27/03/2011

நாச்சியார் கூறும் திருமணச்சடங்கு - மு.பாக்கியலட்சுமி

மனித சமுதாயத்தின் மதம், பண்பாடு, இனம், மனப்பாங்கு ஆகியவற்றிற்குத் தக்க மணமுறையும் மாறுபடும் தன்மையது. ஒரினத்தின் பண்பாட்டையும், பழமையையும் அவர்தம் நம்பிக்கைகளும், சடங்குகளும் வெளிப்படுத்துகின்றன. நாச்சியார் பாடல்களில் நாட்டுப்புறக் கூறுகளுள் ஒன்றான நாட்டுப்புறப் பழக்கவழக்கங்களில் காணப்படும் திருமணச் சடங்குகள் பற்றிய கருத்துக்களைப் பற்றியது இக்கட்டுரை.

பெரியாழ்வாருடைய வளர்ப்பு மகளான ஆண்டாள் அந்தணர் சமுதாயத்தில் வளர்ந்ததால் அவர் காலத்து நிலவிவந்த அந்தணர் சமுதாய திருமணச் சடங்குகளைத் தம் பாசுரங்களில் கூறுகின்றார். அவை இன்றும் தமிழர்தம் திருமணங்களில் பின்பற்றப்படுகின்றன.

மாப்பிள்ளை அழைப்பு:-

திருமணத்திற்கு முதல்நாள் நடைபெறும் இச்சடங்கிற்கு மணமகன் வெகுவிமரிசையாக அழைத்து வரப்படுவான். ஆயிரக்கணக்கான ஆனைகள் புடைசூழ தங்கக் குடங்களாகிய பூர்ணகும்பங்களில் மாவிலைக்கொத்தும் தேங்காயும் வைத்து மருமகப்பிள்ளையை எதிர்கொண்டு அழைத்து வந்தனர் இதை,

''வாரணமாயிரம் சூழ வலம் செய்து

நாரணண் நம்பி நடக்கின்றா னென்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்'' (பா.எண் 53)

என்று கூறகின்றார். பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் திருமணத்தைப் பற்றித் தங்களுக்குள் பேசி முடிவு செய்து கொண்டபின், திருமணத்திற்கு முதல் நாள் அதை உறுதிப்படுத்த சுற்றம் அறிய ''மணவோலை'' எழுதிவாசிப்பர். இந்நாளில் இச்சடங்கை நிச்சயதார்த்தம் அல்லது பரிசம் போடுதல் என்பர். இந்நிகழ்ச்சியை,

''நாளை வதுவை மணமென்று நாளிட்டு

பாளை கழுகு பரிசுடைப் பந்தற்கீழ்

கோளரிமாதவன் கோவிந்தனென் பான்ஓர்

காளைபுகுதக் கனாக் கண்டேன் தோழி நான்'' (பா.எண்.54)

பாளையும், கமுகும் கட்டப்பெற்ற அழகிய பந்தல், அதில் அமர்ந்து திருமணத்தை நிச்சயிக்கின்றனர்.

கோடியுடுத்தல்:-

மணப்பெண்ணுக்குப் புதிய புடவையைப் பரிசாக மணமகன் வீட்டார் அளிப்பர். இப்புடவையை மணப்பெண் கட்டிக் கொள்வதற்கு மணமகனின் உடன்பிறந்த சகோதரி உதவுதலுண்டு. தன்னைத் திருமணம் செய்து கொள்ளப்போகும் அப்பெருமானுடைய சார்பில் இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருந்ததாகப் பாடுகின்றார். மணமகனின் சகோதரி துர்க்கை மணப்பெண்ணுக்கு புதுப்புடவை உடுத்தி, மலர்மாலை சூட்டுவதாக கூறுகின்றார். இதை,

''இந்திரனுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்

வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து

மந்திரக்கோடி யுடுத்தி மணமாலை

அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழி நான்'' (பா.எண்-59)

வரவேற்பு:-

திருமண நாளில் மணமகள் இல்லத்தில் திருமணம் நடைபெறும் இடத்தில் மணமகன் நுழையுங்கால் வாழ்வரசிகள் குடத்துள் விளக்கை ஏற்றிய நிலையில், எதிர்கொண்டு வரவேற்கின்றனர்.

''கதிரொளி தீபம் கலசமுடனேந்தி

சதிரிளமங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள'' (பா.எண்.57)

என்று ஆண்டாள் குறிப்பிடும் இச்சடங்கு இன்றும் வழக்கில் உள்ளது. விளக்கு, நீர் இவற்றின் மூலம் திருஷ்டி கழிப்பது என்கிற முறையில் தம்பதிகளின் வாழ்க்கையில் பால் பொங்கவும், சகல மங்கலங்களும் கங்கை போல் பெருகவும், இன்பமும் ஆனந்தமும் தீப ஜோதிபோல் பிரகாசிக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே இச்சுபச்சடங்கு.

கைத்தலம் பற்றல்:-

திருமணத்தின் முக்கியச் சடங்காக கைத்தலம் பற்றல் நடைபெறுகிறது. மணமகன், மனமகள் கைப்பற்றி தீ வலம் வருதல் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை ஆண்டாள்,

''மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன்வந்து என்னைக்

கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன்.'' (பா.எண்.58)

மத்தளம் கொட்டப்படுகிறது. அழகிய சங்கு முழங்குகிறது. வேதியர் தீ வளர்த்து அதில் ''சமித்து'' எனப்படும் குச்சிகளை வைத்து ஆகுதியை வளரச் செய்து, வேத மந்திரங்களை ஒலித்த வண்ணம் இருக்கின்றனர். அந்நிலையில் மணமகன் மணமகளுடைய கைத்தலம் பற்றுகிறான். கைத்தலம் பற்றிய நிலையில் தீயை மணமகன் வலம் வருகிறான். இனிநான் உன்னைக் கைவிட மாட்டேன். இது சத்தியம். என்னுடைய நிழல் போன்ற உன்னை நான் என்றென்றும் கைவிடாமல் காப்பாற்றுவேன் என்று உறுதி எடுக்கிறான். இத்தகைய தீ வலம் வருதல் சிலம்பிலும் காணலாம். இந்நிகழ்ச்சியை ஆண்டாள்,

''காய்சினமா களிறன்னான் என்கைப் பற்றி

தீவலஞ் செய்யக் கனாக்கண்டேன்'' (பா.எண். - 59)

என்று குறிப்பிடுகின்றார்.

அம்மி மிதித்தல்:-

திருமணத்தில் உள்ள மற்றொரு சடங்கு அம்மி மிதித்தல். மணமகன் மணமகளுடைய காலைப்பற்றி ஏழு அடிகள் வைத்து மணமகளுடைய காலை அம்மியின் மேல் வைக்கிறான், இதை

செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி

அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி (பா.எண்.60)

என்கிறார் ஆண்டாள்.

பொரி அடுதல்:-

மணமக்கள் இருவரும் அவியுணவாக நெற்பொரிகளை தீயில் இடுவர். மணமக்கள் ஒருவர் கைகளின் மீது மற்றொருவர் கைகளையும் இணைத்துக் கொண்டு இச்சடங்கை இயற்றுவர்.

''அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என்கைவைத்துப்

பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன்'' (பா.எண்.61)

என்கிறார்.

வீதி வலம் வருதல்:-

நாச்சியார் காலத்தில் திருமணம் முடிந்த பின்பு மணமக்கள் இருவரையும் ஒருசேர அமரச்செய்து ஊர்வலமாக அழைத்துச்செல்வர் எனத் தெரிகிறது. குங்குமச் சாந்தும், சந்தனமும் உடலெங்கும் பூசப்பட்ட நிலையில், யானையின் மீது இருவரையும் ஒருசேர அமரச்செய்து வீதிவலம் வந்ததைப் பாடுகிறார் ஆண்டாள்.

குங்குமமப்பிக் குளிர்சார்ந்த மட்டித்து

மங்கலவீதி வலஞ்செய்து மணநீர்

ஆங்கு அவனோடும் உடன்சென்று அங்கு ஆனைமேல்

மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் (பா.எண்.1162)

இன்றும் கிராமபுறங்களில் இவ்வழக்கம் காணப்படுகிறது. குதிரை, யானை, போன்றவற்றில் இல்லை என்றாலும் ஒருசேர ஊர்வலமாக வருதல் என்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இன்றும் வடநாட்டில் திருமணத்திற்குப் பின்பு மணமக்கள் ஊர்வலமாகக் குதிரையின் மீதோ அல்லது வாகனத்திலோ அழைத்து வரப்படுவர்.

தமிழர் திருமணத்தோடு ஒத்துப்போதல்:-

ஆரிய மரபின்படி இன்றுவரை அந்தணர் சமுதாயத்தில் உள்ள திருமணச் சடங்குகளை ஒன்று விடாமல் தம்முடைய திருமொழியில் வரிசைப்படுத்திக் கூறுகிறார். அம்மி மிதித்தல், தீ வலம் வருதல் முதலிய சடங்குகளைக் குறிப்பிடும் ஆண்டாள் மங்கலவணி (தாலி) அணியப்படுதலைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

நம் பழம்பெறும் இலக்கியங்கள் திருமணத்தில் மணமகளுக்குத் தாலி அணிவிப்பதை எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் திருமணமான மகளிர் மங்கல அணியை, அணிந்திருந்தனர் என்பதற்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் அமைகின்றன.

''ஈகை அரிய இழையணி மகளிரொடு'' என்று புறநானூற்று பாடலில் மங்கலவணி குறிக்கப்படுகிறது.

''அகலுண் மங்கலவணி யெழுந்தது'' (சிலம்பு - பா - 47) என்றும்,

வேதவிதிப்படி நடைபெறும் ''இராமன்சீதை'' திருமணத்திலும் தாலி கட்டப்படுவது கூறப் பெறவில்லை. ஆனால் சில இடங்களில் தாலி என்ற பொருள்பட ''மங்கலநாண்'' என்ற சொல் எடுத்தாளப்படுகிறது.

நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ

நிறையெடு மங்கல நாணோ.

என்னுமிடத்தில் மங்கல நாணைக் குறிப்பிடுகிறார்.

தாம் கண்ட கனவுத் திருமணத்தில் தாலி கட்டப்படுவது குறித்து ஆண்டாள் எதுவும் குறிக்காத காரணத்தால் தாலி பற்றிய சிந்தனையே அவருக்கும் இல்லை என முடிவு செய்தல் பொருத்தமற்றது.

''காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர்''

என்று ஆய்ச்சேரி பெண்கள் மோர் கடையுங்கால் அணிந்திருந்த தாலியைப்பற்றி ஆண்டாள் குறிப்பிடுகின்றார். தம்முடைய கனவுத் திருமணத்தில் ஆரிய முறைப்படி மணம் நடந்ததைச் சொல்லும் அண்டாள். வேதங்களில் தாலி கட்டப்படும் சடங்கு குறிக்கப்படவில்லையென்பதால் அதைக் கூறாது விடுத்தார் எனலாம். அரியர் வழக்கத்தின்படி கைத்தலம் பற்றுதலே திருமணம் முழுமை பெற்றதைத் தெரிவிக்குமாதலால் ஆண்டாள் தம்முடைய பாசுரங்களில் கைத்தலம் பற்றலைக் கூறுகிறார் எனலாம். சங்க காலத்தில் ''கைத்தலம் பற்றுதலே'' மணம் முற்றுப் பெற்றதற்கு அடையாளமாகக் கருதப்பட்டது.

''நேரிறை முன்கை பற்றிநுமர்தர

நாடறி நன்மண மயர்கஞ் சின்னாள்

கலங்கல் ஓம்புமின் இழங்கிழை யீரென்'' ( குறிஞ் - 231-233)

எனும் சங்கப்பாடல் ''கைத்தலம் பற்றுதலையே நாடறி நன்மணம்'' எனக்கொண்ட கொள்ளையைப் புலப்படுத்துகிறது.

பழந்தமிழரின் திருமணச் சடங்கில் முக்கிய கூறாகப் பெண்ணைக் கையால் பற்றித் தமர் தருதலே சிறப்பானதாகக் கருதப்பட்டது என்பதைச் சங்ககால திருமண நிகழ்ச்சியை விளக்கும் அகநானூற்று பாடலால் அறியலாம். அதே வழக்கம் ஆண்டாள் காலத்திலும் நீடித்திருக்கிறது என்பதைப் பாசுரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் கிராமங்களில் பெண்ணின் திருமணத்தைப் பற்றிப் பேசுகையில் ''யாராவது ஒருத்தன் கையிலே ஒப்படைச்சுட்டா என் பொறுப்புக் கழியும்'' என்று கையில் ஒப்படைத்தலைத் திருமணத்திற்கு உரியதாக்கிப் பேசுதலைக் கேட்கலாம். எனவே தாம் வாழ்ந்து வந்த தமிழ்ச் சமுதாயத்தின் திருமண வழக்கத்தைக் கூறித் திருமணம் நிறைவு பெற்றதை ஆண்டாள் கூறுவதால் அவர் தமிழர் திருமண முறையையே பெரிதும் வலியுறுத்தியுள்ளார் என்று கூறலாம்.

நன்றி: வேர்களைத் தேடி.

கருத்துகள் இல்லை: