13/03/2011

செயல்பாட்டியல் நோக்கில் உலக்கை - பா. நேருஜி

முன்னுரை:

நாட்டுப்புற வழக்காறுகளை, கலைகளை, சடங்குகளை பல்வேறு நாட்டுப்புறவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யும் போக்கு இன்று வளர்ந்து கொண்டு வருகின்றது. இவ்ஆய்வுகள் நாட்டுப்புறவியலுக்கும் நாட்டுப்புற வழக்காறுகளுக்கும் புதிய அர்த்தங்களையும் உள்ளடக்கங்களையும் ஆழமான சிந்தனைகளையும் வழங்கி வருகின்றன. நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை வழிபாடு மற்றும் சடங்குகளில் பயன்படுத்தப் பெறும் புழங்குபொருட்களும் இத்தகைய கோட்பாட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு விளக்கங்களைப் பெற்று வருகின்றன.

''வாய்மொழிப் பண்பாட்டிற்குச் செயற்பாட்டுக் கோட்பாட்டைப் பயன்படுத்துவது போன்று புழுங்கு பொருள்சார் பண்பாட்டிற்கும் பொருத்திப் பார்க்க முடியும்'' என்கிறார் தே. லூர்து. மேலும், ''கிராமக் கட்டிடங்கள் (கூரை வீடுகள், கொட்டகைகள், செட்டி நாட்டு வீடுகள்), விவசாயக் கருவிகள், மீன் பிடிக்கும் கருவிகள் ( பத்தக்கட்டை, தூரி, கச்சா, வலைகள் ), வாய்மொழி வழக்காறுகள் போன்ற எல்லாவற்றையும் செயற்பாட்டு நோக்கில் ஆய்வு செய்யலாம்'' என்றும் கூறுகின்றார். (நாட்டார் வழக்காற்றியல் கோட்பாடுகள் - பக்கம் - 45. 2000). இதன் அடிப்படையில் வேளாண் மள்ளர்களின் வாழ்க்கை மற்றும் சடங்குச் சூழல்களில் பயன்படுத்தப் பெறும் புழங்கு பொருளான உலக்கை மள்ளரின் பண்பாட்டை எங்ஙனம் வெளிப்படுத்தி நிற்கின்றது என்பதை விளக்கச் செயல்பாட்டுக் கோட்பாட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இக்கட்டுரையில் விளக்கப் பெறுகின்றது.

செயல்பாட்டியல் - விளக்கம்:

குறிப்பிட்ட ஓரின மக்களின் பண்பாட்டில் நாட்டுப்புற வழக்காறுகளின் பயன்பாடு பற்றியும் அவை வகிக்கும் பங்குகள் பற்றியும் அறிவதே செயற்பாட்டுக் கோட்பாட்டின் ஆய்வு நோக்கமாகும். அதாவது நாட்டுப்புற வழக்காறுகள் எவ்வாறு ஒரு சமூக நிறுவனத்தின் இன்றியமையாக் கூறுகளாகச் செயல்படுகின்றன என்று அறிந்து விளக்குவதும் செயல்பாட்டியலின் முக்கிய பணியாக அமைகின்றது.

''செயல் என்பது தேவைகளின் அடிப்படையில் நிகழ்வதாகவும் அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளும் செயல் தன்மை வாய்ந்தவையாக உள்ளன. என்றும் மாலினோவ்ஸ்கி கூறுகின்றார். (பக்தவச்சல் பாரதி பண்பாட்டு மானிடவியல், பக்.178. 1999) ராட்கிளிஃப் பிரௌன் செயற்பாட்டியற் கொள்கையை விவரிக்கும் போது செயலைவிட அமைப்பிற்கு முக்கியத்துவம் தருகின்றார். பிரான்சிஸ் போவாஸ், ரூத்பெனடிக்ட், வில்லியம் பாஸ்கம், பீட்டர் போகாதிரெவ் போன்ற அறிஞர்களும் செயற்பாட்டியல் நோக்கில் தம் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பயன்பாடுகளைத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

சமுதாய நிறுவனங்கள் சமயச் சடங்குகள் முதலியவற்றிக்கு நாட்டுப்புற வழக்காறுகள் செல்வாக்கினையும் மதிப்பையும் தந்து வருகின்றன. எந்த ஒரு பண்பாட்டிலும் அதன் வழக்கங்கள் பயன்படும் பொருள்கள், கருத்துகள், நம்பிக்கைகள் போன்ற அனைத்துக் கூறுகளும் மனிதனின் தேவைகளை நிறைவு செய்வதாகவே உள்ளன. பின்னாளில் அவை சமூக நிறுவனத்தின் ஓர் அங்கமாகவும் பிரிக்க முடியாத கூறாகவும் விளங்கி நிற்கின்றன. இவ்வடிப்படையில் உலக்கையின் செயல்பாடு ஆராயப் பெறுகின்றன.

உலக்கை:

உலக்கை என்னும் சொல்லிற்கு தானியங்களை உரலில் இட்டு இடிக்க அல்லது குத்தப் பயன்படும், முனையில் இரும்புப் பூண் பொருத்தப்பட்ட உருண்டை வடிவ, நீண்ட மரச் சாதனம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, பக்.151. 2000) பழங்காலத்தில் ஆண்கள் வேட்டையாடச் சென்ற நிலையில் பெண்கள் இருப்பிடத்திலேயே விதைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப் பழகினர். உற்பத்திப் பொருள்களை உணவுப் பண்டமாக மாற்றப் பாறைகளின் சிறிய குழிகளை உரலாகவும் உருண்டையான நீண்ட மரக்கட்டைகளை உலக்கையாகவும் பயன்படுத்தினர். பிற்காலத்தில் கட்டையின் இரு முனைப்பகுதியிலும் இரும்புப் பூன் மற்றும் வெண்கலப் பூண்களைப் பூட்டினர். (பூண் - வளையம்). ஒரு முனையில் சமமானதும் மற்றொரு முனையில் சிறிது குழிந்த பூணும் பூட்டப்பட்டன. இதனால் முனைகள் சிதையாமலும், விரிசலடையாமலும் நீண்ட காலம் பயன்பட்டன.

ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியார் அருளிய கந்தபுராணத்தில் முருகனின் பூதபடைத் தலைவனாக சிந்துமேனனை அவுணர் படைத் தலைவனாக அதிகோரன் (அசுரன்) இரும்புலக்கையால் தாக்கிய செய்தி காணப்படுகின்றது.

''அடித்தலோடும் அவுணர்கின்ற ஆனோன்

இடுக்கண் எய்தி இவன் ஆவியை இன்னே

முடிப்பன் என்று முசலம் கொடு மொய்ம்பில்

புடைத்தனன் உறுமு வீழ்வது போல.

என்று வரும் இப்பாடலில் ''முசலம்'' என்பது இரும்பு உலக்கை என்ற ஆயுதத்தைக் குறிக்கின்றது. (ஸ்ரீகச்சியப்ப சிவாசாரியார் அருளிய கந்த புராணம் - மூலமும் தெளிவுரையும், 6-ம் பகுதி, பக்-342 2000). மேலும், ''விசிகம்'' என்ற சொல்லும் இரும்பு உலக்கையைச் சுட்டுவதாக உள்ளது.

தானியங்களை உரலில் இட்டு இடிக்கவும் குற்றவும் பயன்படுத்தப்படும் உலக்கைகள் தேக்கு, மருதமரம், புளியமரம், கடம்பமரம் போன்ற உறுதியான மரத்துண்டுகளால் செய்யப்பட்டவைகளாக 4 முதல் 5 அடி நீளமுள்ளவைகளாகக் காணப்படுகின்றன. மஞ்சள், மிளகாய் வற்றல் போன்றவற்றை இடிக்கச் ''கழுந்துலக்கை'' பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 3 முதல் 4 அடி வரை நீளமுள்ளதாக பூண் பூட்டப்படாத நிலையிலும் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

தானியங்களை உரலில் இட்டு இடிக்கவும், குற்றவும் மட்டும் பயன்படுத்தாமல் வாழ்க்கை மற்றும் வழிபாட்டுச் சடங்குச் சூழல்களிலும் முக்கியத்துவம் கொடுத்து உலக்கையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

உலக்கை பற்றிய பாடல்:

உலக்கையைக் கொண்டு தானியங்களைக் குற்றும் பொழுது பெண்கள் தலைவனைப் புகழ்ந்து பாடுவதாகச் சிலப்பதிகார வாழ்த்துக் காதை கூறுகிறது. இது ''வள்ளைப்பாட்டு'' எனக் குறிப்பிடப்படுகின்றது. வள்ளை என்றால் உலக்கை எனவே ''உரற்பாட்டு, உலக்கைப்பாட்டு, அவலிடி, அம்மானை வள்ளை என்ற பெயர்களாலும் இப்பாடல் (குறுந்தொகை மூலமும் உரையும் ப.க.86, 1994 மு. சண்முகம் பிள்ளை) வழங்கப்படுகின்றது.

வள்ளைக் கூத்து குறித்துக் கூறும் நா. வானமாமலை புறநானூற்றுப் பாடலின் அடிப்படையில் பின்வரும் கருத்தை முன்வைக்கின்றனார்.

''வலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த

வாய் கரும்பின் கொடிக் கூரை

சாறு கொண்ட களம் போல

வேறு வேறு பொலிவு தோன்ற

குற்றானா உலக்கையால்

கலிச்சுமை வியாலங்கண்''

இப்பாடலில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் நாட்டுப்புற மக்கள் நெற்கதிர் வரிந்த கூரை வீடுகளின் முன்பு கரும்பை வாசலில் தோரணமாகக் கட்டியுள்ளனர். தானியம் குவியலாகக் கிடக்கிறது. பெண்கள் உலக்கையைக் கழுவி அணி செய்து வைத்திருக்கிறார்கள். அது நெல் குற்ற அல்ல. வள்ளக் கூத்தோடு களத்தின் நடுவே கிடத்துவதற்காக வைத்திருக்கிறார்கள். இவ்விழாவில் வள்ளைக் கூத்து, நெல் குற்றுவது போல ஆடும் கூத்து ஆடப்படுகின்றது. உழவுத் தொழிலின் ஆரம்காலத்தில் மகளிர் அத்தொழிலில் ஈடுபட்டிருந்ததன் எச்சமாகவும் மகளிரின் பங்கை வலியுறுத்துவதாகவும் இக்கூத்து காணப்படுகின்றது என்கிறார் (தமிழர் வரலாறும் பண்பாடும், பக்.15,2001).

உலக்கையால் தானியம் குற்றும் பொழுது வள்ளைப் பாடல் பாடப் பட்டது என்பதனை,

''பா அடி உரல பகுவாய் வள்ளை

ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப...

மெய் இயல் குறுமகள் பாடினாள் குறினே''

என்ற குறுந்தொகையின் மருதத் திணைப் பாடல் வெளிப்படுத்துகின்றது. இதில் தலைவியானவள் பரந்த அடியையுடை உரலினது வட்டவடிவ வாயினிடத்தே உலக்கையால் தானியம் குற்றும்போது வள்ளைப் பாட்டைப் பாடிக் குற்றினாள் என்று கூறப்பட்டுள்ளது.

தாலாட்டுப் பாடும் பொழுது,

''பள்ளிதனைக் கூட்டி

பதமாக அவல் இடித்து

இடைச்சிதனைக் கூட்டி

இலைபோல அவல் இடித்து''

என்றும்,

சிறுவர் பாடல்களில்

''மழை வருது மழை வருது

நெல்லை வாருங்கோ

மூனுபடி அரிசிகுத்தி

முறுக்கு சுடுங்கோ

என்றும்,

''பச்ச நெல்லு கிச்ச நெல்லு

குத்தத்தான் வேனும்

பணியாரம் கிணியாரம்

சுடத்தான் வேணும்''

என்றும், காதல் பாடலில்,

''வீதியிலே கல் உரலாம்

வீசி வீசிக் குத்துராளாம்''

என்றும், தாய் இறந்த பொழுது மகள்பாடும் ஒப்பாரிப் பாடலில்,

''தங்க அரிசி குத்தி

தனிப்பாலம் சுத்தி வந்தேன்''

என்றும் உலக்கையைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் வாயிலாக நெல் குற்றுதல், அரிசி இடித்தல் போன்ற செயல்கள் மக்களின் வழக்காறுகளில் பாடல்களாக இடம் பெற்றுள்ளன என்பதை

அறியலாம்.

உலக்கை பற்றிய கதை:

உலக்கை பற்றிய வாய்மொழிக் கதைகளும் மக்கள் வழக்கில் உள்ளன. ''ஒரு ஊருல ஒரு புருசன் பொண்டாட்டி இருந்தாங்க. புருசன் தெனமு மதியத்துல ஏதாவது ஒரு சாமியார வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து பொண்டாட்டிகிட்ட சாப்பாடு போடச் சொல்லுவான். அப்படி சோறு போடுறது அவளுக்குப் பிடிக்கல. அதனால யோசனை பண்ணி ஒரு நாளு சாமியாருக்கு முன்னால எலயப்போட்டுட்டு கடுச்சுக்க ஏதாச்சும் கடையில் வாங்கிட்டு வான்னு புருசங்கிட்ட சொன்னாள் புருசங் கடைக்கிப் போன சமயத்துல சாமியாரு முன்னால உலக்கையத் தூக்கிப் போட்டா(ள்) சாமியாரு திடுக்கினு பாத்தப்ப, கையெடுத்துக் கும்பிட்டு ''சாமி சாப்பிடுறதுக்கு முன்னாடி எம்புருசன் உங்கள உலக்கையால் மூனு அடி அடிப்பாரு. அதுக்கும் பின்னால் நீங்க திருப்தியா சாப்பிடலாம்,'' அப்படின்னு சொன்னா. அவ சொன்னதைக் கேட்ட சாமியாரு சாப்பாடே வேணாம்னு எந்திருச்சு வெளியில ஓடிட்டாரு. கடைக்கிப் போயிட்டு வீட்டுக்குள்ளார வந்த புருசன் சாமியார் எங்கன்னு கேட்டப்ப, பொண்டாட்டி சொன்னா ''சாமியாரு இந்த உலக்கய'' கேட்டாரு, உங்கள கேட்டுட்டுத்தாந் தருவேன்னு நாஞ் சொன்னே, அதுக்குக் கோவிச்சுக்கிட்டு சாப்புடாம எந்திரிச்சு போயிட்டாரு'' அப்படீன்னா உடனயே உலக்கயக் கையில் எடுத்துக்கிட்டு சாமியாருட்ட குடுக்குறதுக்கு ஒடினா(ன்) நம்மள உலக்கய தூக்கிக்கிட்டு ஒடிவர்ரான்னு நெனச்சுக்கிட்டு சாமியாரு ஓடியே போயிட்டாராம் கடைசி வரைக்கும் சிக்கவே இல்லையாம்.

இக்கதையின் வாயிலாக உலக்கை நகைச் சுவைக்காவும் ஆயுதமாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம்.

பழமொழியில்,

அவலநெனச்சு உரல இடிக்காத''

என்றும்,

விடுகதையில்,

அக்காள் சப்பாணி தங்கை நர்த்தனப் பெண்

இந்த இருவரும் இல்லாவிட்டால்

குடித்தனப் பெண் சிணுங்குவாள்

(விடை, உரல் உலக்கை) என்றும் உலக்கை குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

வாழ்க்கை வட்டச் சடங்குகள்:

மள்ளர் இன மக்கள் தங்கள் வாழ்க்கை வட்டச் சடங்குகளான பெயர் வைத்தல், பூப்பு, குடிசை கட்டுதல், சடங்கு கழித்தல், திருமணம், பொங்கல், துள்ளுமாவு, மாவிளக்குமாவு, இடித்தல், பேயோட்டுதல், இறப்பு, சத்தியம், செய்தல் போன்றவற்றில் உலக்கையைப் பயன்படுத்தி வருகின்றனர். இச் சடங்குகளின் மூலம் இவ்வின மக்களுடைய உலக்கைச் செயல்பாட்டையும், நம்பிக்கைகளையும் அறிய முடிகின்றது. இச் சடங்குகள் வழிபாட்டுச் சடங்குகளுடன் தொடர்புடையவையாக உள்ளன.

பெயர் வைத்தல் சடங்கு:

பச்சை நெல்லை உரலில் இட்டு உலக்கையால் குத்தி அரிசியாக்கி பொங்கல் வைத்தப் பின்னரே குழந்தைக்குப் பெயர் வைக்கின்றனர். இச் சடங்கிற்கு அரிசி குத்திப் பெயர் வைத்தல் என்கின்றனர். இச் சடங்கு குழந்தை பிறந்து முப்பது நாள் கழித்து குலதெய்வத்தின் கோவிலில் நடத்தப் படுகின்றது. இச் சடங்கில் உலக்கையால் குத்தப்பட்ட அரிசியே பயன்படுத்தப் படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

பூப்புச் சடங்கு:

பூப்படைந்த பெண்ணிற்கு பூப்படைந்த நாளன்று தாய் மற்றும் அண்டை வீட்டுப் பெண்கள் கூடி நீராட்டுகின்றனர். பின்னர் வீட்டு வாசலில் உலக்கையைக் கிடத்தித் தாண்டச் செய்து வீட்டிற்குள் அனுமதிக்கின்றனர். உலக்கையை வாசலில் கிடத்தி தாண்டுவதால் காத்துக் கருப்பு வீட்டின் உள்ளே வராது என்று நம்புகின்றனர்.

குடிசை கட்டுதல் சடங்கு:

பூப்படைந்த பெண்ணிற்காக அப்பெண்ணிற்கு உரிமையுடைய தாய்மாமன் அல்லது அவரது மகன்களால் குடிசை கட்டப்படுகிறது. குடிசை கட்டப் பச்சை கம்மந்தட்டை, சோளத்தட்டை, பச்சை தென்னங்கீற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. குடிசைக்குள் பண்ணரிவாள், இரும்பு, பெருக்குமாறு, உரல், உலக்கை ஆகியவற்றை போட்டு வைக்கின்றனர். இதனால் காத்துக் கருப்பு அப்பெண்ணை நெருங்காது என்று நம்புகின்றனர்.

சடங்கு கழித்தல்:

பூப்படைந்த பெண்ணின் தலையில் தாய்மாமன் மனைவி தண்­ர் ஊற்றி நீராட்டுகிறார். பின்னர் ஏழு எருக்கிலை, ஏழுகாசு, உலக்கை ஆகியவற்றை தாண்டச் செய்த பின்னரே வீட்டிற்குள் அனுமதிக்கின்றனர். இதனால் தீட்டு என்ற நிலையும், ஊரார் கண்பட்டதால் ஏற்படவிருந்த நோயும் கழிந்து போவதாக நம்புகின்றனர். கண்ணேறு கழித்தலை அடிப்படையாகக் கொண்ட இச் சடங்கு 11-ம் நாள் அல்லது 16ஆம் நாள் நடத்தப்படுகின்றது.

திருமணச் சடங்கு:

தானியங்களைக் குற்றி உணவு சமைக்கப்பயன்படும் உலக்கையானது திருமணத்தின் போது தாய் வீட்டுச் சீதனமாகப் பெண்களுக்குக் கொடுத்தனுப்பப்படுகின்றது.

பொங்கல் சடங்கு:

இம்மக்கள் அனைத்து சடங்குச் சூழலிலும் பொங்கல் வைக்கின்றனர். திருவிழா, பெயர் வைத்தல், பூப்பு, திருமணம், பொங்கல், திருநாள், அறுவடை நாள் போன்ற நாட்களில் பொங்கல் வைக்கும் போது பச்சை நெல்லை உலக்கையால் குத்தி அரிசியாக்கிப் பெண்கள் பொங்கல் வைக்கின்றனர்

துள்ளுமாவு இடித்தல்:

பச்சரிசியை உரலில் இட்டு இடித்துத் துள்ளிச் சிதறும் நிலைக்கு வரும் பொழுது அதனுடன் வெல்லத்தையும் போட்டு இடிக்கின்றனர். இதனைத் ''துள்ளுமாவு'' என்று குறிப்பிடுகின்றனர். இடித்த மாவை சுளகு, முறம் மற்றும் பாத்திரங்களில் போட்டு மேலாக இரண்டு மூன்று வேப்பிலைகளைப் போட்டு கோவிலில் வைத்து வழிபட்ட பிறகு அனைவருக்கும் வழங்குகின்றனர். ஊரில் அம்மை போன்ற நோய்கள் வராமல் இருக்க தெய்வத்தை வேண்டி இச் சடங்கு செய்வதாகக் கூறுகின்றனர்.

மாவிளக்கு மாவு இடித்தல்:

உரலில் இட்டு இடித்த பச்சரிசி மாவை சல்லடையால் சளித்துக் காய்ச்சிய வெல்லப்பாகுடன் கலந்து அம்மியில் தட்டி உருண்டை பிடிக்கின்றனர். அதில் குழி செய்து எண்ணெய் ஊற்றித் திரியிட்டு விளக்கேற்றுகின்றனர். ஒரே உரலில் பெண்கள் இருவர் இரு உலக்கையைக் கொண்டு இந்த மாவைக் குற்றுகின்றனர். இதனை ''மாவிளக்கு மாவு குற்றுதல்'' என்று குறிப்பிடுகின்றனர்.

பேயோட்டுதல் சடங்கு:

''பேய் பிடித்த பெண்ணை உலக்கை துடைப்பம் போன்றவற்றால் கடுமையாக அடித்துத் துன்புறுத்துவதாக சு. சுண்முகசுந்தரம் குறிப்பிடுகின்றார் (நாட்டுப்புறவியல் ப.145. 1999). மேலும், பேயோட்டுதல் என்ற பெயரில் நோயுற்றவர்களுக்கு முரட்டு வைத்தியமாக இச்செயல் செய்யப்படுவதாகவும் கூறுகின்றார்.

பேய் பிடித்த பெண்ணிடமிருந்து பேயை விரட்டப் பூசாரி அல்லது பேயோட்டுபவர் ஈடுபடுகின்றார். உட்கார்ந்த நிலையில் தலைவிரி கோலமாக ஆடச் செய்து அப்பெண் கேட்கும் பொருள்களைக் கொடுத்து ஓடிவிடும்படி கூறுகின்றார். ஒத்துக் கொண்ட பின்பு தலையில் கல்லை வைத்து ஓடச் செய்கின்றார். ஆலமரம், புளியமரம், நாவல்மரம் போன்ற மரத்தடியில் கல் சுமந்தபடி நிற்கும் பெண்ணிடமிருந்து கல்லை கீழே போடச் செய்கின்றனர். மரத்தில் ஆணியை அடித்து பேய் பிடித்த பெண்ணின் உச்சந்தலை முடியை ஆணியில் சுற்றிய பின்பு முடியை கத்தரித்து மரத்தில் பொருத்துகின்றனர். பின்னர் அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து வாசலில் உலக்கையைப் போட்டுத் தாண்டச் செய்து உள்ளே அனுமதிக்கின்றனர்

இறப்புச் சடங்கு:

இம் மக்கள் இறந்தவர்களை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று புதைகின்றனர் அல்லது எரியூட்டுகின்றனர். சுடுகாடு வரை செல்லும் ஆண்களைப் பின் தொடந்து வரும் தீய ஆவிகள் வீட்டிற்குள் வராமல் இருக்க வீட்டு வாசலில் உலக்கையைத் தாண்டச் செய்து பின்பு உள்ளே அனுமதிக்கின்றனர். இதனால் வீட்டின் உள்ளே தீய ஆவிகள் வரமுடியாமல் திரும்பிச் சென்று விடுவதாக நம்புகின்றனர்.

சத்தியம் செய்தல்:

நாட்டுப்புற மக்களிடம் சத்தியம் செய்யும் வழக்கம் காணப்படுகின்றது. உண்மை என்பதைக் கூற சத்தியம் செய்கின்றனர். கை மீது கைவைத்தும், பெற்ற பிள்ளைகள் மீதும், கற்பூரத்தை அடித்தும், குழந்தையைத் தாண்டியும், துண்டைத் தாண்டியும், சத்தியம் செய்யும் வழக்கம் காணப்படுகின்றது. இம் மக்களிடம் உலக்கையைத் தாண்டி சத்தியம் செய்யும் முறையும் காணப்படுகின்றது. உலக்கையைத் தாண்டிப் பொய்ச்சத்தியம் செய்தால் தீமை ஏற்படும் என்று நம்புகின்றனர்.

சந்திர கிரகணம்:

கேது என்ற பாம்பு சந்திரனை விழுங்கி பின்பு வெளிவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுவதாகப் புராணங்கள் கூறுகின்றது. இதனை அறிய இம் மக்கள் உலக்கையைப் பயன்படுத்துகின்றனர். வெண்கலக் கும்பாவில் பாதியளவு நீரை ஊற்றி உலக்கையின் குழிந்த பூண் பகுதி கும்பாவிற்குள் வைத்து ஊன்றிய நிலையில் பிடித்துக் கொள்ளவேண்டும். நிலவின் ஓரப்பகுதியானது சிவப்பு நிறமாக மாறும் போது உலக்கை தானாகவே பிடிமானம் இல்லாமல் நிற்பதாகவும் நிலவின் ஓரம் மீண்டும் வெண்மை நிறமாக மாறும்போது உலக்கை விழுந்து விடுவதாகவும் கூறுப்படுகின்றது. உலக்கை விழாமல் நிற்கும் போது முழுச் சந்திரகிரகணம் நடைபெறுவதாக நம்புகின்றனர்.

வாயுப்பிடிப்பு:

உடலின் இடுப்புப் பகுதியில் நிமிர முடியாதபடி வலி ஏற்படுத்தக் கூடிய இந் நோயைப் போக்குவதற்கு இம் மக்கள் வெண்கலக் கும்பாவில் கால் பகுதிக்கு நீரை ஊற்றி வைத்து, பிறகு பழைய துணியில் தீயைப் பொருத்தி எரியவிட்டு துணி பாதி எரிந்து கொண்டிருக்கும் பொழுதே கும்பா நீரில் போட்டு உலக்கையில் குழிந்த பூண் பகுதியால் அழுத்த வேண்டும் என்றும் அப்பொழுது உலக்கையானது எந்தப் பிடிமானமும் இல்லாமல் நிற்கும் என்றும் உலக்கைவிழும் பொழுது வாயுப்பிடிப்பானது விட்டுவிடுவதாகவும் கூறுகின்றனர். உலக்கை சுமார் மூன்று நாள்வரை கூட நிற்பதாகத் தெரிவித்தனர்.

சுளுக்கு:

உடலில் கை, கால், கழுத்து, இடுப்பு, போன்ற உறுப்புகளின் நரம்பு புரளுதலை சுளுக்கு என்கின்றனர். இந்நோயை நீக்க உடலில் வலி உள்ள பகுதியில் உலக்கையின் குழியான பூண் பகுதியை வைத்து நிறுத்தும்போது உலக்கை பிடிமானம் ஏதுமின்றித் தானாகவே நிற்பதாகவும் தாங்க முடியாத வலியை ஏற்படுத்துவதாகவும் மேலும் உடலில் எப்பகுதியில் சுளுக்கு ஏற்பட்டிருந்தாலும் கால் பகுதியில் மட்டும் உலக்கை நிறுத்தி சுளுக்கை நீக்கலாம் என்றும் கூறுகின்றனர். இவ்வைத்தியத்தில் உலக்கையை ஒரு நிமிடம் வரை கூட நிறுத்த முடியாது என்றும் மூன்று நாட்களில் சுளுக்கு சரியாகிவிடுவதாகவும் கூறுகின்றனர்.

தொழில் பயன்பாடு:

உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பெண்கள் தங்கள் வீட்டிலுள்ள நெல்லைத் தாங்களே உலக்கை கொண்டு குற்றி அரிசியாக மாற்றியுள்ளனர். சில இடங்களுக்கு நெல் குற்றல் என்னும் தொழிலுக்குச் சென்று கூலியாக நெல் அல்லது அரிசியைப் பெற்றுள்ளனர். பெரிய பெரிய இல்லங்களின் விசேசத்தின் பொழுது நெல்குற்ற கூலிக்குச் சென்றுள்ளனர்.

அவல் என்னும் சிற்றுணவு தயாரிக்கும் இடங்களுக்கு நெல் குற்ற கூலிக்குச் சென்றுள்ளனர். நெல் குற்ற உரலில் உலக்கை கொண்டு ஒரே பெண் ஈடுபடுவதையும், ஒரே உரலில் இரு பெண்கள் இரு உலக்கை கொண்டு மாறிமாறி குற்றுவதையும் காணமுடிகிறது.

நாட்டுப்புற மக்களின் பண்பாடுகளை அறிவதற்கு அவர்கள் பயன்படுத்தும் புழங்கு பொருட்கள் பற்றிய தரவுகள் அவசியமானதாகின்றன. மாறிவரும் சூழலுக்கேற்ப மக்களுடைய பழக்க வழக்கங்களும் புழங்கு பொருட்களும் மாற்றங்களைப் பெற்று வருகின்றன. மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய புழங்கு பொருட்களை ஏற்றுக் கொண்டாலும் பழைய புழங்கு பொருட்களே பண்பாட்டை பறைசாற்றும் எச்சங்களாக உள்ளன. கிராம மக்களுடைய புழக்கத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் பாரம்பரியப் புழங்கு பொருளான உலக்கையானது தானியங்களை உரலில் இட்டுக் குற்றவும் இடிக்கவும் மட்டும் பயன்படாமல் வாழ்க்கை வட்டச் சடங்குகளான பெயர் வைத்தல், பூப்பு, குடிசை, கட்டுதல், சடங்கு கழித்தல், திருமணம், பொங்கல், துள்ளுமாவு, மாவிளக்கு, மாவு இடித்தல், பேயோட்டுதல், இறப்பு, சத்தியம் செய்தல் போன்றவற்றில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

உலக்கையானது இம்மக்களுடைய சமூக நிறுவனங்களின் அங்கமாக இடம் பெற்று வருகின்றது என்பதை அவர்தம் வாழ்க்கை வட்டச் சடங்குகளின் வழி அறியமுடிகின்றது. இன்றைய நாகரீக வளர்ச்சிச் சூழலிலும் உலக்கையானது மள்ளரின் மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் புழங்கு பொருளாகத் திகழ்வதற்குச் சமூக நிறுவனங்களின் பிரிக்கமுடியாத கூறாக அது இடம் பெற்றுத் தன் செயல்பாட்டு முக்கியத்துவத்தை உணர்த்தி வருவதே காரணம் எனலாம்.

முடிவுரை:

1. வேளாண் மள்ளரின் மக்கள் தங்கள் வாழ்வியற் சடங்குகளான பெயர் வைத்தல், பூப்புச் சடங்கு, திருமணம், பொங்கல், துள்ளுமாவு, மாவிளக்கு, மாவு இடித்தல், பேயோட்டுதல், இறப்புச் சடங்கு ஆகியவற்றில் உலக்கையைச் சடங்குப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.

2. தீய ஆவிகளிலிருந்து பாதுகாக்கும் புனிதப் பொருளாகவும், தீட்டு கழிக்கும் பொருளாகவும் உலக்கை உள்ளது.

3.அவல் என்னும் சிற்றுணவு தயாரிக்கும் நெல்லடிக்கும் இடங்களுக்கு இவ்வின மக்கள் கூலிக்குச் சென்று நெல் அல்லது அரிசியைக் கூலியாகப் பெற்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

4. உலக்கையின் செயல்பாடு இன்றளவும் தொடர்வதற்கு அது சமூக நிறுவனங்களோடு பிரிக்க முடியாத கூறாக இணைந்துவிட்டதே காரணமாகும்.

 

கருத்துகள் இல்லை: