கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

கருத்து ஒருமித்த காதலர் - டாக்டர் மு.வெங்கடாஜலபதி பி.எச்.டி.

கணவனும் மனைவியும் கருத்து ஒருமித்து வாழ்வதே சிறந்த வாழ்வு. அத்தகைய குடும்ப வாழ்வில்தான் இன்பம் இருக்க முடியும். கணவன் மேற்கே போனால், மனைவி கிழக்கே போகவேண்டும் என்கிறாள். வந்தவரை உபசரிக்க வேண்டும் என்று கணவன் சொன்னால் மனைவி அதைக் காதால் கூடக் கேட்பதில்லை.

மனைவியின் உறவினரைக் கண்டால் கணவன் முகம் சுளிக்கிறான்; கணவன் உறவினரைக் கண்டால் - நண்பரைக் கண்டால் மனைவி மூஞ்சியைத் திருப்பிக் கொள்ளுகின்றாள். இம்மாதிரியான குடும்பத்திலே அமைதியிருக்க முடியாது; சாந்தி நிலவ முடியாது; இக்குடும்பத்தில் எப்பொழுதும் போர் முரசுதான் ஒலித்துக் கொண்டிருக்கும். இக்குடும்பம் போர்க்களமாகத்தான் காட்சியளிக்கும்.

இந்த உண்மையை முன்னோர்கள் பல பாடல்களில் எடுத்துக்காட்டியிருக்கின்றனர். பல நிகழ்ச்சிகளில் அமைத்துக் கதைபோலவும் எழுதியிருக்கின்றனர்.

ஒரு குடும்பத்தில் ஒற்றுமையின்மைக்குக் கணவனுடைய கெட்ட குணமே காரணமாக இருக்கலாம். அல்லது மனைவியின் போக்கு காரணமாயிருக்கலாம்.

மனைவி உத்தமி; கணவன் வார்தைக்கு மறுமாற்றம் பேசாதவள்; மானத்தோடு அடக்கமாகக் குடித்தனம் பண்ணவேண்டும் என்னும் ஆவல் உள்ளவள்; வந்தாரை அன்புடன் உபசரிக்கும் அருங்குணம் உள்ளவள்; வருமானத்திற்குத் தக்கவாறு செலவு செய்யும் திறமையும் உள்ளவள்.

கணவனோ அடாபிடிப் பேர்வழி; நீக்குப் போக்குத் தெரியாதவன்; வரவுக்குமேல் செலவு செய்யும் ஆடம்பரக்காரன்; கூடா ஒழுக்கங்களிலும் பழகியவன்; தன் குற்றத்தை உணராமல், எதற்கெடுத்தாலும் மனைவியின் மேல் சீறி விழுகின்றவன்; மனைவியைப் பெண் என்று கருதாமல் ஆடுமாடு போல் எண்ணி அடக்குமுறை தர்பார் நடத்துகின்றவன். இந்தக் குடும்பத்தில் இன்பம் என்ற சொல்லுக்கே இடமில்லை. சதா கண்­ரும் கம்பலையுந்தான் குடி கொண்டிருக்கும்.

கணவன் ஒழுங்கானவன்; அடக்கமுள்ளவன் வரவுக்குத் தக்க செலவு செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவன்; கடன் பாடாமல் வருவதைக் கொண்டு மானமாகக் காலம் கடத்தவேண்டும் என்னும் கருத்துள்ளவன். மனைவியோ ஆடம்பரக்காரி; பெரும் பணக்காரிபோல் ஆடை அணிகள் பூணவேண்டும் என்னும் ஆசை உள்ளவள்; கணவனுடைய கருத்தறியாமல், வருமானத்தையும் உணராமல் அது வேண்டும் இது வேண்டும் என்ற பாடாய்ப் படுத்தி வைப்பவள். இத்தகைய குடும்பத்திலும் இன்பத்தைக் காணமுடியாது. எப்பொழுதும் கணவனும் மனைவியும் நாயும் பூனையும் மாதிரி சீறிக் கொண்டிருப்பதைத்தான் காணலாம்.

கணவன் மனைவிக்குள் ஒற்றுமையில்லாத காரணத்தால் ஏற்படும் நிகழ்ச்சிகளைப்பற்றிப் பல துண்டுக் கதைகள் உண்டு. இந்தப் பழைய துண்டுக் கதைகள் பெரும்பாலும் பெண்ணின் மேல் குற்றம் சாட்டுவதாக அமைந்திருக்கும்; ஆண்மகன் மேல் குற்றம் சாட்டுவதாக அமைந்திருக்கும் கதைகளைக் காண்பது அரிது. இதற்குக் காரணம் உண்டு.

ஆண்மகன்தான் சமுதாயத்தில் தலைமை இடத்தில் இருப்பவன்; அவன்தான் குடும்பத்திலும் தலைமை தாங்குகிறவன். அவனுக்கே வாழ்க்கையை ஒழுங்குபடுத்தக் கூடிய உரிமை முழுவதும் உண்டு; பெண் ஆணுக்கு அடங்கியவள்; ஆண்மகன் எண்ணப்படி நடக்க வேண்டியதுதான் அவள் கடமை; அவளுக்கென்று தனிச்சுதந்திரம் எதுவும் இல்லை.

இதுதான் சென்ற நூற்றாண்டு வரைக்கும் நிலைத்திருந்த சமுதாயக் கொள்கை. ஆதலால் இந்த நூற்றாண்டுக்கு முன் பிறந்த எல்லா நிகழ்ச்சிகளும் இந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் அமைந்திருக்கும். காலத்தின் நிலைகளை ஒட்டித்தான் கதைகளும் நிகழ்ச்சிகளும் அமையும்; இலக்கியங்களும் கவிதைகளும் தோன்றும். இந்த உண்மையை உள்ளத்தில் வைத்துக் கொண்டுதான் பழைய நிகழ்ச்சிகளை நாம் பார்க்க வேண்டும்; உதாரணமாக, ஒளவையார் பாடியதாக வழங்கும் நிகழ்ச்சி ஒன்றைக் காண்போம்.

நல்லவன் ஒருவன்; ஒளவையார் வழிநடந்து போவதைக் கண்டான்; அவர் களைத்திருப்பதைப் பார்த்தான். அவரைத் தன்வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் உணவிட்டு உபசரிக்க வேண்டும் என்று நினைத்தான். வீட்டுக்கு அழைத்துக் கொண்டுபோய் தெருத் திண்ணையிலே உட்கார வைத்தான்.

அவன் மனைவியோ படுபட்டி; காயம்பட்ட புண்ணுக்குச் சுண்ணாம்புகூடக் கொடுக்காதவள்; எச்சில் கையால் காக்கையை விரட்டவும் இணங்காதவள்; அவளிடம் சென்றான். பக்கத்தில் உட்கார்ந்தான்; அவள் முகத்தைக் தடவிக் கொடுத்தான்; தலையில் உள்ள ஈர்-பேன் முதலியவைகளை எடுத்தான். தலை மயிரை அழகாக முடிந்தான். மெதுவாக அவள் காதிலே விருந்து ஒன்று வந்திருக்கின்றது என்று கூறினான். அவ்வளவுதான், கணவன் செய்த உபசாரம் அவ்வளவையும் மறந்து விட்டாள். வருந்தினாள்; எழுந்து கூத்தாடினாள்; அவனைப்பற்றி வசைபாடினாள்; கோரத்தாண்டவம் ஆடி பழய முறத்தைக் கொண்டு, அவனை ஓட ஓட அடித்து விரட்டினாள்.

இந்தக் காட்சியை குறிப்பாகக் கண்ட ஒளவையார் இப்படியே ஒரு வெண்பாவில் அமைத்துப் பாடினார்.

இருந்து, முகம் திருத்தி, ஈரோடு பேன்வாங்கி,

விருந்து வந்தது, என்று விளம்ப- வருந்திமிக

ஆடினாள்; பாடினாள்; ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓடோடத் தான்.

என்று பாடிவிட்டார். இதன்பின்பும் கணவன் அந்தப் பட்டி மனைவியைச் சும்மாவிடவில்லை. காலைக் கையைப் பிடித்துச் சமாதானம் செய்தான். ஒளவைக்கு விருந்தளிக்கச் சம்மதிக்கும்படிச் செய்தான்.

அந்தப் பட்டிப்பெண் தனக்குச் சிறிதும் சம்மதம் இல்லாமல், கணவன் கெஞ்சுதலுக்காக இணங்கிச் சோறு சமைத்தாள். ஏதோ காமாச் சோமா என்று கறியும் குழம்பும் ஆக்கினாள். இலையில் பரிமாறினாள். ஒளவையார் அந்த இலையில் முன் அமர்ந்தார். அவ்வளவுதான். தன் மனத்துக்குள்ளேயே அந்த உணவைப்பற்றிக் கீழ்வருமாறு நினைத்தார். அதைப் பாட்டாகவும் அமைத்துக் கொண்டார்.

''இந்த உணவைக் காண்பதற்கே கண்கூசுகின்றன; கையால் இதை எடுக்க வெட்கமாயிருக்கிறது. கையில் எடுத்து வாயில் வைப்போம் என்றால், வாய் திறக்கமாட்டேன் என்கின்றது; வலுக்கட்டாயமாக வாயைத் திறந்து உள்ளே உணவைத் திணிக்க வேண்டியிருக்கிறது. அப்படி உள்ளே புகுந்த உணவினால், வீணாக எனது எலும்பெல்லாம் பற்றி எரிகின்றது அன்பில்லாதவள் இட்ட உணவு இவ்வாறு செய்கின்றது; ஐயையோ என்ன செய்வேன்'' என்று வருந்தினாள்.

காணக் கண்கூசுதே கையெடுக்க நாணுதே

மாண்ஒக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கு என்

என்பெல்லாம் பற்றி எரியுதே ஐயையோ

அன்பில்லாள் இட்ட அமுது.

என்பதுதான் அக்கருத்துள்ள பாட்டு. இவ்வாறு எண்ணி வருந்தி ஏதோ ஒருவாறு சாப்பிட்டுப் போனாள் ஒளவையார்.

இந்த நிழச்சி வேடிக்கையானது; ஆயினும் இதில் உள்ள கருத்தைத்தான் நாம் கவனிக்கவேண்டும். இரண்டு கருத்துக்கள் இந்த நிகழ்ச்சியில் அடங்கியிருக்கின்றன.

ஒன்று, குடும்பத்தில் ஒற்றுமை வேண்டும்; காதலனும் காதலியும் கருத்தொருமித்து எக்காரியத்தையும் செய்ய வேண்டும் என்பது.

மற்றொன்று அன்பில்லாத உபசரிப்பு, பிறர்க்கு இன்பம் அளிக்காது. அன்புடன் உபசரிப்பதே இன்பம் தரும் என்பது.

நிகழ்ச்சி, பெண்ணடிமையும், ஆண் ஆட்சியும் உள்ள காலத்தில் தோன்றியது; ஆதலால் இந்த முறையில்தான் பெண்மீது பழிபோடுவதாகத்தான் அமைந்திருக்க முடியும். நாம் கொள்ள வேண்டியது கருத்தைத்தான். கருத்து உண்மையானது; என்றும் போற்றக் கூடிய கருத்து; இது உண்மைதானே?

நன்றி: சாமிசிதம்பரனாரின் இலக்கியச்சோலை

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ