கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

போர் நடந்தது - பெண்ணுக்கா? மண்ணுக்கா? - முனைவர் அ.செல்வராசு

பெண்களைக் காரணமாக வைத்து ஒரு நாட்டின் மீது போர் தொடுத்த நிகழ்வை சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. புறநானூற்றில் இடம்பெற்றுள்ள 19 பாடல்கள் வீரர் குடியைச் சேர்ந்தோரிடம் பெண்கேட்டு போர் தொடுக்கும் வேந்தர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அப்பாடல்கள் அனைத்திலும் "பெண் கொடுக்க மறுக்கும்' வீரர் குடியினரைத்தான் காண முடிகிறது. புறநானூற்றில் உள்ள "மகட்பாற்கிளவி' என்னும் துறை மேற்சுட்டிய பொருளுடைய பாடல்களாக உள்ளன. இத்துறைக்குரிய பாடல்களாக 19 பாடல்கள் உள்ளன. சான்றுக்கு ஒரு பாடல்,

""வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே

கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்

ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்

களிறும் கடிமரம் சேரா, சேர்ந்த

ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே

இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,

அன்னோ பெரும் பேதுற்றன்று,

இவ்வருங்கடி மூதூர்

அறன் இலன் மன்றத்தானே - விறன்மலை

வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்

முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்

தகை வளர்ந்து எடுத்த நகையொடு

பகைவளர்ந்து இருந்த இப்பண்பு இல்தாயே!

(புறம்-336)

"பெண் கேட்டு வந்த வேந்தனும் வெஞ்சினத்தினன். இவள் தந்தையும் குறிப்பிட்ட காலத்தில் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. யானைகளும் சீறி நிற்கின்றன; போர் மறவர்களும் சீறி நிற்கின்றனர். பல்வேறு இசைக் கருவிகளின் ஒலி கேட்கும் இந்த நகரில் இப்போது கலகக் குரல்தான் கேட்கிறது. இவள் தாய், மகனை வளர்த்ததோடு மட்டுமல்லாமல் பகையையும் சேர்த்தே வளர்த்துவிட்டாள். அவள் பண்பும் அறனும் இல்லாதவள்' என்பதே மேற்கண்ட பாடலுக்கான பொருள்.

÷ பிற "மகட்பாற்காஞ்சி' பாடல்கள் அனைத்தும் ஏறக்குறைய இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன. இப்பாடல்களில் வேந்தர்கள் குறிப்புகள் காணப்படுகின்றன என்றாலும், அவர்களது நோக்கம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதன்று. மாறாக, வீரக்குடியினர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியைக் கைப்பற்றுவதேயாகும். பெண் கேட்டுப் போரெடுத்துச் சென்று வெற்றிபெற்ற பிறகு, யாருக்காகப் போரெடுத்துச் சென்றனரோ அந்தப் பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டதாகச் சான்றுகள் இல்லை.

÷மகட்கொடை வேண்டி பாரியின் மீது மூவேந்தர்களும் போர் தொடுத்து, பாரி பெண் தர மறுக்கவே, அவனை மூவேந்தர்களும் கொன்றுவிடுகின்றனர். மூவேந்தர்களும் பாரி மகளுக்காகத்தான் போர் தொடுத்தனர் என்றால், பாரியைக் கொன்ற பிறகு பாரி மகளிரை மூவேந்தர்களுள் யாராவது ஒருவர் திருமணம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை.

பெண் கேட்டுப் போர் தொடுத்த மூவேந்தர்களின் நோக்கம், பாரியின் நாட்டைக் கைப்பற்றுவதாவே இருந்துள்ளது. பெண்கேட்டல் என்பது மறைமுகமாக நாட்டைக் கேட்டல் என்பதாகவே உள்ளது. போர் தொடுப்பதற்குப் பெண்ணைக் காரணம் காட்டியுள்ளனர். பெண் கேட்டு நாட்டைக் கைப்பற்றியது போன்றே, பிறகு நாட்டைக் கைப்பற்றியவுடன் அந்நாட்டுப் பெண்களையும் கவர்ந்துள்ளனர். ஆக, பெண் கேட்டுப் போர் தொடுக்கிறோம் என்ற பெயரில் நாட்டைக் கைப்பற்றுவதையே அக்கால வேந்தர்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.

நன்றி – தமிழ்மணி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ