04/09/2011

கவிஞர் மனுஷ்ய புத்திரன் - கேள்வி பதில்

கவிஞர் மனுஷ்ய புத்திரன் - ஓர் அறிமுகம் - பி.கே.சிவகுமார்

கவிஞர் மனுஷ்ய புத்திரனின் இயற்பெயர் எஸ்.அப்துல் ஹமீது. 1967-ல் பிறந்த இவரின் சொந்த ஊர் துவரங்குறிச்சி. இது திருச்சி மாவட்டத்தில் இருக்கிறது. எண்பதுகளில் எழுத ஆரம்பித்தார். 1994 முதல் காலச்சுவடு இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தற்போது சமீபத்தில் தொடங்கிய உயிர்மை இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். உயிர்மை என்கிற பதிப்பகமும் நடத்தி வருகிறார். கவிஞரானாலும் பத்திரிகைத் துறையில் அனுபவம் மிக்கவர். பல இலக்கிய, சமூக, விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பு, "மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்" (1983). தொடர்ந்து- "என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்" (1993), "இடமும் இருப்பும்" (1998), "நீராலானது" (2001) ஆகிய கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.

மரத்தடி நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல அன்புடன் முன்வந்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன். அவரை மரத்தடி சார்பாக வருக வருக என்று வரவேற்கிறோம். நமக்காக அவர் செலவிடப்போகிற நேரத்துக்காகவும், சொல்லப்போகிற பதில்களுக்காகவும் அவருக்கு முன்கூட்டியே நம்முடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த நான்கு வாரங்களுக்கு நம்முடைய கேள்விகளுக்கு மனுஷ்ய புத்திரன் பதில் சொல்வார். வழக்கம்போல், ஒவ்வொரு சனிக்கிழமையும் கேள்விகள் தொகுக்கப்பட்டு அவருக்கு அனுப்பி வைக்கப்படும். அவரிடமிருந்து பதில்கள் வந்ததும் அவை மரத்தடி குழுமத்தில் இடப்படும். மரத்தடி நண்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

மனுஷ்ய புத்திரனின் "இடமும் இருப்பும்" என்கிற கவிதையோடு அவரைப் பற்றிய அறிமுகத்தை நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

**
வளைக்க முடியாத
உலோக விதிகளால் ஆனவை
இடங்களின் ஒழுங்கமைவுகள்

தெருவில்
எங்கோ நடந்து போகிறவர்கள் மீது
விரோதம் கொண்டிருக்கின்றன
கேட்டிற்குப் பின்னே
மினுங்கும் கண்கள்

மேலும் வேகமாக நடக்கிறோம்

தயங்கித்தயங்கி
ஒரு சதுரத்தில் பிரவேசிக்கிறீர்கள்

அச்சதுரத்தின்
புலனாகாத உட்சதுரங்கள்
உட்சதுரங்களின் உள்ளறைகள்
உள்ளறைகளின்
திறக்கக் கூடாதெனச்
சாபமிடப்பட்ட மர்ம அறைகள்
துரதிர்ஷ்டசாலிகள்
திரும்பவியலாத
சூட்சும வழிகள்

காற்றில் மிதக்கும்
நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறோம்

ஒரு தேனீரை அருந்தும்விதம்
ஒரு சிரிப்பின் அளவீட்டு விதிகள் மற்றும்
திடீரென உருவப்பட இருக்கும்
நம் நிர்வாணம் பற்றி
பெரும் அச்சங்கள் சூழ்ந்திருக்கின்றன

நுழைய வேண்டிய நேரத்திற்கும்
வெளியேற வேண்டிய நேரத்திற்குமான
தகர்க்க முடியாத அரண்களுக்குள்
மீண்டும்மீண்டும் நிகழ்வதாகிறது
காட்டுமிராண்டி நிலைக்கும்
நாகரிக நிலைக்குமான
பெரு வரலாறு

இடங்களின் ஒழுங்கமைவுகளை
நாம் கட்டுவதில்லை
அவை இடங்களாக இருப்பதாலேயே
ஒழுங்கமைவுகளாகவும் இருக்கின்றன

ஒழுங்கமைவுகளைத் தீவிரமாகப்
பின்பற்றுதலின் அவசியம்
முற்றிலும் அழிந்துபோகாமல்
தாக்கிக் கொள்ளவும்
அன்பு செய்யவும்
ஓர் உடன்படிக்கை
அல்லது சதிச்செயல்

இடங்களின்
வரைபடக் கோடுகள் மீதே
தெளிவாக அறியும்படி இருக்கின்றன
அவற்றின் மனநோய்க்கூறுகள்

சாய அனுமதிக்காத
சுவர்களின் முன்
தடைசெய்யப்பட்ட
கண்காணிக்கப்படும் உடல்கள்
இறுகிஇறுகி
இறுதியில் அவையும் இடங்களாகின்றன

நான் வெறொரு இடத்தின்
ஒழுங்கமைவாக
இவ்விடம் வராதிருந்தால்
இவ்விடத்தின் ஒழுங்கமைவு
இந்த அளவு
கழுத்தை நெரிக்காதிருந்திக்கலாம்

தப்பிச் செல்வதாக
ஒருவர் கூறும்போது
அது முற்றிலுமாக
இடங்களற்ற இடங்களுக்குத்
தப்பிச் செல்வதையே
குறிக்க வேண்டும்

நாம் தப்பமுடியாதவர்கள் என்பதாலும்
நம்முடைய ஒழுங்கமைவுகளில்
பிறருடைய இடங்களை அனுமதிக்க
இயலாதவர்கள் என்பதாலும்
மீறல்களின் அதிர்ச்சிகளுக்கேனும்
இரத்த ஓட்டத்தைப் பழக்கலாம்

**

மரத்தடி நண்பர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மனுஷ்ய புத்திரனை விட்டுவிட்டு நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.

அன்புடன்,
[Ask the Author நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்
ஹரன் பிரசன்னா, சந்திரமதி, பி.கே.சிவகுமார் சார்பாக]
பி.கே.சிவகுமார்.
"பூடகமான கவிதைகள், இருண்மைத்தன்மை வாய்ந்த கவிதைகள்- இவற்றால் என்ன நன்மை? இதைப் படிக்கும் பெரும்பாலோர் புரிவதில்லை என்றுதான் சொல்கிறார்கள். புரியாத கவிதைகள்தாம் இலக்கியத்தன்மை உடையவை என்ற பிம்பம் உருவாகிவிட்டது."-- பொதுவாக இலக்கியவாதிகளின் மீது குறிப்பாக நவீன கவிஞர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் இவையாகத்தான் இருக்கும். இதைப் பற்றி என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

-- ஹரன் பிரசன்னா.

என்னுடைய இருபதாண்டுகால இலக்கியத் தொடர்பில் வெவ்வேறு ரூபங்களில் இக்கேள்வியை எதிர்கொண்டு வருகிறேன். கவிதைகள் எல்லோருக்கும் புரிவதற்காக எழுதப்படவில்லை. அவை சஹ்ருதயர்களுக்காவே எழுதப்படுகின்றன. பெரும்பான்மையோருக்காக அல்ல. சஹ்ருதயர்களாக இல்லாதவர்களுக்குக் கவிதையின் சொற்கள் அனைத்தும் பித்துக்கொண்ட மனதின் அர்த்தமற்ற பிதற்றல்கள் மட்டுமே.

கவிதையின் இருண்மை என்பது அக்கவிதையைச் சொல்பவருக்கும் அக்கவிதையைப் படிப்பவருக்கும் இடையிலான மாறுபட்ட மனோதளம், மொழித் தளம், அனுபவத் தளம் ஆகியவற்றிலிருந்து பிறக்கிறது. ஒரு கவிதை உங்களுக்குப் புரியவில்லை என்றால் அதில் உங்கள் தன்னிலையின் பங்கு என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ஒரு செய்தித் தாளில் வெளிவரும் கட்டுரைகூட உரிய பின்புலம் சார்ந்த அறிவு இல்லாத பட்சத்தில் நமக்குப் புரியாமல்போகிறது. படிமங்கள், குறியீடுகளின் வழியே ஆழ் மனதின் நடனமாக வெளிப்படும் ஒரு கவிதையை உன் ஆடையை அவிழ்த்து உன் நிர்வாணத்தை வெளிப்படுத்து என்று கேட்பது அந்த நடனத்தைப் புரிந்துகொள்ளும் வழியே அல்ல. நீங்கள் அதனோடு சேர்ந்து நடனமாடக் கற்றுக்கொள்ளாத வரை கவித்துவத்தின் இன்பத்தை அடைவது சாத்தியமல்ல.

உதாரணமாக நகுலனின் புகழ் பெற்ற கவிதையான

ராமச் சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை

என்ற கவிதைக்கு நான் பல இடங்களில் அக்கவிதை என்ன சொல்லவருகிறது என விளக்கமளித்திருக்கிறேன். எளிமையை நாம் எப்படி வரையறுப்பது?

புரியாத கவிதைகள்தான் இலக்கியத் தன்மை உடையது என்ற பிம்பம் உருவாகிவிட்டதாகக் கூறுகிறீர்கள். தமிழ் புதுக்கவிதை மரபில் இரண்டுவிதமான குழப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. புரியக்கூடிய, எளிமையான, மக்களுக்கான கவிதைகளை எழுதுகிறோம் என்று பிரகடனப்படுத்திக்கொண்டவர்கள் கவித்துவ அனுபவமோ மொழிச் செறிவோ அற்ற தட்டையான, அசட்டுத்தனம் மிகுந்த வரிகளை எழுதினர். நவீன கவிதையை ஒரு தீவிர இலக்கிய வழிமுறையாகப் பின்பற்றியவர்களில் பலர் மொழியின் சிதறலான கலவையை உருவாக்கினர். இவர்களுக்கு பல போலிகள் உருவாயினர். கவிதையைப் போல தோற்றம் தரும் பூடகத்தன்மை மிக்க, ஆனால் பொய்யான வரிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று 'மக்களுக்காக' அசட்டுத்தனமான வரிகளை எழுதியவர்களும் சரி, போலியான பூடகக் கவிதைகளைப் படைத்தவர்களும் சரி காலத்தின் குப்பைக்கூடைக்குள் தொடர்ந்து சென்று சேர்ந்தவண்ணம் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி நவீன கவிதை மொழி எண்ணற்ற சாத்தியங்களுடன் விரிந்துகொண்டிருக்கிறது. அம்மொழிக்கு நீங்கள் உங்கள் இதயத்தை முழுமையாகக் கொடுப்பதுதான் அதைப் புரிந்துகொள்வதற்கான ஒரே வழி.

எப்போது கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? உங்களைக் கவிஞனாக்கியது எது?

-- ஹரன் பிரசன்னா.

சொல்லின் ருசியும் பழக்கமும் சின்னஞ்சிறு வயதிலேயே உருவாகிவிட்டது. என் உடல் நிலை காரணமாகப் புற உலகத்தின் வழிகள் அடைபட்டபோது மனம் உள்நோக்கித் திரும்பியது. காமிக்ஸ்களும் மாயாவிகளும்தான் என் கவிதையின் மூல ஊற்றுகள். சொல் வழியே ஒரு உலகம் உருவாகும் விதம், அந்த உலகத்தை உருவாக்கும்போது ஏற்படும் உவகை எனக்குப் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. நான் முதலில் கதைகள்தான் எழுத ஆரம்பித்தேன். ஆனால் புனைகதைக்கு அவசியமான புற உலகை என்னால் நுட்பமாகச் சொல்ல முடியவில்லை. உணர்ச்சிகளின் உச்சக்கட்ட வெறியாட்டமும் சொல்லின் மந்திரத்தன்மையும் கொண்ட கவிதைவடிவம் படிப்படியாக ஈர்க்கத் தொடங்கியது. 14 வயதில் கவிதைகள் எழுத முயற்சித்தேன். 16 வயதில் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.

ஆரம்பகாலத்தில் உங்கள் கவிதைகளுக்கும் தற்போதைய உங்கள் கவிதைகளுக்கும் நீங்கள் உணரும் பெரிய வித்தியாசம் என்ன? தற்போதைய கவிதையில் பூடகமான உட்பொருள் (சப் டெக்ஸ்ட்) அதிகமாகிவிட்டதாகத் தெரிகிறதே. இது நீங்களாகவே உருவாக்கிக்கொண்டதா? இந்தப் பூடகமான உட்பொருள் எல்லோரையும் சென்றடையும் என்று நம்புகிறீர்களா?

-- ஹரன் பிரசன்னா.

எனது இன்றைய இருப்பிற்கும் கடந்த காலங்களுக்கும் இடையிலான வித்தியாசம்தான் அது. இந்தப் பிரபஞ்சத்தை எதிர்கொள்ளும் எனது தன்னிலை தொடர்ந்து அழிந்து உருமாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப எனது மொழியும் தொனியும் தொடர்ந்து மாறுதலடைகின்றன.

உட்பொருள் இன்றி இலக்கியப் பிரதி சாத்தியமே இல்லை. மிக எளிமையாகத் தோற்றமளிக்கும் கவிதைகள்கூட தம்மளவில் ஒரு மறைபிரதியைக் கொண்டிருக்கின்றன. 'என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' தொகுப்பில் விவரணத்தன்மைகொண்ட கவிதைகளை எழுதினேன். 'இடமும் இருப்பும்' தீவிரமான படிமங்களும் இறுக்கமான கட்டமைப்பும் கொண்ட கவிதைகளைக் கொண்டிருந்தது. 'நீராலானது' தொகுப்பில் plain poetry என சொல்லத் தக்க எளிமையான, நேரடியான, உரையாடல் தன்மைமிக்கக் கவிதைகளை எழுதினேன். உண்மையில் இக்காலகட்டத்தில் உரையாடல் தன்மை மிகுந்த அதேசமயம் செறிவூட்டப்பட்ட சொற்களையே கவிதைக்காக என் மனம் சார்ந்திருக்கிறது. கவிதையின் அனாவசியமான இறுக்கங்களைத் தளர்த்துவதுதான் இன்று நம் முன் இருக்கும் சவால். அதே சமயம் எல்லோரையும் சென்று சேர்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தினத்தந்திப் பேப்பரே எல்லோரையும் சென்று சேர்வதில்லை.

தமிழ்க் கவிஞனின் தற்போதைய நிலை சுகமானதுதானா? நீங்கள் கவிஞனாக இருப்பதற்குப் பெருமைப்படுகிறீர்களா?

-- ஹரன் பிரசன்னா.

பாரதியின் கவிஞன் பிம்பத்தால் அலைக்கழிக்கப்படாத தமிழ்க் கவிஞனே இருக்கமுடியாது. அது கம்பீரமும் சவாலும் புறக்கணிப்பும் அவமானமும் நிறைந்த பிம்பம். இந்த பிம்பத்தின் நிழலில்தான் ஒவ்வொரு தமிழ்க் கவியும் இருக்கிறான். கவிஞனாக இருப்பதில் எனக்கு விசேஷமான பெருமைகள் இல்லை. ஆனால் ஒரு அபூர்வமான வாக்கியத்தை உருவாக்கும் தருணத்தில் மனம் பிரம்மாண்டமாக விரி வடைகிறது. அப்போது என்னுடைய உடலும் மனமும் எனக்குப் புதிதாகிறது. இதுவே கவிதையினால் அடையக்கூடிய மகத்தான இன்பம்.

திரைப்படப்பாடல்கள் கவிதைகளா? மிகச்சிறந்த ஒரு திரைப்படப்பாடலை கவிதையாக ஏற்பீர்களா? நீங்கள் ஏன் திரைப்படப்பாடல் எழுதுவதில்லை? திரைப்பாடலையும் எழுதி, தீவிர இலக்கியப்போக்குள்ள கவிஞனாக ஒருவர் இருப்பது சாத்தியமானதுதானா?

-- ஹரன் பிரசன்னா.

ஒரு சமூகத்தின் கலாசாரத் தேவை பன்முகத் தன்மை கொண்டது. அச்சமூக அனுபவத்தை வாழ்ந்து தீர்க்கும் மனதிற்குத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வெவ்வேறு நிலையிலான சொற்கள் தேவைப்படுகின்றன. திரைப்பாடல்களுக்கு அத்தகைய ஒரு கலாசாரப் பாத்திரம் இருக்கிறது. இல்லாவிட்டால் ஒரு தமிழ் மனம் தன்னுடைய ஆசாபாசங்களை எப்படித் தீர்த்துக்கொள்ளும்? எதிரிகளை எப்படிப் பழிவாங்கும்? அண்ணன் தம்பி பிரச்சினைகளை எப்படிப் புரிந்துகொள்ளும்? ரகசியமான பாலின்ப வேட்கைகளை எப்படிப் பொது வெளிக்குள் கொண்டுவரும்? இதற்கெல்லாம் திரைப்பாடல்கள்தான் ஒரே தீர்வு. ஆனால் அவற்றை ஒரு தனி வகையாகக் கொள்ளவேண்டுமே அன்றி நவீன கவிதையின் தளத்துடன் சேர்த்துப் பார்க்கவேண்டியதில்லை. கண்ணதாசன், வைரமுத்து முதலானோர் திரைப்பாடலில் மிக அழகிய பல வரிகளை எழுதியிருக்கின்றனர்.

நான் சினிமாப் பாடல்கள் எழுதாததற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, யாரும் என்னை கூப்பிடவில்லை. இரண்டாவது, எனக்கு எழுதத் தெரியாது. அதாவது, அதற்கான இசைப் பயிற்சியோ மன அமைப்போ என்னிடம் இல்லை.

நண்பரே, நீங்கள் இந்தியாவிற்கு வரும்போது ஒரு பின்னிரவில் நான் குடிபோதையில் பாடக்கூடிய சினிமாப் பாடல்களை வேண்டுமானால் வந்து கேட்டுவிட்டுப் போங்கள்.

மீரா, வைரமுத்து, மேத்தா கவிதைகள் பற்றிய உங்கள் கருத்தென்ன?

-- ஹரன் பிரசன்னா.

திராவிட இயக்கக் கலாசாரத்திலிருந்தும் தமிழ் கற்பனாவாதத்திலிருந்தும் பிறந்த கவிஞர்கள். தமிழில் இலட்சக்கணக்கான நபர்களுக்குத் தாங்களும் கவிதை எழுத முடியும் என்று நம்பிக்கையூட்டியவர்கள். தமிழ்க் கவிதையைத் தவறாக வழிநடத்தியதில் முதன்மைப் பாத்திரம் ஏற்றவர்கள். இவர்களது சரிகைத்தாள் வரிகளைத் தாண்டி நவீன கவிதை எங்கோ சென்றுவிட்டது.

தமிழகம் தாண்டி அறியப்பட்ட கவிஞர்களுள் தாங்களும் ஒருவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தங்களுடைய கவிதைகள் வேற்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா?

-- மரவண்டு கணேஷ்.

ஆங்கிலம், ஹிந்தி, மலையாள மொழிகளில் சில கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மலையாளத்தில் ஒரு தொகுப்புக்கொண்டு வர சிலர் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எதற்காக இப்படி ஒரு புனைபெயர்? தமிழில் உங்களுக்கு நல்ல புனைபெயர்கள் கிடைக்காததாலா? "மனுஷ்ய" என்று பெயர் வைத்தால் ஏதேனும் அமானுஷ்ய சக்தி கிடைக்குமென்று நினைத்தீர்களா? தமிழ்க் கவிஞர்கள் புனைபெயரிலாவது தமிழ் இருக்க வேண்டாமா?

-- ஆசிப் மீரான்.

இளம் பிராயத்தில் நம்மைப் பற்றிய கற்பனாவாதத்திலிருந்து இத்தகைய புனைபெயர்கள் சூட்டிக்கொள்கிறோம். உண்மையில் நம்முடைய பெற்றோர் நமக்குச் சூட்டுகிற பெயர்களைப்போலவே இத்தகைய புனைபெயர்களும் அர்த்தமற்றவை. இந்தப் பெயரால் அமானுஷ்யசக்தி எதுவும் கிடைகக்கவில்லை. ஆனால் பல காதலிகள் கிடைத்திருக்கிறார்கள். என் கவிதைகள் முழுக்க தமிழ் இருக்கிறது. எனவே என் பெயர் தமிழில் இல்லாமல்போனால் அதில் தவறொன்றுமில்லை.

கவிதை என்பதை எப்படி அடையாளம் காண்பீர்கள்? எவருக்கும் புரியாமல் எழுதப்பட்டு ஏதோ ஒரு இசம் என்று சொல்லப்படும் கவிதைகள் யாருக்காக?

-- ஆசிப் மீரான்.

நல்ல கவிதையை அடையாளம் காணும் வழி மோசமான கவிதைகளை முதலில் இனம் காண்பதுதான். எவருக்கும் புரியாமல் எழுதப்பட்டு ஏதோ ஒரு இசம் என்று சொல்லப்படும் கவிதைகள் யாருக்காக? என்பது போன்ற பொதுவான கேள்விகள் அர்த்தமற்றவை. ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு அது என்ன சொல்லவருகிறது என்பதைப்பற்றி நாம் பேசலாம். நவீன இலக்கிய மரபில் ஆழமான தொடர்பும் பயிற்சியும் இருந்தால் நவீன கவிதையும் இஸங்களும் இவ்வளவு எரிச்சலூட்டுவதாக இருக்காது.

கவிதைகள் பாமரர்களுக்கு உரித்தானதா, இல்லையா? பாமரர்களைச் சென்றடைய வழி என்ன?

-- ஆசிப் மீரான்.

பாமரர்கள் என்று யாருமில்லை. மாறாக அவர்கள் வேறுவிதமான மொழிப் பழக்கம் உள்ளவர்கள். நவீன கவிதையின் மொழியை அவர்கள் வந்து சேரும்போது அக்கவிதையைப் புரிந்துகொள்வார்கள். நமது கல்வி முறையிலும் வெகுசன ஊடகங்களிலும் நவீன இலக்கியம் முக்கியத்துவம் பெறுமெனில் நாம் ஒரு பரவலான வாசிப்புத் தளத்தை உருவாக்க முடியும். கொஞ்சம் எளிமையான வழி என்றால் வைரமுத்துவை ஒரு ரதத்தில் அமர்த்தி நாடு முழுக்க கவிதை யாத்திரை ஒன்று போகச் சொல்லலாம்.

காலச்சுவடில் பணிபுரிந்ததற்கும், 'உயிர்மை' நடத்துவதற்கும் இடையே உள்ள அனுபவங்கள், வேறுபாடுகள் என்ன?

-- பாஸ்டன் பாலாஜி.

காலச்சுவடில் நான் பணியாற்றிய காலம் இதழியலையும் நவீன இலக்கியத்தையும் கற்றுக்கொண்ட காலம். எண்ணற்ற பிரதிகள் தொடர்பான முடிவுகள் எடுக்கவேண்டிய பொறுப்பு இலக்கியம் சார்ந்த என் கவனங்களைக் கூர்மைப்படுத்தியது. உலகெங்குமுள்ள தமிழ்ப் படைப்பாளிகளோடு அது உறவுகளை உருவாக்கியது. அதன் ஒரு தொடர்ச்சியாகவே உயிர்மையை நடத்திவருகிறேன். ஆனால் நான் காலச்சுடில் பணியாற்றியபோது இதழுக்கான பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சினைகள் என்னிடம் வரவில்லை. மாறாக உயிர்மையை நிலை நிறுத்துவதற்கான பொருளியல் தேவைகள் இன்று என்னை அமைதியிழக்கச் செய்கின்றன. உயிர்மை துவங்கப்பட்ட இந்த எட்டுமாதங்களில் அது எந்த தனி நபரின்மீதும் தனிப்பட்ட ஒரு வசவுச் சொல்லையும் அனுமதித்ததில்லை. பல்வேறு தரப்பட்ட முக்கியமான படைப்பாளிகள் ஒரு இதழில் பங்கேற்கமுடியும் என்பதை துவேஷ நெருப்பு பற்றி எரியும் ஒரு சுழலில் உயிர்மை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. ஆனால் உயிர்மைக்கு நிறுவன பலங்கள் கிடையாது. போதிய விளம்பர வருவாய் இல்லை. ஒரு உதவியாசிரியரை நியமித்துக்கொண்டால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும். ஆனால் இப்போதே மாதம் எட்டாயிரம் ரூபாய்வரை இழப்பு ஏற்படும் ஒரு இதழுக்கு அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. படைப்பாளிகளுக்கு ஊதியம் அளிக்க முடியவில்லை. ஆனால் தனித்துவம் மிக்க சர்வதேச தமிழ் இதழாக உயிர்மை அடைந்துவரும் பரிமாணம் இந்த பத்திரிகையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற பதட்டத்தை ஏற்படுத்துகிறது. மூலதனம் ஏதுமின்றி அந்தந்த மாதம் பணம் திரட்டி ஒரு பத்திரிகையை கொண்டுவருவதும் இந்த நெருக்கடிக்கு இடையே ஒரு மாத இதழுக்கான உள்ளடக்கத்தைத் தயார் செய்வதும் எங்கும் நிற்க முடியாத ஒரு ஓட்டமாக மாறிவிட்டது. ஆயுள் சந்தாவாக 100 டாலர்கள்வீதம் 100 நண்பர்களிடம் மூலதனம் திரட்டும் பொருட்டு நுற்றுக்கணக்கான மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். இதுவரை சுமார் பத்து நண்பர்கள் இதில் பங்களித்திருக்கிறார்கள். உயிர்மையின் பொருளாதார நெருக்கடிகள் மட்டும் ஏதோ ஒருவிதத்தில் தீர்ந்தால் படைப்பாளியாகவும் பத்திரிகையாளனாகவும் என்னுடைய பாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியலாம். இந்த சந்தர்பத்தில் நான் மரத்தடி நண்பர்களிடம் இந்த வேண்டுகோளை முன் வைக்கிறேன். ஒரு தீவிர நவீன தமிழ் இதழ் நிலை பெற ஆளுக்கு 100 டாலர்கள் கொடுங்கள். உங்கள் ஆதரவை உயிர்மைக்கு எழுதுங்கள். uyirmmai@yahoo.co.in

விருது கிடைக்கும்போது, உங்களை விடத் தகுதியானவர்களுக்குக் கிடைக்கவில்லையே என்று விமரிசிக்கும்போது எத்தகைய மனநிலையில் இருப்பீர்கள்?

-- பாஸ்டன் பாலாஜி.

விருதுகள் யாருடைய தகுதியையும் நிர்ணயிக்கும் அளவுகோல்கள் அல்ல. இன்னொரு படைப்பாளி மீதான நிராகரிப்பும் அல்ல. எந்த விருதையும்விட ஒரு படைப்பு மேலானது. விருது என்பது ஒரு சிறிய அங்கீகாரம். ஒரு தற்செயலான தேர்வு. அதற்கு மேல் அதில் இலக்கிய ரீதியான மதிப்பீடுகள் எதுவும் இல்லை. தமிழில் இலக்கிய விருதுகள் தொடர்பான சர்ச்சைகள் அனைத்தும் இலக்கிய அரசியலோடு தொடர்புடையவை. பல விருதுகள் தனிப்பட தொடர்புகள், ஜாதிய தொடர்புகள், இலக்கியத் தொடர்புகள் என படைப்பு அல்லாத காரணங்களுக்காக வழங்கப்படுவதால் இன்று எல்லா விருதுகளும் தமிழில் சந்தேகத்திற்குரியதாக மாறிவிட்டன.

ஒரு விருதுக்கு நான் தகுதியற்றவன் எனச் சொல்ல எல்லா உரிமையும் ஒருவருக்கு இருக்கிறது. விமர்சனங்கள் என்னைப் பாதிக்காது. ஆனால் விமர்சனங்களின் நோக்கங்கள் பாதிக்கவே செய்கின்றன. நான் எனது இருபதாண்டுகால படைப்பு வாழ்க்கையில் நான் பெற்ற ஒரே விருது சன்ஸ்கிருதி விருது. நான் அந்த விருதைத் தகுதியானவன் என்ற முழு மனநிறைவுடன் பெற்றுக்கொண்டேன்.

அகம் சார்ந்த விஷயங்களை வெளிப்படுத்தும் கவிதைகள் வெறும் மாயாவாதம் என்றும், சொல்ஜாலம் என்றும் விமர்சகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அகம் - புறம் என்றபாகுபாடு கவிதை வெளிப்பாட்டில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது?

-- பாஸ்டன் பாலாஜி.

கவிதையில் அகம்-புறம் என்ற பாகுபாடு ஒரு வகைப்பாடு மட்டுமே. படைப்பு மனம் இந்த வகைப்பாடு சார்ந்து இயங்குவதில்லை. நவீன கவிதை ஒரு பின் நவீனத்துவ சூழலுக்குள் பயணம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் இத்தகைய வகைப்பாடுகள் வழக்கொழிந்துவிட்டன. ஆனந்தின் இந்தக் கவிதையைப் பாருங்கள்.

அதோ
அந்தச் சிறுபறவை
அழைத்து வரும் மேகம்
தண்ணென என்னை நிறைக்கையில்
நான் இல்லாதுபோவேன்.
என் சட்டையை எடுத்துக் கொள்
என் சுவாசக் கோளங்களை
மேகம் நிறைக்கையில்
கணிதங்கள் அற்றுப் போகும்
அதன்பின்
என்னைப் பற்றி
ஏதேனும்
அறிய வேண்டுமாயின்
அந்தச் சிறுபறவையை
அழைத்துக்
கேள்.

இந்தக் கவிதை அகம்-புறம் என்ற பாகுபாடுகளை அழித்து இயற்கைக்கும் தனிமனித அந்தரங்க இருப்பிற்கும் நடுவே ஒரு புதிய வெளியை உண்டாக்குகிறது. மனித ஹிருதயத்தின் ஆழங்களில் ஓடும் காட்டாறுகளை மாயாவதம் என்று சொன்ன சில விமர்சகர்களின் பெயர்களைச் சொல்லுங்கள். அவர்களுக்கு அவர்களது நெஞ்சில் ஓடும் மாய நதியொன்றை எனது கவிதைகளால் காட்டிக் கொடுப்பேன்.

கவிஞர், இதழாசிரியர், பதிப்பாளர் என்ற உங்கள் முகங்கள் பலரும் அறிந்தவை. நீங்கள் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளுக்கு ஆசிரியர் என்பது பலரும் அறியாதது. படைப்பிலக்கியம் என்றாலே கதை, கவிதை என்ற புரிதலே தமிழ் இலக்கியவாதிகளிடமும் விமரிசகர்களிடமும் தெரிகிறது. கட்டுரை இலக்கியம் என்னவானது? அது ஏன் இலக்கியமாகக் கணக்கில் கொள்ளப்படுவதில்லை? இன்றைய தமிழ்க் கட்டுரை இலக்கியத்தின் நிலை என்ன? உங்கள் பார்வையில் முக்கியக் கட்டுரையாளர்கள், அவர்களது பங்களிப்புகள் பற்றிச் சொல்லுங்களேன்.

-- கயல் தனஞ்செயன்.

அடிப்படையில் நான் ஒரு கட்டுரையாளன் அல்ல. ஒரு கட்டுரையாளனுக்குத் தேவையான ஒருமுகப்படுத்தப்பட்ட மனப்பாங்கோ கடின உழைப்போ என்னிடம் இல்லை. ஆனால் உரைநடை எழுதுவதில் உள்ள ஆசையும் வசீகரமும்தான் என்னை எழுதத் தூண்டியிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை அவை கட்டுரைகள் என்பதைவிட ஒரு பார்வையாளனின், வாசகனின் குறிப்புகள் என்று சொல்லிவிடலாம். அவை எனக்கு நானே தெளிவுபடுத்திக்கொள்வதற்காகச் சொல்லிப் பார்த்துக்கொண்டவை.

தமிழில் கட்டுரை ஏன் தனித்த இலக்கிய வகையாகக் கொள்ளப்படுவதில்லை என்றால் தனித்த ஆளுமையுடனும் சுயமான சிந்தனையுடனும் அத்தகைய கட்டுரையாளர்கள் தமிழில் அபூர்வமாகவே உருவாகி வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் தமிழில் இலக்கிய விமர்சனம் இலக்கியத்தின் நிழலில் தவழும் குழந்தையாகவும் சமூக, தத்துவ கருத்தாக்கங்கள் ஏற்கனவே நிறுவப்பட்ட உண்மைகளின் வெளிறிய நிழல்களாகவுமே இருந்துவந்திருக்கின்றன. எனவே அவை தனித்த இலக்கிய வகைமையாகத் தமிழில் உருவெடுக்கவில்லை.

கவிதைகளைப் போலவே நவீன தமிழ் உரைநடையின் முன்னோடி பாரதியே. பாரதியின் உரைநடை ஒரு சம்பிரதாயமான உரைநடையாளனின் பாணி அல்ல. இந்தியா விடுதலைப்போரின் எரிமலை உச்சியில் அமர்ந்திருந்த வேளையில் அவர் சமுக அரசியல் ரீதியாக எழுதிய கருத்துக்கள் ஒரு யுகத்தின் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. தன்னைத்தானே வேகமாகக் கடந்துசெல்லும் உரைநடை பாரதியினுடையது.

க.நா.சு. இலக்கிய விமர்சனம் என்ற ஒரு வகை மாதிரியின் முகத்தை தமிழில் உருவாக்கினார். ஜெயகாந்தனின் கட்டுரைகள் பயமற்ற குரலையும் அசோகமித்திரனின் கட்டுரைகள் அனுபவத்தின் தீராத உள் மடிப்புகளையும், பிரமிளின் கட்டுரைகள் தரிசனங்களின் உக்கிரத்தையும் சுந்தரராமசாமியின் கட்டுரைகள் தார்மீக மதிப்பீடுகளின் பிடிவாதத்தையும் சுஜாதாவின் கட்டுரைகள் சாகசத்துடன் மொழியின் புதுமையையும் வெளிப்படுத்துபவை என்ற விதத்தில் அவர்களது எழுத்துக்கள் கட்டுரை இலக்கியத்தின் செறிவான பகுதிகளைத் தமிழில் உருவாக்கின.

எஸ்.வி.ராஜதுரை மார்க்சிய அழகியல், சமூக விமர்சகர்ளில் முதன்மையாகக் கருதப்படவேண்டியவர். கோவை ஞானியின் செயல்பாடு ஒரு இயக்கம் என்றே சொல்லலாம். இவர்கள் இருவரது எழுத்துகளை மட்டுமே தமிழின் சுயமான மார்க்சிய விமர்சன எழுத்துகள் என்றும் சொல்லலாம்.

90களில் கட்டுரை இலக்கியம் புதிய சிந்தனைகளின் வரவால் வேறொரு முகத்தை அடைந்தது. அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் முதலானவை சார்ந்த கோட்பாடு, மற்றும் சமூகக் கேள்விகள் தீவிரம் பெற்றன. அ.மார்க்ஸ், ரவிக்குமார், ராஜ் கொளதமன், ரமேஷ்-பிரேம் எனத் தமிழில் தீவிரமான கோட்பாட்டாளர்கள் உருவெடுத்தனர். இவர்களது எழுத்துகளும் பேச்சுகளும் நவீன தமிழ் எழுத்தைப் பல்வேறு நிலைகளில் பாதித்திருக்கின்றன. சம்பிரதாயமான தமிழ் மனதிற்கு இந்த எழுத்துகள் ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.

ஜெயமோகன் உரைநடையின் மிக விரிவான தளத்தில் இயங்கி வருபவர். படைப்பியல் தளத்தில் அவரது கருத்துருவாக்கங்கள் தீவிரமான எதிர்நிலைகளை உருவாக்கி வந்தபோதும் அக்கருத்துகள் அதன் எல்லா முரண்பாடுகளோடும் புறக்கணிக்கப்படமுடியாத ஒரு வலுவான தரப்பைக் கொண்டிருக்கின்றன. நவீன தமிழ் எழுத்தைப் பற்றிய இவ்வளவு விரிவான மதிப்பீடுகள் வேறு யாராலும் மேற்கொள்ளப்படவில்லை.

சாருநிவேதிதாவின் உரைநடை மிகவும் சீரானது. இதழியல் கட்டுரையாளர்களில் ஞாநியும் சின்னக்குத்தூசியும் தனித்துவமான பார்வையும் அடையாளமும் கொண்டவர்கள்.

"உயிர்மை" இதழில் நீங்கள் எழுதும் தலையங்கங்கள் பழமொழிக் கடுகு போன்றவை. தமிழகத்தில் முழுமையான பேச்சுரிமையும் எழுத்துரிமையும் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? உங்கள் தலையங்கக் கருத்துகளினால் ஏதும் நெருக்கடிகள் நேர்ந்திருக்கின்றனவா?

-- கயல் தனஞ்செயன்.

ஆத்மாநாமின் ஒரு கவிதையிலிருந்து இதற்கான பதிலைச் சொல்லலாம்.

எனது சுதந்திரம்
அரசாலோ தனிநபராலோ
பறிக்கப்படுமெனில்
அது என் சுதந்திரம் இல்லை
அவர்களின் சுதந்திரம்தான்

சுதந்திர இந்தியாவில் பேச்சுரிமைக்கோ எழுத்துரிமைக்கோ பஞ்சமே இல்லை. ஆனால் அது எந்த நேரத்திலும் யாராலாவது பறித்துக்கொள்ளக்கூடிய பலவீனமான உரிமை.

இங்கு கருத்துச் சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்துபவை அரசியல் கட்சிகளும் அவற்றின் சக்திவாய்ந்த ஊடகங்களும்தான். கருணாநிதி கைது செய்யப்பட்டபோது சன் டிவியும் ஜெயா டிவியும் வெளிப்படுத்திய கருத்துச் சுதந்திரத்தின் எல்லை உலகையே அதிர்ச்சியடையச் செய்தது. இரண்டு கழகங்களின் அதிரடிப் பேச்சாளர்களும் இத்தேர்தல் காலத்தில் மேடைகளில் பேசிவரும் பேச்சுகளைக் கேட்டால் உங்களுக்குத் தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகள் பற்றி எந்தச் சந்தேகமும் வராது.

ஆனால் ஜெயலலிதா அரசு தன்னை விமர்சித்தப் பத்திரிகையாளர்களைத் தெருவில் ஓட ஓட விரட்டியடித்தபோது, அவர்களைப் பொய் வழக்குகளால் சிறையில் தள்ளியபோது இந்தச் சுதந்திரத்தின் இன்னொரு பரிமாணம் வெளிப்பட்டது. நக்கீரன் கோபால், வை.கோ, நெடுமாறன் உள்ளிட்ட பலரும் அனுபவித்த சிறைதண்டனையின் அர்த்தம் அவர்கள் ஜெயலலி தாவிற்குப் பிடிக்காதவர்கள் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. 'வை.கோ பொடாவில் கைது செய்யப்பட்டது தவறு, அவர் புலிகளுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை, அவர் மீதான வழக்குகளைத் திரும்பப்பெறவேண்டும்' என பொடா மறு ஆய்வுக் குழு தமிழக அரசுக்கு இப்போது உத்தரவிட்டிருக்கிறது. இந்தத் தவறைக் கண்டுபிடிக்க ஒரு மனிதர் ஓராண்டு சிறையில் வாடவேண்டியதாகிவிட்டது. மக்கள் ஆதரவு பெற்ற ஒரு இயக்கத்தின் தலைவரை அவரது சாதாரண ஒரு மேடைப் பேச்சுக்காக ஓராண்டு சிறையில் தள்ள முடியும் என்றால் இது எதுவுமற்ற நபர்களின் சுதந்திரம் பற்றி நாம் பேச ஒன்றுமில்லை. எவ்வாறு சட்டபூர்வமாக ஒரு சட்டவிரோத ஆட்சியை நடத்த முடியும் என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள். இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடிய வலுவான அம்சங்கள் நமது நீதி அமைப்பில் இல்லை. இருக்கக்கூடிய உரிமைகள் மீறப்படும்போது அவற்றிற்காகப் போராடக்கூடிய உறுதியான சமூக அமைப்புகளும் இங்கு இல்லை. ஜெயலலிதாவின் மிகப்பெரிய பங்களிப்பு, அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஒருவர் இந்த அரசியல் அமைப்பில் எந்த அளவுக்கு அதைத் துஷ்பிரயோகம் செய்யமுடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்துக்காட்டியதுதான். அந்தவகையில் நரேந்திரமோடியுயும் ஜெயலலிதாவும் மிகப்பெரிய முன்னோடிகள். இந்திய அரசியல் அமைப்பு ஒரு முழுமையான குரூரமான சர்வாதிகாரிக்காகக் காத்திருக்கிறது. 1975ல் இந்திரா காந்தி நம்முடைய எல்லா ஜனநாயகப் பாசாங்குகளையும் ஒரே இரவில் ரத்து செய்தது நினைவிருக்கிறது.

இன்னொருவகையில் கருத்துச் சுதந்திரம் ஊடகங்களால் தீர்மானிக்கப்படுவதாக இருக்கிறது. கருணாநிதி கைது செய்யப்பட்டபோது ஜெயலலிதாவிற்கு எதிராகப் பேசிவந்த விஜய் டிவி செய்தி அறிக்கைகள் ஒரே இரவில் தன்குரலை மாற்றிக்கொண்டது இங்கே நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் ஊடகங்களை அச்சுறுத்தமுடியும். விலைக்கு வாங்க முடியும். மிக எளிய பலவீனங்களுக்காக விலைபோகக்கூடியவர்கள் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் உயர்பொறுப்புகளில் இருக்கிறார்கள். ஊடகங்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் சார்புகள் இருக்கின்றன. அரசியல் கட்சிகளும், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளும் தங்களுக்கு எதிராக எழுதும் பத்திரிகை நிர்வாகத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதைப் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். இதற்குள் தன்னுடைய கருத்துக்களுடன் இயங்கும் ஒரு பத்திரிகையாளனோ சிந்தனாவாதியோ நிச்சயம் போராடவேண்டியிருக்கிறது. ஊடகங்களில் உட்தணிக்கை ஆழமாக ஊடுருவியிருக்கிறது.

என்னுடைய தலையங்கக் கருத்துகளால் எனக்குப் பாதிப்பு ஏதும் உண்டா என்று எழுதியிருந்தீர்கள். நவீன தமிழ் எழுத்தாளனுக்குச் சமூக பலமோ அதிகாரமோ கிடையாது. நம்பிக்கைகளின் அடிப்படையில் வாழும் ஒரு சமூகத்தில் கருத்துக்கள் அச்சுறுத்தும் சக்தியாக மாறுவதில்லை. அவை எதிரொலிப்பதுமில்லை. அதனால் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்கு என்னுடைய பெயரையோ கருத்துக்களையோ தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் பெரும்பாலும் வராது.

பல நவீன தமிழ் எழுத்தாளர்களுக்கு அவர்கள் ஆண்களாக இருந்தாலும் மனைவியிடமிருந்தும் பெண்களாக இருந்தால் கணவர்களிடமிருந்தும் பல்வேறு வகையான ஆபத்துகள் இருக்கின்றன. இந்த ஆபத்து அந்த எழுத்தாளர்களின் நண்பர்களுக்கும் சமயங்களில் விரிவடைவதுண்டு. எனக்கு என் கருத்துக்களுக்காக ஏதாவது ஆபத்து உண்டு என்றால் அது எனது சக இலக்கிய அன்பர்களிடமிருந்துதான் உண்டு. அது நள்ளிரவில் தொலைபேசியில் அழைத்து ஆபாசமாகப் பேசுவதிலிருந்து முகத்தில் ஒரு குத்துவிடுவதுவரை மன நிலைக்கும் கால நேர இடப்பொருத்தத்திற்கும் ஏற்ப மாறுபடும்.

"உயிர்மை" இதழில் பல்வேறு பார்வையுள்ள முக்கிய படைப்பாளிகளும் குரோத பேதமில்லாமல் கலந்துகொள்ளும் சூழலை அமைத்துத் தந்திருப்பதாய் உங்கள் முதல் வாரத்துப் பதிலில் சொன்னீர்கள். எல்லாப் பக்கங்களும் வாசிக்கத் தகுந்ததாக அமைந்திருப்பது உங்கள் பத்திரிகையின் சிறப்பு. நன்றி. உயிர்மையில் எழுதும் படைப்பாளிகளின் வெவ்வேறு பார்வைகள் என்ன என்பதைப் பகிர்ந்துகொள்ள முடியுமா? அனைவரும் ஒரே இதழில் எழுதுவதால் உங்களுக்கோ அவர்களுக்கோ ஏதும் சிக்கல் ஏற்படுவதுண்டா?

-- கயல் தனஞ்செயன்.

தமிழில் இலக்கியப் பத்திரிகைகள் அல்லது சிறுபத்திரிகைகளின் முக்கியமான சிக்கல் அவை குறிப்பிட்ட படைப்பாளிகளுக்கான உள்வட்டமாகச் சுருங்குவதுதான். அத்தகைய உள்வட்டங்களால் பல தீவிர படைப்பாளிகள் உருவாகிவந்தபோதும் அப்பத்திரிகை குறிப்பிட்ட எல்லைக்குமேல் நகரமுடியாமல் நின்று போய்விட்டிருக்கிறது. தமிழ்ச் சிறுபத்திரிகை வரலாற்றில் பல பத்திரிகைகள் பொருளாதாரக் காரணங்களுக்காக நின்றுபோனதுபோலவே போதுமான படைப்புகள் இல்லாமலும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டாவதாக, பல பத்திரிகைளுக்குச் சார்ந்திருப்பதற்கு சில எழுத்தாளர்கள் இருப்பதுபோலவே வேட்டையாடப்படுவதற்குச் சில எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த மனப்பான்மை பல பத்திரிகைகளை நோய்க்கிருமிகளைப்போல அழித்திருக்கின்றன. இந்த வேட்டையாடல்களுக்குக் கருத்துகள் ஒரு சாக்கு மட்டுமே. தனிப்பட்ட ஆத்திரமும் கசப்பும் பொறாமைகளும் கற்பனைகளுமே துவேஷத்தின் ஊற்றுகளாக இருந்திருக்கின்றன. பல 'கருத்து மோதல்களின்' பின்புலங்களை நன்கு அறிவேன். அவை ஆபாசமானவை.

உயிர்மையைப் பொறுத்தவரை என்னுடைய கனவு தமிழில் இன்னொரு குழு அரசியலை உருவாக்குவதல்ல. அந்த விளையாட்டை நானும் விளையாடியிருக்கிறேன். அதில் ஒரு படைப்பாளனாக, பத்திரிகையாளனாக அடைவதற்கு ஒன்றுமே இல்லை. தன்னுடைய அகம்பாவத்திற்குப் போடும் அற்பத் தீனி. தான் ஏதோ பெரிய தார்மீக நியாயங்களுக்காகப் போராடிக்கொண்டிருப்பதுபோலவும் தன்னால் எதிர்க்கப்படுபவர் குற்றங்களின் உறைவிடம் போலவும் நிகழ்த்துகிற ஒரு நாடகம். தர்க்க பலத்தினாலும் பொய் சொல்லும் திறமையாலும் ஒரே நேரத்தில் ஒரே நபரால் இரண்டு தரப்புகளுக்குமான நியாங்களை உருவாக்க முடியும். இவ்வளவு எளிமையான ஒரு விளையாட்டிற்காக ஒருவர் தன்னுடைய சக்தியைச் செலவழிக்கவேண்டிய அவசியமில்லை.

உயிர்மையில் பல்வேறு தளங்களைச் சேர்ந்த முக்கியமான ஆளுமைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அவர்களில் பலர் என்மீதுகொண்ட தனிப்பட்ட அன்பிற்காகவும் நட்பிற்காகவும் எழுதுபவர்கள். இந்த சச்சரவுகளால் தொந்தரவுக்கு ஆளான வாசகனுக்கு உயிர்மை ஆசுவாசத்தை அளிக்கிறது என்பதுதான் பெரிய நிம்மதி. உண்மையில் இதை நான் ஒரு சாதனையாக நினைக்கவில்லை. இதுதான் ஒரு இதழில் இயல்பான தளம் என்று கருதுகிறேன். ஆனால் இது அவ்வளவு சுலபமான காரியமும் அல்ல. ஒரு எழுத்தாளர் என்னிடம் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் உயிர்மையில் எழுதினால் நான் எழுதமாட்டேன் என்று கூறினார். நான் அவரிடம் 'உங்கள் புத்தகம் விற்கும் அதே புத்தகக் கடைக்காரர் அவருடைய புத்தகத்தையும் வைத்து விற்கிறார். உங்கள் புத்தகங்களை விலக்கிக்கொள்வீர்களா' என்று கேட்டேன். அவரிடமிருந்து பதில் இல்லை. சிறு பத்திரிகைகளுக்குப் பல அளவுகோல்களை முன்னிறுத்தும் சில படைப்பாளிகள் வெகு சன ஊடகங்களில் ஒரு சிறிய இடம் கிடைத்தால் ஓடிப்போய் அதில் அமர்ந்துகொள்வதையும் காணலாம்.

உயிர்மை படைப்பாளிகளின் சுதந்திரத்தையும் கெளரவத்தையும் பாதுகாக்கிற ஒரு பரந்துபட்ட களனாகத் தொடர்ந்து திகழ்வது உண்மையில் அதன் பங்களிப்பாளர்களைச் சார்ந்ததே.

மேற்கத்தியப் பதிப்புலகில் எடிட்டர்களின் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. எடிட்டர் கை வைத்தாலே தங்கள் எழுத்துச் சுதந்திரம் பறி போய்விடுவதாகப் பல தமிழ் எழுத்தாளர்கள் முறையிடுவதாக யாரோ கொடுத்த (பெயர் மறந்து விட்டது) பேட்டியில் படித்தேன். இது ஏன்? "உயிர்மை" இதழாசிரியராகவும் பதிப்பகத்தாராகவும் இது பற்றிய உங்கள் பார்வை என்ன?

-- கயல் தனஞ்செயன்.

ஒரு எழுத்தாளருக்கும் எடிட்டருக்குமிடையே நிலவக்கூடிய பரஸ்பர மதிப்பு, புரிந்துணர்வு, பொதுவான அக்கறைகள் சார்ந்து ஒரு பிரதி செப்பனிடப்படுமெனில் அங்கே ஆரோக்கியமான ஒரு எடிட்டிங் நிகழ்கிறது. இது இல்லாதாபோது பிரதி சிதைக்கப்படுவதும் அதிலிருந்து ஆழமான கசப்புகளும் உருவாகின்றன. ஒரு நுட்பமான, திறன்வாய்ந்த எடிட்டர் ஒரு பிரதிக்கு அளிக்ககூடிய கொடைகள் ஏராளமானவை. ஒரு எழுத்தாளனுக்கு ஒரு பொருத்தமான எடிட்டர் கிடைப்பதைவிட பேறு வேறெதுவுமில்லை.

ஒரு பிரதியில் இலக்கணப் பிழைகள் சாதாரணமானவை. அவற்றை ஒரு மெய்ப்புத் திருத்துனரால் வெகு எளிதில் சரி செய்துவிடமுடியும். ஆனால் வெளிப்பாட்டின் தெளிவின்மையும் மொழிசார்ந்த பலவீனங்களும் மிக முக்கியமான படைப்பாளிகளிடம் கூட சர்வ சாதாரணமாகக் காணக் கிடைக்கின்றன. மன ஓட்டத்தின் அலைகளில் மொழி சார்ந்த பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளபட்டுவிடுகின்றன. வேறொரு தளத்திலிருந்து அப்பிரதியை அணுகும் வாசகனுக்கு அப்பிரதியின் வெளிப்பாடு சார்ந்த, மொழி சார்ந்த பிரச்சினைகளே முன்னுக்கு வருகின்றன. இவற்றை ஒரு திறன்வாய்த எடிட்டர் பெருமளவுக்கு சரிசெய்ய முடியும்.

ஒரு பலவீனமான வாக்கியத்தைச் சரிசெய்யும்போதோ அல்லது தேவையின்றி அதிகமாகச் சொல்லப்பட்ட வாக்கியத்தை அகற்றிவிடும்போதோ அந்தப் பிரதிக்கு கூடுதலான வெளிச்சம் கிடைக்கிறது. ஆனால் இதன் பயன்பாட்டை உணர்ந்த எழுத்தாளர்கள் தமிழில் மிகவும் குறைவு. பொதுவாக எடிட்டிங் தொடர்பாக தமிழில் எதிர்மறையான எண்ணங்களே நிலவுகின்றன. அது ஒரு பிரதியை செப்பனிடுகிற அல்லது மேம்படுத்துகிற செயல்பாடாகக் கருதப்படுவதற்குப் பதில் ஒரு தணிக்கையாளரின் வேலையாகக் கருதப்படுகிறது. பிரதிகளின் மீதான தணிக்கை வெகுசன ஏடுகளிலும் அரசியல் சித்தாந்தம் சார்ந்த இதழ்களிலும் தணிக்கைக்கு உள்ளாவதை நானே அனுபவித்திருக்கிறேன். ஆனால் எல்லாவிதமான எடிட்டிங்கையும் இப்படிப் புரிந்து கொள்வது அபத்தமானது. பலர் தங்களுடைய பிரதிகள் செப்பனிடப்படும்போது தங்களுடைய பலவீனங்கள் இன்னொரு நபருக்குத் தெரிய வருவதுபோன்ற பதட்டத்தை அடைகிறார்கள்.

தமிழ்ப் பதிப்புலகில் மெய்ப்புப் பார்ப்பவர்களே உண்டு. எடிட்டர் என்பவரின் பணியை மேற்கொள்ளக்கூடியவர்கள் வெகு அபூர்வம்.

ஜெயா டிவியில் சமீபத்தில் உங்கள் கவிதைகளை மையமாக வைத்து ஒரு "தேன்கிண்ணம்" நிகழ்ச்சி வந்ததோ? உங்களுக்குப் பிடித்த சில திரைப்பாடல்கள் பற்றியும், காரணங்கள் பற்றியும் சொல்லுங்கள். பிடித்த இசையமைப்பாளர் யார்?

-- கயல் தனஞ்செயன்.

நான் மிகச் சிறுவயதிலிருந்தே திரைப்படப் பாடல்களோடு சேர்ந்து வளர்ந்து வந்திருக்கிறேன். 'காலையும் நீயே.. மாலையும் நீயே..' என்று கேட்கும் தருணங்களில் காதலின் ஒரு பரிசுத்தமான காற்று நெஞ்சில் நிரம்பும். 'அன்று வந்ததும் இதே நிலா' என்று கேட்கையில் நேசத்தின் ஒரு நிரந்தரப் படிமமாக எரிக்கும் நிலவு ஒரு விம்முதலை உருவாக்கியிருக்கிறது. 'காற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி? என்று கேட்கும் கேள்வியில் இச்சைகொண்ட மனதின் பிரம்மாண்டம் வெளிப்படுவதை உணர்ந்திருக்கிறேன். 'இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிர்விடும்' என்பது போன்ற புத்தம் புதிய படிமங்களும் 'கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை... கண்ணோடு மணியானாய், அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை,' என்பதுபோன்ற சுழலும் வரிகளும் கிளர்ச்சியூட்டியிருக்கின்றன. கண்ணதாசனும் வைரமுத்துவும் எம்.எஸ்.விஸ்வநாதனும் இளையராஜாவும் ஏ.ஆர் ரகுமானும் என்னுடைய பலவீனமான, அந்தரங்கமான, நெகிழ்ச்சியான பல சந்தர்ப்பங்களைத் தொட்டுக் கடந்து சென்றிருக்கிறார்கள்.

...................
"ஏனெனில் அது
அல்லாவை எதிர்த்து
அம்மாவுக்காக கொண்டாடப்பட்ட ரம்ஜான்".

[-- "அம்மா இல்லாத முதல் ரம்ஜான்",
'என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' தொகுப்பிலிருந்து]

ஆண்டவன் இறந்தவர்களை நினைத்து துக்கம் அனுஷ்டிக்கச் சொல்லவில்லை என்னும்போது அல்லாவை எதிர்த்து என்னும் வரிகள் அனர்த்தத்தில் ஒலிக்கிறதே.

"ஏனெனில்
வழக்கத்தை எதிர்த்து
அம்மாவுக்காக கொண்டாடப்பட்ட ரம்ஜான்"

என்று இருந்திருந்தால் மிகப்பொருத்தமாய் இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன். எழுதி 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இதை நீங்கள் ஏற்கிறீர்களா இல்லை இன்னும் தீவிரமாக நீங்கள் எழுதியதை ஆதரிக்கிறீர்களா?

-- ஹரன் பிரசன்னா.

உங்கள் கேள்வி சரியானதுதான். இப்போது நான் அந்தக் கவிதையை எழுதியிருந்தால் அந்தக் கடைசிப்பத்தியையே எழுதியிருக்கமாட்டேன். காரணம் அந்தப் பத்தி கவிதைக்கு அவசியமில்லை. அது தேவையற்ற ஒரு வியாக்கியானம் அல்லது முத்தாய்ப்பு. வழக்கத்தை மறுப்பது கடவுளை மறுப்பதற்குச் சமமானதாகக் கருதும் ஒரு எளிய மனதின் வெளிப்பாடுதான் அது.

சந்தத்திற்கு உட்பட்டு எழுதும் சந்தக் கவிதைகளை, இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதும் வெண்பா போன்ற மரபுக்கவிதைகளை பாடல்கள் என்கிறார்கள் சிலர். கிட்டத்தட்ட பத்தொன்பது நூற்றாண்டுகளாகக் கோலோச்சிக்கொண்டிருந்தவொன்றை நவீன கவிதைகளைக் காட்டி, தள்ளி வைப்பது சரியா? கவித்துவமுள்ள வெண்பாவோ ஆசிரியப்பாவோ கவிதையாகாதா?

-- ஹரன் பிரசன்னா.

வெண்பாவையோ ஆசிரியப்பாவையோ யாரும் தள்ளிவைக்கவில்லை. ஒரு காலத்தின் உணர்ச்சிகளுக்கு சில இலக்கிய வடிவங்கள் பொருத்தமற்றதாகிவிடுகின்றன. அப்போது அவை தானாக உதிர்ந்துபோகின்றன. மனிதனின் ஆயிரம் வருட நம்பிக்கைகளும் கனவுகளும் மதிப்பீடுகளும் சமூக அமைப்புகளும் கடந்த ஒரு நூற்றாண்டில் சிதறிப்போய்விடவில்லையா? என் கடவுளே நீடித்திராத உலகில் வெண்பா நீடித்திருக்கவேண்டும் என்று நான் கவலைப்பட மாட்டேன். இன்றைய மனமோ சொற்களோ வெண்பாவிற்குள் பொருந்தாது. அப்படி எழுத முற்பட்டால் அது அர்த்தமற்ற ஒரு பூர்வீகச் சடங்கை மேற்கொள்வதற்கு ஒப்பாகும். பழைய செய்யுள் வடிவங்கள் அனைத்தும் வேறொரு காலத்தின் உணர்ச்சிகளோடு ரத்தமும் சதையுமாகப் பிணைந்திருக்கின்றன. அவற்றை அங்கேயே விட்டுவிடுங்கள். நவீன மனிதனின் அனுபவங்களையும் சிடுக்குகளையும் விபரீதங்களையும் வெண்பாவாக எழுத முயற்சித்தால் மிகவும் வேடிக்கையாக இருக்கும்

கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்த விவகாரம். "தேர்வு கமிட்டியில் உள்ள சிலர் தங்களுக்குப் பிடிக்காத சில நவீன படைப்பாளிகளுக்கு இந்த விருது கிடைக்கக்கூடாது என்பதற்காகவே வைரமுத்துவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை" - நீங்கள் இப்படிச் சொல்லியதாக இந்தியா டுடேவில் வாசித்தேன். பின்னணியில் நடந்த விஷயங்களைப் பற்றி விட்டுவிட்டு, கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு ஏன் சாகித்ய அகாடெமி விருது தரப்பட்டிருக்கக்கூடாது என்பதற்கான காரணங்களைக் கூற முடியுமா? ஆ.மாதவனின், 'சிறுகதைத் தொகுப்பு' மற்றும் சுந்தர ராமசாமியின், 'குழந்தைகள் ஆண்கள் பெண்கள்' என்ற இரண்டு புத்தகங்களையும் நீங்கள் வாசித்தீர்களா? ஒப்பீட்டளவில் இவை எப்படிக் கள்ளிக்காட்டு இதிகாசத்தைவிடச் சிறந்ததாக உள்ளன என்று சொல்ல முடியுமா?

-- ஹரன் பிரசன்னா.

நீங்கள் குறிப்பிடும் இந்தியா டுடே இதழிலேயே கள்ளிக்காட்டு இதிகாசம் ஏன் நாவல் இல்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். நாவல் என்ற இலக்கிய வடிவத்திற்கு ஒரு அழகியல் சார்ந்த மரபு இருக்கிறது. அந்த வடிவத்தில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள்கூட இந்த அழகியலைச் சார்ந்தே உருவானது. தமிழில் எதார்த்தவாத இலக்கிய மரபிலும் அதற்கு அப்பாலும் மிகச் செறிவான ஒரு நாவல் இலக்கிய மரபு இருக்கிறது. 'பாரீசுக்குப் போ', 'மோக முள்', 'தண்ணீர்', 'ஜே.ஜே.சில குறிப்புகள்', 'புயலிலே ஒரு தோணி', 'நாளை மற்றொரு நாளே', 'விஷ்ணுபுரம்', 'நெருங்குருதி' போன்ற நாவல்கள் எழுதப்பட்ட ஒரு மொழியில் ஒருவர் கள்ளிக்காட்டு இதிகாசத்தை நாவல் வரிசையில் வைத்துப்பேசுவதைவிட சிறுமை வேறு எதுவுமில்லை. வைரமுத்துவுக்கும் நவீன தமிழ் உரைநடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் அவரது மன அமைப்பே நவீன இலக்கிய அழகியலுக்கு எதிரானது. கள்ளிக்காட்டு இதிகாசம் முழுக்க முழுக்கத் தகவல்களின் தொகுப்பு. அசட்டு உணர்ச்சிகளின் கலவை. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலையோ ஆ.மாதவையாவின் சிறுகதைகளையோ வைரமுத்துவின் ஒரு புத்தகத்தோடு ஒப்பிட்டுப் பேசுவது இந்தப் படைப்பாளிகளை அவமதிப்பதாகும்.

எழுத்தாளர்களிடையே குழு மனப்பான்மை அதிகம் காணப்படுவதேன்? பாதுகாப்புக் கருதியா? அல்லது வேறு காரணங்களா?

-- மதுமிதா.

குழுமனப்பான்மை பற்றிய கவலைகள் சமீப காலத்தில் பலரிடமும் மிகவும் அதிகரித்துவிட்டது. தமிழ் சிறுபத்திரிகைகளிலும் இணையத் தளங்களிலும் நிலவும் சண்டைகள் எந்த அளவு சோர்வூட்டகின்றனவோ அதே அளவுக்கு வாசகர்களுக்குக் கிளுகிளுப்பூட்டுகின்றன என்றே தோன்றுகிறது. ஒரு சிறுபத்திரிகையையோ இணையத் தளத்தையோ திறக்கும் பெரும்பாலான வாசகர்கள் முதலில் ஈடுபாடுகாட்டுவது இந்தச் சச்சரவுகளில்தான். இரண்டு இலக்கிய நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் மூன்றாவது நிமிடத்தில் இதைப்பற்றிய பேச்சு தொடங்கிவிடுகிறது. கவுண்டமணி-செந்தில் காட்சிகளைப் பார்த்து சிரிக்கும் ரசிகர்களுக்கும் இலக்கியப் பத்திரிகை வாசகர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதே என் எண்ணம்.

இரண்டாவதாக, சிறுபத்திரிகை என்றாலே குழுச் சண்டைதான் என்று முகத்தைச் சுழித்துக்கொண்டு நாற்காலி நுனியில் ஒதுங்கி உட்கார முயலும் ஆசாரவாதிகள். இவர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு குழுவில் இடம் பிடிப்பதற்காகவோ அல்லது தங்களுக்கு என்று ஒரு குழுவை உருவாக்குவதற்காகவோ ரகசியமாக ஈடுபடும் பல ஆபாசமான காரியங்களை நேரடியாக அறிவேன்.

மூன்றாவதாக, எழுத்தாளர்களுக்கு இடையே நிலவும் சண்டைகள் உடனடியாக ஆவணப்படுத்தபட்டு விடுவதால் அவை வெளிப்படையான சாட்சியங்களாகிவிடுகின்றன. எழுத்து சார்ந்து இயங்கக்கூடிய ஒரு கலைஞனின் தவிர்க்கவியலாத ஒரு பிரச்சினை இது. ஆனால் ஏழுத்தாளர்கள் எப்போதும் குழுமனப்பான்மையால் வக்கிரம் பிடித்து அலைபவர்கள் என்று இதற்கு அர்த்தமல்ல. இவர்கள்தான் தமிழில் கதைகளையும் நாவல்களையும் கவிதைகளையும் இலக்கிய விமர்சனங்களையும் எழுதுபவர்கள். இவர்கள்தான் மொழிபெயர்ப்புகள் செய்பவர்கள். சிறுபத்திரிகை நடத்துபவர்கள். பிரமிள் மற்றவர்களுக்கு எதிராக நடத்தாத தாக்குதலா? ஆனால் அவர்தான் நவீன தமிழ் கவிதையின் மகத்தான கவி. பிரமிள் வாரியிறைத்த புழுதியைத் தாண்டி அவரது கவித்துவத்தின் வெறியேறிய குதிரைகள் முன்சென்றுகொண்டிருக்கின்றன.

குழுச் சண்டையில் நவீன எழுத்தாளர்கள் மட்டும்தான் ஈடுபடுகிறார்களா? நவீன நாடகத் துறையில் நடக்கும் பரஸ்பர சதிவேலைகள் பற்றி நமக்குத் தெரியுமா? சென்னை சோழமண்டலம் ஓவிய கிராமத்திற்குப் போய் யாராவது ஒரு ஓவியரிடம் இன்னொரு ஓவியரின் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டால் கணத்தில் அவர்முகத்தில் தோன்றி மறையும் உணர்ச்சிகள் நமக்கு எண்ணற்ற செய்திகளை உணர்த்திவிடும். சென்னையில் வெகுசன ஊடகங்களில் பணியாற்றும் எனது நெருங்கிய நண்பர்கள் அங்கு நடைபெறும் கீழறுப்பு வேலைகள் பற்றிச் சொல்லும்போது எனக்குக் குலை நடுங்கும். சிறுபத்திரிகை குழுச்சண்டைகள் பற்றி எப்போதும் கிண்டலான அபிப்ராயங்களைப் பரப்பி வரும் ஒரு புகழ்பெற்ற இந்நாள் தொலைக்காட்சிப் பத்திரிகையாளர், தான் இதுவரை பணியாற்றிய ஒவ்வொரு நிறுவனத்திலும் பிறருக்கு எதிராக மேற்கொண்ட தந்திரங்களைக் கேள்விப்பட்டால் அவர் சிறுபத்திரிகை போட்டிமனப்பான்மை குறித்துச் சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கும். நவீன இலக்கியம் என்பது இந்தக் குழுமனப்பான்மை அல்ல. இதைத் தாண்டி எவ்வளவோ தீவிர செயல்பாடுகள் தமிழில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

இதற்கான காரணங்கள் பற்றிக் கேட்கிறீர்கள். நவீன எழுத்தாளன் கூட்டுக் குடும்பங ளுக்குள் வதைபடும் பெண்களைப்போல் ஆகிவிட்டான். சமூக வெளியே அவனுக்கு இல்லை. எல்லா கோபதாபங்களையும் இயலாமைகளையும் தனக்கு மிக அருகில் இருப்பவரிடம்தான் அவன் தீர்த்துக்கொள்ள வேண்டும். இது போக தி,மு.கவிலோ அ.தி.மு.கவிலோ ஒரு வட்டாரச் செயலாளராகப் பணிபுரிய வேண்டிய நபர்களும், சிறுதொழில் முனைவோர்களும் சில சமயம் தமிழில் இலக்கியப் பத்திரிகைகளின் ஆசிரியர்களாக வந்துவிடுகிறார்கள். அவர்களை அவர்களுக்கு உரிய இடத்திற்கு அனுப்பிவிட்டால் இந்தப் பிரச்சினைகளை ஓரளவு சரி செய்யலாம்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்றில்லாது தங்கள் குழு சார்ந்தவர் படைப்பு ஏற்றுக்கொள்ளத் தக்கதென சிலாகிப்பதும், மற்றவை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என நிந்திப்பதுமாக நிலவும் நிலை சரிதானா?

-- மதுமிதா.

இலக்கியம் சார்ந்த தேர்வுகள் என்பது மாற்றான் தோட்டத்து மல்லிகையோ நம்வீட்டு ரோஜாவோ அல்ல. அது ஒருவர் கடந்துவந்த நுண்ணுணர்வு சார்ந்த பாதையின் வெளிப்பாடு. எனக்குக் கறாரான தேர்வுகளும், நிராகரிப்புகளும் உண்டு. அவற்றை ஒரு குழுஅரசியல் என்று ஒருவர் புரிந்துகொண்டால் நான் மிகுந்த அவமான உணர்ச்சியை அடைவேன்.

ஒரு வாசகனின் தேர்வும் மறுப்பும் மிகவும் அந்தரங்கமானது. அந்த அந்தரங்கத்திலிருந்து உருவாகும் நிர்ணயம்தான் அப்படைப்பாளியின் இடம். இதற்கு அப்பால் ஏற்றுக்கொள்ளவும் மறுக்கவும் அதிகாரம் படைத்த குழு எது? ஒரு தனிப்பட்ட மனச் சாய்வுகளுக்காக ஒரு பிரதியை யாராலும் தூக்கி நிறுத்தவோ ஒழித்துக் கட்டவோ முடியாது. அப்படி ஒன்று நிகழ்தால் கூட அது மிகவும் தற்காலிகமானது.

அரிமா சங்கம், கல்லூரி மாணவ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து பல பிரபலங்களைச் சந்திக்க (நமது ஜனாதிபதி அப்துல் கலாம் உள்பட) ஏற்பாடு செய்கையில், தங்களையும் சந்தித்தனராமே?

-- மதுமிதா.

ஆம். அந்தச் சந்திப்புகள் குறித்த பிரசுரத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன், சந்திரபாபு நாயுடு, அப்துல் கலாம் போன்றவர்களின் பெயரோடு என் பெயரும் இருக்கிறது. அந்த சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்த திருச்சி அரிமா சங்கத்தைச் சேர்ந்த துளசி எனது நண்பர். அவர் என்னைக் கிண்டல் செய்வதற்காக இந்தப் பட்டியலில் என் பெயரையும் சேர்த்திருக்கிறார் என்ற சந்தேகம் ஆழமாக எனக்குள் இருந்துகொண்டிருக்கிறது.

கடந்த சில பத்தாண்டுகளில் உங்களது கவிதை பயணித்து வந்த பாதை பற்றி முதல் வார பதிலில் சொல்லியிருந்தீர்கள். தற்போது உரையாடல் போல் செறிவான மொழியில் எழுதும் கவிதைகளே பிடித்திருக்கிறதென்று சொன்னீர்கள். இப்படிப்பட்ட கவிதைக்கும் உரைநடைக்கும் இடையேயான எல்லைக்கோடு மங்கிப் போகாதா?

-- கயல் தனஞ்செயன்.

நவீன கவிதையில் உரைநடையின் கவித்துவ சாத்தியங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் என்னுடைய பிரச்சினை. இலக்கண விதிகளிலிருந்தும் ஓசையின்பத்திலிருந்தும் கவிதை வெளியேறி கனவினதும் அர்த்தத்தினதும் உக்கிரமான தளங்களை நோக்கி நகர்ந்ததுபோல இன்று படிம உருவக இருண்மை மயக்கங்களிலிருந்தும் வெளியேறி உரையாடலின் ஆழமான அந்தரங்கமான பரிமாற்றத்தை நவீன கவிதை நிகழ்த்த வேண்டும். ஒரு கவித்துமான சொல்கூட இல்லாமல் கவிதையின் உக்கிரத்தை ஏற்றிய வரிகளை தமிழில் எழுதவேண்டும். அதன்மூலம் இதுவரை கவிதைக்கெனெ தயாரிக்கப்பட்ட எல்லா பழைய கருவிகளையும் நாம் துறந்துவிடலாம். நேரடியான கவிதைகளை எழுதுவது மிகப் பெரிய சவால். இங்கே கவித்துவத்தின் மாயத்தோற்றங்களுக்கு இடமில்லை.

உரைநடைக்கும் கவிதைக்குமான எல்லைக்கோடு ஏற்கனவே நவீன புனைகதையில் பெருமளவு மங்கிப்போய்விட்டது. நவீன புனைகதை கவித்துவத்தின் சாத்தியங்களையும் நவீன கவிதை உரைநடையின் திறப்புகளையும் பயன்படுத்துவது ஒரு முக்கியமான மாறுதல் என்றே நினைக்கிறேன்.

"உயிர்மை" இதழில் வெளியான ஜே.பி.சாணக்கியாவின் "அமராவதியும் அவள் பூனைகளும்" என்ற கதை 'போர்னோ' என்று குமுதம் இதழால் முத்திரை குத்தப்பட்டது. அக்கதையைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்த உங்களின் புரிதலும் பார்வையும் என்ன?

-- கயல் தனஞ்செயன்.

குமுதம் இக்கதையைத் தாக்குவது அல்லது கிண்டல் செய்வது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். அது தன்னுடைய குற்றங்களிலிருந்து தன்னை சமாதானப்படுத்திக் கொள்வதற்காக இத்தகைய அபிப்ராயங்களை முன்னிறுத்துவது இயற்கையே.

அமராவதியின் பூனை பாலியல் வேட்கையின் தீவிரத்தையும் அதற்குள் ஒளிந்திருக்கும் வன்முறையையும் குறியீட்டுத் தளத்தில் முன்னிறுத்தும் கதை. பாலுறவில் ஏற்படும் மீறல்களும், அத்தகைய மீறல்களால் ஒரு நபர் அடையக்கூடிய மனோரீதியான வீழ்ச்சியும், அந்த வீழ்ச்சியிலிருந்து தன்னை மீட்டு நிலை நிறுத்திக் கொள்வதற்காக ஒரு மரபான ஆண் மனம் கொள்ளும் ரெளத்திரமும் பெண்ணின் உக்கிரமான எதிர்கொள்ளலும் அக்கதையை தமிழில் எழுதப்பட்ட முக்கியமான கதைகளில் ஒன்றாக ஆக்குகின்றன. பாலியல் சார்ந்த விரிவான சித்தரிப்புகள் இல்லாமல் அக்கதையை எழுதவே முடியாது. மேலும் அக்கதையை அதன் பாலியல் சித்தரிப்புகளுக்காக மட்டும் படிப்பவர் அக்கதையின் ஆதாரமான துயரத்தைப் பற்றி அக்கறையற்றவராக மாறிவிடுகிறார். ஜி. நாகராஜனின் வேசிகளைப் பற்றிய கதைகள் ஆற்றமுடியாத துக்கத்தையே எனக்கு ஏற்படுத்திருக்கின்றன. அவற்றின் பாலியல் சித்தரிப்புகள் ஒருபோதும் பாலியல் இன்பத்தை அளிக்க வல்லவையல்ல. நவீன எழுத்தின் பெரும்பாலான பாலியல் சித்தரிப்புகள் கசப்பையும் வாதையையும் வெளிப்படுத்துபவை. பாலியல் இன்பத்தைப் பெருக்ககூடிய சிறந்த erotic எழுத்துக்கள் தமிழில் இனியே எழுதப்படவேண்டும்.

ஹமீது மனுஷ்யபுத்திரனையும் மனுஷ்யபுத்திரன் ஹமீதுவையும் எப்படி வரையறுப்பார்கள்? எப்படி விமர்சிப்பார்கள்?

-- ஹரன் பிரசன்னா.

ஒரு திருடன் இன்னொரு திருடனை வரையறுப்பதுபோன்றும் ஒரு பைத்தியம் இன்னொரு பைத்தியத்தை விமர்சிப்பதுபோன்றதும்தான் அது.

சுஜாதா "உயிர்மை"யில் எழுதுவது பற்றியும், சுஜாதாவின் எழுத்தை நீங்கள் பதிப்பிப்பது பற்றியும் பல தரப்புகளிலிருந்தும் பல காரணங்களுக்காகவும் கண்டனக்குரல்கள் எழுகின்றன. என் கேள்வி இக்குரல்களைப் பற்றியது அல்ல. 1972 "கணையாழி" இதழில் அசோகமித்திரன் அவர்கள் சுஜாதா அவர்கள் பற்றி எழுதியது பற்றியது: "யார் இலக்கியம் படைப்பவன் எது இலக்கியம் ஆகிறது என்பதையெல்லாம் அவ்வளவு திட்டவட்டமாகக் கூறிவிட முடிவதில்லை. ஆனால் சுஜாதா வெகுகாலம் வரையில் நினைவிலிருக்கக் கூடியவர் என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம்." இதை அசோகமித்திரன் எழுதி 32 வருடங்கள் ஆகின்றன. சுஜாதாவுக்குத் தமிழ் இலக்கியப்பரப்பில் இருக்கும் இடம் பற்றி 2000 வருடத்தில் ஒரு புதுவைச் சிற்றிதழிலும் படித்த ஞாபகம். உங்கள் பார்வையில் சுஜாதாவின் இலக்கிய இடம் எது?

-- கயல் தனஞ்செயன்.

சுஜாதாவின் எழுத்துகளை நான் பதிப்பிப்பது தொடர்பாக பொருட்படுத்தக்கூடிய ஒரு கண்டனத்தைக்கூட இதுவரை நான் எதிர்கொள்ளவில்லை. உயிர்மை பதிப்பகம் தொடங்கப்பட்ட சிறிதுகாலத்தில் அடைந்த பரவலான கவனத்தினால் பதட்டமடைந்த சில நண்பர்கள் கிளப்பும் புழுதியை ஒரு விமர்சனமாகக் கருத அவசியமில்லை. சுஜாதாவை தாங்கள் நடத்துகிற மாநாட்டிற்கு அழைத்துச் சிறப்புச் சொற்பொழிவாற்றச் சொல்பவர்கள் அவருடைய பதிப்பாளரை எந்தக் கூச்சமும் இல்லாமல் தாக்கி எழுதுவது வியாபாரப் போட்டி சம்பந்தமான ஒரு தந்திரமே அன்றி அதற்கும் இலக்கிய விமர்சனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுஜாதாவின் நூல்களைப் பதிப்பிப்பதற்கு ஏற்கனவே பெரிய பதிப்பாளர்கள் இருக்கும் சூழலில் எனக்குச் செய்யும் ஒரு தனிப்பட்ட உதவியாகவே தனது சில நூல்களைப் பதிப்பிக்கும் உரிமையை வழங்கினார். அற்பச் சதி வேலைகளை முழுநேரமாகப் பயிலும் நபர்களுக்கும் அவர்களை அண்டிப் பிழைப்பவர்களுக்கும் இதைப் புரிந்துகொள்ளமுடியாது.

தமிழை நவீனப்படுத்தியதில் சுஜாதாவின் பங்களிப்பை நிராகரிப்பது ஒரு பெயரை நிராகரிப்பதுபோன்ற அவ்வளவு சுலபமல்ல. சுஜாதாவிற்கு எந்த இடத்தைக் கொடுப்பது என்பது தொடர்பான சிக்கலை அவர் வெகுசன எழுத்தாளர் என்ற பொத்தாம் பொதுவான அளவுகோல்களின்படி தீர்க்கமுடியாது. இலக்கியம் சார்ந்த வரையறைகள் தொடர்ந்து பெருமளவு மாறிவரும் சூழலில் கடந்த அரைநூற்றாண்டுகளாக ஒரு மொழியை கடுமையாக பாதித்துவரும் எழுத்தாளரை மதிப்பிட வேறு அளவுகோல்கள் தேவை.

சுஜாதா தமிழ் உரைநடைக்கு அளித்த வேகமும் புதுமையும் சாகசமும் ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியது. சமீபத்தில் உயிர்மை பதிப்பகம் தொகுத்து வெளியிட்டிருக்கும் அவரது விஞ்ஞானச் சிறுகதைகள், தேர்ந்தெடுத்த சிறுகதைகள், ஸ்ரீரங்கத்துக் கதைகள் முதலான தொகை நூல்களை படிக்கும் ஒருவர் சிறுகதை என்ற வடிவத்தின் எத்தனை புதிய சாத்தியங்களை திறந்துபார்க்க முயன்றிருக்கிறார் என்பதை அறியலாம். வாழ்வின் சஞ்சலமூட்டும் நிழல்கள் அசையும் பெரும் வெளியாக இக்கதைகள் விரிந்துகிடக்கின்றன.

தமிழ் வெகுசன ஊடகங்களின் அசட்டுத்தனத்திற்கு மாற்றான கூர்மையும் அழகியலும் கொண்ட வெளிப்பாட்டை சுஜாதாவின் எழுத்துக்களே முன்மொழிந்தன. இன்று வரை அவற்றைப் பின்பற்றுவதற்குக்கூட ஒருவர் அங்கு உருவாகவில்லை.

தற்காலத் தமிழிலக்கியத்துக்குப் புகலிடத் தமிழர்களும் புலம்பெயர்த் தமிழர்களும் ஆற்றும் பங்களிப்பு எப்படிப்பட்டது? [பள்ளிப் பரீட்சைக் கேள்வி மாதிரிக் கேட்பதற்கு மன்னிக்கவும். இன்றைய தமிழ் உலகில் இது தவிர்க்க முடியாத கேள்வியென்பதை நீங்கள் அறிவீர்கள்.]

-- கயல் தனஞ்செயன்.

நவீன தமிழ் எழுத்தின் அனுபவத் தளத்தையும் நிலப்பரப்பையும் பெருமளவு மாற்றியமைக்க, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் புகலிடத் தமிழர்களும் மிகுந்த வாய்ப்பைக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் இதுவரை சொல்லப்படாத கனவுகளையும் வாதைகளையும் இவர்கள் எழுத முற்படுகிறார்கள். அவர்களது படைப்பு, மொழியின் பலவீனங்களைத் தாண்டி இந்தப் புதிய உலகம் வலிமையுடன் தன்னை விரித்துக் கொள்கிறது. பல்வேறு நெருக்கடிகளுக்கும் வேரற்ற தன்மைக்கும் இடையில் உருவாகும் இந்த எழுத்துகளில் ஒரு பொதுத் தன்மையை தேடுவது கடினமானது. புலம் பெயர்- புகலிட எழுத்து பெண்ணிய, தலித்திய எழுத்துகளைப்போல தமிழின் வலுவான ஒரு தரப்பு.

"என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்" கவிதைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பு முன்னுரையில் நீங்கள் சொல்கிறீர்கள்: "இத்தொகுப்பில் பல கவிதைகள் ஒரு கலாசார வெளியில் குறைவுபட்ட உடலொன்றின் வாதைகளைப் பேசுகின்றன. இக்கவிதைகளை நான் எழுதியபோது மனோரீதியான ஆசுவாசம் கருதியோ, சுயபிலாக்கணமாகவோ எழுத முற்படவில்லை. உண்மையில் சிதைந்த உடலை வாழ்வினது வினோதத்தின் ஒரு பகுதியாக அடையாளம் காணும் பொருட்டே எழுதினேன். ஆனால் மிகையுணர்ச்சி கொண்ட தமிழ் வாசகப் பரப்பில் அக்கவிதைகள் தனிப்பட்ட ஒருவரின் வேதனைக்குரலாக இனங்காணப்பட்டு என்னை நோக்கி அன்பும் ஆறுதல்களும் வந்து சேர்ந்தன. இது எனக்கு ஆழ்ந்த சங்கடங்களை ஏற்படுத்தியதுண்டு. உடல் குறித்த சித்திரங்களை எழுதுவதில் பெரும் மனத்தடையும் உண்டாகியது." உடல் ஊனத்தால் தன்னை அடையாளப்படுத்திப் பரிதாபத்தை வேண்டாமல், தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை மட்டும் நாடும் உங்கள் தனிப்பட்ட உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், உடல் ஊனமுற்றோருக்கான வசதிகளைச் செய்து தருவதில் இந்தியா மிகவும் பின் தங்கிய நாடு. ஓரளவாவது குரலுடைய உங்கள் போன்றவர்களால் இத்திசையில் ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

-- கயல் தனஞ்செயன்.

இந்திய சமூகத்தை ஒரு பின்தங்கிய சமூகம் என்பதைவிட ஒரு குரூரமான சமூகம் என்று சொல்லலாம். அது பலவீனமானவர்களுக்கும் பலவீனப்படுத்தப்பட்டவர்களுக்கும் எதிரான சமூகம். இவர்கள் இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை நிராகரிக்கப்பட்ட 'பிறர்' என்று சொல்லிவிடலாம். அவர்களுடைய இருப்பு எங்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. சமீபத்தில் சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது. பார்வையற்றவர்களின் குழு ஒன்று சென்னையில் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் ஆணையரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கச் சென்றிருந்தனர். ஆணையர் அவர்களைச் சந்திக்க மறுத்தார். அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தவே கடைசியில் போலீஸ் பார்வையற்றவர்கள்மேல் தடியடி நடத்தியது.

இந்தியாவில் எல்லா அரசுத்துறைகளிலும் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சதவிகித இட ஒதுகீடு அளிக்கபட வேண்டும் என்று சட்டமிருக்கிறது. அதில் சிறிதளவுகூட நிறைவேற்றப்படவில்லை. கட்டிடங்கள், வாகனங்கள், பொது இடங்களை எப்போதாவது ஊனமுற்ற ஒரு நபர் பயன்படுத்துவார் என்ற யோசனை அவற்றை உருவாக்கியவர்களுக்கோ அவற்றை பயன்படுத்துபவர்களுக்கோ ஒருபோதும் இருந்ததில்லை. நிறைய கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழககங்களுக்கும் போயிருக்கிறேன். பெரும்பாலான இடங்களில் சக்கர நாற்காலி செல்லக்கூடிய ஒரு சிறிய பாதையை நான் கண்டதே இல்லை. நான் வெளியே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு கேள்வியை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்பேன் 'அங்கே மொத்தம் எத்தனை படிகள் இருக்கும்?'. இருபது படிகளுக்குள் என்றால் ஓரளவு சமாதானமாக இருக்கும். அதேபோல பயங்கரமாக வடிவமைக்கப்பட்ட கழிப்பறைகள் இன்னொரு பிரச்சினை. உண்மையில் இந்தியக் கழிப்பறைகளுக்கும் இந்திய மனோபாவத்திற்கும் இடையில் உள்ள தொடர்பை ஒரு அற்புதமான குறும்படம் எடுக்கலாம்.

நான் ஒரு தமிழ் எழுத்தாளன். இங்கே எனக்கு சமூக அதிகாரம் எதுவும் கிடையாது. அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களே மாற்றங்களுக்கான சக்தியைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் பயன்படுத்தாத சக்தி அது.

கல்லூரி மாணவர்களிடம் கவிதையைக் கொண்டு சேர்க்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பற்றிச் சென்னைக் கல்லூரி நண்பர்கள் சொன்னார்கள். அது பற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள்.

-- கயல் தனஞ்செயன்.

நவீன இலக்கியத்தின் வாசகப் பரப்பில் நிலவும் தேக்கத்தை உடைக்கவேண்டுமெனில் அதற்குள் இளம் தலைமுறையினர் பெருமளவுக்கு உள்ளே வரவேண்டும். நம்முடைய கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் வெகுசன ஊடகங்களும் இலக்கியம் சார்ந்த நுண்ணர்வுகளைப் பெருமளவுக்குச் சீரழிப்பவை. தவறான முன்னுதாரணங்களைத் திருப்பத் திரும்பப் படைத்துப் பரப்புபவை. இந்தச் சூழலில் நவீன இலக்கியத்தை மாணவர்களிடம் நேரடியாக எடுத்துச் செல்வது அவசியம். அந்த நோக்கில் இரண்டாண்டுகளுக்கு முன்பு சில பயிலரங்குகளை நடத்தினேன். மீண்டும் கடந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரிகளில் மூன்று பயிலரங்குகளை நடத்தினேன். மாணவர்கள் படிப்பதற்காக தமிழின் முக்கியமான நவீன கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய இலவச வெளியீடு ஒன்றை மாணவர்களுக்கு முன்கூட்டியே அனுப்பி அதன் அடிப்படையில் பயிலரங்குகள் நடத்தப்பட்டன. மிகுந்த உற்சாகமும் உவகையும் தந்த அனுபவம் அது. கவிதைகளின் உள்ளார்ந்த உணர்ச்சி இளம் மனங்களில் ஒரு கனலைப் போல பற்றும் காட்சி அழகானது. பல சமயங்களில் அவர்கள் மனதில் கவிதை என்று கற்பிக்கப்பட்டிருப்பனவற்றைப் பிடுங்கி எறிவதுதான் முதன்மையான சவாலாக இருக்கிறது. அந்த அளவுக்கு மொழியின் விஷச் செடிகள் விதைக்கப்பட்டிருக்கின்றன. நான் மிக எளிய கவிதை என்று நினைக்கும் கவிதைகூட புதிர் நிறைந்ததாக காட்சியளிக்கும்போது இடைவெளிகள் எவ்வளவு பிரமாண்டமானவை என்று வியப்புத் தோன்றுகிறது. ஆனால் இது கடக்க முடியாத இடைவெளி அல்ல. நமக்கு ஒரு திட்டமும் செயலும் இருந்தால் இந்த இடைவெளியைக் கணிசமாக அழிக்க முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக, எதிர்மறை சக்திகளுக்கே தமிழில் திட்டமும் செயலும் தீவிரமாக இருக்கின்றன. நான் பயிலரங்குகளை நடத்திய ஒவ்வொரு கல்லுரி நிர்வாகத்திடமும் நவீன இலக்கிய நூல்களையும் பத்திரிகைகளையும் வாங்கும்படி வலியுறுத்தி வருகிறேன். சில கல்லூரிகள் அதை உடனடியாக நிறைவேற்றவும் செய்திருக்கின்றன. என்னை அழைத்தால் தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுகும் நவீன கவிதையை எடுத்துச் செல்லத் தயாராக இருக்கிறேன்.

புரிந்து கொள்ளவே கூடாதென எழுதுபவை மட்டுமே தான் இப்போது நவீன கவிதைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா? வெளியே வாசகர்களிடையே (எழுதாது, வாசிப்பை மட்டுமே கொண்ட வாசகர்கள்) நிலவும் இந்தக் கருத்துக்கு உங்கள் பதில் என்ன?

-- மதுமிதா.

புரிந்துகொள்ளக்கூடாதென யாரும் எழுதவில்லை. ஒரு வாசகர் தனக்குப் புரியக்கூடாதென்று எப்படிப் படிக்க மாட்டாரோ அப்படித்தான் அது. வாசகன்/வாசகி ஒரு படைப்பாளியின் சக பயணி. உண்மையில் யாருக்காகக் கவிதைகள் எழுதப்படுகின்றனவோ அவர்களுக்குக் கட்டாயம் அவை புரிந்துவிடுகின்றன. எத்தனை முறை படித்தும் ஒரு கவிதை உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது உங்களுக்காக எழுதப்படவில்லை என்று அர்த்தம். உங்களுக்காக எழுதப்படாத ஒரு கவிதை உங்களுக்குப் புரியவில்லை என்று வருத்தப்படவேண்டாம்.

பெண்ணியக் கவிதைகள் என இனம் பிரிப்பதற்கான காரணங்கள் என்ன?

-- மதுமிதா.

அது ஒரு அடையாளம். இலக்கியம் ஒரு அரசியல் அல்லது கருத்தியல் பின்புலத்திலிருந்து தோன்றும்போது இத்தகைய அடையாளம் அல்லது வகைப்படுத்தல் முதன்மை பெறுகிறது. எல்லாக் காலத்திலும் இலக்கியம் இத்தகைய ஏதேனுமொரு வகைப்படுத்தலுக்கு ஆட்பட்டே வந்திருக்கிறது. இத்தகைய வகைப்படுத்தலை ஒரு நுண் அரசியல் வாசிப்பு என்றும் கூறலாம்.

உடல் உறுப்புகளைக் குறித்த கவிதைகள் பெண்களால் ஏன் எழுதப் படவேண்டும்? ஏன் எழுதப் படக் கூடாது?

-- மதுமிதா.

பெண்ணை உடலால் வரையறுக்கும் ஒரு சமூகத்தில், உடலை வாதைக்கும் தண்டனைக்கும் குற்ற உணர்விற்கும் ஆளாக்கும் ஒரு கலாசாரவெளியில் உடல் உறுப்புகள் ஒரு பெண் கவிஞரின் மையப்படிமமாக இருந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் ஒரு கலாசார வன்முறையின் படுகளமாக மாறும் ஒரு அமைப்பிற்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு உடலுறுப்புகளை எழுதுவது தொடர்பாக எந்த அதிர்ச்சியும் தேவை இல்லை. தன்னளவில் எந்த உறுப்பும் எழுதப்படவேண்டியதோ எழுதப்படக்கூடாததோ அல்ல. அந்தத் தேவையை எழுதப்படும் கவிதையின் உள்ளார்ந்த நிர்பந்தங்களே தீர்மானிக்க வேண்டும்.

ஏப்ரல் உயிர்மை தலையங்கத்தில் "தங்கள் படைப்பு சார்ந்த பலவீனங்களை மறைத்துக் கொள்ள ஒரு பெண் படைப்பாளிக்கு இன்று உருவாகும் இந்தப் புழுதி பயன்படலாம்" என்று குறிப்பிட்டிருந்தீர்கள். பெண்களின் படைப்பு சார்ந்த பலவீனங்கள் என்னென்ன? பெண்கள் படைப்பு சார்ந்த பலவீனங்களை ஏன் மறைத்துக் கொள்ளவேண்டும்?

-- மதுமிதா.

தமிழில் கடந்த சில ஆண்டுகளில் நிறைய பெண்கள் எழுதவந்திருக்கிறார்கள். பெண் எழுத்தை ஒரு இயக்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு இயக்கம் ஒரு படைப்பாளிக்கு உந்துதலைக் கொடுப்பதுபோலவே அதீதமான மயக்கங்களையும் கண்மூடித்தனமான தற்சார்பையும் ஏற்படுத்திவிடலாம். இடது சாரி மற்றும் தலித்தியப் படைப்பாளிகளுக்கு இது நிகழ்ந்திருக்கிறது. அரசியல் உத்வேகமாக மாறுவதற்குப் பதில் ஊன்றுகோலாக மாறிவிடும் அபாயம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. பல பெண் படைப்பாளிகள் தங்கள் எழுத்தின் துவக்கப் புள்ளிகளையே மகத்தான சாதனைகளாக ஏற்கனவே கனவு காணத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் கவிதைகளைப் பற்றிய அவர்களது பிரகடனங்களும் தங்கள் எழுத்துகள் மீதான இலக்கியம் சார்ந்த விமர்சங்களைக்கூட அவர்கள் எதிர்கொள்ளும்விதமும் பெரும் அங்கதமாக மாறிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான பெண் கவிஞர்கள் தனித்துவமற்ற மூட்டமான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். பிரச்சினைகளே கவிதை என்று நம்புகிறார்கள். நகலெடுக்கிறார்கள். பெண்ணிய அரசியலால் இதையெல்லாம் மறைத்துக் கொள்ள முற்படுகிறார்கள். இதையெல்லாம் மீறிய பெண் எழுத்து தமிழில் எழுதப்பட வேண்டும்

எழுத்தாளர்கள் பலர் மன ஊனம் கொண்டிருப்பது சமுதாயத்தில்என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

-- மதுமிதா.

எந்த விளைவையும் ஏற்படுத்தாது

உயிர்மையில் (பிப்ரவரி) சில படங்கள் பார்க்க இயலா அளவில் தணிக்கை செய்து வெளியிட வேண்டிய நிலையில் அமைந்திருந்தன. இதனைத் தவிர்த்திருக்கலாமே.

-- மதுமிதா.

அதிர்ச்சி மதிப்பிற்காகவோ அசெளகரியபடுத்தவோ அப்படங்கள் பிரசுரிக்கப்படுவதில்லை. உள்ளடக்கத்தின் தேவை கருதி சில சமயமும் அப்படங்களின் அழகியல் கருதி சில சமயமும் படங்கள் வெளியிடப்படுகின்றன. அது சரி, பார்க்கவே முடியாத அப்படங்களை நீங்கள் உண்மையில் பார்க்கவே இல்லையா?

ஆபாசம் என்பதன் எல்லைதான் என்ன? சில கதை, கவிதைகளைப் படிக்கும்போது முகம்சுளிக்கும் வார்த்தைப் பிரயோகங்களும் வர்ணனைகளும் இருப்பதைப் பார்க்கிறேன். எல்லா இலக்கியவாதிகளும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளுவதில்லை. இலக்கியத்தில் ஆபாசம் என்பதன் இருப்புதான் என்ன?

-- ஹரன் பிரசன்னா.

ஒரு இலக்கியப் பிரதியை எதிர்கொள்ளும் வாசக மனம் தனது தன்னிலைக்கு ஏற்பவே ஆபாசம் குறித்த அளவுகோல்களை நிர்ணயிக்கிறது. ஒரு எழுத்தாளனின் மனோநிலை, தேர்வுநிலைகளுக்கு ஏற்ப அமையும் வெளிப்பாடுகளுக்கும், வாசக தன்னிலைகளுக்கும் இடையில் எண்ணற்ற நுண்ணிய கலாசார அதிர்வுகளும் கேள்விகளும் இருக்கின்றன. ஒரு வாசகர் ஒரு பிரதியின் பாலியல் கூறுகளுக்காக மன உறுத்தலுக்கு ஆளாகும்போது இந்த உறுத்தல் தனது மனதின் எந்த ஞாபகக் கிடங்கிலிருந்து வருகிறதென்று ஆராய்ந்தால் மிகவும் சுவாரசியமான பதில்கள் கிடைக்கும். மனிதர்களின் ஆதாரமான தூண்டுதலான பாலியல் உணர்வு அன்றாட வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் எண்ணற்ற பாலியல் புனைவுகளாகப் பரவிக்கிடக்கின்றன. அவற்றில் சிறுபகுதிகூட இலக்கியத்தில் கையாளப்படவில்லை. நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிற அல்லது மறைத்துக்கொள்கிற பாலியல் புனைவுகளும் பாலியல் பிரயோகங்களும் இலக்கியத்தில் தவிர்க்கவேண்டிய ஒன்றல்ல.

இலக்கியம் என்பது வாழ்வின் புதிர்களையும் மறைபொருள்களையும் கண்டடையும் ஒரு வழிமுறை என்றால் நீங்கள் இவற்றிற்கு முகம் கொடுத்தே தீரவேண்டும். நீங்கள் இவற்றை மறுப்பது உங்களையே மறுக்கிற ஒரு முயற்சியே. பாலியல் சார்ந்த ஒரு உச்சக்கட்ட மகிழ்ச்சியையோ அல்லது கடும் வாதையையோ சொல்லும்போது அந்தரங்க உறுப்புகளையோ, செயல்பாடுகளையோ சித்தரிப்பது இலக்கியத்தின் ஆதாரமான ஒரு அம்சம்.

படைப்பியல் நோக்கமற்ற கவன ஈர்ப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பாலியல் பிரயோகங்களையோ புனைவுகளையோ நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. சமூகம் பல்வேறு ரூபங்களில் அதைக் காலகாலமாக உற்பத்தி செய்துகொண்டுதான் இருக்கிறது.

தமிழில் எத்தனையோ பத்திரிகைகள் இருக்கின்றன. இதனால் இலக்கியம் வளர்ச்சி அடைந்திருப்பதாக நினைக்கிறீர்களா? இலக்கியம் என்பதை வாழ வைப்பது சிறுபத்திரிகைகள் மட்டுமே என்கிற தோற்றம் சரியானதுதானா? இத்தனை பத்திரிகைகளுக்கு மத்தியில் "உயிர்மை"யின் தனித்துவமாக எதைக் கருதுகிறீர்கள்?

-- ஹரன் பிரசன்னா.

நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு படைப்பாளியின் வளர்ச்சிக்குப் பின்னே ஒரு பத்திரிகை இருப்பதைக் காணலாம். வெகுசனப் படைப்பாளிகளுக்கும்கூட இது பொருந்தும். இலக்கியம் என்பதை வாழவைப்பது சிறுபத்திரிகைகள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தாலே இந்த உண்மை புரியும்.

உயிர்மை தமிழில் நிலவும் குழு அரசியல் கடந்த ஒரு செயல்பாட்டை முன்னெடுக்கிற இதழாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விரும்புகிறது. ஒரு ஆரோக்கியமான தமிழ் இதழ் என்ற அடையாளத்தை அது பெறவேண்டும் என்று விரும்புகிறேன்.

வணிகப்பத்திரிகையில் எழுதுவதை நீங்கள் விரும்புகிறீர்களா? வணிக்கப்பத்திரிகையில் எழுதும்போது எழுதும் பத்திரிகைக்கு ஏற்றவாறு லேசாக வளைத்துக்கொள்ள சம்மதிப்பீர்களா?

-- ஹரன் பிரசன்னா.

சிறுபத்திரிகைகளுக்குச் சமமாக வணிகப் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன். என்னுடைய முக்கியமான பல கவிதைகள் குமுதத்தில் பிரசுரமாகியிருக்கின்றன. வணிகப்பத்திரிகைகள் மூலம் சென்றடையும் விரிந்த வாசகப் பரப்பு உற்சாகமூட்டவே செய்கிறது. வணிகப் பத்திரிகைகள் எனக்கேற்ப லேசாக வளையும் ஒரு காலத்தில் நான் வளையவேண்டிய தேவை ஒன்றுமில்லை.

கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு வந்தாகிவிட்டது சிறுகதைத்தொகுப்போ, நாவலோ வருமா? அதற்கான திட்டம் எதுவும் இருக்கிறதா?

-- ஹரன் பிரசன்னா.

திட்டம் இல்லை. ஆசை இருக்கிறது.

பெண் விடுதலை பற்றியும் பெண்ணியம் பற்றியும் பெண்கள் எழுதும் கவிதைகள்தான் சரியான பார்வையைத் தருமா? ஆண்கள் பெண்விடுதலை பற்றியோ பெண்ணியம் பற்றியோ ஆழ, அகலத்துடன் எழுத முடியாதா?

-- ஹரன் பிரசன்னா.

பார்வையும் நோக்கும் பாலினத்தைக் கடக்கக்கூடியது. ஒரு படைப்பாளியால் தன்னுடைய உடலைக் கடந்து செல்லமுடியும். ஆண்பெண் பேதங்கள் அழியும் நிலையில் படைப்பின் தருணம் நிகழ்வது சாத்தியமே. ஆண்களால் எழுதப்பட்ட பெண்ணியப் பிரதிகளும் பெண்கள் எழுதிய ஆண் மையப் பிரதிகளும் உண்டு. ஆனால் அதேசமயம் ஒரு உக்கிரமான பெண் படைப்பாளி ஒரு ஆணால் அடையவேமுடியாத ஒரு புள்ளியைத் தொட்டுவிடும்போது அது தனித்துவமான அடையாளத்தைப் பெறுகிறது. இவ்வாறு இலக்கியத்தில் பொதுமைகளும் தனித்துவங்களும் ஒரே சமயத்தில் நிகழ்கின்றன.

ஒரு நல்ல விமர்சனம் என்பது எப்படி இருக்கவேண்டும்?

-- ஹரன் பிரசன்னா.

நல்ல விமர்சனம், மோசமான விமர்சனம் என்று எதுவுமில்லை. எல்லா விமர்சனங்களும் சார்பானவை. நோக்கங்களுள்ளவை. படைப்பைப்போலவே விமர்சனத்திற்கும் எல்லைகள் இல்லை. என்னைப் பொறுத்தவரை நல்ல விமர்சனம் என்னைப் பாராட்டி எழுதப்படுபவை.

தங்களின் இரு கட்டுரைத் தொகுப்புகளைப் பார்த்தேன் (எப்போதும் வாழும் கோடை & காத்திருந்த வேளையில்). இரண்டுமே உயிர்மை வெளியீடாக 2003-இல் வந்துள்ளது.. ஒரே ஆண்டில், ஒரே பதிப்பகத்தில், ஒருவரால் எழுதப்பட்ட கவிதை சார்ந்த (இலக்கியத்தையும் நிறையத் தொட்ட) தொகுப்புகள், ஏன் இரண்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளன? வாசகருக்கு ஒரு புத்தகமாக படிப்பது வசதியாக இருக்குமே.

-- பாஸ்டன் பாலாஜி.

'எப்போதும் வாழும் கோடை', கவிதை பற்றிய என்னுடைய கட்டுரைகள், மதிப்புரைகள் அடங்கிய தொகுப்பு. 'காத்திருந்தவேளையில் ' அம்பலம் இணைய இதழில் நான் எழுதிய வாராந்திர காலம். உதிரியாகப் பல்வேறு சமகாலப் பிரச்சினைகளை அலசுபவை. இரண்டு தொகுப்புகளுமே தனித்த ஒருமை கொண்டவை.

தமிழிணையம் வழி இலக்கியம் கற்கும் பலரில் நானும் ஒருத்தி. இங்கே வந்துதான் தமிழ் இலக்கியத்தின் பரிமாணங்களை அறிந்துகொண்டேன். கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்றும் தெளிந்தேன். இங்கு வந்து தெரிந்துகொண்ட படைப்பாளிகளில் கவிஞர் மனுஷ்ய புத்திரனும் ஒருவர். அவர் அம்பலம்.காமில் எழுதிய கட்டுரைகள்தான் நான் முதலில் படித்தது. பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கவிதைகளைப் படித்துச் சிலாகித்திருக்கிறேன். இங்கும் சில கவிதைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

கவிஞர் மனுஷ்ய புத்திரன், எங்களின் அழைப்பையேற்று இங்கு வந்து நாங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி! என்னிடம் சில வருடங்களுக்கு முன்பு கவிஞருடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டும் என்று யாராவது சொல்லி இருந்தால் நம்பியிருக்கக்கூட மாட்டேன்.

இப்போதெல்லாம் நான் அடிக்கடி கேட்கும் வரி, கவிதை புரியவில்லை என்பது. கவிதையை அதன்போக்கில் விட்டுவிட்டு அதன் ஓட்டத்தை ரசிக்கவும், ஒவ்வொரு இதழாக விரியும் அழகைப் பார்க்கவும் இயலவில்லையா என்பது எனக்குள் எழும் கேள்வி. கவிஞர் மனுஷ்ய புத்திரனிடம் பூடகமான கவிதையினால் என்ன பயன் என்றும், கவிதை புரியவில்லை என்று பலர் சொல்வது பற்றியும் கேட்ட கேள்விக்கு "ஒரு செய்தித்தாளில் வெளிவரும் கட்டுரைகூட உரிய பின்புலம் சார்ந்த அறிவு இல்லாத பட்சத்தில் நமக்குப் புரியாமல் போகிறது. படிமங்கள், குறியீடுகளின் வழியே ஆழ் மனதின் நடனமாக வெளிப்படும் ஒரு கவிதையை உன் ஆடையை அவிழ்த்து உன் நிர்வாணத்தை வெளிப்படுத்து என்று கேட்பது அந்த நடனத்தைப் புரிந்துகொள்ளும் வழியே அல்ல. நீங்கள் அதனோடு சேர்ந்து நடனமாடக் கற்றுக்கொள்ளாத வரை கவித்துவத்தின் இன்பத்தை அடைவது சாத்தியமல்ல" என்று மனுஷ்ய புத்திரன் சொன்னார். உண்மைதானே? கவிதையை ரசிப்பதற்கும் கொஞ்சம் உழைப்பு வேண்டும் இல்லையா.

மரத்தடி நண்பர்களின் கேள்விகளுக்கு நல்ல சிந்திக்க வைக்கும் பதில்கள் அளித்திருக்கிறீர்கள் மனுஷ்யபுத்திரன். மரத்தடிக் குழுவின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கூடவே, எங்களின் படைப்புகளையும் பிரசுரிக்க முன்வந்தமைக்கு மிகவும் நன்றி.

அன்புடனும் நன்றியுடனும்,
சந்திரமதி கந்தசாமி.

மரத்தடி நண்பர்களின் கேள்விகளுக்குக் கடந்த நான்கு வாரங்களாகக் கவிஞர் மனுஷ்ய புத்திரன் பதிலளித்து வந்தார். அவர் பதில்கள் தெளிவையும், கவிஞரின் வாழ்க்கைப் பார்வையையும் கொண்டிருந்ததாக அமைந்தன. கவிஞரை அவரின் கவிதையைத் தாண்டியும் அறிந்து கொள்ள உதவியது. மரத்தடி நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, நம்முடைய கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கிப் பதிலளித்த மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு மரத்தடி சார்பிலும், ஒருங்கிணைப்பாளர்கள் சார்பிலும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

உயிர்மையில் எழுத வருமாறு மரத்தடி நண்பர்களுக்கு மனுஷ்ய புத்திரன் விட்ட அழைப்புக்கும் நன்றிகள். அந்த வாய்ப்பை மரத்தடி நண்பர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

உங்கள் கவிதைகளினூடே உங்களைத் தொடர்ந்து சந்திக்கிற ஆர்வத்தை உங்கள் பதில்கள் உருவாக்கின. நன்றி மனுஷ்ய புத்திரன்.

அன்புடன்,
[Ask the Author ஒருங்கிணைப்பாளர்கள்
ஹரன் பிரசன்னா, மதி கந்தசாமி, பி.கே.சிவகுமார் சார்பாக]
பி.கே.சிவகுமார்.

நன்றி - மரத்தடி 2004

கருத்துகள் இல்லை: