28/03/2011

கதைப்பாடல்களில் பெண்குரல் - திருமதி ம.ப.சித்ரா

ஆண் சிந்தனைகளின் வார்ப்புகளான பெண் படிமங்களே இலக்கிய வரலாறுதோறும் காணக்கிடைக்கின்றனவேயன்றி, இதை மீறியவற்றின் எண்ணிக்கை கைவிரலுக்குள் அடங்கிவிடும். பெண்ணின் வாழ்வியல் அனுபவங்களும் ஆழ்மனச் சிந்தனைகளும் கூட ஆணாலேயே சித்திரிக்கப்பட்டன. முட்டுவேன் கொல், தாக்குவன் கொல், என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே எனத் தன் உண்மை மன ஓட்டத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்திய பெண்பாற்புலவர்களின் மொழியைச் சங்க இலக்கியத்தில் ஆங்காங்கே காணமுடிகிறது.

இந்நிலையிலிருந்து ஒருபடி மேலேபோய், வாழ்வியல் கட்டமைப்புக்குள் புதைந்து போகாமல், அதிலிருந்து மீளும் ஒரு முயற்சியினைச் சங்க மருவிய, பக்தி இலக்கிய காலங்களில் காண முடிகின்றது. ஆனாலும், இம்முயற்சிகளும் கூட வரையறுக்கப்பட்ட வாழ்வியல் நெறிகளை முற்றிலுமாக தகர்த்தெறிவதாக இல்லை. அடுத்துவரும் காலகட்டங்களிலும் பெண் குரல்களில் அவலங்களையும், புலம்பல்களையும் மிகுதியாகக் கேட்க முடிகின்றது. தன்னைப் பற்றிய சுய உணர்வும் சுய சார்பின்மையும் இல்லாது மீண்டும் மீண்டும் ஒரு வட்டத்துக்குள் உழல்கின்ற பதுமைகளாய் பெண்கள் இனங்காட்டப்பட்டுள்ளனர். இவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு குரலை ''அல்லி'' குறித்த கதைப் பாடல்கள் நான்கில் நாம் காணமுடிகிறது.

ஒரு சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் பல்வேறு விதங்களில் வெளிப்படுகின்றன. சடங்குகள், வழக்காறுகள், வாய்மொழி இலக்கிய மரபுகள், இலக்கியப் பதிவுகள் எனப் பல்வேறு வகைகளாய் அவை தோற்றம் கொள்கின்றன. ஏட்டிலக்கியங்களைவிட வாய்மொழி மரபு இலக்கியங்களைச் சற்றுக் கூடுதல் நம்பகத்தன்மை உடையனவாகக் கருதலாம். மண்ணின் மரபுகளை எந்தத் தனிமனிதன் உருவாக்கினான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத தன்மை; குழு, இனம் ஆகியவற்றின் ஒட்டுமொத்தமான ஒரு வெளிப்பாடு; எளிமை, உண்மை ''இயல்பு'' நேர்மை ஆகிய குணாம்சங்களைக் கொண்டிருத்தல் (பக்.10, வேரும், விழுதும்) என வாய்மொழி இலக்கிய மரபின் சிறப்பியல்புகளைக் கூறுகிறார் கலை விமர்சகர் இந்திரன்.

இதன் வகைமைகளில் கதைப்பாடல்கள் முக்கிய இடம் பெறுகின்றன. கதைப்பாடல்களின் காலத்தை கி.பி. 15 ஆம் நூற்றாண்டிலிருந்தே வரையறுக்கலாம் என்பது இலக்கிய அறிஞர்கள் கருத்து. கி.பி. 16,17 ஆம் நூற்றாண்டுகளில் தமிழக அரசியல் சூழல் இவ்வகைக் கதைப்பாடல்கள் தோன்றுவதற்குப் பேருதவியாக இருந்திருக்கிறது. விசயநகர மன்னர்களும் நாயக்க மன்னர்களும் நாட்டுப்புறக் கலைகளை ஆதரித்து வந்துள்ளனர். வட்டாரச் சார்பு மொழிநடையும், மக்கள் வழக்காறுகளும் அதிக அளவு இடம் பெற்றிருக்கின்றனவாகக் கதைப்பாடல்கள் மிளிர்கின்றன. பாடுபொருளைப் பொறுத்தவரை வட்டாரம் சார்ந்த கதாபாத்திரங்களைத் தவிர நாடு தழுவிய இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றின் கதாபாத்திரங்களும் கூட இவற்றில் முக்கிய இடம் வகிக்கின்றன. அவற்றின் கதை நிகழ்வுப் போக்கின்வூடே அந்தச் சமூகப் பண்பாட்டின் கூறுகளை உள்ளடக்கிய கற்பனைக் கதாபாத்திரங்களைக் கலந்து இக்கதைப் பாடல்கள் சுவைபடப் பின்னப்பட்டிருக்கின்றன. மகாபாரதம் சார்ந்து அபிமன்யு சுந்தரி மாலை, விராட பருவம், தர்மர் அசுவமேத யாகம், பஞ்சபாண்டவர் வனவாசம், சிருஷ்ணன் தூது, பஞ்சபாண்டவர் வைகுந்த கும்மி, பவளக்கொடி மாலை, அல்லி அரசாணி மாலை, புலந்தின் களவு மாலை, மின்னொளியாள் கதை, ஏணியேற்றம், திரௌபதி குறம், கர்ணமகாராசன் சண்டை, மின்னொளியாள் குறம், பொன்னுருவி மசக்கை எனப் பலகதைப் பாடல்கள் தோன்றியுள்ளன.

அல்லியரசாணி மாலை, புலந்திரன் களவு மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை ஆகிய கதைப்பாடல்கள் இவ் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கதைப்பாடல்களின் கதைச்சொல்லி ஆணா, பெண்ணா என்ற ஐயத்தையும் மீறி, அன்றைய நடைமுறை கருத்தாக்கங்களிலிருந்து மேம்பட்ட ஒரு பெண் பற்றிய பதிவை இவை காட்டுகின்றன. இவற்றில் கதைக்கரு கட்டமைப்பு அது நடத்திச் செல்லப்படும் போக்கு, கையாளப் பெறும் மொழி, நடை ஊடுபாவாக இடையிடையே வெளிப்படும் சமூகவியல் சிந்தனைகள் மற்றும் பெண் குறித்த கருத்தாக்கங்கள் கதைப்போக்கில் புதைந்திருக்கும் மௌனங்கள் போன்றவை இதை உறுதி செய்கின்றன.

அல்லி மலரிலே அவதரித்த தன்மை, வேண்டும்பொழுது தன் செயல்களுக்குத் துணையாக தேவர்களை துணைகழைத்தல், தெய்வாம்சம் பொருந்தியிருத்தல் போன்றவற்றில் மீனாட்சி தேவியை ஒத்தவளாகவும், அரசியல் சாதுர்யம், போராட்டகுணம், வீரம், அஞ்சாமை போன்றவற்றில் இராணி மங்கம்மாளை ஒத்தவளாகவும் எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாகிலும் நிறைவேற்றும் மனஉறுதி அதற்காக எச்சூழலையும் துணிவுடன் எதிர்கொண்டு தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பண்பில் திரௌபதியை ஒத்தவளாகவும் அல்லி வடிவமைக்கப்பட்டிருக்கிறாள்.

அல்லி மலரில் பிறந்து, வளர்ந்து, மதுரையை ஆட்சி செய்த திறமும் அல்லியை அர்ஜுனன் மணந்து கொண்ட தன்மையும் அல்லியரசாணி மாலையில் எடுத்துரைக்கப்படுகிறது.

அல்லிக்கும் அர்ச்சுனனுக்கும் பிறக்கும் மகன் புலந்திரன். அவன் துரியோதனனின் தங்கை துச்சலையின் மகள் காந்தாரியைத் திருமணம் செய்து கொள்கிறான். பாண்டவர் வனவாசம் போகவே கலந்தாரி, துரியோதனனால் காவலில் வைக்கப்படுகிறாள். யாரும் அறியாதபடி அல்லியின் உதவியால் புலந்திரன் அவளைச் சந்திக்கிறான். காந்தாரி கருவுறவே துரியோதனன் அவளைத் தீயில் இட ஏற்பாடு செய்கிறான். அல்லி, அச்சமயத்தில் பெருமழை பெய்யச் செய்து தன்னுடைய பெண்கள் சேனையை அனுப்பிக் கலந்தாரியைக் காக்கிறாள். இது புலந்திரன் களவு - மாலையின் பாடுபொருள்.

புலந்திரன் பவளத்தேர் வேண்டும் என்று மன்றாடும் போது அதைக் கொண்டு வரச் செல்லும் அர்ச்சுனன் பவளக்கொடியாள் என்ற இளவரசியை மணக்கிறான். அவன் திரும்பி வராததைக் கண்டு கோபமுற்ற அல்லி படையெடுத்துச் செல்கிறாள். கண்ணனது தந்திரத்தால் எல்லாம் இன்பமாக முடிகிறது. இது பவளக்கொடி மாலை கதைப்பாடலின் கதை.

கதைக் கருவைப் பொறுத்தவரை இந்த நான்கு கதைப்பாடல்களும் அல்லியின் வீரத்தை மையமிட்டதாகவே அமைந்திருக்கின்றன. பெண்ணுக்குரிய இயல்புகளாகச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடுகளிலிருந்து மிக வேறுப்பட்டவளாகவே அல்லி காட்சியளிக்கிறாள். வீரம், சினம், வேகம், போர்க்குணம் போன்ற ஆணுக்குரியனவாக வரையறைக்கப்பட்டுள்ள அத்தனை குணவியல்புகளையும் கொண்டவளாக அல்லி படைக்கப்பட்டிருக்கிறாள்.

அவ்வார்த்தை கேட்டு அரசாளும் நாயகிக்குப்

பொங்குது தேகம் பொழியுது வேர்வைகளும்

கண்கள் துடிதுடிக்க காந்தாளமானாளே

பக்கம் துடிதுடிக்குது பாண்டிவளநாட்டார்க்கு

அங்கம் துடிதுடிக்குது அரசாளும் அல்லியற்கு

கொதித்துக் கொதித்துக் கோபாக்கினி மூண்டு (ஏணி.பக்.18)

என்றிவ்வாறு வருணனை செல்கிறது.

கையது வேலே காலன புனைகழல்

மெய்யது விடரே...

வரிவயம் பொருத வயக்களிறு போல

இன்னம் மாறாது சினனே

உய்ந்தார் அல்லர் இவன் உடற்றியோரே (புறம் - 100)

எந்தச் சூழலையும் துணிவோடு கலங்காமல் எதிர்நோக்கும் பண்புநலன் உடையவளாக விளங்குகிறாள். துரியோதனன் தவறான எண்ணத்தோடு அல்லியிடம் அடைக்கலமாயிருந்த சுபத்திரையை நெருங்கும்போது, அவள் அதைத் தடுக்க மேற்கொள்ளும் யுக்திகளும், தன் மருமகள் கலந்தாரியைக் காக்கவேண்டி தன் படையை அனுப்பும் திறமும், அர்ச்சுனனைக் காக்க வேண்டிக் கிருஷ்ணன் கேட்கையில் இனி வாழ்நாள் முழுவதும் கணவனைத் தீண்டேன், அவனை உயிர்ப்பித்தால் போதும் என உறுதியளிக்கும் மனவலிமையும் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டதாய் இலங்குகிறது. அல்லியின் பாத்திரப்படைப்பு.

சிற்றிலக்கியங்களின் பெரும்பாலான வகைமைகளில் பெண் அலங்காரப் பதுமையாகவும் போகப் பொருளாகவும் காட்சிப்படுத்தப்படும் நிலைகளைத் தாண்டி, நாட்டுப்புற இலக்கியங்களின் வரிசையில் வரும் இக்கதைப் பாடல்கள் ஒரு வித்தியாசமான பெண்ணைக் காட்டுகின்றன. இடைக்காலத்தில் பிற பண்பாட்டுக் கலப்புகளினால் சீரழிந்து போயிருந்த பெண் குறித்த கருத்தமைவுகளைத் தாண்டி, சங்கம் சித்தரித்த அல்லது தமிழ் மண்ணுக்கே உரிய பெண் அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்ததாகக் கூட இக்கதைப் பாடல்களில் வரும் அல்லி பாத்திரப் படைப்பைக் காணமுடியும்.

மதுரை ஆண்ட இராணி மங்கம்மாளின் (கி.பி. 1689 - 1706) பிரதிபலிப்பாக இப்படைப்பு தோன்றியிருக்கலாம்.

வடமதுரை நாடு வடதேச பட்டணமும்

ஈழ கலிங்க தேசம் இடமுள்ள பட்டிணமும்

முத்துகப்பலாயிரமாம் மிளகுகப்பலாயிரமாம்

பாக்குபடும் துறையும் பாண்டிவள நாடும்

இத்தனை நாடுகளும் இடமுள்ள ராச்சியமும்

பட்டமும் கட்டியிவள் பாருலகை ஆண்டிருந்தாள் (பு.க.மாலை - ப.4)

இவ்வரிகள் மேற்கூறிய கருத்துக்கு அரண் சேர்ப்பதாக உள்ளது.

ஏணியேற்றம் கதைப்பாடல் காட்டும் ''அல்லி'' ஏட்டிலக்கியங்கள் காட்டும் பெண் பாத்திரங்களை விட வித்தியாசமானவள். பெண்ணைக் களங்கப்படுத்த நினைக்கும் ஆண் பற்றிய ஆணுக்கான கோபத்தை விடப் பெண்ணின் கோபம் நிச்சயம் வித்தியாசமானதே. பஞ்ச பாண்டவர் வனவாசம் செல்லும்போது, சுபத்திரையை அல்லியின் பாதுகாப்பில் விட்டுச் செல்கின்றனர். சுபத்திரை மீது அவளது திருமணத்திற்கு முன்னரே அவளை விரும்பிய துரியோதனன் தனித்திருக்கும் சுபத்திரையை அடைய எண்ணுகிறான். இந்நோக்கத்துடன் செல்லும் துரியோதனனை வரவேற்று அவனது விருப்பத்தை நிறைவேற்ற உதவுவதாகக் கூறிகிறாள். பின்னர், ஈனத்தனமான அவனது செயலைக் கண்டிக்கவும் தண்டனை தரவும் இயந்திரத்தால் ஆன ஒரு ஏணியைச் செய்விக்கிறாள். அந்த ஏணியில் அகப்பட்டுக் கொண்ட துரியோதனன் பல நாட்டவரால் அவமானப்படுத்தப்படுகிறான். இறுதியில் கர்ணனும் கண்ணனும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அல்லி அவனை மன்னித்து விடுவிக்கிறாள். இது ஏணியேற்றவை என்ற கதைப்பாடலின் கற்பனை.

இந்தக் கதைப்பாடலில் காட்டப்படும் கோபமும் சீற்றமும் பெண்ணின் மன உணர்வு சார்ந்ததே. திரௌபதிக்கு நேர்ந்த அவமானத்திற்கான பழிவாங்கும் நடவடிக்கையாகக் கூட அல்லியின் செயல்களைக் கருத இடமிருக்கிறது. இந்த ஒரு கதைப்பாடலின் கதைசொல்லி ஒரு பெண்ணாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். பெண்ணின் மன ஓட்டத்தை அடி ஆழத்தினின்று தோன்றும் கோபாக்கினியை இந்தக் கதைப்பாடல் திறம்பட உணர்த்துகிறது.

ஏட்டிலக்கியம் மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களைச் சமூகப் பதிவுகள் எனக் கருதுமிடத்து பெண் குறித்த சிந்தனைகள் அவ்வக்கால பண்பாட்டுக் சூழலுக்கு ஏற்பப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மக்கள் வழக்காறுகளையும், இயல்பான வாழ்வியல் முறைகளையும் வெளிப்படுத்தும் நாட்டுப்புற இலக்கிய வகைமைகள் பெண் குறித்த கருத்தாக்கங்களை மறுவாசிப்பு செய்திருப்பதாகத் தோன்றுகிறது. சமூகச் சூழலும் இந்தக் கட்டுடைப்புக்கு உதவுவதாக அமைந்திருந்ததாக எண்ணலாம். பிற பண்பாட்டு கலப்புகளிலிருந்து மீறி வெளிவந்த, தமிழ்ச் சூழலுக்கே உரிய பெண்ணை மீட்டுருவாக்கம் செய்வதாய் இக்கதைப்பாடல்கள் அமைந்துள்ளன.

நன்றி: வேர்களைத்தேடி

 

கருத்துகள் இல்லை: