நாட்டுப்புறப்பாடல்களும், உணவுகளும் - அ. ஜெயக்குமார்
உலகில் வாழும் அனைத்து உயிர்களின் அவசியத்தேவை உணவு. ஒரு செல் உயிரி முதல் பலகோடி செல் திரண்ட உயிர்வரை உணவின்றி அமையாது உயிர். இன்றைய சூழலில் இயற்கை உணவு என்ற நிலைமாறி சமைத்தல் என்ற பெயரில் சத்திழந்த உணவையே உண்ணும் நிலை உள்ளது. நம் முன்னோர் உண்ட உணவு வகைகள் எத்தன்மையன? எவ்விதமாக சமைக்கப்பட்டன? எவ்வாறு பரிமாறப்பட்டன என்னும் முறைமை குறித்து எண்ணுவோர்.
தாலாட்டு:
எண்ணங்களின் வெளிப்பாடே இலக்கியங்கள் நாட்டுப்புற இலக்கியங்கள் எண்ணங்களை தெளிவாகக் காட்டும் கண்ணாடி போன்றவை. அதிலும் தாலாட்டுப் பாடல்கள் தாயின் இன்ப துன்பங்கள், ஏக்கங்கள் போன்ற உர்வுகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன. ஒரு தாய் தான் உண்டு சுவைத்த உணவினையும், உண்ணக்கிட்டாத உணவு வகைகளையும் தன் தாலாட்டில் எடுத்துரைக்கிறாள். இனிய உணவை, அதன் சுவையை தன் குழந்தையோடு ஒப்பிட்டு மகிழ்கின்றாள். தாலாட்டுப் பாடல்களில் இடம்பெறும் உணவு வகைகளைச் சுவைப்போம்.
குழந்தைச்செல்வம் பெறற்கரிய செல்வம். அக்குழந்தைச் செல்வத்தை உண்ணும் உணவில் உயர்ந்தவற்றோடு ஒப்பிடும் போக்கு காணப்படுகிறது. இதனை
''வாழைப்பழமோ நீ
வைகாசி மாம்பழமோ
கொய்யாப் பழமோ
கொஞ்ச வந்த ரஞ்சிதமோ''
என்ற அடிகளால் உணரலாம்.
கிராமப்புறங்களில் காதுகுத்தல் சடங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இச்சடங்கின்போது காதுகுத்தும் ஆசாரியருக்கு உலர்ந்த உணவுப்பொருட்கள் கொடுத்தல் உண்டு. இதில் அக்குடும்பத்தின் செல்வசெழிப்பு வெளியாகும். இதனை
''சீமை சிறுபருப்பு - என் கண்ணே உனக்கு
தென்சீமை பச்சரிசி
எள்ளு நாழி - கண்ணே உனக்கு
இளந்தேங்காய் முந்நூறு''
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. சீமைசிறுபருப்பு என்பதின் மூலம் பருப்பு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதென்று அறியலாம். தென்சீமை பச்சரிசி என்ற தொடர் தென்னாட்டில் தரமான பச்சரிசி உற்பத்தியானதை உணர்த்துகின்றது.
தவமிருந்து பெற்ற பிள்ளையை
''கொல்லத்து வெல்லமோ
கோட்டாத்து சக்கரையோ''
என்று பாடுகிறாள் ஒரு தாய் மழலைச் செல்வம் இனியது. எவ்வளவற்கெனில் கொல்லம் பகுதியில் உற்பத்தியாகும் வெல்லத்தின் அளவிற்கும் கோட்டாறு இங்கு உற்பத்தியாகும் சர்க்கரை அளவிற்கு கொல்லமும், கோட்டாறும் முறையே வெல்லம், சர்க்கரை உற்பத்தியில் சிறந்து விளங்கின என்பதை இதன் மூலம் அறியலாம். இவ்வாறு தாலாட்டுப் பாடல்களில் உணவுகள் இடம் பெற்றுள்ளன.
ஒப்பாரி:
நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டுப் பாடல்களுக்கு அடுத்த நிலையில் ஒப்பாரிப் பாடல்கள் உள்ளன. ஒரு பெண் தன் சோகத்தை முழுமையாக ஒப்பாரிப் பாடலில் வெளிப்படுத்துகிறாள். ஒப்பாரிப் பாடல்களிலும் உணவு குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.
இன்றைய சூழலில் பால் பதப்படுத்தப்பட்டு விற்கும் நிலை உள்ளது. அன்றோ உற்பத்தியாகும் பால் முழுவதையும் உறைய வைத்து தயிர், மோர், நெய்யாக விற்கும் நிலை இருந்தது. இதனை
''கடலு மொறையெடுத்து கருங்கடலைப் பாறையாக்கி
சங்கிலியும் தான்பூட்டி, தயிர் கடையும் வேளையிலே''
தயிர் கடையும் தலைவிக்கு சோகச் செய்தி வருகின்றது.
தட்டில் உணவு உண்ணுவதைக் காட்டிலும் வாழை இலையில் உணவு உண்டால் உடலிற்கு நல்லது. அதுவும் குருத்திலையே சிறந்தது. அப்பூதியடிகள் நாயனார் புராணத்திலும் குருத்திலையில் உணவு படைத்தலை பெரியபுராணம் காட்டும். வாழ்க்கை நிலை மேம்பாட்டு இருக்கும்போது வாழை இலைப்பரப்பி வகைவகையாய் உண்ணும் நிலைமை இருந்தது. தலைவனை இழந்த தலைவி ஒருத்தி மிகவும் வருந்தி
''நீங்க இருந்தா எனக்கு
வாழை எலைக்கும் சாதமுண்டு
இந்த வளவுலமும் சொந்தமுண்டு''
என்கிறாள்.
வாழை இலையில் உணவு உண்பதை பின்வரும் தாலாட்டுப் பாடலும் உணர்த்துகிறது.
''வாழை இலை பரப்பி
வந்தாரைக்கையமர்த்தி
வருந்தி விருந்து வைக்கும்
மகராசா பேரனோ
தென்னை இலை பரப்பி
சென்றாரைக் கையமர்த்தி
தேடி விருந்து வைக்கும்
தென்மதுரைப் பாண்டியனோ''
விருந்தினருக்கு சிறப்பான உணவு வகைகளையே படைத்தல் வேண்டும். அதைக் காட்டிலும் உபசரிக்க வேண்டும் என்பது இங்கே வலியுறுத்தப்படுகிறது. நன்கு உபசரிக்காத இடத்தில் உணவு உண்ணக்கூடாது என்பதை ஒளவையார்
''உண்ர் உண்ர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்''
என்பது
இங்கே குறிக்கத்தக்கது.
விருந்தில் முக்கிய இடம்பெறுபவை உபசரிப்பும் உணவு வகைகளும், விருந்தோம்பலும் விதவித உணவு வகைகள் கீழ்க்காணும் பாடலில் இடம்பெற்றுள்ளன.
''முத்து குத்தி சோறாக்கி
பத்து வித கறி சமைத்து
பண்டியில்லா செம்பெடுத்து
பாதம் கழுவி
தின்னவா மாமான்னு
தெண்டனிட்டு நின்னவளோ''
விருந்தினரின் பாதங்களைக் கழுவுதல், அவர்களை வருந்தி அழைத்தல் போன்ற நிகழ்வுகள் இருந்துள்ளன என்பதை மேற்கண்ட பாடல் உணர்த்துகிறது. உணவு சமைத்தலின்போது அன்போடும் அக்கறையோடும் சமைத்தல் அவசியம். அந்த உணவில்தான் உயிரும் உடம்பும் ஓங்கி வளரும். இதனை
"சம்பா வெல அரிசி எடுப்பேன்
பீக்கங்காள் மோர்க்குழம்பு
பிரியமோட வச்சிருவேன்"
என்ற பாடல் உணர்த்துகிறது.
பிற பாடல்கள்:
தொழில் பாடல்கள், காதல் பாடல்கள் போன்றவற்றில் மிகக் குறைந்த அளவிலேயே உணவை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
இயற்கை உணவே உடல்நலத்திற்கு உகந்ததென உடலியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். நம் முன்னோர்கள் விரதம் போன்ற நாட்களில் இயற்கை உணவையே உண்டனர். அதற்கு காரணம் வேக வைத்த உணவுகள் சிந்தனைத்தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதாகும். இதனை
''வெந்த மாவைத் தின்னா
விரதம் அழியுமுன்னு
பச்ச மாவைத் தின்னு
பகவானைத் தெண்டனிட்டு''
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.
வறியோர்க்கு உணவளித்தல் வாழ்வின் குறிக்கோள். இதனை மணிமேகலையும்
''உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்'' என்கிறது
இக்கருத்தை ''பசித்து வருபவர்க்கு
பாலமுதம் செய்து வைப்பார்''
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.
வறட்சி நிலவி உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்ட காலங்களில் மிக எளிய உணவை உண்டனர். சோளம், வரகு, சாமை போன்றவை வறட்சியின் உணவாக அமைபவை. வறட்சியால் கால்நடைகளும் வள்ளல் தன்மை இழந்தன. இதனை
''பச்சரிசி சோளம் பாதிநாள் பட்டினிதான்
பசும்பால் குடித்துஉந் தன்பசி தீர்க்கப் பார்த்தாலும்
பருத்தி விதை இல்லையடா, பசுபால் தரலையடா
ஆட்டுப்பால் ஊட்டியுன்னை ஆதரிக்கப் பார்த்தாலும்
ஆடுகடிக்கும் மரங்கள் அத்தனையும் மொட்டையடா''
என்ற பாடல் உணர்த்துகிறது.
சமைத்தல் பெண்களுக்கே உரிய ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. இறைவன் முதல் சராசரி குடிமகன் வரை பெண்ணே உணவு சமைத்தல் என்பது விதிக்கப்பட்ட ஒன்று. சமையலில் நேரும் சிறு தவறைக்கூட ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில் ஆண்கள் இருந்துள்ளனர். இதனை
''சொர்ணக்கிளிபோல - மீனாள்
சோறு கொண்டு போனாளாம்
நேரம் ஆச்சு தின்னு - சொக்கர்
நெல்லால் எறிந்தாராம்;
கல்லோ கிடந்ததென்று
கடுங்கோவம் கொண்டாராம்''
என்ற பாடல் உணர்த்துகிறது. மேலும் கூட்டுக்குடும்பச் சூழலில் சமைக்கும் பெண்ணிற்கே உணவு இல்லை என்பது பின்வரும் தாலாட்டு பாடல் உணர்த்துகிறது.
''மூணு துட்டு கறியெடுத்துக் - கண்ணே
முட்டியிலே ஆனங்காய்ச்சி
எலும்பு விழுகலேன்னு - கண்ணே
எட்டி உதைக்கிறாயோ''
இப்பாடலின் மூலம் மண்பாண்டங்களில் உணவு சமைத்தல் அறிகிறோம்.
சோறு சமைத்தலின் பல படிநிலைகளை ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
''அரிசியைக் குத்து முன்னே அரித்துக் கழுவு பின்னே
உலையில் அரிசி போடு உடனே மேலே மூட
கொதித்து வெந்தபின் வடித்து கொட்டி ஆற்றி எடுத்து
கத்திரிக்காயை அரிந்து காரம் புளிப்பு தெரிந்து
உப்பு மசாலும் போட்டு ஒத்திருக்கக் கூட்டு
வெந்த பின்னே தாளித்து விரித்து இலையைப் போட்டு
எல்லோருங்கூடி புசிப்போம் இன்பமாகக் களிப்போம்"
இப்பாடலில் நம் முன்னோர்கள் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தினர். உலையில் அரிசி போட்டவுடன் மூடி சுகாதாரமாகச் சமைத்தனர். ஆற வைத்து உண்டனர். காரம், புளிப்பு, உப்பு அளவாகப் பயன்படுத்தினர். இலையில் உணவு உண்டனர் போன்ற பல செய்திகளை அறிய முடிகிறது.
வயதானவரையும் பல படைத்தவராக வாழைத்தண்டு மாற்றும். இதனை
''கிழவா கிழவா சண்டைக்கரா வாரே
வாழைத் தண்டைத் தின்னுப்புட்டு
வம்புக்கா வாரே''
என்ற பாடல் உணர்த்துகிறது.
வயல்களில் காணப்படும் நண்டினை உணவாகப் பயன்படுத்தியுள்ளனர்.
இதனை ''நண்டுச்சாறு காய்ச்சிவிட்டு
நடுவரப்பில் போற பெண்ணே'' என்ற பாடல் உணர்த்தும் காட்டில் மான் போன்ற விலங்குகளை வேட்டையாடியுள்ளனர் என்பதை
''நீங்க இருந்தா எனக்கு
மானுங் கறியு முண்டு'' என்ற
ஒப்பாரிப்பாடல் உணர்த்தும். கஞ்சி, சோறு, பூந்தி, அவல், கூழ், ஊறுகாய், கம்மஞ்சோறு, தோசை, முறுக்கு வடை போன்ற உணவு வகைகளை உபயோகித்தனர் என்பதை நாட்டுப்புறப்பாடல்கள் காட்டுகின்றன.
நாட்டுப்புறப்பாடல்கள் அம்மக்களின் வாழ்க்கை நிலையை உள்ளது உள்ளவாறே சித்தரித்துக் காட்டுபவை, நாட்டுப்புறமக்கள் பயன்படுத்திய, உணவுகள் மட்டுமே பாடல்களில் பயின்று வந்துள்ளன, விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களை மகிழ்வோடு விருந்துண்ணச்செய்ததை இப்பாடல்களில் காணலாம். பெற்றெடுத்த குழந்தைக்கும் உணவுதர இயலாத வறுமையையும் இப்பாடல்கள் சுட்டுகின்றன. உணவைக் குறித்த செய்திகள் தெம்மாங்கு, ஒப்பாரி, தொழிற்பாடல்களில் சில காணப்படினும் தாலாட்டுப் பாடல்களில்தான் ஓரளவிற்குக் காணப்படுகின்றன. பொதுவாகப் பார்க்கும் பொழுது உணவு குறித்த செய்திகள் நாட்டுப்புறப் பாடல்களில் குறைவாகவே காணப்படுகின்றன. இதிலிருந்து நாட்டுப்புற மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவு செய்யும் அளவிற்கு உணவு கிடைத்ததா? என்பது ஐயத்திற்குரிய ஒன்றே.
நன்றி: வேர்களைத்தேடி
கருத்துகள்