கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

மொழிப் பயிற்சி – 58 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

விபசாரிக்குத் தமிழில் பரத்தை என்று பெயர். இதற்கு நிகரான ஆண்பாற் சொல் பரத்தன் என்று தமிழில் இருக்கிறது. "நண்ணேன் பரத்த நின் மார்பு' (தலைவி கூற்று) எனும் சங்கத் தொடர் காண்க. சிலப்பதிகாரத்தில் இருபாலர்க்கும் ஏற்பப் பொதுமையில் பரத்தர் எனும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. "வம்பப் பரத்தர் வறுமொழி யாளர்' என்பது சிலம்பு. ஆதலின் தமிழில் பரத்தை - பரத்தன் இருபாற் சொற்களும் உண்டு எனக் கண்டு மகிழ்க. விதவைக்குத் தமிழ்ச் சொல் கைம்பெண். இச்சொல்லை நீட்டி கைம்பெண்டாட்டி ஆக்கி, இது மருவி கம்மனாட்டி என்று பேச்சு வழக்கில் உள்ளது. திட்டுகிறபோது, "போடா கம்மனாட்டி' என்றோ, "கம்மனாட்டிப் பயலே' என்றோ வழங்குதலும் காண்கிறோம். ஆகவே கைம்பெண் (விதவை) எனும் சொல்லுக்கு ஆண்பால் - கைம்(பெண்)பயல் என்பதே ஆகும்.

மீண்டும் சில வாக்கியப் பிழைகள் தொலைக்காட்சிச் செய்தியில் ஒருநாள், "வன்முறைத் தாக்குதல்களுக்கு உயிரிழந்தனர்' என்று படிக்கப்பட்டது.

தாக்குதல்களுக்கு உயிரிழந்தனரா?

தாக்குதல்களால் உயிரிழந்தனரா?

இரண்டாவதுதான் பொருத்தமாக உள்ளது. தாக்குதலுக்குப் பலி ஆயினர் என்னும்போது வாக்கியம் சரியாகும். இரண்டு வகையாலும் சொல்லிப் பாருங்கள். வேற்றுமை புலப்படும்.

மற்றொரு செய்தி: "ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் கொள்ளை'. இதைக் கேட்டவுடன், அடுக்குமாடி வீடுகளில் ஓரடுக்கு உண்டா? குறைந்தது இரண்டு அடுக்காவது இருக்குமே என்று நினைக்கத் தோன்றியது. ஒரு என்பதை அடுக்கு எனும் சொல்லோடு இணைத்துக் காண்பது இயல்பாக எழும் எண்ணமே. இவ்வாக்கியத்தை, "அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கொள்ளை' என்று எழுதினால் - படித்தால் பொருள் உணர்த்துதலில் பிழையின்றி அமையும். சற்றே கவனம் கொள்ளுதல் வேண்டும்.

ஓர் இலக்கியத் திங்களிதழில் ஒரு வாக்கியம்.

"இதெல்லாம் நடைமுறை நியாயங்கள்'. இத்தொடர் சரியா? இது என்பது ஒருமை. நியாயங்கள் பன்மை. இவையெல்லாம் நடைமுறை நியாயங்கள் என்று எழுதியிருக்க வேண்டும். (இப்படி நுட்பம் காண்பது நடைமுறை நியாயமா என்று முணுமுணுக்காதீர்)

மற்றொரு திங்களேட்டில், "எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும், மக்கள் உந்தாற்றல் பெருகிறார்கள்' என்று கண்டோம். இவ்வாக்கியத்தில் இரண்டு பிழைகள். இடர்ப்பாடுகள் என்று ஒற்றுச் சேர்த்து எழுத வேண்டும். மற்றது, உந்தாற்றல் பெறுகிறார்கள் என்று (பெறுதல்) எழுத வேண்டிய இடத்தில் பெருகிறார்கள் என இடையினம் (பெருகுதல்) போட்டது பிழை. உந்தாற்றல் எனும் அருஞ்சொல் எழுதவல்லார் பெறுதலைப் பிழையாக்கலாமா?

அரித்துவார் கங்கையின் பெருக்கோடு இமயமலையின் மடியில் (அடிவாரத்தில்) அமைந்த இயற்கையெழில் செறிந்த இடம். அந்த ஊரைப் போல் மனத்திற்கு அமைதி தரும் மற்றொரு ஊர் பற்றி எழுதியுள்ள ஓர் எழுத்தாளர், "கங்கையில்லாத ஹரித்துவாரைப் போன்ற மனதுக்கு அமைதியளிக்கும் இதமான சூழ்நிலை' என்று குறிப்பிட்டுள்ளார். ஹரித்துவாரில் கங்கை ஓடவில்லை என்பதான ஒரு கருத்தும் இவ்வாக்கியத்தில் ஏற்படக் கூடுமன்றோ? இதனைத் தெளிவாக எப்படி எழுதலாம்?

"மனத்திற்கு அமைதியளிக்கும் இதமான - ஹரித்துவாரைப் போன்ற சூழ்நிலை - ஆனால் கங்கை மட்டும் இல்லை' என்று எழுதலாமே?

"மக்காவ்' என்பது ஒரு தீபகற்ப நாடு. இந்நாட்டைப் பற்றி எழுதிவரும் ஒருவர், மக்காவில் - என்று தொடங்கி ஒரு செய்தி. மக்கா என்று அரபுநாட்டில் ஓர் ஊர் உண்டே! முகம்மது நபி பிறந்தது மக்காவில். வெறியர்களால் துரத்தப்பட்டு மதீனா சென்றார். ஆதலின் மக்காவில் என்று எழுதும்போது மக்கா என்ற ஊரின் பொருள் தோன்றி வரும். பின் எப்படி எழுதலாம்?

"மக்காவ்' இல் என்று எழுதலாம். இது சற்றே கடினமாகத் தெரிகிறது. சற்று விரிந்து அமையினும், மக்காவ் நாட்டில் என்று எழுதுவதே பொருத்தமுடையதும், பிழையற்றதும் ஆகும்.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள்

தமிழ் ராம் இவ்வாறு கூறியுள்ளார்…
கவிக்கோ ஞானச்செல்வன் - இதில் "ஞான" என்கிற சொல் சரியான தமிழ் சொல்லா? அல்லது சமஸ்கிருதத்திலிருந்து மருவி வந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ