சிற்றிதழ் வகைகளும், படைப்பாளுமையும் - கீரைத் தமிழன்
இன்று இந்தியா பல்வேறு துறைகளிலும் விரைந்து வளர்ச்சியை அடைந்து வருகிறது. அதன் அடிப்படையில் பல்வேறு துறைகளிலும் புதுப்புது இதழ்கள் வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு வெளிவரும் இதழ்களை வகைப்படுத்துவதும் ஆய்வு செய்வதும் அவசியமானது.
"இதழியலின் வளர்ச்சியையும், போக்கினையும் காண வகைப்படுத்துதல் இன்றியமையாததாகும். அளவாய்வு செய்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் இத்தகைய வகைப்பாடு தேவைப்படுகிறது"1 என்பதன் அடிப்படையில் இதழ்களை பல வகைகளில் வகைப்படுத்துகின்றனர். கால அடிப்படையிலான பகுப்பும் முக்கியமானதாகும். உள்ளடக்க அடிப்படையிலான பகுப்பும் முக்கியமானதாகும். உள்ளடக்கத்தின் அடிப்படையில் பொது இதழ்கள், சிறப்பு இதழ்கள், பொழுது போக்கு இதழ்கள் என்று மூன்று வகைப்படுத்துவார் பேரா. அந்தோணி இராசு அவர்கள்.
இதழ் வகைகள்: பொது இதழ்கள்
"செய்தி இதழ்களில் செய்திகள் பெரும்பான்மையும், கருத்துக்கள் சிறுபான்மையாகவும், கருத்து இதழ்களில் கருத்துக்கள் பெரும்பான்னைமயாகவும், செய்திகள் சிறுபான்மையாகவும் இருக்கும் இவ்விருககை இதழ்களையும் பொது இதழ்கள்"2 எனப் பெயரிடலாம்.
சிறப்பு இதழ்கள்
"விளையாட்டு, மருத்துவம், அறிவியல், திரைப்படம் முதலிய துறைச் செய்திகளையே மிகுதியாகத் தாங்கி வரும் இதழ்கள், அவ்வத் துறைகளுக்குரிய சிறப்பு இதழ்களாகும், அங்ஙனமே, சமயம், இனம், மொழி, தொழில், கட்சி ஆகியவற்றின் செய்திகளைத் தாங்கி வரும் சிறப்பிதழ்களும் உண்டு"3 என்பார் பேரா. அந்தோணி இராசு அவர்கள்.
பொழுது போக்கு இதழ்கள்
"மக்கள் மகிழ்வாகப் பொழுது போக்குவதற்குரிய கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், படக்கதைகள் முதலியவற்றை மிகுதியாகக் கொண்ட இதழ்கள் பொழுது போக்கு இதழ்கள்"4 என்பதற்கேற்ப இதழியலின் பணிகளில் ஒன்றாகிய மகிழ்வித்தல் பணி நீங்லாக வெளிவருவன இச்சிற்றிதழ்கள் தாம். அறிவித்தலும் அறிவுறுத்தலும் சிற்றிதழ்களின் தலையான இருபணிகள்"5 என்பார் அலெக்சாண்டர்.
மேலும் "அரசு அதிகாரத்தோடு ஒத்துப் போகிற வியாபார நோக்குடைய வெகுஜன இதழ்களினால் சாதிக்க முடியாத கருத்துச் செறிவைத் தன்னுற் அடக்கி ஒரு வேள்வியாக அழித்துக் கொண்ட போதும் கருத்துக்காக வாழ்பவைதாம் இச்சிற்றிதழ்கள்"6 என்பார் பொள்ளாச்சி நசன்.
சிற்றிதழ் வகைகள்
இம்மேற்கோள்கள் வாயிலாக மகிழ்வித்தல் பணி நீங்கலாக, அறிவித்தல், அறிவுறுத்தல் பணிகளை செய்து கொண்டும், கருத்துச் செறிவை சுமந்து கொண்டும் வருகிற இதழ்களான பொது இதழ்களும், சிறப்பு இதழ்களும் சிற்றிதழ்களின் உள்ளடக்கத்தில் அடங்குகின்றன. இதனடிப்படையில் இவ்விதழ்களை வகைப்படுத்துவதே முறையானதாகும்.
சமயம், சாதி, பல்துறை இலக்கியம்+ நவீன இலக்கியம், கவிதை+ ஹைக்கூ கவிதை, நாடகம், திரை, கலை, ஓவியம், மார்க்சியம், பெரியாரியம்+ பொது அரசியல், தமிழ்த் தேசியம், தலித்தியம், பெண்ணியம், தொல்லியல், நாட்டுப்புற இலக்கியம், குறளியம், செய்தி இதழ்கள், தன்னம்பிக்கை, சூழலியம், தொழிலாளர், இலக்கணம், நூலறிமுக இதழ்கள், கல்வி, மாணவர் இதழ்கள், விளையாட்டு, சட்டம், தொழில், தொழில்நுட்பம், அறிவியல், மருத்துவம், வேளாண்மை, சிறுவர், மொழிபெயர்ப்பு, மனித உரிமை போன்ற பல துறைகளை உள்ளடக்கமாகக் கொண்டு சிற்றிதழ்கள் வெளியாகிக் கொண்டுள்ளன.
சிற்றிதழ் சேகரிப்பாளரும், தமிழம் இணைய இதழ் ஆசிரியருமான திரு.பொள்ளாச்சி நசன் அவர்கள் 2600க்கும் மேற்பட்ட சிற்றிதழ்களை சேகரித்திருப்பதாகவும் தற்போது தமிழில் மட்டும் 150க்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் வெளிவருவதாகவும் கூறுவார். ஆனால் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் 30க்கும் மேற்பட்ட வகையில் தற்போது 400க்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவருவதாகக் கொள்ளலாம்.
இந்நிலையில் ஆய்வுக் காலத்தில் வெளிவந்த (டிசம்பர் 2005ல்) "இதழியல் உலகம்" என்ற நூலில் கொடுக்கப்பட்ட சில இதழ்களின் விவரம். "இன்று மக்களிடையே ஜோதிடத்தில் 20 இதழ்களும், சமயம் அல்லது ஆன்மிகம் என்ற வகையில் 50க்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நக்கீரன்(Nakkeeran), ஜூனியர் விகடன்(Junior Vikatan) போன்ற அரசியல், புலனாய்வு இதழ்கள் 10க்கும் மேல். இவ்வாறு எவ்வெவ்வழிகளிலோ தமிழிதழியல் வளர்ந்து கொண்டிருக்கிறது. தனித்தமிழ் இயக்கத்திற்காகவே தென்மொழி, வெல்லும் தூய தமிழ், தமிழ்ப்பாவை, யாதும் ஊரே, இசைத்தமிழ் போன்ற 25க்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இவற்றுக்கு மாறாகத் தமிழ்க் கணினி இதழ்கள் 5க்கும் மேல், பொது அறிவியல் 5, வேளாண்மை, பசுமைப்புரட்சி போன்ற வேளாண்மை பற்றியவை 5 என்று அறிவை வளர்ப்பதற்குச் சில இதழ்கள். குழந்தைகளுக்காக கோகுலம், சுட்டி விகடன் போன்றவை. மகளிர்க்காக மங்கை, மங்கையர் மலர் போன்றவை. இவ்வாறு இன்று வெளிவரும் இதழ்களின் வகைகளை ஒழுங்குபடுத்தி ஒழுங்கு செய்து முனைவர் பட்ட ஆய்வேடு படைக்கலாம்"7 என்று பி.வி.கிரி அவர்கள் கூறுவார். மேலும்,
"இதழியல் எழுத்துகளிற் பல்வேறு வகைப்பாடுகள் உள்ளன. அவற்றிற் பலவற்றுக்கு இயைபான, சனரஞ்சகமான பதங்களை நாம் இன்னும் தான் உண்டாக்கிக் கொள்ளவில்லை. feature writing, script writing, column writing, copy writing எனப்பல வரும்"8. என்பார் கார்த்திகேசு சிவத்தம்பி, அத்துடன் சிற்றிதழ்களின் தோற்றம், இயக்கம், மறைவு இவற்றை நிரந்தரமானதாகக் கருத முடியாது. தோன்றும் வேகத்திலேயே மறைவதும் மீண்டும் உயிர்ப்பதுமாய் இதன் போக்குக் காணப்படுகின்றது.
இவைகளை நோக்கும் போது சிற்றிதழ்களின் இயக்கத்தையும், எழுத்தையும் வகைப்படுத்துதல் அரிது என்றாகிலும் இதழ்களை வகைப்படுத்துதலே அதனை மதிப்பீடு செய்வதற்கும், அளவாய்வு செய்வதற்கும் துணைபுரியும் என்பதால் மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை திட்டவட்ட வரையறுப்பாகக் கருத முடியாது. எனினும் உள்ளடக்க அடிப்படைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதழ்களின் - படைப்பாளுமை
எழுத்தைச் சமூக அழகியலுக்கான கருவியாக பார்க்கும் போக்கு தமிழில் "மறுமலர்ச்சி இயக்கம்" தோன்றியதன் பின்னரே படிப்படியாக வளரத் தொடங்கியது. இதனால் தமிழ் இலக்கியங்களிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. கூடவே நவீனத்தின் வளர்ச்சியும் தமிழ் இலக்கியங்களில் புது வரவுகளை ஏற்படுத்தித் தந்தன. பாரதி ஆரம்பித்து வைத்த புதுக்கவிதையும், சிறுகதைகளும் பின் வந்த பல இலக்கியக் கூறுகளுக்கு அடித்தளம் ஆயின.
இதன் வளர்ச்சியில் சமூக அழகியலும் ஒன்று சேர ஏராளமான படைப்புகளும் படைப்பாளிகளும் உருவாகினர். இப்பணியை முன்னெடுத்துச் சென்றது சிற்றிதழ்களே. இதன் வழி ஆய்விற்குள்ளான சிற்றிதழ்களின் படைப்புக்களையும் படைப்பாளிகளையும் படைப்புகளின் தன்மைகளையும் ஆய்ந்து அதன் அழகியல் கூறுகளை மதிப்பிடுவதும் அவசியமானதே.
சிற்றிதழ்கள் கட்டுரை, கவிதை, சிறுகதையென பல படைப்புகளைக் கூறுகளில் பல நூறு படைப்பாளிகளுடனும், பல்லாயிரக்கணக்கான படைப்புகளுடனும் வளர்ந்து வருகிறது. இங்கு ஒவ்வொரு கூறுகளிலும் ஒன்றிரண்டு படைப்புகள் மட்டும் ஆய்வின் நோக்கம் கருதி ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இப்படைப்புக்களை மட்டும் தனி ஆய்வாகவே மேற்கொள்ளலாம்.
கவிதை
சிற்றிதழ்களின் படைப்புத் தளம் பரந்தது. கட்டுரை, கதை, கவிதைத் தளங்களில் மட்டும் ஏராளமான "கருவை" மையமிட்டு படைப்புகள் வெளிவருகின்றன. சிற்றிதழ்களின் படைப்புகளில் கட்டுரைகளை விட கவிதைகளே மேலோங்கியிருக்கின்றன. எனவே கவிதைகளின் படைப்புகளை ஆய்வு செய்தலும் அவசியமானதே.
புதுக்கவிதை
"கவிதை வாழ்க்கையின் திறனாய்வு, அத்திறனாய்வு கவிதை உண்மை, கவிதை அழகு ஆகியவற்றின் விதிகளின் அடிப்படையில் அமைவதாகும்"9 என்று அறிஞர் அர்னால்டு கூறுவதற்கேற்ப, வாழ்க்கையைக் கவிதையாகப் படைப்பதற்கு உணர்ச்சியும், கற்பனையும் பொதுவாக அமைய வேண்டிய நிலையான பண்புகளாகும். இவைகளோடு யாப்பு வடிவமும் சேர்தலே கவிதையாகும்.
கவிதையின் முதற்பணி முருகியல் இன்பம், இவ்வின்பத்தை ஒலிநயம் மிகுவிக்கிறது. இந்நிலையில் கவிதை சுருக்கமாக அமைதல் வேண்டும். ஏனெனில் உணர்ச்சி நிலையில்லாதது. கவிதை உணர்ச்சி மொழியாகலின் உணர்ச்சி தரவியலாதவற்றைக் கவிதை நீக்கி விடுகிறது. உணர்ச்சியின் அடிப்படையில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் என்றும் புறநிலைப் பாடல்கள் எனவும் வகைப்படுத்துவர்.
தன்னுணர்ச்சிப் பாடல்கள்
"கவிஞனின் தன்னனுபவம், அவன் பொதுவாக மனித சமுதாயத்தினின்று பெறும் அனுபவம் ஆகியவைகளின் அடிப்படையில் தன்னுணர்ச்சிப் பாடல் தோன்றுகிறது" என்பர் அறிஞர். கவிஞன் பெறுகின்ற அனுபவங்களின் அடிப்படையிலேயே அவனது படைப்புகளும் அமைகின்றன. இவ்வகையில் சிற்றிதழ்களின் படைப்புகளிலும் தன்னுணர்ச்சிப் பாடல்கள் நிறைந்துள்ளன."10
"உண்டியலில் ஊடுருவி விழும்
நாணயங்களாய்
உங்கள் செய்திகளை
பெட்டகம் போன்ற
என் மனசிற்குள்
அனுப்பும் காதுகள்
நெருங்க முடியா
நெடுந்தொலைவுக்கப்பால்
இருக்கிறது உங்கள் காதுகள்
கேட்டால் மட்டுமேயானது
என் பங்கென்று
நிறுவிக் காட்டுகிறீர்கள்
எனது அயர்வைப் புறந்தள்ளி
கேட்டலின் அலுப்பு
விலகாத பனி மூட்டமாய்
எனக்குள் சூழ்வதற்குள்
வந்து போங்களேன்
செவிக் கதவின்
தாழ் திறந்து"11
-பா. உஷாராணி
"சௌந்தரசுகன்" - மார்ச்-05.
"காதுகள்" என்ற இக்கவிதையின் வழி, கவிஞரின் ஆற்றாமை வெளிப்படுகிறது. இன்றைய ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் இயல்பான மனுசியாகக் கூட பார்க்க மறுக்கப்படுகிறார்கள். தன்னுடைய சுய விருப்ப வெறுப்புகளை சமநிலைப்படுத்திக் கொள்கிற களமாக மட்டுமே பெண்மையை பார்க்கும் ஆண், அவர்களின் அவலங்களைக் கூட செவிமடுத்துக் கேட்க மறுக்கும் மனநிலையை பதிவு செய்திருக்கிறார். தன்னிடமிருந்தோ, சமூகத்திலிருந்தோ கற்ற தன்னுணர்வின் வெளிப்பாடாய் அமைந்திருக்கிறது இக்கவிதை.
தன்னுணர்வின் வெளிப்பாட்டுக் கூறுகளில் காதலும் அழகும் தவிர்க்க முடியாதவைகள். இவைகளைப் பாடாத கவிஞர்களே இல்லை. காதல் அழகானது. அழகானது எல்லாம் காதலானதே. அவரவர் பார்வையில் அழகும் வேறுபடும்.
"குளித்து முடித்த
கூந்தலை
அள்ளி முடியாமலேயே
பவனி வருகிறாய்
சடை சடையாய்ப்
பின்னிக் கிடக்கிறேன் நான்"12
-சு.மதியழகன்
"செம்மலர்" - மே-05
என்ற அழகியல் கவிதையில் கவிதையின் அழகும் தெரிகிறது. குளித்து, சீவி சிங்காரித்து ஆடை அலங்காரத்தில் அழகு மெருகூடும். ஆயினும் இங்கே அலங்காரம் இன்றியும் அழகு வாய்த்திருக்கும். இக்கவிதையில் கவிஞரின் தன்னுணர்வு வெளிப்படுகிறது. தனி மனித உடமைகளுள் காதலும் ஒன்று. காதல் வசப்படாதவர்கள் அரிது. அது கற்றுத் தராத பாடங்களும் குறைவு. எதுவும் தெரியாதவரையும் எல்லாம் தெரிந்தவராக்கும் ஆற்றல் பெற்றது. எனினும் எல்லாக் காதலும் காதலர்களும் வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெற்றக் காதலர்களும் வாழ்வில் வெற்றி பெறுவதுமில்லை. காரணம் காதல் உண்மையான காதலாய் மலராமல் போவதன் விளைவுதான். இதை,
"அவசரத்திற்கு
பொய் சொல்ல,
தாமதத்திற்கு
காரணம் சொல்ல
தேவைக்கு
கவிதை எழுத -
எவ்வளவோ
கற்றுத் தருகிறது
காதல்
காதலை மட்டும்
கற்றுத் தராமல்"13
-மு.முருகேஷ்
"புன்னகை" - பிப்-மார்ச்-05
என்று சமூகத்தின் அன்றாட அலுவல்களில் கற்றதை தன்னுணர்வுப் பாடலாய் தந்திருக்கிறார் இக்கவிஞர்.
புறநிலைப் பாடல்கள்
புறநிலைப்பாடல் புற உலகத்தின் புணர்ச்சி, செயல் ஆகியவற்றை விளக்குகிறது. "புறநிலைப் பாடலில் அவன் பாடு பொருள்களுக்காகத் தன் நோக்கினைப் புற உலகின் கண் செலுத்தி, அப்பொருள்களில் தன் சொந்த தனித் தன்மையைச் சிறிதும் கலக்காமல் பாடலைப் படைக்கிறான்"14 என்று புறநிலைப் பாடலுக்கு விளக்கம் தருவார் தா.ஏ.ஞானமூர்த்தி.
தேனீர் இடைவேளை
"நீங்கள் திரையரங்கில்
தேனீர் இடைவேளையின் போது
பார்த்திருக்கலாம்
முட்டைப் போண்டாவை
அவசரமாய் விழுங்குபவர்களையும்
அவசரமாய் பீடி இழுத்துக்
கொண்டிருப்பவர்களையும்
இதற்கெல்லாம் வழியின்றி
உங்களை மாதிரியே திறந்திருக்கும்
திரையரங்க கதவில் சாய்ந்து நின்று
பார்த்துக் கொண்டிருக்கும்
அந்தச் சிறுவனையும்
சிறுமியையும்.......
நீங்கள் தேனீர்
இடைவேளையின் போது
திரையரங்குகளில்
பார்த்திருக்கலாம் தான்"15
- வா.மு.சோமு.
"நறுமுகை" - ஏப்-செப்-05
என்ற கவிதையின் வழி, பொருளாதாரத்தின் பின்னணியில் சமூகத்தில் நிகழும் கொடுமைகளை அதன் போக்கில் அப்படியே பதிவு செய்திருக்கிறார். பொருளாதாரமின்மையால் மனிதனின் சின்ன சின்ன ஆசைகள் கூட கைக்கு எட்டாத தூரத்தில் கனவாகிப் போகும் கொடுமையை புறவயம் நின்று படம் பிடித்துள்ளார். இதே போல் எத்தனையோ புறநிலைப் பாடல்கள் சிற்றிதழ்களில் காணப்படுகின்றன.
படிமம்
"படிமம் என்பது ஏதேனும் ஒன்று பிரிதொன்றிற்காக நிற்பது பிரிதொன்றைப் பிரதிபலிப்பது, பிரிதொன்றை உட்கருத்தாய் உணர்த்துவது"16 என்று படிமத்திற்கு விளக்கம் தருவார் தமிழண்ணல். சங்க இலக்கியத்திலிருந்தே காணப்படும் இப்படிமம் புதுக்கவிதைகளில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. படிமத்தின் விரைந்த வளர்ச்சி புதுக்கவிதையில் புதிய வகையையே தோற்றுவித்துள்ளன.
முதன் முதல் பாடலைப் படிப்பவர்க்கு அச்சடித்த சொற்களால் காட்சிப் புலனுணர்வுகள் தோன்றுகின்றன. இப்புலன் உணர்வைப் பொறுத்தே பிற விளைவுகள் தோன்றுகின்றன. கவிதையைப் படிக்கும் போதே மனதில் தோன்றும் காட்சி புலன் உணர்வு படிப்போரின் உணர்வைப் பொறுத்தும் மாறுபடுகின்றன. எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணர்வு தோன்றும் என்பதும் பொருத்தமற்றது. இப்படிமத்தை உணர்த்தும் கவிதைகள் சிற்றிதழ்களில் ஏராளமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக நவீனம் பேசும் இதழ்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.
"வேலியே பயிரை மேய்வது போல" என்ற பழமொழிக்கேற்ப, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு மட்டுமின்றி சமூகம் மற்றும் மக்களுக்கு பாதுகாப்பாகவும் நண்பனாகவும் விளங்க வேண்டியது காவல்துறை. ஆனால் இன்றைக்கு காவல் நிலையங்களில் தான் கற்பழிப்புகளும், வன்கொலைகளும் நிகழ்த்தப் படுகின்றன. அதிகார பலத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தந்திரம் வாய்ந்தவர்களாவும் காவல் துறையினர் விளங்குகின்றனர்.
"தான்
ஒரு யானையால்
வன் புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதை
காவலர்கள் முன்னிலையில்
மீண்டுமொரு முறை கூற வேண்டியிருந்தது
அந்த எறும்புக்கு
சாட்சியம் உள்ளதா
என்ற காவலரிடம்
தன் வயிற்றைக் காட்டி
யானையின் கருவை
தான் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறியதும்
சிரிப்பை அடக்க முடியவில்லை அவர்களுக்கு
எல்லா இடங்களிலும்
புன்னகைக்கும் இதழ்களின் இடையே
ஒரு புழுவைப் போல நெளிந்த படி
இருக்கின்றன
சிலரின் பரிதவிப்புகள்"17
- காலபைரவன்
"காலச்சுவடு" - மே-05.
என்ற கவிதை வரிகள் இன்றைய நடப்பியலை நினைவூட்டுகின்றன. வன் கொடுமைக்குள்ளான பெண்ணின் நியாயம் பரிகசிக்கப்படுவதையும், இயலாமையில் உள்ளவர்களின் பரிதவிப்பு, சமூகத்தால் கேலிக்குள்ளாக்கப் படுவதையும் இயல்பாக படம் பிடித்துள்ளது இக்கவிதை.
சமூகத்தில் மட்டுமல்ல தனிமனிதனை பினைத்திருக்கிறதான குடும்ப உறவுகளில் கூட நெருடலும், ஊடலும், பிரிவுகளும் தொடர்வது வழக்கமான நிகழ்வாகக் காணப்படுகின்றன. காரணம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் நற்குணம் வாய்க்காமையே. இதைப் படிமத்தின் வாயிலாக இக்கவிதை உணர்த்துகிறது.
"நேற்றிரவு நம் வீட்டில்
இடி மின்னலுடன் பெருமழை
முளைத்துவிட்டான் காளான்கள்
மிகப் பெரிய தலைக் கனத்துடன்
இருவருமே வேடிக்கைப் பார்த்தால்
களைவது யார் சொல்?
முதல் கல்லை எறிபவனே யோக்யனாம்
நானே அரிவாள் எடுத்து
முன்முயற்சி எடுக்கிறேன்
இனி நல்ல மழை
வெளியில் மட்டும்"18
- வளவ துரையன்
"சங்கு" - அக்-05
என்று குடும்ப, சமூக உறவுகளுக்கு விட்டுக் கொடுத்தலே அடிப்படையாகும் என்கிறது இக்கவிதை. இவ்வாறு படிமங்களிலான கவிதைகள் சிற்றிதழ்களில் ஏராளமாகக் காணப்படுகின்றன. எனினும் படிமம் மிகவும் இறுக்கமாகும் போது பிறரால் புரிந்து கொள்ள இயலாத இருண்மைத் தன்மையை அடைகிறது. இத்தகைய கவிதைகளைக் காலச்சுவடு, கணையாழி போன்ற இதழ்களில் அதிக அளவில் காணமுடிகிறது.
தான் - அது - தேடல் கரு
தன்னை அறிதல் தான் ஒவ்வொருவரின் அடிப்படை கடமையுமாகும். தன்னை அறிதலில் தான் தானும், சமூகமும் நலம் பெற்று வளமடைய முடியும். பல நேரங்களில் தன்னை அறிதலில் கூட இடர்பாடு ஏற்படுகின்றது.
தன்னை அறிதல் பற்றியும், கடவுளை சத்தியத்தை அறிதல் பற்றியும் தேடிப்பார்த்தல் என்ற முறையில் பாடுவதுதான் அது தேடல் கரு என்று சுட்டப்படுகின்றது."19 இவ்வகையில் தன்னை அறிதல் வகையில் ஏராளமான கவிதைகள் சிற்றிதழ்களில் காணப்படுகின்றன.
நானும் நீயும்
"எனக்கு
உன்னைத் தெரியாது
என்னையும் தெரியாது
உனக்கு
என்னைப் பற்றித் தெரியுமாமே?
எத்தனை யுகங்களாகக்
கேட்கிறேன்
சொல்லக் கூடாதா?
சொன்னால்
எந்த குட்டிச்சுவர் இடிந்து
உன் தலைமேல் விழுந்துவிடும்?
நீ என்று
எதுவுமே இல்லையாமே?
எனக்கு அழுகை வருகிறது
நான் என்றும்
எதுவுமே இல்லையாமே?"20
என்ற தன்னை அறிதலில் உள்ள ஆர்வ மேலீட்டை மனிதனோடு மனிதனையும், மனிதனோடு கடவுளையும் கூட பொருந்திப் பார்க்கலாம். இவ்வகையில் தான்-அது-தேடல் கருவைக் கொண்ட கவிதைகள் சிற்றிதழ்களில் காணப்படுகின்றன.
மேலும் இன்றைய இயந்திர உலகில் சற்று நின்று, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் தன்மையில் கூட வறட்சிக் காணப்படுவதை பார்க்க முடிகிறது. வாழ்வின் இயந்திர கதியில் உறவு-அன்பு-நட்பு-தோழமைகளைத் தேட வேண்டுவதோடு, தன்னை அறிதலிலும் தடுமாற்றம் இருப்பதைக் காணமுடிகிறது.
சிற்றிதழ்களின் படைப்புத் தளங்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை, நூல் மதிப்புரை என்று பல படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர் பொன்.குமார். சிற்றிதழ்களின் படைப்பாளர்கள் வரிசையில் முன்னிற்பவர் இவர். இவரது கவிதை இது.
"வாழ்வின் இறுக்கம்
தளரும் நாளில்
பழைய பேருந்து நிலையப் பக்கம்
தொலைந்ததை தேடுவாய்
நகர்கையில்
சிரித்தும் சிரிக்காமலும்
பேசியும் பேசாமலும்
நடந்தும் நடக்காமலும்
நின்றும் நிற்காமலும்
மகிழ்ந்தும் மகிழாமலும்
பல விதத்தில்
பல திசையில்
வேக வேகமாய் மனிதர்கள்"21
- பொன்.குமார்
"புதிய தென்றல்" - நவ-05
என்று இக்கவிதையின் வழி மனிதனின் இயந்திரத்தனமான வாழ்க்கை அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாடுபொருள்
பொதுவாகக் கவிதைகளை ஆராய்ந்த அறிஞர்கள் அது இரண்டு கூறுகளைக் கொண்டது என்றும், ஒன்று அது தரும் பொருள் அல்லது கரு என்றும் மற்றொன்று அதன் வடிவம் அல்லது உரு என்றும் கூறுவர். கரு என்பதைத் தமிழ் உலகம் பாடுபொருள் என்று பல்வேறு பெயர்களால் குறித்து நிற்கும்."
என்பதற்கேற்ப கவிதையின் பாடுபொருள்(கரு) வரையில்லாதது. கவிஞரின் சிந்தனையோட்டத்தில் எழும் கருவே கற்பனையாலும் உணர்ச்சியாலும் அழகூட்டப்படுகிறது. இதனடிப்படையில் சிற்றிதழ்களின் கவிதை பாடுபொருளும் எல்லையற்றது.
"நீ ஓடுவது
ஆறாய் அல்ல
மூலிகைக் குழந்தைகளை
முத்தமிட்டு முத்தமிட்டு
சஞ்சீவிச் சாறாய்,
உனது
வெண்பட்டுக் கம்பளத்தில்
பண்ணாட்டு தண்ர்
கொள்ளையர்க்கு
தாராளமய
பன்னீர் வரவேற்பு
உனது நீர்ப்பால் பருகிய
வாலிபப் புயல்கள்
பாரதியாய்... வாஞ்சியாய்
வ.உ.சியாய்... கட்டபொம்முவாய்
வலம் வரட்டும்"23
- பாரதி கண்ணம்மா
"புதிய ஆசிரியன்" - நவ-05
என்று, தாமிரபரணியின் நீர்ப்பால் அருந்திய பாரதியும், வாஞ்சியும், வ.உ.சியும், கட்டபொம்முவும் புரட்சிப் புயல்களாய் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியது போல், இன்று உலகமயத்தால் தாமிரபரணிக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தைத் தடுக்க இன்றைய இளைஞர்கள் முன்வர அழைப்பு விடுக்கிறார் இக்கவிஞர். எனவே கவிஞரின் சிந்தனையில் தட்டும் சிறு பொறியே கருவாக உருப்பெறுகிறது. பாடப்படும் ஒவ்வொரு பாடலும் கருவால்தான் உருப்பெறுகிறது. இதனடிப்படையில் சிற்றிதழ்கள் ஏராளமான பாடு பொருட்களுடனும், அழகியலோடும், உத்திகளோடும் இயங்குகின்றன.
மரபுக்கவிதை
சிற்றிதழ்களைப் பொறுத்தவரை மரபுக் கவிதைகள், தனித் தமிழ் நாடுகிற அல்லது வலியுறுத்துகிற குறிப்பிட்ட சில இதழ்களில் மட்டுமே காணப்படுகின்றன. யாதும் ஊரே, வெல்லும் தூய தமிழ், குளம், தென்மொழி, தமிழர் முழக்கம், தெளிதமிழ், நற்றமிழ், பன்மலர், தமிழ்ப்பாவை, தமிழ்ப்பணி, தும்பை, குறள் மணம், குறள் ஒலி போன்றவைகளாகும்.
"எழுத்து, அசை, சீர், அடி எனத் தொடர்ந்து முடிந்த அடியில்தான் கருதிய பொருளைப் புலவன் முடிய நிறுத்தி விளங்க வைத்தல் யாப்பு என வழங்கப்படும்"24 என்று யாப்பிற்கு இலக்கணம் கூறுகிறார் தமிழண்ணல். தொடை, ஓசை, வண்ணம் ஆகியவைகளை ஒட்டி யாப்பின் தரம் அமைகிறது என்பதற்கேற்ப தமிழிலக்கண மரபிற்கு உட்பட்ட கவிதைகளைப் பார்க்க இயலுகிறது. நன்கு கற்றறிந்த தமிழறிஞர்கள் பலரும் இவ்விதழ்களில் எழுதி வருகின்றனர்.
"ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமென்ன
அனைவருமே சரிசமமாய் ஆன பின்னே
காணுகின்ற கண்ணிரண்டில் பேதம் பார்த்தால்
கண்பார்வை போவதுவும் நமக்குத் தானே"25
- கவிமாமணி.தேனிரா பாண்டியன்
"தும்பை" - ஏப்-05
இப்பாடலில் மோனை, எதுகை, இயைபு போன்ற தொடைநயங்கள் பயின்று வந்துள்ளன.
முதல் எழுத்துக்கள் ஒன்றி வருவது மோனை நயம்
ஆணுக்கும் அனைவருமே, காணுகின்ற-கண்ணிரண்டில்
இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம்.
ஆணுக்கும்-காணுகின்ற, பெண்ணுக்கும்-கண்ணிரண்டில்
இறுதிச் சீரோ, எழுத்தோ ஒன்றிவரத் தொடுப்பது இயைபு
பின்னே-தானே
என்பன போன்ற தொடைநயங்கள் உள்ளன. சிற்றிதழ்களில் காணப்படும் மரபுக்கவிதைகள் அனைத்தும் இத்தொடை நயங்களைப் பெற்று வந்துள்ளதை காணமுடிகிறது. இப்பாடல் எண்சீர் கழிநெடிலடி வகையைச் சார்ந்ததாகும்.
சொல்லோ, பொருளோ முரண்படுமாறு அமைக்கப்பெறுகிற முரண் தொடையும், ஒவ்வோர் அடியிலும் இறுதிக் கண் வரும் எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த அடிக்குத் தொடக்கமாக வரும் அந்தாதித் தொடையும், அடிதோறும் முதற்கண் வரும் உயிர் எழுத்து மெய்யெழுத்து அளபெடுத்து வரும் அளபெடைத் தொடையும் சிற்றிதழ்களின் மரபுக் கவிதைகளில் காணமுடிகிறது.
உவமை
"இலக்கியத்தை அழகுபடுத்தும் முதல் அணி உவமையே ஆகும். அது காலத்தால் மிகவும் முற்பட்டதாகும்"26 என்று இலக்கியத்தை அழகுபடுத்த உவமை உருவகம் போன்றவைகள் செயல்படுகின்றன. போல, புரைய, ஒப்ப, மான, கடுப்ப போன்ற உவம உருபுகள் இப்பணிகளைச் செய்கின்றன. சிற்றிதழ்களின் கவிதை படைப்புகளிலும் இவ்வுவமை உருவகங்களைப் பார்க்க முடிகிறது. இன்றைக்குத் தமிழர் குழந்தைகள் நாகரிகம் கருதி அப்பா, அம்மா என்றழைப்பதற்குப் பதில் மம்மி, டாடி என்றழைப்பதைப் பார்க்கிறோம். அதை
எதிர்ப்பதான தமிழர் முழக்கம் சிற்றிதழின் பாடலொன்று,
"மகனே மகளே வருவீர் இங்கே
அப்பா அம்மா என்று அழைப்பீர்
மற்ற மொழிகள் வாயில் வேண்டா
தாய்ப்பால் போல வேறுபால் இல்லை"27
- முனைவர் தமிழப்பனார்.
"தமிழர் முழக்கம்" - ஆக-செப்-05
என்று தாய்ப்பால் போன்றதான தாய் மொழிப் பாலை பருகவேண்டும் என்றழைப்பதில் உவமை அணி வந்துள்ளதை அறிகிறோம். சிற்றிதழ் மரபுக்கவிதைகள் பலவும் தமிழிலக்கணத்தைப் பெற்றுள்ளதையும் அறிய முடிகிறது.
சிறுகதை - கதைக் கூறுகள்
"இக்கால இலக்கிய வகைகளுள் சிறுகதை ஒன்று அஃது இக்காலத்தில் பலரால் விரும்பிப் படிக்கப் பெறுகின்றது. அதனால் அதன் மதிப்புப் பொதுமக்களிடையே பெரிதும் வளர்ந்திருக்கிறது."28
சிறுகதை ஒரு சில பக்கங்களுள் முழுமையாக முடிவுறுவதால் இதழ்களில் வெளியிட வாய்ப்புள்ளது. மேலும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பதிவு செய்வதால் அவற்றின்கண் வாசகர் ஆர்வம் ஈர்க்கப்படுகிறது. நாவல் போன்ற இலக்கியங்களைப் படிப்பதற்கு இன்று மக்களுக்கு நேரம் கிடைக்காமையினாலும் சிறுகதைகளை விரும்பிப் படிக்கின்றனர். "சிறுகதையாவது அரைமணியிலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்திற்குள் படித்துணர்தற்குரிய உரைநடையில் கூறப்படும் கதையாகும்"29 என்று எட்கார் ஆலென்போ என்பவர் சிறுகதைக்கு விளக்கம் கூறுகின்றார்.
கதையின் செய்திகள் மிகத் தெளிவாகவும் நம் உள்ளத்தைக் கவர்வனவாயும் இருத்தல் வேண்டும். கதையினை எழுதி முடித்த பிறகு அதன்கண் விளக்கியுள்ளனவற்றைவிடச் சிறப்பாக விளக்க இயலாது என்ற வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பதற்கேற்ப சிற்றிதழ்களில் காணப்படும் பெரும்பாலான சிறுகதைகள் ஐந்து முதல் பத்து நிமிடங்களில் படித்ததற்குரியதாகவும் சில நிமிடங்களிலேயே வாசிக்க முடிந்ததாயும் அமைந்து நம் உள்ளத்தை கவர்வனவாயும் அமைந்துள்ளன.
கதை நிகழ்ச்சி
ஒரே ஒரு நிகழ்ச்சியையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளையோ மையமிட்டதாக சிறுகதைகள் அமைவதுண்டு. இருப்பினும் சிற்றிதழ்களின் பெரும்பாலான சிறுகதைகள் ஒரு நிகழ்வை மையமிட்டே அமைந்துள்ளன. உழைப்பதற்குப் பேர் போன தேனீக்கள் உழைக்காத பார்ப்பணிய சமூகத்தை வெறுப்பதாக, "தேனீக்கள் வெறுக்கின்றன" என்ற சிறுகதை தமிழ்க்காவிரி திங்களிதழில் ஒரே ஒரு நிகழ்வை மையமிட்டு வெளிவந்துள்ளது. இவ்வகையில் சிற்றிதழின் பெரும்பாலான சிறுகதைகள் ஒரே ஒரு நிகழ்ச்சியை மையமிட்டே வந்துள்ளன.
எதிர்பார்ப்பு நிலை
சிறுகதைக்கான மற்றொரு சிறப்பான கூறு எதிர்பார்ப்பு நிலை. கதையை படிப்போர் அடுத்து என்ன நிகழுமோ எனும் எதிர்பார்ப்பு நிலையை உருவாக்குவதேயாகும்.
புதுகைத் தென்றல் திங்களிதழில் வெளிவந்துள்ள "மருந்துச் சீட்டு" எனும் சிறுகதை இதற்கு நல்ல உதாரணமாகும். கதையின் கதாபாத்திரத்திற்கு மட்டுமல்ல படிப்போருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற சிறுகதை. மூர்ச்சையாகி விட்ட தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கண்ணாயிரத்திடம் மருத்துவர் கேட்கும் கேள்விகள்.
"இப்படி அடிக்கடி விழுந்திருக்காரா?"
"எனக்கு தெரிஞ்சி இது தாங்க முதல் தடவை"
"உங்கப்பா மேலே உனக்குப் பிரியம் உண்டா?"
"உண்டுய்யா"
உங்கப்பாவும் சொன்னாரு என் பிள்ளையும் மருமகளும் என்னைப் பிரியமா கவனிச்சுக்கராங்கன்னு. ஆனா "உடம்பைப் பார்த்தா அப்படித் தெரியலையே"
"ஏங்கய்யா ஏதாவது சீரியஸா இருக்கா?"
"இப்படியே விட்டா சீரியஸா ஆயிடும்"
"ஐயா என்ன செலவானாலும் எங்கப்பாவைக் காப்பாத்துங்க"
"இப்ப இருக்கிற துடிப்பு வீட்டுக்கு போனாலும் இருக்கனும். பெரிசா ஒன்னும் இல்லை. ஒரு குளுக்கோஸ் பாட்டில் ஏத்தி இருக்கேன். நூத்தி ஐம்பது ரூபாய்தான் ஆச்சு கட்டிடு."
"சரிங்கய்யா"
"மருந்து எழுதித்தாரேன் இந்த மருந்தை அக்கறையா கொடுத்தீனா ஆட்டோவுக்கு ஐம்பது ரூபா. ஆஸ்பத்திரிக்கு நூத்தி ஐம்பது ரூபா தர வேணாம். பெரியவங்க குழந்தை மாதிரி அதனாலே இந்த மருந்தை வேளை தவறாம சாப்பிட்டாரான்னு தினமும் கவனிச்சுக்கங்க" என்று பிரிஸ்கிரிப்ஷனைக் கொடுத்தார்
பிரிஸ்கிரிப்ஷனைப் படித்தவன் டாக்டரை நோக்கி அதிர்ச்சியுடன் "ஐயா" என்றான் பிரிஸ்கிரிப்ஷனில் - உணவு 1- 1- 1 தினமும்.
இச்சிறுகதையில் மருத்துவர் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் எதிர்பார்ப்பை ஊட்டி, கதையின் முடிவு அதிர்ச்சியைத் தரக்கூடியதாக அமைந்திருப்பது பாராட்டத்தக்கது.
கரு
"கருவாவது கவிதையின் முழுப்பொருளாகும். சில சமயங்களில் ஆசிரியர் கருவினைத் தெளிவாகக் கூறுவார். சில சமயங்களில் அது சிறுகதைக்கண் குறிப்பாக உணர்த்தப்பெறும் கருவே கதையின் கருத்து அல்லது செயல் நோக்கத்தைத் தருகின்றது."31
உண்மையில் கதையின் நோக்கமே கருவில்தான் உள்ளது கருவே கதையின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. காதல், தாயன்பு, நாட்டுப்பற்று, அமைதி, பிறர்க்கென வாழ்தல், விடாமுயற்சி, துன்பத்திலும் மனந்தளராமை போன்றவைகள் காலம் காலமாக கொள்ளப் பெற்று வரும் கருவாகும். இக் "கரு" வாழ்க்கையோடு ஒத்திருப்பதால் படிப்போருக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. இதனடிப்படையில் சிற்றிதழ்களின் கதைகளில் காணப்படும் "கரு" வரையறை இல்லாது காணப்படுகின்றன.
பாத்திரப்படைப்பு
"கதையினை மிக்க தரமுடையதாகவும், பயனுடையதாகவும் செய்வது பாத்திரப்படைப்பைப் பொறுத்துள்ளது. நாம் படித்த கதையின் கருவையும் கதைக் கோப்பையும் நாளடைவில் மறந்து விடுவோம். ஆனால் அதன் பாத்திரங்கள் நம் நெஞ்சில் நிலையாக இருக்கும்."32
சிறந்த சிறுகதையாசிரியர் உண்மை வாழ்க்கையில் தாம் காணும் மக்களைக் கருத்தில் கொண்டு தம் கதைகளில் பாத்திரங்களைப் படைக்கின்றனர். அல்லது வாழ்க்கையில் உண்மையாகக் காணும் ஒருவரையே தம் கதையின் பாத்திரங்களாகப் படைத்து விடுகின்றனர். அல்லது தாம் வாழ்க்கையில் சிலரிடம் காணும் சில பண்புகளை கதாபாத்திரங்களில் உலவவிட்டு கதைகளை அமைக்கின்றனர்.
இதனடிப்படையில் சிற்றிதழ்களின் சிறுகதைகளுள் இப்பண்புகள் பொருந்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனாலும் சில கதைகளுள் பாத்திரங்களின் பண்புகளை குண இயல்புகளை அடையாளம் காணுவதே சிரமமாக இருப்பதையும் அறிகிறோம். இதனடிப்படையில் சிற்றிதழ்களின் படைப்புகள் பரந்து விரிந்தது என்பதால் இப்படைப்புகளை மட்டுமே தனி ஆய்வாக மேற்கொண்டு அதன் தரத்தை தீர்மானிக்கலாம்.
கட்டுரை
கட்டுரை, சிற்றிதழ்களின் படைப்பில் முன்னனி பெறுகின்றன. எல்லாச் சிற்றிதழ்களின் முக்கிய படைப்பாக கட்டுரைகள் இடம் பெறுகின்றன. ஆனால் இடம்பெறும் இக்கட்டுரைப் படைப்புகளில் ஓர் ஒழுங்குத் தன்மையோ, கட்டுரைக்கான அடிப்படை அமைப்புகளோ காணப்படுவதில்லை.
"ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றி மிதமான அளவில் அமைந்த எழுத்தோவியமே கட்டுரையாகும். தொடக்கத்தில் முடிவு பெறாத கருத்துக் குறிப்புகளை கட்டுரை குறித்தது. ஆனால் இப்போது அளவில் வரையறை உடையதும் விரிந்த நடையுடையதுமான கருத்தோவியத்தை அது குறிக்கிறது."33 ஆக்ஸ்போர்டு அகராதி கட்டுரை குறித்து குறிப்பிடும் செய்தி இது.
எனவே சிறந்த கட்டுரை அளவிலும், விரிவிலும் ஒரு வரையறை உடையது அதனுடைய சுருக்கம் மிக இன்றியமையாத இயல்பாகும். கட்டுரைக்குரிய கருவிற்கு குறிப்பிட்ட வரையறை இல்லை. இது கட்டுரையாசிரியரின் தன்னுணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும்.
இத்தகைய பண்புகளைப் பெற்றிருப்பதாய் இருப்பினும் "அது பொருள் நோக்கம், நடை ஆகியவைகளை ஒட்டி வேறுபடுகிறது. எனவே, அதன் அமைப்பை முறையாக ஆய்வது இயலாததாகிறது. இதனால் கட்டுரை தனிப்பட்டதும் நிலைத்த வடிவமும் உடைய இலக்கியக்கலை ஆகுமா என்ற ஐயம் எழுகின்றது"34 என்று கூறுகிறார் தா.ஏ.ஞானமூர்த்தி. இதனடிப்படையில் கட்டுரையின் முழு இலக்கணத்தையும் வரையறுக்க இயலாததாய் கட்டுரைகள் உள்ளன.
நடை
கட்டுரையின் நோக்கம், ஒரு கருத்து ஒருவன் மனதிலிருந்து மற்றொருவன் மனத்தைச் சென்றடைவதாகும். இதற்கு "நடை" முக்கியக் காரணமாக இருக்கிறது. "நடை என்னும் சொல்லுக்குச் செலவு என்பது பொருள். கட்டுரை நடை என்றால் கட்டுரைச் செலவு என்பதாகும்."35
இந்த நடை உத்திக்குச் சொற்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அழகாகவும், இனிமையாகவும், பொருளுக்கேற்பவும் உள்ளனவோ அதற்கேற்பவே கட்டுரையும் சிறக்கும். வாசகர் உள்ளத்தில் நன்கு பதியும். உள்ளத்தில் இன்பம் பெருகும்.
இவைகளின் அடிப்படையில் சிற்றிதழ்களின் கட்டுரைகளை ஆய்வு செய்வது அவசியமானதாகும். சிற்றிதழ்களின் கட்டுரையின் கரு சிற்றிதழ்களைப் போலவே பெருகியிருக்கின்றன. இவற்றின் தன்னுணர்வு வெளிப்பாடும், கட்டுரை ஆசிரியரின் தனிமனித சிந்தனைகளை ஒட்டியே அமைந்திருக்கின்றன. இதனால் சில நேரங்களில் மனித குலத்திற்கெதிரான சாதி, மத, இன வெறியூட்டல்களாக சில கட்டுரைகள் அமைந்து விடுகின்றன.
அன்றாட வாழ்க்கையில் காணும், நடைபெறும் செயல் கூறுகளை ஒட்டியோ அல்லது இலக்கியம், இலக்கணம் சார்ந்தோ கட்டுரைகள் வெளிப்படுகின்றன. பொதுவாக சிற்றிதழ்களில் காணப்படும் கட்டுரைகள் சிறு சிறு வாக்கியங்களைக் கொண்டு அமைந்துள்ளன. அவரவர் கருத்தாக்கத்தைப் பொறுத்து கட்டுரைச் செய்திகளும் மாறுபடுகின்றன. ஆனால் இலக்கியம், நவீன இலக்கியம் பேசும் சில இதழ்களான காலச்சுவடு(Kalachuvadu), கவிதா சரண்(Kavithacharan), நடவு(Nadavu) போன்ற இதழ்களில் சற்று நீண்டதான வாக்கியங்களைக் காண முடிகிறது. மேலும் பெரும்பாலான இதழ்களில் கட்டுரைகள் ஒரு சில பக்கங்களில் இருப்பதையும் சில இதழ்களில் மட்டும் பத்து பதினைந்து பக்கங்களில் கட்டுரைகள் இடம் பெருவதையும் காணமுடிகிறது. தன் கருத்துக்களை வலுப்படுத்த பிற படைப்புகளில் இருந்து மேற்கோள்கள் கையாளப் பட்டிருப்பதையும் இவ்விதழ் கட்டுரைகளில் காணமுடிகிறது.
குறிப்புகள்
1.சு.சக்திவேல், இதழியல், ப.62.
2.அந்தோணி இராசு, இதழியல் ஓர் அறிமுகம், ப.8.
3.மு.நூ., ப.8.
4.மு.நூ., ப.8.
5.ஆ.அலெக்சாண்டர், எழுச்சி தலித் முரசு சிற்றிதழில் சமுதாயக் கருத்துக்கள், எம்ஃபில்., பட்ட ஆய்வேடு, ப.11.
6.நசன் பொள்ளாச்சி, சிற்றிதழ்கள், ப.36.
7.பி.வி.கிரி, இதழியல் உலகம், ப.93-94.
8.இ.சுந்தரமூர்த்தி, மா.ரா.அரசு, (தொ.ஆ) இலக்கிய இதழ்கள், ப.2.
9.தா.ஏ.ஞானமூர்த்தி, இலக்கியத் திறனாய்வியல், ப.221.
10.மு.நூ., ப.236.
11.சௌந்தரசுகன், மார்ச் 2005, ப.15.
12.செம்மலர், மே 2005, ப.54.
13.புன்னகை, பிப்ரவரி - மார்ச் 2005, ப.10.
14.தா.ஏ.ஞானமூர்த்தி, இலக்கியத் திறனாய்வியல், ப.242.
15.நறுமுகை, ஏப்ரல் - செப்டம்பர் 2005, ப.37.
16.தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு, ப.156.
17.காலச்சுவடு, மே 2005, ப.65.
18.சங்கு, அக்டோபர் 2005, ப.14.
19.சி.கனகசபாபதி கட்டுரைகள், கவிதை மரபும் புதுசும், ப.294.
20.கல்வெட்டு பேசுகிறது, ஆகஸ்ட் 2005, ப.11.
21.புதிய தென்றல், நவம்பர் 2005, ப.11.
22.ச.அகத்தியலிங்கம், கவிதை உருவாக்கம், பக்.17-18.
23.புதிய ஆசிரியன், நவம்பர் 2005, ப.29.
24.தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு, ப.103.
25.தும்பை, ஏப்ரல் 2005, ப.28.
26.தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு, ப.52.
27.தமிழர் முழக்கம், ஆகஸ்ட் - செப்டம்பர் 2005, ப.34.
28.தா.ஏ.ஞானமூர்த்தி, இலக்கியத் திறனாய்வியல், ப.329.
29.மு.நூ.,ப.330.
30.புதுகைத் தென்றல், ஏப்ரல் 2005, ப.8.
31.தா.ஏ.ஞானமூர்த்தி, இலக்கியத் திறனாய்வியல், ப.335.
32.மு.நூ., ப.336.
33.மு.நூ., ப.341.
34.மு.நூ., ப.341.
35.மு.நூ., ப.344.
கருத்துகள்