03/09/2011

மொழிப் பயிற்சி – 27 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

பிழை என்பது சந்திப் பிழை, எழுத்துப் பிழை, சொற்பிழை, சொற்றொடர்ப் பிழை (வாக்கியப் பிழை) என்றெல்லாம் தமிழாசிரியர்கள் வழக்கில் மிகுதியாகப் பயன்படும் சொற்கள். "பிழையின்றித் தமிழ் பேசு' என்பதா?

"தவறின்றித் தமிழ் பேசு' என்பதா? எது சரி? இரண்டும் சரிதாம். இல்லை, தவறின்றி எனல் தவறு. மொழியைப் பொறுத்துப் பிழை என்று சொல்லுதலே சரி என்பார் உளர். ஐயா, பிழையைத் தவறு எனல் பொருந்தாது என்கிறீர்.

பிழையைக் குற்றம் என்றே இலக்கணம் சொல்லுகிறதே. சொற்குற்றம், பொருட்குற்றம் என்றெல்லாம் சொல்லுகிறார்களே. நூலில் வரக்கூடாதவற்றைப் பத்துக் குற்றங்கள் என்று நன்னூல் பேசுகிறதே. "குன்றக் கூறல், மிகைப்படக் கூறல், கூறியது கூறல், மாறுபடக் கூறல்' முதலியன குற்றங்களாம். ஆதலின் கொலை, களவு போன்றவைதாம் குற்றங்கள் எனக் கருதுவது நமது மனப்பான்மையாகும்.

"தப்பு' வில் தப்பித்தல் பொருளும் உண்டாதல் போல, பிழை என்பதில் பிழைத்தல் எனும் பொருள் உண்டாகும். தப்பிப் பிழைத்தேன் என்றும் சொல்லுவோம். பிழைத்தல் என்றால் தவறு செய்தல் என்ற பொருளும் உண்டே. சான்றோர்ப் பிழைத்தல் என்றால் சால்புடைய பெரியார்க்குத் தவறிழைத்தல் என்று பொருள். (உயிர் பிழைத்தல் வேறு. உயிர் வாழ்தல் வேறு என்று விளக்கம் பல தருவோம். இது வேறு)

முடிவாக பிழை, தவறு, குற்றம் எல்லாம் ஒரே பொருள் தருவன எனினும் இடமறிந்து தக்கவாறு பயன்படுத்துதல் வேண்டும் என அறிக. என்ன ஒரே குழப்பமா? ஊன்றிப் படியுங்கள். தெளிவு பிறக்கும்.

வன்னம் - வண்ணம்

இரு சொற்களுக்கும் நிறம், அழகு எனும் பொருள் உண்டு. இருப்பினும் நிறத்தைக் குறிக்க நாம் வண்ணம் எனும் சொல்லையே பயன்படுத்துகிறோம். இரண்டிற்கும் வேறுபாடான பொருளும் உண்டு. "வன்னம்' எனில் எழுத்து. "வண்ணம்' எனில் இசைப்பாட்டு வகை என்று இருவேறு பொருள் காணலாம். இவ்வண்ணம், இவ்வாறாக என்ற பொருளிலும் பயன்பாட்டில் உள்ளது. இராமபிரானின் கைவண்ணம், கால் வண்ணம் பற்றியெல்லாம் கம்பன் பாட்டில் கண்டு மகிழலாமே.

வன்மை - வண்மை

வன்மை என்பது வலிமையாகும். உடல் வன்மை வேண்டும் என்போம். சொல்வன்மை, அனைத்து வன்மையிலும் உயர்ந்தது என்று சொல்லுவோம். வன்மை, வலிமை, வல்லமை எல்லாம் ஒன்றே. வல்லரசு நாடுகள் என்றால் போர் வன்மை மிக்க நாடுகள் எனப் பொருளன்றோ?

வண்மை என்பது வளத்தைக் குறிப்பது. வழங்குதலையும் குறிக்கும். அஃதாவது வள்ளல் தன்மை வண்மை எனப்படும். "வறுமையின்மையால் வண்மையில்லை கோசலத்தில்' என்பான் கம்பன். (வண்மையில்லை நேர் வறுமையின்மையால்) வன்மையும் வண்மையும் உடையதாக ஒருநாடு திகழுமாயின் அது நன்னாடு ஆகும்.

கன்னன் - கண்ணன்

இரண்டும் இருவரது பெயர்கள். முன்னவன் கர்ணன், பின்னவன் கிருஷ்ணன். தமிழ் ஒலியமைப்பில் எழுத்து வடிவில் கர்ணன் கன்னன் எனவும், கிருஷ்ணன் கண்ணன் எனவும் ஆயினர். ஆக்கியவர் வில்லிபுத்தூரார். இப்படியாக்கிட வழியுரைத்தவர் தொல்காப்பியர்.

""வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே''

கர்ணம் என்பது காதைக்குறிக்கும் வடசொல். கிருஷ்ணம் என்பது கருமை குறித்த வடசொல்.

பத்துமணி செய்தியா? பத்துமணிச் செய்தியா?

பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் செய்தி, பத்துமணி செய்தி என்று வல்லொற்றுமிகாமல் இயல்பாகச் சொல்லுதலே சரி. பத்து மணிச் செய்தி என்றால் மணியான செய்தி பத்து என்று பொருள் மயக்கத்திற்கு இடமாகும். (மணிச் செய்தி - மணியான  செய்தி) மணிச்செய்திகள் என்றால் மணி, மணியான செய்திகளன்றோ?

மற்றொன்று இந்த நிகழ்ச்சி இரவு பத்து முப்பது மணிக்கு என்று சொல்லுகிறார்களே! இது சரியா? சரியன்று. பத்து முப்பது மணி (10-30) மணி என்றால் பத்து மணிக்கா, முப்பது மணிக்கா? மணி என்னும் சொல், பத்தோடும், முப்பதோடும் இயைவு கொள்ளுமே! பின்,எப்படிச் சொல்லுவது? இரவு மணி பத்து முப்பதிற்கு (10-30) எனலாம். இதற்குப் பத்துமணி முப்பது நிமிடத்திற்கு என்று பொருள் கொள்ளலாகும்.

மறுதேர்வு, மறுத்தேர்வு

ஒரு முறை தேர்வு நடத்தி அதில் ஏதோ தவறு நேர்ந்து மீண்டும் அத்தேர்வு நடத்தப்படுவதை மறுதேர்வு எனல் வேண்டும். ஆனால் சில பத்திரிகைகள் மறுத்தேர்வு நடைபெற்றது என எழுதுகின்றன. மறுத்தேர்வு என்றால் மறு (மாசு- குற்றம்) உடைய தேர்வு என்று பொருள் தரும். ஆதலின் ஒற்றுப் போட்டு அழுத்த வேண்டாம்.

(தமிழ் வளரும்)

நன்றி - தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: