03/09/2011

மொழிப் பயிற்சி – 14 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

மரபுவழிப்பட்ட செவிகளில் உறுத்தலாக ஏதாவது ஒலி கேட்டால் மனம் வருந்துகிறது. கூடியிருந்தனர் என்பதில் "அர்' ஒலியை முழுமையாக ஒலிக்காமல் "ன' உடன் முடிப்பவர் பற்றி முன்னர் எழுதியுள்ளோம். வேறு சிலர் அரை மாத்திரையில் ஒலிக்க வேண்டிய குற்றியலுகர ஒலியை முழு மாத்திரையளவு ஒலித்து குற்றியலுகரம் எனும் இலக்கணத்திற்குப் பொருள் இல்லாமல் ஆக்கிவிடுகிறார்கள். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் (த்+உ) உகரம் முழுமையாக ஒலிக்காது. ஆனால் சிலர் இந்த உகரத்தை அழுத்தி தூஉ என அளபெடையிட்டு ஒலிக்கிறார்களே (செய்திகளைப்  படிப்பவர்கள் சிந்திப்பார்களா?)

பேச்சாளர் சிலர் அறிஞ்சர், கலைஞ்சர் என்றோ, அறிநர், கலைநர் என்றோ உச்சரித்துப் பேசுகிறார்கள். காதில் வந்து தேள் கொட்டுவதுபோல் இருக்கும் அந்த நேரங்களில். சற்றே முயற்சி செய்தால் சரியாக உச்சரிக்க முடியும். முயற்சி செய்வார்களா?

(P) பம்பரத்தை (B)  பம்பரம் என்றும் (k)குடிசையை (g) குடிசை என்றும் (k) கும்பல் (g) கும்பல் என்றும் (Poo) பூம்புகாரை (boo) பூம்புகார் என்றும் மிகப்பலர் } குறிப்பாகச் சென்னையில் வாழ்வோர் } ஒலிக்கிறார்கள். போல இருக்கும் (po) போலியை (bo)போலி என்றும், வேறொன்றும் இல்லாது காற்று (கால்) உள்ள இடத்தைக் காலி (ka) என்று சொல்லாமல் காலி (ga) என்பதும் கேட்கப் பொறுக்கவில்லை. உன்னால் (ba) பயனில்லை என்று பேசுவதைக் கேட்கும்போது நாம் என்ன எழுதி என்ன (pa) பயன் என்று எண்ணத் தோன்றுகிறது.

மரியாதை அடைமொழிகள்:

மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபாதேவி பாட்டீல், மேதகு தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி- இவ்வெடுத்துக்காட்டுகள் மூன்றும் பிழையற்ற வாக்கிய அமைப்பை உடையவை. இவ்வமைப்பைச் சற்றே மாற்றி இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு பிரதிபாதேவி பாட்டீல், தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித்சிங் பர்னாலா, தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி என்றெழுதினால் இவை பொருட்பிழை கொண்ட வாக்கியங்களாகும்.

மேதகு எனில் "மேன்மை தங்கிய' என்று பொருள். மாண்புமிகு எனில் மாட்சிமை மிகுந்த என்பது பொருள். ஆங்கில மொழியின் தாக்கத்தால் தமிழில் உருவாக்கப்பட்ட நல்ல தமிழ்ச் சொற்கள் இவை. கனம், மகாகனம் போன்ற சொற்கள் நாம் பயன்படுத்திய வட சொற்கள். இந்த மரியாதைக்குரிய அடைமொழிகள் அவற்றைத் தாங்குகின்ற பதவிப் பொறுப்புகளுக்கேயன்றி, பொறுப்புகளை ஏற்றுள்ள ஆள் (நபர்)களுக்கு அல்ல. பதவிப் பொறுப்புகள் பறிபோகுமானால் அடைமொழிகளும் போய்விடும். ஆதலின் மாண்புமிகு, மேதகு போன்ற ஆட்சிசார்ந்த அடைமொழிகளை ஒருவர் பெயரோடு சேர்த்து எழுதுகின்ற, பேசுகின்ற முறையை விட்டுவிடுக.

கீர்த்தி எனில் புகழ். கீர்த்தி எனும் வடசொல்லுக்கு நிகரான தூய தமிழ்ச் சொல் சீர்த்தி. உயர்ந்த பெருமைகளுக்கு உரியவரைப் பாராட்ட சீர்த்திமிகு எனும் அடைமொழியைப் பயன்படுத்தலாம். மிக்க புகழும், பெருமையும் உடைவர்களைப் பாராட்ட  உயர்சீர்த்தி எனும் அடைமொழியைப் பயன்படுத்தலாம். இச்சொல் சங்க இலக்கியத்துள் காணப்படும் பழந்தமிழ்ச் சொல்.

துறவுநிலையில் மேன்மையுற்ற ஆதினங்கள், திருமடங்களின் தலைவர்கள் பெயருக்கு முன்னே ஸ்ரீ-ல-ஸ்ரீ என்று முன்னர் எழுதி வந்தோம். இப்போது நல்ல தமிழில் தவத்திரு என்றோ சீர்வளர் சீர் என்றோ சொல்லி வருகிறோம். தவத்திரு என்பதில் தவம் - தவநிலையைக் குறிப்பதோடு தவ என்னும் உரிச்சொல்லாக நின்று மிகுந்த எனும் பொருளையும் காண்க.

கிறித்துவப் பாதிரியார்கள் பெயர்களின் முன்னே அருள்திரு என்றோ அருள்தந்தை என்றோ அடைமொழி சேர்க்கப்பட்டு வருகிறது. சிலர் இவற்றை எழுதும்போது அருட்திரு என்றும், அருட்தந்தை என்றும் எழுதுகிறார்கள். நிலை மொழி இறுதியில் லகர, ளகரம் இருப்பின் (ல்,ள்) வருமொழி முதலில் க,ச,த,ப வரும்போது இந்த ல்,ள் என்பவை ற், ட் ஆகத் திரியும் என்பது பொதுவிதி.

(எ-டு) பல் +பொடி= பற்பொடி

முள்+செடி=முட்செடி

ஆனால் வருமொழி முதலில்  தகரம் (த)வரின் அதுவும் றகர, டகரமாக மாறும் என்பது நுணுக்கமான ஒன்று.

(எ-டு) புல்+தரை= புற்றரை

வாள்+தடங்கண்= வாட்டடங்கண்

மிகவும் கடினமாகப் போவதுபோல் தோன்றுகிறதா? சற்றே மனம் செலுத்துங்கள். எளிதில் புரியும்.

என்ன சொல்கிறோம் என்றால் அருட்தந்தை, அருட்திரு என எழுதுதல் பிழையாம். பின்? அருட்டந்தை, அருட்டிரு என எழுதுதல் பிழையற்றதாம். எதற்கு வம்பு என்று எண்ணினால் இயல்பாக அருள்தந்தை, அருள்திரு என்று எழுதிவிடுங்கள். இதில் பிழையில்லை.

(தமிழ் வளரும்)

நன்றி - தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: