கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

இலக்கியம் அன்றும் இன்றும் - டாக்டர் மு.வெங்கடாஜலபதி பி.எச்.டி.

இலக்கியம் என்றால் என்ன? எது இலக்கியம்? இலக்கியம் என்பது எப்படி இருக்க வேண்டும்? இலக்கிய வகையில் எந்தெந்த நூல்களைச் சேர்க்கலாம்? இலக்கிய வகையில் சேரத்தகாதவை என்று எந்தெந்த நூல்களை ஒதுக்க வேண்டும்? கருத்தும் கொள்கையும் உடையவைதாம் இலக்கியமா? கருத்தோ கொள்கையோ இல்லாமல் வெறும் பொழுது போக்குக்காகப் பயன்படுவதுதான் இலக்கியமா?

இப்படிப் பல கேள்விகள் இலக்கியத்தைப் பற்றிப் புறப்பட்டிருக்கின்றன. இத்தகைய விவாதமும் கேள்விகளும் பழைய காலத்தில் இல்லை. இப்பொழுது சில ஆண்டுகளுக்கு முன் புதியனவாகத் தோன்றிய கேள்விகள்தாம் இவை. குறிப்பாகத் தமிழ் இலக்கியங்களை மட்டும் படித்தவர்கள் இத்தகைய கேள்விகளை எழுப்பவில்லை. பல மொழிகளைப் பயின்றவர்களிடமிருந்து இத்தகைய கேள்விகள் பிறந்தன. இக்கேள்விகளையெல்லாம் எது இலக்கியம்? என்ற ஒரே கேள்வியுள் அடக்கி விடலாம்.

எது இலக்கியம் என்ற கேள்விக்கு விடையளிக்க முன் வருவோரில் சிலர் சில புதிய கருத்துக்களை வெளியிடுகின்றனர். நாம் இதுவரையிலும் இலக்கியம் என்று பாராட்டிப் படித்துவந்த சில நூல்கள் இலக்கியம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எண்ணிவந்த ஒரு பொதுவான கருத்துக்கு, மாறான கருத்துக்களையும் வெளியிடுகின்றன. இலக்கியத்தைப் பற்றி இத்தகை ஐயங்களும் கேள்விகளும் பிறந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இது இலக்கியம் வளருவதற்கு வழிகாட்டுவதாகும். தமிழ் இலக்கியம் இனித் தேங்கித் தடைப்பட்டு நின்று விடாது; வளர்ந்து செல்லும்; பிற நாட்டார் வணக்கம் செய்யும் வகையிலே போற்றும் வகையிலே வளர்ச்சியடையும் என்பதில் ஐயம் இல்லை.

கண்மூடித்தனமாக ஒன்றைப் பின்பற்றிச் செல்லும்போது சிந்தனைக்கு வழியில்லை; உண்மையை நினைத்தும் பார்க்க இடமில்லை. எந்த இடத்தில் சந்தேகமும், கேள்விகளும் பிறக்கின்றனவோ அந்த இடத்தில்தான் அறிவும் ஆராய்ச்சியும் வளரும். இந்த உண்மையை வைத்து எண்ணும்போது, இலக்கியம் பற்றி இன்று புறப்பட்டிருக்கும் விவாதம் இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்யும் என்பது உறுதி.

ஒவ்வொருவருக்கும் தாம் எண்ணுவதைப் பற்றி வெளியிடும் கருத்துரிமை உண்டு. இத்ததைய கருத்துரிமைக்கு மதிப்புக்கொடுத்து, அக்கருத்தை ஆராய வேண்டும். பிறருடைய கருத்தை மதிக்காதவர்கள் அலட்சியம் பண்ணுகிறவர்கள் அறிவிலே வளர்ச்சியடைய முடியாது; ''இவர் என்ன சொல்வது? நாம் என்ன கேட்பது'' என்ற நினைப்பது அகங்காரத்தின் உச்சநிலையாகும். இப்படி நினைப்பது தமிழர் பண்பாட்டுக்கே முரண்பட்டதாகும். ''எந்தப்பொருளைப் பற்றி யார் யார் என்ன சொன்னாலும் அவற்றைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்; சொல்லுவோர் யார் என்பதைப்பற்றி நினைக்கவே கூடாது; சொல்லும் பொருளைப்பற்றியே நினைக்க வேண்டும்; அச்சொல்லில் உண்மையிருக்கிறதா என்று ஆராய வேண்டும். உண்மையிருந்தால் கொள்ள வேண்டும்; உண்மையின்றேல் தள்ளி விடவேண்டும்; இதுவே அறிவுடைமையின் செயலாகும்'' என்று வள்ளுவர் சொல்லியிருக்கின்றார்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்பதே அக்குறள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடம் இப்பண்பாடு குடிகொண்டிருந்தது. ''ஆதலால் இலக்கியம் பற்றிய கருத்துக்களை நாம் ஆராய்ந்து பார்ப்போம். தமிழ் இலக்கியம் வளருவதற்கு நம்மால் இயன்ற பணியைச் செய்வோம்'' என்று எழுத்தாளர்கள் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்.

இலக்கியம்

இலக்கியம் என்ற சொல் பண்டைக் காலத்தில் ஒரு பொதுச்சொல்லாக வழங்கிற்று. பிழையில்லாமல், இலக்கண வழுவில்லாமல் எழுதப்படுவன எல்லாம் இலக்கியம் என்பது இலக்கண நூலார் கொள்கை.

பொதுவாக, எழுதப்பட்டிருப்பன அனைத்தும் இலக்கியங்கள்தாம். ''லிக்'' என்ற வடமொழியடியாகப் பிறந்த சொல்லே இலக்கியம் என்பது. எழுதப்பட்டிருப்பது என்பதே இதன் பொருள்.

எழுத்துருவிலே உள்ள அனைத்தும் இலக்கியம் என்பதே ஒரு பொதுவான கருத்து. அரசியல் இலக்கியம், சரித்திர இலக்கிம், விஞ்ஞான இலக்கியம், மத இலக்கியம், சமு‘தாய இலக்கியம், கணக்கு இலக்கியம், நாடக இலக்கியம், சங்கீத இலக்கியம், வைத்திய இலக்கியம் என்றுதான் பலவகையான நூல்களையும் இலக்கியம் என்ற பொதுச் சொல்லால் வழங்கி வந்தனர்; வழங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலும் லிட்ரேச்சர் என்ற சொல்லுக்கு இப்படித்தான் பொருள் சொல்லப்படுகின்றது.

ஆனால் இன்று இலக்கியம் என்ற சொல்லை எல்லா நூல்களுக்கும் பொதுவாக வழங்குவதைச் சிலர் ஒப்புக் கொள்ளவில்லை. இலக்கியம் என்று சொல்லுக்கு எழுதப்பட்டது என்று பழம் பொருளைக் கொள்ளுவதில்லை. இலக்கு என்ற சொல்லிலிருந்தோ, அல்லது இலட்சியம் என்ற சொல்லிலிருந்தோதான் இலக்கியம் என்ற சொல் பிறந்ததாகக் கொள்கின்றனர். இலக்கியம் என்ற பொதுச்சொல் இன்று இவ்வாறு சிறப்புச் சொல்லாக வழங்குகின்றது.

இவ்வாறு பழம் சொற்கள் புதுச்சொற்களாகப் பொருள் மாறி வழங்குவது இயல்புதான். ஒரு காலத்திலே நாற்றம் என்ற சொல் நறுமணம் என்ற பொருளிலே வழங்கிற்று. இன்று அச்சொல் துர்நாற்றத்தைக் குறிக்கின்றது. ஒரு காலத்திலே நாகரிகம் என்ற சொல் கண்ணோட்டம், இரக்கம் என்ற பொருளில் வழங்கிற்று. இன்று நகரரீதியாகப் பிறந்த பழக்க வழக்கம் என்ற பொருளில் நாகரிகம் என்ற சொல் வழங்குகின்றது. ஒரு காலத்தில் ''மன்றம்'' என்ற சொல் ஊருக்குப் பொதுவான மரத்தின் நிழலைக் குறித்தது. இன்று இச்சொல் ''சபை'' என்ற பொருளில் வழங்குகின்றது. ஒரு காலத்தில் ''கழகம்'' என்ற சொல் சூதாடும் இடத்தைக் குறித்தது. இன்று இச்சொல் சரிதம், சபை, இயக்கம் என்ற பொருள்களில் வழங்குகின்றது. இவ்வாறு சொற்கள் காலத்திற்கேற்ப, பொருள் வேறுபட்டு வழங்குவது இயல்பு. இந்த இயல்பை ஒட்டியே இன்று இலக்கியம் என்ற சொல்லும் இன்று புதுப்பொருளில் வழங்குகின்றது.

இன்று எல்லா நூல்களையும் இலக்கியம் என்று கொள்ளுவதில்லை. உள்ளத்துக்கு இன்பம் பாய்ச்சும் கற்பனை நிறைந்த நூல்களை இலக்கியம் என்று கொள்ளுகின்றோம். படிக்கப் படிக்க நமது நெஞ்சத்தைக் கவரும் நடை- உள்ளத்திலே துன்பத்தையோ, மகிழ்ச்சியையோ உண்டாக்கும் கருத்து - நம்மை உணர்ச்சிவசமாக்கும் தன்மை - நம்மை சிந்திக்கத்தூண்டும் சிறந்த மொழிகள்- ஒரு முறை படித்தபின் வீசி எறிந்துவிடாமல் மீண்டும் படிக்கவேண்டும் என்னும் எண்ணத்தை எழுப்பும் இயல்பு- அவ்வாறே திரும்பவும் படிக்கச் செய்யும் செயல்- படித்தவைகளில் உள்ள பல செய்திகள் அப்படியே நம் உள்ளத்தில் ஒட்டிக்கொள்ளும் இயல்பு- நமது வாழ்க்கையில் தவறு நேராமல் நல்ல முறையிலே நடந்து கொள்ள வேண்டும் என்னும் உறுதியை உண்டாக்கும் சக்தி- பல திறப்பட்ட அரிய செய்திகளை நாம் அறிந்து இன்புறச் செய்யும் பண்பு- இவைகள் எல்லாம் அமைந்த நூல்களே சிறந்த இலக்கியம் என்று நாம் எண்ணுகின்றோம்.

சிறப்பாக இலக்கியம் என்பது பொழுது போக்குக்குப் பயன்படுவதாகும்; மக்களுடைய உள்ளத்தையும் பண்படுத்தப் பயன்படுவதாகும். இலக்கியங்களைப் பயின்றவர்கள் ரசிகர்களாக வாழலாம்; பிறருக்கு நல்ல அறங்களை எடுத்துரைப்பவர்களாக இருக்கலாம்; இயற்கையின் இன்பங்களைச் சுவைப்பர்களாகவும், சுவைக்கச் செய்பவர்களாகவும் இருக்கலாம்; மொழியைப் போதனை செய்யும் ஆசிரியராகவும் இருக்கலாம். அவர்கள், வேறு தொழில் நிபுணர்களாக ஆகமுடியாது. இதுவும் இலக்கியத்தின் இயல்பாகும். தொழில் நிபுணர்கள் இலக்கிய ரசிகர்களாக இருக்கலாம். ஆனால் இலக்கியத்தை மட்டும் பயின்றவர்கள் தொழில் நிபுணர்களாக முடியாது.

இந்த இயல்புகளுடன் அமைந்திருக்கும் நூல்கள் எவையாயினும் அவைகள் இலக்கியங்கள் தான். அவைகள் செய்யுள் வடிவிலும் இருக்கலாம்; உரைநடை அதாவது வசன நடை வடிவிலும் இருக்கலாம். செய்யுள் வடிவில் அமைந்திருப்பதால் மட்டும் எல்லா நூல்களும் நம் உள்ளத்தைக் கவர்வதில்லை. சில கவிஞர்களுடைய செய்யுட்கள் தாம் படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. பலருடைய செய்யுள்களைப் படிக்க வேண்டியநூல் என்பதற்காகவே படிக்கின்றோம். தமிழிலே உள்ள வைத்திய நூல்களும், சோதிட நூல்களும், செய்யுள் வடிவில்தாம் எழுதப்பட்டிருக்கின்றன. அப் பாடல்களில் இலக்கியச்சுவை இருப்பதாக யாரும் நினைப்பதில்லை; சொல்லுவதும் இல்லை. உண்மையில் அவைகளில் இலக்கியத்துக்குரிய பண்புகள் இல்லவே இல்லை. இதைப் பற்றிப் பின்னர் விளக்கமாகக் காண்போம்.

செய்யுளைப் போலவே நம் உள்ளத்தை இழுத்துக் கொண்டு செல்லும் உரைநடையும் உண்டு. சொல்லப்படும் செய்திகள் அருமையானவை; ஆராய்ந்து எடுக்கப்பட்டவை; படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவை; ஆதலால் எப்படியாவது படித்து முடிக்கவேண்டும் என்று நினைத்து கொண்டு படிக்கும் உரைநடையும் உண்டு.

செய்யுளானாலும் சரி, வசனமானாலும் சரி, படிப்பவர்களைத் தன்னோடு அணைத்துக் கொள்ளவேண்டும்; அவர்களுடைய சிந்தையை அங்கே இங்கே அலையவிடாமல் தன்னுடன் இழுத்துக்கொண்டு போகவேண்டும். இத்கைய அழகு- எளிய - தெளிவான நடையில் இலக்கியங்கள் அமைந்திருக்க வேண்டும். ஒரு நல்ல இலக்கியத்துக்கு- மக்களைப் படிக்கத் தூண்டும் இலக்கியத்துக்கு- மக்களைப் பண்படுத்தும் நோக்கம் உள்ள இலக்கியத்துக்கு- இத்தகைய எழுத்துநடை முதற்படி என்பது நமது கருத்து.

நமது முன்னோர்கள் பெரும்பாலும் இலக்கியங்களைப் பாட்டுக்களாக எழுதிவந்ததற்கு மக்கள் மனதைக்கவரும் வாசகங்களிலே இலக்கியங்கள் அமையவேண்டும் என்பதும் ஒரு காரணமாகும். செய்யுளிலே இனிய ஓசை உண்டு; பண்ணொடு பாடலாம். செம்பாகமான செய்யுட்கள் படிக்கும் போதே - அல்லது பாடும்போதே- அல்லது பிறர் பாடுவதைக் கேட்கும்போதே நம் உள்ளத்தில் ஒட்டிக் கொள்ளும். முன்னோர்களின் உரைநடையில்கூடச் செய்யுள் வாடை வீசுவதைக் காணலாம். ஆதலால் இலக்கியத்திற்கு அதன் எழுத்து அமைப்பு-வசன அமைப்பு-இனியநடை இன்றியமையாதது என்பதில் ஐயமில்லை.

இலக்கியமும் நூலும்.

நூல் என்றால் இப்பொழுது புத்தகம் என்ற பொருளில் வழங்குகின்றோம். நிலநூல், வானநூல், உடல்நூல், உளநூல், மருத்துவ நூல், கணக்கு நூல், விஞ்ஞான நூல், அரசியல் நூல், என்று பொதுப் பொருளிலேயே இச்சொல் வழங்கி வருகின்றது.

ஆயினும் இன்று இலக்கியம் என்ற சொல் எப்படிச் சிறப்புப் பொருள் கொண்டு வழங்குகின்றதோ அதுபோலவே நூல் என்ற சொல் பண்டைக்காலத்தில் சிறப்புப் பொருள் கொண்டு வழங்கி வந்திருக்கின்றது. இலக்கியம் என்ற சொல் முன்பு பொதுச் சொல்லாக வழங்கி வந்தது. இன்று சிறப்புச் சொல்லாக வழங்கி வருகின்றது. நூல் என்ற சொல்லே முன்பு சிறப்புச் சொல்லாக- அதாவது இன்று இலக்கியம் என்ற சொல் எப்பொருளைக் குறிக்கின்றதோ அப்பொருளைக் குறிக்கும் சொல்லாக வழங்கி வந்தது; இன்று பொதுச்சொல்லாக-புத்தகம் என்பதைக் குறிக்கும் பொதுச்சொல்லாக- வழங்கி வருகின்றது. இவைதான் இவ்விரண்டு சொற்களுக்குமுள்ள வேற்றுமை.

முன்னோர்கள் இலக்கியத்தை நூல் என்ற பெயரால் அழைத்திருக்கின்றனர். நூல் என்றால் பல சிறந்த கருத்துக்கள் நிறைந்தவை; சுவையுள்ள கற்பனைகள் நிரம்பியவை; உள்ளத்தைக்கவரும் இனிய செய்யுட்களின் தொகுப்பு; என்று கூறிவிடலாம். பண்டைக் காலத்தில் நூல் என்பது இந்தப் பொருளில் வழங்கிற்று என்று கூறுவது பொருந்தும்; இதில் தவறில்லை. உரைநடை இலக்கியங்களுக்கும் இக்கருத்துப் பொருத்தமானது தான்.

அறம் பொருள் இன்பங்களைக் கூறுவதே செய்யுள். இச்செய்யுட்களின் தொகுதியே நூல் என்று முன்னோர்கள் கூறினர்; கருதினர்.

''செய்யுட்கள் அறம், பொருள், இன்பம் முதலிய மூன்று பொருள்களையும் அமைத்துப் பாடுவதற்கு உரியவை'' என்று தொல்காப்பிய ஆசிரியர் கூறியிருக்கின்றார். அவரும் தாமே இக்கருத்தைப் புதிதாக எடுத்துக் காட்டுவதாகச் சொல்லவில்லை; நமக்கு முன்னிருந்த அறிஞர்கள் கருத்து இது; அவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்; என்றுதான் கூறியிருக்கின்றார். இதனை,

''அந்நிலை மருங்கின் அறம் முதலாகிய

மும்முதற் பொருக்கும் உரிய என்ப''

என்ற தொல்காப்பியச் செய்யுளியல் சூத்திரத்தால் காணலாம்.

இன்றுள்ள தமிழ் நூல்களிலே- அதாவது தமிழ் இலக்கண நூல்களிலே -பழம்பெரும் நூல் தொல்காப்பியம். அது முழுமுதல் நூலுமாகும். ஆதலால் தொல்காப்பியக் கருத்தை ஒரு வரலாற்று உண்மையாக வைத்துக்கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆகவே, நூல் என்றால் அறத்தைப் பற்றியும், இன்பத்தைப் பற்றியும் உரைப்பதே என்று அறியலாம்.

அறம் என்பது மக்களின் கடமைகளைப் பற்றிக்கூறுவது. அவர்களுக்கு எத்தகைய பண்பு வேண்டும் என்பதைப்பற்றி வலியுறுத்துவது; அவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதை விளக்கிக் காட்டுவது; அவர்கள் இன்புற்று வாழ்வதற்கு வழிகாட்டுவது. இவை போன்றவைகள் எல்லாம் அறத்தில் அடங்கும்.

பொருள் என்பது செல்வத்தின் அவசியத்தைப் பற்றி உரைப்பது; அதைத்தேடும் வழிவகைகளைப் பற்றிக் கூறுவது; எந்த வழியிலே பொருள் ஈட்டவேண்டும் எந்நெந்த வழியிலே வரும்பொருள் நன்மையளிக்கும் என்பதை விளக்குவது. அறத்திற்கும் இன்பத்திற்கும் அடிப்படையானது பொருளாகும். ஆதலால் அதை ஈட்டவேண்டிய முயற்சி மக்களுக்கு வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்துவது. இவைபோன்ற செய்திகளைப் பற்றிக்கூறுவதே பொருளாகும்.

இன்பம் என்பது உலகவாழ்வில் ஒவ்வொரு மனிதரும் தனித்தமுறையில் அனுவபவிக்கும் இன்பமாகும். இன்பத்திற்கு அடிப்படை அன்பு. அன்புவளரும் இடம் இல்லறம். மனைவி, மக்கள் இவர்களே அன்பைத் தழைக்கச் செய்யும் பருவ மழைகள். இவர்களோடு கூடி இன்புறுவதைப் பற்றியும், இதே சமயத்தில் மனித சமுதாயத்துடன் ஒன்றுபட்டு இணைந்து வாழவேண்டிய அவசியத்தைப் பற்றியும் கூறுவதே இன்பமாகும். மனித வாழ்க்கையைக் கூட்டுறவு வாழ்க்கையாக மாற்றியது இன்ப உணர்ச்சியும் அதன் அடிப்படையான அன்புந்தான். இல்லறத்திலே வாழ்கின்றவர்கள் தங்கள் சொந்த வாழ்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதால் பயனில்லை; அது மனிதப் பண்புள்ள வாழ்க்கையும் அன்று; அவர்கள் விருந்தோம்பல், வறியோரைக் காத்தல், பிறருக்கு உதவுதல், நாட்டின் நன்மைக்கான பொதுக்காரியங்களுக்கு உதவுதல் போன்ற அறங்கள் இல்லறத்தார்க்குக் கடமைகளாக வலியுறுத்தப்பட்டு இருக்கின்றன. இக்கடமைகள் எல்லாம் மனித சமுதாயத்துடன் ஒன்றுபட்டுக் கலந்து வாழ்வதற்குக் காட்டும் வழிகளாகும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அறம், பொருள், இன்பம், என்ற இந்த மூன்று தலைப்பின் கீழ்மனித வாழ்வைப் பற்றிய எல்லா விஷயங்களையும், மனித வாழ்விற்குத் தேவையான எல்லா விஷயங்களையும் விரிவாகக் கூறிவிட முடியும். ஆதலால்தான் அறம், பொருள், இன்பங்களைப் பற்றிக் கூறுவதே செய்யுள் என்று கூறினர்; அச்செய்யுட்களின் தொகுப்பே இலக்கியம்-நூல் -என்று கொண்டனர். இதுதான் இன்று நாம் விரும்பும் இலக்கியம் பற்றி முன்னோர்கள் கொண்டிருந்த முடிவாகும்.

பிற்காலத்தில் மனிதன் மறுவுலக வாழ்வைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில்தான் வீடு என்ற பொருளும் அந்த மூன்றுடன் சேர்ந்தது. தெய்வ பக்தியும் மதநம்பிக்கையும் மதஒழுக்கங்களும் வளர்ந்த காலத்தில்தான் அறம் பொருள் இன்பங்களுடன் வீட்டையும் சேர்த்தனர்.

அறம், பொருள், இன்பம், வீடு

அடைதல் நூல் பயனே

என்று கூறினர். நூல்களிலே இலக்கியங்களிலே இந்த நான்கு பொருள்களைப் பற்றியும் எழுதவேண்டும் என்று கூறினார்கள்.

தொல்காப்பியருக்கு முன்னே வாழ்ந்த நமது முன்னோர்கள் வீட்டைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் இவ்வுலக வாழ்வைப் பற்றித்தான் கவலைப் பட்டார்கள். இவ்வுலகில் இன்புற்று வாழ்வதற்கான காரியங்களைத்தான் முதன்மையானவை என்று எண்ணினார்கள்; இறந்த பின் அடையும் உலகம் ஒன்று உண்டு என்று நம்பிய காலத்தில் கூட- இதைப்பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்ட காலத்தில் கூட - அவர்கள் வீட்டுலகைப் பெறுவதில் அவ்வளவு அதிகமாகக் கவலை காட்டவில்லை. இவ்வுலகிலே மக்கள் வாழவேண்டிய முறைப்படி வாழ்ந்தால் போதும். அதுவே வீட்டுவாழ்க்கை; மோட்சம்; இன்ப வாழ்வு; என்று நினைத்தார்கள். செத்தபின் அடையக்கூடும் என்று எண்ணுகின்ற சிவலோக- வைகுந்த வாழ்வைப்பற்றி அவர்கள் சிந்தித்தார்களா? என்பது ஆராய்ச்சிக்குரிய செய்தியாகும். இவ்வுலகத்தில் துன்பம் இல்லாமல் நன்றாக மகிழ்ச்சியுடன்- கவலையில்லாமல், விரும்பும் தேவைகளையெல்லாம் பெற்று வாழவேண்டும் என்பதே பழந்தமிழர் குறிக்கோள்; எண்ணம். ஆதலால் அவர்கள் பாடல்களிலோ, நூல்களிலோ வீட்டைப் பற்றி- மோட்சத்தைப் பற்றிப் பேசவேண்டும் என்று சொல்லவில்லை.

திருவள்ளுவரும் இதைத்தான் சொன்னார். முன்னோர்களைப் பின்பற்றி, அவர் வீட்டைப் பற்றிக் கூறவில்லை. அறம், பொருள், இன்பங்களைப் பற்றியே திருக்குறளில் கூறிவைத்தார். பண்டைத் தமிழர் கருத்தைப் பெரும்பாலும் திரட்டித் தொகுத்துத்தரும் நூலே திருக்குறள். இவ்வுலகில் வாழவேண்டிய முறைப்படி வாழ்கின்றவன் தேவருலகில், இன்புற்று வாழும் தேவர்களில் ஒருவனாக வைக்கப்படுவான் என்று வள்ளுவர் சொல்லியிருப்பதே அவர் கருத்தைக் காட்டுவதாகும்; முன்னோர் கொள்கையையும் உணர்த்துவதாகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

என்ற குறள், மேற்கூரிய கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.

இதனால் பிற்காலத்தினர்தான்- மதப்பிரச்சாரம் தமிழகத்தில் வேரூன்றியபிறகுதான், நான்கு பயனும் அமைய- அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளையும் அமைத்து நூல்களை இயற்றவேண்டும்; இலக்கியங்களை ஆக்கவேண்டும்; என்று பிற்காலத்தினர் இலக்கணம் வகுத்தனர். இந்த நான்கையும் பெறுவதே மனிதப் பிறப்பின் பயன் என்றும் கூறினர்.

முன்னோர்கள் அறம், பொருள், இன்பங்களைப் பற்றி எழுதப்படுவனவே நூல்கள்- இலக்கியங்கள் என்று கூறினர். இவ்வாறு எழுதப்படுகின்றவைகளையெல்லாம் நூல்கள்- இலக்கியங்கள் என்று கொண்டனர். பின்னாளில்தான் வீட்டைப்பற்றியும் நூல்களில் பேசவேண்டும் என்று உரைத்தனர்.

முன்னோர் கருத்தையும் பின்னோர் கருத்துக்களையும், ஒன்றாக வைத்து எண்ணிப்பார்த்தால் இருவர் கருத்தும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதைக் காணலாம். முன்னோர்கள், நூல் என்று கூறுவதும், பின்னோர்கள் இலக்கியம் என்பதைப் பொதுப் பெயராகக் கொள்ளாமல் ஒருவகை நூலுக்கு மட்டும் சிறப்புப் பெயராக வைத்து வழங்குவதும் ஒத்த கருத்துடையன என்பதை அறியலாம்.

நன்றி: சாமிசிதம்பரனாரின் இலக்கியச்சோலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ