கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

விருதுகளை ஒரு அங்கீகாரமாக கருதவில்லை - நீல.பத்மனாபன்

தமிழில் மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான நீல. பத்மநாபன் தமிழில் ஓர் அசலான படைப்பாளி. இதுவரை ''தலைமுறைகள்’'' ''தேரோடும் வீதி'' ''பள்ளிக் கொண்டபுரம்'' ''உறவுகள்'' உள்ளிட்ட இருபது நாவல்களும், 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். இதில் ஒரு நாடகத்தையும் சேர்த்துக் கொள்வது அவசியம்.

2004-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்ற இவர், தமிழிலிருந்து ஆங்கிலம், மலையாளத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்ப்புகளிலும் இயங்கி வருகிறார். திருவனந்தபுரத்தில் 1938-ல் பிறந்த நீல.பத்மநாபன் மின்வாரியத்துறையில் இன்ஜினீயராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது துணைவியார் பெயர்: கிருஷ்ணம்மாள். இவரது மகள் வழிப் பேரன் பள்ளி வயதிலேயே ஆங்கிலத்தில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறான். பேரன் ஒரு லண்டன் வாசி. அந்தக் கதைத் தொகுதிக்கு நீல.பத்மநாபன் முன்னுரையும் வழங்கி இருக்கிறார். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் பதவி உள்ளிட்ட பல பதவிகளில் இயங்கியவர். ராஜராஜன் விருது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், ருஷ்யன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

இதுவரை நீல.பத்மநாபன் எழுதி அச்சில் வெளி வந்த பக்கங்கள் மொத்தம் 6467. இவரது சமீபத்திய நாவலான ''இலையுதிர் காலம்'' இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. இவரை பற்றிய டாக்குமெண்டரியை சாகித்ய அகாதெமி இயக்கி வெளியிட்டிருக்கிறது. இந்த வருடத்திற்கான (2007) சாகித்ய அகாதெமி விருது இவரது ''இலையுதிர் காலம்'' நாவலுக்கு வழங்கப்பட்டிருப்பதை ஒட்டி இச்சந்திப்பு திருவனந்தபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நிகழ்ந்தது. ''எல்லோரையும் போலவே ஓர் எழுத்தாளனுக்கும் தெரியாத விஷயங்கள் பல இருக்கும். அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதல்ல ஒரு சிறந்த நேர்காணல். அவனுக்குத் தெரிந்த அனுபவங்களை அவனது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் அளவில் அமைவதே ஒரு தேர்ந்த நேர்காணல்'' என்ற அளவீட்டில் இயங்கும் நீல.பத்மநாபன் அந்த வரம்பில் நின்றே பல கருத்துக்களை இந்நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

யாருடைய மனதையும் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இந்த நேர்காணல் முழுவதும் பத்மநாபன் அதிகமாக உச்சரித்த வார்த்தைகள் ''இதை நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை'' என்பது. இருந்தும் சூசகமாக பல தகவல்களை அவர் இதில் பதிய வைத்திருக்கிறார் என்றேபடுகிறது

தீராநதி:

இந்த வருடத்திற்கான சாகித்ய அகாதெமி விருது உங்களின் ''இலையுதிர் காலம்'' நாவலுக்குக் கிடைத்தவுடன் நீங்கள் சில பத்திரிகைகளுக்கு அளித்த நேர்காணல்களில் ''இது எனக்கு காலம் கடந்து கிடைத்த அங்கீகாரம்'' என்று சொல்லி இருக்கிறீர்கள். இந்த விருது பெறுவதற்கு முன்பாகக் கூட நீங்கள் சமகால தமிழிலக்கியப் பரப்பில் க.நா.சு.போன்ற விமர்சகர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் எழுத்தாளராகவே இருந்திருக்கிறீர்கள். ஆங்கிலம், ருஷ்யன், ஜெர்மன் மொழிகள் உட்பட, பல்வேறு மொழிகளில் உங்களின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான கவனத்தை உங்களுக்கு உண்டாக்கிக் கொடுத்திருக்கிறது. இருந்தும் ஏதோ ஒரு மனநிலையில் நீங்கள் அப்படிக் குறிப்பிட நேர்ந்துள்ளது. விருதுகள் என்பது உண்மையாகவே ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் தருகிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

நீல.பத்மநாபன்:

ஓர் எழுத்தாளனுக்கான அங்கீகாரமாக இந்த விருதுகளை நான் கருதவில்லை. ஏனென்றால், ஓர் எழுத்தாளன் தன் படைப்பை படைக்கும் போது இந்த விருது, பதவி, பட்டம் பற்றியெல்லாம் நினைத்துப் பார்ப்பதே கிடையாது. ஓர் எழுத்தாளன் தன் உள்ளக்கிடக்கையில் படிந்து கிடப்பதை தன்னுடைய எழுத்துகள் மூலமாக எழுதுகிறான். அப்போது இந்த மாதிரியான லௌகீகமான விஷயங்கள் எல்லாம் அவனது மனதில் வரவே வராது. ஒருவித மனக் கட்டாயத்தின் பேரில்தான் அவனது எழுத்து வடிவம் கலைப்படைப்பாக உருவாகிறது. எந்த ஒரு விஷயத்தையும் எழுத்தாளன் என்பவன் தனக்காக செய்தாலும்கூட அவனது ஆத்ம திருப்திக்காக செய்தாலும் கூட அதை அவன் செய்து முடித்த பிற்பாடு அதிலிருந்து விலகி நின்று ஒரு வாசகனாக பார்க்கின்ற போது அந்தப் படைப்பு எந்த அளவிற்குச் சரியாக வந்திருக்கிறது என அறியத்துடிக்கின்ற மனநிலை எல்லா கலைஞனுக்குள்ளும் இருக்கிறது. அப்படைப்பு பிறத்தியார் பார்வையில் எப்படிப் படுகிறது? அவர்கள் இதை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுத்தாளனுக்குள் இயல்பாக இருக்கவே செய்கிறது. என்னதான் நான் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன், விருதுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை என்று சொன்னாலும் அவரது உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் கிடக்கவே செய்யும். ஒரு படைப்பை படித்துப் பார்த்துவிட்டு ஒரு சாதாரண வாசகனாக இருந்தாலும் அல்லது பரிசளிக்கும் ஒரு ஸ்தாபனமாக இருந்தாலும் ஒரு கருத்தைச் சொல்லும்போது நமக்குள் ஒரு சந்தோஷம். இல்லை, இந்த இடத்தில் இப்படி இல்லாமல் மாற்றிச் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லும் போது, எழுத்தாளன் தன்னை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள அது உதவியாக அமைகிறது. ஆக, அங்கீகாரம் என்பதை விருதுகள் மூலமும் சொல்லலாம். அல்லது சாதாரண வாசக கடிதத்தின் மூலமும் சொல்லலாம்.

ஒருவேளை இளமைப் பருவத்தில் இந்த விருதுகள் கிடைத்திருந்தால் இன்னும் உத்வேகத்தோடு இயங்கக்கூடிய வாய்ப்புகள் எனக்கு இருந்திருக்கலாம். இளமைக் காலகட்டத்தைத் தாண்டி நாம் வந்து விட்டோம் என்பதால் கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் இன்றைக்கு நம்மைத் தேடி வருகின்ற போது அதை நாம் நிராகரிக்க வேண்டிய தேவையும் இல்லை.

என்னுடைய ''தலைமுறைகள்'' நாவல் வெளிவந்த போது தலைசிறந்த பத்துத் தமிழ்நாவல்களில் ஒன்றாக க.நா.சு. குறிப்பிட்டு எழுதி இருந்தார். இன்னும் சில பத்திரிகைகள் எழுதின. அப்போதே இதற்கு சாகித்ய அகாதெமி விருது கிடைக்கப் போகிறதென்று பேசினார்கள். அதற்குப் பிறகு ''பள்ளிக் கொண்டபுரம்'' வெளிவந்த போது இதையே சொன்னார்கள். ஆனால் அதற்கெல்லாம் கிடைக்கவில்லை. அதற்காக நான் வருந்தவும் இல்லை. கடந்த ஐம்பது ஆண்டு காலமாக தொடர்ந்து சொல்லப்பட்ட விஷயம். இப்போது நடந்தேறி இருக்கிறது, அவ்வளவுதான்.

''தலைமுறைகள்'' நாவல் வெளிவந்தபோது எனக்கு முப்பது வயது. இன்றைக்கு எனக்கு எழுபது வயது. உண்மையிலேயே சொல்லப் போனால் யார் மீதும் எனக்கு புகார் இல்லை. இந்த விருது மூலம் அந்தப் படைப்பானது பரவலாக வாசிக்கப்படுமானால் அந்த மகிழ்ச்சியே அசலானது. இந்த விருது மூலம். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட, என் நண்பர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியின் அளவு அதிகம். ''எப்போதோ கிடைக்க வேண்டியது இப்போதாவது கொடுத்தார்களே'' என்று அவர்கள் என்னிடம் மனம் மகிழச் சொல்லும் போது அதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தீராநதி:

நீங்கள் பேசியதிலிருந்து எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. கேள்வி என்பதை விட சந்தேகம் என்று கூடச் சொல்லலாம். வெளி நாடுகளில் ''நோபல்’ மாதிரியான ஒரு பரிசு ஓர் எழுத்தாளனுக்கு வழங்கப்படுகின்ற போது அவனது படைப்பைப் பற்றிய பேச்சு, வாசிப்பு, உரையாடல் என்பது முன்பைக் காட்டிலும் பன்மடங்கு கூடுகிறது. ஆனால் இந்திய அரசால் வழங்கப்படுகின்ற இந்த சாகித்ய அகாதெமி விருதின் மூலம் பரவலான வாசிப்பு என்பது உண்டாகும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அன்றைக்கு ஒரு சிறந்த படைப்பிற்குக் கொடுக்கத் தவறி விட்டோமே என்பதற்காக பிறகான காலத்தில் ஏதாவது ஒன்றிற்குத் தந்து சரி செய்து விடுவோம் என்பதற்காக விருதுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற விமர்சனக் குரலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நீல.பத்மநாபன்:

நீங்கள் சொல்வது ஓரளவுக்கு உண்மை. ஆனால் முழுக்க முழுக்க அதை உண்மை என்று என்னால் அங்கீகரிக்க முடியாது. ஏனென்றால், சாகித்ய அகாதெமி என்று நாம் சொல்வது ஏதோ ஒரு கட்டடம் அல்ல. எல்லா இந்திய மொழிகளிலும் அது இயங்குகிறது. தமிழுக்காக இயங்கும் அதன் சட்ட திட்டங்களைப் பார்த்தால் அவ்வப்போது அது புதுப்பிக்கப்படுகிறது. அந்தந்தக் காலத்தில் அதற்கான ''ஜூரி நம்பர்ஸ்'' இருக்கிறார்கள். ''தலைமுறைகள்'' நாவல் வெளிவந்த காலத்தில் பதவியில் இருந்த ''ஜூரி நம்பர்ஸ்'' ''இலையுதிர் காலம்'' நாவல் வெளி வந்த காலத்தில் இல்லை. அன்றைக்கு இருந்தவர்கள் வேறு. இன்றைக்கு எனக்கு விருது வழங்கி இருக்கும் ''ஜூரி நம்பர்ஸ்'' வேறு. அதனால் அன்றைக்கு ஒரு படைப்புக்குக் கொடுக்கத் தவறியதனால் இன்றைக்கு இந்தப் படைப்புக்குக் கொடுத்து சரி செய்து விடுகிறார்கள் என்ற கருத்து சும்மா பேச்சுக்காக சொல்லப்படுவது. அதில் உண்மை இல்லை. அன்றைக்கு என்னுடைய ''தலைமுறைகள்'' நாவல் வெளிவந்த போது பல்வேறு விதமான விமர்சனங்கள் அதன் மீது சொல்லப்பட்டன. ஆக, அப்படி ஒரு விமர்சனத்தை உருவாக்கிய படைப்புக்கு விருது கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று அகாதெமி நீதிபதிகள் அன்றைக்குத் தயங்கி இருக்கலாம். அதை உறுதியாகச் சொல்ல முடியாது.

வழக்கமான ஒரு ஃபார்முலாவை மீறி ஒரு படைப்பாளன் புதிய சோதனைகளை மேற்கொள்ளும் அந்தப் படைப்பை ஏற்றுக்கொள்ள பலர் தயங்கினார்கள். க.நா.சு.போல, சி.சு. செல்லப்பா போல ஒரு சிலர்தான் அந்தப் பரிசோதனையை அங்கீகரித்தார்கள். இவர்கள் ஒருவேளை சாகித்ய அகாதெமியில் இருந்திருந்தால் எனக்கு அன்றைக்குப் பரிசு கிடைத்திருக்கும். அன்றைக்கு யார் நீதிபதியாக அகாதெமியில் இருந்தார்கள் என்றே எனக்குத் தெரியாது. அல்லது என்னைவிட பிரபலமான ஒரு படைப்பாளி அன்றைக்கு வேறு யாராவது இருந்திருக்கலாம். அவர்கள் அவருக்கு அந்த விருதை கொடுத்திருக்கலாம். இவ்வளவு தூரம் மத்திய சாகித்ய அகாதெமி விருது பற்றி நாம் குறை சொல்கிறோம். ஏனைய மொழிகளில் எல்லாம் சாகித்ய அகாதெமி இருக்கிறது. மலையாள, கன்னட, தெலுங்கு சாகித்ய அகாதெமிகள் இருக்கின்றன. அவர்கள் எல்லாம் ஒழுங்காக தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார்கள் அல்லவா? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? அந்த அகாதெமிக்கு இணையான பரிசுகளை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறதா? அல்லது தனிப்பட்ட பரிசுகளை ஏற்படுத்தி இருக்கிறோமா? ஒரே ஒரு ராஜராஜன் பரிசு வைத்திருக்கிறோம். அதையும் தமக்குத் தேவையானவர்களுக்குக் கொடுத்து விட்டு நிறுத்திவிடுகிறோம் அல்லவா? கட்சி, அரசியல் எல்லாவற்றையும் மீறி ஒரு பரிசை உண்டாக்கி இருக்கிறோமா? ஒன்றைச் செய்தபிற்பாடு அதன் பாணியிலே போய் கிடைக்கும் வெற்றியை விட அதை மீறி புதியதாக ஒன்றைச் செய்து வரும் தோல்வியை விரும்புகிறவன் நான்.

தீராநதி:

இந்த விருது மூலம் பரவலான வாசிப்பு என்பது நடக்கும் என்று நம்புகிறீர்களா? அதைப் பற்றி கேட்கிறேன்?

நீல.பத்மநாபன்:

அது அந்த ஆசிரியரைப் பொறுத்து இருக்கிறது. அந்தப் படைப்பைப் பொறுத்து இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னுடைய ''தலைமுறைகள்'' ''உறவுகள்'' ''பள்ளிக்கொண்டபுரம்'' போன்ற நாவல்கள் ஏற்கெனவே ஒரு விவாதத்தை தமிழ்ச் சூழலில் உண்டாக்கி இருப்பதனால் அதை எழுதிய அதே ஆசிரியரின் படைப்புதான் இதுவும் என்று வாசகனுக்குத் தெரிய வருகின்ற போது நிச்சயம் பரவலான ஒரு வாசிப்பை அது பெறும் என்று நம்புகிறேன்.

தீராநதி:

உங்களுடைய ''தலைமுறைகள்'' நாவல் ''உத்தியோக காண்டம்'' சிறுகதை வெளி வந்த போது பரவலான எதிர்வினையை அவை சம்பாதித்தன. ''உத்தியோக காண்டம்'' சிறுகதை உங்களின் சக ஊழியர்களான மலையாளிகளிடம் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்தது. இந்த மாதிரியான எதிர்வினைகள் உங்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கின்றன.

நீல.பத்மநாபன்:

ஒரு சமூக ஜ“வி என்ற முறையில் ஓர் எழுத்தாளன் என்பவன் சமூகத்தில் வாழ்பவன். அவன் சமூகத்திலிருந்து தப்பித்துச் செல்ல அவன் ஒருபோதும் விரும்புவது கிடையாது. ஆனால் அவன் சமூகத்தில் நிகழும் பிரச்சினையை அப்படியே ஒரு புகைப்படத்தைப் போல நகலெடுப்பதில்லை. பல இடங்களில் சொல்லியும் சொல்லாமலும் அமர்ந்த முறையில் அவனது கதையை அவன் சொல்கிறான். நடப்பு வாழ்வில் ஐடியலிஸத்திற்கும் ரியலிஸத்திற்கும் உள்ள முரண்பாடுகள்தான் அவனை எழுதத் தூண்டுகின்றன. வாழ்க்கை என்பது இந்த மாதிரி இருக்க வேண்டும் என்று ஒரு ஐடியலை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நடப்பில் அந்த மாதிரி இல்லை. ரியலிஸம் என்பது முற்றிலும் வேறுமாதிரி இருக்கிறது. சமூக சீர்திருத்தவாதியாக அவன் அதைச் செய்யவில்லை. ஒரு மானுடவியலின் தனிமையில் செய்கிறான். இப்படி சமூகத்தில் இருக்கும் சில உண்மைகளை நாம் இலக்கியத்தில் மறுபடைப்பு செய்கிறோம். அப்படிச் செய்யும் போது, சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய முகங்களைப் பொறுத்திப் பார்க்கும் போது பிரச்சினை வெடிக்கிறது. யாரோ ஒருவரை என்னுடைய படைப்பு தாக்குகிறது என்பதற்காக நான் என்ன செய்ய முடியும்? உலக வாழ்க்கையை விட்டுவிட்டு வேறு ஏதாவது ஒன்றைத்தான் நான் எழுத வேண்டும். எனவே, இந்தத் தாக்குதல்களுக்கெல்லாம் நான் அஞ்சுவதே கிடையாது. இது உத்தியோக காண்டத்திற்கு மட்டுமல்ல் ‘தலைமுறைகள்’ நாவலுக்கு மட்டுமல்ல் ''தேரோடும் வீதி'' நாவலுக்கும் இதே கதிதான்.

எங்கு சென்றாலும் ஒரு வட்டம் இருக்கும். ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு வட்டம் இருக்கும். அதை மீறி வருவதென்பது இளம் எழுத்தாளருக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதை எழுத்தாளனுக்கு மட்டுமான பிரச்னை என்று நான் சொல்லவில்லை. உலகத்திலேயே அதிக இளம் விஞ்ஞானிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு இந்தியா என்று சொல்கிறார்கள். இந்தப் பிரச்சினை அவர்களுக்கும் பொருந்தும். ஓர் இளம் விஞ்ஞானி தன்னுடைய ஆராய்ச்சியை ஒப்படைக்கும் போது, அந்த ஆராய்ச்சி அவனது பெயரில் வராமல் வேறு ஒருவரின் பெயரில் வெளிவரும். இந்த மாதிரி ஒரு விஷ வட்டத்தை மீறி, சுதந்திர இந்தியாவில் ஓர் இளம் விஞ்ஞானி வெளியில் வரவேண்டி இருக்கிறது. ஒருமுறை பேராசிரியர் நாச்சிமுத்து சொன்னார் ''இந்தத் தடைகளையெல்லாம் மீறி ஒரு காலகட்டம் போய் வேறு ஒரு காலகட்டத்தில் ஒரு புதிய தலைமுறை வந்தால் இந்த நாவல் பேசப்படும்'' என்று. என்னுடைய ''தலைமுறைகள்'' நாவலை பற்றி அவர் அப்படி குறிப்பிட்டார். பிறர் முகங்களையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்ட எழுத்தாளர்கள் தங்களுடைய சுய முகத்தை (நான் யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை) இந்த நாவலில் பார்த்தபோது அதிர்ந்து போனார்கள்.

தீராநதி:

மலையாளத்தில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற அய்யப்ப பணிக்கரின் கவிதைத் தொகுப்பை நீங்கள் தமிழில் மொழி பெயர்த்தீர்கள். அதற்காக உங்களுக்கு மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதும் கிடைத்தது. மூல மொழியில் விருது வாங்கிய அதே படைப்பை மொழி பெயர்த்ததற்காகவும் ஒரு விருதைக் கொடுப்பது சரியானதா? ஒரு படைப்புக்கு இரு விருதுகள் என்பது ஆரோக்கியமானதா?

நீல.பத்மநாபன்:

''பள்ளிக் கொண்டபுரம்'' என்ற என்னுடைய நாவலை ஒரிய மொழியில் (அந்த மொழிதானா என்று சரியாக ஞாபகமில்லை) மொழிபெயர்த்தவருக்கு சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்புக்கான விருது கிடைத்தது. ஆனால் அதைத் தமிழில் சுயமாக எழுதிய எனக்குக் கிடைக்கவில்லை. நேஷனல் புக் டிரஸ்ட் அதை ஜெர்மன், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

அய்யப்ப பணிக்கரின் கவிதைத் தொகுதி மலையாளத்தில் சாகித்ய அகாதெமி விருதினை பெற்றவுடன் அவர் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்பினார். அதுவும் நான்தான் அதைச் செய்யப் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அய்யப்ப பணிக்கரின் கவிதைகளை மொழிப் பெயர்ப்பதென்பது கஷ்டமான காரியம். அவர் சமஸ்கிருதம் மாதிரி உயரிய மொழியை பயன்படுத்துவார். அதே போல கொச்சை மொழிகளையும் தன் கவிதைகளில் பயன்படுத்துவார். நல்ல படைப்புகளை நாம் படிக்கும் போது அது நம் மொழியிலும் வர வேண்டும் என்ற என்னுடைய தனிப்பட்ட ஆவலும் அதில் இணைந்ததால்தான் நான் அதைச் செய்தேன். அது நமக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்பித்தான் செய்தேன். அவரும் பல விஷயங்களில் உதவி புரிந்தார். பல்வேறு தளங்களில் எனக்கு தைரியமூட்டினார். அது ஒரு பெரிய சவால். மொத்தம் மூன்று வருடங்கள் அந்தக் கவிதை நூலை நான் மொழிபெயர்க்க எடுத்துக் கொண்டேன். இந்த விஷயத்தில் நான் க.நா.சு.கட்சி. ஒரு படைப்பை மூல மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கும்போது நம்முடைய ''பொது தமிழ்'' தன்மையில் அதைக் கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. க.நா.சு.வும் இதே கருத்துடையவர்தான். மூல மொழியின் நடை அழகு கெடாமல் அதில் கொஞ்சமாவது மொழிபெயர்ப்பில் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும்.

தகழி சிவசங்கரன் பிள்ளையின் ''இரண்டு இடங்கழி'' என்ற நாவலை ராமலிங்கம் பிள்ளை தமிழில் மொழிபெயர்த்தார். ''செம்மீன்'' என்ற நாவலை சுந்தர ராமசாமி மொழிபெயர்த்தார். சுந்தரராமசாமியின் மொழிபெயர்ப்புக்குத்தான் பரவலான அங்கீகாரம் கிடைத்தது. தகழியின் மொழி நடை அழகை கொஞ்சமாவது தமிழில் கொண்டு வர வேண்டும் என்று சுந்தர ராமசாமி சிரத்தை எடுத்துக் கொண்டார். ஆனால் ராமலிங்கம் பிள்ளை பொதுத் தமிழில் அப்படியே மொழிபெயர்த்திருந்தார்.

தீராநதி:

என்னுடைய கேள்வி ஒரே படைப்புக்கு இரு விருதுகள் கொடுப்பது ஆரோக்கியமானதா என்று கேட்கிறேன்?

நீல.பத்மநாபன்:

அது ஏற்கெனவே மூல மொழியில் விருது கொடுத்திருந்தாலும் அது மலையாளத்தில் தானே கொடுக்கப்பட்டது. தமிழ் வாசகர்கள் அதைப் படிக்க வாய்ப்பு என்பது எப்போது வரும். அது தமிழில் மொழிபெயர்க்கப்படும் போதுதானே வரும். ஆக, சிரத்தையோடு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு படைப்புக்கு இன்னொரு விருது கொடுப்பது என்பதில் தவறில்லையே?

தீராநதி:

மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் சொந்த படைப்பிற்கான கற்பனைத் திறன் அடிபட்டு விடும் என்ற ஒரு கருத்து தமிழில் நிலவுகிறது. நீங்கள் இருமொழிகளில் (ஆங்கிலம், மலையாளம்) இருந்து மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் ஊடே ஒரு படைப்பாளர் என்ற முறையில் இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

நீல.பத்மநாபன்:

அந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையில் சொல்லப் போனால் நேரம்தான் வேண்டும். க.நா.சு. உலகப் படைப்புகளையெல்லாம் தமிழுக்குக் கொண்டு வந்ததன் மூலம் அவரது பார்வை இன்னும் விசாலமானது என்றுதான் நினைக்கிறேன். ஒரு வகையில் சொல்லப் போனால், மொழிபெயர்ப்பில் ஈடுபட்டதன் மூலம் அது என் எழுத்து அனுபவத்தையும், கதை அனுபவத்தையும் வளர்த்திருக்கிறது என்று தான் சொல்வேன்.

தீராநதி:

தமிழ்மொழி பேசுகின்ற நிலப்பரப்பைத் தாண்டி மலையாள நிலப்பரப்பில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் நீங்கள். இப்படி ஒரு மொழியில் எழுதிக் கொண்டு வேறு மொழி புறச்சூழலில் வசித்துக் கொண்டு உள்ள எழுத்தாளன் என்றளவில் இருக்கும் சாதக பாதகம் என்ன என்று உணருகிறீர்கள்?

நீல.பத்மநாபன்:

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஆரல்வாய்மொழி பக்கத்தில் இருந்த செக்போஸ்ட்டை தூக்கிக் கொண்டு போய் களியக்காவிளையில் வைத்து விட்டார்கள். அங்கிருந்தவர்களுக்கும் இங்கிருந்தவர்களுக்கும் உள்ள பழைய கொடுக்கல் வாங்கல் முறையெல்லாம் அப்படியேதான் இன்றைக்கும் இருந்து வருகிறது. பிரிவினை சமயத்தில் ஒரு ஊடாட்டம் ஏற்பட்டுவிட்டது. ஒரு திரிசங்கு நிலையில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் என்று சொல்லலாம். தூய தமிழில் இருந்து வழக்கொழிந்து போன பல அறிய சொற்கள் இந்த திருவனந்தபுரம் பகுதிப் புழக்கத்தில் இன்றைக்கும் இருந்து வருகிறது. தமிழ்நாடு என்று சொல்கின்ற தமிழ் நிலப்பரப்பில் வழக்கொழிந்து போய்விட்ட பல தமிழ் வார்த்தைகளை இன்றைக்கும் இங்குள்ளவர்கள் சர்வசாதாரணமாக வீடுகளில் பேசி வருகிறார்கள். ''திரைகடல் ஓடியும் திரவியம் தேடு'' என்ற பழந்தமிழ் பாடல்களிலுள்ள ''திரை'' என்று கடல் அலையைக் குறிக்கும் வார்த்தை இங்கு இப்போதும் புழக்கத்தில் இருக்கிறது. இங்குள்ளவர்கள் யாரும் ''அலை'' என்று சொல்லமாட்டார்கள். திரை என்றுதான் சொல்வார்கள். இப்படி பல சாதகமான ஒரு சூழல் உண்டு. எதையும் விலகி நின்று பார்க்கும் ஒரு பார்வை எங்களுக்கு மட்டுமே வாய்க்கிறது. ''உறவுகள்'' நாவலுக்கு அண்ணாமலை செட்டியார் விருது கிடைத்த போது சிலர் ''விருது தமிழ்நாட்டை விட்டு வெளியில் போய்விட்டது'' என்று கூடச் சொன்னார்கள். ''நேட்டிவிட்டி'' என்பதுதான் இங்கு பிரச்சினை. தமிழ்நாட்டில் போய் ''நேட்டிவிட்டி'' சான்றிதழ் கேட்டால் ''நீ கேரளத்தில்தானே பிறந்தாய் அங்க போய்க் கேள்'' என்கிறார்கள். இங்குள்ளவர்களிடம் கேட்டால் ''நீங்களெல்லாம் தமிழர்கள்தானே உங்களுக்கு எப்படி இங்கு ''நேட்டிவிட்டி'' சான்றிதழ் கொடுக்க முடியும். நீ போய் தமிழ்நாட்டில் கேளு'' என்கிறார்கள். நாம் இந்தியாவில் இருக்கிறோம் என்று சொல்கிறோம். ''எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்று நாம் சொல்கிறோம். ஆனால் இந்த மாதிரி உள்ள கொஞ்ச ஜென்மங்களும் இந்த நாட்டில்தான் இருக்கிறார்கள். கேரளத்தில் இந்தப் பிரச்சினையை நான் சொல்கிறேன். இதே மாதிரி ஆந்திராவில் இருக்கிறது. கர்நாடகத்தில் இருக்கிறது. கல்கத்தாவில் கூட தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை விட புலம் பெயர்ந்த தமிழர்கள் விலகி நின்று தமிழைப் பார்க்கிறார்கள். அதிதப் பற்றோடு தமிழை நேசிக்கிறார்கள்.

அப்புறம் இன்னொரு விஷயம். இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழா நடந்த போது, மத்திய அரசாங்கத்திலிருந்து எல்லா மாநிலங்களுக்கும் ''இரவீந்திரநாத் ஆடிட்டோரியம்'' கட்ட அத்தனை செலவுக்கான முழுத் தொகையையும் கொடுத்தார்கள். கேரளத்தில் கட்டி இருக்கிறார்கள். கர்நாடகத்திலும் கட்டி இருக்கிறார்கள். இந்தியாவின் எல்லா மாநிலத் தலைநகரங்களிலும் அந்த ஆடிட்டோரியம் இருக்கிறது, தமிழ்நாட்டைத் தவிர. தமிழ்நாடு அரசு எங்களுக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டது. நமக்கு மகாகவி பாரதி என்ற மாபெரும் கவிஞர் இருக்கலாம். ஆனால் ஒரு பொது அரங்கமாக நமக்குக் கிடைக்க வேண்டியதை நாம் ஏன் இழக்க வேண்டும்?. இந்த நிதியை பயன்படுத்தாமல் விட்ட ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இதை இங்கு இருப்பதனால்தான் நாங்கள் கேள்விப்பட முடிகிறது. கேரளத்தில் உள்ள இந்த ஆடிட்டோரியத்தில் தினமும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதே மாதிரி பத்திரிகைகள். மலையாளத்தில் வெளிவருகின்ற மலையாள மனோரமா ''பாஷா போஷ’னி'' என்ற பத்திரிகையை இலக்கியத்திற்காகவே நடத்துகிறது. அதை மீறி ''மாத்ருபூமி'' ''கலைகௌமுதி'' என்ற பத்திரிகைகள் விற்பனைக்காக தங்களின் தரத்தை தாழ்த்திக் கொள்ளாமல் செயல்படுகின்றன. சினிமாவைப் பற்றி பல கட்டுரைகள் இதில் வரும். ஆனால் தரமிக்கதாக இக்கட்டுரைகள் இருக்கும். இதே மாதிரியான பத்திரிகைகளை தமிழ்நாட்டு எல்லையை விட்டு வசிப்பதனால் மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டில் ஒரு பத்திரிகை சினிமாவைப் போட்டு ''பாப்புலர்'' ஆகிவிட்டதென்றால், அதற்கு முன்னால் தரமான பத்திரிகையாக இருந்தவர்களும் கூட விற்பனைக்காக உடனே அதே போல ''இமிடேட்'' செய்து கொள்கிறார்கள். நான் சொல்லும் பத்திரிகையெல்லாம் தூய்மையான இலக்கியத்தை மட்டுமே வெளியிடுகின்ற பத்திரிகைகள் அல்ல; அதிலும் தினசரிக்கான நாட்டு நடப்பு சம்பவங்களும் நிகழ்ச்சிகளும் வரவே செய்கின்றன. ஆனால் தமிழில் வருவதைப்போல மட்டமாக அல்ல.

தீராநதி:

தமிழில் வெளிவரும் மசாலா பத்திரிகைகள் போலவே மலையாளத்திலும் ''பைங்கிளி சாகித்யம்'' என்ற வகையான எழுத்துகள் வெளிவரும் பத்திரிகைகள் உண்டல்லவா?

நீல.பத்மநாபன்:

ஆமாம். மசாலாத்தனமான எழுத்துகளை, ரொமண்டிசைஸ் கதைகளை, கிளுகிளு எழுத்துகளை வெளியிடும் பத்திரிகைகள் மலையாளத்தில் - நீங்கள் குறிப்பிடும் பைங்கிளி சாகித்யம் பாணி பத்திரிகைகள் வரவே செய்கின்றன.

தீராநதி:

தமிழில் வெளிவரும் வெகுஜன பத்திரிகைகளை விமர்சிக்கும் எழுத்தாளர்கள் மலையாளத்தில் இந்த மாதிரி மரபு கொண்ட ஓர் எழுத்து வகை இருப்பதை சொல்வதும் இல்லை, விமர்சிப்பதும் இல்லையே ஏன்?

நீல.பத்மநாபன்:

பைங்கிளி சாகித்யம் மாதிரியான பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்கள் யாரும் இலக்கிய அந்தஸ்துக்கான போட்டிகளில் பங்கேற்று தங்களுக்கும் அதே மாதிரியான அங்கீகாரம் தேவை என்று இங்கு சொல்வதில்லை.

தீராநதி:

தொன்மைக்காலம், மத்தியக் காலம், மறுமலர்ச்சி யுகம், பரோக், ரொமாண்டிசிஸம், நவீனத்துவம் என்று தத்துவ வரலாற்றை ஆறு பகுதிகளாகப் பிரித்து ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு தத்துவ காலத்திற்கேற்ப கிளாஸ’சிஸம் தொடங்கி பல்வேறு வகையான எழுத்து முறைகள் கையாளப்பட்டு வந்திருக்கிறது. இதில் ''ரியலிஸம்'' என்று சொல்லக் கூடிய எழுத்துபாணி தமிழில் அதிகமாகக் கையாளப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் கூட ''சோஷ’யல் ரியலிஸம்'' என்று சொல்லக் கூடிய எழுத்து வகையை (வட்டார வழக்கு) அதிகமாக கையாண்டிருக்கிறீர்கள். இந்தப் போக்கு 1930-ல் அமெரிக்கக் கலைத்துறையில்தான் முதன்முதலாக வேர்விட்டது. அதற்குப் பிற்பாடு அதையட்டி சோரியலிஸ்ட் ரியலிஸம், மேஜிக் ரியலிஸம், மோதிக்கல் ரியலிஸம் என்று ரியலிஸம் தன் எல்லையை விரிக்கத் தொடங்கியது. ஆக, ரியலிஸ எழுத்துப் பணி என்பதுகூட ஒரு வகையான இஸத்தைச் சேர்ந்ததுதான். ஆனால் தமிழில் இந்த இஸத்தை ஒட்டி எழுதும் எழுத்தாளர்கள் மற்ற எழுத்துக்கள் ஏதோ இஸங்களை முன்வைத்து எழுதுவதாகவும் இவர்களின் யதார்த்த பாணியான எழுத்து எந்த இஸத்தையும் சாராத ''அசல்'' தன்மையான எழுத்தென்றும் பேசுகிறார்கள். நீங்கள் கூட ''இஸங்களைப் பற்றிய awareness என்பது ஓர் எழுத்தாளனுக்கு அவசியம் தேவை'' என்று சொல்லிவிட்டுப் பிறகு இந்த மாதிரியான இஸங்களை ஒட்டிய உத்திகள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது என்கிறீர்கள்? அப்போது யதார்த்த வகையான எழுத்தென்பது எந்த இஸத்தையும் சாராதது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

நீல.பத்மநாபன்:

இலக்கியம் என்பது எந்தக் காலத்துக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் கிடையாது. அது காலத்துக்குத் தகுந்த மாதிரி மாறிக் கொண்டுதான் வரவேண்டும். மாறத்தான் வேண்டும். நேற்றைக்கு இருந்த நிலைப்பாட்டிலிருந்து எவ்வளவோ மாறிதான் இன்றைக்கு நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடக்க கால நாவல்களில் ரொமாண்டிசிஸம் என்ற வகை இருந்தது. பிற்பாடு ரியலிஸம் வந்தது. பிறகு நிறைய இஸங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. நம்முடைய தொடக்ககால இலக்கியங்களிலிருந்து தொடர்ந்து வரும் ஒரு விஷயம் காலம்-வெளி என்பது. எந்தப் படைப்பை எடுத்துக் கொண்டாலும் அது எந்தக் காலத்தில் நடந்தது? எந்த இடத்தில் நடந்தது என்பது தேவையான ஒன்று. இது எந்த இஸம் வந்தாலும் நமக்கு இவை தேவையாக இருக்கக் கூடியது. ''பரதமுனி'' நாட்டிய சாஸ்திரத்தை எடுத்துக் கொண்டாலும் ஆனந்தவர்த்தனின் ''தொன்யா லோகம்'' என்ற நாவலை எடுத்துக் கொண்டாலும் இந்தக் காலமும் வெளியும் வந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கப்புறம் நம் தமிழ் மரபோடு ஒட்டிய திணைக்கோட்பாடு. அதையட்டிய நமது மரபார்ந்த தொடர்ச்சியை பேணக்கூடிய எழுத்து. இதைத்தான் நான் முக்கியமாக எடுத்துக் கொண்டு இயங்குகிறேன். இதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் நான் எனக்குள் வகுத்துக் கொண்ட முறைமைகள் இவை. இதுதான் நமது வாசக அனுபவத்தினை மீறாத ஓர் எழுத்து முறையாக இருக்கிறது.

முதலில் படைப்புதான் வெளிப்படுகிறது. பிறகுதான் வியாக்கியானங்களும் இலக்கணங்களும் வருகின்றன. ஒருவனின் ''மனவேலை''யை நான் செய்கிறேன். ஸ்டீமோ கான்ஸ’யஸ்ஸை எடுத்துக் கொண்டாலும் சரி, ரியலிஸத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, சோஷ’யல் ரியலிஸத்தை எடுத்துக் கொண்டாலும் எதுவாக இருந்தாலும் அது படைக்கப்பட்ட பிற்பாடுதான் வருகிறது. ஆக, நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இந்த இஸங்களுக்கு என்றுமே நான் எதிரியல்ல் நானே இந்த நடப்பியல் பாணியை விட்டுவிட்டு எங்கோ நகர்ந்து நான் வந்துவிட்டேன். முதலிலேயே என்னை ஒரு நடப்பியல் பாணி எழுத்தாளர் என்று முத்திரை குத்திவிட்டார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீங்கள் எந்த இஸத்தை ஒட்டி வேண்டுமென்றாலும் எழுதலாம். ஆனால் அது வாசகனுக்குப் போய்ச் சேரவேண்டும். வாசகனுக்கு ஓர் அனுபவத்தை அது கொடுக்க வேண்டும். அப்படி நிகழாவிட்டால் எழுதி என்ன பயன் சொல்லுங்கள். இப்போது கூட ''முப்பரிமாண வகையிலான நாவல்'' என்று கூட எழுதுகிறார்கள். அது ஒரு புதுமுயற்சி என்பதால் வரவேற்கிறேன். ஆனால் அது வாசகனிடம் போய்ச்சேர்ந்து அவனுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்கிறேன் அவ்வளவுதான்.

தீராநதி:

என்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் நீங்கள் யாரையும் காயப்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடே பதிலளிக்கிறீர்கள். பொதுவான கருத்தாகத்தான் எல்லாவற்றையும் முன்வைக்கிறீர்கள். ஆனால் ஷண்முக சுப்பய்யா பற்றிய ஒரு கலந்துரையாடலில் நீங்களும் நகுலனும் இப்படிப் பேசிக் கொள்கிறீர்கள்: ''இலக்கியம் வாழ்க்கையின் அப்பட்டமான பிரதிபலிப்பு இல்லை. இதனால் இலக்கியம் வேறு. வாழ்க்கை வேறு. தற்கால இலக்கிய விமர்சனம் இப்படித்தான் இயங்குகிறது'' என்கிறார் நகுலன். நீங்களோ ''ஒரு கவிதையைப் படிக்கும்போது அதை எழுதியவனின் வாழ்க்கையையும் அதில் இணைத்துப் பார்ப்பது என்பது ''எக்ஸ்ட்ரா லிட்டரரி'' என்கிறீர்கள். நகுலன் போன்ற ஒரு படைப்பாளியிடமே முற்றிலும் மாறுபட்ட கருத்தை தைரியமாக முன்வைத்த நீங்கள் இன்றைக்கு ஏன் எல்லாவற்றையும் பொதுத் தன்மையோடு கறார்த்தனம் இல்லாமல் பதில் செல்கிறீர்கள். இந்தப் பாதைக்குள் எப்படித் தள்ளப்பட்டீர்கள்?

நீல.பத்மநாபன்:

நம்முடைய மன வார்ப்புகள், சொந்த அனுபவங்கள் போன்றவற்றை வைத்து இந்தக் கருத்துதான் சரியென்று நாம் தீர்மானிக்கிறோம். இதற்கு முற்றிலும் மாறுபாடான ஒரு கருத்து என்பதும் இங்குண்டு என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னைவிட நகுலனுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். அவர் எப்போதும் அவருடைய கருத்துகளை மாற்றிக் கொள்வதே கிடையாது. நகுலனைப் பொறுத்தளவில் இலக்கியமும் வாழ்க்கையும் வேறு வேறானதல்ல; இரண்டுமே ஒன்றேதான். முழுக்க முழுக்க ஒரு எழுத்தாளானாக மட்டுமே வாழ்ந்து மறைந்தவர் அவர். எப்போதும் நகுலனின் கருத்துக்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரிடம் பல இடங்களில் சண்டையும் போட்டு இருக்கிறேன். அதையெல்லாம் தாண்டி என் மீது அவருக்கு ஓர் அன்பு உண்டு. என்னைவிட ஷண்முக சுப்பய்யா நகுலனிடம் பல விஷயங்களுக்காக சண்டை போட்டிருக்கிறார்.

நகுலனைப் பொறுத்தளவில் தனிப்பட்ட ஆளை வைத்துக் கொண்டு அவரின் இலக்கியத் தரத்தை எடைபோட மாட்டார். நான் ''எக்ஸ்ட்ரா லிட்டரரி'' என்று குறிப்பிட்டது கூட அதை வைத்துதான்.

தீராநதி:

''எக்ஸ்ட்ரா லிட்டரரி'' என்று நீங்கள் குறிப்பிடும் பதம் இலக்கியத்திற்கு மேலும் கூடுதலான தகவல் என்ற அர்த்தத்தில்தானே?

நீல.பத்மநாபன்:

இல்லை. இலக்கியத்திற்குத் தேவையற்ற தகவல் அது என்ற அர்த்தத்தில்தான் நான் அந்தக் கருத்தைச் சொல்லி இருந்தேன். அதற்கு அப்படியும் ஓர் அர்த்தம் வரும் என்பது எனக்குப் புலப்படவில்லை. ஒருவனின் படைப்பை அவனது சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பலசமயங்களில் அது தவறான முடிவை எட்டிவிடும். ஆகவே, கூடாது என்ற அர்த்தத்தில்தான் அதை நான் குறிப்பிட்டேன். அது இலக்கியத்திற்குப் புறம்பானது என்றுதான் சொல்லி இருந்தேன்.

தீராநதி:

ஆனால் நீங்கள் இன்னொரு நேர்காணலில் ''படைப்பையும் எழுதியவனின் சொந்த வாழ்க்கையையும் சேர்த்துப் பார்க்க வேண்டுமா என்றால், ஆமாம் சேர்த்துப் பார்க்கத்தான் வேண்டும்'' என்று சொல்லி இருக்கிறீர்கள்?

நீல.பத்மநாபன்:

அப்படியா சொல்லி இருக்கிறேன்? எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. நான் என்ன சொல்கிறேன் என்றால் படைப்பில் ஒரு படைப்பாளியின் சொந்த வாழ்க்கையும் இருக்கிறது. அதை மீறி இருக்கிறது என்கிறேன்.

தீராநதி:

திருவனந்தபுரம் என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் எழுத்தாளர், கவிஞர் நகுலன்தான். பிறகு நீங்கள், ஆ. மாதவன். வாழும் போதும் சரி, மறைந்த பிறகும் சரி நகுலன் என்ற படைப்பாளிக்கு ஆகச் சிறந்த ஒரு கவிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. அவரது மரணத்திற்குக் கூட ஒரு சில படைப்பாளிகள்தான் வந்திருந்தார்கள் என்ற தகவல் வருத்தத்தை அளிக்கிறது. சக படைப்பாளியாக சக சிநேகிதராக நகுலன் குறித்த இந்தச் சூழலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீல.பத்மநாபன்:

அது ரொம்ப வேதனையான சமாச்சாரம். நானும் பல இடங்களில் இதைச் சொல்லி இருக்கிறேன். இங்குள்ள மலையாள எழுத்தாளர்கள் அவர் மறைவையட்டி நிகழ்ந்த இறுதி மரியாதையில் கலந்து கொண்டு அவருக்கு கௌரவம் செய்தார்கள். அதே போல மலையாளப் பத்திரிகைகளும் அவருக்கு உரிய முறையில் மரியாதை செய்தன. தமிழில் ''தீராநதி’ என்ற ஒரு பத்திரிகை மட்டும்தான் அவருக்கு உரிய மரியாதையை செய்திருந்தது. மற்ற யாரும் சரியான முறையில் கண்டு கொள்ளவே இல்லை. கோணங்கி உள்ளிட்ட ஓரிரண்டு எழுத்தாளர்கள் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்தார்கள். நகுலனுக்கு தமிழிலக்கியத்தில் கிடைக்க வேண்டிய உரிய மரியாதையோ அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். தமிழில் பத்திரிகைகள் மற்ற விஷயங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை ஏன் எழுத்தாளனுக்குக் கொடுக்க மறுக்கின்றன என்பது குறித்த ஓர் ஆய்வை நாம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இன்றைக்கு இருக்கிறது. அதை நிகழ விடாமல் தடுக்கும் பிரக்ஞை எது என்று நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால், இருக்க இருக்க அந்த அகலம் கூடிக் கொண்டேதான் வருகிறது. மற்ற மொழிகளில் நெருங்கி வந்து கொண்டிருக்கும் காலத்தில் நாம் மட்டும் ஏன் விலகிப் போய்க் கொண்டே இருக்கிறோம் என்று தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

தீராநதி:

தமிழ் எழுத்தாளர் என்ற முறையில் இந்தக் கேள்விக்கு மறுக்காமல் பதில் சொல்லுங்கள். தமிழகத்தில் ஓணம் பண்டிகைக்கு அரசு விடுமுறை என்பது நடப்பில் இருக்கின்ற ஒன்று. ஆனால், கேரளத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரசு விடுமுறையில்லாமல் தவிப்பதாக இங்குள்ள தமிழ் மக்கள் சொல்கிறார்கள். இங்குள்ள திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் மூலம் இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா?

நீல.பத்மநாபன்:

எடுத்திருக்கிறார்கள். பொங்கல் பண்டிகை அன்று தமிழர்கள் ''ரீஜினல் ஆலிடேஸ்'' என்ற சலுகையின் கீழ் விடுப்பு எடுக்கலாம். அதற்கு எந்தவிதத் தடையும் கிடையாது. ஆனால் பொது விடுமுறை என்று விடுவதில்லை.

தீராநதி:

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் மூலமாக நீங்கள் எல்லோரும் கூடி பொது விடுமுறைக்கு ஏன் முயலக் கூடாது?

நீல.பத்மநாபன்:

முன்னால் நான் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறேன். இப்போது நான் ஒரு அங்கத்தினர் மட்டும்தான்.

தீராநதி:

நீங்கள் ஆலோசனை சொல்லலாம் இல்லையா?

நீல.பத்மநாபன்:

கட்டாயம் ஆலோசனை சொல்லலாம். அவர்களும் என்னுடைய ஆலோசனை இல்லாமலே பல நற்காரியங்களைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்ப்பள்ளிகளைக் கொண்டுவருவது. மைனாரிட்டி மொழியின் அடிப்படையில் கேரள அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிப்பது என்று பல விஷயங்களை மேற்கொண்டு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் ஓணம் பண்டிகை அன்று முழு விடுப்பு விடுகிறார்களா?

தீராநதி:

ஆமாம். தமிழ்நாடு முழுவதும் அன்றைக்கு முழு விடுமுறைதான்.

நீல.பத்மநாபன்:

இங்கு அப்படி இல்லை. பொங்கல் பண்டிகை என்பது விவசாயிகளின் பண்டிகைதானே. விவசாய மலையாளிகளும் அதைக் கொண்டாடலாமே அதில் தவறிருக்கிறதா என்ன? மேற்சொன்ன பிரச்சினையை அரசின் கவனத்திற்கு திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் மூலம் கட்டாயம் எடுத்துச் செல்வோம்.

நன்றி: தீராநதி 2008

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ