29/03/2011

நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் - முனைவர் நா.அழகப்பன்

படித்தவர்களால் எழுதப்பட்டு, படித்தவர்களால் படிக்கப்படுவது இலக்கியம் ஆகும். பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்பட்டு படித்தவர்களின் கவனத்தை ஈர்ப்பது நாட்டுப்புறப் பாட்டு ஆகும். இலக்கணப்படி எழுத வேண்டும் என்று நினைக்கின்ற போது இலக்கண விதிகள் கவிஞனின் உணர்ச்சிகளுக்குத் தடைக்கற்களாக அமைந்து விடுகின்றன. இலக்கணத்தைப் பற்றி அறியாத பாமரர்கள் தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்திருக்கும் கவிதைகள் நாட்டுப்புறப் பாடல்கள் என்றால் அது மிகையாகாது. சரித்திரம் என்னும் ஆறும் ஒன்றாகும். இந்த நாட்டுப்புறப் பாடல்களில் சில பாடல்கள் வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு திகழ்கின்றன. அவற்றை விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொதுவாக நாட்டுப்புறப் பாடல்களுக்குக் காலங்கள் வரையறுத்துச் சொல்வது கடினம். இருந்த போதிலும் வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பாடல்களின் காலங்களை ஒரளவு யூகித்துச் சொல்லி விடலாம்.

ஒரு நாட்டின் வரலாற்றினை எழுதக் கல்வெட்டுகள், நாணயங்கள், கட்டிடங்கள், இலக்கியங்கள், ஆவணங்கள் ஆகியவை சான்றுகளாக அமைகின்றன. அவை தரும் வரலாற்றுச் செய்திகளை உறுதி செய்யவும், அச் செய்திகளைப் பற்றிய மேல் விபரங்கள் அறியவும் நாட்டுப்புறப் பாடல்கள் பயன்படுகின்றன.

நாட்டுப்புறப் பாடல்களில் கட்டபொம்மன் வரலாறு:-

ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்திக் கைகட்டி வாழக் கட்டபொம்மன் விரும்பவில்லை. ஆகவே அவன் 1799 முதல் வரி கட்ட மறுத்தான். இதனால் கோபம் கொண்ட திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன், தனது படைத்தளபதி பானர்மெனை அனுப்பி சூழ்ச்சி செய்து வீரபாண்டிய கட்ட பொம்மனை 1799 ஆம் ஆண்டு பிடித்தான். பின்னர் பானர்மென் கட்ட பொம்மனை கயத்தாறு கொண்டு வந்து அங்கு 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் தூக்கிலிட்டுக் கொன்றான். இந்த வரலாற்று நிகழ்ச்சியை விளக்கும் நாட்டுப்புறப்பாடல்.

வரிகட்ட மறுத்தமை:-

வானம் பொழியுது பூமி விளையுது

கும்பினிக்கு ஏனடா தீர்வைப் பணம்?

தானம் தெரியாமல் வந்து தலையிட்டால்

மானம் அழிந்து மடிந்திடுவீர்

தூக்கிலிட்ட வரலாறு:-

தூக்கு மரங்களும் நாட்டுமென்றான் - அதில்

தூண்டில் கயிறுகள் பூட்டுமென்றான்

சீக்கிரக் கட்டைப் புளிதனிலே - அதில்

மேற்குக் கொம்பு திடமாகும் என்றான்

வீராவேசமாக நடந்து சென்றான்

வீரபாண்டிய கட்டபொம்மன்

ராசாதிராச ராச கம்பீரன்

நண்ணினான் புளிய மரத்தடியே

வீராதி வீரன் கட்ட பொம்முதுரை

தூக்குக் கயிரைத் தானே மாட்டிக் கொண்டான்

பாரதிரும்படி விண்ணதிரும்படி - அந்தோ

பாஞ்சைப் பதி மன்னன் சாய்ந்து விட்டான்

நாட்டுப்புறப் பாடல்களில் மருது பாண்டியர் வரலாறு:-

சிவகங்கைப் பகுதியில் வழங்கப்படும் கும்மிப் பாடல்களில் மருது பாண்டியர் வீரம், திருப்பணி, அரண்மனை கட்டியமை ஆகிய வரலாற்றுச் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எள்ளைக் கழுவி இலையில் இட்டால்

கையில் எடுத்து எண்ணெயாய்த் தான் பிழிஞ்சு

உள்ளம் மகிழ உணவருந்தும் - மன

ஊக்கம் மிகக் கொண்ட பாண்டியனார் - மருதுபாண்டியனார்

என்ற கும்மிப் பாடல் மருது பாண்டியரின் வலிமையை உணர்த்துகிறது.

கருமலையிலே கல்லெடுத்து

காளையார் கொண்டு சேர்த்து

மருதைக் கோபுரம் தெரியக்கட்டிய

மருது வாராரு பாருங்கடி

குலவை போட்டு கும்மி அடியுங்கடி

கூடி நின்று கும்மி கொட்டுங்கடி

என்ற பாடலில் இருந்த கருமலையிலிருந்து கல்லெடுத்து வந்து சிவன் கோயிலை மருது பாண்டியர் கட்டினார் என்ற வரலாறு தெரிய வருகிறது.

செல்வம் மிகுந்த சிறுவயலில் - மன்னன்

சின்ன மருதுக்கு அரண்மனையாம்

சிவகங்கை அரண்மனைக்கு ஒப்பாக

சிறுவயல் தன்னில் மருதிருவர்

நவகோண அரண்மனை ஆசாரம் வாழ்ந்து

நாளும் உள்ளம் மகிழ்திருந்தார்.

நாட்டுப்புறப் பாடல்களில் தாது வருடப் பஞ்சம்:-

கி.பி. 1875 ஆம் ஆண்டு மற்றும் 1876 ஆண்டு சென்னை மாநிலத்தில் தென் மேற்குப் பருவக் காற்று வீசாமையால் மழை பெய்யவில்லை இதனால் கடும் வறட்சி ஏற்பட்டது. ஆகவே 1877 ஆம் ஆண்டு கொடிய பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. மக்கள் மடியத் தொடங்கினர். இந்தப் பஞ்சத்தில் சென்னை மாநிலம் முழுவதும் 3,50,000 மக்கள் மடிந்தனர். இக் கொடிய பஞ்சத்தையே தாது வருடப் பஞ்சம் என்று மக்கள் அழைத்தனர். இப் பஞ்சத்தைக் கஞ்சித் தொட்டிப் பஞ்சம் எனவும் கூறுவர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக அரசாங்கம் கஞ்சித் தொட்டிகள் பலவற்றை அமைத்து மக்களுக்கு கஞ்சி வழங்கியதால் இப்பஞ்சம் இப்பெயரால் அழைக்கப்பட்டது. நாட்டுப்புறப் பாடல்கள் இப்பஞ்சத்தின் கொடுமையை வர்ணிக்கின்றன.

தாது வருடப் பஞ்சத்திலே ஒ சாமியே

தாய் வேறே பிள்ளை வேற ஒ சாமியே

தைப் பொங்கல் காலத்திலே ஒ சாமியே

தயிருக்கும் பஞ்சம் வந்ததே ஒ சாமியே

மாசி மாதத் துவக்கத்திலேயே ஒ சாமியே

மாடுகளும் பட்டினியே ஒ சாமியே

பங்குனிக் கடைசியிலே ஒ சாமியே

பால் மாடெல்லாம் செத்துப் போச்சு ஒ சாமியே

சித்திரை மாதத் துவக்கத்திலே ஒ சாமியே

சீரெல்லாம் குறைஞ்சு போச்சே ஒ சாமியே

வைகாசி மாதத்திலே ஒ சாமியே

வயிறெல்லாம் ஒட்டிப் போச்சே ஒ சாமியே

ஆனி மாதத் துவக்கத்திலேயே ஒ சாமியே

ஆணும் பெண்ணும் அலறலாச்சே ஒ சாமியே

ஆடி மாதத் துவக்கத்திலேயே ஒ சாமியே

ஆளுக்கெல்லாம ஆட்டமாச்சே ஒ சாமியே

ஆவணி மாதத் துவக்கத்திலே ஒ சாமியே

ஆட்டம் நின்று ஒட்டமாச்சே ஒ சாமியே

புரட்டாசிக் கடைசியிலே புரண்டதே உலகமெல்லாம் ஒ சாமியே

ஐப்பசி துவக்கத்திலே ஒ சாமியே

அழுகையும் கண்­ரும் தானே ஒ சாமியே

கண்ட இடமெல்லாம் பிணம் ஒ சாமியே

குமிமாராணி புண்ணுயத்திலே ஒ சாமியே

மார்கழியில் பஞ்சம் நின்றதே ஒ சாமியே

நாடக மேடைப் பாடல்களில் இந்திய விடுதலை இயக்க வரலாறு:-

வள்ளி திருமணம் நாடகத்தில், வள்ளி தினைப் புனத்திற்கு கதிர்களைத் தின்ன வரும் கொக்குகளை விரட்டுவது போல காட்சி அமையும். வள்ளியாக நடிக்கும் பெண் மேடைப் பாடலில் ஆங்கிலேயர்களை வெள்ளைக் கொக்குகள் என வர்ணித்துப் பாடல் பாடினார் அப்பாடல்,

கொக்குப் பறக்குது அதோ வெள்ளைக்

கொக்குப் பறக்குது பாருங்கடி

அதை விரட்டி அடிக்கனும் வாருங்கடி

தேம்ஸ் நதிக் கரையில் முட்டையிட்டு

சிந்துநதிக் கரையில் குஞ்சு பொறிச்சு

நாடு பூராவிலும் கொட்டமடிச்சு

நம்மை அடிமை கொள்ள நேர்ந்ததடி - அதோ

வெள்ளைக் கொக்கு பறக்குது பாருங்கடி - அதை

விரட்டியடிக்கனும் வாருங்டி சேர்ந்து வாருங்கடி

வெள்ளையர்களின் அடக்கு முறையை விளக்கும் நாடக மேடைப் பாடல்கள் பின்வருமாறு,

அடி ஆத்தாடி இதென்ன கூத்தாயிருக்குது

ஆம்பிளைங்க கதர்வேட்டி - கட்டக் கூடாதாம் - அஞ்சு

ஆறுபேரு சேந்து நின்று பேசக் கூடாதாம்

வந்தேமாதரமினு வாய்விட்டுச் சொல்லக் கூடாதாம்

ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருவன் போட்டானாம் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டுவிக்கச் சொல்லி

காகிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்

வெள்ளையர்களை வெறுத்து அவர்களைச் சபித்தும் சில பாடல்கள் பாடப்பட்டன அவற்றில் ஒரு பாடல்.

கல்லை வெட்டச் சொன்னான் வெள்ளைக்காரன்

கல்லாப் போவான் வெள்ளைக்காரன்

மண்ணை வெட்டச் சொன்னான் வெள்ளைக்காரன்

மண்ணாப் போவான் வெள்ளைக்காரன்

அகிம்சை போராட்டத்தின் விளைவாக 1947 ஆக்ஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்த வரலாற்றுப் புகழ் பெற்ற நிகழ்ச்சியை புதுவைப் பகுதி மீனவர் கும்மிப்பாடல் குறிப்பிடுகிறது.

ஆண்டு நாற்பத்தேழு ஆகஸ்ட் பதினைந்து

ஆளும் சுக்கிர வாரம் வெள்ளிக்கிழமை

வேண்டும் சுதந்திரம் வாங்கிக் கொடியேற்றி

வேண்டும் சுதந்திரம் வாங்கிக் கொடியேற்றி

வெள்ளைக்காரன் விரட்டி விட்டோம்.

நாட்டுப்புறப் பாடல்கள் பாமர மக்களின் வரலாற்று உணர்வை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. மேலும் அப்பாடல்கள் வரலாற்றுக்கு உண்மையான சுவையான புதிய பல செய்திகளைத் தருகின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை.

நன்றி: வேர்களைத்தேடி

 

கருத்துகள் இல்லை: