மொழிப் பயிற்சி – 19 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ
ஞானச்செல்வன்
ஒரு சிறிய சொல்லாய்வு செய்வோமா? "இதற்காக ரொம்பவும் மெனக்கெட்டு அலைந்தேன்?' இச்சொற்றொடரில் மெனக்கெட்டு என்பதன் பொருள் என்ன? மனைக்கட்டு நமக்குத் தெரியும். மெனக்கெட்டு? ஒருகால் இப்படியிருக்குமோ? எப்படி? மனம் கெட்டு அலைந்தேன் என்றிருக்கலாமோ? ஒரு வேலையை முடிப்பதற்காக அதே சிந்தையாக அலைதலை மனம் கெட்டு அலைந்தேன் என்று சொல்லுவது சரிதானே?
ஏனிந்தப் பிழைகள்?
வழிபாடு வேறு, வழிப்பாட்டு வேறு. வழிப்பாட்டுக் கூட்டத்தில் அமைதி நிலவியது என்றால் சரியான சொற்றொடர். வழிபாட்டுக் கூட்டத்தில் என்றெழுதினால், வழிச் செல்வோர் பாடும் பாட்டு என்று பொருள் தருமே. அதாவது வழிநடைப் பாட்டு என்பதாம் இது. வழிபாட்டை வழிப்பாட்டு ஆக்க வேண்டா.
தமிழ் கற்றவரே சிலர் தம் ஏடுகளில் நாநிலம் என்றெழுதுகிறார்கள். இதன்பொருள் நாக்கு ஆகிய நிலம் என்பதன்றோ? முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனும் நால்வகை நிலங்களினாலான உலகத்தை நானிலம் எனல் வேண்டும். (நான்கு+ நிலம்= நானிலம்). இவ்வாறே தன்நலம் என்றெழுதுகிறார்கள். தன் + நலம் = தன்னலம் என்றாகும். தம் + நலம் = தந்நலம் என்றாகும். இரண்டுமின்றி தன் நலம் எனல் விட்டிசைக்கிறது. இவ்வாறே என்+ தன் = என்றன் எனவும், எம்+ தம் = எந்தம் எனவும் ஆகுதல் இலக்கணம். எந்தன் என்றெழுதுவது பிழையாகும்.
தேசீயம், ஆன்மீகம், காந்தீயம் என்றெல்லாம் எழுதுகிறார்களே? சரியா? இல்லை. இவற்றை நெடில் போட்டு நீட்டாமல் தேசியம், காந்தியம், ஆன்மிகம் என்றே எழுதிடல் வேண்டும். இஸம் - தமிழில் இயம் என்றாகும். மார்க்சிஸம் - மார்க்சியம் என்றாகும். தேசியம், காந்தியம் இவற்றுள்ளுள் இயம் இருத்தல் காண்க.
தன்வினை செய்வினையா?
திருவாரூரிலிருந்து தமிழாசிரிய நண்பரொருவர் தொலைப் பேசி வழியாக வினவினார்: ""ஐயா, தன்வினை, பிறவினை என்றும், செய்வினை செயப்பாட்டு வினையென்றும் இலக்கணம் கற்பிக்கிறோமே, இவற்றுள் தன் வினையும், செய்வினையும் ஒன்றுபோல்தானே உள்ளன? இவற்றிடையே வேறுபாடு என்ன?''
இஃது அறிவினாவா? அறியா வினாவா? என்று நம்மால் சொல்ல இயலவில்லை. மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் தன்வினை தன்னைச் சுடும் என்பதும், யாரோ செய்வினை செய்துவிட்டார்கள் என்பதும் அல்லவா? தன்வினையாவது? செய்வினையாவது? எல்லாம் உங்கள் வினை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுதல் முறையா?
செயப்பாட்டு வினை வடிவம் என்பது தமிழ்மொழிக்குப் புதியதே ஆகும். பள்ளிப் பாட நூலில் செய்வினை, செயப்பாட்டு வினை என்று வந்தாலும் அது ஆங்கில மொழியின் தாக்கத்தால் விளைந்ததே. சற்றே விளக்கமாக அறிவோமா?
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். இது செய்வினை வாக்கியம். திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது செயப்பாட்டு வினை வாக்கியம்.
இராசராசச் சோழன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான். இது தன்வினை வாக்கியம். இராசராசச் சோழன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவித்தான் - இது பிறவினை வாக்கியம். செய்வினை வாக்கியமும், தன்வினை வாக்கியமும் அமைப்பில் ஒன்றுபோலவே இருக்கும். ஆனால் செய்வினையை செயப்பாட்டுவினையாக மாற்றுகிறபோது படு - பட்டது
என்ற துணைவினை சேர்கிறது. எழுவாய் இருந்த இடத்தில் செயப்படுபொருள் வந்துவிடுகிறது. ஆல் எனும் உருபு (ஒட்டுச் சொல்) இணைகிறது.
தன்வினை வாக்கியத்தைப் பிறவினையாக மாற்றும்போது வி, பி என்னும் இரண்டு எழுத்துகளுள் ஒன்று ஒட்டிக் கொள்கின்றது.
திருமுழுக்குச் செய்வித்தனர்.
செய்தனர் - தன்வினை, செய்வித்தனர் - பிறவினை (வி சேர்ந்தது)
பாடம் படிப்பித்தனர். படித்தனர் - தன்வினை
பிடிப்பித்தனர் - பிறவினை (பி சேர்ந்தது)
செய்வினை வாக்கியத்தை செயப்பாட்டு வினையாக மாற்றும் போது அத்தொடரின் பொருள் மாறாது. ஆனால் தன்வினை வாக்கியத்தைப் பிறவினையாக மாற்றும் போது அந்தத் தொடரின் பொருளே மாறிவிடும்.
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்றாலும், திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது என்றாலும் பொருள் ஒன்றே.
இராசராசன் பெரிய கோயிலைக் கட்டினான் எனும் தன்வினை வாக்கியத்தை, இராசராசன் பெரிய கோவிலைக் கட்டுவித்தான் என மாற்றும்போது, இராசராசன் அல்லாத கொத்தனார், சித்தாள்கள் வாக்கியத்தில் நுழைந்துவிடுகிறார்கள். பொருளில் பெரிய மாற்றம் உண்டாகிறது.
(தமிழ் வளரும்)
நன்றி - தினமணி கதிர்
கருத்துகள்