13/03/2011

தமிழிசை - ஒரு நோக்கு - முனைவர் பா. மாலினி

''கண்ணுதற் பெருங்கடவுள், கழகமோடமர்ந்து பண்ணுறத்தெரிந்தாயப்பட்ட ''சிறப்புடையது, நம் செந்தமிழ் மொழியாகும். அது, இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளோடு முத்தமிழ் என்று போற்றப் பெற்று வரும் தகவுடையது. இம்மூன்று பிரிவுகளில், இயல் - மனிதனின் எண்ணங்களையும், இசை - அவ்வெண்ணங்களை, அவன் பிறர் மனங்கொள இனிது எடுத்துரைக்கும் சொல்லையும், நாடகம் அவனது உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் செயலையும் குறிக்கும். பண்டைக் காலத்தில் இயற்றமிழ் வளர்ந்தது போலவே, இசை, நாடகத்தமிழ் நூல்களும் வளர்ச்சி பெற்றன.

''நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தனுக்கு'' என்பதாலும், ''தமிழோடிசை பாடல் மறந்தறியேன்'' என்பதாலும், மேலும் ''என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே'' என்று திருமூலர் கூறியதாலும், தமிழிசையின் ஆரம்ப காலத்தை கூற இயலாது. ஆண்டவனுக்குத் தோற்றம் உண்டெனக் கூறுவாருளரோ? அது போன்றது தான் தமிழிசையும், சேரமான் பெருமானுக்கு, யாழிசை வல்லுநர், பாணபத்திரனுக்கு, மாணப் பொருள் கொடுக்கக் கோரி வழங்கிய திருமுகப் பாசுரம் (மதிமலிபுரி) தமிழில் மேலும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு, திருத்தொண்டத்தொகை பாடுவதற்குத் தில்லை வாழ் அந்தணர்கள் தம் அடியார்க்கு மடியேன் எனத் திருவாரூர் தியாகேசர் தமிழ் மொழியிலே முதல் அடியினை அசரீரியாக அருளினார். சிதம்பரத்தில் சேக்கிழார்க்குப் பெரியபுராணம் பாட ''உலகெல்லாம் உணர்ந்து ஓதற்குரியவன்'' என்று முதல் அடி, தமிழிலேயே கொடுக்கப் பெற்றது. இறைவனால் பாடப்பெற்றதும், அடியார்கள் பாடுவதற்கு முதல் அடி எடுத்துக் கொடுக்கப் பெற்றதும், கண்ணுதற் பெரும் கடவுள் கழகமோடமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த பைந்தமிழிலேயே இருப்பதாலும் இறைவன் விரும்புவது தமிழ் என்பது துணிவு.

''இசை'' என்ற சொல்லுக்கு இசைவித்தல், பொருந்துதல் என்றெல்லாம் பொருள் கூறுவர். எதனோடு இசைவிக்கும், எதனோடு பொருந்தும் என்ற வினா எழும். இவ்வறிய பிறவி வாய்த்தது இறையருளில் பொருந்துவதற்கே. அதற்கு ஒரே வழி, இறைவனைப் புகழ்ந்து பாட வேண்டும் என்பதே. பிரளய காலத்தில், எல்லாம் ஜடமாக இருந்த போது, முழுமுதற்கடவுளாம் சிவப்பரம்பொருளின் திருக்கை உடுக்கிலிருந்து ''ஓம்'' என்ற பிரணவ நாதம் உண்டாயிற்று. காலப்போக்கில் விரிந்து இசையாக வளர்ந்தது. ஆண்டவனே இசைமயமானவன். எனவே, இசையின் பிறப்பிடம் இறைவனே. ''ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே,'' ஏழிசையாய், இசைப்பயனாய்,'' நல்லிசை ஞானசம்பந்தனும், நாவுக்கரசரும் பாடிய நற்றமிழ்மாலை, சொல்லியவே சொல்லி ஏத்துகப் பானை'' என்று சுந்தரர் கூறுவதிலிருந்து இசைப் பயனாய் இருப்பவன். நற்றமிழில் பாடிய பாட்டையும் கேட்டுகப்பான்; ஏற்றருள்வான் என்பது போதரும்.

பாமாலை பாடப் பயில்வித்தானை

பண்ணொன்று இசை

''பாய்கத் திசையாகி'' - என்பன போன்ற திருமுறையில் வரும் சொற்றொடர்கள் சிந்திக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள ஆதினங்களும், திருமுறை பயின்ற ஓதுவார்களை நியமித்து பூஜை காலங்களிலும், விழாக்காலங்களிலும் ஓதச் செய்து தமிழிசையை வளர்த்து வந்தனர் என்பதை அறிய முடிகிறது.

''இசை'' என்பது, இயற்பாக்களுடன் நிறம் என்னும் ஓசையை இசைத்தலால் அப்பெயர் பெற்றது. அவ்விசையே, நெஞ்சு, கழுத்து முதலிய இடங்கள் எட்டாலும் எடுத்தல் முதலிய எட்டுவகைத் தொழில்களாலும் பண்ணப்படுவதால் ''பண்'' எனப் பெயர் பெற்றது. ''இசை'' என்பது குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழாம் ''பண்'' என்பது பாலை யாழ் முதலிய 103 பண்களாம். பருந்துடன் நிழல் செல்வதைப் போலப் பண்ணும், பாடலும் இணையப் பாடியதாகக் கம்பரும் குறிப்பிட்டார்.

பண் களிக்கப் பாடுகின்ற பாட்டில் விளை சுகமே

''பண்ணேறு மொழியடியார் பரவி வாழ்த்தும் பாத மலர்''

என்று வள்ளல் பெருமானும் பாடியுள்ளார். பண்களுக்கு இலக்கணம் கூறி, அவைகளின் தோற்றம், வழிவகைகள், பயன் முதலிய செய்திகளை வலியுறுத்திக் கூறும் இசைத் தமிழ் நூல்களில் ஒன்றாக ''பஞ்ச மரபு'' பண் பற்றிய மரபுகளை தெரிவிக்கின்றது.

தமிழிசை மரபின் சிறப்பு:-

நிலங்களை ஐவகையாகப் பிரித்து, அவற்றின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற பண்களையும், இசைக்கருவிகளையும், பாகுபாடு செய்து வைத்த தமிழரின் பண்பாட்டுச் சிறப்பிற்கு ஈடாக வேறு எந்த இனத்தவரின் நாகரிகத்தையும், சொல்ல முடியாது. தொல்காப்பியம் நிலங்களுக்குரிய கருப்பொருள்களைக் குறிக்கும் போது, தமிழ் இசைக் கருவிகளுள் பழமையான யாழினையும் கூறுகின்றது.

தெய்வம் உணர்வே மாமரம் புள் பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப (பொருள் அகத்திணையியல்)

யாழோடு பறை என்னும் கொட்டும் கருவியையும் குறிக்கின்றது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலங்களுக்குரிய சூழ்நிலை, பருவம், காலம், தட்பவெப்பநிலைகளுக்கு ஏற்றவாறு கருவிகள் பண்கள், கூத்து வகைகள் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.

குறிஞ்சி:-

''மலைகளும், மலைவளமும் கொண்ட இந்நிலத்திற்குரிய இசைக்கருவி, குறிஞ்சியாழ்; தோற்கருவி பறையெனப்படும் இதற்குரிய சிறப்பான பண் குறிஞ்சிப் பண், இந்நிலத்தின் தெய்வம் முருகன். இங்குக் குறமகளிர் ஆடும் கூத்து குரவைக் கூத்து. இது குன்றக் குரவை எனப்படும்.

முல்லை:-

காடும், காடு சார்ந்த பகுதிகளும், புல்வெளிகளும் இந்நிலத்திற்குரியவை. இங்குக் காட்டாறு, நீர் ஊற்றுக்கள், இவற்றைக் கொண்டு மக்கள் வாழ்ந்தனர். இவர்கள் தொழில் ஆடுமாடு மேய்த்தல், கடவுள் திருமால். இந்நிலத்திற்குரிய இசைக்கருவி முல்லையாழ், பண் சாதாரி, தோற்கருவி ஏறுகோட்ட பறை, ஆயர்குலப் பெண்கள் ஆய்ச்சியர் குரவை என்னும் கூத்து ஆடுவர். காற்று வாத்தியமாகிய புல்லாங்குழலும் சிறப்பாக இந்நிலத்திற்குரியதே.

மருதம்:-

வயல்களும், வயல் சார்ந்த பகுதிகள், மருத நிலம் என அழைக்கப்பட்டன. இந்நிலத்தின் தெய்வம் இந்திரன், இசைக்கருவி மருதயாழ். தாளக் கருவி முழவு. மருதப்பன், இந்நிலத்தின் சிறப்பான பண், பயிர்த்தொழில் செய்து வந்த மக்கள் திருவிழாக்கள் கொண்டாடுவதிலும், புதுநீராடுதலிலும் தனிச்சிறப்புப் பெற்று விளங்கினர்.

நெய்தல்:-

கடலும், கடல்சார்ந்த இடம் நெய்தல் எனப் பெயர் பெற்றன. வருணன் இந்நிலத்தின் தெய்வம். பரதவர் குடியிருப்புகள் பாக்கள் எனவும், பட்டினம் எனவும் அழைக்கப்பட்டன. இந்நிலத்திற்குரிய இசைக்கருவிகள் நாவாய்ப் பம்மையும், விளரி யாழுமாகும். செவ்வழிப்பண், இந்நிலத்திற்குரிய பண்ணாகும். பரதவர் மீன் பிடிக்கும் தொழில் செய்வதும், கடலாடுவதுமாக வாழ்ந்தனர்.

பாலை:-

இயற்கை வளங்கள் குன்றி வறண்ட நிலம் பாலை. இந்நிலத்திற்குரிய தெய்வம் கொற்றவை. இசைக்கருவி பாலை யாழ். பாலை நிலத்தின் சிறப்பான பண் பஞ்சுரம். தோற்கருவி துடியெனப்படும். வேடுவர்களும் மறவர்களுமாகிய இந்நில மக்கள் கொற்றவை தெய்வத்தை வழிப்பட்டுக் கூத்தியற்றினார். பாலை யாழ் நண்பகலுக்கு உரியது எனக் கூறுப்பட்டுள்ளது. பாலை யாழும், பாலைப் பண்ணுமாகிய இது பிரிதல் என்னும் உணர்வை உரிப்பொருளாக உடையது.

தேவார இசையின் தனிச்சிறப்பு:-

தேவாரப் பண்ணமைப்பும் பாடும் முறையும், தமிழிசை உலகில் தனிச்சிறப்புடைய இசை மரபுகளைக் கொண்டவையாகும். இசை உலகில் கீர்த்தனை எனப்படும் இசைப்பாடல்களில், இராகச் சிறப்புக் கூறுகள், பாட்டின் நடுப்பகுதியில் அமைந்து தோன்றும். ஆனால், தேவாரப் பண்ணமைப்பிலோ எடுத்த எடுப்பிலேயே இராகத்தின் சிறப்புக் கூறுகள் அமைந்து விளங்கும். உதாரணமாக ''மீளா அடிமை'' என்ற பாடலைப் பண்ணிசைவாணர் பாடத் தொடங்கும்போதே, அப்பாடலுக்குரிய மத்தியமாவதி இராகச் சிறப்புக்கூறு, எடுத்த எடுப்பிலே வெளிப்பட்டு தோன்றி நிற்கும். ஒவ்வொரு சமயத்தவரும் தங்கள் சமயத் தோத்திரங்களுக்கென்று தனி இசை மரபை அமைத்துக் கொண்டனர்.

இசைக்காகப்பாட்டு, என்ற நிலையை மாற்றிப் பாட்டுக்காக இசை என்ற மரபைக் கண்ட அப்பெருமக்கள் இசையை இறைவழிபாட்டுக்கு ஒரு சாதனமாகவும், எடுத்துக் காட்டினர். இசைத்திறனில் தேர்ந்தவர்களேயன்றி அத்துறையில் போதிய பயிற்சியும், குரல் வளமும், இல்லாதவர்களும் அன்போடு தம்மைப்பாடிப் பரவினால், இறைவன் அவர்களின் பாடலைக் கேட்டுக் மகிழ்ந்து அருள்புரிவான்.

இசைத்தமிழ்:-

அகத்தியரால் எழுதப்பட்ட அகத்தியம் என்னும் இலக்கண நூல், முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்த முழுமுதல் நூல் எனக் கூறப்படுகிறது. இசை உலகில் மிடற்றுக் கருவி, எனப்படும். வாய்ப்பாட்டோடு தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி எனப்படும் துணைக் கருவிகளும் தோன்றி வளர்ந்தன. இசைக் கலன்களைத் தோளில் தூக்கிச் சுமந்துக் கொண்டு கூத்தர், பாணர், விறலியர், பொருநர், ஆகியோர் கூட்டம் கூட்டமாய் நாடு முழுவதும், சுற்றித் திரிந்து இசைத்தமிழை வளர்த்தனர்.

இசைக்கு மயங்காத உயிர்கள் எதுவுமில்லை என்பதை உணர்ந்த தமிழ் மக்கள், அக்கலையைப் போற்றி வளர்த்த அருமைப்பாட்டைச் சங்க நூல்கள் பலவும் கூறுகின்றன. அழுகின்ற குழந்தையைத் தூளியில் இட்டுத் தாய் தாலாட்டுப் பாடுகிறாள். குழந்தை, அழுகையை மறந்து அயர்ந்து உறங்குகின்றது. மகுடி இசை கேட்டுக் கொடிய நாகங்களும் அடங்கி ஒடுங்குகின்றன. மதம் பிடித்த யானைகளும் யாழிசைக்கு மயங்கிக் கட்டுப்படுகின்றன.

சங்க நூல்களில், மிகப் பழமையான அகநானூற்றுள் ஒரு பாடல், திணை கவர வந்த யானை, குறத்தி பாடிய குறிஞ்சிப் பண்ணைக் கேட்டுப் பசி மறந்து, வந்த செயல் மறந்து, திணைக் கொல்லையிலேயே உறங்கவும் செய்தது எனக் கூறுகிறது.

கொடிச்சி, பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்

குரலும், கொள்ளாது நிலையிலும் பெயராத

படா. அப்பைங்கண் பாடுபெற் றெய்யென

மறம் புகல் மழகளிறு உறங்கும் நாடன்

என அந்நிகழ்ச்சியை ஓவியமாக்கின்றார். இவ்வாறே ஆனாயர், குழலிசை கேட்டு, உயிரினங்கள் பலவும் உணர்வு ஒன்றி இருந்தன எனச் சேக்கிழார் கூறுகின்றார். கண்ணுள்ளவன் கற்றுத் தெரிந்து கொள்வது தான் கல்வி. ஆனால் கேட்டுத் தெரிந்து கொள்ளும் தன்மை இசைக்குத் தான் உண்டு. தமிழ் இசைக்கு ஊக்கத்தை தருவோமேயானல், நிச்சயமாகத் தமிழ் இசை மூலை முடுக்குகளிளெல்லாம் கேட்கும். மற்ற ஓசைகள் தானாகவே அடங்கிப் போகும்.

கத்தும் கடலாம் இசைக்கடலில் மூழ்கி, பண்ணெனும் முத்துக்குளித்து, முகிழ்த்துக் கொணர்ந்து, தித்திக்கும் தமிழ்த்தாயின் திருமுடியில் சேர்த்து எழில் கூட்டுவோம்.

நன்றி: கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும்

 

கருத்துகள் இல்லை: