கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

தமிழகக் கோயில்களில் தமிழுக்கு உரிய இடம் இல்லை - முனைவர் ந.இரா.சென்னியப்பன்

வழிபாடு மிகத் தொன்மையானது, வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு இன்றுவரை வழிபாடு பல்வேறு முயற்சிகளில் நடைபெற்று வருகின்றது. வழிபடுதெய்வம், கடவுள் வாழ்த்து முதலியன தொல்காப்பியத்தில் சுட்டப்படுகின்றன. இயற்கையைத் தமிழர் வழிபட்டனர் என்பார் திரு.வி.க இயற்கையான சூழலில் மரத்தின் கீழ் கடவுள் உருவத்தை அமைத்து வழிபட்டு வந்துள்ளனர். ''கள்ளிநிழற் கடவுள் வாழ்த்தி'' என்பது புறநானூறு. திருக்கோயில் உருவ வழிபாடு வேதங்களில் கூறப்படாதவை என்பார் டாக்டர் இராதாகிருட்டிணன். கோயில் வழிபாட்டில் சாதிவேறுபாடு இல்லை. ஆசிரியர் வருவதற்கு முன் தமிழகத்தில் சாதி வேறுபாடுகளில்லை. (Before the arrival of tha Aryans there was no caste system in Tamil country-by M.Srinivasa Aiyangar- Tamil Studies-P.61).

இயற்கைச் சூழலில் அமைந்த தமிழகக் கோயில்களில் மக்கள் அனைவரும் வழிபட்டிருந்தனர். ஆனைக்கா-ஆனை, சிலந்தி வழிபட்டன. எறும்பியூர்-எறும்பு வழிபட்டது, நாரையூர்-நாரை வழிபட்டது, தேவன்குடி-நண்டு வழிபட்டது, குரங்கனில்முட்டம்-குரங்கு அணில், காக்கை வழிபட்டன. மயிலாடுதுறை, மயிலாப்பூர்-மயில் வழிபட்டது. வலிவலம்- கரிக்குருவி வழிபட்டது, கழுக்குன்றம்-கழுகு வழிபட்டது, கரவீரம்-கழுதை வழிப்பட்டது, ஈங்கோய்மலை-ஈ வழிபட்டது, பாதளீச்சரம்-பாம்பு வழிபட்டது, பெண்ணாடம்-பெண், பசு, யானை வழிபட்டன. இத்தகைய அஃறிணை உயிரினங்கள் வழிபட்ட கோயில்கள் ஏராளம் உள்ளன. அவையெல்லாம் சமசுக்கிருத மந்திரங்கள் சொல்லியா வழிபட்டன?

கோயில் வழிபாட்டை விரிவாகக் கூறும் நூல் திருமந்திரம் ஆகும். எந்திரங்கள், மந்திரங்கள் பற்றித் திருமூலர் பலவற்றைப் பாடியுள்ளார்.

''பேர்கொண்ட பார்ப்பான் பிறான் தன்னை அர்ச்சித்தால்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே

சீர்கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே'' (திருமந்திரம்-511)

இந்தப் பாடலுக்கு தருமை ஆதீனப் புலவர், மகாவித்துவான் திரு.சி. அருணை வடிவேல் முதலியார் மிக அருமையான விரிவான உரை எழுதியுள்ளார்.

. . . வடமொழி தென்மொழி என்னும் மொழி வேறுபாடும், ஆதிசைவர், பிறசைவர் என்னும் இனவேறுபாடும் இன்றி இருமொழிகளாலும் அனைத்துச் சைவமும் திருக்கோயிலில் சிவபிரானைப் பல் வகையாலும் நாள்தோறும் முறைவகுத்துக் கொண்டு வழிபாடு செய்தல் வழக்கத்திலிருந்தமை நன்கறியப்படுதலால், அதற்கு மாறாக ஆதிசைவர் ஒருவர்தாம் வடமொழியிலே திருக்கோயிலில் வழிபாடு செய்தற்குரியர் எனக் கட்டளை வகுத்தல் விருத்திப்பொருட்டாகச் செய்யப்பட்டது என்றே கொள்ளப்படும். இன்னோரன்ன கட்டளைகள் கங்கைகொண்ட சோழன் (முதல் இராசேந்திர சோழன்) காலத்திற்குப் பிறகே தமிழ்நாட்டில் தோன்றினவாதல் வேண்டும். ஏனெனில் ''அச்சோழ மன்னன் கங்கைக் கரையிலிருந்து ஆதிசைவர் பலரைக் கொணர்ந்து தமிழ்நாட்டில் ஆங்காங்குக் குடியேற்றினான் என்பது சித்தாந்த சாராவளி உரையிலேயே சொல்லப்பட்டு உள்ளது....'' என்பது அவ்வுரையின் ஒருபகுதி.

தருமபுர ஆதீன வெளியீட்டில் இச்செய்தி வருகின்றது.

''திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர் முதலிய அருளாசிரியர்கள் காலத்தில் திருக்கோயில்களில் நிகழும். வழிபாட்டு நிகழ்ச்சியில் தமிழ்மொழியே முதலிடம் பெற்று விளங்கியது. இறைவனது பெருங்கருணைத் திறத்தை வியந்துபோற்றும் பத்திமைப் பாடலாகிய இசைத் தமிழ்ப் பாடல்கள் அக்காலத்தில் சிறப்பிடம் பெற்றன....

இறைவன் அருளிச் செய்தனவாகப் பாராட்டப்படும் வேதங்களை ''எழுதாக் கிளவி'' எனவும் இறைவனது திருவருள் பெற்ற திருஞான சம்பந்தப் பிள்ளையார் முதலிய பெருமக்கள் இனிய தமிழாற்பாடியருளிய இத்திருமுறைகளை ''எழுதும் முறை'' எனவும் வழங்குதல் மரபு. வண்டமிழால் எழுது மறைமொழித்த பிரான் எனப் பெரிய புராணமும் எழுது மறை மொழிந்த கழுமல முனிவன் எனத் தில்லைக் கலம்பகமும் திருஞானசம்பந்தப் பிள்ளையாரைப் போற்று முகமாக அவர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களை எழுதுமறை எனச் சிறப்பித்தல் காண்க.

வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனாகிய முழுமுதற்கடவுளைப் ''பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே'' எனத் திருஞானசம்பந்தர் தம்முடைய தந்தை யார்க்குக் கையாற் சுட்டிக்காட்டிய எளிமையும் இனிமையும் உடைமையானும், அடியார் இறைவன் பால் வேண்டிய வேண்டியாங்குப் பெறுதற்குத் துணைபுரிந்தும் உலக மக்களது தீராத நோய் தீர்க்கும் மந்திரங்களாகியும், காணுதற்கரிய கடவுளை உலக மக்கள் கண்காணக் காட்டியும் இறைவனது திருவருளை உலகத்தார்க்குத் தெளிவாக விளக்குவன ஆதலானும் வேத நூல்களிலும் மேம்பட்டு விளங்குவன இத்தெய்வத் தமிழ் திருமுறைகள் என்பர் பெரியோர்.

''நிறைமொழி மாந்தராகிய அருளாசிரியர்களால் திருவாய் மலர்ந்தருளப் பெற்ற இத்திருமுறைகள் நன்மை பெருகவும் தீமை நீங்கவும் வேண்டிய மறுமொழிகளாகிய தமிழ் மந்திரங்கள் என்பது அப்பெருமக்களது வரலாற்றினால் இனிது விளங்கும். மந்திரம் என்பது தன்னைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது என்னும் பொருளுடையது என்பர். தமிழ் மந்திரங்களாகிய இத்திருமுறைகளை அன்பினால் ஓதியுணரும் இயல்புடையோர் இவ்வுல வாழ்க்கையில் நேரும் எல்லாத் தீங்கினையும் நீங்கி எல்லா நலங்களையும் பெற்று இன்புறுவர்.''

மேற்குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் திருப்பனந்தாள் திருமடத்தின் அறக்கட்டளையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்திய் நிதியில் பன்னிருத் திருமுறை வரலாறு - முதல் பகுதியாக ஆராய்ச்சிப் பேரறிஞர் சு.வெள்ளை வாரணார் எழுதி வெளிவந்த நூலில் உள்ளன.

தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைவரும் வழிபட்டுள்ளனர்; சாதி வேறுபாடு மொழி வேறுபாடு இல்லை என்பது புலனாகின்றது. தமிழ்த் திருமுறைகள் மந்திரங்களே என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையும் தெளிவாகின்றது. எல்லா மொழியாலும் வழிபாடு செய்ததைத் தேவாரமும் குறிப்பிடுகின்றது.

மகளிர் கருவரையில் சென்று வழிபட்டதைத் திருப்பனந்தாள் தாடகை வரலாறு, திருநீல நக்கநாயனார் வரலாறு, திருமுருகன், பூண்டிக் கல்வெட்டு ஆகியன விளக்கமாகக் கூறியுள்ளன.

இந்தியாவில் 12 சோதிலிங்கங்கள் உள்ளன. கேதாரம், காசி, திரியம்பகம், சோமநாதம், திருப்பருப்பதம் முதலிய 11 சோதிலிங்கங்களைக் கருவறையினுள்ளே சென்று நாமே வழிபடலாம். எந்தமொழியிலும் தோத்திரம் சொல்லி வழிபடலாம். 12 சோதிலிங்கங்களில் தமிழ் நாட்டில் உள்ள இராமேசுவரம் ஒன்று. இந்தியாவில் உள்ள 12 சோதிலிங்கங்களில் வடக்கே உள்ள 11 சோதிலிங்கங்களில் அனைவரும் கருவறையில் சென்று எந்த மொழியிலும் யார் வேண்டுமானாலும் வழிபடலாம். இராமேசுவரத்தில் மட்டும் கருவரையினுள் மற்றவர்கள் செல்லக்கூடாது. வடமொழியில் மட்டுந்தான் மந்திரம் ஓதல் வேண்டும்.

தமிழகக் கோயில்களில் தகுதியுள்ள அனைவரும் அருச்சகர்களாகவும், கருவறையினுள் அனைவரும் சென்று வழிபடுபவர்களாகவும் ஆக்கப் பெற்றால் தமிழ் வழிபாட்டிற்கு விடிவுகாலம் உண்டாகும்.

நன்றி: தமிழர் கண்ணோட்டம்

கருத்துகள்

சிவஸ்ரீ. விபூதிபூஷண் இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழக கோயில் வழிபாட்டில் தமிழின் நிலையை வரலாற்று நோக்கில் இலக்கிய ஆதாரங்களோடு ஐயா சென்னியப்பனார் அருமையாக எழுதியுள்ளார்.
தமிழில் இறைவனை வழிபடுதல் சிறந்தது மிக மிக உயர்வானது. ஆண்டவனை அனைவரும் ஆலயத்தின் கருவரையில் சென்றே வழிபாடு செய்யலாம். அடியேன் கூட ஸ்ரீ சைலத்தில் கருவரையில் வழிபட்டேன். இது போன்றே தமிழகத்திலும் வேண்டும் என்பது மிக மிக நியாயமானது.
தமிழகத்தில் தமிழ் வழிபாட்டை பரப்ப மக்களியக்கம் இப்போது செயலில் உள்ளது. ஆனால் ஐயாவைத்தவிர வேறு யாரும் அனைவரும் ஆலயத்தில் கருவரையில் நேரடியாக நீராட்டி மலரிட்டு வழிபட உரிமை வேண்டும் என்று கூறுவதில்லையே
என்பதுதான் எனது வேதனை. தமிழ் வழிபாடு சார்ந்த நூல்களை ப்படித்துவருகிறேன் அதில் அனைவரும் வழிபட முடியும் என்பதை யாரும் சொல்லவில்லை என்பது எனது வருத்தம். சிவாகமங்களில் நேரடி வழிபாட்டிற்கு தடை உளதோ என்பது தெரியவில்லை.

திருனாவுக்கரசர் பெருமான்
"ஐயாரடைகின்ற போது போதொடு நீர் சுமந்தேத்தி புகுவார் அவர்பின் புகுவேன்" என்று பாடியுள்ளார் அந்தப் பாடலைப் படித்தது முதல் அனைவரும் தமிழகத்தில் ஏன் தென்னகத்தில் அப்பரடிகள் காலத்தே நேரடியாக நீராட்டி மலரிட்டு வழிபட்டதை அறிந்து அதைப்போற்றுகின்றேன். கோவைப் போரூர் சாந்தலிங்க அடிகள் திருமடத்தில் சமய தீக்கைப் பெறுவதற்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சிவராத்திரி அன்று சென்றேன். அங்கு பெரிய அடிகளார் முன்னிலையில் முட்டம் ஸ்ரீ நாகேஸ்வரர் ஆலயத்தில் அனைவரும் நேரடியாக வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ் வழிபாடு நிகழ வேண்டுமெனில் முதலில் நேரடி சிவாலய வழிபாடு நிகழ வேண்டும். அந்த உரிமைக்கு போராட தமிழ் வழிபாட்டு இயக்கத்தினர் முன்வரவேண்டும்.

சிவஸ்ரீ. விபூதிபூஷண்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ