27/03/2011

நாட்டுப்புற நம்பிக்கைகள் - கு.சரஸ்வதி

நாட்டுப்புற இயல் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடு எனக் கூறலாம். நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் போன்றவை நாட்டுப்புற இயலின் அடிப்படைப் பொதுக்கூறுகளாக அமையும். தனிமனித உணர்வும், சமுதாய உணர்வும் நம்பிக்கைகளை மேலும் மேலும் வளர்க்கின்றன. பெரும்பாலும் அச்ச உணர்வினாலேயே நம்பிக்கைகள் தோன்றுகின்றன. வாழ்வில் ஏற்படும் சில செயல்களுக்குக் காரணம் கற்பிக்க முடியாத போது, நம்பிக்கைகள் அசைக்க முடியாத உரம் பெறுகின்றன.

நம் வாழ்வில் பெரும்பங்கு வகிக்கும் நம்பிக்கைகள் தோன்றின என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. தொடர்ந்து நிலைபெற்று விடுவதால் உணர்ச்சிக் கூறுகளின் தொகுதி இந்த நம்பிக்கைகள் என்று கூறலாம். பழங்குடி நிலையிலிருந்து மனிதன் நாகரிகம் அடைந்திருப்பது உண்மையானாலும் அந்தப் பழைய மனநிலையை இன்றைய மனிதர் இன்னும் விடவில்லை. அதனால் நம்பிக்கைகள் முடிவற்று வழக்கில் வழங்கி வருகின்றன. ஒவ்வொருவரின் உளவியல் உணர்வுகளால் இவை வாழ்ந்து வருகின்றன.

நம்பிக்கைகள் காலை விழித்தெழும்போதே தொடங்கி விடுகின்றன. நமக்கு நல்லது அன்று நடக்கவில்லை என்றால் உடனே ''காலை எவர் முகத்தில் விழித்தோம்'' என நினைக்கத் தொடங்குகிறோம். அதனால் மறுநாளிலிருந்து உள்ளங்கையையோ, கண்ணாடியையோ, பசுமாட்டையோ அல்லது வீணை போன்ற இசைக்கருவிகளையோ, புத்தகத்தையோ பார்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இப்படித் தோன்றும் நம்பிக்கைகளைப் பற்றியது இக்கட்டுரை.

சமயத் தொடர்பான நம்பிக்கைகள்:-

காலை எழுந்தவுடன் முதலில் புழக்கடைக் கதவைத் திறக்க வேண்டும். பின்பே தெருக்கதவைத் திறக்க வேண்டும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டில் உள்ளது. அதைப்போலவே மாலை விளக்கேற்றுமுன் பின் கதவை மூடிவிடவேண்டும். இல்லையென்றால் திருமகள் நீங்குவாள் என்பர். விளக்கேற்றியபின் தைக்கக்கூடாது என்ற வழக்கம் உள்ளது. ஏனென்றால் அந்த நாட்களில் பார்வதி ஊசிமேல் நின்று தவம் செய்வாள் என்பர்.

நாட்டுப்புறங்களில் சண்டைக்காரர்கள் இருவர் ஒன்றுகூடினால் காணிக்கை செய்து வழிபட்ட பின்னரே ஒன்று கூடுவார்கள். சத்தியம் செய்து மீறினால் தெய்வ தண்டனை கிடைக்கும் எனவும் நம்பினார்கள். ஆலயங்களுக்கு முன்னுள்ள கொடிமரத்தைத் தொட்டும், துணியைத் தாண்டியும், கையில் அடித்தும் சத்தியம் செய்து வந்தனர். இதனை,

''மீனாட்சி கோவிலில்

முன்னம் ஒரு கம்பம் உண்டு

கம்பத்தைத் தொட்டுத் தந்தா

களங்கம் இல்லை உன்மேலே

வலக்கையும் தந்திருவேன்

வருண சத்தியம் செஞ்சிருவேன்

மீனாட்சி கோயிலிலே

வேட்டி போட்டுத் தாண்டி தாரேன்''

என்ற நாட்டுப்புறப் பாடலில் காணலாம். இவ்வாறு சமயத் தொடர்பான நம்பிக்கைகள் நிறைய உண்டு எனலாம்.

விலங்கு, பறவை பற்றிய நம்பிக்கைகள்:-

சகுனம் பார்க்கும் நம்பிக்கை உலகெங்கிலும் காணப்படுகின்றது. ''புள்நிமித்தம்'' எனப் பழைய இலக்கிய நூல்கள் இந்த நம்பிக்கை இருந்தமையைச் சுட்டிகாட்டி விளக்குகிறது. சுவரில் ஓடும் பல்லிகளில் வழியே சகுனம் பார்க்கும் நம்பிக்கை பெரும்பாலோரிடம் இருக்கிறது. பல்லிவிழும் பலனும், பல்லி சொல்லும் பலனும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. பயணம் செய்வதற்கும் சகுனம் பார்ப்பார்கள், நாள் பார்ப்பார்கள், செல்லும் திசைக்கும் சகுனம் பார்ப்பார்கள். பூனை குறுக்கே போனாலோ, ஆந்தை அலறினாலோ பயணம் செய்யமாட்டார்கள்.

நம் வீட்டின் வாசல் புறத்திலோ, தோட்டத்திலோ தொடர்ந்து சில மணித்துளிகள் காகம் கரைந்தால் வீட்டில் விருந்தாளிகள் வரக்கூடும் என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றிவிட்டது. விலங்குகளால் பேய்களையும், பிசாசுகளையும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. பசுமாட்டைத் தடியாலும், கம்பாலும் அடித்தால் பாவம் கத்தும் என நம்பினர். அதனைக் கீழ்கண்டவாறு பாடி வைத்துள்ளனர்.

''சாமி மலை மேலே

சாமி பசு பில்லை நிறம்

தானும் படுத்திருக்கும்

தட்டி யெழுப்பாதே

தடியால் அடிச்ச பாவம்

தலைமுறையைச் சுத்து தப்பா''

குழந்தை பற்றிய நம்பிக்கைகள்:-

குழந்தையைப் பார்க்கும் சில கண்களுக்குத் தீமை விளைவிக்கும் சக்தி உள்ளதாக நம்புகின்றனர். அதனால் குழந்தைக்கு நோயுண்டாகலாம் என எண்ணுகின்றனர். அதற்காகக் கண்ணேறு பட்டதைக் கழிப்பதற்காக திருஷ்டி சுற்றுவர். அதுபோலவே குழந்தைக்குச் சிறு காயம் ஏற்படாவிட்டால், எமன் அக்குழந்தையைத் தூக்கிச் சென்று விடுவான் என்றும், முடியிறக்கி, காது குத்தினால் அக்குழந்தையை நெருங்கமாட்டான் என்றும் அதற்கு ஆயுள் வளரும் என்றும் நம்பிக்கை கொள்கின்றனர் என்பர்.

''மாம்பிஞ்சு கொண்டு மதுரைச் சிமிக்கி கொண்டு

காதுகுத்த வாராக கனகமுடி உங்களம்மான்''

''என்னரசன் காதுகுத்த என்னசெல்லும் ஆசாரி

பாக்கு பதக்கு பச்சரிசி முக்குறுணி

எள்ளு இருநாழி இளந்தேங்காய் முந்நூறு

சிந்தி விளம்புங்க செல்ல மகன் காதுகுத்த''

என்று பாடிக் காதுகுத்தும் விழாவால் குழந்தையின் ஆயுளைப் பாதுகாக்கலாம் என நம்பிக்கை கொண்டிருந்தனர்.

உடம்பு நடத்தை பற்றிய நம்பிக்கைகள்:-

உடலுறுப்புகளைப் பற்றியும் பல நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். பெண்ணின் இடது புருவமும், ஆணின் வலது புருவமும் துடிக்குமானால் நல்லது நடக்கும் என்றும், பெண்ணிற்கு வலது புருவமும், ஆணிற்கு இடது புருவமும் துடித்தால் ஏதோ துன்பத்திற்கு அறிகுறி என்றும் நம்பி வருகின்றனர். இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் இருந்து வந்திருக்கின்றன என்பதற்கு இலக்கியத்திலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன.

அசோகவனத்தில் சிறையிருந்த சீதை, தன்னிடம் அன்பு செலுத்தும் திரிசடையிடம், எனக்குக் கண்புருவம் முதலியன இடப்பக்கம் துடிக்கின்றன. இத்துடிப்பால் வருவது நன்மையா? தீமை? எனக் கேட்டதாகக் குறிப்பிடுகின்றனர். இதனை,

''பொலந்துடி மருங்குலாய் புருவம் கண்முதல்

வலந்துடிக் கின்றில வருவது ஓர்கிலேன்''

என்ற பாடல் மூலம் அறியலாம்.

போர்க்களத்தில் தன் மகன் அபிமன்யூ இறந்த போது அருச்சுனன் கண்ணும் தோளும் இடப்பக்கம் துடித்தன. அதனால் அவன் அச்சமுற்றுக் கண்ணனைப் பார்த்தான். அவன் கண்களும் கலங்கியிருந்தன. இன்றைய போர்க்களத்தில் தன் தமையனோ, மகனோ இறந்திருக்கக் கூடும் என்பதை இடப்புறம் துடித்ததால் உணர்ந்து கொண்டவன் கண்ணனிடம் யார் இறந்திருப்பார்? எனக் கதறிக் கேட்கின்றான் என்பதை,

''என்கண்ணும் தோளும் மார்பும்

இடனுறத் துடிக்கை மாறா

நின்கணும் அருவி சோர நின்றனை

இன்று போரில்

புன்கண் உற்றவர்கள் மற்றென் துணைவரோ

புதல்வர் தாமோ''

இப்பாடலால் உணர முடிகிறது

''கண்ணகி கருக்கணும் மாதவி செங்கணும்

உண்ணிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன

எண்ணும் முறை இடத்திலும் வலத்திலும் துடித்தன

விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்தென''

என்று இளங்கோவடிகள் இந்திரவிழா நாளில் கண்ணகி கருங்கண் இடத்திலும், மாதவி செங்கண் வலத்திலும் துடித்தன என்கிறார். கண்ணகி தன் கணவனை, மாதவியிடமிருந்து பெறப் போகின்றாள், மாதவி கோவலனின் நட்பை இழக்கிறாள் என்பதையே இவ்விரு பெண்களின் கண்துடிப்புகளும் குறிப்பிடுகின்றன என்பர். இவ்வாறு மக்களின் மனதில் தொன்று தொட்டு வரும் இந்த நம்பிக்கைகளுக்கு இலக்கியங்களில் சான்றுகள் காணப்படுகின்றன.

கனவு பற்றிய நம்பிக்கைகள்:-

கனவுகளைப் பற்றிப் பல நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். அதிகாலையில் காணும் கனவு பலிக்குமென்றும் நம்புகின்றனர். உப்பைக் கனவில் கண்டால் செல்வம் சேரும். தேர்வு எழுதுவதாகக் கனவு கண்டால் பதவி உயர்வு ஏற்படும் என்பது போன்ற நம்பிக்கைகள் நிறைந்துள்ளன. கனவுகள் வாழ்க்கையில் பின்னால் நிகழப்போவதை முன்னரே உணர்த்துகின்றன என்ற நம்பிக்கையும் உள்ளது. உளவியல் அறிஞர்கள் கனவு என்பது மனத்தில் அடக்கி வைக்கப்பட்ட விருப்பத்தின் மறைமுகமான வெளிப்பாடு என்பர்.

நம்பிக்கைகள் பொதுவாக எல்லோரிடமும் உள்ளன. சமூகத்தின் எல்லா இடங்களிலும், எல்லா வாழ்க்கை நிலைகளிலும் இருக்கின்றன. மேனாட்டார் தொடர்பு, ஆங்கிலக் கல்வி, நாகரிக வளர்ச்சி, நவீனமாக்கல், இயந்திரமயமாக்கல் ஆகியவற்றாலும் நம்பிக்கைகள் பெருகிவருகின்றனவே அன்றி குறையவில்லை என்பது நோக்கத்தக்கது.

நன்றி: வேர்களைத் தேடி.

 

கருத்துகள் இல்லை: