20/09/2011

மரபை நினைவூட்டும் ஒரு கலை விழா - செல்லப்பா

கூட்டமாய்க் கூடிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதில் நம்பிக்கைகொண்ட இனமாகவே தமிழினம் இருந்துவந்திருக்கிறது. காலங்கள் மாறும்போது தற்காலத் தேவைகளைக் கருதி அன்றாட நடப்புகளுக்காகத் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ள ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் தனது இன அடையாளங்களே தன்னிடம் இல்லாமல் போயிருப்பதை அறிந்து அதிர்ந்துபோய் அவற்றைச் சற்றே தன்னில் கொண்டுவர முயல்வது ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் நிகழும் இயல்பான மாற்றமே.

மண் சார்ந்து வாழ்ந்த மனித வாழ்வில் அறிவியல் வளர்ச்சி கிளை பரப்பத் தொடங்கும்போது, மண்ணுக்கும் மனிதனுக்குமான நெருக்கத்தில் மெல்லிய விரிசல் தொடங்குகிறது. அறிவியல் அறியப்படாத நிலையில் கிராமம், நகரம் என்ற வேறுபாடும் அறியப்படாததே. கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் பிழைப்புக்கென நகரத்தை நோக்கி வந்தபோதும் ஆழ்மனத்தில் கிராமத்தின் புழுதி மணத்தைப் பொத்திப் பாதுகாத்து வருகின்றனர். அரூப நாசி உணரும் அத்வைத சுகம் அது.

தகவல் தொழில்நுட்ப வீச்சின் காரணமாகக் கணினி, செயற்கைக்கோள் வழி வந்து விழும் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஆகியவை மனிதர்களுக்கிடையேயான உரையாடல்களின் நேரங்களை மெல்லத் தங்கள் வசம் இழுத்துக்கொண்டன. தம் சிறு விழிகளால் அகன்று பரந்த வெளியினைத் தரிசித்து வந்தவர்கள் செவ்வகப் பெட்டி வழியே உலகைக் காண விருப்புகொண்டனர்.

இவை எல்லாவற்றையும் மீறித் தங்கள் அடையாளங்களை நினைவுபடுத்திக்கொள்ள அவர்களுக்கான ஒரு பொதுப் பரப்பு அவசியமாகிறது. அப்பொதுப் பரப்பில் தமிழ் மையம், தமிழக அரசுச் சுற்றுலா வளர்ச்சி, பண்பாட்டுத் துறையுடன் இணைந்து வழங்கும் நிகழ்ச்சியான சென்னை சங்கமம் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.

ஆயிரக்கணக்கான கலைஞர்கள் ஏறக்குறைய அறுபதுக்கும் அதிகமான கலைகளை மைலாப்பூரிலுள்ள நாகேஸ்வரா ராவ் பூங்கா, எலியர்ட்ஸ் கடற்கரை, பல்லாவரத்திலுள்ள கண்டோன்மென்ட் பள்ளி வளாகம், பெரம்பூர் மருதம் திடல், இராணி மேரி கல்லூரி எனச் சென்னையின் எல்லாப் பகுதிகளிலும் இடங்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்த்தினர். தமிழ்ச் சங்கமம், தொழில் சங்கமம், உணவுத் திருவிழா எனப் பலவகையான நிகழ்வுகள். கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், கொங்கு எனத் தமிழகத்தின் அனைத்துப் பகுதி உணவுகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுக்களங்களில் உண்ணக் கிடைத்தன.

சென்னை சங்கமத்தின் (2008) தொடக்க விழா ஜனவரி 10ஆம் நாள் மாலை 6:30 மணி அளவில் சென்னை ஐஐடியில் உள்ள திறந்த வெளி அரங்கில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

ஐஐடியின் நுழைவு வாயிலிருந்து திறந்த வெளி அரங்கிற்குச் செல்லப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பரபரப்பான சென்னை நகரத்தில் ஐஐடி அமைந்துள்ளது என்பதை மறக்கடிக்கும்படியான குளிர்காற்று மூஞ்சியில் மோதியவாறு நிகழ்ந்த பேருந்துப் பயணமே ஒரு கிராமத்துக்குள் போவது போன்ற உணர்வைத் தந்தது. அரங்கம் நிரம்பி வழிந்ததால் சற்றுக் காலதாமதமாக வந்தவர்கள் திறந்த வெளி அரங்குக்குள் செல்லப் பிரயத்தனங்கள் தேவைப்பட்டன. அரங்கைச் சுற்றிலும் பொங்கல் பானைகள் போன்ற பெரிய பானைகளில் ஒளிவெள்ளம் பொங்கிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சிக்கான மேடையில் அமைக்கப்பட்டிருந்த ''ஈரடுக்கு வீடு'' அரங்கை ஒரு திரைப்படக் காட்சிக்கானதுபோல் நுட்பமாக அமைத்திருந்தார் கலை இயக்குநர் கதிர். நாட்டுப்புறப் பாடல்களின் வழி வெளிப்பட்ட தமிழகக் கலாச்சாரக் குரல்களின் ஒலியில் வெளி நிரம்பியது. கலைஞர்களின் கடின உழைப்போடு நேர்த்தியான ஒத்திகைத் திறனும் சேரும்போது நிகழ்த்தப்படும் கலையானது உச்சத்தைத் தொடும் என்பதை நிரூபித்தது ''ஞாயிறு போற்றுதும்''.

தனது வழக்கமான சொல்லாடல்களால் சபையோரின் கவன ஈர்ப்பைப் பெறும் தமிழக முதல்வர் ''ஞாயிறு போற்றுதும்'', தப்பாட்டம் என்பதை வைத்து எப்படிச் சொல் சிலம்பம் ஆடுவார் என எதிர்பார்ப்போமோ அத்தகு எதிர்பார்ப்புக்கு எந்தவித ஏமாற்றமுமின்றிச் சிறப்பாக நிகழ்த்தினார் தனது தொடக்கவுரையை. யோகாவுக்கான நாராயண நமஹவை ''ஞாயிறு போற்றுதும்'' என மாற்றிக்கொண்ட நிகழ்வின் மூலம் தன் தமிழ்ப் பற்றைப் பகிர்ந்துகொண்டார். அருட் தந்தை கஸ்பர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

சிறு வயதில் கிராமத்தில் தை மாதம் அம்மன் கோவில் கொடை விழா நடைபெறும். ஊரின் நடுவில் வீற்றிருக்கும் அம்மன் கோவில் திடலில் கொடையின்போது நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் கரகாட்டமே இன்னும் ஞாபகத்தில் உள்ளது. மேடை என எதுவும் அமைக்கப்பட்டிருக்காது. திடலின் நடுவில் செவ்வக வடிவத்தில் சிறு சிறு இடைவெளியில் நீண்ட கம்புகள் நடப்பட்டு அவை கயிறால் சுற்றிப் பிணைக்கப்பட்டிருக்கும். கம்புகளில் வண்ண வண்ண பிளாஸ்டிக் பேப்பர்களால் சுற்றப்பட்ட டியூப்லைட் ஒளியூட்டிக் கொண்டிருக்கும். உட்புறமாகக் கரகாட்டக்குழு நிகழ்ச்சிகளை நடத்தும். மக்கள் சுற்றிலும் அமர்ந்திருந்து அதைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருப்பர். இரட்டை அர்த்த உரையாடல்கள் கிராமத்து மனிதர்களுக்கு உச்சக்கட்ட களிப்பைத் தரும். அதற்காகவே உறக்கம் தவிர்த்துத் திரண்டிருக்கும் மக்கள் கூட்டம். திடலை இணைக்கும் தெருக்களின் ஓரங்களில் திடீர்க் கடைகள், சின்னச் சின்ன இராட்டினங்கள், ''வை ராஜா வை'' என நடத்தப்படும் சிறு அளவிலான சூதாட்டம் எனக் கிராமம் கொண்டாட்டங்களில் தன்னை மறந்திருக்கும். ஆனால், பண்டிகையின் கொண்டாட்டத்தையும் மீறி எப்போது எங்கே யார் யாரைக் கொல்லப்போகிறார்களோ என்ற பயம் மட்டும் மனத்தை அரித்துக்கொண்டிருக்கும் ''டபடப'' வென ஓசையிடும் புல்லட்களில் முறுக்கோடு சுற்றிவரும் மைனர்களைப் பார்க்கும்போது.

சென்னை சங்கமம் 2008 நிகழ்ச்சியின் ஒரு அங்கமான ''நெய்தல்'' கிராமத்திற்கு - சென்னை இராணி மேரி கல்லூரிக்கு - பொங்கலன்று மாலை சென்றபோது, அங்கே கண்ட காட்சிகள் மீண்டுமொரு முறை கிராமத்து வாழ்வைக் கண் முன்னால் கடை பரப்பியது.

நுழைவு வாயிலிருந்து மேடைவரையான பாதையின் இருமருங்கிலும் வடஇந்திய பானி பூரி, தென்னிந்திய தோசையென உணவுப் பதார்த்தங்களும் பானங்களும் ஐஸ்கிரீம் வகைகளும் மணத்தோடு கடைகளில் நிரப்பப்பட்டிருந்தன. கொழுக்கட்டை, குழிப் பணியாரம், முறுக்கு, பொரி உருண்டை போன்ற கிராமத்து உணவுப் பொருள்கள் 10 ரூபாய் முதலான விலையில் கிடைத்தன.

சென்னை சங்கமம் 2008 ''லோகோ''வுடன் கூடிய டி-சர்ட்டுகள், சிடிகள், புத்தகங்கள் ஆகியவையும் விற்கப்பட்டன. விழாவைக் காண வந்திருந்த ஒருவர் சங்கமம் டி-சர்ட் அணிந்திருந்ததை ஆச்சரியத்தோடு பார்த்தனர் ஸ்டாலில் இருந்தவர்கள்.

சிறையிலிருந்து மீண்டுவந்தவர்கள்போல் மக்கள் கிராமத்து நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு தம் குழந்தைகளுக்கு நிகழ்ச்சிகள் குறித்து விளக்கிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. பிவிசி நாற்காலியில் அமர்ந்து கிராமப்புறக் கலை நிகழ்ச்சிகளைக்கண்டு மகிழ்ந்த மக்களில் சிலர் தங்கள் மொபைலில் நிகழ்ச்சிகளைப் படமெடுத்துக்கொண்டனர்.

மேடையின் வலதுபுறம் கடற்கரையோரப் படகு ஒன்று வடிவமைக்கப்பட்டு அது மீன் வலைகளால் சூழப்பட்டிருந்தது. செயற்கையான மீன்கள் வலைகளில் ஆங்காங்கே நீந்திக்கொண்டிருந்தன. இடது புறம் வலக்கையில் அரிவாள், இடக்கையில் கேடயம் தாங்கிய அய்யனார் இடக்காலை மடக்கி வலது காலைத் தொங்கப்போட்டு அமர்ந்திருந்தார். அதையொட்டிக் கிராமத்துக் குடிசை ஒன்ற் இருபுறமும் ஜன்னல்களோடு மூடிய கதவுடன் இருந்தது.

சுற்றிலும் சாக்குத்துணிகளால் சூழப்பட்ட ''டூரிங் டாக்கீஸ்'' ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே டிவிடி ப்ளேயர் மூலம் ''மோஸர் பேயர்'' சிடியில் கல்யாணியின் கணவன் திரைப்படம். திரையில் சிவாஜியும் பெண்வேடமிட்ட நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனும் மேடையில் ஆடிப்பாடும் காட்சி விரிந்திருந்தது. திரையரங்கில் மூன்றே மூன்று பாய்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக விரிக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில் 10 பேர்கள்தான் இருந்தனர். திரையரங்கை, வருவோரெல்லாம் எட்டி எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்பினர்.

நிகழ்ச்சி மேடையில் நாதஸ்வர வித்வானின் "நாதர் முடி மேலிருக்கும்... நல்ல பாம்பே..." பாடலுக்கேற்பப் பாம்பு நடனமாடி கல்யாணி கற்ற கலையில் மெருகூட்டினார். அடுத்ததாக அதிரடியாக "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்..." பாடல் நாதஸ்வரத்திலிருந்து துள்ளி விழுந்தது.

கரகாட்டம் ஆடிய பெண்களின் கழுத்தில் தொங்கிய அடையாள அட்டைகள் கிராமத்தில் காண இயலாத நகரத்து அற்புதம்.

சென்னை நாகேஸ்வரராவ் பூங்காவில் பாதி இருட்டும் பாதி வெளிச்சமுமான பாதைகளின் வழியே நிகழ்ச்சிக்கான மேடையை அடைய நேர்ந்தது. மேடையின் முன்புறம் திரளானவர்கள் அமர்ந்திருக்க மீதிப் பேர்கள் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தனர்.

மேடையில் பொன்னேரி ஆதித் தமிழன் கலைக் குழுவினரும் புதுச்சேரி சித்தன் கலைக் குழுவினரும் நாட்டுப்புறப் பாடல்கள், நிகழ்ச்சிகளால் ஒட்டுமொத்த மக்கள் திரளையும் கட்டுக்குள் வைத்திருந்தனர்.

கோவில்பட்டியைச் சார்ந்த நளாயினி அம்மா பாடிய கிராமப்புறப் பாடல் மாசு கலக்காத காற்றாக வெளிப்பட்டது. பாடல் முடியும் தருணம் மைக்கில் ஒலி வராததால் ஏற்பட்ட வெட்கத்தால் அவரிடம் வெளிப்பட்ட கூச்சப் புன்னகை கிராமத்தின் ஓடைக் குளிர் நீராய் மனத்தில் ஸ்படிகமாக மிதந்தது. இறுதியாகப் பறையொலித்து நடனத்தை நிகழ்த்திய எழிலரசு, தமிழ்வாணன் என்னும் லிரிநி, றிக்கீமீ ரிநி படிக்கும் சிறுவர்கள் ஒட்டுமொத்த மக்களின் கரகோஷத்தையும் அள்ளிக்கொண்டனர். மைலாப்பூரில் வானத்தைச் சென்றடைந்தது பறையொலி.

பறையடித்த சிறுவர்கள் மாமணிகள் என வாழ்த்தியபடி மேடைக்கு வந்தார் கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன். கச்சேரி ஆரம்பித்த சமயம் கர்நாடக இசைக்கென வந்தவர்கள் தவிர மற்றவர்கள் மெதுவாக நகரத் தொடங்கினர்.

"கனக்கும் செல்வம்..." கேட்டுப் பாடிய பாரதியின் விநாயகர் விருத்தத்தோடு தனது கச்சேரியைத் தொடங்கினார் சுதா ரகுநாதன். "கருணை செய்வாய் கருணாகரனே..". எனக் கசிந்த குரல் பூங்காவைத் தழுவ ஆரம்பித்தது...

தென்னிந்தியத் திரைப்படச் சங்க வளாகத் திரையரங்கில் நடைபெற்ற தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு எப்போது வேண்டுமானாலும் யாரும் செல்லலாம் என்ற விதமாய் ஏராளமான காலி இருக்கைகள் எப்போதுமிருந்தன. எதிரில் ஆள் இல்லாவிட்டாலும் கற்ற கலை மறக்காமலிருக்கக் காற்றில் வாள் சுழற்றும் அப்பாவி வீரர்களாகப் பேருரையாற்றிய அறிஞர்கள் கையில் அகப்படாமல் வாசிப்பதில் விருப்பமுள்ள நவீன வாசகர் கூட்டம் புத்தகக் கண்காட்சியில் குவிந்துவிட்டது. தமிழ்ச் சங்கமத்தின் ஓர் அங்கமாக ஒரே இடத்தில் நூறு கவிஞர்களைக் கூட்டி நிகழ்த்தப்பட்ட கவிதைச் சங்கமத்தின் ஞாபகமாக நிலைத்தது அதன் பிரம்மாண்டமெனில் கண நேரம்கூட நிலைக்க இயலாமல் போனது கவிதை அனுபவம்.

16.01.2008 அன்று நடைபெற்ற இலக்கியச் சங்கமத்தின் நிகழ்ச்சிக்கு முன்னதாகப் பிரளயனின் ''மாநகர்'' வீதி நாடகம் மேடையில் நிகழ்த்தப்பட்டது. பங்குபெற்ற கலைஞர்களின் உடல்மொழியும் வசன வெளிப்பாட்டுவிதமும் நாடகத்தின் காட்சிகளை மனத்திரையில் உலவவிட்டன. எவ்வித உபகரணங்களின் உதவியுமின்றிக் கலைஞர்களின் நாடகத் திறனே நாடகத்தின் அத்தனை உணர்வுகளையும் பார்வையாளனுக்குள் மடைமாற்றிவிடப் பெரும் பங்காற்றியது. நலிந்துபோன மனிதநேயத்தை நசுக்கிச் சிதைப்பதில் தனிக் கவனத்துடன் செயல்படும் நகரத்தின் அமைப்பை எவ்வித மிகையுமின்றி இயல்பாகச் சித்தரித்தது நாடகம். காணாமல்போன மகளைத் தேடிச் செல்லும் தாயின் பரிதவிப்பே தாங்கவியலாத துயரமாயிருந்தது. மகள் இறந்து போனதறிந்த பின்பு ஏற்படும் தாயின் துடிப்பு நாடகத்தில் காட்சியாக்கப் படவில்லை. ஆனால், பார்வையாளனுக்குள் அந்தத் துடிப்பு உக்கிரத்துடன் இறங்கியது நாடகத்தின் வெற்றியென மகிழவா மாநகரின் குரூரமெனத் துக்கிக்கவா எனப் புரியவேவில்லை இறுதிவரை.

சங்கம நிகழ்ச்சிகளுக்கெனத் திரண்டிருந்த மக்களைப் பார்க்கும்போது, இது போன்ற விழாக்கள் மக்களை உற்சாகமூட்டவே செய்கின்றன என்பதை உணர முடிந்தது. கிட்டத்தட்டப் பதினைந்து ஆண்டுகளாகத் தொலைக்காட்சியின் நச்சுக் காற்றைச் சுவாசித்துத் துன்பப்பட்ட நுரையீரல்கள் தூய காற்றுக்கு ஏங்கித் தவிப்பதை உணர்ந்து கலாச்சார, மண் சார்ந்த வடிவங்களை, கலைகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களின் முயற்சி கவனத்துக்குரியது.

கிராமத்து மைனர்களின் நவீன வடிவமாகக் காட்சிதரும் பெரு நிறுவனங்கள் ஸ்பான்ஸர்களாக இருப்பதைக் காணும்போது ''நந்திகிராம்'', சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்ற நினைவுகளின் கலவர மேகங்கள் தலைக்கு மேல் வட்டமிடுவதை அலட்சியப்படுத்தவும் முடியவில்லை.

நன்றி: காலச்சுவடு 2008

கருத்துகள் இல்லை: