04/09/2011

மொழிப் பயிற்சி – 47 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

நிறுத்தக் குறிகள்: வாக்கிய அமைப்புகள் பற்றி முன்னர் எழுதியிருந்தோம். அதைத் தொடர்ந்து நிறுத்தக் குறிகள் பற்றி அறிவதும் அவசியம் ஆகும்.

பலவற்றை அடுக்கிச் சொல்லிப் பின்னர் முற்றுப்புள்ளி வைக்கிறோம். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு கால்புள்ளி (,) இடுதல் முறை. (எ-டு) மா, பலா, வாழை முக்கனிகள். மூன்றில் இரண்டின் பின் கால்புள்ளி இடல் வேண்டும். மூன்றாம் சொல் அடுத்த சொல்லொடு இணைக்க முடியும். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பன ஐந்திணைகள் ஆகும். இதனையே முல்லையும் குறிஞ்சியும் மருதமும் நெய்தலும் பாலையும் என்று இணைத்து எழுதும்போது கால் புள்ளி இடல் வேண்டாம். பெரிய வாக்கியங்களில் ஒரு செய்தியைச் சற்றே நிறுத்துமிடத்தும் கால் புள்ளி இடல் வேண்டும். (எ-டு) இப்போது, தாய்மைக் கனிவைப் புலப்படுத்தி நடிப்பதில், காலத்திற்கேற்ற கண்ணம்பாவாகத் திகழ்கிறார்.

நெடிய வாக்கியத்தில் ஒரு கருத்து முற்றுப் பெறும் நிலையில் மேலும் தொடரும்போது அரைப்புள்ளி (;) இடல் வேண்டும். (எ-டு) சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விடுதலைப் போராட்ட வீர மறவர் மட்டுமல்லர்; சிறந்த தமிழறிஞரும் தமிழ்ப் போராளியுமாவார்.

(எ-டு) கயவன் என்னும் சொல்லுக்கு நிகராகப் பெண்பாற் சொல்லைக் கம்பன் நமக்குக் காட்டுகிறான்; அது கயத்தி என்பதாகும்.

ஒரு கருத்து பற்றி - பொருள் பற்றிப் பின்னர் விளக்கம் வரும்போது அல்லது ஒருவரது பேச்சை நேர்கூற்றாக எழுதும்போது - அதன் முன்னர் வரும் வாக்கிய முடிவில் முக்கால் புள்ளி (:) இடல் வேண்டும்.

(எ-டு) கல்வியே அழியாத செல்வம் என்னும் கருத்தை விளக்கும் செய்திகளை இனிக் காண்போம்:

(எ-டு) இராமனை முதற் சந்திப்பில் கண்ட அனுமன் அரிய சொல்லாற்றலுடன் அழகாகப் பின்வருமாறு பேசினான்: "" ..........''.

ஒரு வாக்கியத்தின் முடிவில் முற்றுப் புள்ளி (.)இடல் வேண்டும் என்பது நாமறிவோம். (எ-டு) தமிழ் மொழி இலக்கியச் சிறப்பும் இலக்கணக் கட்டுக்கோப்பும் தொன்மையும் வன்மையும் உடைய மொழி.

வினவுதல் கருத்துடைய வாக்கிய முடிவில் வினாக்குறி (?) இடல் வேண்டும். (எ-டு) ஓராண்டின் பெரும்பொழுதுகள் எவை? ஒருநாளின் சிறுபொழுதுகள் எவை? உன் பெயர் என்ன?

ஏதாவதோர் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வாக்கிய முடிவில் உணர்ச்சிக் குறி (!) இடல் வேண்டும்.

(எ-டு) அந்தோ! ஈழத்தமிழர் பற்றி எண்ணும்போதே உள்ளம் கொதிக்கிறதே!

அடடா! இந்தக் காட்சியின் அழகு என்னே!

வாழிய பாரத மணித் திருநாடு!

(வியப்பு (ஆச்சர்யம்) என்பதும் ஓர் உணர்ச்சி. உணர்ச்சிக் குறியை ஆச்சர்யக் குறி என்று தவறாகச் சொல்லி வருகிறோம்).

முன்னோர் மொழியை ஒரு சில சொல் அல்லது ஓரடியில் எழுதும்போது, ஒற்றை மேற்கோள் குறி " ' இட வேண்டும்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்'

சிறிய நேர்க்கூற்றுகளையும் இப்படிச் சுட்டிக் காட்டலாம்.

"நீ வராதே போய்விடு' என்றான் அவன்.

பிறர் கூற்றை அல்லது பாட்டு வரிகளை எடுத்து எழுதும்போது இரட்டை மேற்கோள் குறி "" '' இடல் வேண்டும்.

(எ-டு) ""ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்

உலகு இன்பக் கேணி'' - என்றார் பாரதியார்.

""நெஞ்சில் உரம், நேர்மைத் திறம், மனத்தில் உறுதி, தளராத உழைப்பு, சிந்தனைக் கூர்மை இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்'' என்று அறிவுரை புகன்றார் அவர்.

ஒருவர் கூற்றாக அமைந்த பெரிய வாக்கியத்தில், இன்னொருவர் கூற்று இடையில் வந்தால், இரட்டை மேற்கோள் குறிகள் அமைந்த பகுதியின் நடுவே ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.

(எ-டு)

""நான் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றே ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் அப்பா சொல்லிவிட்டார், "உன்னை இனிமேல் கல்லூரிக்கு அனுப்ப முடியாது' என்று. அதனால் படிப்பை இடையில் நிறுத்த வேண்டியதாயிற்று''

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: