04/09/2011

மொழிப் பயிற்சி – 38 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

ஒரு தமிழ் ஆர்வலர் நம்மிடம் பேசும்போது பலமுறை இப்படிச் சொல்லியுள்ளார்: "வடச்சொல் கலவாமல் பேச வேண்டும்..' ஐயா, இது வடச்சொல் அன்று; வடசொல் என்று அழுத்தாமல் சொல்லுங்கள் என்று நாமும் பலமுறை சொல்லிவிட்டோம். மனிதர் மாற்றவில்லை. என் செய்வது? அவருக்கு லகர, ளகர உச்சரிப்பும் சரியாக வருவதில்லை. புளி வாளைப் பிடித்த கதைதான் என்றாரே ஒருநாள். சிரிப்புத்தான்; வேதனைச் சிரிப்பு. புலி - புளியாகவும், வால் - வாளாகவும் அவர் ஒலிப்பில் மாறி நம்மைக் கொல்கின்றன.

இந்த நிகழ்வுகள் யாவும் உண்மையில் நிகழ்ந்தவை. ஒன்றும் கற்பனையன்று. சற்றே அக்கறையோடு முயன்றால் இத்தகைய பிழைகளைத் தவிர்த்துப் பேச முடியும். எழுத முடியும்.

அண்மையில் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றிருந்தோம்.

"பக்தர்கள் தவரவிடும் பொருள்களுக்கு ஆலய நிர்வாகம் பொருப்பல்ல' என்று பலகை எழுதி வைத்துள்ளார்கள். எல்லாரும் தமிழை முறையாகப் படித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாதுதான். ஆனால் ஒரு பட்டதாரியான செயல் அலுவலர் அங்கிருப்பாரே- அவர் பார்த்திருக்கமாட்டாரா? பார்த்தும், அவருக்கும் தவறு தெரியவில்லையா?

"பக்தர்கள் தவற விடும் பொருள்களுக்கு ஆலய நிர்வாகம் பொறுப்பன்று' எனத் திருத்தி எழுதுங்கள் என்று எழுதிக் கொடுத்து வந்தோம். திருத்தி எழுதியிருப்பார்களா?

ஓர் இலக்கியக் கூட்டம். நாம் தலைமையேற்றிருக்கிறோம். கல்வியின் சிறப்பு, மேன்மை பற்றி பேசினார் ஒருவர்.

"யாதானும் நாடாமல் யாதானும் ஊராமல்

சாந்துணையும் கல்லாதது ஏன்?' என்று திருக்குறளைச் சிதைத்து வினாவெழுப்பினார். நாடாமல்- விரும்பாமல், தேடிச் செல்லாமல், ஊராமல்- என்ன பொருள் என்றே சொல்ல முடியவில்லை. (ஊர்ந்து செல்லாமல் எனலாமோ?)

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு' என்பது திருக்குறள்.

கற்றவர்க்கு எல்லா நாடும் எல்லாம் ஊரும் தம் சொந்த நாடாகவும், சொந்த ஊராகவும் ஆகிவிடும். அவ்வளவு சிறப்புமிக்க கல்வியைச் சாகும் வரையில் ஒருவன் கல்லாதிருப்பது ஏன்? நாடு+ஆம்+ஆல் ஆல் என்பது அசை நிலை (பொருளற்றது)

ஊர்+ஆம்+ஆல் ஆல் என்பது அசைநிலை. நாடாம், ஊராம் என்பது பொருள்.

கையெழுத்தும் கையொப்பமும்

"கடிதத்தில் கிருஷ்ணமூர்த்தியின் கையெழுத்து இல்லை. என்றாலும் அவரது கையெழுத்தையும், கடிதத்தில் உள்ள கையெழுத்துகளையும் சரி பார்த்தபோது இரண்டும் பொருந்தி வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்' - இது பத்திரிகைச் செய்தி.

இச்செய்தியில் கையெழுத்து எனும் சொல் இரண்டு பொருளில் ஆளப்பட்டுள்ளது. ஆனால் புரிந்து கொள்ள இயலாதவர்க்கு ஒரே குழப்பமாக இருக்கும். இதனை: கடிதத்தில் கிருஷ்ணமூர்த்தியின் கையொப்பம் இல்லை என்று மாற்றிவிட்டால் செய்தி தெளிவாகிவிடும். கையொப்பத்தையும் கையெழுத்து என்று எழுதுவதால் குழப்பமே உண்டாகும். ஒருவர் ஒரு கடிதம் எழுதுகிறார். கடித வாசகம் அவர்தம் கையெழுத்தினால் ஆனது. அவ்வாசகத்தின் முடிவில் தம் பெயரை ஒப்பமிடுகிறாரே - அது கையொப்பம்.

சில்லென்று காற்று - ஓர் ஆராய்ச்சி:

"சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே

நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனாலே'

இந்தப் பாடல் வரிகள் பலருக்கும் தெரியும். திரைப்பாடலாகப் பாடப்பட்டிருப்பினும் தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் இருக்கும் தமிழ்ப்பாட்டு இது. தண்ணி சில்லுன்னு இருக்கு என்று பேசுகிறோம். "சில்லுன்னு காத்து வீசுது' என்பதுவும் பேச்சு வழக்கில் உள்ளது. இந்தச் சில் தமிழா? தமிழில் சில் என்பதற்கு அற்பம், சிதறிய பகுதிகள், சில எனும் பொருள்கள் உண்டு. சில்+சில= சிற்சில. சில்லறை (பாக்கி, சொச்சம்)வழக்கத்தில் உள்ளது. ஆங்கிலத்தில்தான் Chill எனும் சொல் மிகக் குளிரானது எனும் பொருளில் காணப்படுகிறது. சிலுசிலுவென நீர் ஓடியது- சில் ஒலிக்குறிப்பாய் வருதல் உண்டு.

"சும்மா ஜில்லுன்னு இருக்கணும்' "ஜில் ஜில் ஜிகர்தண்டா' என்பன மிகக் குளிர்ச்சியைக் குறிக்க நம் புழக்கத்தில் உள்ள கிரந்த எழுத்தோடு (ஜி) கூடிய சொற்கள். சிலீர்னு காற்றடிக்குது என்றும் சொல்கிறோம். இந்தச் சில், சிலீர், ஜில், Chill எல்லாம் ஒன்றா?

ஒரே மாதிரிச் சொற்கள் பலமொழிகளில் இருப்பது உண்மையே. ஆயினும் தமிழ் மிகத் தொன்மைவாய்ந்த மொழி. தமிழிலிருந்து பல சொற்கள் பிறமொழிகளில் கலந்துள்ளன. குறிப்பாகத் தமிழிலிருந்து ஆங்கிலம் ஆகி, மீண்டும் அது தமிழ் வடிவம் பெற்றமையும் உண்டு.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: