04/09/2011

மொழிப் பயிற்சி – 51 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

விருத்தப் பாக்கள் எழுதும்போதும் கவனம் வேண்டும். எண்சீர் விருத்தம்,அறுசீர் விருத்தம் எழுதும்போது (பெரும்பாலும் எழுதப்படுபவை இவை) மேலே ஒரு வரியும் பின் கீழே உள் வாங்கி ஒரு வரியும் எழுதுகிறோம். இரண்டு வரிகளில் எட்டுச் சீர்கள் இருந்தால் எண்சீர் விருத்தம்; ஆறு சீர்கள் இருந்தால் அறுசீர் விருத்தம்.

இவ்விருத்தங்களுக்குக் கட்டளை என்னும் அமைப்பு உண்டு. அது மாறாமல் எழுத வேண்டும்.

காய் - காய் -மா - தேமா என்பது ஒரு கட்டளை.

இரண்டு காய்ச்சீர்கள் அடுத்து ஒரு மாச்சீர் (தேமா, புளிமா இரண்டில் ஒன்று) இறுதியில் தேமா என முடியும் (நேர் நேர்) சீர். இவ்வமைப்பு முதல் வரியில் தொடங்கி இறுதிவரை மாறாமல் இருத்தல் வேண்டும்.

""தடியூன்றும் காந்திக்கேன் அஞ்சு கின்றீர்?

சர்ச்சிலினைக் கேட்டார்கள் அவரும் சொன்னார்''

இவ்விரண்டு வரிகள் (ஓரடி) மேற்காணும் கட்டளையில் அமைந்தவை.

""விண்ணுயரும் தமிழர்தம் நெறிகள் எல்லாம்

வீச்சாக ஆற்றும் நம் மறவர் உறவே''

இவ்விரண்டு வரிகளில் இறுதியில் "உறவே' என்று முடித்திருப்பது பிழை. எட்டுச் சீரில் கட்டளையின்படி நான்காவது சீரும், எட்டாவது சீரும் தேமா வாக மட்டுமே முடிதல் வேண்டும். உறவே- புளிமாச் சீர் (நிரைநேர்)

அறுசீர் விருத்தங்களிலும் இப்படியே மா - மா- காய் எனும் அமைப்பில் மூன்று சீர்களைத் தொடுத்து அதைத் தொடர்ந்து இதே கட்டளையில் எட்டுவரிகளும் அமைத்திட வேண்டும். மூன்றும் மாச்சீர்களாகவும் (மா -மா - மா) அமைக்கலாம். ஆனால் இடையில் கட்டளை மாறக் கூடாது. காய் - மா - தேமா என்று அமைக்கலாம். விளம் - மா -தேமா என்றமைக்கலாம். எதுவாயினும் முதல் வரி தொடங்கி இறுதி வரி வரை கட்டளையை மாற்றிடல் தவறு.

""எந்தையே முருக வேளே (விளம் - மா- தேமா)

இணையடி வணங்கு வேனே'' என்றிருத்தல் சரி.

ஆனால், ""கன்னியர் கயமை நாடகம் ( விளம்-மா-விளம்)

காதலன் வழியே அரங்கேற்றம்'' (விளம் - மா - காய்) என்றவாறு எழுதுதல் பிழையாம் என்றறிக.

வீறுதமிழ்ச் சொற்கள்

முன்னரே "அவதாரம்' என்பதைக் "கீழிறங்குதல்' என்று விளக்கி எழுதியிருந்தோம். பொருள் விளக்கம் எழுதினோமன்றி அதற்கான தூய தமிழ்ச் சொல் அப்போது நாம் காட்டவில்லை. அண்மையில் படித்த நூலொன்றில் அவதாரம் - திருவிறக்கம் எனக் கண்டு மனம் மகிழ்ந்தோம். திருவிறக்கம் அழகிய தமிழன்றோ? சில சொற்களை - ஒலியமைப்பை மாற்றித் தமிழாக்கிக் கொள்ளலாம் என்று முன்னர் எழுதியுள்ளோம். அப்படி ஒரு சொல்: வலுவந்தம். இது பலவந்தம் எனும் சொல்லின் தமிழ் வடிவம். இன்றும் நம் மக்கள் வழக்கில் இச்சொல் - "வலுவந்தம் செய்தார்கள்' என்று பயன்பாட்டில் உள்ளது.

"எனல்' எனும் ஒரு சொல் "என்று சொல்லு' என்றும், "என்று சொல்லாதே' என்றும் இருவேறு பொருள்தரும் அருமை தமிழுக்கே பெருமை.

பயனிலசொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி எனல்

மகன் எனல்- மகன் (மனிதன்) என்று சொல்லாதே. பதடி எனல் - பதர் (உள்ளீடு அற்றது) என்று சொல்லு எனல் என்பதை ஒலிக்கும் முறையால் வேறுபாட்டை உணரலாம்.

இருவிரல்களை உரசி ஒலி உண்டாக்குவதை நொடித்தல் என்போம். கண்களை மூடித் திறப்பதை இமைத்தல் என்போம். நொடிப் பொழுது, இமைப் பொழுது என்று இவற்றின் கால அளவைக் குறிப்பிடுகிறோம். ஒரு வினாடி (செகண்ட்) என்பதோ ஒரு நொடி அறுபது நொடி - ஒரு மணித்துளி (நிமிடம்) அறுபது மணித்துளி ஒரு மணி. பழங்காலத்தில் மணிக்கணக்கில்லை. நாழிகை மட்டுமே. பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை. ஒரு நாள் - அறுபது நாழிகை. இரண்டரை நாழிகைப் பொழுது, இப்போதுள்ள ஒரு மணி. காலை மணி பத்தாகும்போது, நாழிகையும் பத்தேயாகும். எப்படி? காலை ஆறு மணிக்கு முதல் நாழிகை தொடக்கம். 10 மணிக்கு இடையில் நான்கு மணி நேரம். நான்கு மணியை இரண்டரையால் பெருக்கினால் (4ஷ் 21/2) பத்து வரும். ஆகப் பத்து மணி என்னும் நேரம் அந்த நாளின் பத்தாவது நாழிகையும் ஆகும்.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: