03/09/2011

மொழிப் பயிற்சி – 24 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

"நான்கு கட்டுரைக் கொண்ட இந்த நூலில்' என்று ஒரு தொடரைக் கண்ணுற்றேன். "கட்டுரைக்கொண்ட' - சொல்லிப் பாருங்கள். இயல்பாக உள்ளதா? இல்லை! ஏன்? அது "கட்டுரை கொண்ட' என இயல்பாக இருத்தல் வேண்டும். நான்கு கட்டுரைகளைக் கொண்ட - என்று வேற்றுமை உருபு விரிந்து வரும்போது வல்லொற்று மிகுதல் தானாகவே ஏற்படுகிறது.

இப்படி மற்றொன்று: "ஆழ்க்கடல் ஆய்வு செய்யும் குழுவினர்' என்று அறிஞர் ஒருவர் நூலில் படித்தேன். இஃது ஆழ்கடல் ஆய்வு என்று வல்லொற்று மிகாது அமைதல் வேண்டும். இதனை வினைத்தொகை எனலாம். ஆழமாய் இருந்த கடல், ஆழமாய் இருக்கும் கடல், ஆழமாய்ப் போகும் கடல். முக்காலத்தும் கடல் ஆழம் உடையதே. கடல் ஆய்வு பற்றிய நூலில் நாம் சொல்லாய்வு செய்கிறோம்.

"ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதிப் பெற்றுள்ளன' இப்படி ஒரு செய்தி படித்தோம். பாசன வசதி பெற்றுள்ளன என்று ஒற்று நீக்கி எழுதிட வேண்டும். பாசன வசதியைப் பெற்றுள்ளன எனில் சரியாம். வசதியை (ஐ) இரண்டாம் வேற்றுமை உருபு விரி என்று சொல்லுவோம். இவ்விடத்து வல்லொற்று மிகும்.

சற்றே கவனம் போதுமே:

ஒருமை பன்மை வேறுபடும் நிலைகளை நாம் முன்னரே விரிவாக எழுதியுள்ளோம். ஆயினும் மேலும் மேலும் ஒருமை, பன்மைச் சிதைவுகளைப் பார்க்கும்போது மீண்டும் எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது.

"இந்தியாவின் கவலைகள் தெரிவிக்கப்பட்டது' என்று செய்தி படிக்கிறார்கள். கவலைகள் என்று பன்மையில் உள்ளதே, தெரிவிக்கப்பட்டன எனப் பன்மையில் முடிப்போம் என்று ஏன் அவர் உணரவில்லை. சற்றே கவனம் செலுத்தினால் போதுமே.

பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சியில் சிலப்பதிகாரம் பற்றி உரையாற்றுகிறார். தமிழில் ஒருமை, பன்மை என்று ஓர் அமைப்பு உண்டு. அதனை இலக்கணம் உரைக்கிறது என்ற நினைவே தோன்றாதா? ஆங்கிலத்தில் ஒருமை பன்மை கெட வாக்கிய அமைப்புகள் செய்வார்களா?

சிலப்பதிகாரத்தில் மூன்று காண்டங்கள் உள்ளது. அக்காப்பியத்தில் முப்பது காதைகள் உள்ளது. அதில் மூன்று நீதிகள் சொல்லப்பட்டுள்ளது.

மூன்று தொடர்களிலும் இப்படித் தவறு செய்கிறாரே! தப்பித் தவறி ஒருமுறையாவது உள்ளன என்று சரியாகச் சொல்லமாட்டாரா என்று மனம் ஏங்குகிறது.

ஓர் இலக்கிய விழா அழைப்பிதழில் பேராசிரியர் ஒருவர் பெயரைத் தவறாக அச்சிட்டிருந்தார்கள். எப்படி? சிட்சபேசன் என்று. அவர் பெயர் சித்சபேசன். சித்+ சபை+ ஈசன் = சித்சபேசன். சித் என்பது அறிவு. அறிவாளர் அவைக்குத் தலைவன் அவன். தில்லைப் பொன்னம்பலத்தையே சித்சபை என்போம். அந்த நடராசப் பெருமானே சித்சபேசன். இந்த அருமையான பெயரை இப்படிச் சிதைக்கலாமா?

தனித்தமிழ் நாளேடு ஒன்றில் போனஸ் - கொடுபடா ஊதியம் என்று தமிழ்ச்சொல் அளித்திருந்தார்கள். ஊதியப் பாக்கியைத்தான் (அரியர்ஸ்) கொடுபடா ஊதியம் என்று சொல்லுதல் பொருந்தும். போனஸ் என்பது ஆக்கத்தில் (இலாபத்தில்) தரப்படும் பங்குப் பணம். அஃதாவது, ஊதியத்தின் மேல் தரப்படும் மேலூதியம் ஆகும். உயர்படிப்புக்காகத் தரப்படும் இன்சென்டிவ் என்பதை ஊக்க ஊதியம் எனலாம்.

கருத்துச் சிதைவுகள்:

கண்ணகி கோவலனோடு சில மாதங்களே குடும்பம் நடத்தினாள் என்று ஒருவர் பேசக் கேட்டேன். சில மாதங்கள் அன்று; சில ஆண்டுகள் கண்ணகி கோவலனோடு அன்புற்று இன்புற்று வாழ்ந்தாள் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. தனிமனை வாழ்க்கையில் யாண்டு சில கழிந்தன கண்ணகி தனக்கு என்பார் இளங்கோவடிகள். உலகின் நிலையாமையை உணர்ந்து எல்லா இன்பமும் இப்போது துய்த்திட வேண்டும் என்பது போல் இன்பம் துய்த்தார்களாம்.

"கருத்து யுத்த'மாம்; இப்படி ஒரு பேச்சு நிகழ்ச்சி. ஏன்? கருத்துப் போர் எனில் யாருக்கும் புரியாதோ? போரைவிட யுத்தம் பெரிது என்று கருதினார்களோ? நல்ல தமிழிருக்க யுத்தத்தில் நாட்டம் ஏனோ? இது போகட்டும். நாம் எழுத நினைத்தது வேறு ஒன்று. அது நிகழ்வில் பேசிய ஒருவர் சொல்லிய கருத்து. அவர் சொன்னார்: ""அரண்மனைக்கு வந்த சோதிடன் ஒருவன் இளங்கோ அரசனாவார், அவர் தம்பிக்கு அரசாட்சி இல்லை என்றபோது, இளங்கோ தம்பி அரசாளட்டும் என்று சொல்லித் துறவியானார்''.

கதையையே மாற்றிவிட்டார்.

மூத்தவன் இருக்க இளையவன் அரசனாவான் என்றான் சோதிடன். இளங்கோவுக்கே அரசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டென்றான். அண்ணன் செங்குட்டுவன் மனம் நோகும் என்பதால், அப்போதே அரண்மனை விட்டகன்று துறவு மேற்கொண்டார் என்பது வரலாறு.

(தமிழ் வளரும்)

நன்றி - தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: