03/03/2012

கண்ணாடிக்கு அப்பால் – ஜெயமோகன்

பதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலியப் பெண்ணுக்குப் புராதன மரச்சிற்பம் ஒன்றைக் காய்கறிவிலைக்கு வாங்கிப் பொன்விலைக்கு விற்றேன். அன்று தொடங்கியது என் தொழில் . இன்று நான் நகரில் மிக முக்கியமான கலைப்பொருள் தொடர்பாளன். இப்போது பலர் சுதாரித்துக் கொண்டார்கள் , ஆனாலும் எந்தப் பொருள் கலைச்சந்தையில் மதிப்புமிக்கது எனக் கண்டறிய இத்துறையில் அனுபவம் தேவை . அதைவிட ஒன்றை கவனத்தை கவரச்செய்து முக்கியமானதாக ஆக்குவதற்குக் கற்பனையும் சொல்திறனும் பலவிதமான தொடர்புகளும் தேவை . என் போட்டியாளன் ஒரு லட்சத்துக்கு விற்ற வனமோகினி சிலையின் உடைந்து மிஞ்சிய சித்திர பீடத்தை மட்டும் நான் ஒன்றேகால் லட்சத்துக்கு விற்றிருக்கிறேன் மட்கி உடைந்து சரிந்த புராதன குடும்ப வீடுகளை மொத்தவிலைக்கு வாங்குவது லாபகரமானது . பார்க்கும்போது வெறும் குப்பைக் குவியல்போலத் தோன்றும். தனித்தனியாக எடுத்து அடையாளப்படுத்தி மதிப்பிட்டால் ஆச்சரியமூட்டுமளவுக்கு விலைமதிப்பு தெரியும். உப்பு கரைத்து ஊற்றுவதற்கான அந்தக்கால மரச்சம்புடம் ஒன்றை அறுபதாயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறேன் .


பொற்றயில்மடை என்ற பேருள்ள குடும்பத்தின் பழைய கட்டிடம் பற்றித் தகவல் தெரிந்தது . முதலில் என் ஆட்கள் போய் வீட்டைப் பார்வையிட்டு வந்தார்கள் . மிகப்பெரிய கட்டிடம்தான். ஏராளமான சிற்பத்தூண்கள் இருப்பதாகவும்,தென்புலத்தார் கோயிலில் [இப்பகுதியிலே இதை தெக்கது என்பார்கள்] முக்கியமான சில சிலைகள் இருப்பதாகவும் சொன்னார்கள். வழக்கப்படி என் ஆட்கள் வியாபாரிகள் போல சென்று அடிமட்ட விலைக்குக் கேட்டார்கள். பேரம் நகர நகர, குறைகளைக் கண்டுபிடித்து உற்சாகமிழந்து விலையைக் குறைத்தார்கள் .ஆறுமாதம் மேற்கொண்டு பேச்சே இல்லாமல் ஆறப்போட்டார்கள் . ஒருநாள் நான் திடீரென்று உள்ளே புகுந்து இரண்டுமடங்கு விலைக்குக் கேட்டேன் .அன்றே பேசிமுடித்து மறுநாளே பதிவு செய்து விட்டேன்

வழக்கமாக இத்தகைய குடும்பவீடுகளுக்கு முறைப்படி உரிமையாளர் இருக்க மாட்டார்கள் . பற்பல பங்காளிகளும் நீதிமன்ற வழக்குகளும் வெட்டுப்பழி குத்துப்பழியும் இருக்கும். அதையெல்லாம் பேசி சமரசப்படுத்தி , ஆள்வைத்து மிரட்டி, இடத்தை வாங்குவதுதான் முக்கியமான சவால் .இந்த வீட்டைப் பொறுத்தவரை அந்த பிரச்சினை இல்லை .உரிமையாளர் திருவனந்தபுரத்தில் வசிக்கும் சங்கர நாராயணன் தம்பி . அவர் அந்த வீடிருக்கும் நிலத்தை நீண்டகாலக் குத்தகைக்கு விட்டிருந்தார் . அவர் அந்தக் கட்டிடத்தைப் பார்த்தே அறுபது வருடம் ஆகியிருந்தது . அந்த சொத்து அவருக்கு மனைவி வழியில் வந்தது . மனைவிக்கும் அப்படி ஏதோ வழியில் வாரிசில்லா சொத்தாக வந்ததுதான். மனைவியும் மகனும் ஒரு கார்விபத்தில் இறந்தபிறகு அவர் குடி, விபச்சாரம் என்று சொத்துக்களை விற்று வாழ்ந்துவந்தார் .அவருடன் பேசியபோது அந்தக் குடும்பத்துக்கு பயங்கரமான குலசாபம் ஏதோ இருப்பதாகச் சொன்னார். ஆகவே அந்த வீட்டுப்பக்கமே மனித நடமாட்டம் குறைவுதான். அதை அவர் உக்கிரமாக நம்பினார் . நான் புன்னகை செய்தேன் . என் தொழிலுக்கு முக்கியமான மூலதனமே இந்த பயம்தான். இறந்த காலம் மீதான பயம் இது. இந்தியர்கள் சடலத்தை அஞ்சுவதுபோல இறந்த காலத்தை அஞ்சுகிறார்கள். ஆனால் அமெரிக்கர்களுக்கு இறந்தகாலம் நதிநீரில் மிதந்து செல்பவனின் காலுக்குத் தட்டுப்படும் அடித்தளப்பாறை போல .
வீட்டைப் பார்க்க நான் என் காரில் தனியாக வந்தேன். டிரைவர் குமரேசன் உடல்நலமில்லாததனால் வரவில்லை. குருவிக்காடு ஜங்ஷனில் ஒரு டீக்கடை இரு வெற்றிலைபாக்குக் கடைகள், இரு ரப்பர்வாங்கும் கடைகள், ஒரு மளிகைமற்றும் உரக்கடை போன்றவை இருந்தன. டீ குடித்தபிறகு பொற்றயில்மடைவீடு பற்றி விசாரித்தேன். டீக்கடை பாலன்நாயர் முகம் மாறினார். பெஞ்சுகளில் இருந்தவர்கள் அமைதியாகி உற்றுக் கவனித்தார்கள்

அந்த செம்மண் ரோட்டிலே நாலு மைல் போகணும் சார் . ‘ என்றார் பாலன் நாயர் .
அங்கே வரை ரோடு போகுமா ? ‘
கொஞ்சதூரம் நடக்கணும். பொற்றைக்கு கீழே அப்புநாடாருக்க எஸ்டேட்டு .அதுவரை வண்டிபோகும். சாருக்கு தூரமா ? ‘
திருவனந்தபுரம் .எனக்குக் கூடவர ரெண்டு கூலியாளு வேணுமே. உள்ள கூலிக்கு மேலே குடுத்திருதேன்
ஆளெல்லாம் வரமாட்டாங்க சார் .தப்பா நினைக்கப்பிடாது .அது எடம் செரியில்ல கேட்டியளா . சாரை ஆரோ சொல்லி ஏமாத்தினதாக்கும் . அங்க ஒரு உடைஞ்ச கெட்டிடம் மட்டுந்தான் .வேற ஒண்ணுமில்ல.. ‘
கெட்டிடத்தத்தான் வாங்கியிருக்கேன்..உடைச்சு விக்க.. ‘
உளுத்தமரம் சார் ..பின்ன.. ‘
பின்ன ? ‘
இங்க ஆரும் அந்தப்பக்கமாட்டுப் போறதில்ல. அங்க கெட்ட ஆத்மா நடமாட்டம் உண்டுமிண்ணு ஒரு பேச்சு ..பல துர்மரணங்களும் நடந்திட்டுண்டு . இப்ப மட்டுமில்ல, பத்துநூறு வருசமாட்டு. ‘

நான் புன்னகையுடன் விடைபெற்றது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது .அந்த ஆச்சரியத்தை நான் பலமுறை கண்டதுண்டு . என் அனுபவத்தில் இப்படிப்பட்ட கதைகள் சூழ்ந்த இடம் மனிதர்களால் அழிக்கப்படாமல் தன் பொக்கிஷங்களுடன் பத்திரமாக இருக்கும்.

சிகரெட் பற்ற வைத்துக் கொண்டபடி காரை செலுத்தினேன் . இருபக்கமும் ரப்பர்த் தோட்டங்கள் அடர்ந்த இருள் .காரை சருகுமெத்தைமீதுதான் ஓட்டவேண்டியிருந்தது. சாலை மேடேறிச் சென்றது . ‘பெத்லகேம் எஸ்டேட்என்ற தகர போர்டு தென்பட்டது . அங்கே சாலைமுடிவுற்றது . இறங்கி அப்பகுதியைப் பார்த்தேன்.எஸ்டேட்டுக்கு அப்பால் செம்மண்பாறையாலான வெட்டவெளிதான் தெரிந்தது . அன்னாசிப்புதர் அடர்ந்த ஒரு சிறு வேலியைக் காரால் தாண்டினால் மேலும் வெகுதூரம் காரிலேயே போக முடியும். கார் முனகி உறுமி எழுந்து விழுந்து மறுபக்கம் சென்றது . பிறகு பாறைகள்மீது ஆடியாடிச் சென்றது .நன்றாக ஒளிபரவிய செம்மண்பாறை நிலம். அதன் மீது ஆங்காங்கே தருவைப்புல் மட்டும் அடர்ந்து பரவி இருந்தது . வளமற்ற நரைத்த புல். காற்றில் அதன் மீது அலை நகர்ந்து சென்றது . குன்றின் மீது சிறுமரக்கூட்டம் ஒன்றும், அதற்கப்பால் உயர்ந்த கூரையுடன் பெரிய வீடும் தெரிந்தன. அந்த வீடுதான் . அப்போது ஒன்று தெரிந்தது , என் ஆட்கள் வீட்டைப் பார்க்கவேயில்லை , அதைப் பற்றி விசாரித்ததோடு சரி. அவர்களுக்குத் தகவல் சொன்னவர்களும் வீட்டைப் பார்த்ததில்லை . ஏனெனில் வீட்டின்கூரைஅவர்கள் சொன்னதுபோல ஓடு வேய்ந்தது அல்ல , செம்புத்தகடு வேய்ந்தது .

காரை நிறுத்தினேன் ,மேற்கொண்டு நடக்கத்தான் வேண்டும்.பாறையில் வெட்டப்பட்ட படிகள் இருந்தன . பெரிய கோட்டைச் சுவர் ஒன்றின் இடிந்த அடித்தளம் தெரிந்தது. இடிபாடுகள் அதிகரித்தபடியே வந்தன. அவற்றின்மீது பச்சைமெத்தாகப் பாசி படிந்திருந்தது .சற்று மூச்சிரைத்தபடி அந்த வீட்டின் முகப்பை அடைந்தேன் . சிறு மதில்சுவர், அப்பால் செம்மண்கல்லில் வெட்டிச் சமதளமாக்கப்பட்ட விசாலமான முற்றம். அதன் பாசிமீது காலை கவனமாக எடுத்து வைத்து நடந்தேன். கட்டிடத்தை அப்போதுதான் ஏறிட்டுப்பார்த்தேன் . கேரளத்தில் அத்தனை பெரிய கட்டிடத்தைப் பார்ப்பது அரிது . கொட்டியம்பலம் பகோடா பாணியில் சித்திரமரக்கூடு ஒன்றைக் கற்சுவர் மீது தூக்கிவைத்தது போல நீலவானப்பின்னணியில் உச்சிமுனையில் நாகபடம் தெரிய ஓங்கி நின்றது . அதன் மீது பலவகையாக கொடிகள் படர்ந்தேறிப் பசுமையான இலைகளை விரித்திருந்தன. பதினாறுகட்டு வீடு . அரண்மனைகளுக்கு மட்டுமே உரிய அமைப்பு அது. ஏழு செவ்வக வடிவ கட்டிடச் சுற்றுகளுக்குள் நடுவே அங்கண முற்றம் இருக்கும். பின்னால் அந்தப்புரம் சமையலறை போன்ற இணைப்புகள் .பக்கவாட்டில் மற்ற கட்டிடத் தொடர்கள் .ஆனால் அவை மண்மேடாகவே இருந்தன.

முற்றத்துக்கு இடதுபக்கமாக ஒரு மரக்கோயிலும் அதனருகே குளமும் இருந்ததைக் கண்டேன். குளத்தைச் சுற்றிக் கோரை அடர்ந்திருந்தது . குளத்து நீர் அடர்பச்சை நிறப் பாசி மண்டிக் கிடந்தது . கோயில்மீதும் கொடிகள் படர்ந்திருந்தன. கட்டிடங்களின் சுவர்கள் வெடித்து ஆலமரங்கள் பீரிட்டுக் கிளம்பியிருந்தன. ஒரு வாகை மரம் குலைகுலையாக இலைதொங்கும் கிளைகளைக் கட்டிடத்தின் மேலேயே போட்டபடி சரிந்து வளர்ந்து நின்றது. கற்படிகள்மீது சற்று தயங்கியபடிதான் ஏறினேன். அந்தத் தயக்கம் எனக்குப் புதிது. அந்த இடத்தின் தனிமை எனக்கு மிகவும் பழகியதுதான். ஆனால் அங்கே மிக வினோதமாக ஏதோ இருந்தது. அதை நான் உணரும்முன்பே என் ஆழ்மனம் உணர்ந்துவிட்டிருந்தது.

கொட்டியம்பலத்துக்கு அப்பால் கருங்கல் பாவப்பட்ட சிறு முற்றம். கல்லிணைப்புகளில் நெருஞ்சி முளைத்து செருப்பைத் தடுத்தது. அதற்கப்பால் அழகான சித்திரமுகப்பு கொண்ட பூமுகம் . அதன் தளம் நன்கு தீட்டப்பட்ட கருங்கல்லால் ஆனது . அதன் படிகளில் ஏறியபோது என் மீது ஒரு பார்வையுணர்வு ஏற்பட்டது . திரும்பிப் பார்த்தேன் யாருமில்லை . கற்தளத்தின் தூசி மீது எந்தச்சுவடும் இல்லை . மென்மையான பட்டுச்சல்லா போல அலைகள்பதிந்து விரிந்திருந்தது. அதில் கால்வைக்கும் முன்பு என் மனம் அதிர்ந்தது .ஆம் , மிக வினோதம்தான். அத்தகைய ஓர் இடத்தில் கண்டிப்பாக வவ்வால் எச்சம் நிரம்பிக் கிடக்கும். அப்பகுதியில் அதன் வீச்சம் சற்றுமில்லை . மறுகணம் என் மூளையில் இன்னொரு தீண்டல் ஏற்பட்டது . அந்த இடத்தின் வினோதம் அங்கு பறவைக்குரலே இல்லை என்பதுதான். ஒரு சிறகடிப்பொலிகூட இல்லை .

என் மனதில் இருந்த தன்னம்பிக்கை சற்று சஞ்சலப்பட்டுவிட்டது . நான் நடந்தபோது என் ஆழ் புலன்களில் ஒன்று பின்னோக்கியே கவனமாக இருந்தது . ஒரு சிறு ஒலிகூட என்னைத் தூக்கிவாரிப்போடச்செய்து விடும் .ஒலி எக்கணமும் கேட்கலாம் என உண்மையிலேயே எதிர்பார்த்தேன். முற்றிலும் எதிர்பார்க்காத ஓர் ஒலி. ஆனால் நான் தூக்கிவாரிப்போட்டது அந்த பறவைச்சிலையைக் கண்டு . என் முன் சரிந்த உத்தரத்தில் அந்த மரச்சிலை எந்தவிதமான அலங்காரத்திலும் சேர்த்தியில்லாமல் அப்படி அமர்ந்திருந்தது. ஒரு புறா , ஆனால் காகம் அளவுக்குப் பெரிது . மறுமணம் என் மூச்சு கடுங்குளிராக மாறியது .அப்பறவையின் கண்கள் அசைந்தன. ஒளிமையமற்ற மணிக்கண்கள் என்னைப் பார்த்தன. பறவை சிறகடித்து எழுந்து ஒரு முறை சுற்றிப்பறந்து உள்ளே போயிற்று.

மேலும் உள்ளே போக எனக்கு அச்சமாக இருந்தது என உணர்ந்தபோது எனக்கே வியப்பாக இருந்தது. அமானுட சக்திகள்மீது உள்ளூர அச்சம் இல்லாதவர்கள் இல்லை . ஒவ்வொருவருக்கும் ஒரு பகுத்தறிவுத்தர்க்க எல்லை உள்ளது. அது மீறப்படுவதுவரைதான் தைரியம் . மீண்டும் வெளியே இறங்கி வெயிலுக்கு வந்த சில கணங்களில் எனக்கு சிரிப்பு வந்தது . ஒரு இடத்தில் பறவை இல்லாமலிருக்கப் பல இயற்கைக் காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக தைல மரங்கள் நிரம்பிய இடங்களில் பறவைகள் இருப்பதில்லை . அந்தப் பறவை புறாவில் ஒரு வகையாக இருக்கலாம், பறவைகளைப்பற்றி என் ஞானம் பெரிதும் இரவுணவுடன் மட்டும் சம்பந்தமுள்ளது . என்ன பயம் ? பயமில்லை ,ஒருவித தயக்கம். இல்லை இதில் தர்க்கத்துகே இடமில்லை. இது ஒருவித ஆழ்மன வெளிப்பாடு. வழுவழுப்பான பொருள் காலில் தட்டுப்பட்டால் உடல் உதறிக் கொள்வதுபோல.

மறுபக்கம் அந்தப்புரக் கட்டிடங்களின் மண்சுவர்கள் சரிந்து விழுந்து,கரைந்து மண்மேடாகி ,புதர்கள் அடர்ந்து கிடந்தன. அவை தென்னை ஓலை வேய்ந்தவையாக இருந்திருக்கக் கூடும். அப்பால் இன்னொரு குளம் தெரிந்தது .கற்படிகள் இறங்கிச் சென்று , தெளிந்த நீல நீரில் மூழ்கின. அங்கிருந்து பார்த்தபோது கட்டிடத்தின் செம்புக்கூரையின் பின்பக்கம் தெரிந்தது. செம்புமட்டுமே நான் கொடுத்த விலைக்கு நான்கு மடங்கு வரும். என்னால் நம்ப முடியவில்லை , அத்தனை பெரிய லாபத்தில் அபாயகரமான ஏதோ ஒன்று இருப்பதுபோலிருந்தது. அல்லது அநீதி . அப்படியெல்லாம் சிந்திக்கக் கூடியவனா நான் என எண்ணிக் கொண்டேன் .

சட்டென்று ஒரு மனிதக்குரலைக் கேட்டேன் . என் உடல் உதறிக் கொண்டிருப்பதைக் கவனித்து மெல்ல சமனப்படுத்திக் கொண்டேன். பிரமையா ? இல்லை, குரல் மீண்டும் கேட்டது . இனிய ,அந்தரங்கமான பெண்குரல் . ஏதோபாடுவதுபோல. என் தர்க்கபுத்தியை மிரண்ட காட்டுக் குதிரையை அதட்டுவதுபோலப் பிடித்திழுத்துக் கட்டுக்குள் நிறுத்தவேண்டியிருந்தது. மெதுவாக எட்டிப்பார்த்தேன், ஒரு தவளை நீரில்குதித்த ஒலியில் என் அடிவயிறு பனிக்கட்டி போல குளிர்ந்து குலுங்கியது . ஒரு சில கணங்களுக்குப் பிறகே என்னால் நிதானமாகப் பார்க்கமுடிந்தது.

குளத்தின் மறுகரையில் ஒருபெண் சேலையை இடுப்பில் வரிந்து கட்டியபடி குளித்துக் கொண்டிருந்தாள். குளத்தில் படர்ந்திருந்த இளவெயிலில் அவளைப் பார்த்ததுமே என் அச்சம் வடிந்து நம்பிக்கை ஏற்பட்டது . சாதாரண குடியானவப் பெண்தான் . கரிய நிறம் . நீண்ட கூந்தல் நீரில் நெளிபட்டது .கரையில் ஒரு புல்லுக்கட்டு இருந்தது. அவளைப் பார்த்தபடியே என்னை மறந்து நின்று விட்டேன். அழகி என்று முதல்கணம் தோன்றவில்லை , பார்க்கப் பார்க்க அழகு தெளிவடைந்து வந்தது. இளமையின் மென்மையும் திரட்சியும் கொண்ட உடல் .காதோரம் மென்மயிர் இறங்கி நீர்த்துளி சொட்டியது. சட்டென்று என்னை பார்த்தாள் .

அய்யோ அம்மே ‘ ‘ என்று ஒரு அலறலுடன் நீரில் மூழ்கிக் கரை நோக்கி நீந்தினாள் . வேரில் பற்றி ஏறி, என்னை ஒரு முறை பார்த்தபிறகு, மரத்தின் மறுபக்கம் மறைந்தாள்.அங்கே நல்ல சோலையாக இருந்தது . அந்த வேடிக்கையிலும் என் ஒரு மனம் அவள் கால்கள் தரையில் படுகின்றனவா என்று பார்த்ததை நினைத்தபோது சிரிப்பு வந்தது.

நான் மீண்டும் அந்தப்புர இடிபாடுகளுக்கு மேல் ஏறினேன். உள்ளே சென்று பார்த்து விடுவதுதான் .அப்பகுதியில் மனித நடமாட்டம் இருப்பதே எனக்கு தைரியத்தை அளித்தது .இப்படி பயப்பட்டதை வீட்டுக்குச் சென்று எண்ணிப்பார்க்கும்போது எப்படி ஆச்சரியமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன். அருகே சருகு அசையும் ஒலி கேட்டது .எனக்கு அது யாரெனத் தெரிந்துவிட்டது . குட்டிச்சுவருக்கு அப்பால் அந்த பெண் நின்றாள் . ஈரச்சேலையைப் பிழிந்து உடுத்தியிருந்தாள் . கருஞ்சிவப்பான சிறிய உதடுகள் .கீழுதடு சற்று உருண்டு குமிழ் போலிருந்தது .மேலுதடுக்குமேல் ஈரமான பூனைமயிர் . அவள் தோள்களில் இழைத்த தேக்குமரத்தில் தெரிவதுபோல மென்மையான சருமவரிகள் , தங்கிநின்ற ஓரிரு துளிகள்.

 ‘ ’நீங்க ஆராக்கும் ? ‘ என்று கேட்டாள்.
இந்த வீட்டை நான் வாங்கியிருக்கேன்
இதையா ? என்னத்துக்கு ? ‘ ‘
உடைச்சு விக்கியதுக்கு
உய்யோ! ‘ ‘ என்றாள் .அய்யோ என்பதற்கு அவள் சாதி ஒலி போலும். ஆனால் அது இனிமையாக இருந்தது. ‘இங்க ஆருமே வரமாட்டினுமே … ‘ குழந்தைத்தனம் மாறாத இசைத்தன்மையுள்ள குரல் .
நீ வந்திருக்கியே ? ‘
எங்க சாதிக்காரங்க வருவினும். அப்பனும் அம்மையும் இங்கதான் மரநாய் , எலி எல்லாம் பிடிக்கியது. ‘
உனக்கு பசு இருக்கா ? ‘
கிடாரிக்கண்ணு. ….இங்கதான் புல்லு பறிப்பேன். ‘
உள்ள போயிருக்கியா ? ‘ ‘
கூட்டுக்காரிய ஒப்பரம் இருந்தா போயி விளையாடுவோம்உள்ள ஒரு கொளம் உண்டும் .பிறவு பொம்மைங்க உண்டு.. ‘
உன் பேர் என்ன ? ‘
சிசிலிஇங்க பேய் உண்டும் தெரியுமா ? ‘
கிறிஸ்டியனா ? பேய நீ பாத்திருக்கியா ? ‘
எங்களைப் பேய் ஒண்ணும் செய்யாது . மலைவேரு வச்சிருக்கோமே. மத்தவிய வந்தாத்தான் பிடிக்கும்கண்களில் சிரிப்பு தெரிந்தது .
நான் பழைய சாமான்களை விக்கிறவன். ஒரு பேய் கிடைச்சாப் பிடிச்சு அமெரிக்காவுக்கு வித்துடுவேன்என்றேன்

உய்ய்யோ ! ‘ அவள் கரிய ஈறுகளையும் ஆரோக்கியமான பெரிய பற்களையும் காட்டி சிரித்தாள். அவளிடம் வெட்கம் என்பதே இல்லாமலிருந்ததைக் கவனித்தேன். உற்சாகமான குழந்தை போலிருந்தாள். நடக்கும்போது அசையும் உடலுறுப்புகளை மறைக்கக் கூட முனையவில்லை . ஆனால் வெட்கமின்மை காரணமாகவே அவளை வேறுவகையில் பார்க்கத் தோன்றவில்லை .அவளது காட்டு சாதியில் ஆண்பெண் உறவில் தடைகள் இல்லாமலிருக்கலாம்

நீ என்ன சாதி ? ‘
நாங்க மலைக்காணியில்லா ? ‘
சிசிலி , எனக்கு இந்தக் கட்டிடத்தை காட்டுவியா ? உனக்கு ஐம்பது ரூபா தருவேன்
 சேசுவே , கள்ளம்! ‘ என்று அதிர்ந்து நின்றுவிட்டாள்
ஏன் ? ‘
ஐம்பது ரூவாயா ? உள்ளதாட்டா ? ‘
பாத்தியா ? ‘ என்று ரூபாயை நீட்டினேன். ‘இந்தா இப்பமே வச்சுக்கோ
அவள் சற்று கூர்ந்து பார்த்துத் தயங்கியபிறகு வெடுக்கென்று பிடுங்கி இடுப்பில் செருகினாள் .
இத வச்சு என்ன வாங்குவே ? ‘
சேலை .பிறவு முத்துமணி .கிடாரிக்கு ஒரு மணி .பிறவு……
உனக்கு இன்னும் அம்பது ரூபா தாறேன். அப்பதான் இதயெல்லாம் வாங்க முடியும்.. .. எப்பிடி உள்ளே போறது ? ‘
இங்க ஒரு வழி இருக்கு . அப்பிடியே போனியண்ணா இடிஞ்ச சுவருதான் வரும்
நான் அவள் வழிகாட்ட கற்படிகளில் ஏறினேன்சிசிலி , ஏன் இங்க பறவைகளே இல்ல ? ‘
இஞ்ச எங்கிளுக்க மலைவாதை அப்பச்சிக்க கோயில் உண்டும்லா ? அங்க மலைக்குமேலயும் அப்பச்சி கோயில் இருக்கு. அங்கயும் காக்காகுருவி ஒண்ணுமே இல்ல
மலைவாதை அப்பச்சிக்கு உங்க யேசு என்ன உறவு ? ‘ ‘
அவள் சிரிக்கவில்லை .அந்தக் கேள்வி அவளது சிறு மூளைக்கு அப்பாற்பட்டது என்று பட்டது . ‘சேசுவே ராஜாவேஎன்று ஒரு சரிந்த தூணை ஏறித்தாண்டினாள். இறுக்கமான தொடைச்சதைகளுடன் குதிரைக்குட்டிபோலிருந்தாள் . எத்தனை சீக்கிரமாக அவள் என்னை கவர்ந்துவிட்டாள் என எண்ண ஆச்சரியமாக இருந்தது .அவள் மேலிருந்து கண்களை எடுக்கமுடியவில்லை . என் கவனம் அவள் மீதிருந்து விலகவுமில்லை . கட்டிடத்தின் உள்ளே நுழைந்ததும் உள்ளறைகள் வழியாகச் சென்றதும் ஒன்றும் நான் அறியவில்லை .

சிசிலி , இங்க நான் ஒரு பறவையைப் பாத்தேன். புறா மாதிரி .ஆனா காக்கா அளவுக்குப் பெரிசு
சேசுவே ! ‘ என்று வீறிட்டபடி நின்று , மார்பில் கையை வைத்தபடி மிரண்ட கண்களால் பார்த்தாள்உள்ளதா ? ‘
ஆமா ஏன் நீ பாத்ததில்லையா ? ‘
நான் போறேனேசேசுவே ரெட்சகரே ….. ‘
என்னண்ணு சொல்லு. ‘
நான் போறேன் வழிவிடுங்க
அம்பது ரூவா வேண்டாமா ? ‘
இஞ்ச வேண்டாம்எனக்கு பயமாட்டு இருக்கு
ஏன் ? ‘
அது பிறாவு இல்லை . பேயாக்கும்
ஆகா. புறாவுக்கு ஆவி . புதிய கதையா இருக்கே. ‘
உள்ளதா , பாத்தியளா ? ‘ என்றாள் கரிய பெரிய கண்களை ஐயத்துடன் விழித்தபடி .
இல்லை, சும்மா சொன்னேன் . அப்படி ஒண்ணு இங்க உண்டுன்னு கீழே சொன்னாங்க.. ‘
நான் பயந்துபோட்டேனே … ‘ ‘
அந்தக் கதை என்ன சொல்லு.. ‘ என்றேன் .

அவள் முன்னே சென்றபடி ‘ ‘ இந்தக் கெட்டிடம் பழையகாலத்திலே இங்க நாட்டுராஜாக்களா இருந்தவியளுக்க கொட்டாரமாக்கும். பொற்றயில் மாடம்பிகள் எண்ணு அவியளுக்குப் பேரு . இங்க உள்ள ஏழு மலையும் பதினாறு ஊரும் அவியளுக்க சொத்தாக்கும் . எனக்க தாத்தா நெறய கதை சொல்லியிட்டுண்டு. அவிய செய்யாத்த வங்கொடுமை இல்லை . ஏழைகளை நுகத்திலே கெட்டி உழுவாவ . முக்காலியிலே கெட்டி வச்சு அடிப்பாவ. அங்க ஓடைக்கரையில கழுமடைண்ணு ஒரு எடமுண்டு கேட்டியளா , அங்க வாரத்துக்கு ஒருத்தனைக் கழுவேத்துவாளாம். கழுவன் ஏழுநாள் சங்கு பொட்டி அலறுவானாம். கழுவன் போடுத சத்தம் கேக்கப்பிடாதுண்ணுதான் ஓடைக்கரையிலே கொண்டு செண்ணு கழுவேத்துவது. ஆனா இங்க இருந்த ஒரு மூத்த ராஜா கழுவனுக்க பக்கத்திலே செண்ணு கட்டிலு போட்டுக் கெடந்து அதக் கேட்டு ரசிப்பாராம். ‘

அப்படி ஒரு பயங்கரமான நாட்டுராஜாவின் கதையை நானும் எதிர்பார்த்துத்தான் இருந்தேன். இனி ஒரு பெண்ணின் சோகக் கதை வரும் .கோட்டைகள் முழுக்க அரண்மனைகள் முழுக்க ரத்தமும் கண்ணீரும் நாறும் கதைகள்தான் நிரம்பியிருக்கின்றன.

அந்த ராஜாவுக்க பேரு அச்சுதன் கர்த்தா எண்ணாக்கும் . அவனுக்கு அந்தப்புரத்திலே அறுவது ராணிகள் இருந்தாவ. அவனுக்கு ஒரு பெண்ணைப் பிடிச்சுப்போனா ஆளைவச்சு இழுத்துக்கிட்டுப் போயி உள்ள அடைச்சுப் போடுவான். அந்தப்புரத்திலே போனவங்கள பின்ன வேற கண்ணு பாக்க முடியாது . அவியளுக்குக் குளமும் கோவிலும் எல்லாம் உள்ள உண்டு . அங்கேயே மூத்து நரச்சு செத்து தெக்கு வாசல் வழியா சுடுகாடு போற சமயத்திலதான் வெளிய வரமுடியும். ‘

உள்ளறைகள் இருட்டு தேங்கி எந்த ஒலியும் இல்லாமல் கனத்துக் கிடந்தன .வவ்வால்களை நான் எப்போதுமே வெறுப்பதுண்டு .கலைப்பொருட்களுக்கு முதல் எதிரிகள் அவைதான் என. ஆனால் அவற்றின் பங்கை அப்போது உணர்ந்தேன் .காலத்தில் மூழ்கி அடித்தட்டின் நிசப்தத்தில் கிடக்கும் புராதன இடங்களில் அவைதான் உயிரசைவை அளிக்கின்றன. அங்கு அந்த நிசப்தம் பயங்கரமாக இருந்தது

அச்சுதன் கர்த்தா ஒருநாளைக்கு பாச்சி எண்ணு பேருள்ள ஒரு இடையப்பெண்ணை கண்டு மோகிச்சு அவளைப் பிடிச்சுக் கொண்டுவந்து உள்ள அடைச்சுப்போட்டான் . பிறந்ததுமுதல் விரிஞ்ச வானத்துக்கு கீழே வளந்தவ அவ. அவளுக்கு ஒரு முறைக்காரன் உண்டும் , கண்ணன் எண்ணு பேரு . அவனை அவளுக்குப் பேசி, பூமாத்தி வச்சிருந்தது . அந்தப்புரத்திலே இருட்டிலே கிடந்து அவ வெளுத்துத் தேம்பினா. அப்பம் இங்க காக்கா குருவி எல்லாம் உண்டு . கொட்டார வளைப்பில பிறாவும் உண்டும். பாச்சி அவளுக்க குடிலிலே ஒரு பிறாவ வளத்தா .அது அவளக் காணாம பத்தாம் நாள் தேடி வந்துபோட்டு. அவ அவளுக்க சேலையிலே ஒரு தும்ப கிழிச்சு அதுக்க காலிலே கெட்டி திருப்பி அனுப்பினா. அது அவளுக்க முறைக்காரனுக்க கிட்ட போச்சு .அவன் அவனுக்க தலைக்கெட்டைக் கிழிச்சுக் கெட்டி அனுப்பினான். பிறவு அவ வேற ஒரு காரியத்த அனுப்பினா, அவன் அதுக்கு பதில் அனுப்பினான். அவள எப்பிடியாவது அங்கேயிருந்து கூட்டிக்கிட்டுப் போறது எண்ணு அவன் திட்டம்போட்டான். அவளுக்கானா அந்தப் பிறாவு வரும்போதே காத்தும் சூரிய வெளிச்சமும் எல்லாம் வந்தது மாதிரி இருக்குமாம்

மையத்தில் அங்கணமுற்றத்துக்கு பதிலாக வட்டவடிவமான குளம் இருப்பதைக் கண்டு நான் சற்று பிரமித்துவிட்டேன். அந்த அமைப்பு அதுவரை நான் பார்க்காதது .அலங்காரத்துக்கான குளம் . படிகள் இல்லை .குளத்தைச் சுற்றி வட்டமான இடைநாழி திறந்திருந்தது .அதில் நெருக்கமாக அலங்கார மரத்தூண்கள் நின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றில் பெண்சிற்பங்கள் இருந்தன. வழக்கமாக தீபங்களை ஏந்தியபடி அல்லது மலர்களுடன் தான் பெண்சிற்பங்கள் இருக்கும் . ஆனால் அந்த சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாவனையில் நின்றன. கூந்தல் கோதுபவை , கண்ணாடி பார்ப்பவை , ஏக்கத்துடன் ஒருபக்கமாக முகம் திருப்பி அமர்ந்தவை . மிகப்பெரிய பொக்கிஷம் என என் மனம் விம்மியது .மிக அசாதாரணமான சிற்பங்கள் அவை.

இங்கே நீங்க வந்து விளையாடுவீங்களா ? ‘ ‘
ஆமா. ஆனா அப்பனும் அம்மையும் அறிஞ்சா கொண்ணு போடுவினும். இது பேய்க்குளமாக்கும் தெரியுமா ? இங்க நிறைய பெண்கள் விழுந்து செத்திட்டுண்டு . ராஜாவும் அவியளுக்க வம்சமும் எல்லாரும் போன பிறவு கூட இங்க ஆளுகள் விழுந்து செத்திட்டுண்டு. போன வரியம் கூட ஒராள் இதிலே செத்துக் கிடந்தான். அப்பனாக்கும் கண்டது
ஏன் என்று எனக்குப் புரிந்தது . செங்குத்தான கரைவிளிம்பு தரைமட்டத்திலேயே இருந்தது .அது நன்றாகப் பாசிபிடித்துப் பச்சைப்பரப்பாகக் காணப்பட்டது . சற்று கால் தவறினாலும் போதும் . நீர் மிக ஆழம். கரிய நீலம் நெளிந்தது .

பிறகு பாச்சி என்ன ஆனா ? கண்ணனைப் பிடிச்சிட்டாங்களா ? ‘
உய்ய்யோ , ஒங்கிளுக்கு எப்பிடித் தெரியும் ? ‘ ‘
கதை கேட்டிருக்கேன். ‘
ஊரிலே வேற மாதிரி சொல்லுவாவ . பிறாவு வந்துபோறது காவல்காரனுக்குத் தெரிஞ்சு ராஜாக்கிட்டே சொல்லிப்போட்டான். ராஜா கண்ணனைப் பிடிச்சுக் கழுவேத்தினார் .கண்ணன் ஒம்பதுநாள் கழுவிலே இருந்து பாச்சீபாச்சீ எண்ணு அலறி அலறி செத்தான் . அந்த விஷயம்கேட்டதுமே பாச்சியும் இந்த குளத்திலே குதிச்சு செத்தா. ‘

எனக்கு திடீரென மனம் துணுக்குற்றது .ஒரு கணம் கழித்துத்தான் ஏன் எனப் பிரித்தறிய முடிந்தது . ஒரு சிற்பத்தின் கண் என்னைப் பார்த்தபடி மெல்லத் திரும்புவது போல ஒரு மனப்பிரமை எனக்கு ஏற்பட்டதை உணர்ந்தேன். சிற்பங்களைப் பார்த்தேன் . கேரளத்து தாருசில்ப சாஸ்திரப்படி அடிப்பலாமரத்தடியில் கடைந்து உருவாக்கப்பட்ட அழகிய சிற்பங்கள். பலவகையான நகைகள் உடைகளின் நெளிவுகள் . மரச்சிற்பங்களில் கண்விழிகள் செதுக்குவதில்லை , இமைகள் மூடியிருப்பது போலிருக்கும் . உதடுகளில் புன்னகையுடன் சிற்பங்கள் மிக அருகே எனினும் காலத்தினால் மிக அப்பால் என நின்றன. சில சிற்பங்கள் சற்று பழுதடைந்திருந்தன.
சட்டென்று மீண்டும் என் மனம் மின்னியது .அச்சிலையின் பார்வையை நான் கண்டது நீருக்குள் என்று அறிந்தேன். நீரை உற்றுப்,பார்த்தேன் .அலைநெளிவில் சிற்பங்கள் நடனமிட்டன. அவ்வசைவை என் மனதின் அச்சம் வேறுவகையில் வாங்கிக் கொண்டிருக்கிறது.மீண்டும் சிற்பங்களைப் பார்த்தேன் .எத்தனை அற்புதமான கலைவெற்றிகள் . அழகின் உச்சநிலைகள் .ஆனால் அழகு என்பது மனிதமனதின் ஒர் உச்சநிலைதான்.அப்படியானால் ஏன் மனிதமனம் இந்த அழகைக் கண்டு அஞ்சுகிறது ?ஏன் இத்தனை பயங்கரங்களை அதற்குப் பின்னணியாகக் கற்பனை செய்துகொள்கிறது ?
ஏனெனில் மனித மனம் உச்ச நிலைகளைக் கண்டு மருள்கிறது . சகஜநிலைக்கு மாற்றான எல்லாவற்றையும் அது தவிர்க்கவே எண்ணுகிறது . உச்சநிலைகளுக்குப் பைத்தியம் என்றும், அமானுடம் என்றும் அடையாளம் அளிக்கிறது.

இங்கதான் பாச்சிக்க சிலையும் இருக்கு எண்ணு சொல்லுவாவஎன்றாள் சிசிலி .

ஒருபெண் தன் அழகைக் காலத்தில் நிரந்தரப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறாள் . அதை மிகப்பெரிய துயரமென்றும் அழிவென்றும் வேறு சில மனங்கள் புரிந்துகொள்கின்றன.

அந்த பிறாவை அப்பமே பிடிச்சுக் கொண்ணு போட்டாவ . ஆனா ராத்திரியிலே அது வந்து வீடுமுழுக்க சிறகடிச்சுட்டு சுத்திச் சுத்தி வருமாம் .வீட்டிலே ஆருமே நிம்மதியாட்டு உறங்க முடியாம ஆச்சு .அப்பம்தான் எனக்க சாதியிலே ஏதோ மூத்த பாட்டாவைக் கூட்டிட்டு வந்து மலைவாதை அப்பச்சியை இங்க குடியேத்தி பறக்குத உயிரு ஒண்ணுமே வராம ஆக்கினாவ . ஆனா அந்தப் பிறாவ ஒண்ணுமே செய்ய முடியேல்ல .அது வந்துட்டே இருந்தது. பிறவு அப்பிடியே இந்த ராஜவம்சம் அழிஞ்சுபோச்சு . ஒரு சந்ததிகூட இல்ல .பாச்சி சாபம் எண்ணு சொல்லுதாவ .அந்தப் பிறாவு இப்பமும் இங்கதான் இருக்குண்ணு அப்பன் சொல்லுவினும். ‘

நான் குனிந்து நீரில் தெரிந்த சிலைகளைப் பார்த்தேன் சிலைகளை நீரில் பார்ப்பதற்காக அந்தக் குளம் அமைக்கப்பட்டிருந்தது என்று தெரிந்தது . அற்புதமான கலைமனம் ஒன்று கண்டுபிடித்த திட்டம். அதை என் வாடிக்கையாளர்கள் சிலருக்கு சிபாரிசு செய்யவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

ஆனால் அந்தப் பேரழகுக்கும் அந்தக் கதைகளுக்கும்தான் எவ்வளவு முரண்பாடு . ஒருவேளை நாம் காண்பது ஒருபக்கம் மட்டுமாக இருக்கலாம் . மறுபக்கத்தில் துக்கமும் பயங்கரமும் தேங்கிக் கிடக்கக் கூடும் . காலம் ஒரு பொருளைக் கலைப்பொருளாக்குகிறது என்றார் நீல் சாம்சன் ஒருமுறை .கோவளத்தில் கடற்கரையோரமாக அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தோம் . நூற்றாண்டுகளின் ரத்தம் கண்ணீர் வியர்வை ஆகியவற்றின் மணம் உள்ள எப்பொருளும் பழங்கலைப்பொருளே . அது வரலாற்றின் குறியீடு .வரலாறு என்பதுதான் என்ன ? கண்ணாடியில் படித்தால் முற்றிலும் வேறு பொருள் தரக்கூடிய வேறு மொழியாக மாறும் சீன மந்திரத்தகடு ஒன்றைக் கண்ட நினைவு வந்தது ….

அவள் குரலில் ஆழமான துக்கம் ஒன்று குடியேறியதுஇப்பமும் பாச்சிக்க ஆத்மா இந்த இருட்டிலேருந்து வெளியே போய் காத்திலேயும் வெளிச்சத்திலேயும் அலையணும் எண்ணு தாகிச்சு தாகிச்சு காத்திருக்கு . அந்தப் பிறாவு அதனாலதான் இப்பமும் இங்க சிறகடிச்சுக்கிட்டிருக்கு
அந்தக் குரலில் ஏற்பட்ட தீவிரத்தைக் கண்டு நான் அவள் முகத்தை ஏறிட்டுப்பார்த்தேன் . அவள் வினோதமான நிலைகுத்திய பார்வையுடன் ஒரு தூணில் காலைமடக்கி சாய்ந்து நின்றபடி நீர்ப்பரப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன பார்க்கிறாள் என நான் நீர்ப்பரப்பைப் பார்த்ததும் அலறியபடி எழுந்துவிட்டேன் . நீரில் தெரிந்தது வேறு முகம்.

என் முன் தூணில் அவள் காலைமடித்த கோலத்தில் சேறுபடிந்த பழங்கால மரச்சிற்பமாக நின்றிருந்தாள் . செதுக்கல் முகம், நகைகள், மூடிய கண்கள் . கனவுகளுக்கே உரிய துல்லியத்துடன் அனைத்தும் என் மனத்தில் பதிந்தன. நான் மீண்டும் நீரைப் பார்த்தேன் . அலைகள் அழிந்து கண்ணாடிப்பரப்பாக நீர் நின்றது .அதில் அவள் முகம் உயிர்க் கோலத்துடன், உதடுகள் துடிக்க கரிய கண்கள் மன்றாட என்னைப் பார்த்தது .அது கோருவதென்ன என்று எனக்கு புரிந்தது . என்னைத் திறந்து விடு என்னைத் திறந்துவிடு.

கூரையை மோதியபடி புறா சிறகடித்துச் சுற்றிவர கட்டிடமே பதறித்தவிப்பது போலிருந்தது . கண்ணீர் நிரம்பிய கண்களிலிருந்து என் பார்வையை அகற்றமுடியவில்லை .துக்கத்தால் என் தொண்டை இறுகி அடைத்திருந்தது . நீரை நோக்கிக் குனிந்து ,தொடப்போன கணத்தில் சட்டென்று எகிறிப் பின்வாங்கி நேராக வாசலை நோக்கி ஓடினேன். என் பின்னால் புறா சிறகடித்துப் பதறியபடி பறந்துவந்தது .வெளியே குதித்து, முற்றத்தில் ஓடி, சரிவில் பாய்ந்து சென்றேன். வெகுதூரம் ஓடியபிறகு மங்கலான தருவைப்புற்கள் காற்றில் சிலுசிலுக்கும் வெளியில் நின்று மூச்சிரைத்தேன்.
அக்கணம் என்னை மிக மிக வெறுத்தேன். ஒருகணம் , அந்தத் தயக்கத்தைத் தாண்டியிருந்தேன் என்றால் ….. மீண்டும் திரும்பிச்சென்று அவளை மீட்பது குறித்து என் மனம் எண்ணியது .ஆனால் உடனே உடல் சிலிர்த்துத் தூக்கிபோட்டது . சரிவில் என் காரை நோக்கித் தள்ளாடியபடி விரைந்தேன்.
அக்குளத்தின் நீருக்குள் வரிசைவரிசையாகக் கண்ணீருடன் மன்றாடும் கண்களும் , துயரத்தில் துடிக்கும் உதடுகளும் கொண்ட எண்ணற்ற பெண்களைக் கண்டேன் .

- தினமணி தீபாவளி மலரில் வெளிவந்த கதை

கருத்துகள் இல்லை: