27/03/2011

சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகள் - முனைவர் து. தியாகராஜன்

நாட்டுப்புறத் தெய்வங்கள் என அழைக்கப்படுவது சிறு தெய்வங்களேயாகும். சிறுதெய்வ வழிபாடு பெரும்பாலும் நாட்டுப்புறங்களில் தான் மிகவும் நேர்த்தியாக நடைபெறுகிறது. இச்சிறு தெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகளும் நாட்டுப்புறப்பாடல்களும் விரவியுள்ளன. சிறுதெய்வ வழிபாட்டில் திருவிழா, கலை, பண்பாடு, நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் போன்ற நாட்டுப்புறக் கூறுகள் உள. இந்நாட்டுப்புறக் கூறுகளைச் சிறுதெய்வ வழிபாட்டின் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வழிபாடு ஒரு விளக்கம்:-

''வழிபாடு என்ற சொல்லுக்கு வணக்கம், கோட்பாடு, பூசனை, பின்பற்றுதல், வழக்கம் எனப் பல பொருள்கள் இருப்பினும் கடவுளையோ, உயிர் இல்லாதவற்றையோ, உயிர் உள்ளவற்றையோ, வாயால், மனத்தால் வழிபடுவதே வழிபாடு'' எனத் தமிழ் லெக்சிகன் விளக்கம் தருகிறது. குறிப்பிட்ட ஒரு வெற்றிடத்தை வழிபடல், நிலைக்கதவை வழிபடல், பீடத்தை வழிபடல், உருவத்தை வழிபடல், நடுகல்லை வழிபடல் என வழிபாட்டில் பல நிலைகள் இருந்து வருகின்றன.

சிறுதெய்வ வழிபாடு:-

இயற்கை வழிபாடே உலகின் தொன்மையான வழிபாடாகக் கருதப்படுகின்றது. இயற்கை வழிபாட்டின் தொடக்க நிலையிலிருந்து சிறு தெய்வ வழிபாடு தோன்றியது எனலாம். ''வீட்டுத் தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு என நான்கு வகைப்படும். முதல் மூன்றையும் சிறு தெய்வ வழிபாட்டின் கண் அடக்குவர். சிறுதெய்வ வழிபாடு குல தெய்வ வழிபாடாகவும், குலதெய்வ வழிபாடு ஊர்த் தெய்வ வழிபாடாகவும், ஊர்த் தெய்வ வழிபாடு நாடு தழுவிய வழிபாடாகவும் மாறுகின்றது. இத்தகைய சிறுதெய்வ வழிபாட்டால் ஒரு சமுதாயத்தின் தொன்மை கூறுகளை அறியலாம்.

சிறு தெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகள்:-

மனித வாழ்வில் இன்பங்களையும் துன்பங்களையும் ஒருசேர வழங்கி மனிதனைத் தன்வயப்படுத்தி வணங்குமாறு செய்த நிலையில் சிறு தெய்வ வழிபாடு தோன்றியது எனலாம். இச்சிறு தெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகள் மிகுதியும் காணக்கிடக்கின்றன. இந்நாட்டுப்புறக் கூறுகளைத் திருவிழாக்களில் காணலாம்.

பண்பட்ட சமுதாயத்தின் விளக்கமே திருவிழா எனலாம். விழா என்னும் திறந்த வாசல் வழியேதான் நம் நாட்டு மக்களை அறிந்து கொள்ளமுடியும் எனத் தாகூரின் கருத்தினை மேற்கோள் காட்டுவர். சு. சக்திவேல். திருவிழாக்கள் மூலம் கலையாற்றலும் கலையனுபவமும் மேலோங்கி வளர்கின்றன. கலைகளின் வளர்ச்சிக்குத் திருவிழாக்கள் மூலகாரணம் எனின் மிகையாகாது. தொன்று தொட்டே கலைகள் அனைத்தும் கோயில்களோடும் விழாக்களோடும் இணைந்துவிட்டன. இத்திருவிழாக்களின் உட்கூறுகளான கலை, பண்பாடு, நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், ஒற்றுமை, உளவியல் போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் சிறுதெய்வ வழிபாடு அமைந்துள்ளது.

நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் பண்பாட்டு வளர்ச்சியின் படிக்கற்கள் எனலாம். அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கைகள் என்று கூறுலாம். நம்பிக்கைகள் காலம் காலமாக ஒரு தலைமுறையினரிடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்குப் பரவி வருகின்றன. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை பலவித நம்பிக்கைகளைக் கொண்டிருக்கக் காண்கிறோம். சிறுதெய்வங்களுக்கு நிகழ்த்தப்படும் தீமிதி, அக்கினிச் சட்டி எடுத்தல், அலகு குத்திக் கொள்ளுதல் போன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக மனிதனின் பண்பட்ட மன உறுதியையும் நம்பிக்கையையும் அறியமுடிகிறது. இவ்வாறு தன்னை வறுத்திக் கொள்வதன் மூலம் வாழ்வில் ஏற்படும் எல்லா இடையூறுகளையும் எதிர்கொள்ளும் மனத்திட்பம் மக்கள்பால் ஏற்படுகிறது என்பதைச் சிறுதெய்வ வழிபாட்டால் அறியலாம்.

''பண்பாடு'' என்னும் சொல் ஒத்துப்போதல், இசைந்து நடத்தல், பொருந்தி வாழ்தல் என்பன போன்ற பொருள்களைத் தரும். ''பண்பு என்ற சொல்லிற்குக் குணம், தகுதி, இயல்பு, தன்மை, முறை என்ற பொருள்கள் வழக்கில் உள்ளன. சிறுதெய்வ வழிபாட்டால் மக்கள் கூடிவாழும் நற்பண்புகளைக் கற்றுக் கொண்டனர். பொய்பேசுதல், களவு, கொலை, கொள்ளை போன்ற தீய பண்புகள் இல்லாமல் மக்கள் வாழ்வதற்குக் காரணம் நாட்டுப்புறங்களில் நடைபெறும் சிறுதெய்வ வழிபாடேயாகும், சிறுதெய்வ வழிபாட்டினைப் ''பழந்தமிழ் மக்களின் பண்பாட்டுக் கண்ணாடி'' என்கிறார் ச. கணபதிராமன். இவ்வாறு சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக்கூறுகள் கலந்துள்ள பான்மையினை அறிய முடிகிறது.

சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறப் பாடல்கள்:-

நாடோடியாகத் திரிந்து வாழ்ந்த மனிதனுடைய வாழ்க்கையில் எற்பட்ட மாறுதலே இயற்கை வழிபாடாகும். மனிதன் முதலில் கருவளத்தையும் பயிர் வளத்தையும் பெறுவதற்காக இயற்கையை வழிபடலாயினான் என்பதை,

''திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

..................................

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

.................................

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

என்னும் சிலப்பதிகாரப் பாடல் அடிகளால் அறியலாம். இயற்கை வழிபாடாகிய சந்திரன், சூரியன், மழை ஆகியவற்றை வாழ்த்திப்பாடும் நாட்டுபுறப் பாடலைப் பின்வருமாறு காணலாம்.

நிலவு வழிபாடு:-

சங்க காலம் தொட்டே சந்திரனை வழிபடும் முறை இருந்துள்ளது. நிலவினை வாழ்த்திப் பாடுவதை நாட்டுப்புறப்பாடல்கள் வாயிலாகவும் அறியலாம்.

''சந்திரரே சூரியரே

சாமி பகவானே

இந்திரனே வாசுதேவா

இப்ப மழை பெய்ய வேணும்

மந்தையிலே மாரியாயி

மலைமேலே மாயவரே

சந்திரரே சூரியரே

இப்ப மழை பெய்ய வேணும்''

இப்பாட்டில் மழை வேண்டிச் சந்திரனையும் சூரியனையும் வாழ்த்திப்பாடுவதைக் காணலாம். நடவு நடுகின்ற போது பெண்கள் சந்திரனை வணங்கி பின் குலவையிட்டு நடுகின்றனர். சந்திர விழாவை உத்திர விழா என்றும் அழைப்பதைக் காணலாம். கிராம மக்கள் சித்திரை மாதம் பௌர்ணமியன்று சந்திரனை வழிபாடு செய்கின்றனர்.

சூரிய வழிபாடு:-

''சிந்து வெளி நாகரிகத்தில் சூரிய வழிபாடு பற்றிய சான்றுகள் இருப்பதாகச் சு. சண்முகசுந்தரம் கூறுகிறார். நாட்டுப்புறங்களில் சூரிய வழிபாடு பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளன்று சூரிய உதயத்திற்கு முன்பாகப் பொங்கலிட்டுச் சூரியனை வழிபடுகின்றனர். இதனைச் சூரியப் பொங்கல் என்றும் அழைக்கின்றனர். இவ்வழிபாடானது நாடு முழுவதும் உள்ளது.

மழை வழிபாடு:-

பயிர்கள் செழிக்கவும், மக்கள் நல்வாழ்வு வாழவும் இன்றியமையாதது மழை. வருணனைக் கடவுளாகக் கருதி மழையை நாட்டுப்புற மக்கள் வழிபடுகின்றனர். உலகிலுள்ள கால்நடைகளையும், பயிர் வளங்களையும் ஒருங்கே பாதுகாப்பது மாரியம்மனே என அனைவரும் நம்பி அத்தெய்வத்தை வழிபடுகிறார்கள். பயிர்த் தொழில் தொடங்குவதற்குமுன் இறைவனை வழிபடுகிறார்கள். உதாரணமாகத் சித்திரை மாதம் நல்ல நாளில் மாடுகளைக் குளிப்பாட்டிக் குங்குமம் வைத்துப் பூச்சூட்டி ஏர்பூட்டிப் பூமாதேவியை வணங்குவதைக் காணலாம். கால்நடைகளும், பயிர்வளங்களும் செழித்து வளர்வதற்குக் காரணம் மழையாகிய கடவுள். எனவே, அந்தக் கடவுளுக்கு நன்றி கூறும் வகையில் உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இவ்வாறாகக் கால்நடைகளையும் பயிர்வளங்களையும் பாதுகாப்பது மாரியம்மனின் சக்தி என மக்கள் அனைவரும் நம்புகின்றனர். இக்கருத்தினை,

''நாடு செழிக்க நல்லவரந் தந்தருள்வீர்

காடு விளையக் கனகவரம் நல்கிடுவீர்

நாடு செழிக்கும் நல்ல மழை பொழியும்

பட்டி பெருகும் பால் பானை வற்றாது''

என்னும் பாடல் வரிகள் கொண்டு அறியலாம். நேர்த்திக் கடனாகக் காணிக்கை செலுத்தாவிட்டால் துன்பம் வரும் என்ற நம்பிக்கை எல்லா மக்களிடமும் பரவலாக இடம் பெற்றுள்ளது.

''ஆருகடன் நின்றாலும் மாரிகடன் ஆவாது

மாரிகடன் தீர்த்தவர்க்கு மனக்கவலை தீருமம்மா''

என்ற பாடல் வரிகள் மாரியம்மனுக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனைச் செலுத்தாவிட்டால் துன்பம் வரும் என்னும் கருத்தைப் புலப்படுத்துகிறது.

புதை பொருள் வழிபாடு:-

கோயில்களிலும் பிற இடங்களிலும் புதையல் இருப்பதாகவும் ஆண்டவனை வழிபட்டால் அப்புதையல் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இதனால் சில சடங்குகளின் மூலம் புதை பொருளை அடைய முடியும் எனக் கருதி புதை பொருள் வழிபாட்டினை நடத்துகின்றனர். சான்றாக,

''எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையிலே

காக்கா மூக்கின் நிழலிலே

கள்வர் போகும் வழியிலே

கண்டானாம் கம்மாளன் கண்ணிலே''

என்ற நாட்டுப்புறப் பாடல் கம்மாளர் இன மக்கள் புதை பொருள் இருப்பதாகக் கருதி எழுவான், தொழுவான் என்ற சிறுதெய்வத்தை வழிபட்டனர் என்பதை அறிய முடிகிறது.

நோன்பிருத்தல்:-

குழந்தைப் பேற இல்லாத பெண்கள் வரம் வேண்டித் தெய்வத்தை நினைத்து நோன்பிருத்தல் உண்டு. உணவு உண்ணாமல் கடவுளை வேண்டி இருப்பதனையும் நோன்பு என்பர். அரசமரம் அல்லது வேப்பமரம் வைத்துத் தவமிருப்பதை ஒப்பாரிப் பாடல்கள் உரைக்கும். குளித்த பின்னர் ஈரத் துணியுடன் நோன்பிருப்பதைத் தாலாட்டுத் தெரிவிக்கின்றது. பூரண கும்பம் வைத்துப் பொன்னால் விளக்கேற்றித் தாமரைப்பூ இட்டுத் தவம் இருப்பதையும், அரசமரத்தைச் சுற்றுவதையும் நோன்பாகக் கருதுகின்றனர்.

குழந்தை பெற்ற தாய் நோற்ற நோன்பும், அவள் குழந்தையை வளர்க்கும் அருமையும், அவளுக்குக் குழந்தை தரும் இன்பமும், உறவினரின் செல்வ வளமும் தாலாட்டுப் பாடல்களில் இடம் பெறுகின்றன. குழந்தையைத் தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது என்பதைப் பின்வரும் பாடல்கள் உணர்த்துகின்றன.

''ஏ ராராரோ ராராரோ

என் கண்ணே நீ ராராரோ ராரிராரோ

ஏ வேத்திலை திண்ணாக்க

என் கண்ணே விரதம் கலங்கு மின்னு

ஏ கற்புரம் திண்ணல்லவோ

என் கண்ணே உன்னைக்

கண்டெடுத்த ரெத்தினமே'' (நேர்காணல் - முசிறி)

வெள்ளி செவ்வா மொளுகி - என் கண்ணே

வெகுநா தவமிருந்து

குனிஞ்சு மொளுகையிலே - எந்தெய்வம்

குழந்தையுனைத் தந்தாரே'' (நேர்காணல் - ஏவூர்)

போன்ற நாட்டுப்புறப் பாடல்களால் தாய் குழந்தை பெற விரதம் இருந்தாள் என்பது புலனாகிறது.

வெள்ளி தலை முழுகி - என் கண்ணே

பெருநாளும் தவமிருந்து

அரசமரஞ் சுற்றி வந்து - என் கண்ணே

அருந்தவமா கேட்கையிலே

பாராளும் என் தெய்வம் - என் அறியா

பாலகனைத் தந்தாரே'' (நேர்காணல் - முசிறி)

அரச மரத்தைச் சுற்றி வந்து இறைவனை வழிபட்டால் பிள்ளைப் பேறு கிட்டும் என்ற நம்பிக்கை நிலவுவதை மேற்கண்ட பாடலால் அறிய முடிகிறது.

தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கை:-

பழங்காலம் முதல் இக்காலம் வரை தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. பாரதியார் வண்டிக்காரன் பாடுவதாகப் பாடும் பாட்டில் வழித்துணையாக நம் குலதெய்வம் காப்பதாகப் பாடுவதைக் காணலாம்

''காட்டு வழிதனிலே - அண்ணே!

கள்ளர் பயமிருந்தால்? - எங்கள்

வீட்டுக் குலதெய்வம் - தம்பி

வீரம்மை காக்குமடா

நிறுத்து வண்டி யென்றே - கள்வர்

நெருங்கிக் கேட்கையிலே - எங்கள்

கருத்த மாரியின் பேர் - சொன்னால்

காலனும் அஞ்சுமடா!''

என்ற பாடலில் மாட்டு வண்டிக்காரர்கள் நெடுந்தூரப் பயணத்தின் பொழுது பயணத்திற்குத் துணையாகத் தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கையில் பாடுவதைக் காண முடிகிறது.

இவ்வாறாகச் சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகள் பொதிந்துள்ளமையைக் காணமுடிகிறது. மேலும், சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டுப்புற மக்களின் அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் தெய்வத்தை மையமாக வைத்தே நிகழ்கிறது என்பதை இவ்வாய்வின் வழி அறிய முடிகிறது.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை: