மொழிப் பயிற்சி – 31 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ
ஞானச்செல்வன்
ஆறாம் வகுப்பு முடிய மலேசியாவில் தொடக்கக் கல்விக்கான பள்ளிகள் அரசால் நடத்தப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிகள், சீனப் பள்ளிகள், மலாய்ப் பள்ளிகள் என அவை பிரிந்து இயங்குகின்றன. அவரவர் தாய்மொழியைக் கற்க, தாய்மொழியில் படிக்க அங்கே வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. நம்மூரில் அனைத்து வசதிகளும் கொண்ட உயர்தரமான தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளை விடச் சிறந்த வசதிகளோடு தொடக்கப் பள்ளிகள் இயங்குவதை நம் நாட்டில் காண்பது எப்போது என்ற ஏக்கமே தோன்றுகிறது.
சிறுவர்கள் தமிழ் கற்பதில் ஆர்வமும் ஊக்கமும் உடையவர்களாக இருக்கிறார்கள். மம்மி, டாடி, ஆன்ட்டி, அங்கிள் எல்லாம் நம் காதுகளை எட்டவில்லை. ஆலய வழிபாடுகள் முறையாகச் செய்யப்படுகின்றன. நம் கலாசாரம் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆலயங்கள் அழகாகவும், தூய்மையாகவும், வசதிகளோடும் விளங்குகின்றன. தேவாரம், திருவாசகம் மகளிர் குரல் வழியாக நம் செவிகளில் நிறைகின்றன.
செய்தி ஏடுகளில் (நாளிதழ்களில்) ஆடவர் நால்வர் சிறை செய்யப்பட்டனர். மகளிர் இருவர் தப்பிச் சென்றனர் என்றும் பதின்ம வயதினர் (டீன் ஏஜ்காரர்) என்றும், அகப்பக்கம் (இணையத்தில்) என்றும் அருந்தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டில் உள்ளமை வியப்பைத் தருகிறது.
தமிழில் வடசொற் கலப்பு
தமிழில் கலந்துள்ள பல்வேறு மொழிகளுள் மிகப் பழைமை வாய்ந்த மொழி வடமொழி எனத் தக்க சமற்கிருதம். தமிழில் கலந்த சமற்கிருதச் சொற்களைத் தாம் வடமொழி, வடசொல் என இலக்கண நூலார் இயம்பினர். சங்க இலக்கியங்களிலேயே செந்தமிழோடு வடசொற்களும் விரவியுள்ளன.
"தமிழ்மொழி வரலாறு' எனும் நூல் எழுதிய சூரியநாராயண சாத்திரியார், பரிதிமாற்கலைஞர் எனத் தம் பெயரைத் தூய தமிழில் மாற்றிக் கொண்டார். அவர், அந்நூலுள் பலவிடங்களில் "தமிழ் பாஷை' என்றே குறிப்பிடுகிறார். அந்த நாளில் தமிழ்மொழி என்பதனினும் தமிழ் பாஷை என்பதே வலுப்பெற்று இருந்துள்ளது.
பரிதிமாற் கலைஞருக்குப் பின், சுவாமி வேதாசலம் எனும் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டவர் பற்றி நாமறிவோம்.
இவ்விருவர்க்கும் முன்பே, எங்கோ இத்தாலியில் பிறந்து தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் உடன்குடி என்ற ஊரில் சமயப் பரப்புரை செய்ய வந்த கான்ஸ்டான்டைன்டின் ஜோசப் பெஸ்கி எனும் கிறித்துவப் பாதிரியார் தம்பெயரை முதலில் தைரியநாதசாமி என்று வைத்துப் பின்னர் தூய தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்ட வரலாறும் ஈண்டு நினைக்கத்தக்கது.
தமிழில் காலம் காலமாகக் கலந்துள்ள எண்ணற்ற வடசொற்களுள் சில பலவற்றுக்குக் கீழ் வரும் பட்டியலில் தமிழ்ச் சொற்கள் தந்துள்ளோம். இவற்றுள் பல சொற்கள் இப்போது எழுத்திலும் பேச்சிலும் ஆளப்பட்டு வருகின்றன. ஆயினும் அவற்றை நினைவு கூர்தல் அல்லது சில சொற்கள் அறிமுகப்படுத்தல் எனும் வகையால் கொள்க.
நன்றி – தினமணி கதிர்
கருத்துகள்