நடப்பியலும் மரபுக்கலை கூறுகளும் முனைவர் - க.அ. ஜோதிராணி
கலைகள் இனம் காக்கும் இலக்கியங்கள். எந்தக் கலையும் அந்த இனத்தின் இரத்த நாளங்களாகவே செயல்படுகின்றன. கலைகள் அ€த்தும் அந்தந்தத் தேசிய இனங்களின் மரபினை நினைவுபடுத்தும் விளக்கமாக அமைகின்றன. இவை அவ்வினமக்களின் முத்திரைகளாகிக் குறிப்பிட்டுச் சொல்லும் தனிப்பேறுடன் விளங்குகின்றன. தமிழர்களின் உணர்வு நாளங்களான தமிழ்க் கலைகள் மொழியின் திறம் கூட்டி நிற்பவை. வளம் வேர்ப்பவை. இலக்கியங்களென்னும் தகுதியினைக் கொண்டிருக்கும் நமது கிராமிய மரபுக்கலைகள் உயர்தனிச் சிறப்புக்குரியவை.
இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ்க் கலைகளுக்குள் பல்வேறு உட்பிரிவுகள் செயல்படுகின்றன. அவை கைவினை, சிற்பம், ஓவியம் எனப்பல, இந்தக் கலைகள் யாவும் மக்கள் இயக்கங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவனவாகவே இருக்கின்றன.
எந்தக் கலையும் அதன் பயன்பாட்டை அளிக்க வேண்டுமாயின் பெரும்பான்மை மக்களது சமூக நன்மைக்காகவும் சிறுபான்மையினரின் அநீதிக்கு எதிராகவும் மக்களைக் குரலெழுப்பச் செய்ய வேண்டிய அவசியத்தைத் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் தன்னகத்தே சிறப்பைக் கொண்டதாய் முழுமை பெறும். வெறும் பொழுதுபோக்கை மட்டுமே கொண்ட எந்தக் கலையும் அச்சமூகத்திலுள்ள அனைத்துக் குழுக்களிடமும், மக்களிடமும் சென்று அவர்களின் தேவையை நிறைவு செய்வதாக ஆகிவிடாது. மக்கள் விரும்பி நிகழ்த்தும் கலைகள் அனைத்துமே போராட்டக் களங்களில் இலக்கிய வடிவமாய்ப் போர்ப் பாறைகளாய்ப் பரிணமித்திருந்தன என்பது வரலாறு.
தமிழரின் நிகழ்த்து கலைகளும் இசைக் கலைகளும் மக்களின் போராட்ட இலக்கியங்களாக வாழ்ந்த நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றன. தமிழரின் இசைக்கலை நுட்பங்கள் அடிமை எனும் நிலையினை மீட்டெடுக்கும் போர்க் கருவிகளாகவே இருந்திருக்கின்றன. இதுவே கலைப்பண்பில் மக்கள் பண்பாட்டின் முழுமையை உணர்த்துவன.
கலை, இலக்கியம் என்பது வாழ்தலுக்கான போராட்டத்தின் உணர்ச்சிகரமான வெளிப்பாடேயன்றி வெற்றுப் புனிதங்கள் அல்ல. தொடக்ககாலச் சமூகங்களைக் குறித்து ஆராய்வோமாயின் மனித இனம் இயற்கையோடு இணைந்தும்-போராடியும் வாழ்வியலுக்கான பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதை நாம் காண இயலும். இவை எல்லாவற்றையும் உற்பத்திக்கான பங்கெடுப்பாகத் தொகுக்க முடியும். மரபுக் கலைகள் யாவும் உழைப்பையும் உணர்வையும் சம அளவில் கொண்டுள்ளவையாகவே விளங்குகின்றன. உழைப்பானது தேவையை நிறைவேற்றாதபோது எதிர்பார்த்த அளவில் இல்லாதபோது அதனின்று விளைந்த கலைகளும் தமது தன்மைகளை, வடிவங்களைச் சமூகத் தேவைக்கேற்ப மாற்றியும் வளப்படுத்தியும் வந்திருக்கின்றன.
உற்பத்தியில் ஈடுபடுவதும், ஈடுபடுத்துவதும் வாழ்வியல் போராட்டமே. மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசியல், பொருளியல் எனும் இருபெரும் அரங்குகளிலிருந்து பெறுவதற்கான முறற்சியே சமூகப் போராட்டங்களாகப் பரிணமிக்கின்றன. இவ்விரு அரங்குகளிலும் மக்கள் தன்னிறைவு பெறாமல் போகவே போரட்டாங்களாக உருவெடுக்கின்றன. இவ்வகையில் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் முன்பு இயற்கையுடனும் இன்று வர்க்கத்திற்கெதிரான போராட்டமாகவும் நிலைமாற்றம் பெற்றிருக்கின்றன.
பண்பாட்டோடு இயைந்தவாறு தம் வாழ்வியலின் போராட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவனவாகக் கலை வடிவங்கள் இருக்கின்றன. பின்னர் அவையே பண்பாட்டின் அம்சங்களாக மாறுகின்றன. கலைகள் அனைத்தும் உழைப்புத் தேவையின் பொருட்டுப் பிறந்தவை. காலத்துடனும் இயற்கையுடனும் தன்னை இணைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தபோது மனிதன் தன் வாழ்க்கை அனுபவங்களை, மன உணர்ச்சியின் வெளிப்பாடுகளைக் கலைகளாக வடித்து வைத்தான். மக்களது மனஉணர்வின் ஒவ்வொரு வடிவமும் கலை இலக்கியங்களாயின. குறிப்பாக மக்களது வாழ்தலில் தேவை அனைத்தும் இலக்கியங்களாக, கலைகளாக வடிவம் பெற்றுவிட்டன.
கலை என்பது சமுதாயத்தைப் பிரதிபலித்து -வழி நடத்தும் தளத்தில் இருக்கும்போது அதில் இயங்கும் கிராமத்துக் கலைஞனானவன் நிகழ்த்து கலையில் கதை மாந்தராகவே ஆகிவிடுவது கலைக்கு அவன் செய்யும் தொண்டு. அவனது கதைகள் அனைத்தும் மக்களது வாழ்க்கை எனும் உலகியலைக் கொண்டிருப்பது ஒரு தனிச்சிறப்பு. இத்தனிச்சிறப்பான மக்களின் பழமையான வாழ்வியல் மதிப்பீடுகளை வடித்துக் காட்டும் கலைக்குள் சமூகத்தின் அன்றைய நடப்பியலும் வெளிப்படுவதை புரிந்து கொள்ள முடியும்.
மனித வாழ்க்கை எனும் சுழற்சியில் ஒரு கலைஞனை எண்ணிப் பார்த்தால் அவன் சகமனிதனாக இருந்து கலைஞன் என்ற நிலையில் தொழில்படும்பொழுதில் அவன் பெறும் சமூக அனுபவம் எண்ணற்ற இடையூறுகளுக்கிடையில் விளைவனவாக உள்ளன.
வயல் வேலை முடித்தவன் "பாக்கு வாங்கிய"(கலை நிகழ்த்த ஒப்புக் கொண்ட நாள்) அந்த நிகழ்வுக்குச் செல்லத் தொடங்குவதிலிருந்து அவனது சிந்தனையும் சமூகப் படிப்பினையாகப் படிந்து போயுள்ள ஒவ்வொரு செயலும் எண்ணத்தக்கதாகும். கலைஞர்களுக்குரிய ஆடை அணிகலன் பற்றிய தேர்தல் - பாத்திரத்திற்கேற்ற ஒப்பனை முறைகள்-அதற்காக சேகரிப்புகள்-செல்ல வேண்டிய நேரம் - கட்டாயமாக வயல் வேலைக்கு மீண்டும் திரும்ப வேண்டிய அடுத்தடுத்த நாட்களின் நேரக் கணக்கீடு - அதற்குள் ஏற்படு குடும்பப் பிரச்சினைகளை, தேவைகளை ஒழுங்கு செய்ய வேண்டிய அவசியம் - பயண தூரம்-பயணச் செலவு - நிகழ்த்துதலின்மீது நிகழ்த்துதலை அமைக்கும் பொறுப்பாளரிடம் மனம் கோணாமல் நடந்து கொள்ளும் முறை - நிகழ்த்து களம் - பார்வையாளர்களின் கூட்டம் - அதற்கிடையில் சாதிய வேறுபடுகளில் மூழ்கி எழும் நீக்குப் போக்கு - பிற சாதியினரின் உணவு வழங்கும் முறையில் நிகழும் மன உலைச்சல்கள் - ஊடாட்டம், பிற சாதியினர் நடத்தும் பாங்கு - தரப்படும் மரியாதை அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய பணிவு - ஊர்த்தலைவனுக்குரிய மரியாதை - ஊர்த்தலைவனின் உயர் சாதிய ஆதிக்கத்தின் பொதுவான விருப்பம் - அந்த ஊரில் உள்ள சமுதாம் நிலவலம் - தனக்குக் கிடைக்கப் போகும் உழைப்பின் மதிப்பு - நீர், நிலம், பற்றிய பல்வேறுபட்ட அறிவு- என ஒவ்வொரு அலசலாக மனத்துள் தீர்மானித்துக் கொள்ளப்பட்ட பொதுவான அறிவுடன் மேடை ஏறும் கலைஞர்கள் தத்தம் பாத்திரங்களின் சுய சிந்தனையுடன் நாடகத்தில் இயங்கும் வேளைகளில் தனது நனவிலிருக்கும் பாத்திரங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு புராணகதை மாந்தரின் பாத்திரம் சிதைத்திடாதவாறு கலைஞரின் கலைத்திறன் வெளிப்படும். அவ்வாறு வெளிப்படுபவை உரைநடையாக கேலிப் பேச்சாக, பாடல்களாகப் பார்வையாளர்கள் விரும்பிய வடிவங்களில் அமைப்பது கலைஞனின் திறன், கலைஞர்கள் இசை கலந்து, கற்பனையும் கூட்டிச் சேர்த்துப் பாட்டுகளாகவும், நையாண்டிகளாகவும் நாட்டு நடப்பைச் சொல்லுபவையாக அமைவது மரபுக் கலைகளுள் வெளிப்படும் இயல் வோட்டமாகும். இவ்வாறு கண்ணில் கண்டதையும் நடப்பியலுள் அறிந்திருப்பதையும் மேடைகளில் உடனுக்குடன் கலைகளாக்கிக் காட்டுவதும் நாட்டுப்பறக் கலையின் பதிபு செய்யப்படுகின்றன.
குறிப்பிட்ட காலத்திற்கு அந்தந்தச் சூழலை நினைவுபடுத்தி ஆனால் பொதுமையான மையக் கதைக் கருவை விட்டு விலகிடாமல் அந்தந்தக் காலத்தின் இயல்பு ஓட்டத்தைக் கருத்தில் கொண்டு அன்றாடச் சமூக நிகழ்வுகள் காட்சிகளில் இணைக்கப்பட்டு நிகழ்த்தப்படுகின்றன. அந்தந்தக் காலத்தின் நிலைகளைப் பண்பாட்டு மரபுடன் சொல்லிச் செல்வது மரபுக் கலைகளின் சிறப்பம்சம் பண்பாட்டு நிகழ்வின் ஒவ்வொரு காலத்திலும் வந்த மாறுபட்ட கருத்துகளை எதிர் கொள்ளாமல் ஒரு கலை செழுமையடையாது என்ற வகையில் நாட்டுப்புறக் கலைவடிவங்கள் -தன்னை ஆய்வுக்குட்படுத்திக் கொள்கின்றன. அவ்வப்போது காலச்சூழலை அடியொற்றி எழுபவையாதலால் பழைய கலைவடிவங்கள் அவ்வப்போது மறைந்து புதுமையாகும். உலக விதியினைச் சார்ந்து தன்னைத் தகவமைத்துக் கொள்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் இடப் பெற்று வந்த கலைகளில் சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்தும் கூறுகள் கட்டாயம் இடம் பெற்றிருநதன. அவை எத்தனையோ வடிவங்களில் இன்றும் மரபு மாறாத பழமொழிகளாக, பாடல்களாக, மரபுவழிப்பட்ட வாய்மொழி வழக்காறுகளாக, செவிவழிக் கதைகளாக நாட்டுப்புற மக்களின்-கலைஞர்களின் வாழ்க்கையோடு இணைந்த வகையில் காக்கப்பட்டு வருகின்றன.
எந்தக் கலையும் இலக்கியமும், சமூகப் போராட்டங்களைத் தொடாமல், இணையாமல் செல்வதில்லை. பெரும்பான்மை மக்களைச் சார்ந்ததாகவோ அல்லது சிறுபான்மை ஆதிக்கவாதிகளைச் சார்ந்ததாகவோ கட்டாயம் செயல்பட்டாக வேண்டிய வரலாற்று விதிக்குள் கலை இலக்கியங்கள் உருவாகின்றன. உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகை இலக்கியமும் அதனதன் இயல்பில் சமூகத்தின் ஒவ்வொரு வகையான தேவையை மையமிட்டவையாக இருக்கும். ஒவ்வொரு சமூக அமைப்பிற்குள்ளும் மக்களின் விடுதலைக்கெனக் கலைகள் பயன்படுத்தப்பட்டன. போராட்டத்திற்கான அவசியம் மக்கள் திரனை எதிர்நோக்கியே அமைந்ததால் கிராமங்களில் சமூகம் சார்ந்த அறிவுச் செய்திகளைக் கீழ்த்தட்டு மக்களிடம் புகட்டவும் அளிக்கவும் வேண்டிய தேவையாகிப் போனது. இந்த அடிப்படை உழைக்கும் வர்க்கங்களிடம் போராட்டச் செய்திகள் சென்றடைய வேண்டும் என்பதால் வாய்மொழி வழக்காறுகளும் காட்சிக் கலைகளும் நிகழ்த்து கலைகளும் உருவாயின. வளர்த்தன பெருகின. ஏனெனில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அவர்களை எட்ட முடியாதவையாகவே தனிமைப்பட்டு இருந்தன. மக்களுக்குப் புரிந்த மொழியில் இயல்பான வழக்கு நடைகளில் பாடல்கள், நாடகங்கள், ஆட்டங்கள் அமைந்தன. அக்கலைகள் மக்களின் புரிதலுக்கு ஏற்றவையாய்-போராட்டத்தின் தன்மையை அவசியத்தை எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடியனவாக உள்ளன. இவ்வாறு சமூகம் ஒவ்வொரு தடைகளைக் கடக்கும் காலங்களில் பல்வேறு கலை வடிவங்கள் வளர்ந்து வந்திருக்கின்றன.
அறிவியலையும் வரலாற்றையும் உள்ளடக்கிக் கொள்ளும் வகையில் தமிழ் இனத்தின் கலை இலக்கியங்கள் தமது சிறப்பான தன்மையினை வல்லமையை வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. இலக்கியமானது தம் மக்களின் வழக்காறுகளைக் கணக்கிட்டுக் கொண்டு சரியான மூலங்களை தேடித்தர முனைகிறது. அந்த வகையில் விமர்சனம், மேலாய்வுகளை இயல்பாக ஏற்றுக்கொள்கிறது.
தமிழகத்தில் அரசவைகளில் சமஸ்கிருத வேதக் கோட்பாடுகளும் அரசவைகளுக்கு வெளியே வாய்மொழி இலக்கியங்களான கலைகளாகப் பேதங்களை மறுதலிக்கும் போக்குடனும் வெளிப்பட்டன. அவை பார்ப்பனியப் போக்கிற்கு எதிரான தமிழரின் பங்களிப்பாகக் கலை இலக்கியங்கள் பெரிதும் உருப்பெற்றன. நாட்டுப்புறக் கலைகள் பழந்தமிழ் மரபுவழிக்கலை-இலக்கியங்களின் முதன்மை அம்சமாக விளங்கின. அவை தமிழ்க்கலை-இலக்கியத்தின் பரப்பையும் தரத்தையும் உயர்த்தி, பெரும் வீச்சினை ஏற்படுத்தியன.
மக்களின் பழைமைப் பிடிப்பு மற்றும் சமய நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு பழம்புராணக் கதைகளைத் தழுவிய நாடகப் படைப்புகளும் அதற்குரிய வடிவங்களும் படைக்கப்பட்டன. "பாய் சுருட்டி நாடகம்" எனும் காரணச் சிறப்பின் நாடகங்கள் பரந்த வெளியில் கட்டணமின்றி நிகழ்த்தப்பட்டன. அவை கோயில் விழாக்களில் பரந்த வெளியிடங்களில் தெரு முனைகளில் தீப்பந்த ஒளியில் பாட்டுப்பாடி ஆடும் தெருக்கூத்து அமைப்பு முறையிலிருந்து சற்று வளர்ச்சியடைந்த நிலையில் நடத்தப்பட்டன. இவை இசை நாடகங்களாக இயங்கின. அந்த வகையில் வள்ளித் திருமணம், பவளக்கொடி, அல்லி, அரசாணி மாலை, நந்தனார் சரித்திரம், வீர அபிமன்யு, பக்த பிரகலாதா, பாமா விஜயம், அரிச்சந்திர மயான காண்டம் போன்றவற்றைக் கூறலாம். காலணியாதிக்க எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் மக்களிடம் காலனிய எதிர்ப்புணர்வைத் தட்டி எழுப்பும் நோக்கில் மரபு சார்ந்த கலைகள் செயல்பட்டன என்பதைப் பாஸ்கரதாஸ், பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாசு சுவாமிகள் போன்றோரின் இசை நாடகங்கள் கூறும். 18-19ம் நூற்றாண்டுகளில் காலனி எதிர்ப்பும் போராட்டக் கருவிகளாகத் தமிழக நாட்டுபுறக் கலைகள் இருந்தன. வெள்ளைய€ரை விரட்ட வேண்டும் என்ற மக்களின் உணர்வுகளை வள்ளி திருமண நாடகத்தில் உவமையாகச் சொல்லிய பழம் மரபுக்கலைக் செய்திகள் நம்மிடம் ஏராளமாக இருக்கின்றன.
''.....................
ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு விக்கச்சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளக்காரன்
............................''
என நையாண்டி வகையில் எண்ணற்ற பாடல்கள் காலணி ஆதிக்க எதிர்ப்புணர்வைப் பிரதிபலித்தன. அதுமட்டுமின்றிச் சாதிய எதிர்ப்புப் போராட்டக் கலைகளாகவும், மதவெறி எதிர்ப்புப் போரட்டக் கலைகளாகவும், நாட்டுப்புற மக்களின் மரபுக்கலைகள் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வகையில் பல்வேறு மொழிவழிப்பட்ட தேசிய இனங்களும் தத்தம் கலை பண்பாட்டு வழியாகக் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி வந்துள்ளன.
இன்று கட்புலனுக்குரிய வன்முறை ஆயுதங்களன்றி ஏகாதிபத்திய சூறையாடும் தொழில் நுட்பத்தின் விளைபொருட்களாகச் செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகள் கணக்கிலடங்காவண்ணம் பெருகி வருகின்றன. அவை உலகம் முழுவதும் ஒரு புதிய ''உலக ஒழுங்கு முறை'' யை உருவாக்கி ஆதிக்கம் செலுத்துகின்றன. பன்னாட்டு முதலாளிகளின் சூறையாடும் தொழில் நுட்ப வியாபாரச் செயல்கள் உலகு தழுவிய பெரும் வாணிபங்களாகப் பெருகியுள்ளன. இந்நச் சந்தைப் பண்பாடானது. மக்களின் மரபுக்கலை இலக்கியங்களைப் பெருமளவு பாதிக்கின்றது. உதாரணமாகத் தமிழகத் கலைகள் சமஸ்கிருத மேற்கத்திய கலப்புடன் சிதைக்கப்பட்டு நம் கண்முன் வியாபாரச் சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
மொழியும் இலக்கியமும் பண்பாட்டு உற்பத்திச் சாதனங்கள். இந்த நிலையில் நமது பழமையான, நமக்குரிய மரபுக்கலைகளான நாட்டுப்புறக்கலைகள், கதைப்பாடல்கள், உழவுத் தொழிற்களப்பாடல்கள், பிற வழக்காறுகள், இசை, நாடகம், கூத்து, ஆட்டங்கள் என நம் மொழி சார்ந்த இலக்கியங்களைப் பன்னாட்டு வல்லரசியங்களின் வலைப்பின்னல் பாதித்துத் தமிழக தற்சார்பை வலிமை குன்றச் செய்துள்ளன. பண்பாட்டுச் சாதனங்களான மரபுக்கலைக் கூறுகளை, பிறர்கொண்டு சென்ற அடிப்பொருளான நமது மரபு உள்ளடக்கங்களை நாம் மீட்டமைத்துக் கொள்தல் தமிழக மக்களின் கலைப் பாதுகாப்பிற்குத் துணைபுரியும்.
"ஒருமைப்ப்‘டு", "உலகியல்", "உலகமயம்","ஒருங்கிணைவு" என்ற சொற் ஜாலங்கள் மூலம் நமது கலைகள் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றுள் நம் கலைகளின் நுட்பங்களைத் தேடுதல் மிக அத்தியாவசியமான ஒன்று. மறைமுகமான வழிகளில் சமஸ்கிருத மொழி ஆதிக்கம் போலி அழகியல் தன்மைகளுடன் மூடப்பட்டுக் கிடக்கின்றன. அரசியல் பொருளாதார முகங்களைப் போல் வெளிப்படையாக நம்மால் காண இயலாதவாறு பண்பாட்டு அடிமைத்தனங்கள் நம்மீது திணிக்கப்பட்டுள்ளன. கிராமங்களுக்குச் சென்று உழைக்கும் வர்க்கத்திடமும் நின்று நிலவும் வாய்மொழி வழக்காறுகள் அனைத்தையும் திரட்ட வேண்டும். அந்த முயற்சியே பெரும் போராட்டம்தான். பார்ப்பனிய ஆதிக்க கட்டமைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் சமூகப் போக்குகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தொடங்கிவிட்டன. இன்று அது ஒரு சிறப்புக் கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கான தமிழ்த்தேசிய உணர்வுகள் நம்மிடையே அறிவியல்பூர்வமாகக் கனன்று கொண்டிருக்கின்றன. இவ்வேளையில் நமது மரபுக்கலை வடிவங்களும் உள்ளடக்கங்களும் கலை இலக்கிய மறுமலர்ச்சிக்காக திரட்டப்பட வேண்டும்.
நன்றி: வேர்களைத் தேடி
கருத்துகள்