03/09/2011

மொழிப் பயிற்சி – 29 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

சமக்கிருதம் அல்லாது பல்வேறு மொழிகள் காலந்தோறும் தமிழில் வந்து கலந்தன. அராபிய, பாரசீக, இந்துஸ்தானிச் சொற்களும், போர்ச்சுக்கீசியச் சொற்களும், உருது, தெலுங்கு, கன்னடச் சொற்களும் தமிழில் கலந்துள்ளன. ஆங்கில மொழிச் சொற்கள் மிகுதியாகத் தமிழில் கலந்து இந்நாளில் ஆதிக்கம் (மேலாண்மை) செய்கின்றன.

இப்போதெல்லாம், நமஸ்காரம், ஸந்தோஷம், சுபமுகூர்த்தப் பத்திரிகை, வந்தனோபசாரம், úக்ஷமம், அக்கிராசனர், காரியதரிசி, பொக்கிஷதாரர், பாஷை போன்ற சொற்களைப் பயன்படுத்துவோர் தமிழகத்தில் குறைவாகவே உள்ளனர். இவற்றை நல்ல தமிழில் வணக்கம், மகிழ்ச்சி, திருமண அழைப்பு, நன்றி நவிலல், நலம், தலைவர், செயலாளர், பொருளாளர், மொழி என்று சொல்லுதல் பெருகியுள்ளது. மிகச் சிலரே நமஸ்காரம், ஸந்தோஷம் என்பனவற்றை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளனர்.

ஆனால், இதற்கு இணையாக - இன்னும் மேலாக ஆங்கிலச் சொற்கலப்பு அன்றாடம் தமிழர் வாழ்வில் நிகழ்கிறது. காலையில் குட்மார்னிங், மாலையில் குட் ஈவினிங், இரவில் குட் நைட் என்பதோடு, லஞ்ச், டின்னர், டிபன், தாங்ஸ், சாரி, வெரிநைஸ், சூப்பர், ஓகே ஓகே, மம்மி, டாடி, அங்கிள், ஆன்ட்டி, ஷோ, நியூஸ்,ரைஸ், ஃபிரை, மட்டன், ஃபிஷ் இப்படி எத்தனை எத்தனையோ!

யாரும் முழுமையாகத் தமிழில் பேசுவதில்லை.

ஒருவர் தம் தங்கையின் திருமண அழைப்பைக் கொடுக்கிறார். "" சார் நம்ப சிஸ்டர் மேரேஜ் தஞ்சாவூர்ல கம்மிங் ஃபிரைடே நடக்குது சார், நீங்க ஷியூரா வந்துடணும்'' இப்படிச் சொல்லி அழைக்கிறார். இன்னொருவர் பேசுகிறார்: ""டியர் ஃபிரண்ட்ஸ், உங்களுக்கெல்லாம் ஒரு குட் நியூஸ்.

எனக்கு பெங்களூர்ல நல்ல ஜாப் கிடைச்சிருக்கு, வர்ற மண்டே ஜாயின்ட் பண்றேன். அதுக்காக டுடே ஈவினிங் உங்களுக்கெல்லாம் மேரீஸ் ஓட்டல்லே ட்ரீட் கொடுக்கறேன், மிஸ் பண்ணாம வந்திடுங்க ''

இப்படித்தான் நம் தமிழர் வாழ்வு ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு வகைப் பேச்சும் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது.

அது ஒருவகையான தமிழ். பண்ணித் தமிழ்! சினவாதீர்! சிரிக்காதீர்! இதோ கேளுங்கள்:

"" நாம வாக் பண்ணி, அந்தப் பார்க்கிலே மீட் பண்ணி, அதப்பத்தி திங் பண்ணி அவனுக்காக கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி, அப்படியே போய் ஓட்டல்ல டிபன் பண்ணி, ரூமுக்குப் போய் லைட்டை ஆஃப் பண்ணி, ஃபேனை ஆன் பண்ணி... '' இப்படி எத்தனை பண்ணிகளை இணைத்து நாம் தமிழ் பேசுகிறோம்... எண்ணிப் பார்த்ததுண்டா?

நமது தொலைக்காட்சிகளில் பல நேரங்களில் கீழ்வருமாறு வருணனையாளர் பேசுவதைக் கேட்கிறோமே.

""ஹலோ வியூவர்ஸ் குட் ஈவினிங்... இந்தப் புரொகிராம் வெரி நியூ. ரொம்பப் புதுசு.. நீங்கள்லாம் நல்லா எஞ்சாய்ப் பண்ணணும் ஜாலியா இருக்கணும். அதான் எங்க எய்ம்ம்... அதுக்காக ரொம்ப ரிச்சா, ரிஸ்க் எடுத்துப் பண்ணிருக்கோம்... நீங்க இதிலே பார்ட்டிசிபேட் பண்ணணுமா? எங்களுக்கு டயல் பண்ணுங்க. னைன் எய்ட் த்ரி ஒன் ஜீரோ ஃபோர் சிக்ஸ் எய்ட்'' இப்படித்தான் ஊடகங்களில் தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது.

நம்மில் பலரும் தமிழ்ச் சொல் என்று கருதுகின்ற பிறமொழிச் சொற்கள் பலவுண்டு. அவை ஏராளமாகத் தமிழில் கலந்துள்ளன. ஈண்டு ஏராளமாக என்ற சொல் உள்ளதே அது தெலுங்குச் சொல். அதற்குத் தமிழ் மிகுதியாக என்பதே. எல்லாம் கச்சிதமாக அமைந்துவிட்டன என்று சொல்லுகிறோம். கச்சிதம் தெலுங்குச் சொல்.

இதற்கு ஒழுங்கு என்பதே பொருள். கெட்டியாகப் பிடித்துக் கொள் என்பதில் கெட்டியாக எனும் சொல் தமிழில்லை என்று யாராவது நினைப்பார்களா? அதுவும் தெலுங்கே. அதன் பொருள் உறுதியாக. அக்கடா என்று கிட என்று சொல்லுகிறோமே. இந்த அக்கடா என்பது கன்னடச் சொல். இதற்கு வாளா இருத்தல் என்பதே தமிழ். தராசு என்பதற்கு துலாக்கோல் என்போம்.

தராசு எந்த மொழிச் சொல்? பாரசீகச் சொல் இது. தயார் என்பதைத் தமிழில் ஆயத்தம் எனலாம். தயார் என்பதும் பாரசீகச் சொல்லே. மைதானம் என்பது அரபிச் சொல். திடல் என்பது தமிழ். விலை ரொம்ப ஜாஸ்தி என்பதும் அரபிச் சொல்லே. மிகுதி என்பது தமிழ். அறைகூவல் எனும் பொருளுடைய சவால் என்பதும் அராபியே. பஜார் என்பது கடைத்தெரு என்போம். இந்தப் பஜார் இந்துஸ்தானி. மிட்டா மிராசு (நிலக்கிழார்) இந்துஸ்தானிச் சொற்களே.

முலாம் (மேற்பூச்சு) அராபியச் சொல். மாமூல் என்பதும் அராபி.பழைய வழக்கப்படி என்று தமிழில் சொல்லலாம். இப்போதெல்லாம் தயிர்ச்சோற்றைக் கூடத் தமிழில் நாம் சொல்லுவதில்லை. பகாளாபாத் என்கிறோம். பாத் எனில் சோறு. பகாளபாத்- இந்துஸ்தானிச் சொல். (இந்தி வேறு, இந்துஸ்தானி வேறு) அலமாரி (பேழை) சாவி (திறவுகோல்), ஜன்னல் (காலதர்- காற்று வழி) பாதிரி (கிறித்துவத் தொண்டர்) இவை போர்த்துக்கீசியச் சொற்கள். நிம்மதி (கவலையின்மை) சரக்கு (வணிகப் பொருள்) தொந்தரவு(தொல்லை) வாடகை (குடிக்கூலி) எச்சரிக்கை (விழிப்பாயிரு) எல்லாம் தெலுங்குச் சொற்கள்.

(தமிழ் வளரும்)

நன்றி - தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: