க தேவாரப் பண்ணிசை(Thevaram) இன்றளவும் பழைமை மாறாமல் மரபுவழி பாடப்பட்டு வருகிறது. இம்மரபை ஏற்படுத்தித் தந்தவர் ஒரு பெண்மணி என்பது இசையுலகம் அறிய வேண்டிய ஒரு நற்செய்தியாகும். சோழ மன்னன் முதலாம் இராசராசன், நம்பியாண்டார் நம்பிகளின் துணை கொண்டு தேவாரத் திருமுறைகளைக் கண்டெடுத்தான். இப்பாடல்களுக்குரிய இசை முறையை ஒரு பாண் மகளின் துணையோடு உருவாக்கினான் என்ற வரலாறை ஈண்டு நினைவு கூர வேண்டும் இப்பாண்மகளை.
''நல்லிசை யாழ்ப் பாணனார் நன்மரபின் வழிவந்த
வல்லி ஒருத்திக் கிசைகள் வாய்ப்பளித்தோம்.
என்று சொல்ல அவள் தனை அழைத்துச்
சுருதிவழிப் பண் தழுவும் நல்லிசையின்
வழி கேட்டு நம்பி இறை உளமகிழ்ந்தார்''
எனத் திருமுறை கண்ட புராணம் கூறும்.
இதில் ''நல்லிசை யாழ்ப்பாணர்'' என்று குறிக்கப் பெறுபவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர்(Thiru Nilakhanda Yaazpanar) ஆவார். இவரது ''நன்மரபின் வழிவந்த வல்லி ஒருத்தி'' என்று குறிக்கப் பெறுவதால், திருநீலகண்ட யாழ்ப்பாணர் பரம்பரையினள் இவள் என்றும் அறியலாம். இவள் பெயர் குறிக்கப் பெறாமையால் இப்பெண், பாணர் வகுப்பைச் சேர்ந்த ஒரு பாடினியார் என்று கூறலாம். ஆக சோழ மன்னன் காலத்தில் தேவாரப் பண்ணிசைகளை மீட்டெடுக்க உதவியவர் ஒரு பாடினியர் என்பதும் இவர் சுருதியுடன் சேர்ந்து பண்ணிசை பாடும் ஆற்றல் பெற்றிருந்தார் என்பதும் தெளிவு.
மேலும் இவ்வல்லி தேவாரப் பண்ணிசையைக் காத்து அவற்றிற்கான பண்ணடைவும் செய்து கொடுத்தாள் என்பதும் தெரியவருகிறது. இவளது அரிய பணியால் பண்ணிசையின் தொடர்ச்சி கருநாடக இசையாகப் பரிணமித்து என்று கூறினாள். அது மிகையாகாது.
மேற்கூறிய பெண்மணிகளை அடுத்து இருபதாம் நூற்றாண்டு வரையில் இசைக் கலையில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க நிலையில் அமையவில்லை என்பது வியப்பிற்குரியது. இதற்கு இக்கால கட்டத்தில் இந்தியப் பண்பாட்டு நிலையில் பெண்ணடிமை வேரூன்றத் தொடங்கியமையை ஒரு முக்கிய காரணமாகக் கூறலாம். இஃது தமிழிசையிலும் பரவலாக இருந்துள்ளது. கருநாடக இசையை முறைப்படி பாடக் கூடியவர்கள் ஆண்களே என்ற கருத்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இருந்துள்ளது.
இந்த நிலையை இருபதாம் நூற்றாண்டு மகளிர் இசைக் கலைஞர்கள் மாற்றி தனிமுத்திரைகளைப் பதித்துள்ளனர். அவர்களுள் டாக்டர் எம்.எஸ். சுப்புலட்சுமி(M.S.Subbulakshmi), எம்.எஸ். வசந்தகுமாரி(M.S. Vasanthakumari), கே.பி. சுந்தராம்பாள்(K.B. Sundarambal) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் தமது அபூர்வமான இசை ஆற்றலாலும் அயராத உழைப்பினாலும் உலகப் புகழ் பெற்று பெண்ணினத்துக்குப் பெருமை தேடித்தந்துள்ளனர்.
இவ்வாறு இசைக் கலைக்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ள பெண்மணிகளை இனம் கண்டு அவர்களை ஊக்குவிப்பது இன்றைய நிலையில் செய்ய வேண்டிய இன்றியமையாத நற்பணியாகும்.
நன்றி: தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் 2007
கருத்துகள்