28/03/2011

தாலாட்டுப் பாடல்களின் புராண இதிகாசக் கூறுகள் - முனைவர் போ.சத்தியமூர்த்தி

மக்களின் மெய்யான நடைமுறைகளைக் செவ்விலக்கியங்களில் காண்பதை விட நாட்டுப்புற இலக்கியங்களில்தான் மிகுதியாகக் காண முடியும். ஏனெனில் செல்வியல் இலக்கியங்கள் குறிக்கோள் நிலையில் படைக்கப்படுவதாகும். ஆனால் நாட்டுப்புற இலக்கியங்களில் குறிக்கோள் தன்மையை விட நடைமுறைக்கு முதன்மை அளிக்கப்படுகிறது. செவ்வியல் இலக்கியப் படைப்பாளி பல்வேறு இறுக்கமான இலக்கணச் சடங்குகளுக்கு உட்படுகின்றான். ஆனால் நாட்டுப்புறப் படைப்பாளி கட்டுப்பாடின்றித் தான் உணர்ந்தவாறும் தன் படைப்புகளைப் படைக்கிறான். எனவே நம்பகத்தன்மை மிகுதியும் வாய்ந்த நாட்டுப்புறவியல் ஆய்வே நம் மூதாதையரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் இன்ன பிறவற்றை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவையாகும். இந்நிலையில் நாட்டுப்புறவியலில் ஒரு கூறான தாலாட்டுப்பாடல்களில் புலனாகும் புராண இதிகாசக் கூறுகளை இக்கட்டுரை ஆராய்கின்றது.

இந்திய இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெறுவன புராண இதிகாசங்கள், அவை தமிழிலும் காலந்தோறும் மொழியாக்கம் பெற்று வந்துள்ளன. இராமாயணமும் பாரதமும் இருபெரும் இதிகாசங்களாக விளங்குகின்றன. இலக்கியங்களில் புராண இதிகாசக்கூறுகள் இடம்பெற்று விளங்குவது போலவே நாட்டுப்புறப் பாடல்களிலும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

தாலாட்டுப் பாடலில் இதிகாசக் கூறுகள்:-

இதிகாசங்கள் மக்கள், அரசர், தேவர் ஆகிய அனைவரைப் பற்றியும் பேசுகின்றன. விரிந்து பரந்த கதை நிகழ்ச்சிகளைக் கொண்டவை இதிகாசங்கள், வேதங்களின் முடிவாகவும் பிழிவாகவும் அமைந்தவை உபநிடதங்கள், உபநிடதங்களை அடுத்துத் தோன்றியவை இதிகாசங்கள். இராமாயணம் பாரதக் கதைகளின் பாத்திரங்களாகிய இராமன் சீதை, அர்ச்சுனன், வீமன் முதலியோர் தொடர்புடைய நிகழ்ச்சிகளும், அப்பாத்திரங்களின் பண்புகளும் நாட்டுப்புறப் பாடல்களான தாலாட்டில் இடம் பெற்றுள்ளன. மக்களிடம் புராண இதிகாசங்கள் பெற்றிருந்த செல்வாக்கை இவை புலப்படுத்துகின்றன.

தாலாட்டுப் பாடல்களில் இராமாயணக் கூறுகள்:-

காலத்தோறும் நாட்டுப்புற வழக்கில் குறிப்பிடத் தகுந்த செல்வாக்குப் பெற்றிருப்பது இராமாயணம். இராமனது பெருமை, சீதையின் சிறப்பு, அனுமன் தூது, திரிசடை உதவி, கணையாழி கொடுத்தல் முதலிய நிகழ்ச்சிகள் தாலாட்டுப் பாடல்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

சீதை அசோகவனச் சிறையில் இருந்தபோது, அவளைத்தேடித் தூதுபோனவன் அனுமன். இந்நிகழ்ச்சி தாலாட்டுப் பாடல்களில் இடம் பெறுவதைக் கீழ்காணும் பாடல் உணர்த்துகிறது.

ராரிக்கோ ராரிகொண்டு

எங் கண்ணே

ராமருக்கோ தூதுகொண்டு

என்பன அப்பாடலடிகளாகும்.

சீதையைக் கண்டறிந்த அனுமன் அண்டர் நாயகன் அருள் தூதன் யான் என்று கூறி அதற்கு அடையாளமாக இராமன் கொடுத்தனுப்பிய கணையாழி மோதிரத்தைச் சீதையிடம் கொடுக்கிறான். இது இராமாயணச் செய்தி

இதனை,

நீட்டு இது என நேர்ந்தனன் என, நெடிய கையால்

காட்டினன் ஓர் ஆழி, அது வாள் நுதலி கண்டாள்

என கம்பராமாயணம் குறிப்பிடுகிறது. இந்த நிகழ்ச்சி

கண்டு எடுத்தாரோ

எங் கண்ணே

கணையாழி மோதிரத்தே

கொண்டே கொடுத்தாராம்

எங்கண்ணே

குணமுள்ள சீதையிடம்

என்று தாலாட்டுப் பாடல்களில் இடம் பெறுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இன்றைய நிலையிலும் அப்பாத்திரங்களின் தன்மை சிறப்பிடம் பெறுவதற்குத் தாலாட்டுப் பாடல்கள் துணையாக உள்ளன என்பதை இது உணர்த்துகின்றது.

தாலாட்டுப் பாடல்களில் மகாபாரதக் கூறுகள்:-

இராமாயணத்தைப் போலவே மற்றொரு இதிகாசம் மகாபாரதம் ஆகும். அர்ச்சுனன், தருமன், பீமன், கர்ணன் முதலான பாரதக் கதையின் பாத்திரங்களும், அவைகளோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளும் தாலாட்டுப் பாடல்களில் இடம் பெறுகின்றன.

பீமனைப் போலவும் அர்ச்சுனனைப் போலவும் ஆண்மையும் ஆற்றலும் அழகும் மிக்கவனாகத் தன் குழந்தை வரவேண்டும் என்கின்ற ஆர்வமிகுதியோடு குழந்தையினைத் தாயானவள் பீமனாகவும் ஆர்ச்சுனனாகவும் பாவித்துப் பாடுகிறாள்.

எங்க வீரசம்பா போரேர

எங் கண்ணே

வீமனோ அர்ச்சுனனோ

என்ற தாலாட்டுப் பாடல் இக்கருத்தைத் தெளிவுபடுத்துகின்றது.

அல்லிக்கும், அர்ச்சுனனுக்கும் பிறந்த குழந்தையாகக் கருதிப்பாடும் போக்கும் தாலாட்டுப் பாடலில் காணமுடிகிறது. இதனை,

வேலெடுத்து பூஜை செய்ய

எங் கண்ணே

வீமரோ ஓமாமேங்

சாச்சுப் பொலியளக்க காய்

நல்ல பொன்னாளுக்கு

தருமரோ ஓமாமேங்

இப்பாடல் பெண் குழந்தைக்குப் பாடும் தாலாட்டுப் பாடலாகும். இவ்வாறாக மகாபாரத இதிகாசக் கதையின் பாத்திரங்களை உறவினர்களாகக் கருதிப் பாடும் போக்கே தாலாட்டுப் பாடல்களில் மிகுதியாகக் காணப்படுகிறது எனலாம்.

பெண் குழந்தையோடு மிகவும் தொடர்புடைய உறவினர் தாய்மாமன். இந்தத் தாய் தன்னுடைய சகோதரர்களை அர்ச்சுனனாகவும், தருமனாகவும் பெருமைப்படுத்திப் பாடுகிறாள்.

தாலாட்டுப் பாடல்களில் கந்தபுராணக் கூறுகள்:-

சிவ மைந்தனாகிய முருகனின் திருவிளையாடல்களைக் குறிப்பது கந்தபுராணம். இப்புராணம் கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றியது. முருகனின் இளமைப் பருவத்து தீரச் செயல்கள் மற்றும் அருளாற்றல் அனைத்தும் இப்புராணத்தில் இடம் பெறுவதோடு வள்ளி தெய்வானையரை மணம் செய்திடலும் இடம் பெறுகின்றன.

திருமாலின் புதல்வியர் சுந்தரவல்லி, அமிர்தவல்லி ஆகிய இருவரும் முருகனைக் கணவனாக அடைய வேண்டும் எனத் தவம் செய்தனர். அப்போது முருகன் அவர்களை விண்ணிலும், மண்ணிலும் பிறக்குமாறும் தாம் அவர்களை மணந்து கொள்வதாகவும் வரம் அளிக்கிறார். அதன்படி தேவேந்திரனின் மகளாக பிறக்கும் அமிர்தவல்லியாகிய தெய்வானையினைத் திருமணம் செய்து கொண்டார். சுந்தரவல்லி பூலோகத்தில் வள்ளியாகப் பிறக்கிறாள். அவர்களைத் திருமணம் செய்து கொண்ட கதையினை நாட்டுப்புறப் பாடல்களாகத் தாலாட்டுப்பாடல்கள் மிகுதியாகக் குறிப்பிடுகின்றன.

வள்ளியின் பிறப்பு:-

தொண்டை நாட்டின் மேற்பாடி என்னும் உரைச் சார்ந்துள்ள மலை வள்ளிமலை. அம்மலைப் பகுதியில் தங்கி தவம் செய்து கொண்டிருந்த சிவமுனிவரின் காட்சி அளவிலான தெய்வப் புணர்வால் கர்ப்பமுற்ற பெண்மான் அம்மலைக் குறவர்கள் வள்ளிக்கிழங்கு தோண்டி எடுத்த குழியில் அழகிய பெண்குழந்தையை ஈன்றுவிட்டுப் போனது.

தனிப்பட்ட அப்பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டுத் தினைக்கொல்லையில் இருந்த வேட்டுவ மன்னனாகிய நம்பி தன் மனைவியிடம் ஓடி வந்து அக்குழந்தையைக் காட்டினான். தமக்கு மகப்பேறு இல்லாத நிலையில் வருந்திய அம்மன்னன் மிக மகிழ்ந்து குழந்தையைத் தூக்கித் தன் மனைவியிடம் கொடுத்து மகிழ்ந்தான். இதனை,

வந்தான் முதலெடுத்த வள்ளிக்குழி யில்வைக்கும்

நந்தா விளக்கனைய நங்கைதனை நோக்கி

இந்தா இதோர் இளங்குழலி என்றெடுத்துச்

சிந்தா குலம்தீரத் தேவிகையில் ஈந்தனனே

ஈந்தான் சிலைநிலத்தில் இட்டான் எழுந்தோக்கிப்

பாய்ந்தான் தெழித்தான் உவகைப் படுகடலில்

தோய்ந்தான் முறுவலித்தான் தோள்புடைத்தான் தொல்பிறப்பின்

நந்தாம் இயற்றுதவம் நன்றாங்கொல் என்றுரைத்தான்

என்று கந்தபுராணப் பாடல்கள் விளக்குகின்றன.

இப்புராணச் செய்தி வள்ளி பெயரிலேயே ஆன தாலாட்டுப் பாடலில் பின்வருமாறு இடம் பெறுகிறது.

வள்ளினா வள்ளிதான்

எங் கண்ணே

மலைமேற் படர்ந்த வள்ளி

அழுகைக் குரல் கேட்டு

எங் கண்ணே

அவ்வேடர் ஓடி வந்தார்

கண்டு எடுத்தார்கள்

என் கண்ணே

கலையான வள்ளியையும்

என்பது வள்ளித் தாலாட்டுப் பாடலாகும்.

வேங்ககை மரமான முருகன்:-

வள்ளியைச் சந்தித்த பின் நாரதர் முருகனைச் சந்தித்து வள்ளியைப் பற்றிக் கூறுகிறார். முருகன் வேடன் உருக்கொண்டு வள்ளியைக் காண வருகிறார்.

காலிற் கட்டிய கழலன் கச்சினன்

மாலைத் தோளினன் வரிவில் வாளியன்

நீலக் குஞ்சியன் நெடியன் வேட்டுவக்

கோலத் தைக்கொடு குமரன் தோன்றினான்

என்று கந்தபுராணப் பாடல் விரிக்கிறது. இதே செய்தி தாலாட்டுப் பாடலில்,

வெள்ளிப் பிரம்பெடுத்து

எங் கண்ணே முருகையா

வேடர் கையில் அம்பெடுத்து

தங்கப் பிரம்பெடுத்து

எங் கண்ணே முருகையா

சாமி கையில் அம்பெடுத்து

பொன்னும் பிரம்பெடுத்து

எங் கண்ணே முருகையா

போராடும் பழநிவிட்டு பொன்மலைக்கு அப்பாலே

என்று கந்தபுராணம் குறிப்பிடும் மலையை, தாலாட்டு பழநிமலை என்று சிறப்பிக்கிறது.

முருகன் வேடவடிவில் வள்ளியிடம் காதல் மொழி பேசிக்கொண்டிருக்கும் வேளையில் வேட்டுவ மன்னன் நம்பி தம் குலத்தோடும் அங்குவர முருகன் வேங்கை மரமாகி நிற்கிறார். இதனை வேங்கையின் உருவமாகி வேல்படை வீரன் நின்றான் எனக் கந்தபுராணம் குறிப்பிடுகிறது. இச்செய்தி

வெகுமதி கொள்வேன் என்று

எங் கண்ணே

வேங்கை மரமானார்

என்று தாலாட்டுப்பாட்டில் குறிப்பிடப்படுகிறது.

வள்ளித் திருமணம்:-

அகமரபுப்படி களவொழுக்கம் மேற்கொண்ட அவர்கள் திருமணத்தோடு கதை முடிகிறது. தெய்வகுமாரனாகிய முருகனுக்கும், மனிதர் இனத்திலும் குறவர் குலத்தில் பிறந்த வள்ளிக்கும் நடைபெற்ற திருமணம் சிறப்பு மிக்கது.

பிரசாதி என்னாமே

வள்ளி

பூங்கொடியை மாலையிட்டார்

மறு சாதி என்னாமே

வள்ளி

மாதாவ மாலையிட்டார்

குல ஏற்றத் தாழ்வின்றி, சாதி பேதம் இன்றி அன்பையே மையமாகக் கொண்டு அவர்கள் இணைந்ததை குழந்தைக்கு உணர்த்தும் வண்ணமாய், தாலாட்டுப் பாடும் தாயின் பண்பு பக்தி உணர்வோடு பிரதிபலிக்கிறது.

கந்தபுராணத்தில் முருகன் தெய்வானை, திருமணத்தைவிடவும், வள்ளித் திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இச்செய்தி தாலாட்டில் அமைகிறபோது தமிழ் அகமரபு மலிந்திருப்பதை அறிய முடிகிறது.

கிராமப்புறங்களில் வாழும் மக்கள் பெரிதும் விரும்பிப் பார்க்கும் நாடகம் வள்ளித் திருமணமாகும். ஒவ்வொரு ஆண்டும் பலமுறை அலுப்புசலிப்பில்லாமல் வெவ்வேறு கலைஞர்களைக் கொண்டு இந்நாடகத்தைக் கண்டு மகிழ்கின்றனர். அக்கலைஞர்களின் கலைத்திறனை ஒப்பிட்டும் காண்கின்றனர். இதனால் இந்நாடகம் மக்களின் மனதில் பெற்ற செல்வாக்கை உணரலாம்.

சிவபெருமானைப் பற்றிய செய்திகள்:-

கந்த புராணம் அளவிற்கு சிவபெருமானுடைய திருவிளையாடல் புராணமும் அது தொடர்பான செய்திகளும் தாலாட்டுப் பாடலில் காண முடியவில்லை. ஆனால் சிவன், திருமால், முருகன், பார்வதி, பிரமன் இவர்களுக்கு உள்ள உறவு முறைகள் உருவ அமைப்புக்கள் பற்றிய செய்திகள் மிகுதியாக இடம் பெறுகின்றன.

திருவிளையாடலுக்குத் தளம் அமைந்த மதுரையில் எழுந்தருளி இருக்கும் சொக்கநாதர், மீனாட்சி இருவரது இல்லறம் பற்றி சற்றே கற்பனை நயம்படக் கூறுகிறது தாலாட்டு.

சொக்கநாதரை விவசாயியாகவும், மீனாட்சியை விவசாயப் பெண்ணாகவும் கற்பனை செய்து தங்கக் கலப்பை கொண்டும், வெள்ளிக் கலப்பை கொண்டும் விடியும் பொழுதிற்கு முன்னே சென்று தரிசு நிலத்தை உழவு செய்வதாகப் பாடுகிறது தாலாட்டு.

வயலில் பயிர் செய்யும் சொக்கருக்கு

''வேரில்லா கொடி அறுத்து

மீனா

தூருல்லாக் கூடைபின்னி

கூடயிலே சோரெடுத்து

மீனா

குடனிலே கொண்டுபோனா

நேரமா ஆச்சுதுண்ணு

சொக்கா

கடுங்கோவங் கொண்டாரோ''

என்ற பாடல் மூலம் மீனாட்சி சொக்கருக்குச் சோறு கொண்டு செல்வது போலவும் சோறு கொண்டு செல்லும் பொழுது காலங்கடந்தால் சொக்கர் கோபம் கொள்வது போலவும் இப்பாடல் நாட்டுப்புற மண் வாசனையுடன் புராணக் கடவுளர்களை வருணிக்கிறது.

கிருஷ்ணாவதாரம்:-

வாசுதேவருக்கும், தேவகிக்கும் வடமதுரையில் மகவாய்ப் பிறந்த கண்ணன் தாய்மாமனாகிய கம்சனிடமிருந்து தப்பித்து ஆயர்பாடியில் அசோதை மகனாக வளர்ந்த செய்தியினை

பிறந்தால் வடமதுரை

எங் கண்ணே - மாயழகு

போய் வளர்ந்தார் ஆயர்பாடி

அறந்தான் மிகப்பெருக

எங் கண்ணே - மாயழகு

அசோதையிடம் பால்குடித்து

என்று குறிப்பிடுகிறது. தாலாட்டுப் பாடல் தப்பிய செய்தியை அறிந்த கம்சன் பூதகி என்னும் அரக்கியை அனுப்பிக் கண்ணனைக் கொல்லச் சொல்ல, பெண் உருவெடுத்து வருகிறார். அவ்வரக்கி பசியோடு அழும் குழந்தையாகிய கண்ணனுக்கு நஞ்சு தடவிய முலைக்காம்பால் பாலூட்ட அவளின் உயிரையே சேர்த்துக் குடித்துவிடுகிறான் கண்ணன். இச்செய்தியினை,

நஞ்சென்று பால்குடித்து

எங் கண்ணே - நீலமேகம்

வஞ்சியரைக் கொன்றுவிட்டு

என்று குறிப்பிடுகிறது தாலாட்டு.

பண்டைய காலத்தில் வாழ்ந்த சமூக அங்கத்தினர்களின் கதைகளையும், நிகழ்சிகளையும், தாங்கி நிற்பவை இதிகாசங்கள். இராமாயணம், மகாபாரதம், என்ற இருபெரும் இதிகாசங்களின் பாத்திரப் பெயர்களை, பாத்திரங்களோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளை தாலாட்டுப்பாடல்கள் தாங்கி நிற்கின்றன. பழமை வாய்ந்த செய்திகளையும், இயற்கை இயந்த நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கிய புராணக் கூறுகளும், தாலாட்டுப்பாடலில் இடம் பெறுகின்றன. தமிழ் அகமரபுக்கேற்ப வள்ளித் திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, வள்ளித் தாலாட்டு என்று தனித்துவம் பெற்றுத் திகழும் இப்போக்கினால் சாதிபேதமற்ற சமூக ஒப்புமையை விரும்பி நிற்பதோடு அது அடுத்த தலைமுறையிலேயேனும் சாத்தியப்பட வேண்டும் என்ற நோக்கமும் புலனாகிறது. இராமாயணமும், மகாபாரதமும் வடஇந்தியக் கதைகளானாலும் மக்களிடம் பெற்றிருக்கும் செல்வாக்கை அறிய தாலாட்டுப் பாடல்கள் பெருந்துணை புரிகின்றன.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை: